புலி வருது, புலி வருது கதையாக் கடைசியிலே புலி வந்தே விட்டது. குமரன் இந்தச் சங்கிலித் தொடருக்கு அழைத்து விட்டார். இன்னும் சிலரும் கூப்பிட்டிருக்கிறதா மெளலி சொல்றார். இப்போ வல்லி சிம்ஹன் வேறே அழைப்பு விட்டாச்சு. இதுக்கு முன்னாலே கூப்பிட்டவங்க யாருனு தெரியலை. மன்னிச்சுக்குங்க. ஏப்ரலில் இருந்தே சரியாகப் பதிவுகள் போடவோ, பதிவுகளைப் பார்க்கவோ முடியலை. அதனால் யார் கூப்பிட்டதுனு தெரியாது. பதில் கொடுக்கலைனு நினைக்காதீங்க. இந்தக் குமரன் அட, நம்மையும் மதிச்சுக் கூப்பிட்டிருக்காரேனு பார்த்தால் இல்லாததை எல்லாம் சொல்லி இருக்கார். எனக்குத் தெரியாத விஷயம் தான் அதிகம். எழுதறது எல்லாம் தெரிஞ்ச விஷயங்களே! தெரியாத விஷயங்களைத் தொடறதே இல்லை. குமரன் அதைக் கவனிக்கணும்! வல்லியோ அதுக்கும் மேலே ஒருபடி போய் ரொம்பப் புகழ்ந்திருக்காங்க. அதுக்குத் தகுதியான மாதிரியா நடந்துக்கணும். இப்போ முடிஞ்சவரைக்கும் பதில்கள்:-
1உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?
உண்மையான பெயர் சீதாலக்ஷ்மி தான். அப்பாவோட அம்மா பெயர்.
வீட்டில் பிறந்த அனைத்துப் பேத்திகளுக்கும் இதே பெயர் என்பதால் ஒவ்வொருத்தரையும் கூப்பிடுவது மாற்றப்பட்டது. கீதானு ஏன் கூப்பிட ஆரம்பிச்சாங்க? தெரியலை! பிடிக்குமா? என்றால் அதுவும் சொல்லத் தெரியலை. ஆனால் அப்பாவழி, அம்மாவழித்தாத்தாக்கள் சீதா என்றே கூப்பிட்டிருக்காங்க. அவங்களுக்கப்புறம் எனக்கே அந்தப் பேர் மறந்து போச்சு! :D
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ம்ம்ம்ம்ம், அது வேண்டாமே! நேரிலே பார்த்தால் தவிர பெரும்பாலும் என்னோட சோகத்தை அதிகமாய் வெளிக்காட்டிக்காமலேயே இருந்துடுவேன். நான் எழுதறதை வச்சும், பேசறதை வச்சும் அநேகமாய் எல்லாரும் என்னோட வாழ்க்கையிலே சோகங்கள் இல்லைனு நினைக்கிறாங்க. அது அப்படியே இருக்கட்டும்.
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
ம்ம்ம்ம் ஒரு காலத்தில் பலராலும் பாராட்டப் பட்டது. முன் மாதிரியாகக் காட்டப் பட்டது. இப்போ அப்படி இல்லை. அந்த வருத்தம் உண்டு.
4. பிடித்த மதிய உணவு என்ன?
ரசம் சாதம், சுட்ட அப்பளம், அப்பளம் சுட்டு அதிலே நெய் ஊற்றித் தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பழகுவதில் தயக்கம் ஏதும் இருக்காது. நெருக்கம் என்று கேட்டால் உடனே நெருக்கம் வராது.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலில் குளிச்சாலும் திரும்ப ஒரு முறை நல்ல நீரில் குளிக்கணும். ராமேஸ்வரம் கடலில் குளிச்சிருக்கேன். அருவிகளைப் பார்த்திருக்கேன். குளிச்சது இல்லை. அருவியின் மேலிருந்து நீர் விழும் வேகத்தில் குளிச்சால் மூச்சுத் திணறல் அதிகமாகும் என்பதால். :(
77. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாய் எல்லாரையுமே நேருக்கு நேர் கவனிச்சே பழக்கம்.
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம்: ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் வச்சுச் செய்யறது. அந்த நேரம் வேறே வேலை தவிர்க்க முடியாமல் இருந்தாலொழியச் செய்யறதில்லைனு வச்சிருக்கேன். எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திட்டமிட்டுச் செய்வது. 11 மணிக்குச் சாப்பாடு தயாராகணும் என்றால் 10-45-க்கு முடிச்சுட்டு உட்காருவேன். வெளியே சென்றாலும் அப்படித் தான். இத்தனை மணிக்குள் திரும்புவேன் என்று சொல்லிட்டுப் போனால் சரியா அந்த நேரத்துக்குள்ளே வந்துடுவேன். அன்னிக்கு ஊர்வலம், பந்த், ஸ்டிரைக்னு எதுவும் இல்லாமல் இருக்கணும்! :(((((( ஆனால் இப்போ இணையம் அடிக்கடி கிடைக்காமலும், மற்ற வேலைகளின் தாக்கத்தாலும் இணையத்தில் இருக்கும் நேரம் கொஞ்சம் மாறிப் போயிருக்கு, சில நாட்கள் தான் இதுவும். வெளியே கிளம்பணும்னாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தயாராகி உட்கார்ந்துடுவேன்.
பிடிக்காதது: ம்ம்ம்ம்ம்ம்???? அது மத்தவங்க சொன்னால் தான் சரியா இருக்கும், எனக்குத் தெரிஞ்சவரை அனைவரையும் திருப்தி செய்ய நினைப்பேன். அது முடியாதுனு தெரிஞ்சும்.
9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?
என்னை இன்னும் ஒரு குழந்தையாகவே நடத்துவது. ஒண்ணும் தெரியலைனு சொல்லுவார். இதையும் பிடிக்காத விஷயம்னு சொல்ல முடியாது. தலைமுறை இடைவெளியால் இப்படிச் சொல்றார்னு சொல்லலாம்.
பிடிச்சதுனால் எதைச் சொல்றது? பிடிக்காமல் கல்யாணமே நடந்திருக்காதே?? அநேகமாய் இரண்டு பேரும் ஒரே அலைவரிசையில் நினைப்போம். நான் சொல்ல வாய் திறந்தால் அவர் அதையே சொல்லுவார். அல்லது அவர் சொல்ல நினைக்கிறதை நான் சொல்லிடுவேன். மற்றபடி சாதாரணக் கணவன், மனைவிக்குள்ள சண்டை, சச்சரவு எங்களுக்குள்ளும் உண்டு. என்னதான் நாலு தென்னை மரங்கள் இருந்தாலும் அதைச் சுத்தி எப்போவுமே டூயட் பாட முடியாதே?? :))))))))))
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
பையரும், பெண்ணும் தான். யு.எஸ்.ஸில் போய் உட்கார்ந்திருக்காங்க. அக்கம்பக்கம் எல்லார் வீட்டிலேயும் பெண்ணும், பையரும் வந்தால் இன்னும் அதிகமாய் வருத்தம் வரும்! அவங்க அவங்க வாழ்க்கை, வாழவேண்டிய இஷ்டப் படி தானே வாழணும். வாழட்டும், வாழவேண்டும் இனிமையாக. வாழ்க! வளர்க!
11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
என்ன பெரிசா?? என் கிட்டே இருக்கிறதே பச்சை, மெரூன், மஞ்சள் தான். பச்சைக்கலரு ஜிங்குசா, அரக்கு கலரு ஜிங்குசா, மஞ்சள் கலரு ஜிங்குசா னு பாடலாம். இன்னிக்கு பச்சையும் மெரூனும் கலந்த புடைவை, ரவிக்கை.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
ஒண்ணும் பார்க்கலை. கணினியைப் பார்த்துட்டு தட்டச்சறேன், இந்தக் கேள்வி, பதிலுக்கு. காதிலே தொலைக்காட்சியிலே போட்டிருக்கிற ஹிந்தி சினிமா வசனம் விழுது.
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
பேனாவா மாறிட்டப்புறம் ஆசை எப்படி வரும்???(இது இல்லை பதில்??? யாருக்காவது தோணிச்சா?) ம்ம்ம்ம்ம்ம்??? இளநீலம். ஆகாயக் கலர்.
14. பிடித்த மணம்?
மல்லிகை மணமும், எங்க வீட்டுப் பாக்கு மரம் பூத்திருக்கும்போது வரும் பாக்குப் பூ மணமும். இளங்காலைப் பொழுதிலே மாமரத்தில் இருந்து குயில் கூவி அழைக்க, வேறே இடத்திலிருந்து அதுக்குப் பதில் வர, கொல்லைக் கிணற்றடிக்கதவைத் திறக்கும்போதே கம்மென்று வரும் பாக்குப் பூவின் மணம்!!! அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ!!!!!
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அநேகமா எல்லாரையும், எல்லாரும் கூப்பிட்டாச்சு. அதனால் நான் யாரையும் கூப்பிடலை, பாவம் எல்லாரும் என்ன வேலையிலே இருக்காங்களோ?? எதுக்குத் தொந்திரவு செய்யணும்???
6. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
குமரனும், வல்லியும் அனுப்பி இருக்காங்க. குமரனோட புல்லாகிப் பூண்டாகி ரொம்பப் பிடிச்சது. வல்லி அவங்க திருமணம் ஆன கதையை எழுதி இருந்தாங்க. அதை அடிக்கடி நினைச்சு, நினைச்சு எனக்குள்ளே சிரிச்சுப்பேன். மத்தவங்க யாருனு தெரியாததால் குறிப்பிடலை. மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.
17. பிடித்த விளையாட்டு:
விளையாட எல்லாம் அனுமதி கிட்டியதில்லை. அதனால் அதிகம் விளையாடியது இல்லை. வீட்டில் விளையாடும் விளையாட்டுகள் அம்மாவழித் தாத்தா வீட்டில் கற்றுக் கொண்டது, செஸ், காரம்போர்டு, ட்ரேட், போன்றவை. செஸ் விளையாட்டில் கொஞ்சம் ஆசை இருந்தது. அப்புறம் அதில் முன்னேறவில்லை.
18. கண்ணாடி அணிபவரா?
கண்ணாடி பதினைந்து வருஷமாய்ப் படிக்கும்போது மட்டும் அணிகின்றேன். பவர் அதிகம் இருக்கு, ஆனாலும் சில காரணங்களால் தொடர்ந்து அணிய முடியவில்லை.
9. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ஹிஹி, தியேட்டரில்??? அது ஆச்சு வருஷக் கணக்காய்! மத்தபடி தொலைக்காட்சியில் என்றால்,Black Wednesday?? படம் பேர் சரியா நினைவில் இல்லை, நஸ்ருதீன் ஷா நடிச்சது. தீவிரவாதம் பற்றிய ஒரு படம். அருமையான படம். அந்த முஸ்லீம் போலீஸ் அதிகாரியாய் நடிச்சது யாரு?? அற்புதமான நடிப்பு. வாழ்ந்திருக்கார். அப்புறமாய் ஒரு இத்தாலியன் படம் தற்செயலாய்க் காண நேர்ந்தது. முசோலினி காலத்தில் ஒரு யூதப் பெண்ணை மணந்து ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட ஒரு கிறிஸ்துவர் எவ்வாறு அந்தப் பெண்ணையும் விடாமல், குழந்தையையும் விடாமல் இத்தாலியில் இருந்து தப்பிக்க முயல்கின்றார் என்பது பற்றி. கண்ணில் ரத்தமே வந்துவிட்டது. அப்புறமா ஜெயா தொலைக்காட்சியில் போட்ட "குட்டி" படம். அந்தப் பெண் குட்டியாகவே வாழ்ந்திருந்தாள். எம்.என்.ராஜமும் கொடுமைக்காரப் பாட்டியாக நன்றாய் நடித்திருந்தார். மற்றபடி காமெடிப் படங்கள் மட்டுமே பிடிக்கும். சில சமயம் கதைக் களம் நன்றாக இருந்தால் இம்மாதிரிப் படங்கள் பார்ப்பதுண்டு.
20. கடைசியாகப் பார்த்த படம்?
இப்போப் பார்க்கிறது ஜங்கிள் புக், மிஸ்டர் பீன், பவன்புத்ரா ஹனுமான், ராமாயணா, டாம் அண்ட் ஜெரி தான்! நம்மளை மாதிரிக் குழந்தைங்க வேறே என்ன பார்ப்பாங்க?? சொல்லுங்க! போகோ தவிர வேறே சானலே பார்க்கிறதில்லை, போடறதே இல்லை வீட்டில்! :))))))))))))))
21. பிடித்த பருவகாலம் எது?
குளிர்காலம் தான், அதுவும் மிதமான குளிர்காலம்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
துக்ளக், கல்கி, தவிர, மத்தப் புத்தகங்கள் அவ்வப்போது பதிவுகளில் எழுதத் தேடுதலுக்காகப் படிக்கிறேன். ஆழ்ந்து படிச்சுக் கொஞ்ச நாட்கள் ஆகுது. நேரம் கிடைக்கிறதில்லை. :( இன்னும் சில நாட்கள் ஆகும். நண்பர் ஒருத்தர் பரிசாய் அளித்த திருவாசகம் அவ்வப்போது பார்ப்பேன். ஆழ்ந்து படிக்க ஆரம்பிக்கலை இன்னும்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படி எல்லாம் மாத்தறதில்லை. ஒரே படம் தான்! பொண்ணோ, பையரோ வந்திருக்கும்போது அவங்க இஷ்டத்துக்கு மாத்திடுவாங்க! அப்போவும் அதுவே நீடிக்கும்.
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடிச்ச சத்தம், இனிமையான சங்கீதம். சங்கீதம் கேட்டுக் கொண்டே வேலைகள் செய்யறது தான் ரொம்பப் பிடிக்கும். நான் வீட்டில் இருந்தாலே இசை கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இப்போ பக்கத்திலே வந்திருக்கும் அடுக்கு மாடிக் குடி இருப்பில் உள்ள சில வீடுகளில் மாரியம்மன் கோயில் போல பாடல்களைச் சத்தமாய் ஒலிக்க விடுவதால், என்னோட இசை கேட்கும் இன்பமே போயிடுச்சு. இது தான் பிடிக்காததும் கூட! சொல்லவும் முடியலை! என்ன செய்யறது???
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யு.எஸ். தான். அதிக பட்ச உயரம் என்றால் கைலை சென்றது தான்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
திறமையே இல்லை, தனித் திறமைக்கு எங்கே போறது??? ஆனால் ஒரு காலத்தில் தையல் மிஷினில் எம்ப்ராய்டரி செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தேன். 2003--ம் வருஷம் இனிமேல் கால்களால் மிஷினை ஓட்டித் தைக்க முடியாது என்பதால் தவிர்க்க முடியாமல் தையல் மிஷினை விற்று விட்டோம். இன்னமும் அந்த வருத்தம் உண்டு. ம்ம்ம்ம்ம்??? பையர் திடீர்னு அமெரிக்கா போய்ப் படிக்கப் போறேன்னு அறிவிப்புக் கொடுத்ததும், அவருக்காக இங்கே சென்னையில் சரத் கன்சல்டண்ட்ஸ் என்பவர்களின் ஆலோசனையில் வங்கிக் கடன் உள்பட அனைத்து வேலைகளையும் தனியே திறம்பட முடிச்சிருக்கேன். பையர் அப்போ பரோடாவிலே, கணவர் ஊட்டியிலே, பொண்ணு பாஸ்டனிலே, நான் மட்டும் இங்கே இருந்து மூன்று மாதங்கள் அலைந்து, திரிந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தேன். அனைத்துப் பேப்பர்களையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தயார் செய்து அனுப்பி வைத்ததால் பையரால் மும்பையில் விசா பேட்டிக்குச் செல்ல வசதியாக இருந்தது. முதல் பேட்டியிலேயே விசாவும் கிடைச்சது.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சென்னைத் தெருக்களும், அதில் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளும், ஏன் இதை ஒருவருமே கண்டுக்க மாட்டேங்கறாங்கனு புரியலை. அதுவும் எங்க பக்கத்துக் குடியிருப்புக்காரங்க எங்க வீட்டுப் பக்கம் தான் குப்பை கொட்டுவோம்னு பிடிவாதம். அதை மாத்தறதுக்குள்ளே ரொம்பப் பாடுபட்டோம். ஆனால் அவங்க பக்கம் குப்பைத் தொட்டியை வழிய விடுவதால் குப்பைகள் பறந்து தெருப்பூராவும். சுத்தம் ஏன் மறுக்கப் படுகின்றது? இது தான் புரியாத விஷயம் ஆக இருக்கின்றது, சுத்தமும், சுகாதாரமும் மறுக்கப் படுவது ஏற்க முடியாத விஷயமுமாக உள்ளது. மோசமான சாலைகள். அதுவும் எங்க அம்பத்தூர் பகுதியில் ஆசியாவிலேயே அதிக வருமானம் கிட்டும் முனிசிபாலிட்டி அம்பத்தூர் முனிசிபாலிட்டி தான். ஆனால் சாலைகளும், தெருக்களுமோ???? கைலையின் மேடு, பள்ளங்கள் கூட இதன் அருகே வரமுடியாதோனு தோணுது. எப்போச் சரியாகும்??? இந்த மாதிரி அடிப்படை வசதிகள், அதுவும் அரசு முனைந்து தானாகச் செய்யவேண்டியவைக்கே கெஞ்சும் நிலைமை ஏற்பட்டிருப்பதை முற்றிலும் ஏற்கமுடியலை. நகராட்சி உறுப்பினர்களிடம் சாலை வசதிக்கும், குடிநீர் வசதிக்கும், சுகாதார வசதிக்கும் போராடிப் பார்த்தாச்சு. முடியலை!
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நல்லதா கெட்டதா தெரியாது, வெளிப்படையாகப் பேசும் வழக்கம். இதனால் நிறையப் பிரச்னை வந்திருக்கு. என் கணவரும் இதைத் தான் என்னிடம் உள்ள குறையாச் சொல்லுவார். ஆனால் இப்போ குறைச்சிருக்கேன். என்றாலும் பொய்யும் சொல்லாமல், உண்மையும் சொல்லாமல் சமாளிக்கும்போது சில சமயம் கஷ்டமாயே இருக்கு. அநேகமாய்ச் சிரிச்சுச் சமாளிச்சுடறேன்.
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மலையும், மலை சார்ந்த காடுகளும். குறிப்பாய் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எல்லாப் பகுதிகளும். ஊட்டி. அரவங்காட்டிலே நாங்க இருந்த அலுவலகக் குடி இருப்பின் முற்றத்தில் மேகங்கள் தவழ்ந்து விளையாடும். சமைக்கும்போது முற்றத்தில் இறங்கின மேகங்கள் சமையலறைக்கு வந்து, "என்ன சமையல்?"னு கேட்டுட்டுப் போகும்.
30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
இப்போ இருக்கிறதே போதுமே. எத்தனை பிறவி எடுத்தாலும் இப்போ இருக்கிறாப்போல் இருந்தாலே போதுமே! More than enough!
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
கணவர் இல்லாமல்?? சான்ஸே இல்லை! அநேகமாய்ப் பதிவுகள் எழுதறதும், பின்னூட்டங்கள் வரது, நான் கொடுக்கும் பதில்னு எல்லாமே அவருக்குத் தெரியும். நண்பர் வட்டம் கூட அனைவரையும் அவருக்கும் நல்லாவே தெரியும். அப்படி எதுவும் செய்ய விரும்பலை. நான் இல்லாமல் எந்த முக்கியக் காரியமும் அவரும் செய்ய மாட்டார்!
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
இப்போ நான் வாழ்கிற வாழ்க்கையே நல்லா இருக்கு. இப்படியே இருந்தாலே போதும். எனக்கு என்ன கிடைக்கணுமோ அது கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் தடையும் இல்லாமல் கிடைச்சுட்டு இருக்கு. இதுவே அதிகம். மற்றபடி உலகில் துன்புறும் அனைவருக்குமாய்ப் பிரார்த்திக்கிறேன். உலகில் அனைவருக்கும் நல்வாழ்க்கை கிட்டவும், அமைதியாகவும், மன நிம்மதியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன். வாழ்க! வளர்க! முக்கியமாய் அனைவரும் குப்பைகள் இல்லாத, மேடு, பள்ளங்கள்(வாழ்க்கையில் ஏற்பட்டால் அது வேறே) இல்லாத நல்ல சாலைகளில், தெருக்களில் அனைத்து அடிப்படை வசதிகளோடும், முக்கியமாய்க் குடிநீர் வசதியோடும் குடி இருக்கப் பிரார்த்திக்கிறேன்.