எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 27, 2022

கணினி படுத்தும் பாடு

 கணினியில் வேலை செய்கையில் அடிக்கடி இணைய இணைப்புப் போய் விடுகிறது. இது தோஷிபா மடிக்கணினியில். வாங்கிப் பனிரண்டு வருடங்கள் ஆகின்றன. அதில் ஓ.எஸ். வின்டோஸ் 7 பிரிமியம். ஒரு வேளை அதனால் இணையம் சரியாக வேலை செய்யவில்லையோ? ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இந்தப் பிரச்னை. இணையச் சேவை கொடுப்பவரைக் கூப்பிட்டுக் கேட்டதில் அவர் கணினி தான் சரியில்லை என்கிறார். காலை ஏழு ஏழரை மணி வரை சுமாராக வரும். அப்போது ஏதேனும் பார்த்துக்கொண்டாலோ/எழுதிக் கொண்டாலோ உண்டு. இல்லை எனில் மதியமெல்லாம் வருவதே இல்லை. நேரம் தான் வீணாகப் போகிறது. இணைய இணைப்பு என்னமோ இருக்கும். ஆனால் கணினியைத் திறந்து க்ரோமில் ஜிமெயில் இணைப்புக் கேட்ட உடனே இணைய இணைப்புப் போய்விடும். திரும்ப இணைப்பைப் பெற்று மறுபடி ஜிமெயிலுக்குள் நுழைந்தால் சிறிது நேரம் சரியாக இருக்கும். உடனே போய்விடும். டிஎன் ஏஸ் செர்வர் சரியில்லை என்றும் நெட்வொர்க் மாறி விட்டது என்றும் எரர் செய்திகள் வரும். மறுபடி மறுபடி கணினியில் இணையத்தை இணைத்தாலும் எந்த வேலையும் செய்ய முடியாது ஒரு வரி தட்டச்சுவதற்குள்ளாக இணையம் போய் விடும். கணினி மருத்துவரைக் கூப்பிட்டு இருக்கேன். 

இணையச் சேவை கொடுப்பவர்கள் வந்து பார்த்துட்டுக் கணினி தான் பிரச்னை என்று சொல்கின்றனர். ஏதோ ஒண்ணு. எனக்கு அந்த மடிக்கணினியை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே சமரசம் செய்து கொள்ளும். என் கைவாகிற்கு ஏற்றாற்போல் இருக்கும். இது இப்போத் தட்டச்சிக் கொண்டிருப்பது  2017 ஆம் ஆண்டில் வாங்கின டெல் மடிக்கணினி. அதிலிருந்து இப்போ எழுதறேன். இதில் ஈ கலப்பை மூலம் தட்டச்சினால் எழுத்துப் பிழைகள் நிறைய வருது என்பதால் ஒவ்வொரு முறையும் சுரதாவில் தங்கிலீஷில் அடிச்சு அதை மாற்றி இங்கே போடணும். ஆனால் இணையம் பிரச்னை இதில் இல்லை. ஆகவே அந்த மடிக்கணினி தான் பிரச்னை போல. 12 வருஷம் ஆச்சே. ஆனால் எதுக்கும் மருத்துவரும் வந்து பார்க்கட்டும்னு இருக்கேன்.

இந்த மடிக்கணினியை அம்பேரிக்காவில் இருந்து கொண்டு வருகையில் நம்மவர் பாக் பேக்கைத் தோளில் மாட்டிக்காமல் ட்ராலியில் மேல் தட்டில் வைச்சுட்டார். அது கீழே விழுந்ததில்  ஹார்ட் டிஸ்கில் பிரச்னையோனு நினைக்கிறேன். கொஞ்சம் மெதுவாகவே வேலை செய்யும். பாட்டரி வேறே சார்ஜ் ஆகலையாம். செய்தி வருது. பரவாயில்லைனு இதிலேயே வேலை செய்யலாம்னு செய்யறேன். பார்ப்போம். அதுக்கு மறு வாழ்வு உண்டா இல்லையானு! இன்னிக்கோ நாளைக்கோ தான் கணினி மருத்துவர் வருவார். வந்ததும் தான் என்னனு தெரியும்.

இப்போதைக்குப் போயிட்டு வரேன். இதில் இத்தனை நாழி தட்டச்சி இருப்பதால் இணையம் ஒரு நிமிஷம் கூடப் போகாததால் அந்த மடிக்கணினி தான் பிரச்னைனு நினைக்கிறேன். பார்க்கலாம். அதில் நிறையவே சேமிப்புகள் இருக்கு. எல்லாத்தையும்  இதில் மாத்தணும். வேலை நிறையவே இருக்கும். :)))) ஆனால் இணைய இணைப்புப் பிரச்னை இல்லைனு புரிஞ்சிருக்கு. ஆகவே கணினியை என்னனு கேட்கணும். முந்தைய திருவாரூர்ப் பதிவுக்குப் பதில் கொஞ்சம் மெதுவா வரும். வரேன் இப்போ. ஒரு மாதிரி மனசுக்கு ஆறுதல் ஏற்பட்டிருக்கு. மூணு நாளா ஒரே மண்டைக்குடைச்சல்.

ஒரு விதத்தில் மத்தியானங்களில் படிக்கிறேன். ஆனால் பொன்னியின் செல்வன் டீசர் அதுக்கான கருத்துகள், பாழ்நெற்றி ஆதித்த கரிகாலன், சோழ அரசர்களைப் பார்த்ததால் பொன்னியின் செல்வனையே லக்ஷத்துப் பதினோராம் முறையாகப் படிச்சுட்டு இருக்கேனாக்கும். முதல் பாகம் முடியப் போகுது. நடுநடுவில் வீட்டில் மாவிளக்குப் போட்டது, வீடு சுத்தம் செய்தது குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்தது,எனப் பல்வேறு வேலைகள். ஆகவே மத்தியானம் மட்டும் தான் படிக்க முடிஞ்சது.:(  நான் நினைக்கிறேன், இந்தப் புதுக்கணினிக்குத் தன்னை அடிக்கடி பயன்படுத்துவதில்லை என்பதில் கோபம் வந்து இப்படிப் பண்ணி இருக்குமோ? இப்போது இதில் தானே எல்லாம் பண்ணணும். 

Monday, July 25, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி 8

திருவாரூரில் தங்கி இருந்து அனைத்தையும் பார்க்கக் குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும். நாங்க அன்னிக்கு மட்டும் தங்கணும்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அன்னிக்குக் காலம்பரக் கிளம்பினதுமே எட்டுக்குடியில் அவர் விழுந்ததும், எல்லா நிகழ்ச்சி நிரலும் மாறிவிட்டது. சீக்கிரமாய்க் கும்பகோணம் போயிட்டு ஊரைப் பார்க்கப் போகலாம் என்று தோன்றிவிட்டது. என்றாலும் வீதிவிடங்கர் வந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டோம். வன்மீகநாதர் என்னும் புற்றிடங்கொண்டாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவர் வரலாறு பின் வருமாறு: 

புண்யபூமியான குருக்ஷேத்திரம். மாபெரும் யாகம் ஒன்று நடக்க ஏற்பாடு ஆகிறது. யாகத்தைச் செய்யப் போகிறவர்களும் சாமானியர்கள் அல்ல, தலைமை ஏற்பவரும் சாதாரணமானவர் அல்ல. யாகத்தைச் செய்யப் போகிறவர்கள் தேவாதிதேவர்கள். தலைமை ஏற்பவரோ சாட்சாத் மஹாவிஷ்ணுவே. பொருட்கள் சேகரிக்கப் பட்டன. யாகத்தின் மூலம் கிடைக்கப் போகும் பெருமையும், புகழும் அனைவருக்கும் சமம் என முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டது. ஆனாலும் யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஓய்வு எடுக்காமல் இருப்பவரே மிகச் சிறந்தவர் எனச் சொல்லவேண்டும் என்பதற்கும் ஒத்துக்கொண்டனர். அனைவரும் யாகத்தின் தலைமைப் பதவியான யக்ஞ-மான் பதவிக்கு (இன்றைய யஜமான் இதிலிருந்து வந்ததே) திருமாலே ஏற்றவர் என முடிவு செய்தனர். யாகத்தை இறுதிவரையிலும் ஓய்வே இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார் திருமால். 

எனினும் அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் செருக்கும் இருந்தது. தேவர்களை விட்டு விலக நினைத்தார். யாகத்தின் குண்டத்தில் இருந்து பலவகையான அஸ்திரங்கள் வந்தன. வில் ஒன்றும் வந்தது. வில் திருமாலின் இடக்கரத்தைப்போய் அடைய, அஸ்திரங்கள் அவர் வலக்கரத்துக்குச் சென்றது. தேவர்களை இதன் மூலம் அடக்க நினைத்தார் திருமால். மெல்ல மெல்ல அவர்களை விட்டு விலகி இந்தத் தலத்தை அடைந்தார். பராசக்திபுரம் என்ற பெயரால் அப்போது அழைக்கப் பட்டு வந்த இந்தத் திருத்தலத்திற்கு வந்த திருமால் சோர்வு மிகுதியால் வில்லின் நுனியைத் தன் தாடையில் அழுத்தியவண்ணம் தூங்கிவிட்டார். அப்போது தேவர்கள் திருமாலிடமிருந்து தப்பவேண்டி குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலோசனையின் பேரில் செல்லுருவில் பூமியைத் துளைக்க ஆரம்பித்தனர். துளைக்கும்போது வில்லின் கீழ்க்கயிறு அறுந்து போக வில்லின் நாண் அறுந்து திருமாலின் தலை துண்டானது. 

ஏழு உலகுக்கும் சென்ற அந்தத் தலை திரும்பத் திருமால் படுத்திருக்கும் இடமே வந்து விழுந்தது. பயந்து போன தேவர்கள் ஈசனைத் துதிக்க, அவர்கள் துளைத்த பூமியிலிருந்து பெரும் சப்தத்தோடு சிவலிங்க ரூபமாக ஈசன் வெளியே வந்தார். அவரை அனைவரும் அபயம் கேட்க அஸ்வினிதேவர்கள் உதவியுடன் திருமாலின் தலையை உடலோடு பொருத்துமாறு சொல்ல, அவ்விதமே திருமாலின் தலை பொருத்தப் பட்டது. தனக்குத் தலை வழங்கிய ஈசனைத் துதித்தாராம் திருமால். பின்னர் மது, கைடபரை வதம் செய்த திருமாலைத் திருமணம் புரியவேண்டி இந்த மூலட்டானேஸ்வரரைத் துதித்துத் தவம் இருந்தாளாம் ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி. அவள் தவம் இருந்ததாலேயே இந்த ஊர்க் குளம் கமலாலயம் எனப் பெயர் பெற்றது என்று சொல்வார்கள். மேலும் இந்தத் தலத்தில் தான் இந்திரனின் ஆலோசனைப்படி தசரதன் வன்மீகநாதர் என்னும் புற்றிடம் கொண்டாரைத் தரிசித்துச் சென்றானாம். அதன் பின்னரே புத்ரகாமேஷ்டியாகம் செய்து ராமர் முதலான நாலு புத்திரர்களையும் பெற்றான் என்றும் ஐதீகம். 

கமலாம்பாள் தொடர்கிறாள்.

**********************************************************************************

சென்ற முறை 2010 ஆம் ஆண்டில் சென்றபோது காலங்கார்த்தாலே எட்டுக்குடி கோயிலில் நவகிரஹ சந்நிதியில் விளக்குப் போட்டுப் பிரதக்ஷிணம் செய்ய ஏறிய நம்ம ரங்க்ஸ் இறங்கும்போது கீழே விழுந்து நல்லவேளையாக எக்கச்சகமாக எதுவும் ஆகலை. என்றாலும் கழுத்தில் ஏற்கெனவே இருந்த பிரச்னை கீழே விழுந்த அதிர்ச்சியில் அதிகம் ஆகிவிட்டது.  கோயிலில் நவகிரஹ சந்நிதியில் கூட்டம் கூடி விட்டது. மெதுவாகச் சமாளித்துக் கொண்டு எழுந்து கொண்டார்.

கீழே விழுந்ததற்கு முக்கியக் காரணம் காலை வேளையில் நவகிரஹங்களுக்கெல்லாம் (அன்று சனிக்கிழமை) எண்ணெய்/பால்/சந்தனம் போன்றவற்றால் அபிஷேஹ ஆராதனைகள் நடைபெற்றிருந்தன. அந்த நீரும் பாலுமாக எண்ணெயுடன் சேர்ந்து புத்தம்புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்ட படிகளில் விழுந்திருந்தது. அதில் கால் வைக்கவும் சறுக்கி விட்டிருக்கிறது. பக்கத்தில் பிடித்துக்கொள்ள எதுவும் இல்லை.  படிகளின் கடைசியில் எதிரே இருந்த சூலம் ஒன்றூ தான். நல்லவேளையாகக் குப்புற விழாமல் சமாளித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ஆதி காலங்களில் கோயில்களில் இதற்காகத் தான் கல்லால் ஆன படிகளைப் போட்டிருப்பார்கள். ஆனால் நம்ம அறமற்ற நிலையத்துறை அரசு அவற்றை அகற்றிவிட்டுப் புதுப்பிக்கிறேன் என்னும் பெயரில் வழுக்கும் டைல்ஸ்களைப் போட்டு விடுகிறது. பலரும் சொல்லி விட்டார்கள். அதோடு இல்லாமல் அந்தக் கல்படிகளில் பலவும் கல்வெட்டுக்கள். சரித்திரம் சொல்லும் படிகள். அவற்றை எல்லாம் காணாமல் அடித்துவிட்டார்கள். 

இந்தக் காரணத்தால் எட்டுக்குடிக்குப் பின்னர் திருவாரூருக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போனோம். ஆனால் அவரால் முடியவில்லை. ஆகவே திருவாரூருடன் பயணத்தை முடித்துக் கொண்டு கும்பகோணம் திரும்பி அன்றிரவு வண்டியிலேயே சென்னை திரும்பிட்டோம். அம்பத்தூரில் பிசியோ தெரபி சுமார் ஒரு மாதம் எடுத்துக்க வேண்டி வந்தது.

இம்முறை திருவாரூரில் கமலாம்பிகையைத் தரிசனம் மட்டுமே! சுற்றி எல்லாம் வரவில்லை. அக்ஷர பீடம் பார்க்கவில்லை. :( இதுவே பெரிய விஷயம் என்றாகி விட்டது. 

Sunday, July 17, 2022

ஆருரா! தியாகேசா! என்ன உன் நிலைமை! பகுதி 7

இங்கே கடைசிப் பதிவு  (இம்முறை எழுதிய பதிவின் சுட்டி)


மதிய நேரத்து வழிபாடு நடந்து கொண்டிருந்தது. முதலில் நாங்கள் வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாயகரைத் தரிசிக்கச் சென்றோம். அபிஷேஹங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆகவே அங்கே திரை போட்டிருந்தது. கமலாம்பிகையைப் பார்ப்பதென்றால் அதுக்குத் தனியாகப் போகணும். கொஞ்சம் நேரம் ஆகும். ஆகவே கோயிலிலேயே குருக்கள் வீதிவிடங்கரையும் தியாகராஜரையும் முதலில் பார்க்குமாறு சொல்லவே அங்கே சென்றோம். பூவம்பலம் என்னும் பெயருக்கொப்பப் பூக்களால் மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நடுவில் இருந்த குமாரன் பூக்களால் மறைக்கப் பட்டிருந்தான். வெளியே தெரியவில்லை. நாதமும், பிந்துவும் சேர்ந்து பிறந்த கலை வெளியே உடனே தெரியாதன்றோ? 

தியாகராஜரைப் பார்க்கப் பார்க்க மனம் பரவசம் அடைந்தது. இன்னதென்று புரியாத ஓர் உணர்வு. அவருக்குப் பின்னால் இருந்த ஒரு சிறு மேடையில் ஒரு வெள்ளிப் பெட்டி இருந்தது. அலங்காரங்கள் செய்து பூக்கள் சார்த்தி வைக்கப் பட்டிருந்த அந்தப் பெட்டியில் தான் வீதிவிடங்கர் இருப்பதாய்ச் சொன்னார்கள். வன்மீக நாதருக்கு அபிஷேஹம் முடிந்ததும், வீதி விடங்கருக்கு அபிஷேஹம் நடக்கும் என்றும் இருந்து பார்த்துவிட்டுப் போங்கள் என்றும் சொன்னார்கள். கூட்டமும் அதிகம் இல்லை. நானும் முன்னால் போய் நின்று கொண்டிருந்தேன். திரும்ப மனம் வரவில்லை. பத்துப் பதினைந்து பேர் உள்ளூர் மக்கள் இருந்தனர். ஒருத்தர் வீதி விடங்கர் பத்தின கதையைச் சொல்ல ஆரம்பிக்க, கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். வன்மீக நாதருக்கு அபிஷேக ஆராதிகள் முடிந்து இங்கே ஆரம்பம் ஆயிற்று. 

தில்லையில் ரத்தின சபாபதிக்குச் செய்வது போல் விஸ்தாரமாய் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன். அங்கே எல்லாவித அபிஷேஹங்களும் நடக்கும். ஆண்டவன் ஆடிக்கொண்டிருப்பதால் அதற்கு இடையூறு நேராவண்ணம் மனதிலேயே மந்திரங்கள் ஜபிப்பார்கள் தில்லையிலும். அது போல் இங்கேயும் அஜபா நடனம் ஆயிற்றே. மனதிலேயே மந்திரம் ஜபித்தாலும் அபிஷேஹம் நடைபெற்றது எனக்கு அவ்வளவாய் மனதுக்குத் திருப்தியைத் தரவில்லை. என்னமோ அவசரம், அவசரமாய்ப் பாலை ஊற்றிவிட்டுப் பின்னர் தண்ணீரையும் ஊற்றினார்கள். பின்னர் ஒரு அலங்காரம் இல்லை, எதுவும் இல்லை, வீதிவிடங்கரைத் துடைத்துப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டார்கள். தீபாராதனை எடுத்தார்களா? சரியாய்த் தெரியவில்லை. 

ஒரே ஏமாற்றமாய் இருந்தது. சரி அதுதான் போகட்டும் என்றால் இங்கே தேவாரமோ, திருவாசகமோ எதுவும் யாராலும் பாடப்படவில்லை. எத்தனை பதிகங்கள் இந்தக் கோயிலுக்கு என்றே? நாயன்மார்கள் அதிகப் பதிகங்கள் பாடியதே இந்தக் கோயிலின் மீது தான் என முதலிலேயே அதற்காகவே குறிப்பிட்டேன். ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. எந்த ஓதுவாரும் கோயிலுக்கென இல்லையா எனக் கேட்க நினைத்தேன். நம்ம ம.பா. சரி, சரி, வா, போகலாம்னு கூப்பிட்டுக் கொண்டு, கமலாம்பிகை சந்நிதி மூடிடுவாங்களாம், அப்புறம் பார்க்க முடியாதுனு இழுத்துக்கொண்டு கிளம்பினார். அரை மனசாய் எந்த விபரமும் யாரிடமும் கேட்கமுடியலையேனு வருத்தத்தோடு கமலாம்பிகையைத் தரிசிக்கச் சென்றோம். வழியிலேயே ஒரு குருக்கள் நடை சார்த்தியாச்சு எனச் சொல்ல என்னடா இதுனு திகைத்தோம். ஆனாலும் கூட வந்த ஒரு சில உள்ளூர் மக்கள் அவங்களோடு வரச் சொல்லவே நாங்களும் பின்னால் நடந்தோம். மற்ற வர்ணனைகள், விளக்கங்கள் தொடரும்.

************************************************************************************

இது கடந்த 2010 ஆம் ஆண்டு போனப்போக் கிடைத்த தரிசனங்களைக் குறித்து எழுதின பதிவு. இந்த முறை கமலாம்பிகையைத் தரிசித்ததோடு சரி. பிரகாரமெலலம் சுத்தலை. அடுத்து அவை பற்றிய விபரமான பதிவு வரும்.காலை வேளை என்பதால் இம்முறை கமலாம்பிகை சந்நிதி மூடவில்லை. செல்லும் வழியிலேயே இருக்கும் இன்னொரு அம்பிகை சந்நிதிக்கு இம்முறை போகவே இல்லை. குருக்கள் நேரே கமலாம்பிகையைப் பார்க்க அழைத்துச் சென்று விட்டார். அங்கே உச்சிஷ்ட கணபதிக்கு அர்ச்சனை இருந்ததே!ஆ

Thursday, July 14, 2022

குஞ்சுலு வரப் போகிறதே!

குட்டிக் குஞ்சுலு அவ அம்மாவோட இந்தியாவுக்கு/சென்னைக்கு வந்திருக்கு! ஒரு மாதம் முன்னாடியே பையர் குஞ்சுலுவின் பள்ளி விடுமுறையில் இந்தியா வருவோம் என்றிருந்தார். பின்னர் பயணச்சீட்டு வாங்கி குஞ்சுலுவையும் அவ அம்மாவையும் முன்னாடி அனுப்பி வைச்சிருக்கார். ஒரு மாதமாக அது தன் பயணத்தைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் சொன்னது எனில் அவங்க அப்பா/அம்மாவும் கூடியவரை அதற்குச் சொல்லிப் புரிய வைச்சிருக்காங்க. திங்களன்று பார்த்தப்போ அதுகிட்டே நாளை இந்தியா கிளம்பணுமே தெரியுமானு தாத்தா கேட்டதுக்குத் தலையை ஆட்டிவிட்டு எங்களைச் சுட்டிக்காட்டி உங்களையும் பார்க்க வருவேன்னு சொன்னது. அவ அப்பாவிடம் இதெல்லாம் புரிஞ்சுக்கறதானு கேட்டதுக்கு முதலில் மடிப்பாக்கம் தாத்தா வீட்டுக்குப் போயிட்டு அப்புறமா ஶ்ரீரங்கம் வரப்போறோம்னு தெரிஞ்சு வைச்சுருக்குனு பையர் சொன்னார்.

உடனேயே என்ன நினைச்சதோ ஓடிப் போய் அங்கே இஸ்திரி போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு உடையை எடுத்து எங்களிடம் காட்டியது. ஆரஞ்சு நிற உடை. இதைத் தான் தான் நாளை பயணத்தின் போது போட்டுக்கப் போவதாகவும் சொன்னது. மறுநாள் கிளம்பும் சமயம் பையர் எங்களைக் குழந்தையைப் பார்க்கக்  கூப்பிட்டப்போ ஜம்முனு டிரஸ் பண்ணிண்டு ரெடியா இருந்தது. எங்களைப் பார்த்ததுமே டிரஸ்ஸைக் காட்டி ஒரு தட்டாமாலை ஆடிட்டு உடனே ஓடிப் போய்த் தன்னோட பாக்பேக்கைக் காட்டி அதில் மேலே வைச்சிருந்த பேபியையும் எடுத்துக் காட்டியது. இந்த பேபி தான் அது கூட விமானப் பயணத்துக்கு வரப் போகிறது. மற்றவை எல்லாம் பெட்டிக்குள்ளாக. குஞ்சுலு  இந்த மாதிரி வெளியே போகும்போதெல்லாம் தன்னோட பேபீஸில் இருந்து ஏதேனும் ஒண்ணை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு தன்னோடு எடுத்துப் போகும். இன்னிக்கு எந்த பேபினு நாங்க கேட்போம். எடுத்துக் காட்டும்.  தேர்ந்தெடுத்து முடிச்சதும் மத்த பேபீஸைப் படுக்க வைச்சுச் சமாதானப் படுத்திவிடும். 

ராத்திரி படுத்துக்கும்போது எல்லா பேபீஸும் சுத்திப் போட்டுக்கொண்டு கிட்டத்தட்ட அவற்றின் மேலேயே படுத்துக்கும். ஒரு நாள் ராத்திரி ஒரு பேபியைக் காணோம்னு அழுத அழுகை! பின்னர் அங்கேயே இருப்பதை எடுத்துக் காட்டினப்புறமா அந்த பேபியை வாங்கிக் கட்டி அணைத்த வண்ணம் தூங்கினது. 

பையருக்கு இப்போ லீவ் கிடைக்கலை. கிடைச்சாலும் மாசக் கடைசியில் கிளம்பறாப்போல் இருக்கும். குழந்தைக்கு செப்டெம்பரில் தான் பள்ளி துவக்கம். அவங்க நைஜீரியாப் பள்ளியில் எல்லாமே  இங்கிலாந்து வழக்கப்படிக் கல்வி ஆண்டை வைச்சிருக்காங்க. பள்ளியும் ஆங்கிலப் பள்ளி தான்/ ஆகவே பையர் ஆகஸ்டில் லீவ் எடுத்துக்கொண்டோ அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யுமாறோ ஏற்பாடு பண்ணிக் கொண்டு வருவார். அப்போது அவங்க மூணு பேரும் ஶ்ரீரங்கம் வருவாங்க. பின்னர் மாசக்கடைசியில், "பழைய குருடி! கதவைத் திறடி!" கதை தான். எப்படியோ ஒரு மாசம் கொஞ்சம் வாழ்க்கையில் ருசி இருக்கும்.  எல்லாமே ஓர் அழகான கலைதலில் இருக்கும். சாப்பிடவும்/பால் குடிக்கவும் அமர்க்களம் பண்ணாமல் இருக்கும்னு நம்பறேன். வந்தால் தான் தெரியும். 

Wednesday, July 13, 2022

அனைத்து ஆசாரியர்களுக்கும் நமஸ்காரங்கள்!



வியாசர் பிள்ளையாருடன்
படத்துக்கு நன்றி கூகிளார்

இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள். 

இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரின் மகன் சக்தி, அவர் மகனும் விஷ்ணு புராணம் எழுதியவரும் ஆன பராசரர், பராசரரின் பிள்ளை வியாசர், வியாசரின் மகன், சுகர், சுகர் பிரம்மச்சாரி. பிறந்ததில் இருந்தே பரப்பிரம்மம். இவருக்குக் கிளி மூக்கும், முகமும் வந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுகர் திருமணம் செய்து கொள்ளாததால், இவருக்குச் சீடர் மட்டுமே உண்டு. அவர் தான் கெளடபாதர். கெளடபாதரோ, சந்யாஸி. ஆகவே இவருக்கும் சிஷ்ய பரம்பரையே வருகின்றது. இந்த சிஷ்ய பரம்பரையில் வந்தவரே கெளடபாதரின் சிஷ்யர் ஆன கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரின் சிஷ்யரே ஆதிசங்கரர். 


                                                         ஆதி சங்கரர் சிஷ்யர்களுடன்

சங்கரருடைய நான்கு சிஷ்யர்கள் ஆன, பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர், ஸுரேஸ்வரர் போன்றவர்கள் பற்றியும், அவர்கள் சார்ந்த மடங்கள் பற்றியும் ஓரளவு அறிவோம். இப்படிப் பார்த்தால் நம் ஆசாரியர் என்பவர் ஆதிகுருவான விஷ்ணுவின் சாட்சாத் அவதாரம் ஆன வியாசரே ஆவார். "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்று கீதையில் கீதாசார்யனே சொல்லி இருக்கின்றான். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய" "வ்யாஸ ரூபாய விஷ்ணவே" என்றும் வருகின்றது. 

இந்த வேத வியாஸர் அவதாரம் காரணத்துடனேயே ஏற்பட்டது. பராசர முனிவர், குறிப்பிட்ட நேரத்தில் மச்சகந்தியுடன் கூடியதன் விளைவாக ஒரு த்வீபத்தில் தோன்றியவர் வேத வியாஸர். தீவில் பிறந்ததால் அவருடைய பெயர் "த்வைபாயனர்" என்றும், கறுப்பாக இருந்தமையால், "கிருஷ்ணர்" என்றும், இரண்டையும் சேர்த்தே வேத வியாஸரை "கிருஷ்ண த்வைபாயனர்" என்றும் சொல்லுவதுண்டு. கலி தோன்றப் போகின்றது என்பதாலேயே, வேதங்களைக் காத்து அவற்றைத் தொகுத்து மக்களைச் சென்றடையவேண்டியே பகவான் எடுத்த ஒரு அவதாரமே வியாசர் எனவும் , சாட்சாத் மஹா விஷ்ணுவின் அம்சமே வியாஸர் என்றும் சொல்லுவார்கள். இந்த வியாஸர் வேதங்களைத் தொகுத்தமையால், "வேத வியாஸர்" என்ற பெயர் பெற்றார். மும்மூர்த்திகளின் சொரூபமாயும் வேத வியாஸரைச் சொல்லுவதுண்டு. வியாஸரே "குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:" என்றும் திரிமூர்த்திகளும் சேர்ந்தவர் என்றும் சொல்லுவது உண்டு. 

அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார். இந்த பிரம்ம ஸூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர்களிலேயே நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசாரிய பரம்பரைக்கு வழி வகுத்த சங்கரர், (அத்வைதம்)ராமானுஜர்,(விசிஷ்டாத்வைதம்) மத்வர், (த்வைதம்), ஸ்ரீகண்டாசாரியார்(சைவ சித்தாந்தம்), வல்லபாசாரியார்(கிருஷ்ண பக்தி மார்க்கம்) போன்றவற்றைத் தம் தம் நோக்கில் எழுதி இருக்கின்றார்கள். 

ஆகவே மூலம் என்பது ஒன்றே. இதில் நமக்கு எதைப் பிடிக்கிறதோ, அல்லது குடும்ப வழி என்று சிலருக்கு வருகின்றதோ, அல்லது இஷ்டம் என்று சிலருக்குத் தோன்றுகின்றதோ அதை எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்து வருகின்றோம். ஆனால் அனைத்துக்கும் மூல காரணம் வேத வியாஸரே. அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். 

ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள். இந்த ஆவணி அவிட்டம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ரிக், யஜுர் வேதக் காரர் அனைவருக்கும், ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் பெளர்ணமியும் கூடி இருக்கும்போது வந்தால், சாமவேதக் காரர்களுக்கு மட்டும், ஆவணி மாதம் அமாவாசை கழிந்து,(அநேகமாய் பாத்ரபத சுக்ல சதுர்த்தி அன்று) வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு முதல்நாள் அல்லது பிள்ளையார் சதுர்த்தி அன்று வரும். "வேதாநாம் ஸாமவேதோஸ்மி" என்று கீதையில் கீதாசாரியன் சொன்னது போல் சாமவேதம் மட்டும் தனித்து இருப்பது அதன் ராகங்களுக்காகவோ என்றும் தோன்றுகின்றது.ஆயிரம் சாகைகள் கொண்டதாய்ச் சொல்லப் படும் இவை இசைக்கும் முறையில், அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகிறதாய் அவனே கீதையில் சொல்லுகின்றான். இதனால் மற்ற வேதங்கள் சிறப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த சாமவேதம் மட்டுமே ராகத்தோடு பாடக்கூடியது. அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகின்றான் என்றே அர்த்தம். எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி. /

/காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி// 

இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம். குரு பூர்ணிமாவுக்காக எழுதி எப்போவோ வச்சது. ஆனால் அப்போ வேறே போஸ்ட் போட்டுட்டேன், அதனாலும் இன்றைய நாளின் விசேஷத்தைக் கருதியும் இந்த போஸ்ட்.

                                             ஶ்ரீராமாநுஜாசாரியார்


படங்களுக்கு நன்றி கூகிள்.


ஆசார்ய ஹ்ருதயம்

மேற்கண்ட சுட்டியில் உள்ள வலைப்பதிவு "ஆசார்ய ஹ்ருதயம்" நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்து அவரவரால் முடிந்ததை/தெரிந்ததை எழுதி வந்தோம். எல்லாம் கடந்து போனாப்போல் இதுவும் கடந்து போனது.  அந்தச் சமயங்களில் ஒரு குரு பூர்ணிமாவுக்கு எழுதி வைச்ச இந்தப்பதிவு இப்போதும் பொருந்தும் வண்ணம் இருக்கிறது. இந்தக் கரு பிடிச்ச்வங்களுக்கு இது பிடிக்கும்.  மற்றவர்கள் பொறுத்து அருள வேண்டும். மீண்டும் நன்றி. வணக்கம்.

புதுசாக எழுதலையே பல மாதங்களாக எனக் கேட்பவர்களுக்கு இப்போதைய சூழலில் எதைப் பற்றி எழுதினாலும் பிரச்னை ஏற்படுகிறது.  பிரச்னைகளை உண்டாக்குவதில் ஆர்வம் இல்லை. என்ன நடக்குமோ என்ற கவலை இருந்தாலும் கலங்கிய குட்டை ஒரு நாள் தெளிந்த்து தான் தீரணும். 


ஶ்ரீ மத்வாசாரியார்

படத்துக்கு நன்றி கூகிள். 

Tuesday, July 12, 2022

திருவட்டார் ஆதிகேசவனைத் தரிசியுங்கள்.

 திருவட்டார் 1

திருவட்டார் 2


2015 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் என் தங்கை (சித்தி பெண்) கணவரின் சஷ்டிஅப்தபூர்த்திக்குச் சென்றோம். பின்னர் அங்கிருந்து நாகர்கோயில் வந்து அங்கே சுற்றிப் பார்த்துவிட்டுப் பின்னர் கன்யாகுமரிக்கும் போனோம். பின்னர் கன்யாகுமரியிலிருந்து ஶ்ரீரங்கம் வந்தோம். நாகர்கோயிலில் பத்மநாபபுரம் அரண்மனை தவிர்த்துத் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். சுமார் 3000 ஆண்டு பழமையான இந்தக் கோயிலில் சுமார் 500 வருடங்களாகக் கும்பாபிஷேஹமே காணாமல்.திருப்பணிகளும் நடைபெறாமல் இருந்து வந்திருக்கிறது. இப்போது தான் ஆன்மிகப் பெரியோர்கள் சேர்ந்து திருப்பணிக்கும் கும்பாபிஷேஹத்துக்கும் முயற்சிகள் பல செய்து நாங்க போன சமயம் திருப்பணி ஆரம்பித்து மிக மெதுவாக/உண்மையிலேயே மிக மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்றாலும் மூலவரைத் தரிசிக்கப் பிரச்னை ஏதும் இல்லை. பின்னர் வந்த நாட்களில் சந்நிதி மூடப்பட்டதாக அறிந்தோம். அப்போப் போன அனுபவங்களே கீழ்க்கண்ட பதிவில் இங்கே எடுத்துப் போட்டிருக்கேன்.  முன்னர் எழுதின அதன் சுட்டிகளும் மேலே கொடுத்திருக்கேன். இப்போக் கும்பாபிஷேஹம் ஆகி அதன் விபரங்கள் எல்லோரும் பகிர்ந்து வருவதால் கோயில் பற்றியும் ஆதிகேசவப் பெருமாள் பற்றியும் அனைவரும் அறிய வேண்டி மீண்டும் இங்கேயும் முக்கியமான பதிவை மட்டும் பகிர்ந்திருக்கேன். 

படம் நன்றி கூகிளார்


நேற்று (இந்தப் பதிவு எழுதிய வருஷத்தில்) எழுதிய பதிவில் கேஷுவின் வலக்கரம் சின்முத்திரை காட்டுவதாக எழுதி இருந்தேன். ஆனால் அது தப்புனு கேஷுவோட படத்தோடு விளக்கம் அளித்திருக்கிறார் நாகர்கோயில்காரர் ஆன திரு கண்ணன் ஜே.நாயர்.  நாகர்கோயில்க் காரர் ஆன அவர் சின்முத்திரை தக்ஷிணாமூர்த்திக்கே உரியது என்றும் இது சின் முத்திரை இல்லை, யோகமுத்திரை என்பார்கள் என்றும் எழுதி இருக்கிறார்.  கோயிலில் தரிசனத்தின் போது பட்டாசாரியார் (போத்திமார்) சின்முத்திரை என்றே சொன்னதாக நினைவு. கையில் குறிப்புப் புத்தகங்கள் ஏதும் இல்லை. மனதில் குறித்துக் கொண்டது தான். தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இணையத்தில் தேடிப் பார்த்தபோது விக்கி பீடியாவில் சின்முத்திரை என்றே இருக்கிறது. தினமலர் கோயில் பக்கத்தில் முத்திரை என்று மட்டுமே போட்டிருக்கின்றனர். இன்னொரு வலைப்பக்கம் யோகமுத்திரை என்றே குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே அதன் பின்னர் படங்களைத் தேடி எடுத்துப் பெரிது படுத்திப் பார்க்கையில், நாமெல்லாம் "டூ" விட்டால் "சேர்த்தி" போடுவோமே அது போல் விரல்களை வைத்திருக்கிறார் கேஷு! ஆக நம்மோடு சேர்த்தி தான் போட்டுக் கொண்டிருக்கிறார்.  இந்த முத்திரையின் அர்த்தமே வேறே. இதற்குத் தத்துவ ரீதியாக அர்த்தமே வேறாகும். சுவகரண முத்திரை என்பதை நம் தோழி எழுதிய முத்திரைகள் குறித்த பதிவில் படித்திருக்கிறேன். அதை உறுதியும் செய்து கொண்டேன். ஆகத் தவறாகச் சின் முத்திரை எனக் குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும். இப்போது கோயிலின் தலவரலாறு.

பிரம்மா யாகம் செய்யும்போது தவறு நேரிட கேசன், கேசி ஆகிய இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க வேண்டித் திருமாலை வேண்ட, அவரும் கேசனை அழித்துக் கேசியின் மேல் பள்ளி கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும், தாமிரபரணி நதியையும் திருமாலை அழிக்க வேண்டி அழைக்க, பூமாதேவி அந்த இடத்தை மேடாக்கினாள். கங்கையும், தாமிரபரணியுமோ திருமாலை வணங்கி அவரைச் சுற்றிக் கொண்டு வட்டமாக ஓடத்தொடங்கினார்கள். திருமாலைச் சுற்றி வட்டமாக ஆறுகள் இரண்டும் ஓடியதால் "வட்டாறு" என அழைக்கப்பட்ட இடம், திருவும் சேர்ந்து திருவட்டாறு எனப்படுகிறது. 

//வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான்

 கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை

 பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து 

நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே.//

நம்மாழ்வார்

என நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.  கேசனை அழித்ததால் கேசவன் என இவரை அழைக்கின்றனர். கேசியோ தப்ப முயற்சி செய்தான்.  12 கைகளுள்ள அவன் தப்ப முயன்ற போது கேசவப் பெருமாள் அவன் கைகளில் 12 ருத்ராக்ஷங்களை வைத்துத் தப்பவிடாமல் தடுத்தார். இந்தப் பனிரண்டு ருத்ராக்ஷங்கள் இருந்த இடமே திருவட்டாறைச் சுற்றி இருக்கும் 12 சிவன் கோயில்கள். மஹாசிவராத்திரி அன்று  சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் 12 சிவாலயங்களையும் தரிசித்த பின்னர் திருவட்டாறுக்கு வந்து இங்கே கேஷுவின் காலடியில் உள்ள சிவனையும் தரிசித்துச் செல்வார்கள். இங்கே பெருமாளின் நாபியில் இருந்து தாமரையோ, பிரம்மாவோ கிடையாது. இவரை திருவனந்தபுரத்து அனந்துவுக்கு அண்ணன் என்றும் சொல்கின்றனர்.  ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம்  3 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரைக்கும், பின்னர் பங்குனி மாதம் அதே 3 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரை சூரியனின் அஸ்தமன கதிர்கள் இந்தப் பெருமாளின் மேல் படும் என்கின்றனர்.

கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மது,கைடபர்கள் ஆகியோரும் இருக்கின்றனர். இங்கேயும் ஒரு ஒற்றைக்கல் மண்டபம் உண்டு.  கோயிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் உள்ள தூண்களில் தீப லக்ஷ்மியின் சிலைகள் காணப்படுகின்றன. (படம் எடுக்க அனுமதி இல்லை) கோயிலின் கொடிக்கம்பத்தில் உள்ள கல்வெட்டில் தமிழில் பொறித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாளை திருவோணம் இந்தக் கோயிலின் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அதைத் தவிரவும் ஐப்பசி, பங்குனித் திருவிழா, தை மாசம் கள பூஜை ஆகியன பிரசித்தி பெற்றது ஆகும்.



முதலில் படம் எடுக்கலாம்னு நினைச்சுப் பிரகாரங்களைத் தூரத்துப் பார்வையில் படம் எடுத்தேன். அங்கிருந்த அறநிலையத் துறை அதிகாரி பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுத்தார். ரொம்பவும் ரகசியமாவெல்லாம் எடுக்க இஷ்டமில்லை. பார்த்துட்டாங்கன்னா காமிராவைப் பிடுங்கி அழிப்பாங்க. அதிலே ஏற்கெனவே எடுத்ததும் போயிடும். ஆகையால் நிறுத்திட்டேன். பிரகாரம் இப்படித் தான் நீளமாகப் போகிறது. இந்தக் கோயில் திருவனந்தபுரம் அனந்துவோட கோயிலை விடப் பழமையானது என்றும் கிட்டத்தட்ட 3000 வருடப் பழமையான ஒன்று என்றும் சொல்கின்றனர். 



கோயிலின் தோற்றம், பக்கவாட்டுப் பார்வையில்




அங்கிருந்த அறிவிப்புப் பலகை! இதைப் படம் எடுக்க மட்டும் அனுமதி கொடுத்தாங்க. :)

சயனத்திருக்கோலத்தில் இருக்கும் பல பெருமாள் விக்ரஹங்களும் பொதுவாக வலப்பக்கம் இருக்கும் சயனத்திருக்கோலத்திலேயே காணப்படுவார்கள்.  இது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர்


இவரையும் மூன்று வாயில்கள் வழியே பார்க்க வேண்டும் என்றாலும் இவருக்கும் திருவட்டார் ஆதிகேசவருக்கும் பல வேறுபாடுகள் உண்டு.  இவர் நாபியில் இருந்து பிரம்மா தோன்றி இருப்பார். இன்னும் சில சயனத்திருக்கோலங்களில் பிரம்மா இருக்க மாட்டார். திருவட்டார் ஆதிகேசவப் பெருமாளும் அப்படி ஒரு சயனத்திருக்கோலம். ஆகவே வேறுபாடுகள் உண்டு. மற்ற சயனத்திருக்கோலங்களைக் கிடைக்கும்போதும், நேரம் இருக்கும்போதும் ஒரு பகிர்வாகப் பகிர்ந்துக்கறேன். இப்போ நேரம் ஆச்சு.  வேலைகள் அழைத்துக்கொண்டே இருக்கின்றன. வரேன்.


பெரிய எழுத்தில் இருப்பவை இன்று/இப்போது எழுதியவை. மற்றவை பழைய பதிவின் மீள் பதிவு. நன்றி.

Friday, July 01, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி 6!

தில்லைக்கும் மூத்த தலமாகத் திருவாரூரைக் குறிப்பிடுவதுண்டு. ஆகையால் கோயில் என அழைக்கப்படும் சிதம்பரத்தில் சொல்லும் “திருச்சிற்றம்பலம்” என்னும் வாழ்த்தை இங்கே “ஆருரா! தியாகேசா!” என்று சொல்கிறார்கள். இதைப் பெரிய கோயில் என்றும் சொல்லுவார்கள். ஏழு கோபுரங்கள் நம் உடலின் ஏழு ஆதாரங்களையும் குறிப்பிடுவதாய்ச் சொல்லுவார்கள். நாம் முன்னர் பார்த்த தேவாசிரிய மண்டபத்தின் தூண்கள் அனைத்துமே அடியார்கள் என்பதையும் கண்டோம். இந்த தேவாசிரிய மண்டபத்தை ராஜதானி மண்டபம் என்றும் அழைப்பதாகத் தெரியவருகிறது. வடகிழக்கில் ஆன்ம சக்தி கூடுவதை யோகசக்தி என்பார்கள். ஆகவே அதை விளக்கும் வண்ணம் இங்கே வடகிழக்குப் பகுதியில் அமைந்த மேடையுடன் காணப்படுவதாயும் சொல்கின்றனர்.

திருவாரூர்த் தேரான ஆழித்தேரில் எழுந்தருளும் தியாகேசரை விழா முடிந்ததும் இந்த மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி மஹாபிஷேஹம் செய்வித்து செங்கோலும் அளிப்பார்களாம். நம்மை எல்லாம் ஆளும் அரசன் அல்லவோ? பக்தர்களுக்காகக் கொடிய விஷத்தை உண்டும், பிரதோஷ காலத்தில் அந்த விஷத்தின் கொடுமை தன்னை மட்டுமில்லாமல் உலகவாசிகளையும் பாதிக்கா வண்ணம் ஆடிய ஆட்டம் தான் என்ன?? ஆகவே இங்கே தினமும் நித்யப் பிரதோஷம், மாலையில் நடைபெறும். அப்போது தேவாதிதேவர்கள் எல்லாம் வந்து ஈசனை வணங்கிச் செல்வதாகவும் ஐதீகம். மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் ஈசனின் தச அங்கங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். இங்கே தியாகேசனுக்கோ தனியாக தச அங்கங்கள் உண்டு.

அவையாவன

 1. பெயர் ஆரூரன் 2. நாடு அகளங்க நாடு 3. ஊர் ஆரூர் 4. ஆறு ஆனந்தம் 5. மலை அருள்மலை 6. படை வீரகட்கம் 7. பறை பஞ்சமுக முரசு 8. மாலை செங்கழுநீர் 9. கொடி தியாகக் கொடி 10. குதிரை வேதம் ஆகியன தியாகேசருக்கு என உள்ள தனியான தச அங்கங்கள் ஆகும். 

இதைத் தவிர அங்கப் பொருட்கள் பதினாறு விதமாகும். அவையாவன. மணித்தண்டு, தியாகக்கொடி ரத்தின சிம்மாசனம் செங்கழுநீர் மாலை வீரகண்டயம் அஜபா நடனம் ஐராவணம் அரதன சிருங்கம் பஞ்சமுக வாத்தியம் பாரி நாகஸ்வரம் சுத்த மத்தளம் குதிரை வேதம் சோழ நாடு ஆரூர் காவிரி, பதினெண்வகைப் பண்கள் ஆகியவை பதினாறு விதமான அங்கப் பொருட்கள்.

தியாகேசரின் சந்நிதியில் திருச்சாலகம் என்னும் தென்றல் தவழும் சாளரம் உள்ளது. மாலை நேர வழிபாட்டின் போது பதினெட்டு வகை இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றன. 


படத்துக்கு நன்றி கூகிளார்

மீண்டும் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள ஓவியங்களைப் பார்க்கலாமா? இவை நாயக்கர் காலத்து ஓவியங்கள் எனப்படுகிறது. ஆரூரின் தலவரலாறு சித்திரிக்கப் பட்டுள்ளது. ஆனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. கோயிலின் மத்தியான வழிபாடு முடிந்து கோயில் நடை மூடும் நேரம். ஆகவே ஒரே அவசரம். இங்கே ஓவியனின் கையெழுத்து இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இன்னொரு முறை போனால் நிதானமாய்ப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மேலே சென்றோம்.


நவகிரஹங்களும் ஒரே வரிசையில் இருப்பதைக் காணலாம். திருவாரூரை சர்வ தோஷப் பரிகாரத் தலம் என்கின்றனர்.
*******************************************************************************************


மேலே சொல்லி இருப்பவை எல்லாம் 2010 ஆம் ஆண்டில் சென்றபோது நடந்தவை. இப்போது இங்கெல்லாம் போகவே இல்லை. ஆனால் காலையில் சென்றபோது நவகிரஹங்களையும் தரிசனம் செய்து கொண்டோம். பின்னர் ரங்க்ஸ் போனப்போ நவகிரஹங்களுக்கும் அபிஷேஹ ஆராதனைகளும் குருக்கள் செய்து கொடுத்திருந்தார்  ரங்க்ஸ்  அபிஷேஹம் முடிந்து ஓட்டலில் போய்த் தயிர்சாதம் பாக்கெட் வாங்கிக் கொண்டு நாங்க தங்கி இருந்த அறைக்கு வந்ததும் சிறிது நேரத்தில் குருக்களும் வந்தார். அதற்குள்ளாக நான் ரங்க்ஸிடம் எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனவும் வயிறு தொந்திரவையும் சொல்லிவிட்டு மருந்துக்கடை ஏதேனும் ஒன்றில் மாத்திரை வாங்கிக் கொண்டு அதைச் சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் என்றும் சொன்னேன். அவருக்கும் சாப்பாடு வேண்டாம் எனவும் நவகிரஹ சந்நிதியில் குருக்கள் எள், சாதம், எலுமிச்சைச் சாதம் இன்னும் என்னவோ எல்லாம் கொடுத்துவிட்டார் என்பதால் பசி இல்லை என்றார்.

குருக்கள் வந்ததும் நாங்க கேட்டிருந்த படி புளியோதரை, தயிர்சாதம் (இது மட்டும் கொஞ்சம் நிறைய) சர்க்கரைப் பொங்கல் நாங்க கொண்டு போயிருந்த பாத்திரங்களில் போட்டு எடுத்து வந்தார். அபிஷேஹப் பிரசாதங்களான தீர்த்தம், மாலை, மற்றும் விபூதி, குங்குமப் பிரசாதம் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு அடுத்த மாதத்திற்கான கட்டளையை எப்படிச் செய்வது என்பது பற்றியும் பேசி முடிவு செய்து கொண்டோம். ஒவ்வொரு மாதமும் எங்களால் வாமுடியாது என்பதால் இணையம் மூலம் அபிஷேஹ ஆராதனைகளுக்குப் பணம் அனுப்புவது என முடிவு செய்து கொண்டோம். பின்னர் அங்கிருந்து கிளம்பினோம். எதிரேயே ஒரு மருந்துக்கடை இருந்தும் அது மூடி விட்டார்கள் என்பதால் சற்று தூரம் போய் இன்னொரு மருந்துக்கடையில் போய் ஆவோமின் மாத்திரை வாங்கி வரச் சொன்னேன். வண்டி ஓட்டுநர் இறங்கிப் போய்க் கேட்டுவிட்டு ஆவோமின் இல்லை என்பதால் இன்னொன்று அதன் திறனே கொண்டது என்று கொண்டு காட்டினார். அதை வாங்கிப் பார்த்துவிட்டுச் சரி என நான்கு மாத்திரைகள் வாங்கி வரும்படி சொன்னேன். வந்ததும் அரை டம்பளர் தண்ணீரில் (அதிகம் சாப்பிடப் பயம்) அந்த மாத்திரையைச் சாப்பிட்டேன். சுமார் அரைமணி நேரத்தில் வயிற்றின் அரட்டல், உருட்டல், புரட்டல் கொஞ்சம்  கொஞ்சமாகச் சரியாக ஆரம்பித்தது. 

சுமார் ஒரு மணிக்குத் திருவாரூரில் இருந்து கிளம்பினோம். வழியில் எங்கும் நிற்காமல் பயணித்துச் சுமார் நாலரைக்கு வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்ததும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டுவிட்டுப் பிரசாதங்களை அக்கம்பக்கம் விநியோகித்துவிட்டுக் கீழே பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் கொடுத்தோம். இருந்த தயிர் சாதத்தை இருவருமாக இரவில் பங்கிட்டுக் கொண்டு சாப்பிட்டோம். இரண்டு நாளானது வயிறு ஓய்ந்து அமைதி பெறுவதற்கு.  அதுக்கப்புறமா திடீர்ப் பயணமாகச் சென்னைக்கும் இந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி கிளம்பிப் போய்ட்டு 3 ஆம் தேதி திரும்பினோம்.