எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 01, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் --7

அகிலாண்டம் ஊரிலிருந்து கிளம்பும்போதே ஒரு தீர்மானத்தோடேயே வந்திருந்தாள். அதை எப்படியானும் நிறைவேற்ற வேண்டும்.  ஆனால் சந்துரு அறியக் கூடாது.  ராதாவோடு ஆரம்பத்திலேயே பழகியதில் அவள் ராதாவைக்கடிந்து கொண்டதெல்லாம் சந்துருவின் காது வரை கொண்டு போனதில்லை என்பதை நிச்சயமாய் அறிந்திருந்தாள்.  ஆனால் அதற்காக ராதாவைப் பாராட்ட முடியுமா என்ன?  வாயைத் திறக்காமல் ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துண்டு அவனைப் பிரிக்க முயல்கிறாளோ என்னமோ! அதனால் அவ கிட்டே இளகினாப்போலெல்லாம் இருந்தால் சரிப்படாது.  என்ன பெரிசாக் கிழிச்சுட்டா?  வித்யா கல்யாணத்துக்கு அவளா செய்யப் போறா?  சந்துரு தானே செய்யப் போறான்!  இந்த பாழாப் போன மனுஷனுக்கு புத்தியே இல்லை.

சொத்து இருக்கு; சொத்து இருக்குனு உட்கார்ந்து சாப்பிட்டு அழிச்சாச்சு.  இந்த அழகிலே வருஷத்துக்கு ஒரு பிள்ளை வேறே.  துணுக்கென்றது அகிலாண்டத்துக்கு.  மாதாந்திர நாள் தள்ளிப் போனப்போ 48 வயசாச்சு, நிற்கப் போகும் நேரம்னு அலக்ஷியமா இருந்துவிட்டாள்.  பின்னால் சந்தேகம் வந்து டாக்டர் கிட்டேப் போனதிலே எடுக்கிறது கஷ்டம், உசிருக்கே ஆபத்து; அடுத்தடுத்துப் பிள்ளை பெற்றதோட அல்லாமல் வயசும் ஆச்சு.  இதைப் பெத்துக்கோங்கனு சொல்லிட்டா.  அகிலாண்டமும் தனக்குத் தெரிந்த வைத்தியமெல்லாம் பண்ணியும் அசையவில்லை.  இப்போ வேறே வழியில்லாமல் தான் ராதாவிடம் வந்திருக்கிறாள்.  ஆனால் ராதாவைப் பார்த்தால் சந்தேகமா இருக்கே!  எதுக்கும் இப்போ ஒண்ணும் கேட்டுக்க வேண்டாம்.  நாளைக்கு சந்துருவை ஆபீஸுக்கு அனுப்பிட்டு ராதாவை லீவு போடச் சொல்லிவிட்டு எல்லாத்தையும் அவளிடம் பேசிவிட வேண்டும்.

மறுநாள் சந்துரு வேலைக்குக் கிளம்புகையிலேயே அன்றைய தினத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு நகரை விட்டுத் தள்ளி இருக்கும் அலுவலகத்தில் ஆடிட்டிங்குக்குச் செல்வதாகவும், இரவு நேரம் ஆகிவிடும்; கவலைப்பட வேண்டாம் என்றும் பொதுவாகச் சொல்லிவிட்டுப்போனான்.  அவன் கிளம்பியதும், ராதாவும் அவள் அலுவலுக்குக் கிளம்ப, அகிலாண்டம், "எங்கே போறே! இரு. இன்னிக்கு நீ வேறொரு இடத்துக்கு என்னோடு வரவேண்டும்." என்று சொல்ல, ராதா, "எங்கே அம்மா?" என்று கேட்டாள்.  "போறச்சே எல்லாம் விபரமாய்ச் சொல்றேன். ஆனால் நான் சொல்வது எதுவும் சந்துருவுக்குத் தெரியக் கூடாது.  அப்படி உன் மூலமாத் தெரிஞ்சால் அடுத்த நிமிஷமே நான் எதையாவது தின்று உயிரை விட்டுடுவேன்; தெரிஞ்சுக்கோ!" என்று கடுமையாய்ச் சொன்னாள்.  எதற்கு இத்தனை பீடிகை எனப் புரியாமலேயே ராதா அலுவலகத்திற்கு அன்று விடுமுறை வேண்டும் எனப் பக்கத்துக் கடைக்குப் போய்த் தொலைபேசிச் சொன்னாள்.  பின்னர் ஒரு ஆட்டோ பிடித்துக்  கொண்டு இருவரும் கிளம்பினர்.

"எங்கே?" என்றாள் ராதா.  "நீ உன் உடம்பைப் பார்த்துக் கொள்ளும் லேடி டாக்டர் கிட்டேத் தான். " என்று அகிலாண்டம் சொல்ல, ராதாவின் முகத்தில் வெட்கம் போர்த்துக் கொண்டது.  "அதுக்குள்ளே கண்டு பிடிச்சுட்டீங்களா? நாள் தள்ளிப் போய்ப் பத்து நாள் தான் ஆறது.  இன்னிக்குத் தான் எங்க அம்மாவுக்கே எழுதிப் போட்டேன்.  இன்னும் உங்க பிள்ளைக்குக் கூடச் சொல்லலை. இனிமேல் தான் சொல்லணும்." என்றாள்.  "ராதா, இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதானே நான் உங்களைத் தனிக்குடித்தனத்துக்கே அனுமதிக்காமல் இருந்தேன்.  இப்போ என்னை ஏமாத்திட்டியே?" என்றாள் அகிலாண்டம்.  ராதாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  "நானும் ஜாடைமாடையா உங்க பிள்ளை கிட்டேச் சொல்லிப் பார்த்தேன்.  அவர் கேட்கலை." என்றாள்.

"அவன் ஆண்பிள்ளை.  அப்படித்தான் இருக்கும்.  நீ தான் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்.  அதுவும் இப்போக் குடும்பம் இருக்கும் நிலைமையிலே," என்று ஆரம்பிக்க, "வித்யா கல்யாணம் பத்திக் கவலைப்படாதீங்க அம்மா.  அதுக்கெல்லாம் இவர் அட்வான்ஸ் போட்டு வைச்சிருக்கார்.  பணம் கைக்கு வந்துடும். கல்யாணம் ஜாம் ஜாம்னு நடத்திடலாம்.  ஆச்சு, ஒரு ரெண்டு வருஷம் போனால், என் சம்பாத்தியமும் இருக்கே, லதாவின் கல்யாணத்தை இன்னும் நல்லாச் செய்யலாம்." என்றாள் மனப்பூர்வமாக.

"செய்வே, உனக்குனு ஒண்ணு பிறந்தா, அதுக்குச் செய்வியா? என் பெண், பிள்ளைகளுக்குச் செய்வியா? அதுக்கெல்லாம் உனக்கு மனசு வருமா?  ஏதோ வித்யா கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை நீ வரதுக்கு முந்தியே இருந்து அவன் செய்துட்டிருக்கானோ, பிழைச்சேனோ. லதா கல்யாணத்துக்கு நீ ஒரு துரும்பை அசைச்சுடு; என் பேரை மாத்திக்கிறேன்." என்றாள்.  கண்களில் கண்ணீர் ததும்ப வாயே திறக்காமல் இருந்தாள் ராதா.  "நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலே! என்பாங்க. அது சரியா இருக்கு!" என்றாள் கடுமையாக.

அதற்குள்ளாக மருத்துவ சாலை வந்து சேர, இருவரும் இறங்கி மருத்துவரிடம் போனார்கள்.  ராதா உடலைக் காட்டும் முன்னர் அகிலாண்டம் தன் உடலைக் காட்டினாள். அகிலாண்டம் கர்ப்பமாக இருக்கும் செய்தி அப்போது தான் ராதாவுக்குப் புரிந்தது.  மேலும் மருத்துவர் அகிலாண்டத்தின் கர்ப்பத்தைக் கலைக்க மறுத்ததையும் பார்த்தாள்.  கலைத்தால் பிரச்னை வரும் எனவும், ஏற்கெனவே நான்கு மாசம் முடிந்து விட்டதாகவும் கூறினாள்.  வயது ஆகிவிட்டதால் கருச்சிதைவு செய்வது என்பது இயலாத ஒன்று என்றும் கூறினாள்.  அதன் பின்னர் ராதாவுக்குத் தன் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ள விருப்பமில்லை.  மருத்துவரிடம் சிறிது நேரம் தனியாகப் பேசினாள்.  அவர் கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொண்டாள்.  வீட்டுக்கு வந்ததும் விஷத்தை விழுங்குகிறாப் போல் அந்த மாத்திரைகளை விழுங்கினாள்.  குளியலறையில் போய் வயிற்றைத் தடவிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

அகிலாண்டம் பரிபூர்ண திருப்தியுடன் இருந்தாள்.  அவள் வாய் திறந்து சொல்லாமலேயே காரியத்தைச் சாதித்துக்கொண்டு விட்டோம் என மகிழ்ச்சியும் இருந்தது.  ராதாவை அழைத்து, "இப்போதைக்கு நீ கர்ப்பம் என்றே எல்லாரிடமும் சொல்.  சீமந்தம், வளைகாப்பு எல்லாம் முறைப்படி பண்ணிடுவோம்.  குழந்தை பிறக்கும் முன்னர் உங்க அம்மா வரவேண்டாம்னு சொல்லிடு.  என்ன செய்வியோ தெரியாது.  உங்க அம்மா வரக்கூடாது.  நான் வருகிறேன்.  வந்து குழந்தையைப் பெத்து உன் கிட்டே தான் கொடுப்பேன்.  யாருக்கும் அது என் குழந்தைனு தெரியக்கூடாது.  இது உனக்கும், எனக்கும் மட்டும் தான் தெரிஞ்சிருக்கணும்." என்று கண்டிப்பாகச் சொன்னாள்.

*********************************************************************************
படித்துக்கொண்டிருந்த ரம்யாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  இதிலே யாருக்கும் தெரியக்கூடாதுனு சொல்லி இருக்காளே, பாட்டி, இல்லை,இல்லை, அம்மா, அம்மாவா, பாட்டியா?  கடவுளே, ஏன் என்னைப் பிறக்க வைச்சே? ஏதோ ஒரு முகம் தெரியாத குடும்பத்து அநாதையாகவே இருந்திருக்கலாம் போலிருக்கே! அது சரி, அப்பாவுக்கு......அதான் அண்ணாவுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சது?  அம்மா..... அதான் ராதா மன்னி.... அவள் சொல்லி இருப்பாளோ?

5 comments:

  1. அந்த மாமியாரை நினைத்தால் எரிச்சல் வருகிறது! 'நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்'னு ராதாவுக்கு அட்வைஸ் வேற! (அப்பாடி.... ! நான் 'கெஸ்' செய்த ஒரு விஷயம் வருகிறது!!!!!!)

    ReplyDelete
  2. ரொம்ப இன்வால்வ் ஆகலை! அபபடி ஆனால் நானும் மாமியாருக்கு விட்டமின் மாத்திரை என்று வேறு எதாவது கொடுக்கச் சொல்லிடுவேன்!!

    ReplyDelete
  3. வாங்க ஸ்ரீராம், இதிலே கொஞ்சம் கற்பனை கலந்திருக்கேன் தான். ஒரிஜினல் கதையே வேறே. அதைக் கடைசியில் சொல்றேன். :)))))மற்றபடி போன பதிவிலேயே யூகம் செய்திருக்கலாம். :D

    ரொம்ப இன்வால்வ் ஆகாட்டி நல்லது தான். :)))) பாவம் அந்தக் குழந்தை பிழைச்சது. :))))))

    ReplyDelete
  4. //மற்றபடி போன பதிவிலேயே யூகம் செய்திருக்கலாம். :D //

    அகிலாண்டத்தம்மாள் என்று தான் அழைக்க நினைத்தேன். இந்த அளவுக்கு ஒரு கொடுமைக்காரிக்கு அம்மாள் எல்லாம் எதற்கு?

    ராதாவின் ஏதாவது ஒரு நாத்தனாரின் ஊருக்குத் தெரியாத காதல் வெளிப்பாடான குழந்தைக்கு ராதா வளர்ப்புத் தாயாகிறாளோ என்று நினைத்தேன்.

    ReplyDelete
  5. வாங்க ஜீவி சார், ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி யூகம் செய்திருக்கின்றனர். :))))) இதை விடக் கொடுமையான மாமியார்கள் உண்டு. ஏதோ ஒரு தொலைக்காட்சித் தொடரில் மருமகளை வீட்டு விட்டு வெளியேற்றுவதாய்க் காட்டினதாய்ச் சொல்லுவாங்க. அப்படி வெளியேற்றாவிட்டாலும் வெளியே சென்றுவிட்டு வரும் மருமகளுக்குக் கதவு திறக்காமல் வெளியே நிறுத்தி வைப்பவர்கள்/வைத்தவர்கள் உண்டு. மனித மனம்! இந்த மாதிரியான அல்ப விஷயத்திலெல்லாம் ஆனந்தமும் அடையும்.:)))))))

    ReplyDelete