எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 04, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 8


அம்மா வந்திருக்கும் காரணம் தெரியாமல் சந்துருவுக்குக் குழப்பமாக இருந்தது.  தானும் வேலை இருப்பதால் சீக்கிரம் கிளம்பி வந்துவிட்டு, வீட்டுக்குப்போகையில் நேரம் கழித்துப் போவோம். ராதா, பாவம் தனிமையில் அம்மாவிடம் மாட்டிக் கொண்டு என்ன திண்டாடுவாளோ எனக் கவலைப்பட்டான் சந்துரு.  ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  அவன் எதிரில் அகிலாண்டம் இப்படியும் உண்டோ என்னும்படி  ராதாவைத் தாங்கிக் கொண்டிருந்தாள்.  அவள் பேச்சில் இருந்தே சந்துருவுக்கு ராதாவின் கர்ப்பம் பற்றித் தெரிய வந்தது.  வெட்கம் காரணமாய் நம்மிடம் சொல்லலை போலிருக்கு என நினைத்துக் கொண்டான். விரைவில் இந்த ஆடிட் வேலையை முடித்துக் கொண்டு ராதாவுடன் பிறக்கப் போகும் குழந்தையைக் குறித்து மனம் விட்டுப் பேச எண்ணினான்.  அவன் தாயோ அதற்கு இடம் கொடுப்பவளாய்த் தெரியவில்லை.  ஏற்கெனவே இருவரும் சேர்ந்திருப்பதை அவ்வளவு விரும்பாதவளுக்கு இப்போது ராதாவின் கர்ப்பம் என்ற காரணமும் சேர்ந்து கொள்ளவே, மகனைக் கொஞ்சம் தள்ளியே இருக்கும்படி ஜாடையாகச் சொல்லிவிட்டாள். அகிலாண்டம் இந்தக் குழந்தையை ஏற்றுக் கொண்டதும் அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் தான். வித்யாவின் கல்யாணத்திற்கான பணத்திற்கு விரைவில் ஏற்பாடு செய்து அம்மாவை ஊருக்கு அனுப்புவதில் முனைந்தான்.

ஆனால் ராதாவின் அம்மாவுக்கு ஏற்கெனவே ராதா போட்டிருக்கும் கடிதம் கிடைக்கவே, அவர்கள் மனமகிழ்ச்சியோடு ராதாவுக்குப் பிடித்தமான பலகாரங்களைச் செய்து கொண்டு பெண்ணைப் பார்த்து அழைத்துச் செல்ல வந்தனர்.வந்தவர்களை அகிலாண்டத்தின் நிஷ்டூரமான பேச்சே வரவேற்றது.  மாப்பிள்ளையும் வீட்டில் இல்லை.  ராதாவின் அம்மாவுக்கு முதல் பார்வையிலேயே ராதாவின் வாடிய முகமும், சோகம் கப்பிய கண்களும் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்த்தின.   ராதாவோ தாயையும், தந்தையையும் தனிமையில் சந்தித்துப் பேச மறுத்தாள்.  இதுவே விசித்திரமாய்ப் பட்டது.  தூண்டித் தூண்டிக் கேட்டும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி அவர்களைத் தவிர்க்கவே முயன்றாள்.  ராதா அப்பா சும்மாவே கோபக்காரர்.  ராதாவின் அலக்ஷியம் அவரைத் துன்புறுத்த, தாய், தகப்பன் உறவே வேண்டாம்னு ஆயிடுத்தானு கோபத்தில்  ராதாவிடம் கேட்க, ராதா வாயே திறக்காமல் மெளனம் சாதித்தாள்.

அகிலாண்டமோ இந்தச் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்திக்கொள்ள நினைத்தவளாய், எப்படியேனும் ராதாவின் அப்பாவோட கோபத்தைத் தூண்டி விடும் வகையில் பேசலானாள்.  அவள் பேச்சின் வீரியத்தை அவரால் தாங்க முடியவில்லை.  ராதாவை அப்போது அழைத்துப் போகமுடியவில்லை எனில் தான் கிளம்புவதாய்ச் சொல்லவே, ராதா அவரைக் கிளம்பச் சொன்னாள்.  ராதாவின் அம்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் அப்போது பார்த்துச் சந்துரு அலுவலில் இருந்து வந்துவிடவே எதுவும் பேச முடியவில்லை.  மறுநாள் காலையிலேயே அகிலாண்டம் தன் பெண்ணிற்குக் கல்யாணத்திற்கான சில நகைகளை வாங்க வேண்டிச் சந்துருவோடு போயிருந்தாள். ராதா சமைத்து முடித்துவிட்டுத் தன் அறைக்குப் போய்க் கதவைச்சார்த்திக் கொண்டிருந்தாள். இது தான் சமயம் என ராதாவின் அம்மா மெல்ல வந்து அறைக்கதவைத் தட்டினாள்.  கதவைத் திறந்த ராதா, தாயைக் கண்டதும், எதுவுமே பேச முடியாமல் அப்படியே அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"எதுக்குடி இந்த நாடகம்?" அம்மா கேட்டாள்.

"நாடகமா?  எந்த நாடகம்?" ராதா விழிக்க,

"அதான், கர்ப்பம்னு போடறியே, அந்த நாடகம் தான்." என்றாள் அம்மா.

ராதா அம்மாவையே ஆச்சரியத்துடன் பார்க்க, "ஏண்டிம்மா, தாயறியாத சூலா?  உன்னை வந்தன்னிக்குப் பார்த்தப்போவோ ஒண்ணும் இல்லைனு புரிஞ்சு போச்சு.  ஆனால் உன் மாமியார்......." என்று குரலைத் தழைத்துக் கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"அவங்கல்லாம் கடைக்குப் போயிருக்காங்களே, மாமியார் கடைக்குப் போனால் எப்படியும் ஒரு நாள் ஆயிடும்;  இப்போதைக்கு வரமாட்டாங்க." என உத்தரவாதம் தந்தாள் ராதா.  ஆனால் வெளியே..............

அகிலாண்டத்தைக் கடையிலேயே விட்டு விட்டு, பணம்போதவில்லை என வீட்டில் பணம் எடுத்துச் செல்ல வந்த சந்துருவுக்கு இதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. அங்கேயே எவரும் அறியாமல் இருந்து எல்லாவற்றையும் கேட்க நினைத்தான்.

ராதா சொல்லச் சொல்லக் கேட்ட ராதாவின் அம்மாவுக்குக் கோபம் வந்தது.  ஆற்றாமை பொங்கியது.  "ஏண்டி, தான் ஜாக்கிரதையா இருக்காம உன்னைக் கேள்வி கேட்கிறாளே உன் மாமியார்? இது அடுக்குமா?  அந்தத் தெய்வத்துக்கே அடுக்காது!" என்றாள் வருத்தமும், கோபமுமாக.

"அது சரி, உங்காத்துக்காரருக்குத் தெரியுமா?" என்று கேட்க, "தெரியாது, சொல்லக் கூடாதுனு சத்தியம் வாங்கிண்டுட்டா." என்று ராதா சொல்ல, "பொல்லாத சத்தியம், அவள் என்ன யோக்கியமா!  நான் இருக்கேன் உனக்கு ஆதரவா.  இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்." என்று அம்மா பரபரத்தாள்.

"வேண்டாம் அம்மா, டாக்டர் இப்போக் குழந்தையை எடுத்தா ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடும்னு சொல்றாங்க.  அப்புறமா என் பாடு இன்னும் அதோகதிதான்.  ஏதோ இந்த மட்டும் அம்மானு சொல்லிண்டு இருக்காங்க இல்லையா?  அதையே பெரிசா நினைச்சுக்கலாம். எனக்கு இன்னொண்ணு பிறக்காமயா போகப் போறது? அப்போப் பார்த்துக்கலாம். இவங்க இதைப் பெத்துக்கட்டும்."என்றாள் நடக்கப் போவது குறித்து அறியாமலேயே. பின்னர் அம்மாவிடம், "இதெல்லாம் உனக்குத் தெரியக் கூடாதுனு சொல்லி இருக்காங்க.  அதனால் நீ தெரியாதது மாதிரியே நடந்துக்கோ." என்று எச்சரிக்கையும் செய்து வைத்தாள்.  அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சந்துரு, சத்தம் போடாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விட்டு, அப்போது தான் வருகிறவன் போல வந்து அழைப்பு மணியை அழுத்தினான்.  தூரத்தில் நூலகம் சென்றிருந்த ராதாவின் தந்தை வருவதும் தெரிந்ததும்  சந்துருவின் மனம் ஏனோ கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

11 comments:

  1. 'தாயறியாத சூலா'வுக்கு அர்த்தத்தையே மாத்திட்டீங்களே?

    ReplyDelete
  2. கதை போலவே இல்லே சொல்லிச்செல்லும் விதம் நல்லா இருக்கு. இப்படியும் கூட மனுஷா இருப்பாங்களான்னெ நினைக்க்த்தோனுது.

    ReplyDelete
  3. இரண்டு மூன்று அத்தியாயங்களில் கதையை முடித்து விடப் போவதாகச் சொன்னீர்கள். போகிற போக்கைப் பார்த்தால் இப்போதைக்கு முடிக்க மாட்டீங்க போலிருக்கு.. ரம்யா கதை வேறே இருக்குல்லே..

    ReplyDelete
  4. அப்பாதுரை, ஊக்கத்துக்கு நன்றி. தாய் சூலையும் அறிவாள்; இல்லை என்றாலும் அறிவாளன்றோ! :)))))

    ReplyDelete
  5. வாங்க லக்ஷ்மி, உண்மையில் கதைக் கரு கொஞ்சம் மாறி இருக்கும். இங்கே அதை இன்னும் மாத்தி இருக்கேன்.

    ReplyDelete
  6. ஜீவி சார், எனக்கே தெரியலை; எப்படிப் போகும்னு! பார்க்கலாம். :))))

    ReplyDelete
  7. //எனக்கே தெரியலை; எப்படிப் போகும்னு! பார்க்கலாம். :))))//

    இதான் தொடர்கதை எழுதுவதில் இருக்கும் விசேஷம். அடிக்கடி நான் நினைப்பது. சொல்வது.

    இன்னொண்ணும் இருக்கு. கதைகள் தங்களைத் தாங்களே எழுதிக் கொள்ளவும் செய்யும். கொஞ்சம் உள்ளார்ந்து பார்த்தால் இதுவும் தெரியும்.

    ReplyDelete
  8. ஜீவி சார், மறு வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. அப்பாதுரை, ஆந்தை முழிக்கிற முழியே சரியில்லையே? :)))))

    ReplyDelete
  10. "தங்கச் சரிகைச் சேலை எங்கும் பளபளக்க...."

    சந்துரு கேட்டு விட்டது ஆறுதலாய் இருக்கு. கதாசிரியருக்கு ஒரு பிடி வேணுமில்லையா கதையைத் தொடர்வதற்கு....!!

    ReplyDelete