சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு இன்னிக்கு மருமகளின் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாய் ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன் 3BHK படத்தின் பெயர். சரத்குமார், தேவயானி நடிச்சது. கூடவே தெரிந்த முகம் சித்தார்த் மட்டும் தான். மற்றப் பெண்கள் யாரெனத் தெரியலை. மிகையில்லாத மேக்கப், நடுத்தர வர்க்கத்தை எடுத்துக்காட்டும் வீடு, குழந்தைகளின் பழக்கங்கள், அண்ணன், தங்கை செல்லச் சண்டைகள், அழகான காதலை மட்டுமே வெளிப்படுத்தும் காதல் காட்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய். இயல்பான வசனங்கள் மிகையற்ற நடிப்பு.ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இரண்டுமே தரம். அதிலும் ஒலி குறைச்சு வைச்சுக் கேட்டாலும் வசனங்கள் புரிந்தன. யோகிபாபுவை ஓர் அதிர்ஷ்டமான சின்னமாகப் பார்க்கிறாங்க போல. தேவை;யில்லாத அவரோட தலையீடு. என்றாலும் அதிகம் வந்து போரடிக்கலை. கடைசியில் தான் விரும்பிய பாடத்தைப் படிச்சு வேலையும் தேடிக் கொண்டு எடுத்த காரியத்தில் வெற்றியும் அடையும் சித்தார்த். தந்தை, மகன் பாசத்தை இயல்பான நடிப்பால் சரத்குமாரும், சித்தார்த்தும் வெளிப்படுத்தி இருக்காங்க. வீட்டிலுள்ளவர்களுடைய மனக்குறையைக் களைந்து எப்போதும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பெண்ணாக வரும் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்,சித்தார்த்தின் வகுப்புத் தோழியும் காதலியும் ஆன ஐஷுவாக வரும் பெண் எல்லோருமே கச்சிதம்.
தேவயானிக்கு அதிகம் வேலை இல்லை என்றாலும் பணக்கார வீட்டுப் பென்ணோடு மகனின் திருமணம் நின்று விட்டதுக்காக சரத்குமார் மகனை ஒதுக்கி வைக்கும் காட்சியில் தன் தாய் மனதின் மகன் அவனுக்குப் பிடித்த பெண்ணைத் தான் திருமணம் செய்துக்கணும் என்னும் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்வதோடு சரத்குமாரின் கோபம் அர்த்தமற்றது, பணக்காரப் பெண்ணோடு வரும் வீடு கிடைக்காமல் போனதால் வந்த கோபம் என்று சொல்கையில் அவரின் இயல்பான நடிப்பு கை கொடுக்கிறது. மொத்தத்தில் ஆரவாரமில்லாத அமைதியான கருத்துள்ள குடும்பப் படம். குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக் கூடியதொரு படம். தமிழில் இப்படி எல்லாமும் படம் எடுப்பாங்க என்பதை எனக்குப் புரிய வைத்த படம். நடுத்தர மக்களின் கனவான சொந்த வீடு, அதிலும் 3BHK கடைசியில் எப்படிக் கிடைக்கிறது என்பதைச் சொல்லும் படம். தியேட்டர்களில் வருதானு வந்திருக்கானு தெரியாது. அமேசானில் பார்த்தேனோனு நினைக்கிறேன். அமேசான் கணக்கு இருந்தால் முடிஞ்சால் பாருங்க.
படத்துக்கு விமர்சனம் எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?
ReplyDeleteடூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களும் நல்லா இருக்கும்.
பழைய என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது, அதுவும் தவிர, முதல் வரி, சரியாக வரவில்லை, நெகடிவ் ஆகத் த்வனிக்கிறது என்று தோன்றிவிட்டது.. டூரிஸ்ட் ஃபேமிலி படமுமே ஓடிடியில் வந்து நாளாகிவிட்டது. இன்னொரு படம் பார்க்கிங் (நல்ல நடிப்புக்காக விருது பெற்ற படம். இருந்தாலும் ஈகோ காரணமாக கொஞ்சம் கோபத்தை அதீதமாகச் சொல்லும் படம்).
Deleteஎன்னைப் பொறுத்தவரை நான் பார்ப்பது முதல் முறை என்பதால் புதுப்படமே. நீங்கள் சொல்லும் படங்களையும் முடிந்தால் பார்க்கிறேன்.
Deleteஅதெல்லாம் பார்த்தாச்சு! என்னைப்பொறுத்தவரை படம் முழுக்க நெகட்டிவிட்டியை தூவி விட்டு கடைசி பத்து நிமிடங்கள் மட்டும் பாஸிட்டிவ் காட்டுகிறார்கள். சரத்குமார் ஏன் அவ்வளவு இயந்திரத்தனமாய் மெல்ல வசனம் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆர்ட் பிலிம் என்று நினைத்து விட்டாரோ என்னவோ! ஆனாலும் ரத்தம் தெறிக்காத வன்முறை இல்லாத படம்.
ReplyDeleteதியேட்டரில் வந்து விட்டுதான் OTT யில் வரும். தியேட்டரில் வெளியாகி குறைந்த பட்சம் ஒரு மாதம் கழித்து இங்கு வெளியாகும்.
நெகடிவிடினு சொல்ல முடியாது ஸ்ரீராம், பலருக்கும் சொந்த வீடு என்பது ஒரு கனவே. ஆனால் இதில் 32 வயதுக்குப் பின்னர் வேலையை விட்டது தான் கொஞ்சம் உறுத்தல். மற்றபடி அந்த வயதில் படிச்சதெல்லாம் ஒத்துக்கக் கூடியதே. எங்க வீட்டிலேயே என் இரண்டாவது மாமா சின்ன வயசில் படிக்க முடியாமல் 30 வயதுக்கு மேல் கம்பெனி படிக்க வைச்சு மெகானிகல் இஞ்சினீரிங் படித்தார். சொந்தமாக வொர்க்ஷாப் வைக்கும் அளவுக்கு முன்னேறினார்.
Deleteஇந்த ஓடிடி எல்லாம் புரியறதில்லை. டிவியில் அவங்க போட்டுக் கொடுப்பாங்க பார்ப்பேன்
Deleteநான் நேற்று மாரீசன் பார்த்தேன். வடிவேலு ஃபகத் ஃபாசில் நடித்துள்ள படம். நன்றாய் இருக்கு.
ReplyDeleteஆமாம், நீங்கள் மெய்யழகன் பார்த்தீர்களா? பார்க்கவில்லை என்றால் பாருங்கள்.
நானும் நேற்று மாரீசன் பார்த்தேன். விறுவிறுப்பாக இருந்தது. வடிவேலுவின் நடிப்பு அருமை. ஃபகத் ஃபாசில் முதல்முறையாகக் கேள்விப்படறேன். படமும் இதான் முதல்முறை. நீங்க சொல்லி இருக்கும் படங்கள் எல்லாம் தெரியாது. முடிந்தால் பார்க்கிறேன்.
Deleteமேலும் சில நல்ல படங்கள் உண்டு. டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன் போன்ற படங்கள் பார்க்கலாம்.
ReplyDeleteகுடும்பஸ்தன் பார்க்க ஆரம்பித்து (மூன்று தடவைக்கு மேல்) படத்தில் ஐந்து நிமிடங்கள் கழித்தும் ஒன்ற முடியவில்லை. ஆனால் எல்லாரும் நல்ல படம் என்கிறார்கள்
Deleteஎல்லோரும் சொவதை வைத்துதான் நானும் சொன்னேன். உண்மையில் குடும்பஸ்தன் எந்நாளும் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. டிராகன், லவ் யு போன்ற படங்களும் பக்கமே போகவில்லை.
Deleteபடங்கள் பெயரே நன்றாக உள்ளன. நீங்கள் சொல்லும் படங்கள் பார்க்க முயல்கிறேன். நெல்லை குடும்பஸ்தன் பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுக்கலையே?
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபுதிதாக வரும் எந்த திரைப்படங்களையும் பார்க்க விரும்பாத நான் இந்தத் திரைப்படம் இப்போது என் மகள் வறுப்புறுத்தியதில் டிவியில் பார்த்தேன். நன்றாக உள்ளது. நீங்களும் படத்திற்கு நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்.மன மாறுதல்களுக்கு இந்த மாதிரி படங்களைப் பார்க்கலாம். ஆனால், இந்த மாதிரி படங்கள் வருவது அரிதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. நீங்களும் இந்தப் படம் பார்த்திருப்பதும் ரசித்திருப்பதும் சந்தோஷமாக இருக்கு. தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் படங்கள் எடுப்பதே மனதுக்கு நிறைவாயும் இருக்கு.
Deleteஅக்கா உங்கள் விமர்சனம் பாசிட்டிவ். நான் படம் பார்க்கலை எனவே சொல்லத் தெரியவில்லை.
ReplyDeleteஆதி வெங்கட்டும் படம் விமர்சனம் எழுதியிருக்காங்க.
சிலர் எதிர்மறைக் கருத்துகளும் சொல்லியிருக்காங்க இப்படம் பற்றி.
இப்போது இன்னும் சில நல்ல படங்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது ஆனால் எனக்குப் பார்க்கும் வாய்ப்பு ரொம்பக் கம்மி. ஓடிடி யில் இல்லை. தியேட்டருக்குச் செல்வதும் இங்கு ஒரு ஊருக்குச் செல்வது போன்று. ரெண்டாவது திரையிடும் நேரம் சரிப்பட்டு வர மாட்டேங்கிறது.
கீதா
ஆதியின் விமரிசனத்தை நானும் படிச்சேன். அவங்க பார்வையில் மனதில் பட்டதைச் சொல்றாங்க. ஆனால் பலருக்கும் சொந்த வீடு என்பது எட்டாக்கனவாய் இருக்கு என்பதும் உண்மை தான். இங்கே அபார்ட்மென்டில் வீடு வாங்கக் கஷ்டப்படும் குடும்பம் எனக் காட்டி இருக்காங்க. நாங்க சொந்த வீடு, தனி வீடாகக் கட்டும்போதே பல சிரமங்கள், கஷ்டங்கள், பணப்பற்றாக்குறை என்று பலவும் அனுபவித்தோம். க்யூரிங்க் பண்ண ஆள் போட்டால் தினசரி சம்பளம் கொடுக்கணுமேனு நாங்களே க்யூரிங் பண்ணுவோம். குழந்தைகள் கிணற்றில் இருந்து நீர் இறைத்து வாளிகளில் ஊற்றி வைக்க நாங்க இருவருமாகக் க்யூரிங் பண்ணுவோம். சாரத்தின் மேலே எல்லாம் ஏறி இருக்கேன்.. அது ஒரு காலம். அதனாலேயே அம்பத்தூர் வீட்டை விற்கும்போது குழந்தைகள் உள்பட மன வேதனைப் பட்டோம். அக்கம்பக்கம் சுற்றி அடுக்குமாடிக்குடியிருப்பாய்ப் போனதாலும் சுற்றி நான்கைந்து குடியிருப்புகளுக்கு நடுஅவே எங்கள் வீடு மட்டும் தனித்துப் போய்ப் பல விதங்களில் கஷ்டங்கள் அனுபவித்த காரணத்தாலுமே அதை விற்கும்படி நேர்ந்தது.
Deleteநல்லதொரு விமர்சனம். நான் பார்க்க வாய்ப்பில்லை. மனைவியும் மகளும் பார்த்துவிட்டார்கள். எனது பக்கத்திலும் ஆதி எழுதிய திரைப்பட அனுபவம் இருக்கிறது.
ReplyDeleteவாங்க வெங்கட், முகநூலில் ஆதியின் விமரிசனம் படிச்சேன். அவங்க கோணத்தில் எழுதி இருக்காங்க.
Deleteநானும் பார்த்தேன் படம் நன்றாக இருக்கிறது. பொறுப்பு கடமை என்று சொல்லி கொண்டே இருப்பதால் மகனுக்கு தோல்வியே கிடைக்கிறது. பின் அவன் இஷ்டபட்ட பெண்ணை மணந்து இஷ்டபட்ட படிப்பை படித்து அப்பாவின் கனவையும் நினைவு ஆக்கும் கதை நன்றாக இருக்கிறது.
ReplyDelete