எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 29, 2012

உபநயனம் என்றால் என்ன 4

முதல்நாளன்றே நடக்கும் இன்னொரு சடங்கு அங்குரார்ப்பணம் என்னும் பாலிகை தெளித்தல்.  முதலில் புண்யாஹம் செய்வார்கள்.  பின்னர் நெல், கடுகு, எள், உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை நீரில் நனைத்து வைத்திருப்பார்கள்.  மந்திரபூர்வமாக இவற்றிற்கு பூஜை செய்து ஓஷதி சூக்தம் சொல்லி, 5, 7 என எண்ணிக்கையில் சுமங்கலிகளை விட்டு மண்ணாலான கிண்ணங்களில் ஜலத்தோடு தெளிக்கச் சொல்வார்கள்.  பாலிகைக் கிண்ணங்கள் தனியாக உண்டு.  பின்னர் தினமும் அவற்றிற்கு நீர் தெளித்து வந்து ஐந்தாம் நாள் அவற்றை நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.  இப்போதெல்லாம் நீர்நிலை இல்லாததால் ஒரு பெரிய வாளியில் நீரை நிரப்பிக் கொண்டு அவற்றில் கரைக்க வேண்டி இருக்கிறது.  :(


மறுநாள் காலையில் பையருக்கு மங்கள நீராட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹம் போன்றவைகள் முடிந்து  பூணூல் போடப்பட்ட சில பிரம்மசாரி பிள்ளைகளோடு அமர்த்தி வைத்துப் பூணூல் போடப் போகும் சிறுவனுக்கு நெய்யும், பாலும் சேர்த்த உணவு படைப்பார்கள். அநேகமாய் இது பொங்கலாய் இருக்கும்.  அதிகக் காரமான உணவு கொடுக்க மாட்டார்கள். இதற்குக்குமார போஜனம் என்று பெயர்.  கூட உணவருந்தும் பிரமசாரிப் பிள்ளைகளுக்கு தக்ஷிணை கொடுப்பது உண்டு.  பின்னர் சிறுவனின் உடல் சுத்திக்காக சிகையை மழிப்பார்கள்.  சாதாரணமாகக் குடுமி வைக்கும் போது வெட்டுவது போல் அரை வட்டமாக முன் நெற்றியிலும் பின் இன்னொரு அரைவட்டமாகப் பின்னங்கழுத்து அருகேயும் வெட்டி விடுவார்கள்.  இதை அப்பளக்குடுமி எனச் சொல்வதுண்டு.   இது ரிக், யஜுர் வேதக் காரர்களுக்கானது.  சாம வேதக்காரர்களுக்கு முழு மொட்டையாகப் போட்டு விடுவார்கள்.  பின்னர் பையனுக்கு மாமாவின் சீராகக் கொடுக்கப்படும் வெண்பட்டு உடுத்தி முஞ்சம்புல் என்கிற புல்லை முப்புரி நூலாகச் சிறுவனின் இடுப்பில் கட்டி நாபிக்கருகே முடி போடுவார்கள்.   இது சிறுநீர்க்கோளாறுகளைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று அதர்வ வேதத்தில் வருவதாய்ச் சொல்கிறார்கள். 

பின்னர் சிறுவனுக்கு மாலை போட்டு மான் தோலையும் தோளில் அணிவிப்பார்கள்.  இப்போதெல்லாம் மான் தோல் தடை செய்யப் பட்டிருப்பதால் அணிவித்தல் கஷ்டம்.   பின்னர் ஆசாரியனிடம் ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.இப்போது தான் பையனின் மாமா அவனைத் தன் தோளில் தூக்கிக் கொள்வார்.  கழுத்தில் மாலையையும் மாமா தான் போடுவார்.  பின்னர் தாய் வீட்டு சீதனங்களை வரிசையாக எடுத்து வருவார்கள்.  அதில் முறுக்கு, அதிரசம், லட்டு, திரட்டுப்பால், பருப்புத் தேங்காய் ஆகிய ஐந்து பக்ஷணங்கள் முக்கியமாக இருக்கும்.  பின்னர் பையனின் தாய்க்குப் புடைவை, தந்தைக்கு வேஷ்டி, துண்டு, பையனுக்கு வெண்பட்டு, மோதிரம் போடும் வசதி உள்ளவர்கள் மோதிரம் போடுவார்கள்.  பூ, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என வரிசை கொன்டு வந்து மணையில் வைப்பார்கள்.  பின்னர் உபநயனம் நடக்கப் போகும் பையனை மணையில் உட்கார்த்தி வைத்து ஆசாரியர் வேத மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்து லெளகீக அக்னியை வளர்த்துக் குழந்தைக்குப் பலாச தண்டம் அளித்துப் பின்னர் குழந்தையை அம்மியின் மேல் நிற்க வைத்து ஆசீர்வாதங்கள் செய்வார்.  பலாச தண்டம் ஞாபக சக்தியை வளர்க்கும் எனச் சொல்லப்படுகிறது.  மேலும் தேவர்கள் காயத்ரியை ஜபிக்கையில் பலாச மரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு காயத்ரியின் மூன்று பாதங்களைப் போல மூன்று மூன்று இலைகளாத் துளிர் விட்டதாம்.   ஆகவே பலாச தண்டம் அளிப்பது முக்கியமாய்ச் சொல்லப்படுகிறது.  அம்மியில் நிற்க வைத்து ஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர் உரையாடுவார்.  இந்த உரையாடல் எதைக் குறித்து என விபரம் தெரியவில்லை.  அதன் பின்னர் சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு ஹோமம் செய்வித்துப் பின்னர் ஆசாரியரே ஹோமத்தை முழுதும் செய்து முடிப்பார். அதன் பின்னர் பிரஹ்மோபதேசம்.

இதுதான் முக்கியமானது.  முப்புரி நூல் முன்னாலேயே அணிவிக்கப்பட்டிருக்கும். இதில் பையனின் மாமா சீராகத் தங்கப் பூணூல், வெள்ளிப் பூணூலும் சேர்த்து அணிவித்திருப்பார்கள்.  இத்தோடு பூணூலும் அணிவித்திருப்பார்கள்.  பூணூல், தக்ளியில் நூல் நூற்று மூன்று இழைகள் கொண்டதாய்ச் செய்து அதைக் கட்டை விரலை விடுத்து மற்ற நான்கு விரல்களால் 96 முறை சுற்றித் துணித்துப்பின்னர் நனைத்து மீண்டும் முறுக்கி மூன்றாக முடி போடுவார்கள்.  இது ஒன்பது  இழை கொண்டதாக இருக்கும்.  பூணூலில் போடப்படும் முடிச்சை பிரம்ம முடிச்சு என்பார்கள்.  மும்மூர்த்திகளையும் குறிக்கும் இந்த பிரம்ம முடிச்சு.  பூணூல் தொப்புள் வரை நீளமாக இருக்கும்.  இந்தப் பூணூல் என்பது பிராமணர் என்பதைக் குறிக்கும் அடையாளமோ, அணிகலனோ இல்லை.  இதன் தொண்ணூற்று ஆறு சுற்றுக்களையும் வாழ்க்கைத் தத்துவமாகவே கூறுவார்கள்.  நம் உடலின் 25 தத்துவங்கள், ஸத்வம், ரஜோ, தமஸ் போன்ற 3 குணங்கள், திதிகள் 15, கிழமைகள் 7, நக்ஷத்திரங்கள் 27, வேதங்கள் 4, காலங்கள் 3, மாதங்கள் 12 ஆகியன சேர்ந்து 96 என்று கணக்கு. இதற்கான ஸ்லோகம் ஒன்றும் உள்ளது.  “திதி வாரம் சநக்ஷத்ரம் தத்வவேதகுணான்விதம். காலத்ரயம் ச மாஸா: ச ப்ரம்ம ஸூத்ரம் ஹி ஷண்ணவம்” என்ற ஸ்லோகம் இதற்கான பொருளைச் சுட்டுகிறது.




டிஸ்கி: பெரிய சீர் முறுக்குக்கு ஏற்ற படம் கிடைக்கலை.  அதனாலே நாம முறுக்குச் சுத்தின படலத்தில் உள்ள படத்தையே ஒப்பேத்திட்டேன். :))))


தகவல்கள் உதவி:  தெய்வத்தின் குரல், திரு தி.வா. திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

3 comments:

  1. தகவல்களுக்கு நன்றி! காலையில் பார்க்கும்போது படங்கள் இல்லை. பட்சணம் செய்ய நேரமாகி விட்டது போலும்!!

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், இந்த பக்ஷணம் பழசு. போனவருஷம்/முந்தின வருஷம்??? சரியா நினைவில் இல்லை. கோகுலாஷ்டமிக்குச் செய்தது. :))))

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள்.

    முறுக்கு பக்ஷணம் எடுத்துண்டாச்சு!

    ReplyDelete