கண்ணனை எங்கும் காணவில்லை. யசோதை பதறித் துடித்தாள். கண்ணனைத் தேடி அவள் இங்கும் அங்கும் ஓடினாள். அந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள். பைத்தியம் மாதிரிப் புலம்பினாள். "கிருஷ்ணா, கிருஷ்ணா, எங்கே போனாய்? என் கிருஷ்ணன் என்னை விட்டுப் போய்விட்டானா? இனி கிடைப்பானா? மாட்டானா?" என்றெல்லாம் புலம்பினாள். தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் மட்டுமின்றி வீட்டினுள் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து தேட ஆரம்பித்தனர். அவர்களில் சிலர் ஓடிச் சென்று நந்தன் இருக்குமிடம் தேடிக் கண்டு பிடித்துக் கண்ணனைக் காணவில்லை என்ற விஷயத்தைச் சொன்னார்கள். நந்தன் உடனேயே தன்னுடைய ஆட்களைச் சேர்த்துக் கொண்டு யசோதை இருக்குமிடம் வந்து, என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிருஷ்ணனைத் தேடச் சென்றான். நேரம் சென்று கொண்டே இருந்தது. வெகுநேரம் தேடியும் கண்ணனைக் காணவில்லை. தேடித் தேடி அலுத்துப் போன யாதவர்கள் அனைவரும் நகருக்கு வெளியே வந்துவிட்டார்கள். அப்போது அவர்களில் ஒருவன் காலில் ஏதோ இடறியது. என்னவெனப் பார்த்தால் ஒரு மனிதன் அங்கே இறந்து கிடந்தான். யாரோ ஒரு மனிதன், ஆந்தி எனப் படும் புயல்காற்று வீசியபோது, ஓடி வந்து திக்குத் திசை புரியாமல் முட்டி மோதிக் கொண்டு கீழே விழுந்து அங்கே கிடந்த பெரிய பாறாங்கல்லில் அடிபட்டுச் செத்திருக்கவேண்டும். யார் எனப் பார்த்தார்கள். கிராமத்தார்களில் ஒருவனுக்கு அவனை அடையாளம் தெரிந்தது. ஆஹா, இவன் அந்தப் பறவைகளைப் பிடிப்பவன் அல்லவோ? இவன் பெயர் திரிணாவிரதன். மதுராவில் இருந்து இரு தினங்கள் முன்னால் வந்தான்.
நந்தனுக்கு விஷயம் மெல்ல மெல்லப் புரிந்தது. கம்சன் ஏற்பாடு செய்து இவன் இங்கே வந்திருக்கவேண்டும். நிச்சயம் கிருஷ்ணனைத் தூக்கிச் சென்றுகொல்லுவதற்காக கம்சன் ஏற்பாடு பண்ணி இருக்கவேண்டும் இவனை. ஆனால் விதி வசத்தால், அல்லது கிருஷ்ணனின் அதிர்ஷ்டத்தால் இவனே இறந்துவிட்டான் இப்போது. ம்ம்ம்ம்ம்?? இவன் தூக்கிச் சென்ற கண்ணன் எங்கே? எங்கே போயிருப்பான்? அல்லது எங்கேயானும் ஒளித்து வைத்துவிட்டானோ? அனைவரும் "கண்ணா, கண்ணா, " என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடி, அலைந்து கண்ணனைத் தேட ஆரம்பித்தனர். சற்று நேரம் தேடும்போதே அருகே இருந்த ஒரு மாந்தோப்பில் இருந்து "அப்பா, அப்பா, நான் இங்கே இருக்கேன்." என்று ஒரு இளங்குரல் கேட்கவே அனைவரும் ஓடிச் சென்று பார்த்தனர். கண்ணன் ஒரு மாமரத்தின் பின்னாலிருந்து மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தான். அவன் முகத்தின் சிரிப்பு சற்றும் மாறவில்லை. அதே கள்ளச் சிரிப்பு. தந்தையைக் கண்டதும், தன்னிரு கைகளையும் விரித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடோடி வந்தான் கண்ணன். வாரி அணைத்துக் கொண்டான் நந்தன். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். "குழந்தாய், எப்படி வந்தாய் நீ இங்கே?" என்று நந்தன் கண்ணனைக் கேட்டான். அவன் குரல் பெரும் ஆபத்தில் இருந்து நீங்கிய உணர்ச்சிகளில் தழுதழுத்தது. கண்ணன் பயமறியாத இளங்கன்றாகத் தன் பிஞ்சு விரல்களால் இறந்திருந்த அந்த மனிதனைச் சுட்டிக் காட்டி "இவன் என்னைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தான். என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓடினான். நானும் அப்போ இருந்த காற்றால் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். ஆனால் இவன் கீழே விழுந்துவிட்டான், நான் ஓடியே போய் ஒளிஞ்சுண்டேன்." என்று குழந்தைத் தனம் மாறாத குதூகலத்துடன், தகப்பன் அறியாமல் தான் ஒரு பெரிய வேலையைச் செய்திருக்கோம் என்ற சந்தோஷத்துடன் கூறினான் கண்ணன்.
நந்தன் மிக ஆழமான ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் குழந்தையைத் தூக்கிச் சென்று யசோதையிடம் ஒப்படைத்தான். விஷயம் வசுதேவருக்கும், தேவகிக்கும் சொல்லப் பட்டது.
பகாசுரனை எதிர் பாத்தேனே. இது கேள்விப்பட்டதில்லை.
ReplyDeleteம்ம்ம்..
ReplyDeleteநல்ல வேளை, கண்ணன் காணாமல் போனதுடன் தொடரும் போடாம விட்டீங்களே!
ReplyDelete