ஆனால் நம் கண்ணனா கேட்பவன்? அவன் தான் கன்று குடிலாய் எறியவெனவே பிறந்தவன் ஆயிற்றே?? தினம் தினம் காலையில் மாடுகள் கட்டி இருக்கும் தொழுவத்திற்குச் சென்று ஹஸ்தின் என்ற அந்த முரட்டுக் காளையின் அருகே சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளப் போவதாயும், இந்த விஷயம் ஒரு விளையாட்டாய்ச் சொல்லப் பட்டிருந்தாலும் தான் அவ்வாறு எடுத்துக் கொள்ளாமல் தனக்கு இடப்பட்ட ஒரு பந்தயமாகவே எடுத்துக் கொண்டிருப்பதாயும் கண்ணன் சொல்லுகின்றான். ஸ்ரீதாமா பயத்துடன், பலராமனைப் பார்த்து, “பலராமா? இது என்ன? என்ன நடக்கப் போகின்றது?” எனக் கேட்க பலராமனோ, தன் தம்பிக்கு இதன் மூலம் ஒரு பாடம் கிடைக்கும் என நம்புவதாய்ச் சொல்ல இருவரும் பயந்து போகின்றனர்.
இந்த ஹஸ்தின் விருந்தாவனத்துக் காளைகளுக்கெல்லாம் அரசன் போன்றது. பெரிய திமிலுடனும், நன்கு தீட்டி விடப் பட்ட கொம்புகளோடும், தீட்சண்யமான கண்களோடும், முறுக்கி விடப் பட்ட வாலோடும், பளபளவென்ற கருநிற மேனியோடும் காட்சி அளித்தது. அதைக் கட்டிப் போடவென்றே ஒரு பெரிய மரம் விருந்தாவனத்தில் உள்ளது. அங்கே நின்று கொண்டு தினமும் தன் கால்களால் பூமியில் குழி பறித்துக் கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் நிற்காது. பொறுமையின்றி அலையும். தன்னிடம் யார் நெருங்கினாலும் ஜன்ம விரோதி போல் பாவித்துக் கொண்டு, தலையைக் குனிந்து கொம்புகளால் முட்ட ஆயத்தமாகி, சீறும்.
இந்தக் காளையைத் தான் கிருஷ்ணன் அடக்கி அதன் மேல் ஏறி உட்காரவேண்டும் என்ற பந்தயம். அந்தக் காளையை முதன்முதலாய்ப் பார்த்தபோது பலராமனுக்குத் தன்னால் கூட இதை அடக்க முடியாது, இன்னும் பலவானாக ஆகவேண்டும் எனத் தோன்ற, அதை வாய்விட்டுச் சொன்னான். ஆனால் நம் கண்ணனோ தன்னால் அதை அடக்க முடியும் என்பதோடு அல்லாமல் அதன் மேல் ஏறியும் உட்கார முடியும் எனச் சொல்ல அன்றிலிருந்து ஒரு மாதத்துக்குள்ளாகக் கண்ணன் காளையை அடக்க முடிவு செய்யப் பட்டிருந்தது. அந்தப் பந்தயத்தின் கடைசி நாள் அன்று. நாளை கண்ணன் காளையை அடக்கவேண்டும். கண்ணன் தினம் தினம் தொழுவத்திற்குப் போய் தன் புல்லாங்குழலை ஊதித் தன் இன்னிசையால் முதலில் காளையைத் தன் வயப் படுத்தி இருந்தான்.
ஆனால் முதன்முறை கண்ணன் அந்தக் காளையைக் காண அதற்கு உணவளிப்பவரோடு சென்றபோது ஹஸ்தின் கண்ணனை முட்டவே வந்தது. கண்ணன் சாதுரியமாய் விலகிக் கொண்டதோடு உடனேயே தன் புல்லாங்குழலையும் எடுத்து ஊத ஆரம்பித்தான். காளை கண்ணனின் புல்லாங்குழல் இசைக்குப் பழக ஆரம்பித்திருந்தது. மெல்ல மெல்லக் கண்ணன் காளையின் அருகே சென்று அதைத் தடவிக் கொடுத்து, உணவு அளிக்கவும் ஆரம்பித்திருந்தான். என்றாலும் போட்டிக்கு முதல்நாள் பலராமன், ஸ்ரீதாமா, உத்தவன் ஆகியோருடன் கண்ணனும் சென்ற போது காளை மற்ற மூவரையும் பார்த்துப் பயங்கரமாய்ச் சீறியது. மூவரும் பயந்தனர். போட்டியே வேண்டாம் என்று கண்ணனை அந்த விஷயத்தை அதோடு விடுமாறு கூறினார்கள் கண்ணனோ கேட்கவில்லை.
முன்யோசனையாக உத்தவன் ராதையைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான். ராதைக்கு இந்த விஷயத்தைக் கேட்டதும் இருப்பே கொள்ளவில்லை. கண்ணனைக் காண ஓடோடி வந்துவிட்டாள். வந்ததுமே, கண்ணனைப் பார்த்து, “கானா, இது என்ன பைத்தியக்காரத் தனம்? பெரிய அண்ணா, ஏன் இப்படி ஒரு பந்தயம் போட்டீர்கள்? என பலராமனிடமும் ஒரே சமயத்தில் கேட்டாள். பலராமன் தாங்கள் விளையாட்டிற்கே சொன்னதாகவும், கண்ணன் அதைக் கேட்காமல் பந்தயமாக ஏற்றுக் கொண்டுவிட்டதாயும் சொன்னார்கள். ராதை கோபத்துடன் கண்ணன் பக்கம் திரும்பினாள். “இது என்ன கானா?” கண்ணன் சிரித்தான், அவன் கண்களும் கூடவே சிரித்தன. “ராதே, எவ்வளவு அழகாய் இருக்கின்றாய்! கோபத்திலும் அழகாய் இருக்கும் பெண்ணை இப்போத் தான் பார்க்கிறேன். அதிலும் அந்தக் கண்கள், வைரங்கள் போல் ஜொலிக்கின்றனவே!”
“போதும் கண்ணா, பேச்சை மாற்றாதே! நீ நாளை ஹஸ்தினை அடக்கி அதன் மீது ஏறப் போவதில்லை.” ராதை திட்டவட்டமாய்க் கூறினாள். கண்ணனோ,”யார் சொன்னது, காளையை நான் அடக்கப் போவதில்லை என?” என்று கேட்க, கீழே படுத்திருந்த ஹஸ்தினுக்குத் தன்னைப் பற்றி ஏதோ பேசுகின்றார்கள் எனத் தோன்றியதோ என்னமோ, எழுந்து கூடி இருந்த அனைவரையும் ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு உறுமியது. மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம். அந்த உறுமலைக் கேட்ட ராதைக்கு உடல் நடுங்கியது. கண்ணன் கதி என்னவோ என எண்ணினாள். “கண்ணா, வேண்டாம், பிடிவாதத்தை விடு.” என்று கண்ணனைப் பார்த்துச் சொல்ல, பிடிவாதம் இல்லை எனக் கண்ணன் மறுக்கின்றான். பலராமனோ இப்போது கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான். ராதை தன் கடைசி ஆயுதத்தைக் கண்ணன் பேரில் பிரயோகிக்கின்றாள். “இதோ பார் கானா, நாளை நீ தனியாக ஹஸ்தினின் மேல் ஏற முடியாது. கூடவே நானும் வருவேன்.”
கண்ணன் கொஞ்சம் திகைத்துத் தான் போனான். அவன் ஒருவன் ஏறி அமர்ந்து அதை அடக்குவதே பெரிய வேலை. இதில் ராதை வேறே கூடவா? “அதெல்லாம் முடியாது” என வன்மையாக மறுக்க, “ அப்போ நான் இறந்ததும் தான் நீ அந்தக் காளை மீது ஏற முடியும்.” ராதை கண்ணனை விட வன்மையாகவும் உறுதியாகவும் கூறினாள். என்ன நடக்கப் போகிறதோ?
ம்ம்..நல்ல வேகம் ;)
ReplyDelete