எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 28, 2012

சென்னையில் ஒரு வாரம்! :))))

சென்னையிலே தான் அண்ணா பையருக்குக் கல்யாணம்.  தீபாவளி கழிச்சு அந்த சனியன்று பல்லவனில் சென்னை கிளம்பினோம். ஞாயிறன்று சுமங்கலிப் பிரார்த்தனை, திங்கள் சமாராதனை.  செவ்வாயன்று எங்களுக்கு எங்க மருத்துவர் கிட்டே மாதாந்திர சோதனை(பல மாதங்கள் கழிச்சு).  அவர் கிட்டே சாதாரணமாவே ஒரு நாள் ஆயிடும்.  அன்னிக்கும் அது போல் ஆச்சு.  புதனன்று கல்யாணத்துக்குச் செல்ல வேண்டிய முன்னேற்பாடுகள், கோலம் போடுதல், சாமான்களைச் சரி பார்த்தல் இத்யாதி, இத்யாதி.  வியாழனன்று காலை நாலு மணிக்குப் போன மின்சாரம் ஆறு மணிக்குத் தான் வந்தது.  அதுவரை இருட்டிலே குருட்டடிச்சுட்டு இருக்க வேண்டியதாப் போச்சு.  :(அண்ணா வீட்டில் இன்வெர்டர் இல்லை. :(  ஏழரைக்கு அப்புறம் கிளம்பிச் சத்திரத்துக்குப் போறதுக்குள்ளே மயக்கமே வந்துடுச்சு. மூன்று நாட்கள் கல்யாணத்தில் கழிந்தது. வெள்ளியன்று  கல்யாண முஹூர்த்தம் முடிஞ்சதும் குரோம்பேட்டில் திரு நடராஜன் கல்பட்டு சாரைப் பார்க்க வருவதாய்ச் சொல்லி இருந்தேன்.  கிளம்பறச்சே 2 மணி ஆயிடுச்சு.

அவசரம் அவசரமா ஆட்டோவைத் திரும்பி வரவும் சேர்த்துப் பேசிக் கொண்டு போயிட்டு அவர் அளித்த புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு வந்தோம். இன்னும் படிக்க ஆரம்பிக்கலை.  தொட்டாலே தூள் தூளாகிடும் போல் இருக்கு. சரியா நூறு வருடங்கள் முன்னே பதிப்பித்த ராமாயணப் புத்தகம்.  சனியன்று வல்லி தொலைபேசியில் அழைச்சாங்க.  எங்கே போறது!  பேசிட்டு இருக்கிறச்சேயே அழைப்பு வேறே வந்தாச்சு. அன்னிக்கு அங்கே கட்டுச் சாதக்கூடை விசேஷம் முடிஞ்சு மத்தியான வண்டியிலே மாயவரம் போகணும்.  திங்களன்று அங்கே எங்க முக்கியமான நண்பர் மற்றும் உறவினர் பொண்ணுக்குக் கல்யாணம்.  பொண்ணு எங்க சொந்தப்பொண்ணு மாதிரி.  எங்களைப் பெரியப்பா, பெரியம்மானே கூப்பிடுவா.   அங்கே போயிட்டோம்.  ஞாயிறன்று மாலை ஆறு மணிக்கு மேல் தான் நிச்சயதார்த்தம்னு சொன்னதாலே அங்கிருந்து சித்தர் காடும், திருமணஞ்சேரியும் போயிட்டு வந்தோம்.  எனக்குப் பூம்புகார் போகணும்னு ஆசை.  ஆனால் அங்கே புராதனச் சின்னங்கள் ஏதும் இல்லை;  பார்க்கறாப்போல் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டாங்க.  கொஞ்சம் ஏமாற்றம் தான்.

சென்னை வந்துட்டு யார் கிட்டேயும் சொல்லலைனு கோவிக்க வேண்டாம்.  சூழ்நிலை அப்படி.  ரொம்ப டைட்டான நிகழ்ச்சி நிரல். :( அதனால் தான் எங்கே போறேன்னு சொல்லாமலேயே போனேன்.  முகமூடி போட்டுக் கொண்டு கிளம்பிப் போயிட்டு முகமூடி போட்டுக் கொண்டே வந்தாச்சு.  மாயவரத்திலும் அபி அப்பாவுக்கு அங்கே வரப் போறதைச் சொல்லலை.  கல்யாணத்திலே பார்த்தாலும் பார்க்கலாம்னு நினைச்சேன்.  ஆனால் வேறு சில நிகழ்வுகளால் சில மாற்றங்கள்.   அபி அப்பாவுக்கும் காலம்பரத்தான் மாயவரம் வந்துட்டுப் போனதைச் சொல்லி இருக்கேன். நம்ம வலை உலக நண்பர்களைப் பார்க்கவென்றே சென்னைக்கு வரணும்.  சென்னையிலே இருந்தப்போ பிரச்னையே கிடையாது.  எல்லாரையும் எங்க வீட்டுக்கு வரச் சொல்லிடுவேன். இப்போ ஸ்ரீரங்கம் வாங்க எல்லாரும்.  எல்லாருக்கும் கொஞ்சம் கோபம் தணியறதுக்காக இரண்டு படங்கள் இப்போ.


இது எங்க அம்மா, அப்பா படம்.  கல்யாண மேடையில் வைச்சிருந்தாங்க. 



ஸ்வீட்டிலேயே புடைவை.  பாதாம் பருப்புப் புடைவை. :))))

 முந்திரிப்பருப்பு வேஷ்டி


பாதாம் ரவிக்கைத்துணி, முந்திரிப்பருப்பு அங்க வஸ்திரம்.   மற்ற சில படங்களும், சித்தர் காடு படங்களும் ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

Monday, November 26, 2012

லீவு முடிஞ்சு வந்துட்டோமுல்ல!

ஹிஹிஹி, அதுக்குள்ளே ஸ்ரீராம் மெமோ அனுப்பிட்டார். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) நான் ஒரு கல்யாணம் அட்டென்ட் பண்ணப் போறதை மட்டும் சொன்னேன்.  இன்னொரு கல்யாணமும் இன்னிக்கு அட்டென்ட் பண்ணிட்டு சாயந்திரம் தான் வந்தேன்.

ரெண்டு கல்யாணமும் கிரான்டாக நடந்தது.

கல்யாண சமையல் சாதம்!
அந்தக் காய்கறிகளும் பிரமாதம்
இதுவே எனக்குப் போதும்!

ஆஹ அஹ அஹா, அஹாஹாஹஹா!

ரசம் சாதத்துக்கு அப்பளமும்  எல்லாப் பந்தியிலும்
இரண்டு முறை கிடைச்சது!

ஹிஹிஹி

ஆனாப் பாருங்க, இன்னிக்கு மத்தியானம்சாப்பிடறச்சே அப்பளம் போடச் சொன்னா முதல் அப்பளத்தையே முடிக்கலையேனு (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) கேட்டுட்டார். எத்தனை அப்பளம் போட்டால் என்ன? நாங்க சாப்பிட்டுக் காட்ட மாட்டோம்? 

Friday, November 16, 2012

லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

ஒரு வாரம் ஊரில் இருக்க மாட்டேன்.  அண்ணா பையர் கல்யாணம்.  எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!


காணோமேனு ரசிகப்பெருமக்களும், தொண்டர்களும் தீக்குளிக்கிற அளவுக்குப் போயிடாதீங்க. 

Thursday, November 15, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கனின் தீபாவளிக் கொண்டாட்டம்



.ஆன்மீகப் பயணம் பக்கத்தில் தான் இந்தப் பதிவைப் போட்டிருந்தேன்.  யாரும் அங்கே ஜாஸ்தி வரதில்லையா! போணி ஆகிறதில்லை. :D, (பேரைப் பார்த்து பயந்துடறாங்க போல! :P, பரவாயில்லைனு இங்கே காப்பி, பேஸ்டி இருக்கேன். அரங்கன் கொண்டாடிய தீபாவளியைப் பத்திப் படிங்க.  இன்னிக்குக் காலம்பரத்தான் துலாக் காவிரி நீரை ஆண்டாளம்மா அரங்கன் அபிஷேஹத்துக்குத் தங்கக் குடத்தில் கொண்டு போறதைப் பார்த்தேன்.  கையிலே காமிராவோ, செல்லோ இல்லாததால் படம் எடுக்க முடியலை.  நான்எங்க குடியிருப்பின் மாடியிலே walking போறச்சே அங்கே இருந்து பார்த்தேன்.  மின்சாரம் அவுட்.  பதிவு போகுதானு தெரியல



அரங்கன் தீபாவளி கொண்டாடுவது அமர்க்களமாக இருக்கும் என ஸ்ரீரங்கம் வரும் முன்னரே கேள்விப் பட்டிருக்கேன்.  நேற்றுக் காலையிலேயே கோயிலுக்குப் போக எண்ணம்.  ஆனால் முடியவில்லை.  மாலை அரங்கன் சந்தனு மண்டபத்தில் எட்டு மணி வரை சேவை சாதிப்பான் என்பதைத் தெரிந்து கொண்டு சென்றோம்.  அரங்கன் சேவை அதி அற்புதம்.  எதிரே கிளி மண்டபத்தில் ஆழ்வாராதிகளையும், அப்படியே ஆசாரியர்களையும் சேவித்துக் கொண்டோம்.  அப்படியே விமான தரிசனமும், பர வாசுதேவர் தரிசனமும் செய்து கொண்டோம்.  பெரிய பெருமாள் ஏழு மணிக்கப்புறமாய்த் தான் தரிசனம் தருவார். அதுக்குக் கூட்டம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிருந்தது.  ஆகவே வந்துவிட்டோம்.  இன்னொரு நாள் தான் போகணும்.  போகப் போகக் கவர்ந்து இழுக்கும் கோயிலாக இருக்கிறது. பார்க்கப் பார்க்கத் திருப்தியும் அடையவில்லை. இனி நம்பெருமாளின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்து:


ஆண்டாள் கவலையுடன் அமர்ந்திருக்க, ரங்க மன்னார் வருகிறார்.  இதழ்க்கடையில் சிரிப்பு.  குறும்புச் சிரிப்பு.  "என்ன ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! என்ன விஷயம்? "



"ஒன்றுமில்லை;  தீபாவளி வருகிறது.  அப்பா வருவாரா, மாட்டாரா எனத் தெரியவில்லை."

"ஏன், இங்கே உனக்குப் பட்டுப் பட்டாடைகளுக்கு என்ன குறைவு? இவை போதவில்லையா? இந்தப் பெண்களே...............

"போதும் நிறுத்துங்க!  உங்களை விடவும் அலங்காரப் பிரியர் வேறு யார் இருக்கிறார்கள்?  என் கவலையெல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் அப்பாவுக்குச் சீர் தர இயல வேண்டுமே என்பது தான். "



அரங்கன் இளமுறுவலோடு ஆண்டாள் அருகே அமர்ந்தான்.  ஆயிற்று; நாளை தீபாவளி.  மாமனார் வந்து சீர் கொடுக்க வேண்டும், என மாப்பிள்ளை சும்மா இருக்க முடியுமா!  அவனுடைய அடியார்களை எல்லாம் அவன் தானே கவனிக்க வேண்டும். அதோடு அவன் வேறு எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டுமே.  எண்ணெயில் தானே ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி இருக்கிறாள்.  முதல் நாள் இரவே அரங்கன் எண்ணெய்க் கோலம் காண்கின்றான்.  மற்றவங்க எண்ணெய் தேய்த்துக்கிறதுக்கும் அரங்கன் தேய்ச்சுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே.  இங்கே அரங்கன் கோயிலின் பட்டத்து யானையான ஆண்டாள், ரங்கா, ரங்கா எனப் பிளிற, மேள, தாளங்கள் முழங்க அரங்கன் எண்ணெய்க் காப்பு நடக்கிறது.

அப்பாடா! அரங்கனுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் ஒரு நிம்மதி.  இனிமேலே நம்முடைய அடியார்களைக் கவனிப்போம்.  யாரங்கே, ஆழ்வார்களுக்கெல்லாம் எண்ணெய், சீயக்காய், கொண்டு கொடுங்கள்.  அவங்க வீட்டுப் பெண்களை மறக்காதீங்க.  ஆகவே மஞ்சளும் கொடுக்கணும்.

ஆழ்வார்களுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா!  ஆசாரியர்கள், வைணவத்தைப் பரப்பியவர்கள், அவங்களுக்கு?

இதோ, அவங்களுக்கும் தான்.  அதோடு நாளைக்கு அவங்களுக்கெல்லாம் தீபாவளிப் பரிசும் உண்டு. " அரங்கன் அறிவிக்கிறான். இப்போது அரங்கன் ரகசியமாக, மிக ரகசியமாகத் தன் அடியார் ஒருத்தரை அழைத்து, "ரங்க நாயகிக்கு எண்ணெய் அனுப்பியாச்சா?  அவள் படிதாண்டாப் பத்தினி.  அப்புறமாக் கோவிச்சுக்குவா. சேர்த்தித் திருவிழா  அன்னிக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாள். நான் மறந்துட்டேன்னு நினைக்கப் போகிறாள்." என்று கிசுகிசுக்க, ஆண்டாள், "என்ன விஷயம்?" எனக் கேட்க, அரங்கன் மெளனமாகப் புன்னகைக்கிறான்.

மறுநாள் தீபாவளி அன்று தாயார் ரங்கநாயகி, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அனைவரும் எண்ணெய் அலங்காரம் செய்து கொண்டு திருமஞ்சனமும் செய்து கொள்கிறார்கள்.  அரங்கன் மட்டும் தன்னுடைய அர்ச்சா மூர்த்தியான நம்பெருமாளை உசுப்பி விடுகிறான்.  பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் நடந்து புதுசாக ஆடை, அலங்காரம், மாலைகள் முடிந்ததும், நம்பெருமாளுக்கும் நடக்கின்றது.  நம்பெருமாள் உலாக்கிளம்புகிறார்.  ஆனால் கோயிலுக்குள்ளேயே தான்.

"ஆஹா, அப்பா வந்துவிட்டாராமே, அங்கே இப்போது போக முடியுமா? அனைத்துப் பெரியவர்களும் கூடி இருக்கின்றனரே." ஆண்டாளுக்குக் கவலை.


ஆம்,  பெரியாழ்வார் உட்பட அனைத்து ஆழ்வார்களும், ஆசாரியர்களும் அரங்கனின் சேவையைக் காண மூலஸ்தானத்துக்கு நேர் எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே தனியாகப் பிரிந்து காணப்படும் கிளிமண்டபத்தில் எழுந்தருளுகிறார்கள்.  அனைவரும் அரங்கன் வருகைக்குக் காத்திருக்கப் பெரியாழ்வார் நாணய மூட்டைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.  மாப்பிள்ளையான அரங்கனுக்குச் சீராகக் கொடுக்க வேண்டியவை அவை.  அரங்கனோ சாவகாசமாக மூலஸ்தானத்துக்கு எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்திற்கு வந்து மீண்டும் ஒரு அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகிறான்.

பின்னர் தீபாவளிச் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.  பின்னர் பகல் நான்கு மணிக்குப் பெரியாழ்வார் சீராகக் கொடுத்த நாணய மூட்டைகள் அரங்கனைச் சுற்றிப் பெரியாழ்வார் சார்பில் கோயில் அரையர்களால் வைக்கப் படுகிறது.  இந்த நாணய மூட்டையை "ஜாலி" அல்லது "சாளி" என்கிறார்கள்.  இவற்றை ஏற்றுக் கொள்ளும் அரங்கன் தம் மாமனார் பெருமையை உலகறியக் காட்ட வேண்டி இரண்டாம் பிராகாரத்தில் நாணய மூட்டைகளோடு வலம் வருகிறான்.  பின்னர் மீண்டும் கர்பகிருஹத்துக்கு எதிரிலுள்ள சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.

மெல்ல மெல்ல இரவு எட்டு மணி ஆகிறது.  தனக்காகக் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசாரியர்களைக் கிளி மண்டபத்திற்கு வந்து அரங்கன் ஒவ்வொருவராகப்பெயரைச் சொல்லி அழைக்க, ஒவ்வொருவருக்கும் அரங்கன் சார்பில் தனியாக மரியாதை செய்யப் படுகிறது.  அரங்கனின் மரியாதையைப் பெற்றுக்கொண்ட ஆழ்வார்களும், பதில் மரியாதையைப் பெற்றுக் கொண்ட பெரியாழ்வாரும் அரங்கனிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு தத்தம் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.  ஆனாலும் கூடி இருக்கும் மக்களுக்காக அரங்கன் இன்னும் சிறிது நேரம் அங்கே சேவை சாதிக்கிறான்.  நேரம் ஆவதைக் குறித்துக் கவலை இல்லாமல் பக்தர்களுக்கு சேவை சாதித்துவிட்டுப் பின்னர் அரங்கன் தன் தீபாவளிக் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கிறான்.

ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். "என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?"

"சுவாமி, தங்கள் கருணையே கருணை!" ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி: தினமலர்

Wednesday, November 14, 2012

அப்பு டேட்ஸ்! புத்தம்புதியது!

அப்புவுக்கு நாங்க ஸ்ரீரங்கம் வந்ததிலே இருந்து கவலை.  சென்னை இந்தியாவிலே தாத்தா, பாட்டி இருந்தவரைக்கும் துணைக்கு பாட்டியோட பிக் பிரதரும், பேபி பிரதரும் இருந்தாங்க.  மும்பை இந்தியாவிலே கல்யாணிப்பாட்டிக்குத் துணைக்கு மோகன் அங்கிள் இருக்கார். ஆனால்  இங்கே இந்த இந்தியாவிலே (ஊர் பேரு சொல்லத் தெரியலை இன்னமும்) தாத்தா, பாட்டிக்குத் துணைக்கு யாருமே இல்லையே!  தே ஆர் அலோன்!  ஹு வில் டேக் கேர் ஆஃப் தெம்? அப்படினு ஒரே கவலையாம்.  அது குட்டியா இருக்கிறதாலே அதாலே வந்து கவனிச்சுக்க முடியாதாம்.  அதனால் அவங்க அக்காவைப் போய்ப் பார்த்துக்கச் சொல்லிட்டு இருக்காம். :)))))

இந்த வருஷம் தீபாவளிக்கு கம்பி மத்தாப்பு விட்டிருக்கு.  அவங்க அப்பா ஃபோட்டோ எடுத்து அனுப்பி இருக்கார்.  தீபாவளின்னா, மத்தாப்பு விடணும்னு தெரிஞ்சு வைச்சுண்டு அவங்க அப்பாவை வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கு. இப்போ அவங்களும் ஹூஸ்டனுக்கே வந்தாச்சு.  புது ஊர், புது இடம், புது ஸ்கூல் எல்லாமும் பிடிச்சிருக்காம். 

Tuesday, November 13, 2012

துலாக்காவிரியில் ஸ்நானம்!


ஐப்பசி மாதத்தைத் துலா மாசம்னு சொல்வாங்க.  காவிரி (இ.கொ.கவனிக்க) பிறந்த மாதம்.  இந்த மாதம் முழுதும் காவிரி ஸ்நானம் விசேஷமானது.  நம்பெருமாளுக்குக் கொள்ளிடக் கரையிலிருந்தே திருமஞ்சன தீர்த்தம் போகும் தினம் தினம்.  ஆனால் இந்தத் துலா மாதம் மட்டும் அம்மாமண்டபம் காவிரிப் படித்துறையில் இருந்து காலையிலே ஐந்தரை மணிக்கு ஆண்டாளம்மாள் தலையிலே தங்கக் குடத்திலே நீர் எடுத்துட்டுப் போவாங்க. இந்த ஆனை ஆண்டாளம்மா இல்லை.  அவங்க இன்னிக்குக் கோயிலில் நம்பெருமாளோட பிசியா இருக்காங்க. இவங்க வெளியிலே இருந்து வந்திருக்காங்க. 

நடுவிலே காவிரியில் தண்ணீரை நிறுத்தி இருந்தாங்க.  அதனால் காவிரி ஸ்நானக் கூட்டம் கம்மியாக இருந்தது.  இப்போ மீண்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப் பட்டிருக்கிறது.  நாளைக்குக் கடைமுகம் என்பதால் என நினைக்கிறேன்.  இன்னிக்கு நம்ம ரங்க்ஸ் அங்கே தான் குளிப்பேன்னு பிடிவாதம் பிடிச்சுக் கிளம்பிட்டார்.  நான் வீட்டிலேயே கங்கா ஸ்நானம் பண்ணிட்டேன்.  ஆனாலும் விடாப்பிடியாகக் கூடப் போய்ப் படங்களை எடுத்துட்டு வந்தேன்.  துலாபுராணம், கடைமுழுக்கு, முடவன் முழுக்கு போன்றவை பற்றிய செய்திகள் பின்னர்.  இன்னிக்கு இது வரை மின்சாரமும் போகலை.  அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம். :)))))




காவேரி தான் சிங்காரி! (இ.கொ.ஸ்பெஷல்) சிங்காரி தான் காவேரி!  கண்ணால் கண்டவள் காவேரி, கருத்தில் நின்றவள் சிங்காரி!

பக்ஷணம் சாப்பிட வாங்க! படங்களோட பார்க்கலாம்.


மைசூர்ப் பாகு புரையோடி இருந்தால் தான் எங்க வீட்டிலே அதை மைசூர் பாகுனு ஒத்துப்பாங்க.  இந்த வருஷம் நெய்யும் என்னமோ பத்தலை.  ஆனாலும் சாப்பிடறாப்போல் தான் இருக்கு. 


வில்லை போட்டதிலே உள்ளே கூடு கூடாய் இருக்கு பாருங்க.  இதன் மைசூர்பாகு ஒரிஜினல். :)))) கிருஷ்ணா ஸ்வீட்ஸெல்லாம் விக்கிறது மைசூர்பா.  மைசூர்பாகு இல்லை. :P :P :P :P


தீபாவளிக்கு முன்னெல்லாம் பக்ஷண வகையறாக்களே நிறைய இருக்கும்.  இப்போ இரு வகைத் தேன்குழலும் மைசூர்பாகும் மட்டும்.  சின்னத் தூக்கில் மருந்து.  பழங்கள், பூ வைக்க மறந்திருக்கேன். :( பலகையில் எண்ணெய் காய்ச்சிப் பக்கத்திலே சீயக்காய், மஞ்சள் கலந்து வைக்கணும்.  வைச்சாச்சு. இன்னொரு பக்கம் துணிமணிகள்.  நிறையத் துணி மணி வைச்ச இடத்திலே இப்போ என்னோட புடைவை மட்டும்.  அதனால் இரண்டு புடைவையானும் வைச்சுடுவேன். :)))) வேலை செய்யறவங்க எல்லாம் பணமாக் கேட்டதாலே அவங்க மனம் நிறையும் வண்ணம் பணமாக் கொடுத்தாச்சு.





குளிச்சுட்டு வந்ததும்  நிவேதனத்துக்குத் திறந்தது.  இடப்பக்கம் இருப்பது உளுத்தமாவு தேன்குழல்.  வலப்பக்கம் இருப்பது முள்ளுத் தேன்குழல்.  பக்கத்திலே மைசூர்பாகு.
பாலும் நல்லவேளையா சீக்கிரமா வந்தது.  வேஷ்டி அருகே சின்னத் தூக்கில் தீபாவளி மருந்து. 





நிவேதனம் முடிஞ்சாச்சு.  ராமர் வயிறு நிறைஞ்சுடுத்துனு சொல்லிட்டார்.  கீழே மஹாவிஷ்ணுவும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராப் போதும், போதும்னு சொல்லிட்டார்.  

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.


Monday, November 12, 2012

"ஒளி"மயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்!

கடும் மின்வெட்டையும் மீறி தீபாவளிக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன.  இன்று இங்கே ஒரு மணிக்கு ஒரு முறை மின்சாரம் போயிடுது. ஆகவே ஒரு பின்னூட்டத்துக்கு பதில் சொன்னாலோ அல்லது ஒரு பதிவு படிக்க ஆரம்பித்தாலோ அதை முடிக்க முடியறதில்லை.  இப்போ ஒன்றேகால் மணி நேரமாக மின்சாரம் இருக்கு.  எப்போப் போகும்னு தெரியலை. :(  சென்னையில் தி.நகரில் மற்றும் உள்ள கடைத்தெருக்களில் மின்சாரம் எப்படி ஜகஜ்ஜோதியாக இருக்கிறது என்பதை நண்பர் ஒருத்தர் சுட்டிக் காட்டி இருந்தார்.  அதை எல்லாம் கொஞ்சம் குறைச்சிருந்தாலே சேலம், ஈரோடு, திருப்பூர்ப் பகுதி நெசவாளிகளுக்கு ஐந்து மணி நேரமாவது மின்சாரம் கொடுத்திருக்கலாம்.  மின்சாரமே இல்லாமல் விலையில்லா மிக்சி, கிரைண்டர் எதுக்குக் கொடுக்கிறாங்கனும் புரியலை. :(((

இவ்வளவு மோசமானதொரு நிலைமையை இது வரை பார்த்ததில்லை.  நேற்று தினசரியில் மின் வெட்டு இன்னும் அதிகம் ஆகும் என்கிறார்கள்.  அதோடு காற்றாலை மின்சாரம் வெளிமாநிலங்கள் கூடுதல் விலை தருவதால் அங்கே விற்று விடுகிறார்களாம்.  தமிழக அரசு அந்த விலை கொடுக்க மறுக்கிறது போலிருக்கு. :(((  போர்க்கால நடவடிக்கையாக ஏதேனும் செய்ய வேண்டும்.  அதற்குக் கடவுள் தான் ஆள்பவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.  இந்த மின்சாரக் கொடுமையால் வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.  எல்லாருக்கும் கொடுக்கிறது என்பதெல்லாம் நம்மால் நிச்சயம் இயலாது.  நம் அருகே இருப்பவர்களில் மிகக் கஷ்டப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து உதவி செய்வோம்.

இந்த மின்வெட்டுப் புராணம் இனி தொடராமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய ஒளி வீசும்  எப்போதும் ஒளிமயாக  இருக்கும்படி பிரார்த்தித்துக்கொண்டு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, November 11, 2012

உங்க வீட்டிலே தீபாவளி வந்தாச்சா? தீபாவளி நினைவலைகள்!


உங்க வீட்டிலே தீபாவளி வந்தாச்சா?  இது தீபாவளி சமயத்தில் அக்கம்பக்கம் ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுக்கும் கேள்வி.  புதுத் துணி வாங்கினால் மட்டும் தீபாவளி வந்துடாது.  பக்ஷணங்களும் பண்ண ஆரம்பிக்கணும். பட்டாசு வகையறாக்களும் வரணும்.  எல்லாம் இருந்தால் தான் தீபாவளி வந்தாச்சுனு சொல்லுவாங்க. இப்போல்லாம் நாங்க ஒரு தீப்பெட்டி மத்தாப்புக் கூட வாங்கறதில்லை. புகை அலர்ஜி என்பதோடு குழந்தைங்களோட சேர்ந்து தீபாவளி கொண்டாடிப் பல வருடங்கள் ஆகிறது என்பது முக்கியக் காரணம். போன வருஷம் ஹூஸ்டனில் இருந்தோம் தான்.  ஆனால் அங்கே இப்படி எல்லாம் பட்டாசு வெடிச்சுக் கொண்டாட முடியாது.  எங்களுக்காகப் பையரும், மாட்டுப் பெண்ணும் லீவ் போட்டுவிட்டுக் காலம்பர எழுந்து எண்ணெய் ஸ்நானம் செய்து கொண்டு, புது உடைகளைப் போட்டுண்டாங்க. நாங்க இல்லைனா வீக் என்ட் தீபாவளிதான். :))))

இந்த வுருஷம் தீபாவளி பர்சேஸ் பத்தி எழுதலையேனு ஜெயஸ்ரீ கேட்டிருக்காங்க. அப்படி ஒண்ணும் சுவாரசியமா நடக்கலை.  விஜயதசமி அன்னிக்குப் புதிய பொருள் ஏதானும் வாங்கற வழக்கம்.  அந்த வழக்கப் படி அன்னிக்குக் காலம்பர கடைக்குப் போய் ஒரு சில்க் காட்டன் புடைவை எடுத்துக் கொண்டேன். அவ்வளவு தான்.  பெரும்பாலான தீபாவளிகளில் உடல் நலமில்லாமல் படுத்திருந்தாலும் சின்ன வயசிலே தீபாவளி என்றால் கொண்டாட்டம் தான். ஸ்கூல் இரண்டு நாட்கள் முன்னாடியே லீவ் விடுவாங்க.  கிறித்துவப் பள்ளி தான் ஆனாலும் தீபாவளிக்கு ஐந்து நாட்கள் லீவ் இருக்கும்.  அந்த ஐந்து நாட்களுக்கும் சேர்த்து ஹோம் வொர்க்கும் கொடுத்திருப்பாங்க.  பக்ஷண வாசனையிலே ஹோம் வொர்க் பண்ணறதுக்கே மனசு வராது.  பண்ணலைனா தீபாவளிக் கொண்டாட்டத்திலே மனசு போகாது.  ஆகவே ஸ்கூல்லே இருந்து வந்ததும், வராததுமா ஆரம்பிச்சா அன்னிக்கு ராத்திரியும், மறுநாள் காலம்பரயும் ஆணி அடிச்சாப்போல் உட்கார்ந்து ஹோம் வொர்க்கை முடிச்சுடுவேன்.  அதுக்கப்புறமா தீபாவளிக்குச் செய்யும் பக்ஷணங்களை ருசி பார்ப்பது.  செய்யறச்சேயே சாப்பிட்டால் அப்பாவுக்குப் பிடிக்காது.  ஆகையால் அவருக்குத் தெரியாமத் தான் எடுத்துக்கணும். ரகசியமா ஒளிச்சு வைச்சுண்டு சாப்பிடறதும் ஒரு தனி ருசி தான்.  தம்பியோ அண்ணாவோ வந்தால் நைசா எங்களுக்கும் எடுத்துண்டு வானு அனுப்புவாங்க.  சில சமயம் மாட்டிக்கிறதும் உண்டு.

தீபாவளிக்கு நல்ல துணியாகவே எடுத்திருப்பார் அப்பா.  படிக்கப் புத்தகம் கேட்டால் கிடைக்காது.  ஆனால் தினுசு தினுசாகப் பாவாடை, சட்டைகள், தாவணிகள் இருக்கும்.  தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னாடியே கடைகளை அலசி அந்த வருஷம் என்ன புது மாடல்னு அப்பா கண்டு பிடிச்சுண்டு வந்துடுவார்.  புடைவை கட்டிக்க ஆரம்பிச்சதும் கூட அப்படித்தான்.  அந்த வருஷப் புது டிசைன், கலர் எல்லாம் கேட்டு வைச்சுண்டு வருவார்.  அதன்படியே தீபாவளிக்கு எடுக்கறதும் உண்டு.  அப்பா மட்டும் போனால் ஒரே டிசைனில் வெவ்வேறு கலர்களில் பாவாடைகளை வாங்குவார்.  ஒரு வருஷம் சாடின் பாவாடை எடுத்தப்போ மெஜன்டா கலரில் ஒண்ணும், ஆகாய நீலத்தில் ஒண்ணுமா இரண்டு பாவாடைகள் ஒரே மாதிரி எடுத்துட்டார்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேறே வழியே இல்லை;  அப்பா வாங்கினால் வாங்கினதுதான்.  கொஞ்சம் விபரம் தெரிஞ்சதும்  நான் பிடிவாதம் பிடிச்சுக் கூடப் போவேன். வெவ்வேறு டிசைனில் பாவாடைகளை வாங்கிப்பேன். தீபாவளிக்கு எப்போவுமே ஒரே ஒரு செட் டிரஸ் என்பதும் இல்லை.  இரண்டாவது இருக்கும்.  இன்னொண்ணைக் கார்த்திகைக்குனு வைச்சுப்பேன். ஆக எது எப்படிப் போனாலும் உடைகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை.  தீபாவளி டிரஸ்ஸை ஸ்கூலுக்குப் போட்டுக் கொண்டு போவதில் சந்தோஷமா இருக்கும்.  விலை அதிகமாகப் பட்டுப்பாவாடை அப்படினு எடுத்திருந்தா பஸ்ஸிலே போகணும், வேண்டாம்னு சொல்லுவாங்க.  சரி, சரினு தலையை ஆட்டிட்டு, ஸ்கூல் கிளம்பறச்சே அவசரமாகப் பட்டுப்பாவாடையைக் கட்டிண்டு அப்பாவோ, அம்மாவோ கவனிக்கிறதுக்குள்ளே ஓட்டமாக ஓடுவேன்.

தீபாவளிக்குப் பட்டாசு பிரிக்கிறது தீபாவளிக்கு முதல் நாள் தான் நடக்கும்.  முதல்லே எல்லாம் இரண்டே ரூபாய்க்குப் பட்டாசுகள் வாங்கிட்டு இருந்தார் அப்பா.  அதுவும் சென்ட்ரல் தியேட்டர் எதிரே இருந்த வி.சூ.சுவாமிநாதய்யர் கடையிலே தீபாவளிப் பட்டாசுக் கடை ஸ்பெஷலாப் போடுவாங்க.  அங்கே தான் வாங்குவார்.  தீபாவளிக்கு முதல்நாள் வாங்கறதாலே அவங்க ஸ்டாக் தீரும் சமயமா இருக்குமா, மிச்சம் இருக்கிறதை எல்லாமும் சில சமயம் கொடுத்துடுவாங்க.  அப்படி ஒரு வருஷம் ஏரோப்ளேன் வாணமும், அணுகுண்டு எனப்படும் வெடியும் கிடைச்சது. அப்பா தான் பட்டாசு பங்கு பிரிப்பார்.  என்னை வெடி வெடிக்கக் கூடாதுனு சொன்னாலும் நான் வெடிகள் எனக்கும் வேணும்னு சொல்லி வாங்கி வைச்சுப்பேன்.  நாலு பங்கு போட்டுத் தனக்குனு ஒரு பங்கு வைச்சுப்பார் அப்பா.  அது எதுக்குனு முதல்லே புரியாமல் இருந்தது.  அப்புறமா கார்த்திகைக்குனு தனியா எடுத்து வைக்கிறார்னு புரிய வந்தது.  எங்க வீட்டிலே பட்டாசு வெடிச்சுட்டு எதிரே இருக்கும் பெரியப்பா வீட்டுக்கும் ஓடுவேன்.  அங்கே பெரியப்பா பெண் எனக்கு அக்கா, அவளுக்குப் பட்டாசு வெடிக்க பயம்.  அதனால் பெரியப்பா என்னை அவளுக்காகப் பட்டாசு வெடிச்சுக் காட்டச் சொல்லுவார்.  அவளுக்காக வாங்கி இருக்கும் பட்டாசுகளையும் நான் தான் வெடிப்பேன். அண்ணாவுக்கும், தம்பிக்கும் பெரியப்பா தனியாக் கொடுத்திருப்பார்.   அதுக்கப்புறமா ஐந்து ரூபாய்க்குப் பட்டாசுகள் வாங்கி, என் கல்யாணத் தலை தீபாவளிக்கு என் தம்பிக்கு நாங்க 25 ரூபட்டாசுக்குனு கொடுக்கவும், அவருக்கு மயக்கமே வந்தது.

அப்புறமா எல்லார் வீட்டுக்கும் பக்ஷணங்கள் கொண்டு கொடுத்துட்டு நமஸ்காரம் பண்ணப் போவோம்.  தாத்தா(அம்மாவோட அப்பா) வீடு ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்தது.  முதல்லே அங்கே போயிட்டு, அங்கே இருந்து அத்தை வீடு போவோம். சில சமயம் அத்தை வீட்டிலேயே சாப்பிடச் சொல்லுவாங்க.  அங்கே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கிட்டு, தீபாவளி மலர்கள் பார்த்துட்டுச் சாயந்திரமா இன்னொரு பெரியப்பா வீடு லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும்.  அங்கே போயிட்டு வருவோம்.  அப்பா ஹிந்தி சொல்லிக் கொடுத்த தங்கம் தியேட்டர் அதிபர் கண்ணாயிரம் வீட்டுக்கும் போவோம்.  அவர் புதுரகப் பட்டாசுகளைக் கொடுப்பார். அதுக்கப்புறமா வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்குப் போவோம்.  கோயில்களும் அப்போல்லாம் இரவு பதினோரு மணி வரை திறந்திருக்கும்.  மீனாக்ஷி கோயிலில் பல சமயம் பள்ளியறை தீபாராதனை பார்த்துட்டு வீட்டுக்கு வந்திருக்கோம்.  இப்போல்லாம் ஒன்பது மணிக்கே கோயில்கள் நடை சார்த்தப் படுகின்றன.  கோயில்லேருந்து வந்ததும் தீபாவளிக் கொண்டாட்ட அலுப்புத் தீரத் தூக்கம் தான்.  இத்தனைக்கும் அன்று நேரம் இருந்தது.  அதான் எப்படினு புரியலை. :)))))

Saturday, November 10, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது! தொடர்ச்சி


லதாவின் கல்யாணத்திற்காகப் பார்த்துப் பார்த்து சீர் வரிசைகளை வாங்கி  இருந்தாள் ராதா.  ஆனாலும் அவை அனைத்தும் ராதாவின் தூண்டுதலால் வாங்கியது என்பதை லதா ஒத்துக்கொள்ளாததோடு அகிலாண்டத்திடமும் சொன்னாள்.  அண்ணா பார்த்து வாங்கினால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் என்றோ அண்ணா தான் இதை வாங்கணும்னு சொல்லி இருப்பார் என்றோ ஏதேனும் சொல்லி ராதாவின் முக்கியத்துவத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்தாள்.   ராதா கல்யாண வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததுக்குக் கூட அவள் மத்தவங்க கிட்டே நல்ல பேர் வாங்கறதுக்காக இப்படி எல்லாம் நடந்து கொள்வதாய்க் கூறினாள்.  மொத்தத்தில் ராதாவுக்கு எவ்விதத்திலும் நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தாள்.  ரம்யாவைக் கண்டாலே ஆகவில்லை அவளுக்கு.  ஏனோ இனம் தெரியாத பொறாமை வந்தது அவளைக் கண்டால்.  ஆகவே தன் கல்யாணத்தில் ரம்யாவிற்குப் பட்டுப்பாவாடை எடுப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தாள்.  ஆனால் அகிலாண்டம் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்துவிட்டாள்.  இந்த அம்மா ஏன் ராதாவின் பெண்ணிடம் இத்தனை பாசமாக இருக்கிறாள் என லதாவுக்குக் கோபம் வந்தது.  இவள் பிறக்கலை என்றால் எனக்கு இன்னமும் கிடைத்திருக்குமே என்ற எண்ணத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.

கல்யாணம் ஆகிப் போன லதா தன் புக்ககத்து மனிதர்களிடமும் மன்னியான ராதாவைப் பற்றி நல்ல வார்த்தையாகக் கூறவில்லை என்பது அங்கே போன இரண்டொரு முறைகளிலேயே ராதாவுக்குப் புரிந்து விட்டது.  ஆகவே அங்கே செல்வதையே தவிர்த்தாள் அவள்.  ரம்யாவும் வளர்ந்து வந்தாள்.  ஓரளவு நன்றாகவே படித்தாள் என்று சொல்லலாம்.  அவள் படித்து முடித்ததும் வேலைக்குப் போக முயன்ற போது அகிலாண்டத்துக்கு அது இஷ்டம் இல்லை.  தன் பெண் பேருந்திலும், ரயிலிலும் அடிபட்டு வேலைக்குச் செல்லவேண்டுமா!  அவள் சம்பாதித்துத் தான் குடும்பம் நடக்கணுமா!  இந்த ராதாவுக்கு ஏன் இப்படிபுத்தி போகிறது என்றெல்லாம் யோசித்தாள்.  அதைத் தடுக்கவும் முயன்றாள்.  ஆனால் ரம்யாவுக்கு நல்ல வேலையாகக் கிடைக்கவே சந்துருவுக்கு அதை விட இஷ்டமில்லாமல் அவளை வேலைக்குப் போகச் சொன்னான்.  வேலைக்குப் போய் முதல் மாதச் சம்பளத்திலும் கூடப் பாட்டி என நினைத்த அகிலாண்டத்துக்கே முன்னுரிமை தந்தாள் ரம்யா.  ரத்தபாசம் என்பதால் இயல்பாக வந்துவிடும் போலிருக்கு;  நாம் என்ன ஆனாலும் இந்த வீட்டில் தனி தானே என்ற எண்ணம் தோன்றியது ராதாவுக்கு.

நாள் ஆக, ஆக, தனக்கென ஒரு குழந்தை இல்லையே என்ற எண்ணம் ராதாவை உருக்கியது.  அவள் உடலும், உள்ளமும் உருகிக் கொண்டு ரம்யாவின் மேல் உள்ள வளர்த்த பாசத்தைக் காட்டினாலும் அவள் எதிர்ப்பைக் கண்டு மனம் நொந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டி வந்தாள்.  அப்போது தான் ரம்யா தன் உடன் வேலை பார்க்கும் ஒரு இளைஞனை விரும்புவது அவள் தோழி வனிதா  மூலம் தெரிய வந்தது.  உடனே அந்தத் தோழியையே அவள் அம்மா மூலம் விசாரிக்கச் சொல்லிச் சந்துருவின் காதுக்கும் தெரியப் படுத்தினாள் ராதா.  ராதா தனக்காக இத்தனையும் செய்தும் அவளை உதாசீனம் செய்தாள் ரம்யா.  சின்ன வயசிலே என்னைப் பாடாய்ப் படுத்தி காலங்கார்த்தாலே எழுப்பி உட்கார வைத்து......ஹூம் இவளும் ஒரு அம்மாவா!  எல்லா அம்மாக்களும் இப்படித்தான் இருக்காங்களா என்ன! என்னைப் பெத்த அம்மாவானா என்னை எத்தனை செல்லமா வளர்த்திருப்பாள்!  எனக்கு நல்லதுனு நினைச்சு அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் பண்ணச் சொல்றாளே!  இப்போக் கூட என்னைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா  அவளுக்கு வசதினு தானே நினைக்கிறா.  இருக்கட்டும், இந்தக் கல்யாணத்தைச் சாக்காக வைத்தே இவளை நான் ஒரு வழி பண்ணிடறேன்.  எல்லார் முன்னாலேயும் என் அம்மா யார்னு சொல்ல வைக்கிறேன்.  ரம்யாவுக்கு ஆத்திரம் பொங்கியது.  எனக்கு ஏன் இந்த நிலைமைனு மனம் கலங்கிப் போனாள்.

ஆனால் அதற்காகத் தான் காதலித்த நபரை விட்டு விட்டு வேறுஒருத்தனை மணக்கவும் இஷ்டப் படவில்லை.  ஆகையால் கல்யாண ஏற்பாடுகளுக்கு எல்லாம் வாய் மூடிச் சம்மதம் தெரிவித்தவள்.  கல்யாண நாள் நெருங்க, நெருங்க ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.  அது தான் ராதா தனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க அம்மா என்ற முறையில் மணமேடையில் இருக்கக் கூடாது என்பதே.  அதற்குப் பதிலாக சித்தப்பா, சித்தி இருக்கட்டும்.  இல்லைனா அப்பாவான சந்துருவே தனியாகக் கல்யாணம் பண்ணி வைக்கட்டும்.  என்ன ஆனாலும் ராதா அந்தக் கல்யாணத்தில் பங்கெடுக்கக் கூடாது.  அப்படிப் பங்கெடுத்தால் தான் தன் காதலனோடு ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக் கொள்வதாய்ச் சொல்லி விட்டாள்.  ராதாவுக்குக் கண்ணீர் பொங்கியது.  என்ன தான் மனோதிடம் இருந்தாலும் ரம்யாவின் வாயிலிருந்து இப்படி ஒன்று வரும் என எதிர்பார்க்கவில்லை.  அகிலாண்டத்திடம் ஓடினாள்.  ரம்யாவின் விருப்பத்தைச் சொல்லி அவளைச் சமாதானம் செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். ஆனால் அகிலாண்டமோ உள்ளூர சந்தோஷம் கொண்டவளாகவே தெரிந்தது.

"ஆமாம், அவள் சொல்றது சரிதானே, நீ தான் மலடியாச்சே.  உன் கையாலே தாரை வார்த்தால் நாளைக்கு அவங்க குடும்பம் வாரிசில்லாமல் போயிட்டா?  சின்னப் பெண்ணாக இருந்தாலும் அவள் கோபத்திலே சொன்னாலும் சொன்னது சரிதான்."

"அவளுக்கு உண்மை தெரியாது அம்மா.  ஏதோ ஆத்திரத்தில் சொல்கிறாள்."  ராதா மீண்டும் கெஞ்சினாள்.

"அவளுக்கு ஏன் உண்மை தெரிய வேண்டும்!  இப்படியே இருந்துட்டுப் போகட்டுமே. உனக்கு என்ன!  நீ கல்யாணத்திலே என்ன பண்ணப் போறே.  பேசாம ஒரு மூலையிலே இருந்துண்டு உன்னை நமஸ்காரம் பண்ணினா ஆசீர்வாதம் பண்ணிக்கோ. அவ்வளவு தான்.  உன் ஓர்ப்படி தான் கன்யாதானம் பண்ணட்டுமே!"  என்றாள்.

ராதாவின் நிலைமையைப் பார்த்துக் கவலையுற்ற சந்துரு என்ன விஷயம் என விசாரிக்கப் போகத் தம்பி மூலம் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தான்.  இனியும் தான் சும்மா இருக்கக் கூடாது என எண்ணிக் கொண்டு ரம்யாவைத் தனியாகப் பார்த்து விஷயங்களைச் சொல்ல ஏதுவாக எழுதப் பட்டிருந்த டயரிக் குறிப்புகளைக் கொடுத்தான்.
*********************************************************************************

அத்தனையையும் படித்த ரம்யா தான் எவ்வளவு சுயநலமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள்.  ராதா உண்மையில் நாத்தனாரான தனக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறாள் என்பதும் அவள் மனக்கண்களில் தோன்றியது. தன் தாய் செய்தது சரியில்லை என்பதும் அவள் மனதில் உறைத்தது.  தாய்க்குத் தன் தவறும் புரிய வேண்டும்.  அதே சமயம் இந்த விஷயம் தெரிந்த ஓரிருவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியவும் கூடாது.  ராதா தன் அம்மா இல்லை என்ற விஷயம் யாருக்கும் தெரியாமலே போகட்டும். அதற்குத் தான் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொண்டாள்.


அடுத்த பதிவிலே முடிச்சுட மாட்டேன்! :))))

Wednesday, November 07, 2012

மின்சாரத்தைக் கண்டு பிடித்துக் கொடுங்கள்!

மின்சாரம் என்பது எழுதிப் பார்க்க வேண்டிய ஒன்றாக ஆகிவிட்டது கடந்த இரண்டு, மூன்று நாட்களாக.  காலை மூன்று மணி நேரம், மதியம் மூன்று மணி நேரம் போக இரவில் ஒரு மணிக்கொருதரம் என்றிருந்தபோது எப்படியோ சமாளித்தாயிற்று.  இப்போ நாளில் ஒன்றரை மணி நேரமே மின்சாரம் கிடைக்கிறது.  இரவில் கேட்கவே வேண்டாம். இந்த அழகில் என்னத்தை எழுத! இப்போ இரண்டே கால் மணிக்கு வந்திருக்கு.  எத்தனை நிமிஷமோ!  அதுக்குள்ளே வீட்டுக்கு வேண்டியதையும் செய்துக்கணும். எல்லாம் கடந்து போகும் தான்.  ஆனால் இது?? எப்போக் கடக்கும்? புரியலை. மேலே உள்ளவன் தான் பதில் சொல்லணும். நாங்களாவது பரவாயில்லை.  இன்வெர்டர் இருக்கு.  குறைந்த பக்ஷமாக விளக்கும், மின்விசிறியும் போட்டுக்கலாம்.  எல்லா நடுத்தர வர்க்கத்தினராலும் இன்வெர்டர் வாங்க முடியுமா?  இப்போன்னு அதுக்கு விலையும் அதிகம் வைத்து விற்கின்றனர்.  ஏழை ஜனங்கள்? சின்னச் சின்னத் தொழிற்கூடங்கள் வைத்திருப்பவர்கள்? அதில் வேலை பார்ப்பவர்கள்? அவங்கல்லாம் என்ன செய்வாங்க?  இன்வெர்டரும் சார்ஜ் ஆக மின்சாரம் வேண்டும்.  இப்படியே இருந்தால் இன்வெர்டரும் தகராறு செய்ய ஆரம்பிக்கும்.  என்னதான் நடக்கப் போகிறதோ, ஒண்ணும் புரியலை!

இன்னிக்குக் காலம்பர கையிலே ப்ளேடால் வெட்டிக் கொண்டதில் தட்டச்ச முடியலை.  நடுவிரலில் ஆழமான வெட்டு.  பான்ட் எய்ட் போட்டிருக்கேன். எல்லாம் இந்த மின்சாரக் குழப்பம் தான். :))))) 

Monday, November 05, 2012

எங்கே பயிர் செய்வோம்? நிலத்திலா, கான்க்ரீட் காட்டிலா?

அப்பாதுரையின் பின்னூட்டம்:

நான் பொதுவாகச் சொன்னேன். கரென்ட் கட் தமிழ்நாட்டில தானே? குஜராத் போனா இதையெல்லாம் பயன்படுத்தாம இருப்பீங்களா? மக்கள் இருப்பாங்களா? நான் சொல்ல வந்தது - வசதிக்கேற்றபடி நம் மனநிலைகள் மாறுகிறது என்பதை. மாற்றத்தை மாற்றமாகப் பார்க்காமல், தன்னிலைப் படுத்திப் பார்க்கையில் சில மாற்றங்களை ஏற்க முடியாது போகிறது. சுய கண்ணோட்டத்தை விடுத்த புறப்பார்வையில் மாற்றங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. குடியிருக்க வீடு தானே தேவை - வாடகை வீட்டில் இருக்கலாமே? வானமே கூரை என்று கூட தேவைப்படும் பொழுது சொல்கிறோமே? கதை என்ற வகையில் உணர்வுகளைத் தட்டிச்செல்கிறது. ஆனால் இதை யதார்த்தப் பார்வையில் பார்க்கையில் பிள்ளையின் செயலில் தவறே இல்லை - பெரியவரின் பார்வையில் சுயநலமே தெரிகிறது.





அப்பாதுரை, மின் தடை இல்லாத மாநிலமே இந்தியாவிலே இல்லைனு சொல்லணும்.  சமீபத்தில் டெல்லி போயிருந்தேனே.  மைத்துனன் வீடு ஹரியானா-டெல்லி பார்டரில் இருக்கும் குர்காம் என்னும் நகரம். சாடிலைட் சிடி என்ற பெயர் தான்.  ஆனால் மின்சாரம் வந்தாத் தான் நிச்சயம்.  வீட்டுக்கு வீடு ஜெனரேட்டரும், ஹை பவர் இன்வெர்டரும் ஓடிக்கொண்டே இருக்கும்.  மஹாராஷ்ட்ராவின் உள் நாட்டுப் பகுதியிலும் ஜெனரேட்டர் இல்லாத வீடே இருக்காது.  மின்சாரத்தில் தன்னிறைவு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இல்லை.  குஜராத் விதி விலக்கு. அங்கே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது காங்கிரஸாக இருந்தாலும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும் மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் தலைவர்கள்.  ஒத்துழைக்கும் மக்களும் கூட.  குஜராத் கலவரம் தான் ஒரு கறுப்புப் புள்ளி.  மற்றபடி என்றுமே குஜராத் முன்னணியில் தான்.  தாய்மொழியில் பாடம், பெண்களுக்கு இலவசக் கல்வி, பெண்களுக்கு முன்னுரிமை என எல்லாவற்றிலும் ஒரு உதாரண மாநிலம்.  ஐந்து வருடங்கள் குஜராத் வாழ்க்கையில் இரவு பத்து மணிக்குக் கூடத் தன்னந்தனியாக நவராத்திரிக்குப் போயிட்டுத் திரும்பி இருக்கேன்.  எங்க பெண்ணும் அம்மாதிரியே தனியாகவே போவாள்.  எந்தவிதமான பயமும் இருக்காது. குஜராத்தில் இருக்கறச்சேயும் அம்மி, கல்லுரல் என்னோட இருந்தது.  குஜராத் என்ன, ராஜஸ்தான் போனப்போவும் அம்மி, கல்லுரல் என்னோடத் தான் வந்தது.  மற்ற மக்களைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்.  அவரவர் விருப்பம், செளகரியம்.

 //மாற்றத்தை மாற்றமாகப் பார்க்காமல், தன்னிலைப் படுத்திப் பார்க்கையில் சில மாற்றங்களை ஏற்க முடியாது போகிறது. சுய கண்ணோட்டத்தை விடுத்த புறப்பார்வையில் மாற்றங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.// 

மாற்றம் என்பது ஒன்றைச் சுத்தமாய் அடையாளமே இல்லாமல் அழிப்பது இல்லை. இப்போது எங்காவது இரண்டு கட்டு வீடு, மூன்று கட்டு வீடுனு பார்க்க முடியுமா?  முடியாது.  ஆனால் அதன் பின்னர் வந்த வீடுகளும் அந்த அளவுக்குப் பாரம்பரிய முறையில் கட்டப்படாவிட்டாலும், வெராந்தா, ஹால், சாப்பாடு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறைனு இருந்தது.  இப்போது அதுவும் போய் எல்லாமும் ஐநூறு சதுர அடிக்குள்ளாகப் பறவைக் கூண்டில் இருப்பது போல் இருக்கிறார்கள்.  இம்மாதிரிப் பாரம்பரிய வீடுகளை மேல்நாட்டில் அடியோடு இடித்துத் தள்ள முடியுமா?  இதிலே சுய கண்ணோட்டமோ, தன்னிலைப் படுத்துதலோ எதுவும் இல்லை. பணம் ஒன்'றே பேசுகிறது.  அது கொடுக்கும் செளகரியங்கள் மக்களை மாற்றுகிறது.  பின்னர் உணவுக்கும் குடிநீருக்கும் எங்கே போவார்கள்? ஐந்து, ஆறு பேர் இருந்த வீட்டில் அது அடுக்குமாடிக் குடியிருப்பாக ஆனதும் குறைந்தது நாற்பது பேர் குழந்தைகளும், பெரியவர்களுமாக வசிக்கையில் எல்லாவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்படுமே!  அவங்க கழிவுநீருக்கு என்ன ஏற்பாடுகள் செய்கிறார்கள்?  பக்கத்து வீடுகளுக்குத் திருப்பி விடுவது ஒன்றே அவர்கள் செய்வது.  மாடியில் இருந்து குப்பையை வீசுவார்கள்.  பக்கத்து வீட்டில் போய் விழுமே;  அங்கேயும் மனிதர்கள் தானே வசிக்கிறார்கள் என்ற எண்ணமே இருக்காது.  மாற்றம் ஏற்படுத்திய தன்னிலைப்படுத்துதலும், சுய கண்ணோட்டமும் இங்கே தான் இருக்கிறது.  இது மாறவில்லையே? 


குடியிருக்க வீடு தானே தேவை - வாடகை வீட்டில் இருக்கலாமே? வானமே கூரை என்று கூட தேவைப்படும் பொழுது சொல்கிறோமே? 


ஆனால் வாடகைக்குக் கிடைக்கும் வீடும் வசதியானதாய் இருக்குமா? சொந்த வீட்டில் கிடைக்கும் சுதந்திர உணர்வு வாடகை வீட்டில் கிடைக்குமா? பார்த்த்ப் பார்த்துக் கட்டிய வீட்டை இடிப்பது என்றால் எவ்வளவு கஷ்டம்னு புரியுமா?  வெறும் சிமென்டாலும், கல்லாலும், மணலாலும் ஆனவை அல்ல சொந்த வீட்டுக் கட்டிடங்கள்.  அவரவர் உழைப்பு.  ரத்தம் சிந்திச் சேர்த்த பணத்தில் கட்டியவை.  எல்லாத்துக்கும் மேலே பெற்ற குழந்தைகளைப் போல வளர்த்த மரங்கள்?? செடிகொடிகள்??? காற்றிலே ஒரு கருகப்பிலைச் செடி விழுந்துவிட்டது.  அதைத் தூக்கிக் கட்ட என்னால் முடியலை.  அலுவலகம் கிளம்பிட்டு இருந்த என் கணவர் முதல்லே அதைத் தூக்கிக் கட்டிவிட்டுப் பின்னரே அலுவலகம் செல்ல வண்டியை எடுத்தார்.  எங்க வீட்டு வேப்பமரத்தடியில் தெருவில் போறவங்க வரவங்க எல்லாம் இளைப்பாறுவாங்க. ஒரு சிலர் கொண்டு வந்த சாப்பாட்டைப் பிரித்துச் சாப்பிடுவதும் உண்டு.  குப்பையைப் போடாதீங்கனு மட்டும் நாங்க அறிவுறுத்துவோம்.  தண்ணீர் எங்களையே கேட்டு வாங்கி இடத்தைச் சுத்தம் செய்துட்டுப் போனவங்க உண்டு.  அந்த மரம் இப்போ என்ன கதியில் இருக்கோ. குழந்தையாய் வளர்த்த செடிகொடிகளை வெட்டுவது என்பது சுலபம் இல்லை. அவற்றைப் பிரிவதும் துக்கமான ஒரு நிகழ்வே. பக்கத்திலே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டறவங்க ஆட்கள் போடும் சிமென்டினால் எங்க மாமரம் பட்டுப் போனப்போ எங்க இரண்டு பேருக்கும் எவ்வளவு வருத்தம்னு புரிஞ்சுக்க முடியுமா?  எங்க அருமைச் செல்லம் மோதி இறந்தப்போ ஏற்பட்ட அதே வருத்தம் இப்போதும் ஏற்பட்டது.  எல்லாருமே இப்படி அடுக்குமாடி கட்டக் கொடுத்துட்டா மரம் செடி கொடிகளுக்கு எங்கே போறது?  பறவைங்க வாழ வாழி என்ன? மழை பெய்ய வழி என்ன?

யு.எஸ்ஸில் பழைய கட்டிடங்களை அவ்வளவு எளிதில் இடித்துவிட முடியுமா? அவ்வளவு ஏன்? ஐரோப்பியக் கண்டங்களிலே கூட தொன்மையான கட்டிடங்களுக்கும் அவற்றின் பழைய மாதிரிகளுக்கும் முன்னுரிமை உண்டு.  இடிக்க மாட்டார்கள்.  மரங்களை நினைத்த வண்ணம் வெட்ட முடியுமா?  அதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்?  தெரியாமல் ஒரு கிளை முறிந்ததுக்கு அபராதம் கட்டின ஒரு நண்பரை ஹூஸ்டனில் எங்க பையர் காட்டி இருக்கார். கார் பார்க் செய்கையில் மரக்கிளை முறிந்துவிட்டது.  அவருக்கு அபராதம் மட்டுமின்றி ஒரு மரக்கன்றை விலைக்கு வாங்கி நட்டுக் குறிப்பிட்ட வருடங்கள் வரை அதைப் பராமரிக்க வேண்டும் என்றும் கட்டளை. இங்கே?  ஏற்கெனவே விலைவாசிகள் உச்சத்துக்கு இருக்கின்றன.  இதிலே நெல்லே விளையலைனா என்ன கதி?  விளைநிலங்களெல்லாம் குடியிருப்புக் கட்டிடங்கள் ஆனால் சாப்பாடு எங்கிருந்து வரும்?  மழை எப்படிப் பொழியும்? சுற்றுச் சூழலில் சமநிலை எப்படி ஏற்படும்?  காடுகளை அழிப்பதாலும், மிருகங்களின் வாழ்வாதாரங்களையும், நீராதாரங்களையும் அழிப்பதாலுமே மிருகங்கள் நாட்டுக்குள் உணவையும், நீரையும் தேடி வருகின்றன.  அந்த மிருகங்களைப் போலவே நாமும் மாறப்போகிறோமோ?  ஒருவரை ஒருவர் கடித்துத் தின்னும் நிலைக்கு வந்துவிடுவோமோ என்றெல்லாம் எண்ணிப் பயப்படுகிறேன்.  அந்த நிலைக்கு வராமல் மக்கள் விரைவில் விழித்துக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

இதிலே பெரியவங்களோட சுயநலம் எங்கிருந்து வந்தது?  பணத்துக்காகப் பெத்தவங்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் அடைத்து வைக்கும் மகனின் சுயநலம் தான் பெரிசாத் தெரிகிறது.  மகனுக்கு நவீன மாறுதல் ஒன்றே குறி. என் சிநேகிதி ஒருத்தியின் குடும்பம் அண்ணா நகரில் தனிவீடு கட்டிக் குடியிருந்தாங்க.  அந்த வீட்டைப் பையர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கொடுக்கணும்னு பெற்றோரை வற்புறுத்த அங்கேயே ஒரு குடியிருப்பு இவங்களுக்கும் கேட்க, பையரோ, தான் டில்லியிலேயே இருக்கப் போவதால், இங்கே வேண்டாம் பணத்தை வாங்கிக்கலாம்னு சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு டில்லியில் வீடு வாங்கிக் கொண்டார் அவர் பெயரிலே. அப்பா, அம்மாவும் பிள்ளை கூப்பிடுவார் எனக் காத்திருந்து பார்த்துவிட்டுப் பின்னர் அவங்களாவே டில்லிக்குப் போனால் அங்கே வரவேற்பு சரியில்லை. மருமகளுக்கு மாமனார், மாமியாருக்குச் செய்ய இஷ்டமில்லை.  பிள்ளையும் வாய் திறக்கவில்லை.  கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்த பெற்றோர் பின்னர் வீடு சென்னையிலும் வாங்கலை, நாங்க இன்னும் பணி ஓய்வு பெறும்வரைக்கும் அங்கே தான் இருக்கணும்.  ஆகவே நீயாவது ஒரு வீடு வாங்கிக் கொடுனு பிள்ளையை வாய் திறந்து கேட்க, வந்ததே தகராறு.

பெற்றோர் சென்னைக்குத் திரும்பி விட்டனர்.  நல்லவேளையா வேலைனு ஒண்ணு இருந்ததாலே பிள்ளை கிட்டே சாப்பாட்டுக்கு இருக்கும்படியா இல்லை.  பின்னர் பணி ஓய்வு கிடைத்ததும் கிடைத்த பணத்திலே கொஞ்சம் நகைகளையும் விற்று மிக மிகச்  சின்னதாக ஒரு (அடுக்கு மாடி தான்)வீடு  வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  இங்கே வந்தால் செளகரியம் போதவில்லைனு பிள்ளை அலட்டலாம். ஏன் பெரிய வீடு வாங்கலைனு கேட்கிறாராம்.  எப்படி மனசு வருது இப்படியெல்லாம்னு நான் அசந்து போயிருக்கேன். இப்படி எத்தனை பேர் வேணும்?  மின்சாரம் இல்லாமல் இருக்கலாம். ப்ரிஜ், ஏசி, ஃபான் இல்லாமல் இருக்கலாம்.  மிக்சி, கிரைண்டர் இல்லாமல் அரைத்துச் சாப்பிட முடியும்.  ஆனால் வீடு?  அதில் விளையும் பொருட்கள்? நிலம்? அரிசி? காய்கறிகள் ? பழங்கள்?  தோட்டங்கள், தோப்புகள் அனைத்தையும் அழித்துக்கொண்டே வந்தால் எங்கே பயிர் செய்வது?  கான்க்ரீட் காடுகளிலா?  அதையானும் சுத்தமாக வைத்துக்கொள்கிறார்களா எனில் அதுவும் இல்லை.  சென்னையே ஒரு குப்பைத்தொட்டி;  தமிழ்நாடே ஒரு குப்பைக் கிடங்குனு தான் சொல்ல வேண்டி இருக்கு.


இன்னிக்கு மின்சாரம் படுத்திய பாட்டில் ஒண்ணும் எழுத முடியலை.  ஆஃப்லைனில் கூட எழுத முடியலை.  நாலைந்து நாளா இந்தப் பாடுதான்.  அப்பாதுரைக்கு எழுதின பதிலையே பதிவாக்கிட்டேன். தண்டனை அனுபவிங்க எல்லாரும்.  ஃபாலோயர்ஸ் என்னமோ நிறையக் காட்டுது;  ஓவர் வியூவிலும் ட்ராஃபிக் இருக்கு.இப்போக் கொஞ்ச நாட்களா என்னோட பதிவை நான் பார்க்கிறது குறைஞ்சிருக்குமே.  அதனால் அது கணக்கில் வராது. :))))  ஆனால் பின்னூட்டம் னு பார்த்தா குறைச்சலாத் தான் வருது.  அதான் எப்படினு தெரியலை! :))))))  ஏதோ வந்தாச் சரி!