எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 09, 2017

சர்வதேச மகளிர் தினமாமே!

சர்வதேச மகளிர் தினமாம் இன்று. மகளிர் தங்களைத் தானே சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலான மகளிர் பொறுப்புக்களைத் துறக்கவே விரும்புகின்றனர். இத்தனைக்கும் இப்போதெல்லாம் திருமணம் ஆனதும் சமையல், குழந்தை வளர்ப்பு என எல்லாவற்றிலும் ஆணின் பங்கு கட்டாயமாகி இருக்கிறது. பல ஆண்களும் வீட்டு வேலைகளிலும் மற்றவற்றிலும் தங்கள் மனைவிமார்களுக்கு உதவியாகவே இருந்து வருகின்றனர். அப்படியும் பெருகி வரும் விவாகரத்துக்கள்! எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவுடன் வாழ்க்கை நடத்தும் தம்பதியர்! அவரவரும் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பப் பார்த்து தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு அமைதியும் ஆனந்தமும் நிறைந்த இல்வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்.

ஒரு பெண் எத்தகைய ஆண் தனக்குத் தேவை என நினைக்கிறாளோ அதே போன்ற எதிர்பார்ப்பு ஆணிடமும் இருக்கும். ஆகவே ஒருவருக்கொருவர் தவறுகளைக் களைந்து அல்லது தவறுகளைப் பொருட்படுத்தாமல் தவறுகளுடனேயே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும். இன்னும் சில பெண்களுக்குப் படித்து விட்டால் தன் குடும்பத்துக்காகச் சமைப்பதே ஓர் அவமானமாகத் தோன்றுகிறது. இவ்வளவு படிச்சுட்டுச் சமைப்பதா என்னும் எண்ணம் இந்தக் காலப் பெண்களிடம் இருக்கிறது.

இப்போது பெண்கள் முன்னேற்றம் என்பது பல வகைகளிலும் சிறப்பாகவே இருக்கிறது. அதே சமயம் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் முன்னை விட அதிகமாக வெளியே வருகிறது. இதற்குத் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் காரணம்! இத்தனைக்கும் ஆணும், பெண்ணும் சரி சமமாகப் பழக ஆரம்பித்துப் பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது.  ஆனாலும் பெண்ணை ஓர் போகப் பொருளாகக் கருதும் மனப்பான்மை உள்ள ஆண்கள் இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள். இதற்கு உளவியல் ரீதியாகப் பல காரணங்களைச் சொன்னாலும் "தான் ஆண்!" என்னும் ஆணாதிக்க மனப்பான்மையே முக்கியக் காரணம்.

இப்போது ஒரு சில கேள்விகளைக் கேட்கிறேன். விருப்பம் இருந்தால் பதில் சொல்லலாம்.  ஆணும், பெண்ணும் நண்பர்களாகப் பழகும் இந்தக் கால கட்டத்தில் ஆண், பெண் பாலின வேறுபாடுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் பழகி வரும் இந்தக் காலத்தில் ஏன் சில பெண்கள் மட்டும் துன்புறுத்தப்படுகின்றனர்? ஒட்டு மொத்தமாக எல்லா ஆண்களையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை! அதிலும் ஐடி கலாசாரத்தில் தான் இது அதிகம் காணப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?  ஆண்களை எது தூண்டி விட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கின்றனர்? பெண்களூரில் சாதாரணமாகத் தெருவில் செல்லும் சக ஊழியரிடமே தவறாக நடந்து கொள்ளும் ஆண்களைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும்?  அந்த ஆணிற்கும் ஓர் அம்மா, அக்கா, தங்கை, சித்தி, பெரியம்மா அல்லது மனைவி, மகள் இருக்கலாம். அவர்களுக்கும் இப்படி நடந்தால் அவருடைய உடனடி நடவடிக்கை என்னவாக இருக்கும்?

கீழே இன்னும் சில கேள்விகள்:

ஒரு ஆணிடம் பெண்ணின் எதிர்பார்ப்பு என்ன?

அதே போல் ஒரு பெண்ணிடம் ஆணின் எதிர்பார்ப்பு என்ன?

மேலே கண்ட கேள்விகள் பொதுவான ஆண், பெண் உறவு சம்பந்தமாக மட்டுமே.

அடுத்த கேள்வி

ஒரு பெண் ஓர் ஆணைத் திருமணம் செய்து கொள்ளும்போது என்ன எதிர்பார்ப்பாள்? என்ன எதிர்பார்க்க வேண்டும்? அவள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை எனில் அவளின் மனப்பாங்கு எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம்! :

அதே போல் ஓர் ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்போது என்ன எதிர்பார்ப்பான்? அவன் எதிர்பார்ப்புப் பூர்த்தி ஆகவில்லை எனில் அவன் மனப்போக்கு எப்படி இருக்க வேண்டும்?

இங்கே பெண் என்பவள் திருமணம் ஆனதும் தன் பிறந்த வீட்டை, சுற்றத்தை விட்டு விட்டு வருகிறாள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னதான் தனிக்குடித்தனம் இருந்தாலும் ஓர் ஆணை நம்பித் தானே தன் பெற்றோர், உற்றாரை விட்டுச் செல்ல வேண்டி இருக்கிறது! ஆகவே பெண்ணின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்!

உங்களுக்குப் பிறந்திருக்கும் ஆண் குழந்தை/பெண் குழந்தையை எப்படி வளர்ப்பீர்கள்/வளர்த்திருக்கிறீர்கள்?

இனி பிறந்தால் எப்படி வளர்க்க எண்ணி இருக்கிறீர்கள்?

24 comments:

  1. படித்தேன் பிறகு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. திரும்ப வந்து பதில் சொன்னதுக்கு நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. எனக்கு இந்த சிறப்பு தினங்களும் சாதாரண தினங்கள் தாம். நாம் பல பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம். அது போன்ற பண்டிகைகள் மேல்நாட்டில் இல்லை. ஆகவே அவர்கள்
    இது போன்று சில தினங்களை உருவாக்கிக்கொண்டு அந்த தினங்களுக்காக சில சம்பிரதாயங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். எங்கே இருக்கிறோமோ அதற்க்கு ஏற்ப சில காரியங்களில் ஒத்துப் போவதே வாழ்க்கை.

    நீங்கள் தொடுத்து இருக்கும் அடுக்கு கேள்விகளுக்கு பெரிய புத்தகம் அளவிற்கு பதில் கிடைக்கும்.

    மிருகத்தின் இருந்து வந்தவன் தான் மனிதன். மனிதன் ஒரு மிருகம் தான். மிருக குணங்கள் அவ்வப்போது மிகைப்படும். நீங்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் மேற்குறிய விடை பொருந்தும்.


    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நான் எந்த நாளும் கொண்டாடுவது இல்லை ஜேகே அண்ணா! இன்னும் சொல்லப் போனால் நண்பர்கள் இருவர் எனக்கு அனுப்பிய வாட்சப் வாழ்த்தின் மூலமே சர்வதேச மகளிர் தினம் என்பதே தெரிய வந்தது! முகநூலிலும் பல பகிர்வுகளைப் பார்த்தேன். அவ்வளவே! மற்றபடி கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருக்கலாமோ!

      Delete
    2. நீங்கள் கார அடையான் நோன்பு வரலக்ஷ்மி விரதம் செய்வதில்லையா? ஆடி 18 படைப்பதில்லையா? இவை தாம் கணவர் தினம். சகோதரர் தினமாக ராக்கி பண்டிகை கொண்டாடுவதில்லையா? அதே போல் குழைந்தைகளுக்காக "அழைக்கிறது" என்று மதுரைப் பக்கம் செய்வார்கள்.அதேபோன்று நாரி பூஜை என்று பெண்களை வைத்து பூஜிக்கும் தினமும் உண்டு. நான் சொல்வது என்னவென்றால் நாம் பண்டிகைகளாகக் கொண்டாடுகிறோம். அதற்கென்று சில விசேட பூஜை மற்றும் தின்பண்டங்கள் செய்கிறோம். இது நமது கலாசாரத்தில் வந்தது.

      இதே போன்ற பண்டிகைகள் இல்லாததால் மேல்நாட்டவர் Faher's day, Mother's day, Women's day, valentine, halloween (children), labor day என்றெல்லாம் சில தினங்களைக் குறிப்பிட்டு அத்தினங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

      உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் // மிருகத்தின் இருந்து வந்தவன் தான் மனிதன். மனிதன் ஒரு மிருகம் தான். மிருக குணங்கள் அவ்வப்போது மிகைப்படும்.// என்று ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டேன்.

      சற்றே விளக்கமாக கூறுகிறேன். ஒவ்வொரு வகை மிருகமும் எதை வைத்து துணையை தேர்ந்து கூடுகிறதோ அதேபோன்று தன ஆணின் எதிர்பார்ப்புகளும், பெண்ணின் எதிர்பார்ப்புகளும். இதுவும் ஒவ்வொருவர் மனப்பான்மையை பொறுத்து வேறுபடும். ஆகவே உங்கள் கேள்விகளுக்கு பொதுவான ஒரு பதில் கூற முடியாது.
      --
      Jayakumar​

      Delete
    3. நான் சொல்லி இருப்பது காதலர் தினம், மகளிர் தினம், அன்னையர் தினம் போன்றவைகளை மட்டும் தான். மற்றபடி வரலக்ஷ்மி விரதம் அவரவர் குடும்ப வழக்கப்படியே செய்வார்கள். இன்னும் சொல்லப் போனால் வைணவர்கள் வரலக்ஷ்மி விரதமே செய்வதில்லை! :) காரடையான் நோன்பு பொதுவானது. இப்போதெல்லாம் பிராமணரல்லாதோர் கூடக் காரடையான் நோன்பு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

      Delete
    4. மற்றபடி மிருகம் துணையைத் தேடுவதற்கும் மனிதன் தேடுவதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. எதிர்பார்ப்புகள் மனிதருக்கு மனிதர் அவரவர் தேவை, மனப்போக்கைப் பொறுத்து வேறுபட்டாலும் அனைவருக்கும் பொதுவானதும் இருக்கும். அதில் பெண்ணின் அழகு, குணாதிசயங்கள், ஆணின் அழகு, வருமானம், குணாதிசயங்கள் முக்கியமாய் இடம் பெறும்.

      Delete
  3. வணக்கம் மிகச்சரியாக அலசி உண்மையை ஆணித்தரமாக சொன்னமைக்கு எனது சல்யூட் அதுவும் பெண்ணினமாக இருந்து கொண்டு சொன்னது மிகச்சிறப்பு (மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம்)

    உண்மையில் இப்பிறவிப்பயனில் ஆணும் சரி, பெண்ணும் சரி நமக்கு எது அவசியம் என்பதை உணர மறுக்கின்றார்கள்
    பெண்ணை ஆண் எல்லா இடங்களிலும் போகப்பொருளாகவே நினைக்கின்றனர் என்பது 90 சதவீதம் உண்மையே...

    //பல ஆண்களும் வீட்டு வேலைகளிலும் மற்றவற்றிலும் தங்கள் மனைவிமார்களுக்கு உதவியாகவே இருந்து வருகின்றனர். அப்படியும் பெருகி வரும் விவாகரத்துக்கள்! //
    ஆம் எதற்காக விவாகரத்து பெறுகி வருகின்றது ?
    இதுதான் வளர்ச்சியா ?

    //சில பெண்களுக்குப் படித்து விட்டால் தன் குடும்பத்துக்காகச் சமைப்பதே ஓர் அவமானமாகத் தோன்றுகிறது. இவ்வளவு படிச்சுட்டுச் சமைப்பதா என்னும் எண்ணம் இந்தக் காலப் பெண்களிடம் இருக்கிறது.//
    அக்மார்க் உண்மை.
    இந்த தலைப்பே உங்கள் உள்ளத்தில் இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தி விட்டது.

    நிறைய எழுத நினைக்கிறேன் இருப்பினும் பதிவாக இடுவோமே என்று நிறுத்திக்கொள்கிறேன் நன்றி - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. விவாகரத்து சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க கில்லர்ஜி! என்னனு சொல்றது! உங்கள் விரிவான பதிவை எதிர்நோக்குகிறேன்.

      Delete
  4. ஏதேனும் சின்னக்குழந்தைகள் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுதான்னு பார்க்கிறேன்.

    பொதுவா, எப்படி வளர்ப்பது என்பதைத் தம் பெற்றோர்களிடமிருந்துதான் குழந்தைகளும் கற்றுக்கொள்கின்றன (சில சமயங்களில் எப்படி வளர்க்கக்கூடாது என்பதையும் தன்னை எப்படி வளர்த்தார்கள் என்பதைப் பொருத்தும் கற்றுக்கொள்கின்றன)

    சரி.சரி... சர்வதேச மகளிர்தினத்துக்காக மகளிர் சார்பா ஒரு நெடிய பதிவு ('நிறைய கேள்விகளுடன்) போட்டிருக்கீங்க... பார்க்கலாம் என்ன மாதிரி பின்னூட்டங்கள் வருதுன்னு.

    ReplyDelete
    Replies
    1. ஹூம், சின்னக் குழந்தையா? சரிதான் போங்க. நீங்க சொல்லுவீங்கனு நினைச்சேன்! பெற்றோர் வளர்ப்புச் சரியில்லை என்றாலும் நன்றாக வளர்ந்து இப்போது வாழ்க்கையில் நிறைவாக வாழும் பெண் குழந்தைகளை நன்கு அறிவேன். பெற்றோர் வளர்ப்புச் சரியில்லாமல் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டையும் நரகமாக்கும் பெண்களையும் அறிவேன். ஒண்ணும் வாய் திறந்து சொல்ல முடியலை போங்க! :(

      Delete
  5. கேள்விகளுக்கு (சரியான) பதில் என்னிடம் இல்லை. நாங்கள் திருமணம் செய்துகொள்ளும்போது இணைந்து வாழவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. மனஸ்தாபம் வரக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. கோபமோ, அலுப்போ மனித சுபாவம். ஒருவர் கோபப்படும்போது ஒருவர் சும்மா இருந்துவிடுகிறோம். இருவருமே ஒரேநேரம் கோபப்பட்டாலும் பின்னர் சமாதானமாகிவிடுகிறோம். எல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், உங்க வீட்டில் பிள்ளைக் குழந்தைகளே என்பதால் நீங்க எப்படிப் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதையோ அல்லது எப்படி வளர்த்திருக்கிறீர்கள் என்பதையோ பகிர்ந்திருக்கலாம். மற்றபடி பல சமயங்களில் நானும், ரங்க்ஸும் கத்திச் சண்டை போட்டுக்கறதைப் பார்க்கிறவங்க என்னடா இதுனு நினைக்கலாம். ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரம் தான். வழக்கமான மாமூல் வேலைகளைத் தொடர்வதிலோ, சாப்பாடு விஷயத்திலோ எங்கள் கோபம் எல்லாம் காட்ட மாட்டோம். ஒரு சிலர் கோபம் என்றால் தனி அறைக்குப் போய்க் கதவைச் சார்த்திக் கொள்வார்கள். சின்னக் குழந்தைகள் இருந்தால் பெண் என்றால் குழந்தையும் அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும்! பார்த்தாலே பாவமாக இருக்கும்! அவங்களோட கோபம் எல்லாம் தனிப்பட்ட மனிதரின் மீது காட்டுவதால் அப்படி நடந்துக்கறாங்க. எங்க கோபம் எல்லாம் தவறான செயல்களின் விளைவால் ஏற்படுவது. மனிதரை வெறுப்பதில்லை! மனித சுபாவத்தைத் தான்! :)

      Delete
  6. நல்ல கேள்விகள்.... என்ன விதமான பதில்கள் வருகிறது என்று பார்க்க, காத்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணு, ரெண்டு கேள்விகளுக்காவது பதில் சொல்லி இருக்கலாம்! :)

      Delete
  7. நிறைய யோசிக்க சொல்லியிருக்கிறீர்கள். கொஞ்சம் டைம் கொடுங்கள். மகளிர் தினா வாழ்த்துக்கள்!(அதை ஏன் விடணும்?)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி பானுமதி! ஆனால் நான் மகளிர் தினமெல்லாம் கொண்டாடுவதே இல்லை. என்னுடன் மூன்று பானுமதிகள் படித்தனர். ஆர். பானுமதி, பி. பானுமதி! எஸ். பானுமதி! :)))) அதே மாதிரி நிறைய கீதா இருந்ததால் என்னுடைய இனிஷியலை மாத்த நேரிட்டது. :)

      Delete
  8. எல்லாவற்றிற்கும் ஒரே பதில் தான் ஈகோவை தொலைக்க வேண்டும் முக்கியமாக திருமணம் ஆன பிறகு.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. இந்த ஈகோ தான் பெரிய பிரச்னை! அதைத் தூண்டி விடும் மனிதர்கள்! :(

      Delete
  9. கேட்ட கேள்விக்கெல்லாம் பொதுவெளியில் விடை சொல்லும்படியான கேள்விகளா கேட்டிருக்கிறீர்கள்?

    அதிலும் ஐடி கலாசாரத்தில் தான் இது அதிகம் காணப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? ஆண்களை எது தூண்டி விட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கின்றனர்? - இதெல்லாம் பதில் சொல்ற கேள்விகளா? பதில் சொன்னாலும், பெண்ணுரிமை, ஆணுரிமை என்று எல்லோரும் பாய்ந்துவந்துவிடுவார்கள். எனக்குத் தோன்றும் பதில், சிறிய வயதிலிருந்தே இரண்டு பாலினமும் நட்பாகப் பழகுவது நல்லது. 'காஞ்ச மாடு வைக்கோல் போரைப் பார்ப்பதுபோல்' இருபாலினமும் தனித் தனியாக இருப்பதால், சக உயிர் என்ற எண்ணம் குறைகிறது என்று தோன்றுகிறது.

    பொதுவா, ரோமன் கேதலிக் சர்ச்சில், திருமணத்திற்கு முன்பு, கவுன்சிலிங், பொதுவாக திருமண வாழ்வில் அறிந்துகொள்ளவேண்டியவை போன்ற பல தலைப்புகளில் நிச்சயம் ஆனவர்களுக்கு வகுப்பு எடுப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். இதுபோல இந்துக்களிடம் கிடையாது. அவர்களுக்கு, செயல்படு, கற்றுக்கொள், திருத்திக்கொள் வழிதான். முன்னாலயாவது, பெற்றோர்கள் கூட இருந்ததால், அப்போ அப்போ திருத்திவிடுவார்கள். அதில் ஒரே ஒரு பிரச்சனை, இரண்டு பெண்களுக்கு (மாமியார், மருமகள்) பெரும்பாலும் ஒத்துப்போகாது.

    இதைத் தவிர, கணவன் மனைவிகளுக்கு இடையே வரும் பிரச்சனைகள்லாம் பெரும்பாலும் சாதாரணமானது. Brush aside என்பதுபோல் இருவரும் நடந்துகொள்ளவேண்டியதுதான். இவர்களுக்கிடையிலான பந்தத்தில் யாரை உட்புக விட்டாலும் (சகோதரியின் கம்ப்ளெயின்ட், அம்மாவின் கம்ப்ளெயின்ட் போன்றவற்றை, அல்லது தேவையில்லாமல் நம் ஈகோவைச் சீண்டுவதுபோன்ற பேச்சுக்கள்) அது நல்லதில்லை. அதைக் காரணியாக வைத்து மனஸ்தாபம் கொள்வது சரியானதல்ல.

    ReplyDelete
    Replies
    1. //எனக்குத் தோன்றும் பதில், சிறிய வயதிலிருந்தே இரண்டு பாலினமும் நட்பாகப் பழகுவது நல்லது. //
      கிட்டத்தட்ட கடந்த இருபது வருடங்களாக இரு பாலினமும் நட்பாகவே பழகி வருகின்றனர் என்பதோடு அது இன்னமும் தொடர்கிறது. ஆகவே இது ஒரு காரணம் இல்லை. தவறான புரிதல் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்குள் வந்திருக்கலாம். பொதுவாகக் கீழ்த்தட்டு இளைஞர்களே பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதில் அதிகம் ஈடுபடுகிறார்கள். உதாரணமாகப் பெண்கள் தாங்கள் வேலை செய்யும் அலுவலக ஊர்தியில் பயணம் புரிய நேரிடும்போது அந்த ஊர்தியின் ஓட்டுநர்கள், ஊழியர்களால் துன்புறுத்தப்படுவது அதிகமாகத் தெரிகிறது. ஒரு பெண் அந்தக் குறைந்த சம்பள ஊழியரிடம் சகஜமாகப் பழகிவிட்டால் அதை அவர் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடுகிறது. சக ஊழியர்களிடமும் இதே போன்ற மனப்பான்மை தான் வருகிறது என நினைக்கிறேன். பெண் சகஜமாகப் பழகினாலும் தப்பாய்ப் போய் விடுகிறது. ஒதுங்கி இருந்தாலும் தப்பாய்ப் போகிறது!

      Delete
    2. கணவன், மனைவியரிடையே ஏற்படும் மனத்தாங்கல்கள் அவர்கள் இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியது. யாராக இருந்தாலும் அவர்கள் உரசல்கள் நடுவே புகுந்து கொண்டு தீர்வுகளைத் திணிப்பது முற்றிலும் தவறே! இது குறித்து ஒரு விரிவான பின்னூட்டம் எழுத ஆரம்பித்துத் தவறுதலாக நீக்கி விட்டேன். டெலீட் ஃபார் எவெர் கொடுத்ததில் அது கிடைக்கவில்லை. ஆகவே தொடரவில்லை! :) பின்னர் நினைவு வந்தால் போட்டுக்கலாம்னு விட்டுட்டேன்.

      Delete
  10. ஈகோ இல்லாமல், நல்ல புரிதல், ஆணின் மன நிலைக்கும், பெண்ணின் மன நிலைக்கும் இயற்கையாகவே சில வித்தியாசங்கள் உண்டுதான் அதைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருபாலரிடம் இருந்தால் சண்டை வந்தாலும் சமாதானத்தில் சென்றுவிடும். பொறுமை என்பதுமிகவும் அவசியம். ஆனால் தற்போதைய இளைஞர் சமுதாயத்தில் பெண்ணும் நிறையவே சம்பாதிப்பதால் ஈகோ க்ளாஷ், வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் அதாவது லேவிஷ் ஸ்பெண்டிங்க், ஹைஃபை வாழ்க்கை என்று இருப்பதால் நிறைய விவாகரத்துகள்.

    எனவே வளர்ப்பு என்பது மிக மிக முக்கியம். பெற்றோர் எப்படி வளர்க்கின்றனரோ அப்படியே...நல்ல வளர்ப்பில் வரும் குழந்தைகள் பருவ வயதிலும் கூட பெற்றோரின் ஆதரவும், புரிதலும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், என்னைப் பொறுத்தவரை வளர்ப்பும் சுற்றுப்புறச் சூழலுமே முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. :)

      Delete