பைரவர் பற்றி எழுதச் சொல்லி வல்லி சிம்ஹன் கேட்டார்கள். கீழே கொடுத்திருப்பது சிதம்பர ரகசியத்தில் சிதம்பரம் சித்சபையின் உள்ளே நடராஜருடன் காக்ஷி அளிக்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பற்றியது. அதன் பின்னர் பைரவர் பற்றிய பொதுவான குறிப்புகளும், பைரவ அஷ்டகமும். அனைவரும் பயன் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்: சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய் மேற்கே பார்த்துக் கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லாச் சிவன் கோவில்களிலும் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம் ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி எனச் சொல்லப் படுகிறது. நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒருமுறை இவருக்கும் அபிஷேகம், ஆராதனை செய்யப் படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும், சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப் படுகிறது.
எல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்
வம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப் படுகிறார். முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள் எனச் சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோவிலிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை முடிந்ததும், இரவில் கால பைரவர் சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத் தட்டை வைத்து விட்டு வருவார் எனவும், காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும் எனவும் நம்பப் படுகிறது. அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டுதான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் செலவிற்கு வழி பார்த்துக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த செவிவழிச் செய்திகளால்தான் இந்த பைரவருக்கு "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்" என்ற பெயரும் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று விட்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த பைரவர் "க்ஷேத்திர பாலகர்" எனவும் சொல்லப் படுகிறார்.
சிவனின் அம்சமாய்ச் சொல்லப் படும் இவரே ஆணவத்துடன் இருந்த பிரம்மாவின் தலையைக் கொய்தார் எனவும் சொல்லப் படுகின்றது. இவரைப் பிரார்த்தித்தால் தீராத கடன்கள் தீரும் என்றும் சொல்கின்றனர். காசிமாநகரின் க்ஷேத்திர பாலகர் பைரவர் தான். காசி நகர் முழுதும் அவரே காவல் காக்கின்றார் என்று ஐதீகம். காசி யாத்திரை மேற்கொள்ளுபவர்கள் கடைசியில் பைரவர் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்து அங்கே காசிக்கயிறு பெற்றுக் கொண்டு பின்னரே திரும்ப வேண்டும் என்றும் யாத்திரை பைரவர் தரிசனம் செய்யாமல் நிறைவேறாது எனவும் ஐதீகம்.
பைரவர் நிர்வாணமாய் நாயுடன் காவல் காக்கும் கோலத்தில் இருப்பார். எப்போதும் சிரித்த முகம். ஆனால் துஷ்டர்களைத் தண்டிக்கவும் தண்டிப்பார். தண்டனை கடுமையாகவே கொடுப்பார் என்றும் சொல்லுவார்கள். இரவு வேளைகளில் கோயிலின் பிராஹாரத்தை பைரவரே தன் துணையான நாயுடன் சுற்றி வந்து காவல் காப்பார் என்றும் நம்பப் படுகின்றது. நான் பார்த்த பைரவர்களிலேயே பட்டீஸ்வரம் கோயிலின் பைரவர் நிஜமான ஒரு மனிதன் போலவே பார்த்தால் ஒரு கணம் சட்டுனு மனதில் திடுக்கிட்டுப் போகும் வண்ணம் ஜீவனுடன் விளங்குகின்றார். பட்டீஸ்வரம் சென்றபோது திரும்ப இருந்த எங்களை குருக்கள் அழைத்து பைரவரைத் தரிசனம் செய்ய வைத்தார். கீழே பைரவ அஷ்டகம் வடமொழியிலும், தமிழிலும் கொடுத்துள்ளேன். இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.
ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்
======================
கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்துசூடம்
கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேய ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீக்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥
ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி சமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸ¥ நந்த்ரே
ஸ¥ராதிபம் பைரவ மானதோஸ்மி
ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதிநாதம்
கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி
>ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் =========================== தனந்தரும் வயிரவன் தளிரடி
>பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள்
>வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1) வாழ்வினில் வளந்தர வையகம்
>நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென
>வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2) முழுநில வதனில் முறையொடு
>பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச்
>செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (3) நான்மறை ஓதுவார் நடுவினில்
>இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
>நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4) பூதங்கள் யாவும் தனக்குள்ளே
>வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
>காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (5) பொழில்களில் மணப்பான் பூசைகள்
>ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
>நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (6) சதுர்முகன் ஆணவத் தலையினைக்
>கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
>செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7) ஜெய ஜெய வடுக நாதனே
>சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
>ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (8)
கீழே இருப்பவை ஷைலஜாவுக்காகப் பட்டீஸ்வரம் பற்றிய குறிப்புகள்.
கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக இன்று மாறி இருக்கும் பட்டீஸ்வரம் கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவலஞ்சுழியும், ஸ்வாமிமலையும் போய் விட்டுத் திரும்பும் வழியில் சற்றுத் தென்மேற்கே வந்து பட்டீஸ்வரம் போனோம். காமதேனுவும் அதன் மகள்களான நந்தினியும், பட்டியும் பூஜித்த தலம். அதுவும் பட்டி தன் பாலைப் பொழிந்து பூஜித்த காரணத்தால் அவள் பெயரிலேயே "பட்டீஸ்வரம்" என்ற பெயர் கொண்டது. வடமொழியில் தேனுபுரம் என்ற பெயர் கொண்ட இந்தக் கோயிலின் சுயம்பு லிங்கம் ஆன மூலவர் "தேனுபுரீஸ்வரர்" என்று அழைக்கப் படுகிறார். மார்க்கண்டேயர் பூஜித்த தலமும் கூட. அன்னை ஞானாம்பிகை. வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்குப் "பிரம்ம ரிஷி"ப் பட்டம் கொடுத்த தலம். மேலும் "திருச் சத்தி முற்றத்தில்" இருந்து வந்த ஞான சம்மந்தப் பெருமானுக்கு இந்தக் கோயில் தேனுபுரீஸ்வரர் ஞானசம்மந்தரை வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க முத்துப் பந்தல் அனுப்பி வைத்து இருக்கிறார். ஞானசம்மந்தர் முத்துப் பந்தலில் வரும் அழகைத் தன் கண்ணால் காண வேண்டி நந்தியை விலகி இருக்கும்படித் தேனுபுரீஸ்வரர் பணித்தாராம். திருக்கோயிலின் ஐந்து நந்திகளுமே "சற்றே விலகி இருக்கும் பிள்ளை" களாக இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்த ராமர் இங்கும் வந்து வில்முனையால் கோடிதீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.
உயர்ந்த பாணமான மூலவரையும், அம்மனையும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிகிறது. காரணம் கூட்டம் எல்லாம் துர்க்கை சன்னதியில்தான். திருப்பணி செய்த கோவிந்த தீட்சிதர் சிலையையும் காட்டுகிறார்கள். ஸ்வாமி சன்னதிப் பிரஹாரத்தில் உள்ள பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அந்தச் சன்னிதியின் குருக்கள் எங்களைக் கூப்பிட்டுத் தரிசனம் செய்து வைத்தார்.
வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலிக்கிறாள். இவளும் அண்ணாந்து பார்க்கும் உயரம் கொண்டிருக்கிறாள். பக்தர்கள் கூட்டம் எல்லாம் இங்குதான். தற்சமயம் கோவிலின் நுழைவாயிலே வடக்குக் கோபுர வாயிலாக மாறி விட்டிருக்கிறது.எட்டுக்கைகளுடன் அருள் பாலிக்கும் அன்னை வேண்டியவர்களுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறாள். அதனால்தான் கூட்டம் தாங்கவில்லை என்கிறார்கள்.
இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே "சத்தி முற்றம்" உள்ளது. உண்மையில் திருஞானசம்மந்தர் முதலில் இங்கே வந்துவிட்டுத்தான் தேனுபுரீஸ்வரர் அனுப்பிய முத்துப்பந்தலில் "பட்டீஸ்வரம்" சென்றிருக்கிறார். முத்துப்பந்தல் விழா ஆனி மாதம் நடைபெற்றிருக்கிறது. திருநாவுக்கரசர் இங்கே வந்துவிட்டு தழுவக் கொழுந்தீஸ்வரரை வணங்கிச் சென்ற பின் தான் திருநல்லூர் சென்று திருவடி தீட்சை பெற்றிருக்கிறார்.மனைவியைப் பிரிந்து பாண்டிய நாடு சென்ற புலவர் ஒருவர் நாரையின் மூலம் தூது விட்ட
"நாராய்! நாராய்!, செங்கால் நாராய்!" என்ற பாடலை எழுதிய சத்திமுற்றப்புலவர் இந்த ஊர்தான்.
வேத ஆகமங்களின் பொருள் தெரிய ஆசை கொண்ட அன்னை அண்ணலை வேண்ட அண்ணலும் கூறுகிறார். தன் பக்தியின் மூலம் உலகத்தோர்க்கு "பக்தியே முக்திக்கு வித்து" என உணர்த்த எண்ணிய அன்னை சக்தி வனம் வந்து ஒற்றைக்காலில் கடுந்தவம் செய்கிறாள். அன்னையின் தவத்தையும், பக்தியையும் உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய அண்ணல் அன்னையைச் சோதிக்க எண்ணி அனல் பிழம்பாக வருகிறார். ஞானாம்பிகையான அன்னை தன் ஞானத்தால் வந்தது தன் பதியே என உணர்ந்து அந்தப் பரஞ்சோதியை, எல்லை இல்லாப் பரம்பொருளைத் தன் கைகளால் கட்டிக் குழைய அண்ணல் அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை கட்டித் தழுவிய நிலையிலேயே ஒரு தனி சன்னதி மூலவருக்கு இடப்பக்கம் உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு களிக்கலாம். மூலவர் கருவறையில் "சிவக்கொழுந்தீஸ்வரர்" ஆக அருள் பாலிக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். ஆனால் நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.
திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி இருக்கிறது. எங்கும் காணக் கிடைக்காத இந்தக் காட்சியை நான் பார்க்க வில்லை என்றால் நிச்சயம் வருந்தி இருப்பேன். என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போன என் கணவருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டி விட்ட ஆட்டோ டிரைவர் ரவிக்கும் தான் என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
இங்கிருந்து வரும் வழியில் தான் தாராசுரம் இருக்கிறது, என்றாலும் நேரம் ஆகிவிட்டபடியால் போக முடியவில்லை. பட்டீஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் தான் பழையாறையும் இருக்கிறது. கோவில் சீக்கிரம் மூடி விடுவார்கள் என்பதால் இங்கே எல்லாம் போக முடியவில்லை. வரும் வழியில் "சோழன் மாளிகை" என்றபெயரில் ஒரு ஊர் வருகிறது. அங்கே சோழன் மாளிகை இருந்த இடத்தையும், சில வருடங்களுக்கு முன் வரை சுற்றுச்சுவர் மட்டுமாவது இருந்த இடம் தற்சமயம் மண்ணோடு மண்ணாகி விட்டதையும் டிரைவர் காட்டினார்.
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் மாயவரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் ஷேத்திரபாலபுரம் என்னும் கிராமம். அங்க ஒரு காலபைரவர் இருக்கார். அஷ்டமி திதியில் மாலை முழுக்க மாயவரமே அங்க தான் இருக்கும். அத்தனை ஒரு சக்தி அந்த பைரவருக்கு.
ReplyDeleteஅந்த ஊரில் இது வரை திருட்டு போனதே இல்லை.அடுத்த தடவை மறக்காம பார்க்கவும்.
@அபி அப்பா,
ReplyDeleteஹிஹிஹி, க்ஷேத்திரபாலபுரம் வழியா நூறு முறைக்கு மேலே போயாச்சு. மாயவரத்துக்கு போகாத மாதிரி அங்கேயும் போக முடியலை. அடுத்த முறை பார்ப்போம். பைரவர் கூப்பிடட்டும்.
இப்போத்தான் க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா என்ற நாமத்திற்குப் பொருள் எழுத்திட்டு வந்தேன்...இங்கே பைரவர் தரிசனம்...மற்றும் தகவல்கள்...அருமை.
ReplyDeleteநகரத்தார் ஊர்களில் பைரவருக்கு விசேஷமாக சில கோவில்கள் இருக்கு என்று சொல்வார்கள்.