கீதா கல்யாணமே வைபோகமே! என்னோட கல்யாணம் நடந்த விதத்தைப் பற்றிய சில பதிவுகளைச் சேர்த்து ஒரு புத்தகமாகத் திரு கிரியேட்டிவ் காமன்ஸ் ஸ்ரீநிவாசன் மூலமாகப் போட்டேன். அதிலேயே காப்பிரைட்டில் இந்தப்புத்தகத்தை மறுபதிப்புச் செய்யவும் யாவரும் பயன்படுத்தும் முறையில் ஆன உரிமைக்கும் எழுதிக் கொடுத்திருக்கேன். இப்போது திடீரென ஓர் எண்ணம். இந்தப் புத்தகத்தை மறுபதிப்புச் செய்யலாமா என்பதே அது! செய்தால் கிண்டில் மூலம் வெளியிட முடியுமா? பிரச்னை வருமா?மற்றவர்கள் நம் புத்தகத்தை மறுபதிப்புச் செய்யும்போது நாமே அதைச் செய்தால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது. நன்கு விபரம் தெரிஞ்சவங்க இதைப் பற்றிச் சொல்லவும்/ இல்லைனா என்னோட "எண்ணங்கள்" பக்கத்திலேயே மீள் பதிவு செய்துட்டுப் போயிட்டே இருக்கலாம். என்ன சொல்றீங்க?
என்னோட பி எஸ் என் எல் நம்பர் லாக் ஆகிப் பின்னர் நம்ம ஸ்ரீராமின் ஆஃபீசர் அத்தை மூலம் அதை மீட்டெடுத்தேன். ஆனாலும் அதில் பயன்படுத்த முடியாதவாறு உள்ளதால் இன்டெர்நேஷனல் ரோமிங்கிற்கான ஐ என் ஆர் போட்டாக வேண்டும். ஸ்ரீராம் போட்டுத் தரத் தயார் என்றாலும் அதுக்கான சிம்மை இங்கே இருந்து நான் எப்படிக் கையாள்வது? ஆகவே தொலைபேசி இருந்தும் இல்லாதது போல், ஒரு பலனும் இல்லை. கிளம்பும் முன்னர் நடந்த சில அமர்க்களங்களால் உடல் நிலை மோசமாகப்பாதிக்கப்பட்டதில் ஒண்ணும் புரியலை. மருத்துவர், எக்ஸ்ரே, ஸ்கான் என்றே கிளம்புவதற்கு முதல் நாள் வரை போய் விட்டது. இத்தனைக்கும் காரணமே பிஎஸ் என் எல்லுக்குப் போனது தான். ஆனால் வேலையும் ஆகவில்லை. உடம்பும் பாதிப்படைந்து சுத்தமாய் இந்த இன்டெர் நேஷனல் ரோமிங் பற்றியே மறந்து விட்டோம். ஜியோவில் போடலாம் எனில் அது யானை குதிரையை விடவும் விலை அதிகமாய் உள்ளது. இப்போதைக்கு என்னோட தொலைபேசியில் வாட்சப்பில் செய்திகள் கொடுக்கலாம், பெறலாம். இங்குள்ள நெட்வொர்க்கின் மனம் குளிர்ந்திருந்தால் வீடியோ கால் பண்ணிப் பேசலாம்.
இங்கே எத்தனை நாட்கள் எனப் புரியவில்லை. வந்ததும் மெடிகல் செகப் முடிஞ்சுக் கைரேகைகள் மாதிரி கொடுத்து எல்லாம் ஆகிவிட்டது. கத்தார் ஐடி வரணும். அதன் பின்னரும் மெடிகல் செக் அப் இருக்குமோ என்னமோ சுப்புத்தாத்தா முகநூல் மூலம் அழைத்துப் பேசினார். தக்குடு வரேன்னு சொல்லி இருக்கார் வரணும். இன்னும் சில சொந்தங்கள் (தூரத்துச் சொந்தம்) இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் அவ்வளவாய்த் தெரியாது. வலை உலக நண்பர்கள் தான் அதிகம் பழகி இருக்காங்க.
இங்கே எனக்கு இன்னமும் மனம் ஒட்டலை. திடீர்னு பறக்கும் சக்தி வந்து கிளம்பிப் போயிடலாமானு இருக்கு. என்னதான் பிள்ளை, மாட்டுப்பெண், கு.கு. ஆகியவர்கள் இருந்தாலும் இது அவங்களோட இடம் என்பதால் அவங்களுக்குச் சரியா வருது. என் உடலோ, மனமோ இன்னமும் ஏத்துக்கலை. வீடு ரொம்பப் பெரியது. மாடியும் கீழுமாய்ப் பத்துப் பேருக்கு மேலே இருக்கலாம். கூரை நல்ல உயரம். இருபதடி இருக்குமோனு சந்தேகம். மாடிக்கெல்லாம் நான் போகவே இல்லை. சுமார் 24 படிகள். நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. வெளியே போனவரைக்கும் வெயில் கொளுத்துது என்றால் கொளுத்துது. 37 டிகிரி செல்ஷியஸ் தான் போடறாங்க. ஆனால் சூடு/அனல் தாங்கலை. காரிலிருந்து வெளியே வந்தாலே அனல் அடிக்குது. கார் கதவை எல்லாம் பிடித்துக் கொண்டு காரில் ஏற முடியலை. பையர் ஒரு நாள் மால் எல்லாம் பார்க்கப் போகலாம் என்றார். வேண்டாம்னு கை எடுத்துக் கும்பிட்டுட்டேன்.
No comments:
Post a Comment