முந்தைய பதிவு
இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில் ஆழ்ந்த மன்னன், மிகவும் வருந்தினான். அப்போது ஐயப்பன் மன்னனிடம் ஒவ்வொரு வருடமும், மகரசங்கராந்தி அன்று தான் காந்த மலையில் ஒளி வடிவில் தோன்றுவதாயும், அப்போது தன் பக்தர்கள் அனைவரும் வந்து தன்னைத் துதிக்கும் வண்ணம் சபரிமலைக் கோயிலில் ஏற்பாடுகள் செய்யும்படியும், மன்னன் செய்து வைத்திருக்கும் திரு ஆபரணத்தை அந்தக் கோயிலின் மூல விக்ரஹத்துக்குச் சாத்தும்படியும் கேட்டுக் கொண்டார். அது போல் மன்னனும், அவன் சந்ததியினரும் ஒவ்வொரு வருடமும் பந்தள அரண்மனையில் இருந்து ஐயனின் திருவாபரணங்களைச் சுமந்து வந்து ஐயனுக்குச் சாத்துவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.
அந்தத் திருவாபரணப் பெட்டிகள் மூன்றிலும் உள்ளவை: ஒன்றில் ஐயப்பனின் திருமேனிக்குச் சார்த்தப் படும் திருவாபரணமும், இரண்டாவதில் கலசக்குடை பேடகமும், மூன்றாவதில் கொடிப்பெட்டியும் உள்ளது. இதைத் தவிர, திருவிதாங்கூரின் சித்திரைத் திருநாள் மகாராஜாவின் காணிக்கையாகத் தங்க அங்கியும் மண்டலபூஜை நிறைவின் போது சாத்துவது வழக்கம். அப்போது ஐயப்பனுக்கு அபிஷேஹம் செய்யப் படும் நெய்யானது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்தே வருவதாயும், இந்த வழக்கத்தையும் இந்த மகாராஜாவே ஏற்படுத்தியதாயும் சொல்கின்றனர். சபரிமலை சாஸ்தா கோயில் கட்டத் தொடங்கிய நாள் கார்த்திகை மாதம் முதல்தேதி என்பதால் ஐயப்பனின் விரதத்தில் கார்த்திகை முதல் தேதி அன்று துவக்குகின்றார்கள்.
நெய்யபிஷேஹம் ஏன் என்பதற்குக் காரணம்:மூன்று கண்களை உடைய தேங்காய் சாட்சாத அந்தப் பரமசிவனின் அம்சம். நெய்யோ என்றால் அந்த நெய் உண்ட மாலவனின் அம்சம். ஹரிக்கும், ஹரனுக்கும் பிறந்த தெய்வக்குழந்தைக்கு அவன், தாயையும், தந்தையையும் ஒன்றாக இணைத்துக் கொடுத்து வழிபடுவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் என்னவென்றால் அழியக்கூடிய நாம் தான் தேங்காய் என்றால் அழிவில்லாத ஆத்மா தான் நெய் என்று கருதி அந்த நெய்யை நிரப்பி எடுத்துச் சென்று ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். அழிவில்லாத ஆத்மாவான நெய்யை, இறைவனிடம் சேர்த்துவிட்டு, அழியக் கூடிய உடலான தேங்காயை, நெருப்பில் இடுகின்றோம்.
சபரிமலைக்குச் செல்லக் கடுமையான விரதம் இருக்க வேண்டும். கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி விரதம் இருப்பதற்கான மாலை அணிய வேண்டும். அதுவும் குருசாமி மூலமே அணிவிக்கப்பட வேண்டும். விரத காலம் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலம் ஆகும். இந்த நாட்களில் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு அதையும் சரணம் சொல்லி ஐயப்பனுக்குப் படைத்த பின்னர் உண்ண வேண்டும். காலை, மாலை இருவேளையும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுச் சுத்தமான ஆடை அணிந்து நெற்றியில் விபூதி தரித்துக் கொண்டு ஐயப்பன் படத்துக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு 108 சரண கோஷம் இட வேண்டும். திருமணம் ஆனவர்கள் கடுமையான பிரமசரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்களும் மனதில் ஐயப்பன் குறித்த சிந்தனையே இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மனதில் தடுமாற்றம் கூடாது. உருத்திராக்ஷ மாலையோ துளசிமணி மாலையோ ஐயப்பன் பதக்கத்தோடு அணியலாம். துணை மாலையும் ஒன்று இருத்தல் நலம்.
ஐயப்பன் கோயிலுக்கு முதல் முறை செல்பவர்களைக் "கன்னிச்சாமி" என அழைப்பார்கள். கன்னிச்சாமியாக இருந்தால் கறுப்பு வண்ண உடையே உடுத்த வேண்டும். மற்றவர்கள் நீலம், கறுப்பு, பச்சை வண்ண உடை உடுத்தலாம். விரத காலத்தில் ஆண்கள் முடிவெட்டிக் கொள்வதோ, முக சவரம் செய்வதோ கூடாது. கூடியவரையில் தரையில் பாய் விரித்துப் படுக்கலாம் என்றாலும் மேல்நாடுகளிலோ குளிர் பிரதேசங்களிலோ இருப்பவர்கள் அதைத் தவிர்த்தல் நலம். உடல் நலம் கெடும். கோபம் கொள்வதோ, பொய் பேசுவதோ அடுத்தவரை நிந்தனை செய்வதோ கூடாது. மது, மாமிசம், சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்களைச் சாப்பிடக் கூடாது. யாருடன் பேசினாலும் "சரணம் ஐயப்பா!" என்று தொடங்கி, "சரணம் ஐயப்பா!" வில் முடிக்க வேண்டும். விரதம் முடியும்வரை எக்காரணத்தைக் கொண்டு மாலையைக் கழட்டக் கூடாது. ஆனால் இறப்புத்தீட்டு வந்துவிட்டால் மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டுவிட வேண்டும். பின்னர் அடுத்த வருடம் தான் மாலை அணியலாம் என்கின்றனர்.
விரத காலத்தில் சந்திக்கும் ஆண்களை "ஐயப்பா!" என்றும் பெண்களை "மாளிகைப்புரம்" எனவும் அழைக்க வேண்டும். ஆண் குழந்தைகளை "மணிகண்டன்" எனவும், பெண் குழந்தைகளை, "கொச்சி" எனவும் அழைக்கவேண்டும். இப்போத் தான் முக்கியமான சர்ச்சைக்குரிய விஷயம். மாதவிலக்காகும் பெண்களைப் பார்க்கவோ, பேசவோ கூடாது! பொதுவாகப் பெண்களே இத்தகைய மாலை அணிந்தவர்களைக் கண்டால் "அந்த நாட்களில்" விலகி இருப்பார்கள். அறியாமல் பார்க்க நேர்ந்து பின்னர் அறிய நேர்ந்தால் உடனே வீட்டுக்கு வரமுடிந்தால் வந்து குளித்து 108 சரணம் சொல்லி வழிபட வேண்டும். அல்லது வீட்டுக்கு வந்தபின்னர் குளித்து முடித்துச் சரணம் சொன்னபின்னர் சாப்பிடலாம். இருமுடி கட்டும் முன்னர் ஒவ்வொரு ஐயப்பன்மாரும் அவரவர் வீட்டில் பஜனை அல்லது பூஜை வைத்துக் கொண்டு அன்னதானம் வழங்கலாம். இருமுடியை குருசாமி வீட்டிலோ அல்லது கோயில் ஏதேனும் ஒன்றிலோ வைத்துக் கொள்ளலாம். குருசாமி தான் இருமுடியைத் தலையில் ஏற்றுவார். ஒவ்வொரு முறையும் அவர் தான் இறக்கவும் செய்வார். அவர் அனுமதி இல்லாமல் நாமாக இருமுடியை ஏற்றவோ இறக்கவோ கூடாது. இருமுடி கட்டிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பும்போது போய் வருகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது, வீட்டின் தலைவாயில் படிக்கட்டில் தேங்காயை உடைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் சிறிது தூரம் அவர்களுடன் செல்லலாம். ஆனால் வழி அனுப்பும் விதமாகவோ, பத்திரமாகப்போய்வாருங்கள் என்றோ கூறக்கூடாது. யாத்திரை முடிந்ததும் பிரசாதங்களோடு வீட்டுக்கு வந்து நுழையும்போது மறுபடியும் தேங்காய் உடைத்து நுழைந்து பூஜையறையில் சரணம் சொல்லி வணங்கி கற்பூர ஆரத்தி காட்டி இருமுடி அரிசியைச் சமைத்து உண்ண வேண்டும்.
படங்களுக்கு நன்றி கூகிளார்.
அருமையான ஐயப்ப தரிசனம்...
ReplyDelete1989 ல் முதல் மலை..
கன்னிச் சாமியாக மாலை போட்டபோது - குருசாமி சொல்லிக் கொடுத்த நெறிமுறைகளை இன்றளவும் கடைபிடிக்கிறேன்...
இரண்டு முறை பெரிய பாதை தான்..
1991 ல் குவைத்திற்கு வந்த பிறகு மாலையணியாமல் விரதம் மேற்கொண்டேன்.. வேறு இரண்டு கேரள நண்பர்கள் - ( அவர்கள் என்னை விட வயதில் சிறியவர்கள்..) விரதத்தில் சேர்ந்து கொண்டனர்..
அது கண்டு பொறுக்காத மாற்று சமயத்தினர் சிலர் வல்லடி வழக்காக தகராறு செய்ய வாய்ப் பேச்சின் ஊடாக என்னைத் தாக்கிவிட்டான் ஒருவன்...
அது மட்டுமல்லாது நான் அவர்களது மதத்தை தவறாகப் பேசியதாக மேலிடத்து விசாரணையில் அவதூறு சொன்னான்..
ஆனால்,நேரடி விசாரணையில் அவன் சொன்னது பொய் என்று நிரூபிக்கப்பட்டது....
இத்தனைக்கும் என் மீது புகார் அளித்தவனும் நானும் ஒரே அறை..
கூட்டு சமையல்... நோன்பு காலங்களை எல்லாம் அனுசரித்திருக்கிறேன்...
என்னதான் பழகினாலும் சிலருக்கு விபூதி சந்தனம் குங்குமம் இவற்றைக் கண்டால் பிடிப்பதில்லை..
அவனுக்கும் எனக்கும் வாய்த்தகராறு நடந்தபோது சூளுரைத்தேன்...
ஐயப்பனோட மகத்துவம் புரியாமல் பேசி விட்டாய்... அது சத்தியம் என்றால் -
அடுத்த வருசம் இதே தேதியில் ஒன்று நீ இங்கு இருப்பாய்.. அல்லது நான் இங்கு இருப்பேன்!.. - என்று...
அதேபோல - அவனை Black List ல் வைத்திருந்து அடுத்த ஆறேழு மாதத்தில் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்...
அதையெல்லாம் நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது...
அடுத்த சில ஆண்டுகளில் (98/99) இங்கிருந்து (குவைத்) நண்பர் ஒருவரை விரதம் அனுசரிக்கச் செய்து மலைக்கு அழைத்துச் சென்ற பாக்கியமும் கிடைத்திருக்கிறது...
2005 க்குப் பிறகு ஒரு சமயம் என்னையும் இன்னொருவரையும் கடைசி நேரத்தில் - இருமுடி கட்டித் தருகிறோம்.. எப்படியாவது மலைக்குச் சென்று கொள்ளுங்கள்.. - என்று பயணத்தில் அழைத்துச் செல்ல மறுத்து விட்டார்கள் - ஒரு குழுவினர்...
ஓடிச் சென்று வழிபடு மூர்த்தியிடம் ஆலோசனை கேட்டேன்...
எங்களை மலைக்கு வரும்படி உத்தரவாகியிருந்தது...
குருசாமி இல்லாமல் எப்படி புறப்படுவது என்றேன்...
நீதான்... உன்னுடன் இருப்பவரை அழைத்துக் கொண்டு புறப்படு!... என்று அருள்வாக்கு...
அப்படியும் ஒரு அற்புதம் செய்தனன் ஐயப்பன்....
இப்பொழுதும் இங்கே மாலை அணிந்து கொண்டிருக்கிறேன்....
நம்ம ஊரைப் போல வெளிப்படையாக விரத கோலம் பூண முடியாது...
வேலை செய்யுமிடத்துக்கு ஷூ அணியாமல் போக இயலாது...
Catering Co., ஆனதால் அவசியம் முக சவரம் செய்தே தீர வேண்டும்...
பாலைவனப் பனியில் பல் நடுக்கும் குளிரில் சுடுநீரில் தான் குளியல்...
இங்குள்ள சூழ்நிலையில் எல்லா வருடமும் இப்படித்தான்...
ஆனாலும் - தன் பக்தருள் ஒருவராகக் கொண்டு
என்னையும் ஆளுகின்றான் - என் ஐயப்பன்!...
எல்லாம் ஐயப்பனுடைய விருப்பம்!...
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
நீங்கள் குறிப்பிட்ட விரதத்துடன் இருந்து சென்று வந்துள்ளேன்... ஆனால் இன்றைக்கு, "டூர்" போல ஆ(க்)கி விட்டதால் செல்வதற்கு விரும்புவதில்லை அம்மா...
ReplyDeleteஅன்பின் தனபாலன்...
Deleteசபரி மலையை - பிறர் எப்படி ஆக்கியிருந்தால் என்ன?..
நமக்குத் தேவை ஐயப்ப தரிசனம்..
சபரி மலைக் காட்டின் சகவாசம்...
வீட்டிலேயே ஐயனை கும்பிட்டுக் கொள்ளலாம்.. தவறில்லை...
ஆனால்..
அந்தக் காட்டுக்குள் நடந்து
சன்னிதானத்தில் சிறிது நேரம் இருக்க வேண்டும் என்பதே தாத்பர்யம்...
ஐயப்ப சரணம்...
அழகிய விவரணம் திண்டுக்கல் ஜி சொல்வதுபோல இன்று சுற்றுலா போல் ஆகிவிட்டது உண்மையே...
ReplyDeleteஇருமுடி கட்டும் முன்னர் ஒவ்வொரு ஐயப்பன்மாரும் அவரவர் வீட்டில் பஜனை அல்லது பூஜை வைத்துக் கொண்டு அன்னதானம் வழங்கலாம்.//
ReplyDeleteஇப்படி விழாக்களில் உறவினர், அக்கம் பக்கம் எல்லாம் கலந்து கொண்டு ஐயப்பன் பஜன் செய்து மகிழ்ந்து இருக்கிறேன்.
சாரின் அண்ணா போன போது வீட்டில் அன்னதான பூஜை நடந்தது. அப்போது குழந்தை உண்டாகி இருந்தேன். மகன் பிறந்தால் அப்பாவையும், மகனையும் சபரி மலைக்கு அனுப்புகிறேன் என்று வேண்டிக் கொண்டேன்.
சார் எல்லாம் கோவில்களுக்கு போனார்கள், ஆனால் ஐயப்பன் மலைக்கு மட்டும் போக எண்ணவே இல்லை.
மகன் நண்பர்களும் சபரி மலைக்கு யாரும் போக வில்லை அதனால் அவனுக்கும் அந்த எண்ணம் வரவில்லை.
இப்போது சொல்லிக் கொண்டு இருக்கிறேன் இருவரிடமும். ஐயப்பன் அழைக்க வேண்டும். எனக்கும் ஆவல் போக ஐயப்பன் அருள் கிடைக்க வேண்டும்.
ஐயப்பா சரணம்.
இப்படி நீங்கள் சொல்லியிருப்பதுபடி விரதம் இருந்து சென்றிருக்கிறேன். அதன் பின் செல்லும் வாய்ப்பும் அமையவில்லை. அதற்கான சூழலும் இல்லை.
ReplyDeleteநல்ல விவரணம் சகோதரி.
துளசிதரன்
அக்கா நான் இருமுடி பூஜை பார்த்திருக்கிறேனே தவிர அதாவது என் கசின் வருடா வருடம் போவான் நான் பிறந்தகத்தில் இருந்தப்ப பார்த்திருக்கேன். ஆனால் புகுந்த வீட்டில் யாரும் இருமுடி தாங்கி சென்றதில்லை. ஆனால் மற்றபடி கோயில் சென்று தரிசனம் செய்திருக்கிறார்கள் கூட்டம் இல்லா சமயத்தில் தமிழ்மாதம் முதல் 3, 4 தேதிகள் வரை நடை திறக்கப்படும் சமயம். என் மகன் சென்றிருக்கிறான் அப்படி.
கீதா
ஒரே ஒரு முறை சபரிமலைக்குச் சென்றிருக்கிறேன் - விரதம் இல்லாமல் - பதினெட்டு படி வழி அல்லாமல் பக்கத்து வழி வழியே.
ReplyDeleteஅனைவருக்கும் அய்யனின் அருள் கிடைக்கட்டும்.