எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 30, 2015

சாக்ஷி கோபாலனை மறந்தது எப்படி? :(

இப்போக் கொஞ்சம் ஜக்குவைப் பத்தி நிறுத்திக் கொண்டு சாக்ஷி கோபாலனைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கோயில் புவனேஸ்வரிலிருந்து புரி செல்லும் நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளது. கலிங்க நாட்டு முறைப்படி கட்டப்பட்டது இந்தக் கோயில். இங்கே உள்ளே படம் எடுக்க அனுமதிக்கவில்லை. வெளியே எடுத்த படம் மட்டும் பகிர்ந்துள்ளேன்.  முதலில் இங்கே தான் சென்றோம்.

இதற்குக் கர்ணபரம்பரைக் கதை ஒன்று இருக்கிறது. பின்னால்  சாக்ஷி கோபாலன் என்னும் பெயரிடப்பட உள்ள  ஓர் இளைஞன் அந்தக் கிராமத்தின் தலைவனின் மகளைக் காதலிக்கிறான். எல்லாப் பெற்றோரையும் போல இங்கேயும் இந்தக் காதல் ஏற்கப்படவில்லை. கிராமத் தலைவனுக்குத் தன்னை விட வசதியிலும், அந்தஸ்திலும் குறைந்தவனுக்குத் தன் மகளை மணமுடிக்கும் எண்ணம் இல்லை.  ஆனாலும் அனைவருமாகச் சேர்ந்து அங்கிருந்து காசி நகருக்குப் புனிதப் பயணம் செய்கின்றனர். செல்லும் வழியில் கிராமத் தலைவன் கடுமையாக நோய்வாய்ப்பட கிராமத்து மக்கள் அவனைத் தனியே தவிக்க விட்டு முன்னேறுகின்றனர் ஆனால் சாக்ஷி கோபாலன் அந்த கிராமத் தலைவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறான். அப்போதைய சூழ்நிலையில் கிராமத் தலைவன் மனம் இளகித் தன் மகளை அவனுக்கே மணம் முடிப்பதாக வாக்குக் கொடுக்கிறான்.

பின்னர் அனைவரும் மீண்டும் தங்கள் கிராமத்துக்குத் திரும்புகின்றனர். இளைஞன் கிராமத் தலைவனிடம் சென்று அவன் வாக்குறுதியை நினைவூட்டுகிறான். ஆனால் இப்போது கிராமத் தலைவனோ தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும், சொன்னதற்கு சாக்ஷி ஏதேனும் இருந்தால் கூட்டி வரும்படியும் இளைஞனிடம் சொல்கிறான். இளைஞன் தான் அனுதினமும் வணங்கும் கோபாலனிடம் சென்று முறையிட இறைவனும் இளைஞனின் உள்ளார்ந்த பக்தியில் மனம் உருகி அவனுக்கு சாக்ஷி சொல்ல வருவதாகக் கூறுகிறான். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான். இளைஞன் முன்னே செல்ல வேண்டும். கோபாலன் பின் தொடர்வான். இளைஞன் திரும்பியே பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் கோபாலன் அங்கேயே நின்றுவிடுவான். இதுதான் நிபந்தனை. இருவரும் ஒத்துக்கொள்ள இளைஞன் முன்னே நடக்கிறான். பின்னால் காலடிச் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 

அங்கிருந்த ஒரு மணற்குன்றைத் தாண்டிச் செல்கின்றனர் இருவரும். அப்போது திடீரெனக் காலடிச் சப்தம் கேட்காமல் போகவே இளைஞனுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஆகவே திரும்பிப் பார்த்துவிடுகிறான். அக்கணமே கோபாலன் சாக்ஷி சொல்ல வந்த சாக்ஷி கோபாலன் ஒரு மணல் சிற்பமாக மாறி அங்கேயே நிலை கொண்டு விடுகிறான். (பின்னாட்களில் இந்தப் பெயர் தான் இளைஞனுக்கும் வர நேரிட்டது.) இறைவனை சாக்ஷிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் மனம் வருந்திய இளைஞனுக்கு கிராமத்தார் ஆறுதல் கூறுகின்றனர். இத்தனை நாட்கள் இங்கே எவ்வித விக்ரஹங்களும் இல்லா நிலைமையில் இவ்வளவு தூரம் வந்து இங்கே அர்ச்சாரூபத்தில் அருள் பாலிக்கும் சாக்ஷி கோபாலனை விடப் பெரிய சாக்ஷி தேவையா என்று கிராமத் தலைவனிடம் வாதிடவே அவனால் பேச முடியவில்லை. தன் மகளை இளைஞனுக்கே திருமணம் செய்து கொடுத்து சாக்ஷி கோபாலனைச் சுற்றிக் கோயில் எழுப்பி அந்தக் கோயிலின் முதல் பூசாரிகளாகத் தன் மருமகனையும் நியமிக்கிறான். 

இதைத் தவிரவும் புராண ரீதியான ஒரு தகவலும் சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் பேரன் ஆன வஜ்ரன் என்பவனால் ப்ரஜா எனப்படும் ஒரு சிறப்பான அழிக்க முடியாததொரு வகைக் கல்லால் கிருஷ்ணனின் 16 வடிவங்கள் செதுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த வடிவங்கள் மதுரா நகருக்குள்ளும் அதைச் சுற்றியும் கோயில்கள் கட்டிப்பிரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது.  அவற்றில் முதல் மூன்று ப்ரஜமண்டலச் சிற்பங்கள் ஆன ஶ்ரீஹரிதேவர் என்பவர் கோவர்தனத்திலும், கேஷவ தேவர் மதுராவிலும் ஶ்ரீபலதேவர் பலதேவோவிலும், ஶ்ரீகோவிந்தா விருந்தாவனத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  இவற்றைத் தவிர இரு நாதர்கள் எனப் பெயரிடப்பட்ட ஶ்ரீநாத் ஜி முதலில் கோவர்தனத்தில் இருந்தவர் பின்னர் ராஜஸ்தானின் நாதத்வாருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் செய்யப்பட்ட ஶ்ரீகோபிநாத் ஜெயப்பூரில் கோயில் கொண்டிருக்கிறார்.  இரண்டு கோபால மூர்த்தங்களில் ஒன்று ராஜஸ்தானின் கரோலியிலும், மற்றொன்று சாக்ஷி கோபாலனாக ஒரிசாவின் புரி மாவட்டத்திற்கும் கொண்டு சென்று வழிபடப்பட்டு வருகின்றது. 

மேலும் ஒரிசா ராதாகிருஷ்ண பக்திக்கும் பிரேமையைக் கொண்டாடுவதிலும் பெயர் போனது. இந்தக் கோயிலிலும் அப்படியே உற்சவங்கள் ராதையை முன்னிறுத்தியே கொண்டாடப்படுகின்றன. இந்தக் கோயிலில் ஆரம்பத்தில் ராதையின் சிற்பம் இல்லை என்றும் பின்னர் நாளாவட்டத்தில் அந்த ஊரில் பிறந்த லக்மி என்னும் பெண்ணை ராதையின் மறு அவதாரம் என அந்த ஊர்க்காரர்கள் போற்றிக் கொண்டாடி வந்ததாகவும் சொல்கின்றனர்.  ராதை இல்லாமல் கிருஷ்ணனைப் பிரித்துப் பார்க்க விரும்பாத பக்தர்களால் வட இந்தியாவிலிருந்து ராதையின் சிற்பம் வரவழைக்கப்பட்டு இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது.  வட இந்திய முறைப்படி காக்ராவும், சோளியும் அணிந்திருந்த ராதையின் விக்ரஹத்திற்கு ஒரிச முறைப்படியான சேலை அணிவிக்கப்பட்டது. அப்போது அதுவரை தெரியாதிருந்த ராதையின் பாத தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கவே அதை நல்லதொரு சகுனமாக எடுத்துக் கொண்டு ஆராதித்து வருகின்றனர்.  இது ஒரு நவமி தினத்தில் நடைபெற்றதால் இந்த நாளை "அம்லா நவமி" எனக் கொண்டாடுவதோடு அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்கையில் ராதையின் பாதங்களைத் தொட்டு வணங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். 

12 comments:

  1. புராணக் கதைகளைத் தெரிந்து கொண்டேன்.

    உம்மாச்சி எதுக்கெல்லாம் சாட்சி சொல்ல வர்றார் பாருங்க...!

    ReplyDelete
    Replies
    1. உம்மாச்சி பலமுறை பல கல்யாணங்களுக்குசாட்சி சொல்லி இருக்காரே. :)

      Delete
  2. அரிய விடயம் அறிந்தேன் சகோ நன்று நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, ரொம்ப நாட்களாக் காணோமே!

      Delete
  3. நானுந்தான் புவனேஸ்வர் போயுருக்கேன்.. ம்ம்ம்.

    சம தென்னனக நகரங்களைப் பார்க்கிலும் ஓரளவுக்கு சுத்தமானதாகப் பட்டது.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.



    ReplyDelete
    Replies
    1. புவனேஸ்வர் நல்ல சுத்தமாகவே பராமரிக்கிறாங்க என்பதோடு ஒரிசாவின் உள்பக்கங்களும் சென்று பார்த்த அளவில் எந்தக் கிராமத்திலும், எந்த நெடுஞ்சாலையிலும், நகரின் சாலைகளிலும் முதலமைச்சரின் கட் அவுட்டைப் பார்க்கவே முடியலை. குஜராத்திலும் இப்படித் தான் பார்க்கவே முடியாது. நிர்வாகம் சிறப்பாக இருப்பதாகவே தெரிகிறது.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  4. வடக்குப் பக்கம் பிரயாணம் செய்தால் மேற்கே குஜராத்தும், கிழக்கே ஒரிசாவும் கொஞ்சம் நல்ல சுத்தமாகவும், சிலைகள் கல்சர் அவ்வளவாக இல்லாமலும், கட்டவுட்டுகள் இல்லாமலும் இருக்கின்றன. தெற்கே கேரளாவைச் சொல்லலாம். வடக்கே கட் அவுட்டுகள் ரொமப்க் குறைவுதான். ஆந்திரா, தமிழ்நாடு ரொம்ப ஃபேமஸ்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நீங்கள் சொல்வது சரி.என்றாலும் ஆந்திராவில் தமிழ்நாடு அளவுக்குக் கட் அவுட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. :) ஒடிஷாவில் ஒரு இடத்தில் கூட முதலமைச்சரின் படத்தையோ, மற்ற அலங்காரங்களோ, கட்சிக் கொடிகளோ பார்க்க முடியவில்லை!

      Delete
  5. புராணக்கதைகள் அறியாத கதைகள்! தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  6. சாட்சி சொல்லவந்து நிரந்தர இடம் பிடித்துள்ளார்.அவன் செயலே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, பல மாதங்கள் கழித்து உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

      Delete