3BHK பார்த்த பின்னர் மேலும் சில படங்கள் பார்க்க நேர்ந்தது. மாரீசனும் அதில் ஒன்று. வடிவேலு நடிப்பும் அந்த ஃபகத் ஃபாசில் நடிப்பும் ஒருவருக்கொருவர் போட்டியாக அமைந்திருந்தது. இந்த நடிகர் நடித்த படத்தை இப்போத் தான் முதல் முதல் பார்த்தேன். பின்னர் ட்ரென்டிங் என்றொரு படம். நல்ல படிப்பினைக் கொடுக்கும் படம். ஆனால் எத்தனை பேர் படிப்பினையாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அடுத்து முந்தாநாள் பிள்ளையும் மருமகளும் குழந்தைக்குப் பள்ளீச் சீருடை எடுக்கப் போயிருந்தப்போ மருமகள் ரொம்பவே சிபாரிசு பண்ணிப் போட்டு விட்டுப் பார்க்கச் சொன்ன பட. தலைவன், தலைவி. வெகு சாதாரண மனிதர்களை வைத்து எடுத்த படம். நடிகர்களெல்லாம் யாரென்றே தெரியலை. படம் எடுத்தவர், கதை வசனகர்த்தா,எல்லோருமே தெரியாதவங்க. ஆனால் படம் இந்தக் காலத்துத் தம்பதிகள் பார்க்க வேண்டியதொரு படம்.
ஒற்றுமையாய்க் குடும்பம் நடத்தும் கணவன், மனைவி வாழ்க்கையில் இரு பக்கத்து நெருங்கிய சொந்தங்களும் பெண் வீட்டில் பெண்ணின் பெற்றோர் உடன் பிறந்தவர் எனில் பையர் வீட்டில் அவருடைய சகோதர், பெற்றோர், குறிப்பாகத் தாய், போதனையில் மயங்கித் தவறு செய்யும் தாய், பின்னர் திருந்துவதும் நல்லா இருந்தது. மற்றவர்களின் போதனையில் பிரியும் தம்பதிகள் விவாகரத்து வரை போய்விடப் பின்னர் எப்படி மீண்டு வருகின்றனர் என்பதைச் சொல்லும் படம். இதில் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் அன்பும், பாசமும், புரிதலும் இருந்ததால் தாங்கள் செய்வது தவறு எனப் புரிகிறது. ஈகோ இருந்தாலும் நிலைமைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்துப் போகும் அனுசரிப்பும் இருந்தது. ஆகவே கடைசியில் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். இந்தக்காலப் படித்த, படிக்காத இளைஞர்களுக்குத் தேவையான படிப்பினையைச் சொல்லும் படம். அதில் இந்த யோகி பாபு எதற்காக, ஏன் வந்தார் என்றே புரியலை. அவரைப் போட்டால் படம் ஓடும் என்னும் மரபு ஏதானும் இருக்கும்போல. தேவையே இல்லாத கதாபாத்திரம்.
கண்ணில் கட்டி பெரிதாக வலது கண்ணின் மேல் இமையில் வந்திருக்கிறதால் வியாழனன்று இந்த ஊர் மருத்துவமனைக்குப் போயிருந்தோம். என்னால் காரிலேயே ஏற முடியலை என்பதால் கொஞ்சம் சிரமப்படத் தான் வேண்டி இருக்கு. ஆனால் மருத்துவமனையில் என்னைப் பார்த்ததுமே வீல் சேர் கொண்டு வந்துட்டாங்க. மருத்துவர் கூட அதில் உட்கார்ந்த வண்ணமே நான் இருக்க என்னைப் பரிசோதித்தார். கண் மருத்துவர் இல்லை. மருத்துவமனை பெரிதாக உள்ளது என்பதோடு முதல் இடத்தில் இருக்கும் பத்து மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாம். ஆஸ்டர் என்னும் பெயர். இங்கு வந்ததும் செய்ய வேண்டிய நடைமுறைகளை வந்த இரண்டு நாட்களிலேயே செய்து முடித்து விட்டதால் மருத்துவமனைப் பிரவேசம் எளிதாக இருந்தது. மருத்துவர் உள்ளுக்குச் சாப்பிட மாத்திரைகளும், கண்ணில் போட்டுக்கொள்ள மருந்தும் கொடுத்திருக்கார். கட்டி பழுத்திருக்கே தவிர உடையவில்லை. அப்படியே அமுங்குமோ என்னமோ தெரியவில்லை. கொஞ்சம் பார்வை மங்கலாகவே இருக்கு.
இன்னிக்குக் குழந்தை பள்ளிக்குப் போய்விட்டதால் வீடே வெறிச். விளையாட்டு அட்டைகளை வைத்துக் கொண்டு ஸ்னேக் அன்ட் லாடரும், லூடோவும் விளையாடும். அது தான் ஜெயிக்கணும் என்று சொல்லும். லூடோ விளையாட்டில் அதன் காயை நான் வெட்டும் நிலை வந்தப்போ அதுக்குப் புரியலை. அப்புறமாச் சொன்னேன். ஒத்துக் கொண்டது என்றாலும் அதுவே பழம் எடுக்கும்படி விளையாடினேன். இதைத் தவிர்த்து பில்டிங் செட்டை வைத்துக் கொண்டு தானே பேசிக் கொண்டு தானே விளையாடிக்கும். தினம் தினம் தோசை தான் வேண்டும். அதுவும் மிளகாய்ப் பொடியோடு. தாத்தாவுக்கும் அதான் பிடிக்கும். அதோடு உடலில் ரத்தம் எடுக்கறது எனில் தாத்தா மாதிரி பேத்திக்கும் நரம்பே கிடைப்பதில்லை. பள்ளிக்குப் போவதற்கு அழுவதில்லை. தானே கிளம்பி விடுகிறது. இந்த வருஷத்தில் இருந்து அவங்க அம்மாவே கொண்டு விடுவதாகச் சொன்னார்கள். பள்ளிப் பேருந்து கட்டணம் மிக அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு. இன்னிக்குக் காலம்பரவே எழுந்து குளித்து விட்டதால்நேரம் போகவே இல்லை. அதான் கணினியில் உட்கார்ந்து ஏதேனும் செய்யலாம்னு உட்கார்ந்தேன். இந்தியாவில் இப்போது பனிரண்டரை மணி எனக் கணினி காட்டுகிறது. இங்கே பத்து மணி ஐந்து நிமிடம். பொழுது நகரவே இல்லை. மெதுவாகப் போகிறது. அங்கே எனில் நாள் பறந்து விடும்.
No comments:
Post a Comment