தலைப்பிலே சொல்லி இருக்கேனே தவிர அதைக் கடைப்பிடிப்பதில்லை!:(
சாப்பாடு மறுபடியும் வாங்க ஆரம்பிச்சிருக்கேன். எல்லாம் கால்கள் படுத்தும் பாட்டில் தான்,. நின்று கொண்டு எதுவும் செய்ய முடிவதில்லை.. ஆனால் வாங்கும் சாப்பாடு நல்லா இருக்கானு கேட்டால் ஏதோ இருக்கு, அவ்வளவு தான்,. இதே காடரர் ஒரு வருஷம் முன்னாடி வரை நன்றாகவே கொடுத்தார். என்ன பிரச்னைன்னா தினம் மிஞ்சிப் போயிடும். அதை யாரிடம் கொடுப்பது என்பது ஒரு பிரச்னை. வீட்டு வேலை செய்யும் பெண்மணி காலையிலேயே வந்துட்டுப் போயிடுவாங்க. ஆகவே இதைக் கொடுக்கனு தனியா ஆள் தேட வேண்டி இருக்கும். நடுவில் மாமா குழம்பு, ரசம் சாப்பிடாததால் எதுவும் வாங்கவில்லை. இப்போ ஒரு வருஷம் கழிச்சுக் கொடுக்கையில் அந்தப் பெண்மணி ஆயிரம் கண்டிஷன்கள். வீடு வேறே மாத்திட்டாங்களாம். இங்கிருந்து ஒரு கி.மீ தூரத்தில் போயிட்டாங்க. அதோடு இப்போச் சாப்பாடு செய்து முடிக்கவே பத்து மணி ஆகிவிடுகிறதாம். அங்கெல்லாம் கொடுத்துட்டு இங்கே வர பதினோரு மணி ஆகும்னு சொல்லிட்டாங்க. ரொம்பக் கேட்டதுக்கு அப்புறமா முடிஞ்சால் பத்தே முக்காலுக்குக் கொடுக்கச் சொல்றேன் நு அரை மனசோடு சொல்லி இருக்காங்க.
முன்னாலும் சாப்பாட்டில் காரம் இருந்தது, நாங்க சுட்டிக் காட்டினதோடு எங்களுக்கு ஒத்துக்கலைனும் சொன்னோம். குறைச்சுண்டாங்க. ஆனால் இப்போ அப்படி எல்லாம் சமரசம் செய்துக்கத் தயாரா இல்லை என்பதோடு, வேணும்னா வாங்கிக்கோங்க என்னும் நினைப்புத் தான். வாடிக்கையாளர்கள் நிறையச் சேர்ந்திருப்பாங்க போல. காய்கறியும் முன்னைப் போல் எல்லாம் பண்ணுவதில்லை. கறி கொஞ்சம் பரவாயில்லை ரகம். கூட்டில் காய்களே தெரியாது. காயை நறுக்கிப் பாத்திரத்தில் போட்டுக் கூட்டுக்கு அரைச்சு விடும் விழுதை நிறைய மாவு கரைச்சு அதோடு விட்டுக் குக்கரில் வைச்சுடறாங்க. காய் என்னமோ வெந்திருக்கும். ஆனால் அந்த விழுதில் தேடிக் கண்டு பிடிக்கணும். கரண்டியால் அரிச்சால் விழுது தான் வருது. கூட்டும் சில சமயம் காரமாக இருக்கும். ரசம் புளிப்பாக இருப்பதோடு உப்புச் சேர்த்தால் காரம் தனித்துத் தெரியும். சாம்பார் என்னிக்குமே காரம் தான்,. அதையும் மீறிக்கொண்டு மாவு கரைச்சு விட்டிருப்பாங்க. தான் என்ன என்பது வாசனையில் தான் தெரியும். முன்னெல்லாம் கூட்டில் காய்கள் நன்கு தெரியும் என்பதோடு அரைச்சு விடுவதும் நிதானமாக இருக்கும். இப்போ சமையலுக்கு, விநியோகத்துக்குனு ஆட்கள் வேறே போட்டுட்டாங்க. ஆகவே எல்லாம் கமர்ஷியல் தான்,
சாம்பாரைத் தவிர்த்து வேறே எதுவும் இந்தக் காடரிங் காரங்க பண்ண மாட்டாங்க போல. மோர்க்குழம்புனாலே பயம்மா இருக்கும். மோர் அவ்வளவு புளிப்பாக இருக்கும். அவியல் கூட இப்போல்லாம் தயிர் இல்லாமல் புளிச்ச மோரில் மாவு கரைச்சு விட்டுப் பண்ணிடறாங்க. மொத்தத்தில் ஒரிஜினாலிடி என்பதே இருப்பதில்லை. ஆனால் பாருங்க இதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் காஞ்சி முனிவர் தளத்தில் இருந்து சாப்பாட்டைப் பழிக்காதீங்கனு ஒரு பதிவு வந்திருப்பதைப் பகிர்ந்திருக்காங்க. படிக்கையில் மனசுக்குக் க்ஷ்டமாத் தான் இருக்கு. நாம் இவ்வளவு மோசமாக விமரிசிக்கிறோமே என்றெல்லாம் தோன்றியது. ரங்க்ஸிடம் சொன்னால் நான் எப்போவோ படிச்சுட்டேன் என்றார்.
பேசாமல் வீட்டிலேயே சமைச்சுடலாமானு தோணினா அப்போன்னு பார்த்துக் கால் தகராறு பண்ணும். ஒரு அடி எடுத்து வைப்பது கஷ்டமாக இருக்கும். வீட்டில் சமையல் ஆளை வைத்துச் சமையல் செய்வதிலும் பல கஷ்டங்கள்
இருக்கின்றன. முதலாவது செலவு. சாமான்கள், காய்கள் எல்லாம் வாங்கணும். பொடிகள் எல்லாம் தயாரா வைச்சுக்கணும். நிச்சயமாச் செலவு கூடத் தான் ஆகும். அதுவே காடரர் கிட்டே வாங்கினால் ஒரு நாளைக்கு சாம்பார், ரசம், கறி,கூட்டுக்கு 100 ரூபாயும், சர்வீஸ் சார்ஜ் பத்து ரூபாயுமாக 110 ரூ தான் ஆகிறது. ஆனா வீட்டிலே விதம் விதமாப் பண்ணிக்கலாம், நல்ல சமையல் ஆளாக இருந்தால். இவங்க ரசம் கூட மாத்த மாட்டாங்க. எலுமிச்சை ரசம் வைக்கச் சொல்லி ஒரு நாள் கேட்டதுக்கு அதெல்லாம் கட்டுபடி ஆகாதுனு சொல்லிட்டாங்க. தினம் ஒரே ரசம் தான். நேத்து ரசத்தையே இன்னிக்குச் சுட வைச்சுச் சாப்பிடறாப்போல் இருக்கும். அதிலும் பெரும்பாலும் சாம்பார் தான், அவங்களுக்கு அதான் கட்டுபடி ஆகும்போல.
என்னடா இது, பதிவுகளே புலம்பலாக வருதே, இதுக்கு எழுதாமல் இருந்தப்போவே தேவலைனு தோணும். எனக்கே தோணுது. ஆனால் என்ன பண்ண? சுத்திச் சுத்தி மனசு இப்போ இதில் தான் பதிஞ்சு கிடக்கு. மெல்ல மெல்ல வெளியே கொண்டு வரப் பார்க்கிறேன். இதிலே பெஸ்ட்னு சொல்லக் கூடியது எங்க வீட்டுக் காஃபி தான். நல்ல பால், காஃபி பவுடரும் நல்ல கொட்டையை வறுத்து அரைச்சுத் தயார் பண்ணுவது. சிக்கரியே இல்லை. ஆகவே காஃபி டிகாக்ஷன் போடும்போதே வாசனை ஊரைத் தூக்கும். என் மாமனார் இருந்தவரை சொல்லிக் கொண்டே இருப்பார். காஃபிக்கு வெந்நீர் போடும்போதே வாசனை வந்துடுறாப்போல் இருக்கு என்பார். அதே பவுடரில் மத்தவங்க போட்டால் அம்புட்டு வாசனை வராது. இஃகி,இஃகி,இஃகி. அதே போல் இட்லி, தோசைக்கு அரைக்கும்போதும், அடைக்கு அரைக்கும்போதும் அம்பத்தூரில் ஐம்பது அடி தள்ளி இருக்கும் எதிர் வீடு வரை வாசனை மூக்கைத் துளைக்கும். அவங்கல்லாம் நீ என்னதான் ரகசியமாப் பண்ணினாலும் உன் கை மணம் காட்டிக் கொடுத்துடும் என்பாங்க. இப்போ இந்த நிமிஷம் ஒரு மாமியிடம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன். இதான் இப்போதைய நிலைமை.
சிரமம்தான். இதற்கு வேறு ஏதாவது மாற்று வழி உண்டான்னு பார்க்க வேண்டியதுதானே? கால் அனுமதிக்கும் ரெடிமேடாக சில விஷயங்கள் செய்து வைத்துக் கொண்டு அவர்கள் தரும் கூட்டிலோ, குழம்பிலோ அதைக் கலந்து சரிக்கட்ட முடியுமான்னு பாருங்க!
ReplyDeleteமாற்று வழி நாமே சமைப்பது ஒண்ணுதான். இப்போல்லாம் உப்பு, புளி சேர்க்கத் தெரிஞ்சாலே சமையல் வித்தகர் ஆயிடறாங்க.
Deleteரெடிமேட் இட்லி எல்லாம் வந்திருக்கு தெரியுமோ... அதை வாங்கி கூட முயற்சிக்கலாமே...
ReplyDeleteஎன்னாது... ரெடிமேட் இட்லியா? (மிபொடி தடவிய இட்லியை விக்கறாங்களே அதைச் சொல்றாரா இல்லை இட்லிமாவா?)
Deleteதெரியாது ஸ்ரீராம். நான் இட்லி மாவே வாங்க மாட்டேன். கொஞ்சமாக வேணும்னாலும் வீட்டில் அரைப்பது தான். ஆகவே எனக்கு ரெடிமேட் இட்லியெல்லாம் பிடிக்காது. சந்தேகப் பிராணி வேறே நான்.
Deleteநெல்லை... பிளாஸ்டிக் கவரில் இட்லி ரெடியாக இருக்கும். அபப்டியே வெந்நீரில் போட்டு எடுத்து சாப்பிட வேண்டியதுதான். ரீல்ஸ் எபி வாசகர் க்ரூப்பிலும் அனுப்பி இருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போல...
Deleteகடவுளே! ப்ளாஸ்டிக்கை வெந்நீரில் போட்டுச் சுட வைச்சுச் சாப்பிடணுமா? ப்ளாஸ்டிக் வாசனையும் வரும். அதிலுள்ள வேதிப் பொருட்கள் கலப்படமும் ஆகும். எனக்கு இப்படி எல்லாம் இட்லி வேண்டாம். :)
Delete//கடவுளே! ப்ளாஸ்டிக்கை வெந்நீரில் போட்டுச் சுட வைச்சுச் சாப்பிடணுமா? ப்ளாஸ்டிக் வாசனையும் வரும். அதிலுள்ள வேதிப் பொருட்கள் கலப்படமும் ஆகும். எனக்கு இப்படி எல்லாம் இட்லி வேண்டாம். :) //
Deleteகடவுளே... சாக்லேட் மேலே இருக்கும் காகிதத்தைப் பிரித்துப் போட்டு விட்டுதானே சாப்பிடுவீர்கள்?!!
ஹெஹெஹெ அ.வ.சி. அதோடு ரெடிமேட் எல்லாம் பழக்கமே இல்லை.
Deleteஅடை ஆசையை மனதில் உண்டாக்கிட்டேங்க. இட்லிக்கு அரைத்திருக்கிறாள். இன்று அடை கேட்டால் திட்டுவாளோன்னு தெரியலை
ReplyDeleteஇட்லி மாவை நாலைந்து நாட்கள் வைச்சுக்கலாமே, ஆகவே ஒரு நாள் இட்லிமாவை எடுக்காமல் அன்னிக்கு அடை பண்ணிச் சாப்பிடுங்க நெல்லை.
Deleteஎனக்குல்லாம் எதையும் கஷ்டப்பட்டு பண்ணித் தரவேண்டாம், மோர் சாதம் போதும்னு இப்போவே சொல்லிவச்சிருக்கேன். மி.பொடி தொட்டுக்கொண்டே சாப்பிட்டுடுவேன்னு.
ReplyDeleteருசியா சாப்பிட்டுப் பழகிட்டாலோ, எதையும் நாமே சட்னு செய்யும் வழக்கம் இருந்தாலோ, பிற்பாடு கஷ்டம்தான் என்பது பதிவைப் படிக்கும்போது தெரிகிறது.
நீங்க சொல்வதில் இரண்டாவது பாயின்ட் சரி நெல்லை. எதையும் நானே செய்து பழகிட்டதாலே இப்போ மனசு ஒத்துக்கறதில்லை.
Delete//அதே பவுடரில் மத்தவங்க போட்டா அவ்வளவு வாசனை வராது// - ம்ம்ம்ம்... இதைச் செக் பண்ண கீசாமேடம் மாமனார் எங்க இருக்கார்னு எப்படித் தேடறது?
ReplyDeleteவேண்டாம், வேண்டாம், வீட்டுக்குக் காஃபி போடும்போது வாங்க. புரியும். மாமாவைப் பார்க்க வந்திருந்த எங்க சம்பந்தி காஃபியைக் குடிக்கும்போதெல்லாம் இதான் ஒரிஜினல் காஃபி, நாங்க குடிப்பதெல்லாம் ஒண்ணுமே இல்லைனு சொல்லிண்டே குடிப்பாங்க.
Deleteநீங்க வேற...நான் காபி சாப்பிடுவது கிடையாது. என்னைக்கோ தோணும்போது ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கேன் (கும்பகோணத்தில்). எவனாவது கசக்கும் இந்த மருந்தை விரும்புவானா என்று நான் கேட்டால், காஃபியே தங்கள் உடலுக்கு பெட்ரொல் என்று நினைக்கும் பலர் அடிக்க வர வாய்ப்பு இருக்கு
Deleteநானும் ஒரு காலத்தில் காஃபிதம்பளரைக் கழுவினால் கூட அதில் எதுவும் விட்டுக் குடிக்க மாட்டேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் காஃபி குடிக்க ஆரம்பிச்சது.. பின்னர் அதே பழக்கமாகி விட்டது, இப்போவும் சில நாட்கள் குடிக்காமல் இருந்துடுவேன். மாமா மருத்துவமனையில் இருந்தப்போ எல்லாம் காலைக் காஃபியே போட மாட்டேன். பாலைக் காய்ச்சி சர்க்கரை கூடப் போடாமல் (போட்டால் ருசி போயிடும்) அப்படியே குடிச்சுடுவேன். அல்லது ஒரு தம்பளர் நல்ல கெட்டித் தயிர் சாப்பிடுவேன். ப்ரோ பயாடிக் என்பதோடு ரத்தம் சுத்திகரிக்கும், ஹீமோக்ளோபின் ஏறும் எனச் சிலர் சொல்கின்றனர்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநமக்கு நாமே செய்து கொள்ளும் சாப்பாடுதான் எப்போதுமே பிடித்தமானதாக அமைந்து விடுவது இயல்புதான்..! தங்களின் நிலை வருத்தம் அளிக்கிறது. சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல ரெடிமேட் உணவுகள் பல வகையில் வந்து விட்டன. (இட்லி, தோசை மாவுகள் , சேவை, இடியாப்ப ரெடிமேட்கள், இ. மிளகாய் பொடி, புளியோதரை மிக்ஸ் என பல வந்து விட்டன. ) சுவை குறைவானதாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்படி முடியாமல் இருக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்..! வெளியில் வாங்கும் உணவுகளும் சுமாரானவையாக அமையும் போது இப்படியும் சிலதை முயற்சி செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. உங்கள் எழுத்தை ரசித்தேன். காஃபியின் ருசிக்காக தங்கள் வீட்டிற்கு வர வேண்டுமென தோன்றுகிறது.
உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு முடிந்ததை மட்டும் செய்யுங்கள். நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் கால் வலி குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரெடிமேட் சேவை எல்லாம் 20,25 வருஷங்கள் முன்னரே வந்தாச்சு கமலா. டிடிகே மூலம் வந்து கொண்டிருந்தது. என்ன ஆச்சோ தெரியலை. திடீர்னு நிறுத்திட்டாங்க. பின்னர் கன்கார்ட்னோ என்னமோ ஒரு கம்பெனி மூலம் வந்தது. அதுவும் இப்போ இல்லைனாங்க. கேழ்வரகில் கூட சேவை வந்து விட்டது. சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வடிகட்டி இட்லித்தட்டில் ஐந்து நிமிஷம் வைச்சு எடுத்தால் தயாராயிடும்.
Deleteவணக்கம் சகோதரி
Deleteதங்களது பதில் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆம் தீடீர் சேவைகளில் பல விதங்கள் உண்டு. ஆனால், நான் எப்போதுமே இட்லி அரிசி ஊற வைத்து அரைத்து சேவை நாழியில் பிழிந்து பல விதங்களில் தாளித்துக் கொட்டி தேங்காயுடன் உப்பு கார சேவை இனிப்பு, பருப்புக் கலவை இப்படித்தான் செய்து வந்தேன். மாவு கல்லுரலில் அரைப்பேன். கிரைண்டர் வாங்கிய பின் அதில்.. இப்போது" கழுதை தேய்ந்து" என்ற பழமொழி போல் எதுவுமே இயலாத படிக்கு இந்த தீடீர் சேவை எங்கள் வீட்டில் இடம் பெறுகிறது. இன்று கூட மதியம் சாப்பாட்டிற்கு மோர் குழம்பு பண்ணினேன். இரவு அதற்கு சேவை நன்றாக இருக்குமென இந்த சேவையைதான் கையில் எடுத்தேன். அப்போதுதான் (அது வெந்நீரில் ஊறுவதற்குள்) தங்களுக்கும் கமெண்ட் இட்டேன்.
இந்த சேவைகளில் 3V சேவை நன்றாக உள்ளது. அது இங்கே அருகில் ஒரு கடையில்தான் கிடைக்கிறது . அங்கும் கிடைக்குமா என்று பாருங்கள். அது ஓரளவுக்கு நாம் அரைத்துப் பிழியும் சேவை போல் ருசியாக இருக்கிறது. வெறுமனே சமையல் எண்ணெய்யில் கடுகு உ. ப, வத்தல்,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி வதக்கினேன். நன்றாக இருந்தது. அங்கும் கிடைத்தால் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென உடனே பகிர்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அம்மா வாங்கிக் கொடுத்த சேவை நாழியில் இரண்டு வருஷம் முன்னால் வரை கூடப் பண்ணிக் கொண்டிருந்தேன்.. இப்போத் தான் பண்ணுவதில்லை. நீங்கள் சொல்லும் சேவை இங்கே கிடைக்குதானு பார்க்கிறேன். நன்றி கமலா தகவலுக்கு.
Deleteபெங்களூரில் இருந்துகொண்டு ரெடிமேட் சேவை வாங்குகிறாரா இந்த கமலா ஹரிஹரன் மேடம்.... இது பெங்களூருக்கே அவமானமாச்சே... இங்கு பல கடைகளிலும் சேவை கிடைக்கும். கிலோ 80 ரு இருந்தது இப்போ 100 ரூ. நான் பல ஹோளிகே மனே (போளி செய்யும் வீடு) கடைகளிலும் பல இடங்களிலும் வாங்கியிருக்கேன். இப்போ இரண்டு வாரம் முன்னால் வீட்டுக்கு அருகில் இருக்கும் இடத்தில் கிடைக்குது என்று தெரிந்து உடனே வாங்கிவிட்டேன்.
Deleteஅது வந்த பிறகு வித விதமா சேவை பண்ணவேண்டியதுதான், பதிவு போடவேண்டியதுதான், அதுக்கு கருத்து எழுதறவங்களை மறந்துவிட வேண்டியதுதான் ஹா ஹா ஹா
நாமே எல்லாம் தயார் செய்து சாப்பிட்டு விட்டு பிறர் செய்து தருவதை சாப்பிடுவது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது முடியவில்லை என்றால்.
ReplyDeleteஎனக்கு வெகு நேரம் நிற்க முடியவில்லை இடுப்பிலிருந்து பெருவிரல் நுனி வரை இடது பக்கம் வலி. முடியாத போது நானும் இடை இடையே வாங்கி கொள்கிறேன். உறவினர்கள் வரும் போது வாங்கி கொள்வேன். அவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சாப்பாடு என்று சொல்வார்கள் , எனக்கு மட்டும் காரமாக இருக்கும்.
மகன் சமையலுக்கு ஆள் போட்டுக் கொள் என்கிறான். மருமகள் வந்து இருந்த போது ஒரு வாரம் ஒரு ஆள் போட்டு இருந்தாள் சமைக்க அவர் சாப்பாடு செய்வது பிடிக்கவில்லை எனக்கு.
வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
காய்போன் செய்தால் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தேங்காய் எல்லாம் உடைக்கமுடியவில்லை, அவர்களயே உடைத்து கொண்டு வர சொல்லி விடுவேன்.
எப்படியோ ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.
உடம்பை பார்த்து கொள்ளுங்கள். சார் உடல் நிலை நன்றாக தேறி வரும் என்று நினைக்கிறேன்.
இன்னிக்குச் சாப்பிட்டோம் பாருங்க ஒரு குழம்பு, ரசம், கறி, கூட்டு. இவ்வளவு மோசமாச் சாப்பிட்டதே இல்லை குழம்பு ஒரு கரண்டி தான் விட்டுக் கொண்டேன். தொண்டை எல்லாம் எரிச்சல். வெள்ளிக்கிழமை பருப்புப் போட்டுச் சமைக்காமல் சுண்டைக்காய்க் குழம்பு வைச்சிருந்தாங்க. சுண்டைக்காயை வறுத்துச் சேர்க்கவே இல்லை. ரசம் வெறும் வெந்நீர் தான். கூட்டு பூஷணிக்காயெல்லாம் மசிந்து போய் மசியலாட்டமா இருந்தது, ஏன் தான் குக்கரில் வைச்சு வேக விடறாங்களோ? அப்படியே வேகவிட்டால் அப்படி ஒண்ணும் நேரம் ஆவதில்லை. :( எப்போவுமே தேங்காய் நான் தான் உடைப்பதால் ஒண்ணும் பிரச்னை இல்லைல் எப்போவானும் காயைப் பொறுத்துக் கோணலாக உடையும். அநேகமாக இரு வட்டங்களாக வந்துடும்.
Deleteநீங்கள் அமெரிக்காவில் இருந்தால் என்ன செய்வீர்களோ, அதை போன்று செய்யலாம். நமக்கு வேண்டியது ஒரு பொரியல், ஒரு சாம்பார்/குழம்பு/ரசம், மோர். ஊறுகாய்.
ReplyDeleteபையர் அமெரிக்கா சென்ற போது எப்படி சமைத்து சாப்பிட்டார்? அப்படி செய்யலாம்.
பொடி வகைகள் (கருவேப்பிலை, பருப்பு, புளிசாதப்பொடி, எலுமிச்சம் சாத பொடி ) வத்தல் குழம்பு, தக்காளி தொக்கு, புதினா/கொத்தமல்லி தொக்கு, மோர் புளிசேரி, சாம்பார், கூட்டு இவற்றை ஒரு வாரத்திற்கு செய்து பிரிட்ஜ்ல் வைத்துகொண்டு தினமும் கொஞ்சம் எடுத்து சூடு பண்ணி சோற்றுடன் சாப்பிடலாம். அதே போல் இட்லி மாவு, வறுத்த ரவை, ரவா இட்லி மிக்ஸ், பிரெட், மைதா, கோதுமை பொடி, ரெடிமேடு சப்பாத்தி, ரெடிமேடு பூரி, போன்றவற்றை ஸ்டாக் வைத்துக்கொண்டால் போதும். தொட்டுக்கொள்ள இட்லி மிளகாய் பொடி, சட்னி பொடி, கிசான் சாஸ் வகையறா, புலி மிளகாய் துகையல் என்று செய்து வைத்துக்கொண்டால் டிபனுக்கு உபயோகிக்கலாம்.
Therefore "THINK" as IBM Watson used to say.
When there is a will there is a way!
Jayakumar
அம்பேரிக்காவில் கூடத் தினசரி சமையல் தான் பண்ணிக் கொண்டிருந்தேன். பையர் ஃப்ரோசன் ரொட்டி மட்டும் வாங்குவார். மற்றபடி ஃரோசன் ஐடம்கள் எனில் அவை காய்கள் தான், பட்டாணி, ஓக்ரா போன்ற சில ஃப்ரோசன் காய்கள். சாப்பாடு மிஞ்சி எடுத்து வைச்சாலும் அவங்க வரைக்கும் தான் போட்டுப்பாங்க. எங்க இரண்டு பேருக்கும் நான் 3 வேளையும் சமைச்சுடுவேன், பெண் வீட்டிலும் அப்படித் தான், மற்றபடி பொடி வகைகள் எல்லாம் எப்போதுமே இந்தியாவில் கூட பண்ணி வைச்சுப்போம். புளி இஞ்சி, புளி மிளகாய், மிளகாய்த் தொக்கு, தக்காளித் தொக்கு போன்றவையும் பண்ணி வைப்பேன்.
Deleteபுரிகிறது கீதாக்கா.
ReplyDeleteசமையலுக்கு ஆள் வைத்தால் அது நீங்க சொல்றாப்ல அதிகம் பிரச்சனைகள் வரும். ஆர்டர் செய்து சாப்பிடுவது பரவாயில்லை அதற்கு.
நீங்க ரெடி மேட் இடியாப்பம் (வயித்துக்கும் ஒன்னும் பண்ணாதே!) கிடைச்சா வாங்கலாம். சேவை, இட்லி....இப்படி.
இங்கு மங்களூர் கடையில் சேவை, நீர் தோசை, இட்லி, உப்புமா கொழுக்கட்டை, இனிப்புக் கொழுக்கட்டை, ஒரு டைமுக்குப் போனா சுடச் சுடக் கிடைக்கின்ரன. கடுபு இட்லி, ரொட்டி, இன்னும் சில டிஃபன் வகைகள்.....ஆனால் என்ன தொட்டுக் கொள்ள நாம வீட்டில் செய்வது கிடைக்காது. அவங்க கடைல ஏற்கனவே சட்னி பொடி , மிளகாய் ஊறுகாய் இப்படி உள்ளதுதான் கிடைக்கும்.
இதெல்லாம் நான் ஒரு நேரத்துக்குக் கடைக்குப் போனா பார்த்திருக்கிறேன் வாங்கியது இல்லை. சில ச்மயம் டைம் தப்பினால் கிடைக்காது. வீட்டு ஆர்டருக்கும் டெலிவரி செய்யறதையும் பார்த்தேன்.
இப்படி அங்கு ஸ்ரீரங்கத்திலும் கிடைக்கும்னு நினைக்கிறேன்.
கீதா