எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 27, 2026

கல்யாணமாம், கல்யாணம், நம்ம மீனாக்ஷியின் கல்யாணம்!

 சமீப காலமாக முகநூலில் அறிமுகம் ஆன நண்பர் திரு வினோ மோகன் அவர்கள் எப்போவும் அந்தக் காலத்து அழகிய ஓவியங்களை அதிலும் பெரும்பாலும் ஆனந்த விகடனில் திரு கோபுலு அவர்களால் வரையப்பட்ட ஓவியங்களைப் பகிர்ந்து அவற்றில் அவர் பாணியில் மிகவும் ஆழ்ந்த ரசனையோடு கூடிய பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். எனக்கு அவருடைய வர்ணனையும் கற்பனா சக்தியும் கண்டு பிரமிப்பாக இருக்கும். அநேகமாக விடாமல் பார்த்துவிடுவேன். சில சமயங்கள் உடனே போக முடியாது. இந்தப் பதிவையும்ம் முதலிலே படிச்சாலும் ஓவியம் அதில் இல்லை. பின்னர் அவரோட டைம்லைனுக்கே போய்ப் பார்த்தால் நம்ம மீனாக்ஷியின் கணவன் சுந்தரேசர் வளையல் விற்ற படலத்தைத் திரு கோபுலு வரைந்திருந்தார். என்ன அழகு, என்ன அழகு, உண்மையிலேயே சுந்தரேசர் தான். அங்கே அவருக்குப் போட்ட பின்னூட்டக்கருத்துக்களையும் புதிதாக எழுதிய மீனாக்ஷி கல்யாணம் பற்றிய கருத்தையும் சேர்த்து ஒரே பதிவாக்கி இங்கே பகிர்கிறேன். இந்த யோசனை கூட அவர் சொன்னது தான். "மதுரை மாநகரம்" வலைப்பதிவில் மதுரை பத்தி நிறைய எழுதினாலும் இப்போக் கும்பாபிஷேஹமும் அதைத் தொடர்ந்த விவரணையும் மீண்டும் பழைய மதுரையை நினைக்க வைச்சது. 

அங்கே நான் கொடுத்த கருத்துகள்.

சித்ரலேகா ஓவியங்கள் ஆனந்த விகடனில் "சிலம்புச் செல்வம்" என்னும் பெயரில் வந்து கொண்டிருந்த சிலப்பதிகாரம், மணிமேகலை தொடரில் நிறையப் பார்த்திருக்கேன். ஆனால் இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விகடன் அட்டையைக் காண முடியலை. 

 இங்கே உங்கள் டைம்லைனுக்கு வந்து தான் ஓவியத்தைப் பார்க்க நேர்ந்திருக்கு. அருமையான ஓவியம். ஈசன் வளையல் செட்டியாக வந்த படலம். மதுரையில் ஒவ்வொரு ஆவணி மாதமும் ஆவணி மூலத் திருவிழா என நடக்கும்.. அப்போது ஒரு நாள் ஈசன் வளைச் செட்டியாக வருவார். அப்போது ஸ்வாமி, அம்மன் புறப்பாடு எங்கள் ஆவணி மூல வீதிகள் வழியாகவே போகும். மாலை ஆறு மணியிலிருந்தே வாசலில் வரும் இறைவன், இறைவியைக் காணக் கோலமெல்லாம் போட்டு வைத்துவிட்டு அர்ச்சனைத் தட்டோடு ரெடி ஆகிவிடுவோம். மூல நக்ஷத்திரத்தன்று புட்டுத் திருவிழா. ஈசன் வந்திக்கு மோக்ஷம் அளிக்க அவளுக்காக வைகை நதி வெள்ளைத்தைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் என்னும் கணக்கில் வந்திக்காக ஈசன் மண்வெட்டி, கடப்பாரை, தலையில் மணல் அள்ளக் கூடை சகிதம் போவார். இந்நிகழ்ச்சி மதுரையில் வைகைக்கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பில் ஒவ்வொரு வருஷமும் நிகழ்வாக நடக்கும். அப்பா, அண்ணா, தம்பி எல்லாம் போவார்கள். கூட்ட நெரிசல் காரணமா என் போன்ற பெண்களை அழைத்துச் செல்ல மாட்டார்கள். என்றாலும் எங்கள் வீதி வழியே ஈசன் போவார். அதே போல் வளையல் திருவிழாவில் வீட்டுக்கு வீடு வளையல் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொள்வதோடு கறுப்பு வளையல்களும் பிரசாதம் போலக் கொடுப்பார்கள். சின்னதாக இருக்கும். மதுரையில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும் புண்யாஹவசனத்தின் போது இந்தக் கறுப்பு வளையல்களையே குழந்தைகளுக்கு அணிவிப்பார்கள். குழந்தையின் ஒவ்வொரு குளி முறையின் போதும் ஒவ்வொரு வளையலைக்கழற்றி உடைத்துப் போட்டு மஞ்சள் நீரால் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்துக் கொட்டுவார்கள்.

 Vino Mohan, அருமையான பதிவு. நல்லதொரு கூட்டுக்குடும்ப வாழ்வு வாய்த்திருக்கிறது உங்களுக்கு. கிட்டத்தட்ட எனக்கும் சிறு வயதில் இப்படியான அனுபவங்களே. நான்கு வயதிலேயே பள்ளியில் சேர்த்துவிட்டார் அப்பா. கூடுதலாக வயதைச் சொல்லி. அப்போதிலிருந்து படிப்பு ஆரம்பித்த பின்னரும் இதே போல் புத்தகங்களே பெருந்துணையாக எனக்கும் இருந்தது. நாங்களும் மதுரை வாழ்வில் பற்பல பஜனைகள், கதாகாலட்சேபங்கள் எனப் போவோம். இரவு ஏழரைக்குள் சாப்பாட்டை முடிச்சுட்டு எட்டுமணிக்கு நடக்கும் கதாகாலட்சேபத்துக்குப் போய்விட்டு இரவு பத்து பத்தரைக்கு வீட்டுக்கு வந்து படுத்துப்போம். பயமே தெரியாத நாட்கள் அவை. மதுரையிலேயே வசித்த தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டுக்குப் போனால் கொண்டாட்டம் தான். விதம் விதமான விளையாட்டுக்கள். எல்லாமும் வீட்டிலே இருந்தவண்ணம் விளயாடுவது தான். பின்னர் புத்தகப்படிப்பு என இனிமையான நாட்கள். தொடர்ந்து மீனாக்ஷிக்கு நடக்கும் உற்சவங்கள். என மறக்க முடியாத அனுபவங்கள்.

 பிற்சேர்க்கை

அதிலும் மீனாக்ஷி கல்யாணத்தன்று வீட்டில் வேலையே நடக்காது. காலம்பரவே எல்லோரும் எழுந்து குளித்துவிட்டு அவசர அவசரமாகச் சமைச்சு வைப்பார்கள். அவசர சமையல்னாலும் பாயசம், வடை எல்லாம் இருக்கும். நம்ம வீட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆச்சே.  பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் ஓடி ஓடி வாசலுக்கு வந்து கோயிலில் இருந்து சுந்தரேசர் கிளம்பிட்டாரா? மீனாக்ஷிக்குச் சீர் போயாச்சானு வந்து வந்து பார்ப்போம். காலம்பரவே முதல் முதலாக சுந்தரேசர் அலங்காரத்தில் ஈசன் தன் பூத கணங்கள் புடை சூழக் கல்யாணம் பண்ணிக்கப் போவார். சொக்கநாதரை அலங்காரம் பண்ணி வீதி வழியாக கூட்டிப் போவார்கள். அதன் பின்னர் மீனாக்ஷிக்கான சீர் வரிசை யானை மேல் அம்பாரியிலும், பல்லக்கிலுமாகப்போகும். அப்போவே கோயிலுக்குப் போகக் கிளம்பிடுவோம். முகூர்த்தம் எத்தனை மணிக்குனு கேட்டுண்டு மொத்த வீடும் (நான்கு குடித்தனங்கள். ஒரு குடித்தனத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நபர்) எல்லோருமாகச் சேர்ந்தே போவோம்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு போவோம். குறுக்கு வழியாகக் கல்யாண மண்டபம் போயிடுவோம். வடக்கு கோபுரம் வழி போனால் சீக்கிரம் கல்யாண மண்டபத்தை அடையலாம். இப்போல்லாம் அங்கே மீனாக்ஷி கல்யாணம் நடப்பதில்லை என்றார்கள்.  அப்பாவுக்குத் தெரிஞ்ச அல்லது வீட்டுக்கார மாமிக்குத் தெரிஞ்ச பட்டர் எங்களுக்கு இடம் போட்டு வைச்சிருப்பார். மேடை உயரமாக இருக்கும். என்றாலும் தூரத்திலிருந்து பார்க்கணுமே. மற்றபடி இப்போதைப் போல் எல்லாம் டிக்கெட், பாஸ் என்றெல்லாம் இருக்காது. அப்போது பி.டி.ராஜன் தான் அறங்காவலர். பழனிவேல் ராஜனெல்லாம் உத்தம பாளையத்தில் வக்கீல் தொழில் பண்ணிக் கொண்டிருந்தார். அரசியலில் மும்முரமாக ஈடுபடவில்லை. எல்லாச் சடங்குகளும் நடந்து முடிந்து முறைப்படி மாங்கல்யாதாரணம் ஆகும்போது பதினோரூ மணி ஆகிடும். அதன் பின்னர் அங்கே வந்திருக்கும் பெண்மணிகளில் பலரும் தாங்களும் பழைய தாலிச்சரடை நீக்கிவிட்டுப் புதுசாகக் கட்டிக் கொள்வார்கள். அதன் பின்னர் எல்லோரையும் வரிசையாகக் கல்யாணம் ஆன தம்பதியரைப் பார்க்க அனுமதிப்பார்கள். கூட்டம் முண்டி அடிச்சாலும் விரைவில் கூட்டம் ஓர் ஒழுங்குக்கு வந்துடும். ஸ்வாமியையும் அம்மனையும் கிட்டக்கப்போய்ப் பார்த்துட்டு வீடு திரும்புவோம். வந்ததும் தான் சாப்பாடு. பின்னர் மாலை அலங்காரம் பண்ணிப் பல்லக்கில் போகத் தயாராக இருக்கும் மீனாக்ஷியைக் கோயிலில் வைத்தே பார்த்துட்டு வருவோம். 

No comments:

Post a Comment