மின் தமிழ்க் குழுமத்தில் சமீபத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியான ஜெர்மனுக்கு பதிலாக சம்ஸ்கிருதம் படிக்கச் சொன்னது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒருவர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளே மூடப்பட வேண்டும் என்று சொல்ல, நானும் இன்னொருவரும் அது மத்திய அரசில் ராணுவம் மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகள், அடிக்கடி மாற்றலாகும் அலுவலர்கள் போன்றோரின் குழந்தைகளுக்கென ஏற்படுத்தப்பட்டது. அதை மாற்றினால் ஊர் ஊராய் மாற்றலாகிச் செல்லும் குழந்தைகளின் படிப்பில் ஏற்படும் சிரமங்களை எடுத்துச் சொன்னோம். இன்னொருத்தர் ஏன் மற்றக் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்டார்.
எனக்குத் தெரிந்து முன்னால் எல்லாம் மற்றக் குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டது இல்லை. இப்போது கொஞ்சம் தென்னாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று இன்னொருவர் சுட்டிக் காட்டினார். ஆனாலும் நான் எனக்குத் தெரிந்தவரை அவற்றை விளக்கினேன். அது கீழே!
//1. அப்படியானால் மற்ற குழந்தைகளை ஏன் சேர்த்துக்கொள்கிறார்கள்?//
மற்றக் குழந்தைகள் மத்திய அரசுப்பாடத்திட்டத்தை ஏற்று நடத்தும் தனியார் பள்ளிகளில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கேந்திரிய வித்யாலயாவில் முதலில் ராணுவம், பின்னர் ராணுவக் கணக்குத் துறை போன்ற இரு துறைகளுக்கும் தான் முதலிடம் கொடுக்கப்படுகின்றது. அதன் பின்னர் மற்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள். அவர்களுக்கும் பெற்றோர் இருவரில் ஒருவருக்கு அல்லது தந்தைக்குச் சேரும் வருஷத்தில் இருந்து அதற்கு முந்தைய ஏழு வருடங்களில் மூன்று மாற்றல்கள் ஆகி இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகள் இல்லாமல் சேர்க்கப்படுபவர்கள் முதலில் ராணுவத்தினரின் குழந்தைகளும், அதன் பின்னர் ராணுவக் கணக்குத் துறையினரின் குழந்தைகளுமே ஆவார்கள். ஒரு வகுப்புக்குக் குறைந்த பக்ஷம் மூன்று பிரிவுகள் உண்டு. மூன்றிலும் சேர்ந்து தொண்ணூறு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது. முன்னெல்லாம் 25 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலே தனியாகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இப்போது ஜனத்தொகையை உத்தேசித்து 30 குழந்தைகள். ஆகத் தொண்ணூறு குழந்தைகள் மேற்கண்ட பிரிவுகளில் நிரப்பப்பட்டிருந்தால் மற்றக் குழந்தைகள் இடம் பெறுவது கடினம்.
எனக்குத் தெரிந்து ஆவடியில் உள்ள மூன்று கேந்திரிய வித்யாலயாவிலும், சென்னை அண்ணாநகர் கில் நகர் போன்றவற்றில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களிலும் ஒரு வகுப்பில் ஒன்றிரண்டு பேர் மற்றக் குழந்தைகளாக இருக்கலாம். அடையார் ஐஐடியிலும் அதற்கு வெளியிலும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் ஐஐடிக்காரர்களின் குழந்தைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பின்னர் மற்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் இடம் பெறுவார்கள். மத்திய தொழிலாளர் நல வாரியத்தில் வேலை செய்த என் நாத்தனார் கணவரின் குழந்தைகள் ஐஐடி கேந்திரிய வித்யாலயாவிலேயே படித்தனர். எங்கள் குழந்தைகள் ராஜஸ்தான், செகந்திராபாத், ஆவடி ஏர்ஃபோர்ஸ் கேவி, மீண்டும் ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் படித்தனர். ஆக இவர்கள் தமிழை வீட்டில் வேண்டுமானால் கற்கலாமே தவிர பள்ளியில் கற்றால் மற்ற ஊர்களின் கேந்திரிய வித்யாலயாக்களில் இருக்கும் மாநில மொழி வேறாக இருக்கும். இந்தப் பிரச்னைக்காகத் தான் அவர்கள் இருவருமே சம்ஸ்கிருதமே படித்தனர். அதுவும் எட்டாம் வகுப்பு வரை தான். இதனால் ஒன்றும் குறைந்து போகவில்லை.
நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒருவரான அன்புமணி ராமதாஸின் பெண்கள் இருவரும் டில்லியில் மத்திய அரசுப் பாடத்திட்டத்தை ஏற்று நடத்தும் தனியார் பள்ளிகளிலேயே படித்தவர்கள். தமிழை வீட்டில் தான் கற்றனர். இது போன்ற உதாரணங்கள் நிறையச் சொல்லலாம். :))))
//2. தமிழ்நாட்டில் இருக்கும், தமிழைப் பயின்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் தமிழை விட்டுவிட வேண்டியதுதானா?//
இந்தக் கேள்வியே புரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றால் தான் தமிழை விட வேண்டி இருக்கும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை விடுதியில் அல்லது தாத்தா, பாட்டியிடம் விட்டுச் செல்கின்றனர். அல்லது மனைவி மட்டும் குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துகின்றனர். மொத்த மத்திய அரசு ஊழியரில் பத்து சதவீதத்துக்கும் குறைவானவர்களின் குழந்தைகளே கேந்திரிய வித்யாலயாவில் படிப்பார்கள். எல்லோரும் படிப்பதில்லை. ஏனெனில் மேல்படிப்பு என வரும்போது மாநில அரசு பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் குழந்தைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எங்கள் பையர் மாநில மொழிப் பாடத்திட்டத்தில் சேரச் சம்மதிக்கவில்லை. நாங்கள் +1, +2 ஆகிய வகுப்பிலாவது மாநில மொழிப் பாடத்திட்டத்துக்கு மாறச் சொன்னோம். அப்படியும் அக்கா, தம்பி இருவருமே +2 வரை மாற மாட்டேன் என்று சொல்லிவிட்டனர்.
//3. தமிழ்நாட்டில் இருக்கும், தமிழைப் பயின்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் தமிழ்நாட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் சென்றால?.....//
கட்டாயமாய்க் குழந்தைகள் கஷ்டப்படத் தான் செய்யும். ஆனால் ஏற்கெனவே கேந்திரிய வித்யாலயாவில் படித்து வந்தால் அந்த வருடம் எந்த மாதம், எந்தத் தேதியானாலும் மாற்றலான ஊர் போய்ச் சேர்ந்த உடனேயே குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிடலாம். அப்படி இல்லாமல் கான்வென்ட் போன்ற படிப்பெனில் அதற்கேற்ற பள்ளிகளில் சேர்க்கலாம். ஆனால் ஆங்கிலம் தவிர்த்து மற்ற இரண்டாம் மொழிப்பாடத்தில் கட்டாயமாய்ப் பிரச்னை வரும்.
4. ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் எந்த விதத்தில் இந்தியாவுக்கு நெருங்கிய மொழிகள்? அவைகளை ஏன் இந்தியக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்?
ஜெர்மன் மொழி சம்ஸ்கிருதத்துடன் கொஞ்சம் தொடர்புடையதாய்க் கூறுகின்றனர். மேலும் ஐரோப்பிய மொழி ஒன்றைக் கற்றால் வெளிநாட்டுப் படிப்புக்கு வசதி என்னும் நினைப்பாக இருக்கலாம்.
5. இதனால், தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற குழந்தைகளும் தமிழைப் புறக்கணிப்பதுதான் மிச்சமாகிறது.
குழந்தைகள் புறக்கணிக்கின்றனரோ இல்லையோ, மற்றவர்கள் புறக்கணிக்கின்றனர். எந்தப் பத்திரிகை இப்போதெல்லாம் தூய தமிழில் வருகிறது? கல்கிப் பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் கூட இப்போது பிரபலமாக இருக்கும் தங்கிலீஷ் மொழியில் தான் எல்லாமும் வருகின்றன. வருடம் முழுவதும் வீ வில் மீட்! என்று போடுகின்றார்கள். இதை யார் கண்டிக்கின்றனர்? தொலைக்காட்சித் தமிழை எவர் திருத்துகிறார்கள். தொலைக்காட்சிச் செய்திகளில் வரும் எழுத்துப் பிழைகள், பொருட்குற்றங்கள் கணக்கிலடங்காதவை. அவற்றை எவரும் குறிப்பிடுவது கூட இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் இப்போதைய பெற்றோர், ஆசிரியர் போன்றவர்களில் பலருக்கும் நல்ல தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை என்பது சுடும் உண்மை.
6. மத்திய அரசு ஆங்கிலத்தில்தான் எல்லாக் கடிதங்களையும் எழுதுகிறது. எனவே, இந்தி எதற்காகத் தேவை?
ஹிந்தி கற்றுக் கொள்வது எளிது. ஹிந்தி தெரிந்தால் இந்தியாவின் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பிழைப்பு ஓடி விடும். இவ்வளவு ஹிந்தியை வெறுக்கும் நாம் இங்கே உள்ள கட்டுமானத் தொழில்களில் இருந்து மற்ற எல்லாத் தொழில்களிலும் ஊடுருவி இருக்கும் வட மாநிலத்தவரை நினைத்துப் பார்க்கிறோமா? அவர்கள் இங்கே வந்து கட்டுமானத் தொழிலில் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர். இன்றைய தினம் அலுவலகங்களில் கூட பெயரோடு சேர்த்து "ஜி" போட்டு அழைக்கும் வழக்கம் பெருகி வருகிறது. வட மாநில உணவு வகைகள் தான் ஹோட்டல்களில் கூட அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பலருக்கும் ஹிந்தியில் ஒரு சில வார்த்தைகள் தெரியத்தான் செய்கிறது.
ஒரு சிலர் ஹிந்தி தெரிந்தால் வடமாநிலங்களில் வேலை கிடைப்பது சுலபம் என்றால் அங்கிருந்து இங்கே ஏன் வந்து பானிபூரி விற்கின்றனர் என்று கேட்கின்றனர். பானிபூரி விற்கத்தான் வருகின்றனரே தவிர, பெரிய அலுவலகங்களில் வேலை பார்க்க வருவது இல்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அங்கே அடிமட்ட நிலையில் இருப்பவர்கள் இங்கே பிழைக்க வந்து தங்களுக்குத் தெரிந்த பானிபூரி விற்பனையையும், சமோசா விற்பனையையும், பொம்மைகள் விற்பதையும் செய்கின்றனர். இது எதுவும் தெரியாதவர்கள் கட்டுமானத் தொழிலுக்குச் செல்கின்றனர். கடந்த பத்து வருடங்களில் இது அதிகரித்துள்ளது. கட்டுமானத் தொழிலுக்குத் தமிழ்நாட்டு மேஸ்திரிகள், கொத்தனார்கள் இப்போது அதிகம் காண முடியவில்லை.
7. மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் என்பதானால் இந்தி ஏன் கற்றுக்கொள்ளவேண்டும்? ஆங்கிலத்தில் அறிவு பெறுகிறார்களே, அது போதாதா?//
இரு மொழிப் பாடத்திட்டம் என்பதால் வேறு ஏதானும் மொழியைக் கொண்டு வருவதற்குப் பதிலாக ஹிந்தியை வைத்திருக்கலாம். கற்கவும் எளிது. மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மொழி என்பதால் எதை வைப்பது என்னும் குழப்பமும் இருக்காது. ஆங்கிலம் எப்படி அனைவரையும் இணைக்கிறதோ அப்படி ஹிந்தி மூலமும் இணைய முடியும் என்பதும் ஒரு காரணம். ஆனால் தனியார்களால் நடத்தப்படும் மத்திய அரசுப் பாடத்திட்டத்தின்படி நடைபெறும் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் தமிழையே கற்பித்து வருகின்றன. மூன்றாம் மொழியாக சம்ஸ்கிருதம், ஹிந்தி தவிர வேறு ஏதேனும் அந்நியமொழியைப் படிக்கலாம். இது எல்லாம் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இவ்வளவு எதிர்ப்புத் தமிழ்நாட்டில் தான். மற்ற மலையாளம், தெலுங்கு, கன்னடம், மஹாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய திராவிட நாடுகளில் இல்லை என்பதையும் கவனிக்கலாம். எது எப்படியானாலும் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் முதலில் குழந்தைகளே. தங்களுக்கு எது வசதி, எந்த மொழியில் படித்தால் பாடம் புரிகிறது என்பதை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு மூன்று மொழிகளை கற்பிப்பது சிறப்பு. ஏனெனில் அதிலிருந்து குழந்தைகள் தேர்ந்தெடுக்கலாம். இளமையில் மொழிகளைக் கற்பதும் எளிது.