எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 26, 2012

நண்பர் குழாத்தைக் கண்டு பிடித்தேன்! :)

ஸ்ரீரங்கம் வந்த புதுசில்  ஒரு வாரம் போல் பறவைகளின் குரலே கேட்கவில்லை.  காக்காய் கூடக் கத்தலை.  ஆனால் சுற்றிலும் மரங்கள் என்னமோ இருக்கு.  மொட்டை மாடிக்குப் போனாலும் காவிரியில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்குகளையும், பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரைகளையும் தவிர வேறு ஒண்ணுமே கண்களில் படலை.  கொஞ்சம் இல்லை;  நிறையவே வருத்தம்.  அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பச்சை நிறப் பச்சோந்தி/ ஓணான்?(பச்சோந்தினு தான் நான் சொன்னேன்.) தவிர   வேறு உயிரினம் இருக்கானே தெரியலை.  சமையலறைப் பக்கத்து பால்கனியில் காக்கைக்குச் சாதம் வைத்தால் மறு நாள் இல்லை ஒருவாரம் கூட அப்படியே இருந்தது.  என்ன ஏமாற்றம்?

சாதம் வைக்கும் இடத்தை வடபுறத்து பால்கனிக்கு மாற்றினேன்.  அங்கே தென்னை மரம் அருகேயே தொட்டுக்கொண்டு இருப்பதால் குறைந்த பக்ஷம் அணிலாவது வருமே! ஆஹா, அதே போல் அங்கே அணில் மட்டுமில்லாமல் மைனாக்களும் வர ஆரம்பித்தன.  மெல்ல மெல்ல ஒற்றைக்குயில் கூவ, பதில் குரல் கொடுக்கும் இன்னொரு குயிலும் அடையாளம் தெரிய, மைனாக்கள் மாலை வேளைகளில் மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவரில் வந்து உட்கார்ந்து கொண்டு "சளசள" என சம்பாஷிக்க, அதிலும் கைப்பிடிச் சுவரில் இருப்பது, சொல்வது, "எல்லாரும் வந்தாச்சா கூட்டுக்கு?" என்று கேட்பது போலும், மரத்தில் இருப்பது, "வந்தாச்சு, வரலை" னு பதில் சொல்றாப்போலயும் இருக்கும்.  அதுக்கு ஏற்றாற்போல் சில நாட்கள் பதில் குரல் கேட்டும் உட்கார்ந்திருக்கும் மைனாக்களும், பதில் வந்ததும் பறந்து செல்லும் மைனாக்களும், அவைகளின் மொழி நமக்கும் புரிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என யோசிக்க வைக்கிறது.  காக்கைகளும் தண்ணீர்த் தொட்டியின் நீரை அருந்த வர ஆரம்பித்தன.  போதாக்குறைக்கு கருடத் தம்பதிகள் வேறு இருக்கின்றனர். 

கிளிக்கூட்டங்கள் நாங்களும் இருக்கோம்னு "கீ கீ" எனக் கூவிக் கொண்டே செல்ல ஆரம்பித்திருக்கின்றன.  இப்போதெல்லாம் மைனாக்கள் நடைப்பயிற்சி செய்கையில் பயப்படாமல் உட்கார்ந்திருக்கப் பழகிவிட்டன.  தவிட்டுக்குருவியும், கரிக்குருவியும் கூடக் கண்களில் அவ்வப்போது படுகின்றன.  சிட்டுக்குருவிகளைத் தான் பார்க்க முடியலை.  சிட்டுக்குருவி போல ஒன்று இருக்கிறது.  ஆனால் அது சிட்டுக்குருவி இல்லை என கல்பட்டார்(பறவைக்காதலர்) சொல்லிட்டார்.  அது வானம்பாடினு சொல்லுகிறார்.  ஆனால் அதுங்க கத்திக் கேட்கலை. சுப்புக்குட்டிகள் தான் இங்கே இல்லை.  மத்தபடி ஒரு வாரம் முன்னே காலங்கார்த்தாலே வாஷிங் மெஷினில் துணிகள் போட்டப்போ ஒரு பெரிய எலி கூட நாலு மாடி ஏறி வந்தாச்சு.  அம்பத்தூரில் இருந்தே வந்ததோனு சந்தேகம்.  ஆனால் எதிரே இருக்கிறவங்க தண்ணீர்க் குழாயில் இருந்து வந்திருக்கும்னு சொல்லிட்டு அதை மூடி வைக்கச் சொன்னாங்க.  அந்த எலியைப் பார்த்து நான் கத்திய கத்தலில் அது மிரண்டு போய் ஜன்னலில் ஏறி உட்கார, ரங்க்ஸ் வந்து விரட்ட முனைய, கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டது தான் கொஞ்சம் வருத்தம்.  மற்றபடி ஒவ்வொருத்தரா வந்து அடையாளம் காட்டிட்டு இருக்காங்க தான்.

17 comments:

  1. //அங்கே தென்னை மரம் அருகேயே தொட்டுக்கொண்டு இருப்பதால் குறைந்த பக்ஷம் அணிலாவது வருமே! ஆஹா, அதே போல் அங்கே அணில் மட்டுமில்லாமல் மைனாக்களும் வர ஆரம்பித்தன. மெல்ல மெல்ல ஒற்றைக்குயில் கூவ, பதில் குரல் கொடுக்கும் இன்னொரு குயிலும் அடையாளம் தெரிய, மைனாக்கள் மாலை வேளைகளில் மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவரில் வந்து உட்கார்ந்து கொண்டு "சளசள" என சம்பாஷிக்க, அதிலும் கைப்பிடிச் சுவரில் இருப்பது, சொல்வது, "எல்லாரும் வந்தாச்சா கூட்டுக்கு?" என்று கேட்பது போலும், மரத்தில் இருப்பது, "வந்தாச்சு, வரலை" னு பதில் சொல்றாப்போலயும் இருக்கும். அதுக்கு ஏற்றாற்போல் சில நாட்கள் பதில் குரல் கேட்டும் உட்கார்ந்திருக்கும் மைனாக்களும், பதில் வந்ததும் பறந்து செல்லும் மைனாக்களும், அவைகளின் மொழி நமக்கும் புரிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என யோசிக்க வைக்கிறது. //
    ஆஹா, ஆஹா பிரமாதம்! கல்கியின் எழுத்துக்களைப் படிப்பது போல சுகமான வரிகள்!

    ReplyDelete
  2. கீதா இங்க கூட காலையில் குருவிகளுக்கு அரிசி போடுவேன். குருவிகள் கத்திக்கொண்டே கொத்தி தின்னும் அழகை கொஞ்ச நேரம் பாத்துண்டே இருப்பேன். மனசே ரிலாக்ஸ் ஆயிடும்.சாதம் சாப்பிட காக்கா தான் வரதில்லே ஒரு வேடிக்கை என்னன்னா சப்பாத்தி வச்சா காக்கா வருது. சாதம் வச்சா புறா கூட்டம்தான் வருது

    ReplyDelete
  3. கிளிக்கூட்டங்கள் நாங்களும் இருக்கோம்னு "கீ கீ" எனக் கூவிக் கொண்டே செல்ல ஆரம்பித்திருக்கின்றன

    பச்சைத்தோழிகளுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. கண்டு பிடித்த நண்பர் குழாத்தைக் கேமராவிலும் பிடிங்க:)! அருமையான சூழல். அழகான விவரிப்பு.

    ReplyDelete
  5. வாங்க கெளதம் சார்,

    //ஆஹா, ஆஹா பிரமாதம்! கல்கியின் எழுத்துக்களைப் படிப்பது போல சுகமான வரிகள்!//

    கொஞ்சம் ஓவரா இருக்கோனு தோணினாலும் உள்ளூர ரசிச்சேன். :)))))

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, குருவிங்க இருக்கிறது அதிர்ஷ்டம் தான். இங்கே பார்க்க முடியலை. :( புறாக்கள் ரொம்பவே அசுத்தம் செய்யும். ஹூஸ்டனில் பையர் அபார்ட்மென்டில் இருந்தப்போ இப்படித்தான் தினம் தினம் சுத்தம் செய்து கொண்டே இருக்கணும். :))))

    ReplyDelete
  7. வாங்க ராஜராஜேஸ்வரி, ரசனைக்கு நன்றி. கிளிங்க உட்காருமானு தினம் பார்க்கிறேன். ம்ஹும், உட்காருகிறதில்லை. பார்க்கலாம்.

    ReplyDelete
  8. வாங்க ரா.ல. ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நன்னி ஹை. படம் எடுக்கணும். அதுங்களுக்குத் தெரியாம எடுக்கணும். மாடியிலே இருந்து கொஞ்சம் கஷ்டம். பார்ப்போம். :)))))

    ReplyDelete
  9. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீவில்லிப்புத்தூர் பொது மருத்துவமனையின் ஆரம்பக் கட்டிடத்தில் உட்கார்ந்திருந்த நேரம் நினைவுக்கு வருகிறது! உள்ளே நுழைந்ததும் இருக்கும் இடத்தில் பெரிய பெரிய மரங்களில் எத்...தனை வகையான பறவைகளும் அதன் சத்தங்களும்.... இப்போதும் பறவைகள் சத்தம் கேட்டால் அந்தச் சூழல் தானாக நினைவுக்கு வரும்.

    ReplyDelete
  10. நகரமயமாக்கலில், ஸ்ரீ ரங்கம் சற்றே தற்காலத்தில் பின் தங்கியிருக்கின்றது என நினைக்கின்றேன். ஸ்ரீ ரங்கம் கோயிலில் இருந்து சுற்றுப்புறம் மூன்று அல்லது நான்கு கி.மீ. தொலைவிலேயே நிறைய மரங்களும், சோலைகளும் காணக்கிடைக்கின்றன. ஓரளவுக்கு பசுமையாகவே காணப்படுகின்றது. நான் தற்போது பார்த்தபோது, காவிரியே காய்ந்துவிடும் நிலையில் தான் இருக்கின்றது. அரங்கன் தான் அருள்புரிய வேண்டும். காலை வேளையில் ஹாரன் சத்தங்களோடு சற்றே குருவிகளின் கானமும் கேட்க கிடைத்த தாங்கள் பாக்கியவான்கள் தான்.

    ReplyDelete
  11. ஆகா, சில நாட்களாக எங்க வீட்டுக்கு வழக்கமாக வந்திறங்கும் கிளிகள், காணவில்லையே என்று, நினைத்துக்கொண்டேன். இப்போ தெரிகிறது, சீரங்கத்துக்கு, நலம் விசாரிக்க போனாப்பல என்று.

    எவ்வளவு அழகாக எல்லாரையும் வீட்டிற்கு வரவழைத்து விட்டீர்கள்,அருமை! .

    ReplyDelete
  12. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நிறைய காகங்கள், குருவிகள் எல்லாம் வந்து போகும். அம்மா இட்ட உணவினை உண்டு போக குரங்குகளும் இப்போது இருக்கின்றன. சமீப காலமாக நான்கு மயில்கள் வருகின்றன. நான்குமே பெண் மயில்கள். இம்முறை வந்த போது நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். பிறிதொரு நாள் பகிர்கிறேன் எனது தளத்தில்.

    இனிய பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
  13. வாங்க ஸ்ரீராம், இன்னமும் இங்கே பசுமை மாறாமல் இருக்கிறது தான் கொஞ்சமாவது சந்தோஷத்தை அளிக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்போ எப்படினு தெரியலை. ஆனால் தேனிப் பக்கம் போனீங்கன்னா மாடுகளுக்குக் கூடப் பச்சைப்பசும்புல் போடுவதைக் காண முடியும். பச்சைப் புல்லை உண்ணும் மாடுகளின் பாலின் ருசியும் தனியாகவே தெரியும். :)))))

    ReplyDelete
  14. வாங்க தீக்ஷிதரே, வரவுக்கு நன்றி. வீட்டுக்கு வராமல் போனதுக்குக் கோபம். :)))) ஆவணி அவிட்டம்னு சொல்லி இருக்கக் கூடாதோனு தோணுது.

    போகட்டும்; ஸ்ரீரங்கம் பின் தங்கியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நரகமயம் ஆகவே வேண்டாம்; ஆன வரைக்கும் போதும்னு தோணுது.

    ReplyDelete
  15. வாங்க வெற்றி மகள், நீங்க ஹைதையில் இருக்கீங்கனு நினைவு. கிளி அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணி வந்திருக்கு பாருங்க. :)))))) வருகைக்கும், ரசனையான பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், மயில்கள் அகவும் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்; இப்போப் புரியுது. இங்கேயும் வரணும்னு ஆசையா இருக்கு. ராஜஸ்தானில் நாங்க இருந்த பங்களாவுக்கு மேலே கூரையில் மயில்கள் குடும்பத்தோடு குடியிருந்தன. தினமும் லானில் வந்து இரண்டு, மூன்று மயில்கள் நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும். :)))) பெண் மயில்கள் பார்த்தனவோ இல்லையோ, நாங்க பார்த்து ரசிப்போம். அப்போல்லாம் நான் எழுத்தாளியாவேன்னு நினைச்சுப் பார்க்கலை; தெரிஞ்சா படம் பிடிச்சு வைச்சிருக்கலாம். :))))

    ReplyDelete
  17. இந்த வாரம் முழுக்க ஊர் சுற்றல், ஆபிஸ் வேலைன்னு சரியா போய்டுச்சு. இப்பதான் வரேன்....பரவாயில்லையே .. அங்கயும் நண்பர்களா ... பாவம் அந்த எலி

    ReplyDelete