எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 15, 2011

மெளன ராகம் இசைத்த போராளிகள்! 1

நம் பாரதத் திருநாடு சுதந்திரம் பெற்று அறுபத்தி நான்காண்டுகள் ஆகின்றன. இந்தச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களில் நாம் அறிந்த தேசத் தலைவர்கள் பலர் இருந்தாலும், முதன் முதல் நம் தமிழ்நாட்டின் திருநெல்வேலிச் சீமையிலேயே முதல் சுதந்திரக் குரலைக் கொடுத்த தமிழ் வீரன் இருந்தான் என்பதை நம்மில் பலரும் அறிய மாட்டோம். நம் நாட்டின் முன்னாட்பெருமை குறித்து பாரதி,

புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப் போயினவோ,
இன்னலொடு கண்ணீ ரிருப்பாகி விட்டனவே!

ஆணெலாம் பெண்ணாய் அரிவையரெ லாம்விலங்காய்
மானெல்லாம் பாழாகி மங்கி விட்டதிந்நாடே!

ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநா டென்பதுபோய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே!

வீமாதி வீரர் விளிந்தெங்கு போயினரோ
ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே!"

என மனம் வருந்திப் பாடியுள்ளார். ஆனால் பாரதிக்கும் பல ஆண்டுகள் முன்னரே நம் நாட்டில் சுதந்திர வேட்கை கொண்டு, “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்; என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாடி வருந்திய வீரத் திருமகன்களும், மகள்களும் இருந்திருக்கின்றனர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் முக்கியமான போராட்டக்காரன் பாரதி. பாரதி மட்டுமா? தமிழ் நாட்டின் பல இளைஞர்கள், இளம்பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் பலரை நாம் அறிய மாட்டோம். தாங்கள் கொண்ட பணியிலேயே கருத்தாய் தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ளாமல், வெளிச்சத்திற்குள் வராமல் மறைந்தவர்கள் பலர். மந்திரங்களுள் அஜபா மந்திரம் என ஒன்றுண்டு. வெளிப்படையாக ஜபிக்காமல் மனதிற்குள்ளாகவே ஜபிக்க வேண்டும். ஜபிக்க ஜபிக்க நாளாவட்டத்தில் மந்திரம் உள்ளேயே ஓடும். வெளி நாட்டத்தைக்குறைத்துக்கொண்டு உள் நோக்க உதவி செய்யும். அப்படி மெளனமாகத் தங்கள் இருப்பை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் மறைந்த வீரர்கள் பலருண்டு. அவர்களுள் சிலரை மட்டும் இங்கே பார்ப்போமா? முதலில் அனைவருக்கும் வெளியே தெரியாத பூலித் தேவன் பற்றிப் பார்ப்போம். பொதுவாக 1857-ல் ஏற்பட்ட சிப்பாய்க் கலகத்தையே முதல் சுதந்திரப் போராட்டம் எனப் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கும் முன்னால் நம் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தவர்களுள் முதன்மையானவர் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த பாளையக்காரர் ஆன பூலித் தேவன் ஆவார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்டக் களத்தின் தகவல்களே முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப் பட்டுவிட்டது. நாமும் அதில் ஆர்வம் காட்டாமலே பொதுவாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட சிப்பாய்க் கலகத்திற்கு நூறாண்டுகளுக்கு முன்பே பூலித்தேவன் ஆங்கிலேயத் தளபதி இன்னிங்ஸ் என்பவரை எதிர்த்துக் குரல் கொடுத்தார். அவரோடு யுத்தமும் செய்தார். இங்கே அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரித்தால் கட்டுரை பெரிதாகிவிடும்.

திருநெல்வேலிச் சீமையில், “நெல்கட்டான் செவ்வல்” என்னும் சின்னஞ்சிறு பாளையத்தின் அதிபதியான பூலித்தேவர் வியாபாரம் செய்ய வந்தவர்கள் ஆள்வதா என்ற கோபத்தில் என் அப்பன், பாட்டன், பூட்டன் என தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வந்த இந்த பூமிக்கு எங்கிருந்தோ வந்த வெள்ளையனுக்கு ஏன் கப்பம் கட்டவேண்டும் என எதிர்த்துப் போரிட்டார். வீரபாண்டியக் கட்டபொம்மனும் கூட இவருக்குப் பின்னர் தான். சொல்லப் போனால் கட்டபொம்மன் அப்போது பிறக்கவே இல்லை. அதன் பின்னர் மூன்றாண்டுகள் கழிந்தே 1760- கட்டபொம்மன் பிறந்தான். கட்டபொம்மன் குறித்த என் கருத்து மாறுபட்டது. ஆகவே இங்கே கட்டபொம்மன் குறித்துச் சொல்லப் போவதில்லை. பூலித்தேவன் தன் வாழ்நாள் முழுதும் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டதாய் எழும்பூர் ஆவணக்காப்பகங்களில் ஆவணங்கள் சொல்லுவதாய்த் தெரிய வருகிறது. இது வரைக்கும் இல்லாத அளவுக்கு சுமார் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட பூலித்தேவர், எல்லாப் போர்களிலும் கும்பினியாரை வெற்றி கொள்ளவே, கோபம் கொண்ட கும்பினியார் முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என எண்ணி, சுதேசிப் படை என்ற பெயரில் எல்லாப் பாளையக்காரர்களின் படைகளையும் வளைத்துப் போட்டுத் தமிழன் ஒருவனையே அதற்குத் தளபதியாக்கி பூலித்தேவனை வெல்ல அனுப்பி வைத்தார்கள். இவன் தான் மருதநாயகம் என்னும் கான்சாகிப். மருதநாயகம் ஒன்றும் பெரிய தியாகி எல்லாம் இல்லை. சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல் சேவகம் பண்ணியவர் தான். கான்சாகிபோடு மூன்றாண்டுகள் போர் புரிந்த பூலித்தேவன் கடைசியில் 1761-ல் தோல்வி கண்டார். ஆனால் கான்சாகிபின் கைகளில் மாட்டாமல் தப்பி ஓடி ஒளிந்து கொண்டு மீண்டும் படைகளை ரகசியமாய்த் திரட்டி வந்தார். கடைசியில் கான்சாகிபுக்கும் கும்பினியாருக்குமே சண்டை மூள கான்சாகிப் தூக்கில் போடப்பட்டான். தூக்கில் போடப் பட்டதால் தியாகியாகவும் ஆனான். ஆனாலும் அவன் இருக்கையில், நெல்கட்டும் செவ்வல், வாசுதேவன் நல்லூர், பானையூர் ஆகிய இடங்களில் உள்ள பூலித்தேவனின் கோட்டைகள், அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டான்.

கான்சாகிபின் மரணத்திற்குப் பின்னர் ஒளிந்திருந்த பூலித்தேவன் கடலாடியில் இருந்து வந்து பாளையத்தைக் கைப்பற்ற, கும்பினியாருடன் மீண்டும் போர் நடந்தது. ஆனால் இம்முறை பூலித்தேவனுக்குப் பெருத்த சேதம் ஏற்பட அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டார் என ஒரு சாராரும்,மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் மறைந்தார் என ஒரு சாராரும் கூறுகின்றனர். கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட பூலித்தேவர் சங்கரன் கோயிலில் ஈசனை வழிபட வேண்டும் என்று கூறியதாகவும், அவ்வாறே அனுமதிக்கப்பட்ட அவர் கோயிலில் அம்மன் சந்நிதிக்கு அருகே மர்மமான முறையில் மறைந்ததாகவும் ஒரு கூற்று உண்டு. சங்கரன் கோயிலில் அம்மன் சந்நிதி அருகே பூலித் தேவன் அறை என்ற பெயரில் ஒன்று இன்றளவும் உள்ளது. ஆனால் பூலித்தேவன் கும்பினியார்களால் சிறையிலேயே கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்த மர்மம் இன்னும் வெளிவரவில்லை.

இவருக்கு அடுத்த விடுதலைப் போராளி வீரமங்கை வேலு நாச்சியார்.

இவரும் தென்பாண்டி நாட்டைச் சேர்ந்தவரே. பெண்கள் அடக்கப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள், அவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்கவில்லை என நாம் அனைவரும் இன்றும் கூறிக்கொண்டிருக்கிறோம். பெண் இன்னும் விடுதலை பெறவில்லை என்றும் கூறுகிறோம். ஆனால் இவை எதையும் பற்றிக் குறை கூறாமல் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட போராளிகளுள் பூலித் தேவனுக்கு அடுத்தபடியாகக் கூறத்தக்கவர் வீரமங்கை வேலு நாச்சியார் ஆவார். இவரும் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியவரே. போர்க்களம் சென்று போராடும் அளவுக்குத் திறமையும், வலிவும் உடையவர். இதிலிருந்தே பெண்கள் மனது வைத்தால் எதையும் செய்ய முடியும் என்பது புரிகிறதல்லவா? வீர மங்கை வேலு நாச்சியார் ராமநாதபுரம் சேதுபதி அரசரின் மகளாகப் பிறந்தவர். சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த முத்துவடுகநாதருக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டு வெள்ளச்சி என்ற பெண்ணையும் பெற்றவர். முத்து வடுகநாதருக்கு சரியான ஆலோசனைகள் கூறும் நால்வரையும் காவல் தெய்வங்கள் என அழைப்பர். அத்தகையதொரு காவல் தெய்வங்கள் பட்டியலில் முதல் இடத்தில் அவரின் முதல் மனைவியான வேலுநாச்சியார் இடம் பெற்றார். மற்ற மூவரில் பெரிய மருது, சின்ன மருது என அழைக்கப்பட்ட மருது பாண்டியர்களும், முத்து வடுகநாதரின் பிரதானியான தாண்டவராயப் பிள்ளையும் ஆவார்கள். முத்துவடுகநாதரும் அவரின் இளைய மனைவியும் கும்பினிப் படைகளின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்படவே வேலு நாச்சியார் தம் மகளுடனும், தாண்டவராயப்பிள்ளை, மருது பாண்டியர்கள் துணையோடும், விருபாக்ஷி பாளையத்தில் போய் அடைக்கலம் பெற்றார்.

கம்பளத்து நாயக்கர்களைக் குடிமக்களாய்க் கொண்ட அந்தப் பாளையத்திலே பாதுகாப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அங்கிருந்து ஆங்கிலேயருக்கு உதவிகள் புரிந்து பாளையக்காரர்களையும், ராமநாதபுரம், சிவகங்கை அரசர்களையும் தொந்திரவு செய்து கொண்டிருந்த ஆற்காட்டு நவாபை விரட்டி அடிக்க ஹைதர் அலியின் உதவியை வேலு நாச்சியார் நாடினார். உருதுவில் சரளமாகப் பேசும் அளவுக்குத் திறமை பெற்றிருந்த வேலு நாச்சியார், ஹைதர் அலியோடு தாண்டவராயப் பிள்ளையின் உதவியோடு தொடர்பு கொண்டு உதவிகள் பெற்று ரகசியமாக சிவகங்கையை விடுவிக்க முயற்சிகள் செய்து வந்தார். தாண்டவராயப் பிள்ளையின் முயற்சிகள் பலிக்காத வண்ணம் ஆற்காடு நவாப் போட்ட திட்டங்கள் பலித்தன. சுதந்திரத்திற்காகப் போராடும் கிளர்ச்சிக்கார மக்களைப் பிடித்துச் சிறையில் போட்டனர். இதனால் மனம் வருந்திய தாண்டவராயப் பிள்ளை மரணமடைய, வேலுநாச்சியார் மருது பாண்டியர் மூலம் ஹைதர் அலியின் உதவிகளைப் பெற்றார். மதுரைக்கு அருகே கோச்சடையில் ஆற்காட்டு நவாபின் படைகளோடு மோதி நவாபின் படைகளைத் தோற்கடித்தார். அதன் பின்னர் மானாமதுரையில் தங்கி இருந்த கும்பினிப் படைகளையும் விரட்டி அடித்தார். தம் படைகளை மூன்று பிரிவாகப் பிரித்த ராணி வேலு நாச்சியார் சிவகங்கைப் பிரிவுக்குத் தானே தலைமை தாங்கி நடத்தினார்.

திருப்பத்தூரிலிருந்த பிரிவுக்கு நன்னியம்பலம் என்பவரும், காளையார் கோயிலில் இருந்த பிரிவுக்கு மருது பாண்டியர்களும் தலைமை தாங்கி நடத்தி மும்முனைத் தாக்குதல் கொடுத்தனர். நவாப் படைகள் பின்வாங்க, நாச்சியார் எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த நாடான சிவகங்கைக்கு வெற்றிப் பெருமிதத்துடன் சென்றார். அவர் கூடவே அவர் மகள் வெள்ளச்சியும் சென்றார். வெள்ளச்சிக்கு முடி சூட்டிப் பெரிய மருதுவைத் தளபதியாகவும், சின்ன மருதுவைப் பிரதானியாகவும் ஆக்கித் தம் நன்றிக்கடனைத் தீர்த்தார். வெள்ளச்சிக்குத் திருமணம் ஆன சில நாட்களில் கும்பினிப் படை மீண்டும் படை எடுத்து வந்தது. ஆனால் அப்போது மருது பாண்டியர்களில் சின்ன மருதுவின் ஆலோசனைப் படி சமாதானம் செய்து கொண்டனர். வேலு நாச்சியார் அவரின் மகளான வெள்ளச்சியின் மரணத்தால் மனம் உடைந்தார் எனவும், அவர் உயிருடன் இருக்கையிலேயே அவர் மருமகன் பெரிய உடையணத் தேவரை அரசராக்கினார்கள் எனவும் கேள்விப் படுகிறோம். 1800-ஆம் ஆண்டு சந்தேகாஸ்பதமான சூழ்நிலையில் வேலு நாச்சியார் மரணம் அடைந்தார் என ஒரு குறிப்புச் சொல்கிறது. இன்னொரு குறிப்பு மகளைத் தொடர்ந்து பேத்தியும் மரணமடையவே இதயம் பாதிக்கப்பட்ட வேலு நாச்சியார் சிகிச்சைக்காக பிரான்ஸ் சென்றார் என்று கூறுகிறது. ஆனால் அதன் பின்னர் அவர் விருபாக்ஷி அரண்மனைக்கு வந்து சந்தேகத்துக்குரிய முறையிலேயே இறந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆண் வாரிசு இல்லாத நாட்டை அரசே ஏற்று நடத்தலாம் என்ற வெள்ளையர்களின் சட்டப்படித் தங்களுடன் சேர்த்துக்கொள்ள வெள்ளையர்கள் செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

3 comments:

  1. இந்த மாதிரி பல 100 பேர்கள் மொளனமாக சுதந்திரத்திர்க்கு போராடியதை பற்றி தெரியாமலேயே போய்விட்டது.அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் வரலற்று தகவல்களை தெரிந்து கொள்கிறேம்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தெரியாத விஷயங்கள். தெரிந்து கொள்ள முடிந்த்து. நன்றி

    ReplyDelete
  3. சுதந்திரதின வாழ்த்துகள்.

    ReplyDelete