எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 28, 2015

ஜக்குவைப் பார்க்கச் சென்றோம்!

கொஞ்சதூரம் போக வேண்டி இருந்தது. தேநீர்க்கடை மாதிரியே தெரியாத ஒரு கடை அப்போது தான் திறந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். ஒடிஷாவில் தமிழ்நாட்டுக் கலாசாரங்கள் கலந்திருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.  அங்கே போய்த் தேநீர் எங்கே கிடைக்கும் என்று கேட்டோம். கடைக்காரர் அங்கிருந்த பெஞ்சைக் காட்டி உட்காரச் சொன்னார். பத்து நிமிடத்தில் தயார் செய்து தருவதாகச் சொன்னார். உடனே தேநீர் வேண்டாம், காஃபி இருந்தால் நல்லது என்றோம். சரி என ஒத்துக் கொண்டார். எதிரேயே வீடு. அங்கிருந்து அவரின் இரு பையர்களும் வந்து உதவ விரைவில் அடுப்பை மூட்டிக் காஃபி போட்டுக் கொடுத்தார். சர்க்கரை சேர்த்த காஃபியை முதலில் கொஞ்சமாக ஒரு சின்னத் தம்பளரில் ஊற்றி எங்களை ருசி பார்க்கச் சொல்லிச் சரியாக இருக்குனு சொன்னதுமே ஃப்ளாஸ்கில் ஊற்றினார்.

அதே போல் இங்கேயும் சித்திரகூடத்தில் இருந்தாப்போல் ஆட்டோக்கள் அனைத்துமே பெரிய பெரிய ஷேர் ஆட்டோக்கள். அவற்றை நமக்கு மட்டும் தேவை என்றால் சித்திரகூடத்தில் செய்தாப்போலயே, இங்கேயும், "ரிஜர்வ்" செய்துக்கணும். :) முதல்நாள் சாப்பிட்டுவிட்டு வரும்போது இதைக் குறித்து அறிந்தேன். காஃபியை வாங்கிக் கொண்டாச்சு. மறுபடி விடுதிக்குச் சென்றோம். கீழே உள்ள இருபது படிகளை ஏறி மேலே முதல் தளத்துக்கு வந்து அங்கிருந்து ஐந்தாம் தளம் ஏற வேண்டும். எப்போவுமே இறங்குவதை விட ஏறுவது சிரமம். வழியில் ஒருத்தருக்கு எங்களைப் பார்த்ததுமே கவலை வந்து விட்டது! முடியுமா எனத் திருப்பித் திருப்பிக் கேட்டார். வேறே வழியே இல்லையே! ஏறித் தானே ஆகணும்னு ஏறினோம். மேலே போய்க் காஃபியைக் குடித்துவிட்டு வெந்நீர் வருகிறதா என்று பார்த்தால் நாங்கள் தங்கி இருந்த அறையின் குளியலறையில் கீசர் வேலை செய்யவே இல்லை. தண்ணீரே வரலை. ஆகவே இரண்டாம் எண் அறைக்குப் போய் அங்கே குளித்து வெளியே செல்லத் தயார் ஆனோம் இருவரும்.

விடுதிக் காப்பாளர் வரலையேனு தொலைபேசி விசாரித்ததில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். எட்டேகால் மணிக்கெல்லாம் வந்தும் விட்டார். அவரிடம் நாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லிப் புலம்பி விட்டு வண்டி எப்போது வரும்னு கேட்டோம்.  அன்றைய தினம் திங்கட்கிழமை. முந்தைய இரு தினங்கள் சனி, ஞாயிறாக இருந்ததால் அந்த வளாகத்தில் உள்ள அனைவரும் தண்ணீரை முழுக்கப் பயன்படுத்தி இருப்பதால் இந்தப் பிரச்னை என்று சொன்னார். அப்படியே இருந்தாலும் முதல் நாளே மோட்டார் போட்டிருக்க வேண்டும். என்னிக்கோ வந்து தங்கும் நமக்கே இவ்வளவு கஷ்டமா இருந்ததே, மத்தவங்களுக்கு இதனால் பாதிப்பு இல்லையானு மண்டை காய்ந்தது. சற்று நேரத்தில் வண்டி கீழே காத்திருப்பதாகத் தகவல் வந்தது. ஓட்டுநரை மேலே வரச் சொன்னார் காப்பாளர். மறுபடி ஐந்து மாடி இறங்க வேண்டுமே! அலுப்பாக இருந்தது. லிஃப்ட் சரியாகப் பத்து மணி ஆகும் எனவும் மாலை நாங்கள் வருவதற்குள்ளாகச் சரியாகிடும் என்றும் சொன்னார் காப்பாளர்.

ஓட்டுநர் அதற்குள்ளாக மேலே வர அவரிடம் எங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஒப்படைத்த காப்பாளர் முதலில் தென்னிந்திய உணவு விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று காலை உணவை நாங்கள் சாப்பிட ஏற்பாடு செய்யும்படியும் கூறினார். ஓட்டுநர் வேகமாகக் கீழே இறங்க நாங்கள் ஒவ்வொரு படியாக இறங்கிச் சென்றோம். முதலில் ஜக்குவை ( புரி ஜகந்நாதரை) பார்த்துடலாம்னு சொன்னோம். போகும் வழியிலேயே தென்னிந்திய உணவு விடுதி வரும் என்றும் அங்கே காலை உணவைச்சாப்பிடலாம்னும் சொன்னார் ஓட்டுநர்.  இளைஞர்! பொறுப்பாகவும், பணிவாகவும் இருந்தார்.  வழியில் தென்னிந்திய உணவு விடுதி கண்ணிலேயே படவில்லை. கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. ஓட்டுநர் உணவு விடுதி பூட்டி இருப்பதாகவும் திறக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டிவிட்டு வழியில் இருக்கும் வேறொரு ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றார்.

அந்த ஓட்டலில் பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் உணவு தயாரிப்பதாகக் கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தது. ஆங்கிலம், ஒரியா, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் போட்டிருந்தார்கள். அநேகமாக ஆங்கிலமும், ஹிந்தியும் தெரிந்தாலே போதுமானது. ஒரியா தெரிய வேண்டும் என்பதில்லை. ஆகவே எங்களுக்குச் சிரமம் தெரியவில்லை. அங்கே சென்று பூரி, பட்டாணி சப்ஜியோடு சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடித்தோம். ஒரியர்களும் காலை உணவோடு வடை சாப்பிடுகின்றனர். நம்ம ஊரில் செய்யறாப்போல் அரைத்த மாவில் வடைகள் சூடாகத் தட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சூடாக விற்பனையும் ஆகின்றன. பின்னர் பூரியை நோக்கிப் பயணித்தோம். புவனேஸ்வரிலிருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தூரத்தில் உள்ளது புரி ஜகந்நாதர் ஆலயம்.




இந்தக் கோயிலில் கண்ணனுக்கும், பலராமன் மற்றும் சுபத்ராவுக்கும் தான் முக்கியத்துவம். இங்கேயும் எல்லா வட இந்தியக் கோயில்களைப் போலவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நடை சார்த்திப் பின் ஆரத்தியோடு திறக்கின்றனர்.  நாங்கள் சென்றபோது காலை பதினோரு மணி இருக்கும். அதற்குள்ளாக எனக்கு ஒரிசாவில் இருக்கும் என் நாத்தனார் பையர், மகள் ஆகியோரிடமிருந்து எஸ் எம் எஸ் செய்திகள் வந்தன. புரி கோயிலில் களவு அதிகம் போகும் என்றும் கைப்பை, பர்ஸ், பணம் ஆகியன கூட்டத்தில் பிடுங்கப்படும் எனவும், நகைகள் அணிய வேண்டாம் எனவும் செய்திகள் வந்தன. அதோடு கோயிலின் பாண்டாக்கள் அதிகம் பணம் பிடுங்குவார்கள் எனவும் கூறினார்கள்.  என் மைத்துனரும் அதைக் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் கூடியவரை பாதுகாப்பாகவே இருந்தோம்.  ஆகவே இதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லைமேலும் அலைபேசிகள், தோல் பொருட்கள் போன்றவையும் அனுமதி இல்லை.

பூரியில் வண்டியிலிருந்து இறங்கும்போதே ஒரு பண்டா எங்களை அணுகினார். இளவயதுக்காரர் தான். தான் எங்களைக் கூட்டத்தில் இடிபடாமல் அருகே அழைத்துச் சென்று தரிசனம் பண்ணி வைப்பதாகவும், ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தால் போதும் எனவும் கூறினார். எங்கள் ஓட்டுநரிடம் பேசிவிட்டு அவர் சரி என்று சொல்லவும் அந்த இளைஞரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டோம்.  அங்கிருந்து கோயில் இருக்கும் இடம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் என்பதால் அவரே ஒரு ஆட்டோவை எங்களுக்குத் தனியாக "ரிஜர்வ்" செய்து கொடுத்தார். எங்கள் அலைபேசி போன்ற பொருட்களை வண்டி ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் அந்த ஆட்டோவில் சென்று கோயில் வாசலில் இறங்கினோம். அந்த வாசலில் அதிகக் கூட்டமில்லை. பிரதான வாயிலில் தான் கூட்டம் அதிகம் இருக்கும் என்றனர். மேலும் இந்த வாயிலில் இருந்து கருவறை அருகே இருப்பதாகவும் தெரியவந்தது.

பாதுகாப்புச் சோதனைகள் முடிந்தன. நாங்கள் கோயிலின் பிரகாரத்தினுள் நுழைந்தோம்.  அதற்கும் சில, பல படிகள் ஏறணும். பிரகாரம் சென்றதும் அங்கிருந்து கருவறை செல்லும் முன்னர் ஏதேனும் பிரசாதம் வாங்கிக்கணும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம். சரினு ரூ. 200/- கொடுத்து ஒரு பிரசாதம் வாங்கிக் கொண்டோம். பிரசாதம் இருந்தால் உள்ளே செல்வதும் விரைவில் நடக்கும் என்பதும் காரணம். வழிகாட்டி இளைஞர் எங்களைக் கருவறைக்குச் செல்லும் வழியில் கூட்டிச் சென்றார். அங்கே மேலும் இருபது படிகள், ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரத்தில் அமைந்திருந்தன. ஏறினதும் கருவறைக்குச் செல்லலாம் எனத் தெரிந்தது. அந்தப் படிகளையும் ஏறினோம். கருவறைக்கு மிக அருகே உள்ள இடத்திற்குச் சென்று விட்டோம். கிட்டத்தட்ட அது அர்த்தமண்டபம் போல! ஆனால் முதலில் எங்களைக் காவல்காரர்கள் உள்ளே விடவில்லை. அப்புறம் நம்ம வழிகாட்டி வந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

அந்த இடம் மட்டும் தனியாகச் சுற்றிலும் கம்பிக்கிராதிகள் போட்டுக் கதவுகளோடு இருந்தது. சந்நிதியின் வாயில் அப்போது மூடி இருந்தது. கிட்டத்தட்ட 20, 25 அடி உயரம் கொண்ட கதவுகள். கருவறைக்கு நேரே நாங்கள் நின்று கொண்டோம். எங்களுக்குப் பின்னர் இதே போன்ற வழிகாட்டிகளின் உதவியோடு வந்த சிலரும் நின்று கொண்டனர்.  இதன் பின்னால் பொது தரிசனத்திற்கு ஆயிரக்கணக்காக மக்கள் கூடி நின்று கொண்டிருந்தனர். சந்நிதி திறந்த சிறிது நேரத்தில் அந்த வாயிலும் திறந்துவிடப்படும் எனவும் அப்போது கூட்டம் தாங்காது என்றும் நெரிசலில் மாட்டிக்காமல் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டோம். ஏகாக்கிர சிந்தையோடு சந்நிதி திறக்கப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இந்தக் கோயிலின் ஒரு பிராகாரத்தில் ஶ்ரீமத் ராமானுஜர் நடந்திருப்பதாக மின் தமிழில் நா.கண்ணன் கூறி இருந்தார். அது பற்றி விசாரித்தால் யாருக்கும் புரியலை!  நா.கண்ணன் ஜக்குவை விசாரித்ததை மட்டும் அவரிடம் தெரிவிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

14 comments:

  1. ஜக்கு ரங்கு ஆஞ்சி என்று உரிமையுடன் நீங்கள் குறிப்பிடுவதை ரசிக்கிறேன் அடாது பிரச்சனைகள் வந்தாலும் விடாது நீங்கள் முயற்சிப்பதும் ரசிக்கிறேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஜக்குனு சொல்றதிலே வர உரிமையும் நெருக்கமும் ஜகந்நாதர், ஜகந்நாதப் பெருமாள் என்பதிலே வருதா? அதான்! :)

      Delete
  2. பூரி சாப்பாட்டிட்டு தான் பூரிக்கு போகணும் போல

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை! இட்லி தான் சாப்பிட நினைச்சோம். அதான் ஹோட்டலே கிடைக்கலையே! :)

      Delete
  3. யார் பையன் நினைவுக்கு வந்தது. இத்தனை சிரமப்பட்டு ஜகன்னாதனை நன்றகத் தரிசித்து இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. யார் பையன்? சினிமாவா? புரியலை வல்லி! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

      Delete
  4. மாடி ஏறி, இறங்கி நல்ல அனுபவம்! ஜக்குவை சேவித்தபின் அசதி, அலுப்பு எல்லாம் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.
    இதுவரை இங்கு போனதில்லை. இனியும் கேள்விக்குறிதான்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை போயிட்டு வாங்க, புவனேஸ்வரில் தங்கிக் கொண்டு எல்லா இடமும் போகலாம். புவனேஸ்வரிலேயே பல கோயில்கள் இருக்கின்றன.

      Delete
  5. ஜக்குவை பார்த்த சந்தோஷத்தில் கஷ்டங்கள் எல்லாம் மறைந்து இருக்குமே! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ்! ஆமாம்.

      Delete
  6. ஹப்பாடா சென்ற பர்ப்பஸ் ஜக்குவை தரிசித்துவிட்டீர்கள்!! மாடி ஏறி இறங்கிய தளர்வு நீங்கியதா?தொடர்கின்றோம் அடுத்ததை அறிய..

    கீதா: என் கணவர் அவரது வேலை நிமித்தம் சென்ற போது இந்தக் கோயில் மட்டும் சென்றுவந்தார். வேறு இடம் செல்ல முடியவில்லை. சகோ அங்கு சண்டிப்பூர் கடற்கரை கடல் உள் வாங்கல் - 5 கிமீ வரை பின்னர் மெதுவாக வருவது பார்க்க மிக அழகாக இருக்கும் - இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வாம் இயற்கையின் அதிசயம்...சண்டிப்பூர் புவனேஸ்வரத்திலிருந்து 200 கிமீ. நீங்கள் இதைப் பார்க்க முடிந்ததா உங்கள் திட்டத்தில் இருந்ததா?

    ReplyDelete
    Replies
    1. துளசிதரன், சோர்வு இருக்கத் தான் செய்தது!

      கீதா, சண்டிப்பூர் பத்தியே இப்போ நீங்க சொல்லித் தான் கேள்விப் படறேன். அங்கே எல்லாம் போகலை! :(

      Delete
  7. JK sir சொல்லியிருப்பதை ரசித்தேன்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. ஜக்குவை பார்த்ததில் பட்ட சிரமங்கள் மறைந்திருக்கும்.

    ReplyDelete