இருமுடி கட்டிய பின்னர் நிவேதனம் செய்கிறார் குருசாமி.
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, மஹாநிவேதனம் சாதம், பருப்பு
தூப, தீப ஆராதனைகள் முடித்துக் கீழே கற்பூர ஆராதனை காட்டுகிறார்.
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே! நெய்யபிஷேஹம் ஸ்வாமிக்கே! ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஆனால் அங்கே அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளினால் பல ஐயப்பன் சாமிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்றெல்லாம் சொன்னதால் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. அதோடு கேரள மழையினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்! சாலை வசதிகள் எப்படியோ என்றெல்லாம் யோசனை! அப்புறமா இங்கே ஐயப்ப சேவா சங்கத்தைத் தொடர்பு கொண்டோம். அவங்க மூலம் தகவல்கள் சேகரித்துக் கொண்டு பையருக்குத் தெரியப்படுத்தினோம். அவரும் அவ்வப்போது செய்திகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டு வந்தார். அப்படியே ஆன்லைனில் தரிசனத்துக்கு நேரம் கேட்டப்போ டிசம்பர் 31 ஆம் தேதி காலை ஆறுமணிக்குக் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறமாத் தான் டிக்கெட்டே வாங்கினார். எல்லா ஏர்லைன்ஸும் போட்டி போட்டுக்கொண்டு விலையை உயர்த்தி இருந்தன. அதனாலும் எல்லோரும் வர முடியலை! அவருக்கு மட்டும் ஃப்ரெஞ்ச் ஏர்லைன்ஸில் கிடைச்சது.
இன்னிக்கு இந்த ஊர் ஐயப்ப சேவா சங்கத் தலைவரைக் கூப்பிட்டு இருமுடி கட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன்படி குருசாமியும் வந்து இருமுடிக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி இருமுடி கட்டினார். அதன் பின்னர் நிவேதனம் செய்து ஐயப்பனுக்கும் தீப ஆராதனை காட்டிப் பூஜையை முடித்துக் கொண்டு சாப்பிட்டு விட்டுப் பையர் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கார். நாளை தரிசனம் முடிந்து நாளை இரவு வரலாம். அதோடு இங்கே குடியிருப்பு வளாகத்தில் இன்றைய தினம் புது வருஷ வரவேற்பு நிகழ்ச்சிகள்! சாப்பாடு எல்லாம் இருக்கிறது. ஆனால் நாங்க சாப்பிட மாட்டோம். ஜனவரி 3 ஆம் தேதி மாமியார் ச்ராத்தம். அதனால் ஒரு மாசமாவே வெளியே சாப்பிடுவது இல்லை. உறவினர்கள் வேறே வராங்க! இரண்டு நாள் தான் தங்கப் போறாங்க என்றாலும் அவங்களைக் கவனிக்கணும். பின்னர் ச்ராத்தம்! அதன் பின்னர் 5 ஆம் தேதியே பையர் அம்பேரிக்கா கிளம்பறார். அதனால் ஆறு தேதி வரைக்கும், (இந்த வாரம் முழுவதும்) வேலை மும்முரம். அவ்வப்போது தலை காட்டுவேன். யாரும் கண்டுக்க மாட்டீங்க என்னும் நம்பிக்கையுடன்! இஃகி, இஃகி, ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சிலர் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகள். கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் அனைவருக்கும் புத்தாண்டு மனதுக்கு இனியதாகவும், அனைவர் வாழ்விலும் வளமும் அமைதியும் நிம்மதியும் சேர்க்கும்படியும் அமையப் பிரார்த்தனைகள்.