சாவி அவர்கள் சாவியைத் தொடங்கியபோதோ அல்லது அதற்குப் பிறகோ ஒருபோதும் சித்தப்பா அங்கே வேலை செய்ததே இல்லை. அதுவும் எல்லோருக்கும் தேநீர் வாங்கி வரும் பணியாளராக வேலை செய்ததே இல்லை! இது அப்பட்டமான பொய்! ஏற்கெனவே ஜெயமோகன் சித்தப்பாவைப் பற்றிய ஒரு பதிவில் உண்மையில்லாத சில கருத்துகள் இருந்தன. அவற்றிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்துவிட்டேன். முதல் காரணம் ஜெயமோகனின் பதிவில் என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை. இரண்டாவது காரணம் அப்போது சித்தப்பா உயிருடன் இருந்தார்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. ஜெயமோகன் எம்.எஸ். அம்மாவைக் குறித்து அவதூறான பதிவு போட்டிருந்தபோதே அங்கே போய் என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தேன். அதே போல் இப்போதும் திரு ஜெயமோகனின் இந்தக் கருத்துக்கு முக்கியமாய்ச் சித்தப்பா "சாவி" அலுவலகத்தில் கடைநிலைப் பணியாளராக வேலை செய்தார் என்று சொல்லி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனக்குப் பத்து வயதிலிருந்து அவர் சித்தப்பாவாக இருக்கிறார். ஒருபோதும் எந்த நிலைமையிலும், எந்தச் சூழ்நிலையிலும் அவரால் இப்படி ஓர் பணியைச் செய்திருக்க முடியாது. அப்படிப்பட்ட குடும்பச் சூழ்நிலையும் அவருக்கு இல்லை. அதற்காகக் கடைநிலைப் பணியாளர்களின் வேலைகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் பணி போற்றத் தக்கதே!
சென்னை தியாகராய நகரில் பேருந்து நிலையத்துக்கு அருகே தாமோதர ரெட்டித் தெருவில் புராதன வீட்டில் குடியிருந்து வந்த சித்தப்பாவுக்கு வேலை இல்லை என்பது ஒரு சாதாரணக் காரணம் தான்! ஜெமினி அலுவலக வேலையை அவராகத் தான் விட்டார். யாரும் வேலையை விட்டுப் போகச் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 1967 ஆம் ஆண்டிலிருந்து என் கல்யாணம் வரை சித்தப்பாவின் வீட்டில் மாறி மாறி இருந்திருக்கிறேன். என் கல்யாணத்தை ஏற்பாடு செய்ததே அவரும் என் சித்தியும் தான். எங்கள் குடும்பத்து முக்கியமான விஷயங்கள் அவரிடமும் சித்தியிடமும் சொல்லிக் கலந்து ஆலோசித்தே எல்லோரும் முடிவெடுப்போம். அறுபதுகளின் மத்தியில் "கணையாழி" பத்திரிகை அச்சகத்திலிருந்து வந்ததும் சந்தாதாரர்கள், முக்கியமானவர்கள் என அந்தப் பத்திரிகையை அனுப்பி வரும் வேலையை நான் செய்திருக்கிறேன். அவருக்கு அந்த வேலையே நாள் முழுவதும் சரியாக இருக்கும். அதோடு பார்க்க வருபவர்கள் வேறு அப்போதே நிறைய வருவார்கள்.
நான் மட்டுமில்லாமல் என் பெரியம்மா, சித்தி குழந்தைகள், மாமா குழந்தைகள் என்று மட்டுமில்லாமல் சித்தப்பாவின் சகோதர, சகோதரிகளின் குழந்தைகள் என எல்லோருமே அந்தத் தியாகராய நகர் வீட்டில் வளர்ந்தவர்களே! எல்லோரையும் ஆதரித்த ஓர் ஆலமரமாக அந்த வீடும் சித்தப்பா, சித்தியும் இருந்தார்கள்! இப்படிப் பட்ட ஒரு மனிதரைக் கேவலம் பிழைப்புக்காகத் தேநீர் வாங்கிக் கொடுத்து வயிற்றைக் கழுவினார் என்று சொல்லி இருப்பது ஜெயமோகனுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் அவரின் கற்பனைகளை அவர் தன் கதைகளோடு நிறுத்திக்கொள்வதே நல்லது எனத் தோன்றுகிறது. "வெண்முரசு" கற்பனைகளோடு நிறுத்திக்கொள்வது நல்லது! இப்படி எல்லாம் தேவையில்லாக் கற்பனைகள் வேண்டாம்.
http://jeyamohanav.blogspot.sg/
முன்னர் எம்.எஸ். அம்மாவைப் பற்றிக் கூறி இருந்தது போல் இப்போது சித்தப்பாவைப் பற்றியும் வக்கிரமாகக் கூறியுள்ளார் ஜெயமோகன். இதில் அவருக்கு ஏதேனும் சந்தோஷம் கிடைக்குமானால் கிடைக்கட்டும். ஆனால் இனிமேல் "நான் அசோகமித்திரனின் ரசிகன்" என்று சொல்லிக் கொள்வதை நிறுத்திக்கொள்ளட்டும். சித்தப்பாவுக்கு ஞானபீட விருது கொடுக்கவில்லை என்பதால் ஜெயமோகன் இப்படி ஒரு விருதைக் கொடுத்து விட்டாரோ? எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பாகவும் எங்கள் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். :( அவரைக் குறித்து அறியாதவர்கள் இது தான் உண்மை என நினைக்க நேரலாம். :( இது அப்பட்டமான பொய்!
இன்னொரு நண்பரின் முகநூல் பதிவில் எழுத்தாளர் இந்துமதியின் காரோட்டியாக இருந்தார் என்றும் சொன்னதாக எழுதப் பட்டு இருக்கிறது. சித்தப்பாவுக்குக் கார் ஓட்டவே தெரியாது! ஆகவே அதுவும் ஒரு பொய்யே!
இன்னொரு நண்பரின் முகநூல் பதிவில் எழுத்தாளர் இந்துமதியின் காரோட்டியாக இருந்தார் என்றும் சொன்னதாக எழுதப் பட்டு இருக்கிறது. சித்தப்பாவுக்குக் கார் ஓட்டவே தெரியாது! ஆகவே அதுவும் ஒரு பொய்யே!