எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 30, 2014

நானும் ஹிந்தி கற்றுக்கொண்டேன்!

பாஸ் பண்ணிடுவேன்னு நினைச்சேன். ஆனால் இப்படி ஒரு ரிசல்டை எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  என்னோட நம்பர் முதல் வகுப்பில் இருந்தது.  எடுத்த உடனேயே இரண்டாம் வகுப்பில் நம்பரைப்பார்த்துத் தேடிக் கிடைக்காமல் மூன்றாம் வகுப்பில் பார்க்கலாமா என யோசிக்கையில் கூட வந்த தம்பி முதல் வகுப்பில் என் நம்பரைப் பார்த்துட்டு, "அக்கா, இதோ இங்கே இருக்கு பார்!" என்று சொல்ல ஆச்சரியத்தில் நான் மயங்கி விழாத குறைதான்.  அதற்குள் சபாவில் இருக்கும் பெண்மணி விஷயத்தைப் புரிந்து கொண்டு மார்க் லிஸ்டையும் எடுத்துக் கொடுத்தார்.

முதல் ஐந்து பேர்களுக்குள்ளாக என் பெயரும் நம்பரும் வந்திருந்தது.  மதிப்பெண்களும் 75 க்கும் மேலே.  உடனே போய் வீட்டில் சொல்லிட்டு ஹிந்தி வகுப்புக்கும் போனேன்.  அங்கே போனால் லக்ஷ்மிஜி என்னைப் பார்த்துட்டுக் கண்டுக்கவே இல்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் வந்த கமலாஜி என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே போக ஒண்ணுமே புரியலை. அதுக்குள்ளே என்னோட சிநேகிதி வந்து, என் பக்கம் உட்கார்ந்து சபாவிலே போய் ரிசல்டைப் பார்த்தியானு கேட்க, முதல் வகுப்பில் பாஸாகி இருக்கும் விஷயத்தை நானும் சொன்னேன்.  உடனேயே என்னை லக்ஷ்மிஜியிடம் விஷயத்தைச் சொல்லும்படி சொன்னாள்.  ஏன், அவங்களும் பார்த்திருப்பாங்களேனு நான் மறுக்க, அவளோ கட்டாயப்படுத்தினாள்.

தொந்திரவு பொறுக்க முடியாமல் நான் எழுந்து முதல் வகுப்பில் நான் பாஸாகி இருக்கும் விஷயத்தையும், மதிப்பெண்களையும் சொல்லிட்டு லக்ஷ்மிஜிக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும் என்றும் கூறினேன்.  லக்ஷ்மிஜிக்குத் தூக்கிவாரிப்போட்டது.  நிஜமாவானு கேட்டவங்க, "நீ ஃபெயில் ஆகிட்டேனு சொன்னாங்களே!  அதான் உன்னைப் பார்த்ததும் என்ன சொல்றது, என்ன பேசறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்னு சொல்ல, கமலாஜியோ, "நான் இதை நம்ப மாட்டேன்.  இவ பொய் சொல்றா!"னு சொல்லிட்டாங்க.  நேத்து ரிசல்ட் பார்த்து வந்த பெண்ணைக் கூப்பிட்டுக் கேட்டதுக்கு அவ முதல் வகுப்பிலே யார் நம்பரையும்  தேடலை என்றும்  இரண்டாம், மூன்றாம் வகுப்பிலே மட்டும் பார்த்துட்டு வந்துட்டதாயும் சொன்னாள்.  பின்னர் கமலாஜியும், அந்தப் பெண்ணும் மறுபடி சபாவுக்குப் போனாங்க.  தானப்ப முதலி அக்ரஹாரத்திலே இருந்து சபா கிட்டத்தான்.

அவங்க ரெண்டு பேரும் போய்ப் பார்த்ததிலே யாரை எல்லாம் ஃபெயில்னு அந்தப் பொண்ணு பார்த்திருந்தாளோ அத்தனை பேரும் பாஸாகி இருந்ததோடு ப்ராத்மிக் பெண்கள் மூவர் முதல் வகுப்பிலும் பாஸாகி இருந்தனர்.  பின்னர் மார்க் லிஸ்டையும் பார்த்துச் சரிபார்த்து உறுதி செய்து கொண்டனர்.  ஆனாலும் கமலாஜிக்கு என் மேல் இருந்த கோபம் முழுசும் போனதாகத் தெரியலை.  ஏன்னா ராஷ்ட்ரபாஷா முடிக்கிறதுக்குள்ளே எனக்குக் கல்யாணம் நிச்சயமாகி ராஷ்ட்ரபாஷா பரிக்ஷை எழுதின மூன்றே மாதங்களில் கல்யாணமும் ஆனதாலே ஹிந்தியை மேலே தொடரவில்லை.  அதிலே அவங்களுக்குக் கோபம். :) இதெல்லாம் படிச்சு உருப்படாதுனு ஆசீர்வாதம் பண்ணினதாக் கேள்விப்பட்டேன்.


அதுக்கப்புறமாக் குடும்ப சூழ்நிலையாலே ஹிந்தியைத் தொடரவே முடியாமல் போன நான் பொண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கும்போதும், பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்கையிலும் என்னோட ஹிந்தி அறிவை வளர்த்துக்கொண்டேன். வட இந்திய உச்சரிப்புக்களும், பழமொழிகளுக்கான சரியான பொருளும் உறவின்முறைப் பெயர்களும், மளிகை சாமான்கள், காய்கறிகள் போன்றவற்றின் பெயரும், அன்றாட வேலை செய்யும்போது குறிப்பிடும் வார்த்தைகள் எனத் தெரிந்து வைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் நான் மறுபடியும் ஹிந்தி ப்ரசார சபாவின் ப்ரவேஷிகா எழுதும்போது என்னோட பொண்ணு ஒன்பதாம் வகுப்புக்கு வந்துட்டா.  அவளிடம் தெரியாத சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.  இதோடு சேர்த்து சென்ட்ரல் ஹிந்தி டைரக்டரேட்டின் ஹிந்திப் பாடங்களும் படித்துப் பரிக்ஷையும் எழுதினேன்.  இதிலே நிறைய தொழில் நுட்ப வார்த்தைகள், அரசாங்கக் கோப்புகளுக்குப் பயன்படும் வார்த்தைகள், வாக்கியங்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதுக்காக சாஹித்யம் எழுதும் அளவுக்கெல்லாம் ஹிந்தி தெரியாது, பொதுவாகப் புரிஞ்சுக்கத் தெரியும், அம்புடுதேன்!

Saturday, June 28, 2014

நானும் ஹிந்தி கற்றுக் கொண்டேனே!

இங்கே

நான் எழுதி முடிக்கிறதுக்குள்ளே ஹிந்தி ட்ரென்ட் போய் வேறே வந்துடும்; வந்தாச்சு! :)  ஆனாலும் விட மாட்டோமுல்ல!

மத்யமா பரிக்ஷைக்கு எக்கச்சக்கமாப் படிக்கணும். பெப்ரவரி இரண்டாம் சனி, ஞாயிறில் தான் ஹிந்திப் பரிக்ஷை இருக்கும். அதுக்குள்ளே தயாராகணும்.  ஒரு வசதி என்னன்னா, எங்க வீட்டிலே சாப்பாடு சூடா இருக்கணும்னு இல்லை.  காலம்பரவே சமைச்சுடலாம்.  பத்து மணிக்குச் சாப்பிட்டால் கூட ஆறிப் போச்சுனு சொல்ல மாட்டாங்க.  அதோட வெண்கலப்பானையில் சாதம் வைக்கணும்.  கல்சட்டி, ஈயச் செம்பில் குழம்பு, ரசம் பண்ணணும்.  எல்லாமே சூடு தாங்கும்.  ரொம்ப நேரம் சூடாக வைத்திருக்கும்.  ஆகவே ஏழு மணிக்குள்ளாகச் சமைச்சுட்டுக் கிளாஸுக்குப் போவேன்.  ஒன்பது, ஒன்பதரைக்கு வந்து சாப்பிட்டுட்டு டெய்லரிங் கிளாஸ், மத்தியானம் ஒரு மணிக்கு வந்தால் அப்பாவுக்கு டிஃபன், காஃபி கொடுத்தனுப்பணும்.  தம்பியும் அதே ஸ்கூல்லே படிச்சதால் அவன்ன் வந்து எடுத்துப் போவான்.  அதைத் தம்பி கிட்டே கொடுத்துடுவேன்.  டிஃபன் கடையும் முடிஞ்சுடும்.  அதே அடுப்பிலேயே ராத்திரிக்கு சாதம் வைச்சுடுவேன்.  எல்லாம் ஆக இரண்டரை மணி ஆயிடும். அதுக்கப்புறமாப் பக்கத்து வீட்டு அக்கா கிட்டே போய் ஹிந்தி படிப்பேன். அவங்க ப்ரவீன் ப்ரசாரக் படிச்சுட்டு அப்பா அனுமதி இல்லாததால் வீட்டிலேயே இருந்தாங்க.

தாத்தா வீட்டிலே இருந்து ஒரு பழைய ஹிந்தி- ஆங்கிலம்- தமிழ் அகராதியும் தற்செயலாக் கிடைச்சது.  அதையும் துணைக்கு வைச்சுட்டுப் படிச்சேன். அதுக்குள்ளே பொங்கல் பண்டிகைக்கு அம்மாவும் மதுரை வந்தாங்க.  கொஞ்சம் நேரமும் கூடக் கிடைச்சது.  பெப்ரவரியில் பரிக்ஷை எழுதி முடிச்சுட்டேன்.  ஏப்ரலில் ரிசல்ட் வந்துடும்.   தொடர்ந்து ராஷ்ட்ரபாஷா வகுப்புக்குப் போயிட்டு இருந்தேன்.  அப்போப் பார்த்து திடீர்னு ஜுரம் வர ஒரு வாரம் வகுப்புக்குப் போகலை. அதுக்குள்ளே தமிழ்ப் புத்தாண்டும் வந்தது. அன்னிக்குப் பெரியப்பாவைப் பார்த்து ஆசி வாங்கறதுக்காகப் பெருமாள் தெப்பக்குளம் அருகே இருந்த அவங்க வீட்டுக்குப் போனப்போ பெரியப்பா பொண்ணு ஹிந்தி ரிசல்ட் வந்தாச்சே, தெரியுமானு கேட்டாள்.  எனக்குத் தெரியாதுனு நான் சொல்லிட்டு, என் ரிசல்ட் பத்தி ஏதானும் அவளுக்குத் தெரியுமானு கேட்கவே பெரியம்மாவும், அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தெரியாதேனு சொல்லிட்டாங்க.  எனக்குச் சந்தேகம் முளை விட்டது.

சந்தேகத்தோடயே வீட்டுக்கு வந்தேன்.  வர வழியிலே என்னோட ஹிந்தி படிக்கும் இன்னொரு பெண்ணைப்பார்த்தேன்.  அவள் பாஸா என்று கேட்டதுக்குப் பாஸ் என்று சொன்னாள்.  என் ரிசல்ட் பத்திக் கேட்டதுக்கு அவளும் தெரியாதுனு சொல்லிட்டு நழுவப் பார்த்தாள்.  அவளை நிறுத்தி வலுக்கட்டாயமாகக் கேட்டதற்கு எதுக்கும் நீ சபாவிலேயே போய்ப் பார்த்துக்கோனு சொல்லிட்டா.  ஹிந்தி பிரசார சபாவின் கிளை அப்போ ராஜாபார்லி பேக்கரி இருக்கும் சந்தில் மாடியில் தான் இருந்தது.  ஆகவே மீண்டும் மேலகோபுர வாசலுக்கு வந்து அந்தச் சந்தில் போய் மேலே மாடிக்குப் போனேன்.  ரிசல்ட் வந்த லிஸ்டைக் கேட்டேன்.  என்னோட நம்பரைக் கேட்டுட்டு அந்தக் குறிப்பிட்ட மத்யமா ரிசல்ட் வந்திருக்கும் பேப்பரை மட்டும் எடுத்துக் கொடுத்தாங்க.  ஆஹா என்ன ஆச்சரியம்!  நிச்சயமா நான் இதை எதிர்பார்க்கவே இல்லை தான்! 

Tuesday, June 24, 2014

கால் தான் திப்பிசம் பண்ணுதுனா மூளை கூடவா?

அப்பாடா, ஒரு மாசமாச்சு, இணையத்துக்கு அவ்வப்போது வந்தாலும் தொடர்ந்து உட்கார முடியலை.  காலில் பிரச்னை.  வலி நிவாரணிகளை எடுத்துக்க மருத்துவர் தடை செய்திருப்பதால் அரை மணி உட்கார்ந்தா ஒன்றரை மணி படுக்கை.  :) இதுக்கு நடுவிலே சமையல், சாப்பாடு, இத்யாதி, இத்யாதி!

அப்புறமா ரொம்ப யோசிச்சு ஆயுர்வேத மருத்துவர் கிட்டே போனேன்.  அவர் மருந்துகள் கொடுத்ததோடு கடுமையான உணவுக் கட்டுப்பாடும் சொல்லி இருக்கார். நேத்து ராத்திரி தூக்கம் சரியில்லைனாலும், காலில் கணிசமாகப் பிரச்னை குறைஞ்சிருக்கு.  என்றாலும் இன்னமும் முழுதும் சரியாகலை.  நாளாகும்னு சொல்லிட்டார்.   ஆனால் பாருங்க,  என்னோட பதிவைப் படிக்க முடியாமல் ரசிகப் பெருமக்கள் எல்லாம் தவிப்பாங்களேனு அவ்வப்போது வந்து மொக்கை போஸ்ட் மட்டும் போட்டுட்டுப் போறேன்.   பல மடல்கள் பார்க்கவே இல்லை.  இனிமேல் தான் பார்க்கணும்.  போற அவசரத்திலே இப்போ சில திப்பிச வேலைகள் சொல்லவா?  இதுக்கெல்லாம் எழுதி வைச்சுக்காமப் பத்தே பத்து நிமிஷத்திலே ஆன்லைனிலே கிறுக்கிட்டுப் போயிடலாம்! :)))))


1.மாவடு ஊறுகாய் போடறீங்களா?  மாவடு தீர்ந்து போய் அந்த ஜலம் மட்டும் மிச்சம் இருக்கா?  கவலை வேண்டாம்.  கொஞ்சம் ஜலத்தை எடுத்து ஒரு வாளியில் விட்டு நீர் கலந்து பித்தளை, வெண்கலத்தை ஊற வைங்க!  அரை மணி கழிச்சு எடுத்துத் தேய்ச்சால் பித்தளையும் வெண்கலமும் தங்கம் போல் பளபள!

மாவடுக்கு மேல் ஜலம் நிறையவே இருக்கும்.  ஆகவே பித்தளை, வெண்கலம் தேய்ச்சால் கூட ஜலம் மிச்சம் இருக்கும் தான்.  அதை என்ன பண்றதாம்?  ஒண்ணும் வேண்டாம்!  ஒரு கிலோ பச்சைச் சுண்டைக்காய், ஒரு கிலோ மணத்தக்காளிக்காய், ஒரு கிலோ மிதுக்க வத்தல் காய்(துமட்டிக்காய்) வாங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சுண்டைக்காயையும், துமட்டிக்காயையும் மட்டும் கொஞ்சம் கீறி விட்டுட்டுத் தனித்தனியாக எல்லாவற்றையும் மாவடு ஜலத்தில் ஊற வைங்க. தினம் கிளறி விடவும். ஒரு வாரத்துக்கப்புறமா எடுத்து வெயிலில் காய வைங்க.  காரம் இன்னும் வேணும்னா ஜலம் முழுசும் வற்றும் வரை அதிலேயே திரும்பத் திரும்பப் போடலாம். இந்த வற்றலை வறுத்துச் சாப்பிட்டுப்பார்த்தால் அப்புறமா இதுக்காகவே மாவடு ஊறுகாய் போட ஆரம்பிப்பீங்க!  வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்றவையும் வாங்கி அலம்பி நறுக்கி ஒரு நாள் வெயிலில் காய வைச்சுட்டுப் பின்னர் மாவடு ஜலத்தில் ஊற வைக்கலாம்.   நம்ம ரங்க்ஸ் பச்சை மிளகாயை இப்படிப் போடலாமானு ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்டிருக்கார்!  இந்த வருஷத்து மாவடு ஜலம் தேமேனு உட்கார்ந்து இருக்கு; பார்க்கலாம்!

2.ரவா உப்புமா, அவல் உப்புமா, சேமியா உப்புமா போன்றவை எல்லாம் பாவப்பட்ட உணவுகள்.  அதிகம் வேண்டப்படாத உணவுகள்.  என்றாலும் பண்ணுவீங்க தானே?  என்ன?  மிஞ்சிப் போறதா?  ம்ஹூம், இதுக்கெல்லாமா கவலைப்படறது?

உங்க வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு ஒன்றிரண்டு உருளைக்கிழங்கு வேக வைச்சு எடுத்துக்குங்க.  ப்ரெட் இருக்கா வீட்டிலே?  இருந்தால் 2 ஸ்லைஸ் ப்ரெட் எடுத்துக்குங்க.  இரண்டையும் நன்கு பிசைங்க.  லேசாக கால் டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, பச்சைக் கொத்துமல்லி (இருந்தால்) சேர்த்துக்குங்க.  மிச்ச உப்புமாவோட இந்தக் கலவையை நன்கு கலக்குங்க.  தோசைக்கல்லில் இதைக் கட்லெட் மாதிரித் தட்டி  இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு வேக வைங்க. 

தக்காளி சாஸோட சாயந்திரம் குழந்தைங்களுக்குப் புது டிஃபனா இதைக் கொடுக்கலாம்.  தக்காளி சாஸ் இல்லைனா நாலைந்து பேரிச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைச்சு ஒரு ஸ்பூன் மி.பொடி, ஒரு ஸ்பூன் உப்பு,  கொஞ்சம் வெல்லம் ஆகியவற்றோடு மிக்சியில் நன்கு அரைத்து வறுத்த ஜீரகப் பொடியைப் போட்டுக் கலக்கி வைத்துக் கொண்டு அதை விட்டுக் கொடுக்கலாம்.

பச்சைக்கொத்துமல்லி இருந்தா சட்னி அரைச்சு அதுவும் சேர்க்கலாம்.  என்ன ஒரு முக்கியமான விஷயம்னா இது காலம்பர செய்த உப்புமானு உங்களுக்கும், எனக்கும் மட்டுமே தெரிந்ததாய் இருக்கணும்.  உப்புமா சாப்பிடாமல் தட்டிக் கழிச்சதுக்குப் பழி வாங்கினாப்போலயும் ஆச்சு; உப்புமாவும் வீணாகாது.  இதே மாதிரி அவல் உப்புமா, சேமியா உப்புமா போன்றவற்றையும்  இதே போலத் திப்பிச வேலை செய்யலாம்.


3.போன வருஷத்து ஆவக்காய் மிஞ்சிப் போயிருக்கா?  அதுக்கும் கவலைப்பட வேண்டாம்.  உங்க வீட்டிலே அது பழசுனு வெறுத்து ஒதுக்கினவங்களைச் சாப்பிட வைக்கலாம்.


ஒரு கிண்ணத்தால் மிச்சம் இருக்கும் ஆவக்காய் ஊறுகாயை அளந்துக்குங்க.
அல்லது பாட்டிலில் முக்கால் பாட்டில் இருந்தால் அதைக் கணக்கு வைச்சுக்குங்க. 

கால் கிலோவுக்குக் குறையாமல் பாகு வெல்லத்தை எடுத்துக் கொஞ்சமா நீர் சேர்த்து அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சுங்க.  மிளகு பதம் வந்ததும் கீழே இறக்கிப் பாகை ஆற வைங்க.  ஆறிய பாகில் ஆவக்காய் ஊறுகாயைப் போட்டு நல்லாக் கிளறுங்க.  கொஞ்சம் சோம்பு(வேண்டுமென்றால்), கொஞ்சம் ஜீரகம் (கட்டாயம்) வறுத்துக் கொண்டு அந்தப் பொடியை அந்த ஊறுகாயில் போட்டு நல்லாக் கிளறுங்க.

குஜராத்தி டைப் ஊறுகாய் இதுனு சொல்லிச் சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்குத் தொட்டுக்க வைச்சுக்கலாம்.  எப்படிப் பண்ணினேன்னு கேட்டால் மட்டும் வாயே திறக்கக் கூடாது!  ஆமாம், சொல்லிட்டேன்! :)))))

Monday, June 23, 2014

என் சமையலறையில் நீ ஹிந்தியா, தமிழா!

அதோடு விட்டுடுவோமா? எட்டாம் கிளாஸுக்கு அப்புறமா ஹிந்தி இல்லை தான்.  ஆனால் மறந்தெல்லாம் போகலை.  பத்தாம் வகுப்பில் செக்ரடேரியல் கோர்ஸ் எடுத்ததால் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய.  தமிழ், ஆங்கிலம், அறிவியல்,  டைப் ரைட்டிங், புக் கீப்பிங் + அக்கவுன்டன்சி, காமர்ஸ், கமர்ஷியல் ஜியாக்ரஃபி, எகனாமிக்ஸ்,  எல்லாமும் உண்டு.  மொத்தம் எட்டுப் பாடங்கள். ஆகவே தனியாக ஹிந்தி வகுப்பில் எல்லாம் சேர முடியலை.  இத்தனைக்கும் அப்பா ஒரு வார்த்தை சபாவில் சொன்னால் ஃபீஸே வாங்க மாட்டாங்க.  இலவசமாய்ப் படிக்கலாம். அப்படி எல்லாம் அப்பாவும் போய்க் கேட்க மாட்டார்.  எனக்கும் நேரம் சரியாக இருந்தது.

பள்ளி இறுதிக்கப்புறமா காலேஜோ, பாலிடெக்னிக்கோ இல்லைனு ஆனப்புறமா, தனியா டிப்ளமா இன் காமர்ஸ் பண்ணலாம்னு வீட்டுக்கு எதிரே இருந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன்.  முதல் காரணம் ஃபீஸ் என்னிடம் வாங்கவில்லை.  புத்தகங்கள் அப்பாவின் நண்பர் ஜாக்கி ராயர் என்பவர் இலவசமாகக் கொடுத்திருந்தார்.  அதோடு மாமாக்கள் படித்த புத்தகங்கள் எல்லாமும் கிடைத்தன.  அக்கவுன்டசிக்கும், நோட்ஸ் எழுதவும் நோட்டுக்கள், பேனா, பென்சில் தான் தேவை.  அவற்றையும் எப்படியோ வாங்கிக் கொண்டாச்சு.  அக்கவுன்டசி ஹையர் நேரிடயாகப் போகலாம்னாலும் நான் லோயர் பாஸ் பண்ணிட்டே போறேன்னு வாத்தியாரிடம் சொல்லிட்டேன். இதில் என் அப்பாவுக்குக் கோபம் தான்.  ஆனாலும் எனக்கு அஸ்திவாரம் கொஞ்சம் பலமா இருக்கணும்னு ஆசை. 

அதோடு டைப்பிங் ஹையர் நேரிடையாகப் போகவும், ஷார்ட்ஹான்ட் எழுதவும் பயிற்சி எடுத்தேன்.   இது எல்லாம் ஒன்பது மணிக்கு முடிஞ்சுடும். அதுக்கப்புறமா மத்தியான நேரத்தில் சும்மா இருக்கக் கூடாதுனு தையல், எம்ப்ராய்டரிங் சேர்ந்தேன்.  எங்க தெருவுக்கு அடுத்த தெரு தானப்ப முதலி அக்ரஹாரத்தில் இருந்த  ஹிந்தி பிரசார சபாவின் மாலை நேர வகுப்பில் ஹிந்தியும் சேர்ந்து கொண்டேன்.  அங்கே அப்போது இருந்த லக்ஷ்மிஜி என் அப்பாவுக்குத் தெரிந்தவர்.  நான் ஹிந்தி தடங்கலில்லாமல் படிப்பதைப் பார்த்துட்டு, நேரிடையாக ராஷ்ட்ரபாஷா எழுதிட்டு, அப்புறமா ப்ரவேஷிகா போகலாம்னு சொன்னார்.  ஆனால் அவரின் உதவிக்கு இருந்த கமலாஜிக்கோ என்னை  ப்ராத்மிக் கிளாசில் இருந்து ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும் என்றே ஆசை.

இருவருக்கும் ஒரு தீவிர வாக்குவாதம் நடந்து முடிந்து கடைசியில் மத்யமாவுக்கு நேரிடையாகச் சேர்க்கலாம்னு லக்ஷ்மிஜி முடிவு செய்ய, கமலாஜி அரை மனசாகத் தலை ஆட்டினார்.  நான் சேர்ந்தது நவம்பரில். பெப்ரவரியில் பரிக்ஷை ஆரம்பம்.  டிசம்பரில் பணம் கட்டணும்.  ஹிந்தி டீச்சருக்கு ஃபீஸ்  இல்லை தான்.  அங்குள்ள ஆன்மிக சங்கம் சார்பில் இலவசமாய்க் கற்றுக் கொடுத்தாங்க.  ஆனால் டீச்சர் கிட்டே தனியாக் கொடுத்தால் வாங்கிப்பாங்க.  இல்லைனா இல்லை தான். ஆனால் பரிக்ஷை எழுத சபாவுக்குப் பணம் கட்டியே ஆகணும்.  அப்போ மத்யமாவுக்கு 3 ரூபாயோ, 5 ரூபாயோனு நினைக்கிறேன்.  ஆனால் அதுவே பெரிய தொகை தான்.  ஆகவே பெப்ரவரியில் பரிக்ஷை எழுத வேண்டாம்; ஏற்கெனவே பாடங்கள் முடிஞ்சுடுத்துனு அப்பா கிட்டே சொல்லி அடுத்த செப்டெம்பரில் எழுதறேன்னு சொல்லிப் பார்த்தேன்.  அப்பா ஒரே எகிறு எகிறினாரே பார்ப்போம். 

"உனக்கென்ன ஹிந்தி தெரியாதா?  இப்போ உடனே மத்யமாவுக்கோ, ராஷ்ட்ரபாஷாவுக்கோ பணம் கட்டிப் படிக்கிறதானால் படி;  இல்லைனா படிப்பே வேண்டாம்."

வழக்கமான பிரம்மாஸ்திரம்.  என்ன செய்யறதுனு புரியலை.  லக்ஷ்மிஜியோ தைரியமாப் பணம் கட்டு, நீ பாஸ் ஆயிடுவேனு சொல்ல கமலாஜியோ 10 மார்க்குக் கூட வராது.  இதுவரை நாம அனுப்பின எல்லோருமே பாஸ் ஆகிட்டு இருக்காங்க.  இதுக்கு ஃபெயில் மார்க் தான்கிடைக்கும்னு ஆசீர்வதிக்க, நேரு பிள்ளையார் மேலே பாரத்தைப் போட்டுட்டுப் பரிக்ஷைக்குப் பணம் கட்ட முடிவெடுத்தேன்.  ஆனால் ராஷ்ட்ரபாஷா இல்லை.  மத்யமா தான்.  மூன்று, நான்கு புத்தகங்கள் படிக்கணும்.  அதைத் தவிர இலக்கணம் தனி. எல்லோருக்கும் குழம்பும் ஹிந்தி இலக்கணம் எனக்குக் குழப்பவில்லைனாலும் பரிக்ஷைக்கு எழுதற அளவுக்குப் படிச்சகணுமே! 

மொழிபெயர்ப்பு வேறே தனியா இருக்கும்.  என்ன செய்யப் போறேன், பகவானே!  புத்தகங்கள் போன முறை மத்யமா படிச்ச பொண்ணு கிட்டே வாங்கிட்டேன்.  நான் படிச்சுட்டு அடுத்துப் படிக்கிறவங்களுக்கு இதே போல் இலவசமாக் கொடுக்கணும்.  இதான் நிபந்தனை.  புஸ்தகமெல்லாம் வாங்கியாச்சு.  டிசம்பரில் அக்கவுன்டசி பரிக்ஷை, டைப்பிங் பரிக்ஷை. நல்ல வேளையா ஷார்ட் ஹான்ட் ப்ராக்டிஸ் என்னும் நிலையிலேயே இருந்தது. பரிக்ஷைக்குத் தயார் ஆக இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகலாம். இத்தனைக்கும் நடுவிலே ஹிந்தியும் படிச்சாகணும்.  அந்த நேரம் பார்த்து ஹோசூரில் இருந்த அண்ணாவுக்குச் சமைச்சுப் போடணும்னு அம்மாவும் ஹோசூர் போயாச்சு.  சமையலறையும் என் பொறுப்பில்!


ஹிந்தி போஸ்ட் விடமாட்டோமுல்ல! 

Saturday, June 21, 2014

நானும் ஹிந்தி கற்றுக் கொண்டேனே!

நான் முதல்லே ஹிந்தி கத்துக்க ஆரம்பிச்சது ஆறாம் வகுப்பில் இருந்து.  அப்போல்லாம் ஸ்டாண்டர்ட் ஆரம்பிக்கலை.  ஆகவே அது ஃபர்ஸ்ட் ஃபார்மாக இருந்தது. ஹிந்தி சொல்லிக் கொடுத்தது ராதானு ஒரு டீச்சர். அ, ஆ, இ, ஈ இல் இருந்து க, ங, ச, ஞ, ட, ண, ன, ப, ம, ய, ர, ல, வ, ஹ, ஷ, ஸ, ஹ வரைக்கும் ஒழுங்கா எழுத வந்தது.  அப்புறமாத் தான் விதியின் விளையாட்டு ஆரம்பம். வார்த்தைகள், வாக்கியங்கள்னு ஆரம்பம். வார்த்தைகளிலேயே தகராறு வர ஆரம்பிச்சது. खाना   என்றால் சாப்பாடுனும் வரும். சாப்பிடுவது எனவும் வரும். டிக்டேஷனில் நான் எழுதினது काना என்று. இப்படி முதல் ப போட வேண்டியதில் இரண்டாவதும், மூன்றாவது Ba  போடுவதற்கு நான்காவதும் Bha போட்டு எழுதிட்டேன்.

சின்னப் பொண்ணுனு டீச்சர் முதல் முறை மன்னாப்புக் கொடுத்துட்டாங்க. அப்புறமா பிராகிரஸ் ரிப்போர்ட் தயார் பண்ணணும்னு மறுபடி என்னை மாதிரிச் சரியா எழுதாதவங்களுக்கு டெஸ்ட் வைச்சாங்க.  அதிலேயும் சொதப்பல். பயந்து கொண்டே டீச்சரிடம் நோட்டை நீட்டினேன்.  நீட்டினேனோ இல்லையோ, கையைக் காட்டுனு டீச்சர் மிரட்டல். கையை நீட்டினேன்.  பெரிய ஸ்கேலால் அடி ஒன்று விழுந்து துடித்துப்போய் விட்டது.  மோதிர விரலிலோ, பாம்பு விரலிலோ பட்டு வீங்கவும் ஆரம்பிச்சது.  ஆனாலும் டீச்சருக்குக் கோபம் அடங்கவில்லை. ஏனெனில் அவங்க தான் என்னை ஸ்கூலில் சேர்க்கையில் பெயர்க் குழப்பம் வந்தப்போ என்னோட தேர்வுப் பேப்பர்களை எல்லாம் பார்த்துட்டு நான் நல்லாப் படிப்பேன்னு தெரிஞ்சு வைச்சிருந்தார்.  அதனால் அத்தனை மாணவிகளிலும் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கும் அளவுக்கு என்னைத் தெரியும்.  அவங்களோட நல்ல எண்ணத்திலே நான் மண்ணை வாரிப் போட்ட கோபம்.

"யாருடி உங்க அப்பா? என்ன பண்ணறார்?"

"சேதுபதி ஹைஸ்கூலில் ஹிந்தி டீச்சர்!"

"என்ன?  ஹிந்தி டீச்சர் பொண்ணா இப்படி எழுதறே?  வீட்டிலே அப்பா சொல்லிக் கொடுக்க மாட்டாரா?"

என்னத்தைச் சொல்றது.  அப்பா அதெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார்.  ஸ்கூல்லே என்னத்தைக் கவனிச்சேனு சத்தம் போடுவார். எந்தப் பாடமும் எங்களுக்கு அப்பா சொல்லிக் கொடுத்ததே இல்லை. :) அம்மா தனக்குத் தெரிந்த ஹிந்தியை வைச்சு எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.  டீச்சர் கிட்டே அடி வாங்கிண்டு வீட்டுக்கு வந்தப்போவும் அப்பா என்னைத் தான் திட்டினார். சரியாப் படிக்கலைனா படிப்பை நிறுத்திடுவேன் என்னும் பிரம்மாஸ்திரப் பிரயோகம் வழக்கம் போல்.

அதுக்கப்புறமா முனைந்து படிச்சேன். அடுத்த ஒரு மாதத்துக்குள்ளே ஹிந்தியில் 80% க்கு மேல் வாங்கும்படியாகப் படிக்க ஆரம்பிச்சேன். அப்போல்லாம் எஸ்.எஸ்.எல்.சி.யில் ஹிந்தியும் ஒரு கட்டாயப் பாடம். ஆனால்  எனக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் அதாவது மூன்றாவது ஃபார்ம் படிக்கையில் ஹிந்தி இருந்தது.  அதுக்கப்புறமா ஹிந்தியை எடுத்துட்டாங்க.  என்றாலும் தெரிந்த இந்த ஹிந்தியை வைச்சுட்டே, நான் தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார சபா பரிக்ஷைகளில் தேர்வு எழுத முடிந்தது.  ஆனால் அங்கே சொல்லிக் கொடுப்பதற்கும் நடைமுறை வாழ்வில் ஹிந்தி பேசுவதற்கும் உள்ள மாபெரும் வேறுபாடு முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ தான் புரிஞ்சது.

உச்சரிப்பே இங்கே தப்புத் தப்பாய்த் தான் சொல்லிக் கொடுக்கிறாங்க. பல சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் Idioms and phrases (இதுக்குச் சரியான தமிழ் வார்த்தைகள் தேடினப்போக் கிடைச்சது, சாட்டு வாக்கியங்கள் என்று விக்கி சொல்கிறது) போன்றவற்றுக்கு இங்கே சொல்லும் பொருள் அதன் உண்மையான பொருளில் இருந்து மாறுபட்டது.  இதை அங்கே  போனதுமே புரிந்து கொண்டதோடு அல்லாமல் எங்க பொண்ணு அங்கே கேந்திரிய வித்யாலயாவில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சப்புறம் நல்லாவே புரிஞ்சது. அவளுக்குச் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் நான் மீண்டும் ஹிந்தி கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் மிகை இல்லை. அதைத் தனியா வைச்சுப்போம்.


இப்போ மோதி அரசு என்னமோ ஹிந்தித் திணிப்பை உருவாக்குவதாக ஒரு மாயத் தோற்றம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த அமர்க்களத்தின் நடுவில் அவங்க மறுப்புக் கூட உண்மையானதில்லைனு சொல்லிட்டு இருக்காங்க.  அப்படி ஒரு அரசாணை இருந்தால் அந்த அரசாணையின் காப்பியை எவரானும் வெளியிட்டிருக்கலாமே?  அதெல்லாம் ஒண்ணும் வரலை.  ஆனாலும் என்னமோ தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும்  தீனி கிடைச்சுட்டு வருது!  :)))))))))  உண்மையிலே தமிழ்நாட்டிலே பெரும்பாலோர் வேலை தேடி வெளிமாநிலம், அரபு நாடுகள்னு போறதாலே கட்டாயமாய் ஹிந்தி கத்துக்கத் தான் செய்யறாங்க.  ஹிந்தி சினிமா, ஹிந்தி சினிமாப் பாடல்கள்னு எல்லாத்தையும் ரசிக்கும் நாம் மொழியை மட்டும் ஏன் வெறுக்கிறோம்னு புரியலையே?


ஹிஹிஹி, இப்போ ஒரு வாரமா இணையத்தின் ட்ரென்ட் ஹிந்தி மொழி பற்றியே.  ஆகவே அதை மீறாமல் ஹிந்தி பத்தி போஸ்ட் போட்டாச்சு! 

Tuesday, June 17, 2014

ஶ்ரீராமுக்காக வத்தப்பருப்புக் குழம்பு! :)

அரணை புத்தியா, வழக்கம் போல் மறந்துட்டேன்.  அப்புறமா அடுப்பை அணைச்சு வைச்சுட்டுக் காமிராவை எடுக்க மனமில்லாமல், (கையெல்லாம் ஈரம், எண்ணெய்) கைபேசியை எடுத்து வந்தேன்.  அதிலே தான் எடுத்தேன். இன்னிக்கு சூரியனார் அரை நாள் லீவு போட்டிருந்ததால் குழம்பு வைக்கிறச்சே சமையலறையில் வெளிச்சம் இல்லை.  விளக்கைப்போட்டால் சரியா இல்லை.  இப்போவும் சூரியனார் எட்டிப் பார்த்துக் கொண்டு வெளியே தான் நிற்கிறார்.


கடுகு, வெந்தயம், ப.மி.கருகப்பிலை, மி.வ. பெருங்காயம் தாளித்துக் கொண்டு கத்திரி வெண்டை, குடைமிளகாய் போட்டு வதக்கி இருக்கேன். :)




புளி ஜலம் விட்டு உப்பு, சாம்பார்ப் பொடி (ஹிஹி, நான் பண்ணறது ரசப்பொடிதான்) போட்டுக் கொதிக்கையில் எடுத்த படம்.  தான்கள் முழுசாகத் தெரியுது பாருங்க ஶ்ரீராம்.  குழம்பிலும் காய்கள்  குழைந்து மாவாக எல்லாம் ஆகாது. 





மொக்கைப் பதிவுன்னா எல்லோரும் ஓடோடி வராங்கப்பா! :)))) நேத்திக்கு ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு! 

Monday, June 16, 2014

சாம்பாரா வேண்டாம்ப்பா! ஓடிடறோம்! :)

என்னோட பிறந்த வீட்டில் சாம்பார் என்றால் அரைச்சு விட்டுச் செய்யறது தான். ஆனால் மாமியார் வீட்டிலோ பொடி போட்டுக் கூட சாம்பார் செய்வாங்க என்பதோடு தினம் தினம் சாம்பார் தான். :) நமக்கோ சாம்பார் என்றாலே அலர்ஜி!  ஆனால் அப்போல்லாம் வத்தக்குழம்பு சாப்பிடுவேன்.  இப்போப்புளி போட்ட எந்தச் சமையலும் பிடிக்கிறதில்லை. பொரிச்ச குழம்பு, மோர்க்குழம்பு, கலந்த சாதம் வகையறா என்றால் கொஞ்சம் உள்ளே இறங்குது.  ஆகவே மாத்தி மாத்தி யோசிச்சு யோசிச்சுத் தான் செய்வேன்.  நம்ம ரங்க்ஸுக்கு முன்னாடி எல்லாம் எது சாப்பிட்டாலும் சாம்பார் தான் வேண்டும்.  குடித்தனம் வைச்ச முதல் மாசம் என்னோட அம்மாவும், அவரோட அம்மாவும் இருந்தாங்க.  அப்புறமா அவங்க கிளம்பிட்டாங்க.  நாங்க ரெண்டு பேர்  தான்.

"என்ன சமைக்க"னு கேட்டதுக்கு சாம்பார் வை, ஆனால் எனக்கு ரசமும் வேணும் கட்டாயமா!" னு சொன்னார்.  அப்பாடானு இருந்தது.  ஏன்னா கிராமத்திலே அவரோட அம்மா ரசமே வைக்க மாட்டாங்க.  எல்லோரும் சாம்பார் சாதமே 2, அல்லது 3 முறை சாப்பிட்டுடுவாங்க.  நமக்கு  ஒரு தரமே இறங்காது. அதனால் இவருக்கும் ரசம் பிடிக்காதுனு நினைச்சேன்.  ரசம் வைனதும் அப்பாடானு ஒரு நிம்மதி.  மாமியார் சாம்பார் வைத்தால் பொடி போட்டுவிட்டு உப்பு, குழம்புக்குப் போடும் தான் எல்லாத்தையும் புளி ஜலத்திலே சேர்ப்பாங்க. எங்க வீட்டில் பொடி போட்டு சாம்பார்னு இல்லை என்பதால் அரைச்சு விட்டு வைச்சேன்.  நல்லா இருந்தது என்றாலும் அவருக்குப் பொடி போட்ட சாம்பார் தான் வேணும் போல!  கடவுளே!  அது எப்படி வருமோனு பயந்துட்டே மறுநாள் வைச்சேன். நினைச்சாப்போலே சரியா வரலை.  ஏதோ கூட்டுச் சேர்க்கை சரியில்லைனு புரிஞ்சது.  அதோட இல்லை.  அவங்க எல்லாம் மாவு கரைச்சு ஊத்துவாங்க.  நான் மாவே கரைச்சு விடமாட்டேன்.  அரைச்சு விட்டுப் பருப்பும் போட்டுச் சேர்ந்து கொதிக்கையில் வருவது தான்.  ரொம்ப கெட்டியாவும் இருக்காது.  தண்ணியாவும் வராது.  அது என்னமோ குழம்பு, கூட்டில் எல்லாம் மாவை விட்டால் உண்மையான ருசி போய் மாவு ருசி வராப்போல் எனக்கு ஒரு எண்ணம். :)))

சரினு மறு நாளைக்கு எங்க வீட்டில் வைக்கிறாப்போல் பருப்புக் குழம்பு வைச்சேன்.  இதுக்கு அடியிலே தாளிக்கணும்.   நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், மி.வத்தல், ப.மி.கருகப்பிலை போட்டுக் கொண்டு தானையும் போட்டு வதக்கிட்டுப் புளிக்கரைசலை ஊத்திட்டுப் பொடியையும் போட்டு உப்புச் சேர்த்துக் கொதிக்க விடணும்.  அப்புறமா வெந்த து.பருப்பைக் கொஞ்சமாச் சேர்க்கணும், இது சாம்பாரும் இல்லை, வத்தக்குழம்பும் இல்லை.  பருப்புக் கம்மியாகச் சேர்ப்போம்.  அதனால் பருப்புக் குழம்பு!  ஹிஹிஹி, இதை வைச்சதும் கேட்டாரே ஒரு கேள்வி!  என்ன இது , வத்தக்குழம்பிலே வத்தல் போடறதுக்கு பதிலா முருங்கைக்காயைப் போட்டுப் பருப்பும் போட்டு வைச்சிருக்கே!  உங்க வீட்டிலே இப்படித் தான் வைப்பாங்களா?" னு கேட்டார்.  நான் திரு திரு! பின்னே சாம்பார் பொடி போட்டு வைக்க வரலைனு சொல்லிக்க கௌரவம் இடம் கொடுக்க வேணாமா?

இன்னி வரைக்கும்  சாம்பார்  சரியா வராதுங்கறது வேறே விஷயம். அதனாலேயே என்னமோ ரங்க்ஸ் சாம்பார் ஆசையையே விட்டுட்டார். இப்போல்லாம் தோசைக்கு, இட்லிக்கு, அடைக்கு சாம்பார் கேட்கிறதில்லை. தோசைக்குச் சட்னி, தக்காளித் துவையல்னு எதானாலும் போட்டுக்கிறார். ஒண்ணும் இல்லைனா மிளகாய்ப் பொடியோடு திருப்திப் பட்டுக்க ஆரம்பிச்சுட்டார்.  ஹிஹிஹிஹி!!!  உப்புமாவுக்கெல்லாம் ஊறுகாய் கூடத் தொட்டுக்க ஆரம்பிச்சுட்டார்.   தெனாலிராமன் குதிரையாட்டமாப் பழக்கிட்டோமுல்ல!  ஆனால் நம்ம பொண்ணு இதிலே எக்ஸ்பர்ட் ஆயிட்டா! எல்லாம்  பரம்பரை தான் காரணம். நம்ம பரம்பரை சாம்பார்னாலே ஓடற பரம்பரையாச்சே!  

@ஶ்ரீராம், திருத்தியாச்சு! :))))

Saturday, June 14, 2014

மூன்றாம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்???

முன்னே எல்லாம் வயசானா ஞாபகமறதினு சொல்வாங்க.  இப்போல்லாம் அப்படி இல்லை.  எந்த வயசானாலும் மறதி சகஜமாப் போயிருக்கு.  அப்படி இருக்கும்போது ஐம்பது வயதுக்கு மேலான முகுந்தனுக்குக் கேட்கவே வேண்டாம்.  அவசரக்காரர், படபடப்புக்காரர்.  அதோடு உடல்நலக்குறைவும் கூட. அலுவலகம் எடுத்துச் செல்லும் பொருட்களைக் கூட முன் கூட்டியே தயார் செய்து எடுத்து வைக்கும் பழக்கம். ஆனால் இந்தப் பழக்கம் பெரும்பாலோரிடம் உள்ளது.  பள்ளி செல்லும் குழந்தைகள் முதல்நாளே ஷூவுக்கு பாலிஷ் போட்டு, யூனிஃபார்ம் அயர்ன் பண்ணி எடுத்து வைத்து, மறுநாளையப் பாடத்திட்டத்துக்கு ஏற்பப் புத்தகங்களையும் தயார் செய்து வைத்துவிட்டுப் படுக்கச் சென்றால் தான் மறுநாள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் எதையும் மறக்காமல் இருக்க முடியும்.

இங்கே முகுந்தனும் அப்படியே தயார் செய்துக்கிறார்.  கூடவே மாற்று உடைகளும், அதுக்கு இங்கே சொல்லப்பட்டிருக்கும் காரணம் வேறாக இருந்தாலும் பல அலுவலகம் செல்லும் ஆண், பெண்களும் இப்படி ஒரு மாற்று உடையை அலுவலகத்தில் வைத்திருப்பார்கள் தான். கொஞ்ச நாட்கள் அலுவலகம் போய்க் குப்பையைக் கொட்டியதில் இதை நானும் கண்டிருக்கிறேன்.  உடை கிழிந்து போகும் என்று இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் மட்டுமின்றி, மழைக்காலத்தில் ஈர உடையோடு இருப்பதைத் தவிர்க்கும் வண்ணமாகவும் ஒரு மாற்று உடை கட்டாயமாய் இருக்கும். இவை எல்லாமே நல்ல முன்னேற்பாடுகளே. குறை சொல்ல முடியாதவையே.  ஆனாலும் இந்த அதீத முன்னெச்சரிக்கை அவரை எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது என்பதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகுதையா!

ஆனால் இந்த நிகழ்ச்சி நடக்கும் தினம் சனிக்கிழமை அரை நாள் விடுமுறையில் வீட்டுக்கு வரும் முகுந்தன்  மறுநாள் பிள்ளைக்குப் பெண்பார்க்கவேண்டி சென்னைக்குப்பல்லவனில் கிளம்ப வேண்டும்.  பல்லவன்  வண்டி தினமும் காலை ஆறரை மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பும்.  சனிக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு வந்தவர் கொண்டு போகவேண்டிய சாமான்களைச் சரி பார்த்துவிட்டு உணவு உண்டுவிட்டுத் தூங்கப் போகிறார்.  இங்கே தான் எனக்கு முதல்முறையாக இடித்தது.  அவர் தூங்கச் சென்றதோ மதிய நேரம்.  என்னதான் தூங்கினாலும் மணி 5-30 என்று பார்க்கையில் அது காலையா, மாலையா எனப் பார்க்கவில்லை. அவ்வளவு நேரம் தூங்கி இருப்போமா என்னும் சந்தேகம் கூட அவருக்கு எழவில்லை.  அவ்வளவு ஆழ்ந்த நித்திரை.  ஒரு விதத்தில் கொடுத்து வைத்தவரும் கூட.  தன்னை மறந்து தன் நிலை மறந்து தூங்கினாரெனில் அவர் மனம் எவ்வளவு நிஷ்களங்கமாக எவ்வித சிந்தனைகளுமின்றி இருந்திருக்க வேண்டும்!  ஆனால் முதல்நாள் மத்தியானம் படுத்தவர் அப்புறமா எழுந்ததாகச் சொல்லவே இல்லையே?  என்ன இருந்தாலும் அத்தனை நேரமா ஒருத்தர் தூங்கி இருப்பார் என எனக்கு சந்தேகம் வந்தது என்னமோ உண்மை!  கிட்டத்தட்டப் பதினேழு, பதினெட்டு மணி நேரமா உறங்கி இருப்பார்!   அதெல்லாம் அவருக்கு இருந்த அவசரத்தில் தோணவே இல்லை.

மெய்ம்மறந்த தூக்கத்திலிருந்து மழைச்சாரல் பட்டு விழித்தவருக்குக் கால நிலை புரியவில்லை.  மணி 5-30 என்பதும், ஊருக்குப் போக வேண்டும் என்பதுமே நினைவில் இருக்கிறது.  முதல்நாள் மதியம் படுத்தோம் என்பதெல்லாம் அவர் நினைவிலேயே இல்லை போலிருக்கிறது.  அதோடு மழைக்கால இருட்டு வேறு வானத்தை மூடி இருக்கிறது. ஆகவே  அன்று தான் கிளம்பவேண்டிய நாள் என நினைத்து, குளிக்கக் கூட அவகாசமில்லை எனப் பல், கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு, பெட்டியை எடுத்துக்கொண்டு ரயிலுக்குத் தயாராகக் கிளம்பி விடுகிறார். செல்லும்போதே மழை தொடரும் என்பதும் தெரியவர, இவ்வளவு நேரம் கழித்துக் கிளம்பி இருக்கும் தாம் திருச்சி சென்றால் ரயிலைப் பிடிக்க முடியாது என்பதால் ஶ்ரீரங்கம் ஸ்டேஷனுக்குச் செல்லவேண்டி ஆட்டோ பிடித்து ஶ்ரீரங்கம் செல்கிறார். சரியாக ஆறரைக்கே அங்கே சென்று விடுகிறார்.  குளிருக்கு இதமாக காஃபி ஒன்றைச் சாப்பிடுகிறார்.  

6-45 ஆகியிருந்தும் இன்னும் இருட்டாகவே இருந்ததோடல்லாமல் ஸ்டேஷனிலும் யாரும் இருந்திருக்க மாட்டாங்களே!  அதைக் கூடக் கவனிக்கவில்லை இவர் அவசரத்திலும் பதட்டத்திலும். அங்கிருந்த ரயில்வே ஊழியரிடம் பல்லவன் இந்த ப்ளாட்ஃபார்ம் தானேனு கேட்கவே, அவனோ ராத்திரி ராக்ஃபோர்ட் தான் வருமென்றும், பல்லவன் மறுநாள் காலைதான் எனவும் சொல்லவே தூக்கிவாரிப் போட்ட முகுந்தன் ரயில்வே ஸ்டேஷன் கடிகாரத்தைப் பார்த்தால்.  முன்னிரவு ஏழு மணி என்பதை 19-00 எனக் காட்டிக் கொண்டு சிரிக்கிறது அது.

ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர் போலிருக்கு.  அதனால் அன்றைய தின ராசிபலனில் வெட்டிச் செலவு, அலைச்சல்னு போட்டிருந்தது உடனே நினைவுக்கு வரத் தன்னைத் தானே சமாதானமும் செய்து கொள்ள அது ஒரு காரணமாகவும் ஆகிறது.  தான் பகலில் படுத்துத் தூங்கியதில் எழுந்திருக்கும்போது மாலை  5-30 என்பதை மறுநாள் காலை 5-30 என்று நினைத்துக் குழம்பிவிட்டதையும், மறுநாள் பிடிக்க வேண்டிய ரயிலை முதல் நாளே பிடிக்க வேண்டித் தான் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதையும் நினைத்து அவருக்கு இப்போது அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.  முன்னெச்சரிக்கை முன்னெச்சரிக்கை எனத் தான் பாடுபட்டு முன்னெச்சரிக்கையாக இருந்தது ரொம்பவே ஓவராப் போய்விட்டது என்றும் புரிந்தது.  அதுக்கப்புறமா அவர் வீட்டுக்குப் போயிருப்பார்.  கதையில் அதெல்லாம் சொல்லலை தான்.  என்றாலும் நாமே நினைச்சுக்கணும்.  எனக்கு என்ன கவலைன்னா, மறுநாள் பிடிக்க வேண்டிய பல்லவனை அவர் ஒழுங்காப் பிடிச்சாரா என்பது தான்.

அதோடு இன்னொரு விஷயமும் இதிலே இருக்கிறது.  ரயில்வே, பேருந்துப் பயணங்கள், விமானப் பயணங்கள் ஆகியவற்றில் இரவு 12-00 மணியிலிருந்து மறுநாள் தேதி ஆரம்பிப்பதால் இரவு 12--05 என்றால் கூட மறுநாள் தேதியில் தான் டிக்கெட் கொடுத்திருப்பார்கள்.  அதை வைத்து நாம் அந்தத் தேதியன்று இரவு போனோமானால் பயணத்தை மேற்கொள்ள முடியாது.  உதாரணமாக மே ஒன்பதாம் தேதி இரவு 12--05 என்றால் எட்டாம் தேதி இரவே நாம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் எட்டாம் தேதி இரவு பனிரண்டுக்குப் பின்னர் தேதி ஒன்பது ஆக மாறி விடும்.  இந்தத் தேதிக் குழப்பத்தில் பலரும் விமானப் பயணத்தைக் கூடத் தவற விட்டிருக்கின்றனர்.  ஆகவே இதை நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.


என்னவோ எழுதறேன்.  சில சமயம் பரிசு கிடைக்கையில் எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கும்.  என் விமரிசனத்தின் உண்மையான விமரிசகர்கள் வந்து சொன்னால் தான் இது நல்லா இருக்கா இல்லையானு தெரியும். பொதுவா யாரும் குறை சொல்லக் கூடாது என்பதை ஒரு கொள்கையாவே வைச்சிருக்காங்க. :)))) ஆகவே யாரும் குறை சொல்ல மாட்டாங்க.  ஆனால் வைகோ சாரும் இன்னொருத்தரும் வெளிப்படையாகச் சொல்லுவாங்க.  ஏற்கெனவே   வைகோ சார் அவரோட கருத்தை எனக்குச் சொல்லிவிட்டார். அவரைத் தவிர நான் எதிர்பார்க்கும்  ஒரே ஒருத்தர் தான் உண்மையான விமரிசனம் கொடுப்பார்.  அவர் வந்து சொல்றாரானு பார்ப்போம்.  அந்த நபர்


திரு ஜீவி அவர்கள்! :))))))

Monday, June 09, 2014

வெண்கலப் பானையே சிறந்தது! என்னோட ஓட்டு வெண்கலப்பானைக்கே!

16x9  அடி சமையலறையில் ஒரு பக்கம் சாமான்கள் வைக்கும் அலமாரியும், கிழக்கே பார்த்துச் சமைக்கும்படியான சமையல் மேடையும் உண்டு.  சமையல் மேடைக்கு எதிரே பெரிய ஜன்னல்.  ஜன்னலுக்குக் கீழே தான் எல்லோரும் சாப்பிட உட்காருவாங்க.  ஒரே சமயம் நாலு பேர் சாப்பிடலாம்.  அங்கே அப்போ அடுப்புக்கு நேரே இருந்தது பெண்ணரசி.  குக்கரைக் காணோமேனு அடுப்படியில் நான் திகைத்து நிற்க, அரிசியும், ஜலமுமாக அபிஷேஹம் பண்ணிக் கொண்ட மாமனாரும், பெண்ணும் என்னையே பார்க்க, கொல்லையிலிருந்து ரங்க்ஸ், பையர், மாமியார் மூணு பேரும் ஓடோடி வர, குடி இருக்கும் மாமி பாதி சமையலில் ஓட்டமாய் ஓடி வர, அக்கம்பக்கம், எதிர் வீடு, பக்கத்து வீடுகள், பின்னால் இருக்கும் வீட்டு மனிதர்கள் பின்னாலிருந்து தாவிக் குதித்து வர ஒரே அமர்க்களம்.

சமையலறைக்குக் கூட்டமாய் வந்த எல்லோரும் என்னனு கேட்க,  என் உச்சந்தலையிலேயும் அரிசியெல்லாம் விழுந்து இருக்கவே அதைப் பார்த்துப் பையருக்குச் சிரிப்பு வந்திருக்கு போல.  இருந்தாலும் நடந்தது என்னனு புரியலையே?  குக்கரைக் காணோம்னு நான் சொல்ல, சுத்தித் தேட ஆரம்பிச்சாங்க.  அப்போது தான் குக்கர் வெடிச்சிருக்குனே புரிய வந்தது. அன்று வரை குக்கர் வெடிக்கும்னே தெரியாது. குக்கர் மூடி மட்டும் தொட்டி முத்தத்தில் கிடக்க, எகிறிப் பறந்த குக்கர் அங்கே சமையலுக்கு நீர் பிடிக்கும் வாளிக்குள் போய்ச் சமர்த்தாக விழுந்திருந்தது.  அது மேலே எகிறிக் கீழே விழுந்திருந்தால் ஒண்ணு என் மண்டை உடைஞ்சிருக்கும்.  அல்லது கீழே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கோ, மாமனாருக்கோ அல்லது இருவருக்குமோ அடி பட்டிருக்கணும்.  எல்லோரும் பிழைச்சோம். ஒருவழியாக் குக்கரைக் கண்டு பிடிச்சாச்சு. உள்ளிருந்த பாத்திரம் இன்னொரு பக்கம் போயிருந்தது. அதையும் கண்டு பிடிச்சோம்.

அரிசி வீடு முழுதும் சிந்தி இருக்க அதை நானும், என் மாமியாருமா சுத்தம் பண்ணினோம்.  பாதிச் சாப்பாட்டில், இந்த மட்டில் விட்டாங்களேங்கற நினைப்போட எழுந்த பெண்ணரசி, என்னிடம் மெதுவா வந்து, "கோபத்திலே நீ சாதத்தைத் தட்டில் போடறதுக்கு பதிலா தலையிலே போட்டியோனு நினைச்சுட்டேன்!" என்றாளே பார்க்கலாம். எல்லாரிடமிருந்தும் வெடிச்சிரிப்புக் கிளம்பியது.  என்னைக் குழந்தையா இருக்கும்போது சாப்பிடப் படுத்தினால் சாப்பிடலைனா எல்லாச் சாதத்தையும் தலையில் வைச்சுக் கட்டுவேன்னு அம்மா சொல்லுவா.  அதே கதை இங்கே என் பெண்ணிடமும் நான் சொல்லி இருக்க, அவளோ நிஜம்மாவே அப்படிப் பண்ணிட்டேன்னு நினைச்சிருக்கா. அதுக்கப்புறமா அக்கம்பக்கம் சில வீடுகளில் தொடர்கதையாகக் குக்கர் வெடிக்க ஆரம்பிச்சது.  அதுவும் எழுபதுகளில் வாங்கிய குக்கர் தான் வெடிக்கும்.

அப்புறமா லஸ்ஸில் இருக்கும் டிடி கம்பெனிக்கு வெடிச்சகுக்கரை எடுத்துப் போய் அதைக் கொடுத்துட்டுப் புது குக்கர் வாங்கி வந்தேன்.  இப்போ அதுவும் பயன்படுத்தறது இல்லை.  அது ரொம்பப் பெரிசு.  அதுக்கப்புறமா ஒரு ஏழு லிட்டர் குக்கர் வாங்கி அதுவும் பெரிசா இருந்ததுனு சின்ன குக்கர்  3 லிட்டர் வாங்கினோம்.  அதனோட பாத்திரத்தில் தான் இன்றும் சாதம் வைக்கிறேன்.  3 லிட்டர் குக்கரும் சீக்கிரமே வீணாகி விட்டது.  ஹாக்கின்ஸ் குக்கரில் அந்தப் பிரச்னையே இல்லைனு சொல்றாங்க.  ஆனால் அதை மூடுவதற்குள் போதும், போதும்னு ஆயிடுது.  இன்னமும் மூட வருவதில்லை என்பதே உண்மை! :(  இப்போதைக்கு இன்டக்‌ஷன் ஸ்டவிலும் வைக்கிறாப்போல் ஒரு குக்கர் வாங்கி அதிலே தான் சாதம் வைக்கிறேன்.   ஆனால் வெண்கலப் பானை தான் பெஸ்ட்.

அதிலே கஞ்சி வடிக்கையில் சூடு தாங்காமல் ஒரு நாள் சாதமெல்லாம் கொட்டத் தெரிஞ்சதிலே இருந்து ரங்க்ஸ் வெண்கலப் பானையே வேண்டாம். நாள், கிழமைக்கு மட்டும் வைச்சுக்கோனு தடை உத்தரவு போட்டுட்டார். 

Sunday, June 08, 2014

உங்கள் ஓட் வெண்கலப்பானைக்கே!

இப்படியாகத் தானே தினம் தினம் குக்கரோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்தேன்.  அப்போது தான் மண்ணெண்ணெய்க்கு ரேஷன் அறிமுகம் செய்தார்கள்.  இனி மண்ணெண்ணெய் ரேஷனில் தான் கொடுக்கப்படும் எனவும், ஒரு குடும்பத்திற்குப் பத்து லிட்டரிலிருந்து 20 லிட்டருக்குள் தான் கிடைக்கும் எனவும் பத்திரிகைச் செய்திகள் கூறின.  அதற்கு 2 நாட்கள் முன்னர் தான் நான் 20 லிட்டர் மண்ணெண்ணெய் வாசலில் விற்றவரிடம் வாங்கி வைத்திருந்தேன்.  ஆகையால் ரேஷன் கார்ட் வாங்கிப் பதியும் வரை கவலை இல்லை என அலுவலகத்தில் எல்லோரிடமும் பெருமை அடிச்சுண்டு இருந்தேன்.

இங்கே வீட்டுக்கு வந்தால் சமையலறை மேடையிலிருந்த ஸ்டவ் அடுப்புகள் கீழே இறக்கப்பட்டிருந்தன. ஒரு ஓரமாகப் பாவமாக இருந்த குமுட்டிக்கும் பெப்பே!  அங்கே பச்சைக்கலரில் ஒரு நீளமான இரும்பு அடுப்பு இருந்தது. மேடைக்குக் கீழே சிவப்புக்கலரில் ஒரு சிலிண்டரும் இருந்தது.   முதல் முதல் காஸ் அடுப்பும், சிலின்டரும் வந்தபோது எங்களுக்கு தலை தீபாவளி முடிந்து கொஞ்ச நாட்களே ஆகி இருந்தது.  தீபாவளிக்கு மதுரைக்குப் போனப்போவே எங்க அப்பாவிடம் ரங்க்ஸ் தான் காஸ் அடுப்பும், காஸ் கனெக்‌ஷனும் வாங்கப்போவதாய்க் கூறி இருந்தாரா!  அன்னிலே இருந்து எங்க அப்பா ஒவ்வொரு முறை கடிதம் எழுதும் போதும், காஸ் அடுப்பு வாங்காதே! சிலிண்டர் வெடிச்சுடும்.  அதைப் பத்த வைக்கிறது கஷ்டம்.  காஸ் தீர்ந்து போச்சுன்னா திரும்ப சிலிண்டர் வர நாளாகுமாம்.  இங்கே எல்லாம் விசாரிச்சுட்டேன்.  அது வேண்டவே வேண்டாம்னு சொல்றாங்கனு எல்லாம் எழுதிட்டுத் தனியாக  நம்ம ரங்க்ஸுக்கு, "குழந்தையை காஸ் அடுப்பு கிட்டே விடாதீங்க!  அவளுக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை.  புடைவையில் எங்காவது பிடிச்சுக்கும்." என்றெல்லாம் எழுதுவார்.  ஹிஹிஹி, குழந்தை மீன்ஸ் மீ ஒன்லி!  :)))


எல்லோருக்கும் பெப்பே சொல்லிட்டு நம்ம ரங்க்ஸ் நினைச்சதைச் சாதிச்சார்.  நவம்பர் மாதம் 12, 14 தேதிக்குள்ளாக காஸ் கனெக்‌ஷன் வந்தது,  அப்போல்லாம் முன் பதிவு அவசியம்.  ஆனாலும் ஒரே மாசத்துக்குள்ளாக எங்களுக்குக் கிடைச்சது.  அடுப்போட பெயர் ப்ளூ ஃப்ளேம்.  காஸ்ட் அயர்ன் (cast iron) அடுப்பு.  நாங்க வாங்கறதுக்குக் கொஞ்சம் முன்னாலே தான் சித்தி வீட்டில் தி.நகரில் காஸ் வந்திருந்தது.  அப்போ அங்கே கொஞ்சம் பயன்படுத்திப் பார்த்ததில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது ஓரளவுக்குத் தெரியும்.    அடுப்பு 110  ரூ, கன்ஸ்யூமர் சிலிண்டர் டெபாசிட்  50ரூ  காஸ் என்னோட நினைவில் 16 ரூபாயோ, 19 ரூபாயோ தான்.  ஆனால் ரங்க்ஸ் 22 ரூபாய்னு சொல்றார். மொத்தமே 200 ரூக்குள் தான் ஆச்சு!  எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சதும் அந்தப் பணத்தில் ஒரு பவுன் வாங்கி இருக்கலாமே என வருத்தப்பட்டார். :))))



காஸ் வந்ததும் உண்மையிலேயே சமையல் சீக்கிரமா ஆனதோட இல்லாமல் பாத்திரங்களும் தேய்க்க வசதியா இருந்தது.  பின்னாடி மதுரை போனப்போக் குமுட்டி சமையல் தேவாமிர்தமா இருந்தது என்னமோ உண்மை. இந்த காஸ் அடுப்பும், குக்கரும் கல்யாணம் ஆகிப் பதினைந்து வருஷங்களுக்கும் மேல் வந்தது.  பார்க்கப் போனால் ப்ளூ ஃப்ளேம் அடுப்பு இன்னமும் இருக்கு. பெயின்ட் எல்லாம் அடிச்சு அம்பத்தூர் வீட்டில் பத்திரமா வைச்சிருக்கோம். வீடு கட்டிக் கிரஹப் ப்ரவேசம் பண்ணின 83 ஆம் வருஷம் நம்ம ரங்க்ஸும் பையரும் சபரிமலைக்குக் கிளம்ப மாலை போட்டுக் கொண்டாங்க. பையருக்குப் பிரார்த்தனை இருந்தது.  துணைக்கு ரங்க்ஸ்.  ஆகவே காலம்பர சீக்கிரமாவே சாப்பிட்டுடுவாங்க.  ஒரு லீவு நாள் அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமைனு நினைக்கிறேன்.  சாயந்திரம் அவங்க சாப்பிட சுண்டலுக்கு ஊற வைச்சிருந்தேன்.  காலை சமையல் ஆகி மாமனார், ரங்க்ஸ், பையர், பொண்ணு எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க.  அப்போ டேபிள், சேரெல்லாம் கிடையாது.  கீழே தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடறதெல்லாம்.

நான் பரிமாறிட்டு இருந்தேன். பையரும், ரங்க்ஸும் சாப்பிட்டு எழுந்துட்டாங்க. மாமனார் மோர் சாதம் சாப்பிட்டுட்டு இருந்தார்.  பெண்ணரசிக்கு அரிசிச் சாதம்னாலே அலர்ஜி!  மெதுவாக் கொறிச்சுட்டு இருந்தா.  சாம்பார் முடிச்சு, ரசம் வேண்டாம். மோர் தான்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருந்தா.   நானும், என் மாமியாரும் சாப்பிடறதுக்காக இன்னொரு சாதம் குக்கரில் வைச்சுட்டு இருந்தேன்.  குக்கரை மூடிட்டு பொண்ணுக்கு சாதம் போடுவதற்காகப் பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் இருந்து சாதத்தை எடுத்தேன்.  அவளுக்குப் போட நான் திரும்புவதற்குள் எங்கோ பக்கத்தில் பெரிய வெடி சப்தம் கேட்டது. என்னையறியாமல் அடுப்பைத் திரும்பிப் பார்த்தால் அடுப்பில் வைச்ச குக்கர் எங்கே?  காணோமே, காக்கா உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!

Saturday, June 07, 2014

குக்கரா, வெண்கலப்பானையா? சாதம் வடிக்கச்சிறந்தது எது? ஒரு பட்டி மன்றம்!

எல்லோரும் குக்கர் சமையல் எப்போ ஆரம்பிச்சீங்கப்பா?  தெரியலை.  ஆனால் நான் கல்யாணம் ஆனதுமே ஒரு சில மாதங்களில் 3,4 மாசங்களுக்குள்ளாக ஆரம்பிச்சுட்டேன்.   இத்தனைக்கும் அப்போ காஸ் வாங்கவில்லை.  ஸ்டவ் அடுப்புகளும், குமுட்டியும் தான்.  அப்போ மண்ணெணெய் தெருவிலேயே கூவிக் கொண்டு விற்றுக் கொண்டு போவாங்க.  மதுரையிலே எல்லாம் மண்ணெண்ணெய் அல்லது சீமை எண்ணெய் னு சொல்லி விப்பாங்க. பார்த்திருக்கேன். ஆனால் நம்ம அருமைச் சென்னை மாநகரிலே முதல் முதல் மண்ணெண்ணையைக் "கிருஷ்ணாயில்" என்று விற்றதைக் கேட்டதும் இது ஏதோ புதுசு, கோவிலுக்குனு அதுவும் பெருமாள் கோவிலுக்குனு விப்பாங்க போலனு நான் நினைச்சது எனக்குப் பத்துப் பனிரண்டு வயசிலே முதல் சென்னை விஜயத்தின் போது.  அதுக்கப்புறமா வங்கிப்பரிட்சை எழுத சென்னை வந்த போதெல்லாம் சில, பல மாதங்கள் தங்கினதில் கிருஷ்ணாயில் என்பது கெரசின் ஆயில் என்பதன் திரிபு என்பதைப் புரிந்து கொண்டு தலையில் அடித்துக் கொண்டேன்.  சென்னையைப் பிடிக்காமல் போனதுக்கு இன்னொரு காரணமும் கிடைச்சது. :)

விதி யாரை விட்டது? கல்யாணம் ஆகி நேரே புனே சென்றிருக்க வேண்டிய என்னை அங்கே பயமுறுத்தின வாடகை வீட்டுப் பகடித் தொகையால் அரண்டு போன நம்ம ரங்க்ஸ் (பின்னே பகடி கொடுத்து வீடு பிடிச்சால் அப்புறமாத் தம்பி, தங்கைகளைக் கரையேத்துவது எப்படி? குடும்பம் நடத்துவது எப்படி?) சென்னைக்கு மாற்றல் கேட்டு ஏற்கெனவே விண்ணப்பம் போட்டிருக்கார்.  எட்டு ஆண்டுகளாகப் புனே வாசத்தில் இருந்தவருக்கு அவரோட மேலதிகாரி கல்யாணம் பண்ணிக்கோ, மாற்றல் வாங்கித் தரேன்னு விளையாட்டாச் சொல்ல, அதை நம்ப முடியாமல், என்னைப் புகுந்த வீட்டிலேயே அம்போனு விட்டுட்டு, தான் மட்டும் புனேக்கு ரயிலேறினார்.   புனேயின் புறநகர்ப்பகுதியான கடக்வாசலாவுக்கு மாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு அங்கே ராணுவக் குடியிருப்பில் வீடு கிடைக்கும் என்பதால் என்னை அதன் பின்னர் அழைத்துச் செல்ல முடிவு.

ஆனால் ரங்க்ஸ் ஒன்று நினைக்க நம்ம வெங்க்ஸ் அதாங்க திருப்பதி வெங்கடாசலபதி!  அவருக்குத் தான் எங்க அப்பா, அம்மா வேண்டிட்டு இருந்தாங்க, பொண்ணு சீக்கிரம் குடித்தனம் வைக்கணும்னு!  அந்த வெங்க்ஸ் இவர் புனே ரயிலில் ஏறும்போதே நண்பர் ஒருவர் மூலமாச் சென்னைக்கு மாற்றல் கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொல்ல சந்தோஷமாய்ப் புனே சென்ற ரங்க்ஸ் அங்கே இருந்து விடுதலை பெற்றுக்கொண்டு சாமான்களையும் எடுத்துக் கொண்டு, போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்ற கதையாய்க் கிராமத்துக்கு ஒரே வாரத்தில் வந்துவிட்டார். வரும்போதே சென்னையில் வில்லிவாக்கத்தில் வீட்டையும் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துட்டார்.  வில்லிவாக்கம் வந்து குடித்தனமும் போட்டாச்சு.  ஒரே மாசத்தில் வில்லிவாக்கம் பிடிக்காமல் அம்பத்தூருக்கு மாறவும் மாறியாச்சு.  நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு.  அதுக்கெல்லாம் பார்க்கவும் பழைய பதிவுகளை!

அப்போல்லாம் மண்ணெண்ணெய் நிறையக் கிடைச்சதால் ஸ்டவ் சமையல் தான்.  குமுட்டியும் வைச்சிருந்தேன்.  இரண்டு ஸ்டவ், ஒருகுமுட்டி.  ஸ்டவ்வில் சாதம் வைத்துக் குழம்பு, ரசம் பண்ணி, காய்கள் பண்ணினால் குமுட்டியில் பருப்பை வேகப் போட்டு வைப்பேன்.  நடு நடுவில் இரண்டாம், மூன்றாம் காஃபி கலக்கும் வேலையும் குமுட்டியிலே!  வேலைக்கும் போய்க் கொண்டு வெண்கலப்பானையில் சாதம் வைத்துக் கொண்டு மனைவி கஷ்டப்படுவதைக் கண்டு சகிக்காத நம்ம ரங்க்ஸ் திடீரென ஒரு நாள் குக்கர் வாங்கி வந்துவிட்டார்.  எனக்கே அதெல்லாம் தெரியாது.  வாங்கப் போறார்னு எல்லாம் நினைக்கவே இல்லை. நான் தண்டையார்ப்பேட்டையிலிருந்து ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர ஆறு மணி ஆகிடும்.  அவர் நாலு மணிக்கே வருவார்.  வந்து பார்த்தால் சமையலறையில் குக்கர்.


கரெக்டா டிகாக்‌ஷன் மட்டும் ரங்க்ஸ் போட்டு வைப்பார். நான் வந்ததும் தான் காஃபி கலக்கலே.  காஃபிக்கடை முடிஞ்சதும், ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க நான் குக்கரை அடுப்பில் ஏற்றினேன்.  ப்ரெஸ்டிஜ் குக்கர் தான்.  காஸ்கெட்டைப் போட்டுட்டு அழுத்தி மூடக் கூட முடியாமல் அழுகையே வந்தது.  பேசாம வெண்கலப்பானையில் களைந்து போட்டோமா, அரிசி வெந்ததானு பார்த்தோமானு இருக்காமல் இப்படிப் படுத்தறாரேனு ஒரே கோபம். ஆவி வந்ததும் தான், (சேச்சே கோவை ஆவி எல்லாம் இல்லைங்க, குக்கர் ஆவி) வெயிட் போடணும்னு சொல்லி இருந்தாரா?  ஆவி வந்ததும் வெயிட்டை எப்படிப் பார்க்கிறது? மெஷின் இல்லையேனு ரங்க்ஸைக் கேட்க, தலையிலே அடிச்சுக் கொண்டு குக்கர் வெயிட்டை எடுத்து நீட்டினார். அப்போல்லாம் இப்போ மாதிரி மூணு சத்தம், நாலு சத்தமெல்லாம் போடாது குக்கர். ஒரே விசில் தான்.  நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாகக் கொடுக்கும்.  சாதம் வாசனை வந்தால் குக்கரை இறக்கிடலாம்.   உடனே திறக்க முடியாது.  காத்திருக்கணும்.  அதுக்குள்ளே இங்கே குழம்போ, ரசமோ கொதித்துப் பருப்புக்குக் காத்திருக்கும்.  அடுப்பை அணைச்சு வைக்கணும்.  சில சமயம் வாசனை வந்து இறக்கினதும்  உள்ளே திறந்து பார்த்தால் குக்கருக்குள்ளே சாதமாக இருக்கும். (இப்போவும் தான்)  குக்கர் கறுப்பாகாமல் இருக்க உள்ளே புளி வேறே போடுவதால் அந்தச் சாதத்தைச் சாப்பிடவும் முடியாது. தூக்கிக் கொட்டணும்.

பருப்பும் சேர்ந்து விழுந்திருந்தால் கேட்கவே வேண்டாம். தினம் தினம் காலை குக்கரோடு மல்யுத்தம் நடக்கும்.  எல்லாத்தையும் செட் பண்ணி  வைச்சுட்டு மூடுனு ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க, செட் பண்ணி வைச்சுட்டு மூடும்போது என்னால் அழுத்தி மூட முடியாமல் எல்லாமும் உள்ளே கொட்டிக் கலந்து ஒண்ணாய் மண்ணாய் ஆக, ஒரே ரகளை தான்.    இப்போ வர காஸ்கெட்டெல்லாம் அவ்வளவு வலுவாக இல்லை தான்!  இந்தக் கூத்தைப் பார்த்தால் சாதமாய் வடிக்கிறதா, மஞ்சப் பொங்கலாய்ப் பொங்கிடலாமானு கோபமாய் வரும்.  குக்கரைத் தூக்கிக் கடாசிட்டு வெண்கலப் பானையிலேயே சமைச்சுட்டுப்போயிருக்கேன். வசதி பண்ணிக் கொடுத்தாலும் அனுபவிக்கத் தெரியலையேனூ ரங்க்ஸ் சொல்ல, எனக்கு அதிர்ஷ்டமில்லைனு நான் சொல்ல ஆஃபீஸுக்கு முகம் மூணுபடி வெண்கலப் பானையாக ஆக்கிக் கொண்டு போவேன்.

Thursday, June 05, 2014

நான் முதல் முதலாகக் குழம்பு வைத்த போது என்ன நினைத்தேன்!

பள்ளிக்குப் போகும் நாட்களிலே திடீர்னு அம்மா தன்னோட பிறந்த வீட்டுக்குத் தங்கை பிரசவத்துக்கு உதவிக்குப் போக நமக்குச் சமையல் வேலை பிடித்துக் கொண்டது. முதல்நாள் சமைக்கிறச்சே அப்பா வெண்கலப்பானைக்குப் போட வேண்டிய அரிசித் திட்டத்தைச் சொல்லிட்டு, வத்தல் குழம்பு வைத்துக் குட்(கொட்டு) ரசம் வைக்கச் சொன்னார்.  எங்க அப்பா வீட்டில் கொட்டு ரசத்தை குட் ரசம் என்றே சொல்லிப்பழக்கம் ஆயிடுச்சு.  மாத்திக்க முடியலை, விட்டுடுங்க!

அந்த வருஷத்திலே இருந்து தான் ஸ்கூல் பஸ்ஸில் ஸ்கூலுக்குப் போகப் பணமும் கட்டி இருந்தது. ஏழரைக்கு, பாம், பாம், பாம் னு பஸ் வந்து குரல் கொடுக்கும்.  அதுக்குள்ளே சமைச்சுட்டுக் கிளம்பணும்.  என்ன?  வயசா? வயசெல்லாம் கேட்காதீங்க!  சின்ன வயசு என்பதால் திருஷ்டிப் பட்டுடும். ஆனால் நான் சமைக்க ஆரம்பிச்சு கோல்டன் ஜூபிளி கொண்டாடிட்டு இருக்கேன் இப்போ.  ஸ்கூலுக்கு லேட்டாவும் போக முடியாது. கிரவுண்டைச் சுத்தி ஓடணும்.  கிரவுண்ட் சும்மா ஒரு 2,3 மைலுக்குள் தான் இருக்கும்.

ஆகவே காலம்பர சீக்கிரமே எழுந்து, {ம்ஹூம், அதெல்லாம் எழுப்பி விடற வேலையெல்லாம் கிடையாது, நாமே தான் எழுந்துக்கணும், இப்போ அதே பழக்கத்தில் தானே முழிச்சுக்க வந்தாச்சு என்றாலும் ஒரு ஆறு மாசமாக் காலம்பர எழுந்துக்க முடியலை.  ஐந்தரை ஆயிடுது பல நாட்கள்! :(} அதை விடுங்க.  சீக்கிரமா எழுந்து பள்ளிப் பாடங்களை முடிச்சுக் கொண்டு குளிச்சுத் துவைச்சு,உலர்த்திட்டு வந்து சமைக்கணும்.  குளியலறை ஒன்றே ஒன்று.  நாலு குடித்தனங்கள்.  ஒரு வீட்டில் குறைந்தது நான்கு நபர்கள்.  எல்லோருக்கும் காலை அவசரம். அதிலே தான் குளிச்சுத் துவைச்சாகணும்.

எல்லாம் முடிச்சுச் சமைக்க வந்தாச்சு.  சாதம் வடிச்சாச்சு ஒரு குமுட்டியிலே. இன்னொரு குமுட்டியிலே ரசமும் வைச்சேன்.  புளி போடுவாங்களானு சந்தேகம்! எங்க பகுதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தால் அடுத்த பகுதி சமையலறையிலே இருக்கும் மாமி பதில் கொடுப்பாங்க.  அவங்களோட வழிகாட்டுதலின் பேரில் ரசத்துக்கும் புளி உண்டுனு தெரிஞ்சது.  குழம்புக்கும் புளி கரைக்கணுமாமே!  அதையும் கரைச்சு வைச்சாச்சு! ரசம்  சின்னக் குமுட்டியில் ஆகி விட்டது.  அதிலேயே கல்சட்டியைப் போட்டுக் குழம்பு வைக்கணும்.  பெரிய குமுட்டியில் காய் பண்ணியாகணும்.  அதுக்குள்ளே ஸ்கூல் பஸ் பாம் பாமெனக் கத்த, இப்போ வரலை, அடுத்த ட்ரிப்புக்கு வாங்கனு டிரைவர் கிட்டே கூடத்தில் குடி இருந்த மாமியை விட்டுச் சொல்லச் சொல்லிட்டுக் காயைப் பெரிய குமுட்டியில் போட்டுவிட்டு, சின்னக் குமுட்டியில் போட்டிருந்த கல்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தாளிக்க ஆரம்பித்தேன்.

என்னென்ன தாளிப்பாங்க?  சரியாத் தெரியலை.  எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் தாளிப்போம்னுட்டுப் பக்கத்துப் போர்ஷன் மாமியைக் கேட்காமலேயே கடுகு, உபருப்பு, கபருப்புனு எல்லாத்தையும் போட்டு சுண்டைக்காய் வத்தலையும் போட்டு நிறைய மிளகாய் வத்தலையும் போட்டுத் தாளிச்சுட்டேன்.  புளிக்கரைசலையும் ஊத்தியாச்சு.  உப்பும் போட்டாச்சு.  ஆனாலும் குழம்பில் நிறம் வரலை.  ஹிஹிஹி, பொடி போடணும்னு தெரியலை.  எங்க வீட்டிலே ரசப்பொடினு தான் பண்ணுவாங்களா.  அது ரசத்துக்கு மட்டும்னு நினைச்சுட்டேன். நிறத்துக்காக மஞ்சள் பொடியைப் போட்டுட்டேன்.  குழம்பும்கொதிச்சது.  கீழே இறக்கிட்டு அவசரம் அவசரமாச் சாப்பிட்டுட்டுப் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க நேரு பிள்ளையார் சந்திப்பை நோக்கி நடந்தேன்.

பள்ளியிலே குழம்பே நினைவில் இருந்தது.  எப்படி இருந்ததோ என்னமோனு!  சாயந்திரமா வந்தால் ஒரே பாராட்டு மழை.  புளிக்காய்ச்சல் மாதிரி இருந்ததுனு. அப்ப்பாடா!   பெருமூச்சு விட்டுட்டுத் தப்பிச்சுண்டேன். மெதுவாப் பக்கத்துப் போர்ஷன் மாமியிடம் மாமி அம்மா வைக்கிறாப்போல் குழம்பு இல்லையே என்ன காரணம்னு கேட்டால் அவங்க எப்படி வைச்சேனு கேட்டுட்டு அப்புறமாச் சொல்றாங்க பொடி போடணும்னு.  மி,வத்தல் ஒண்ணோ, ரெண்டோ தாளிச்சால் போதுமாம்!  ஹிஹிஹி, அதுக்கப்புறமா என்னதான்குழம்பு வைச்சாலும் அந்த முதல் குழம்பு மாதிரி இல்லைனே அப்பா சொல்லுவார்.  நல்லவேளையாக் கண்டு பிடிக்கலை. அல்லது போனால் போகட்டும்னு விட்டாரோ தெரியலை!  :)))))))

இந்தப் புராணம் இப்போ எதுக்குனு கேட்கிறீங்களா?  நேத்துச் சுண்டைக்காய் வத்தல் குழம்பு வைச்சிருந்தேன்.  நிறைய மிவத்தல் போட்டதால் அந்தப் பழைய ருசியில் வந்திருந்தது.  பொடியும் போட்டேன்.  கொஞ்சமாக.