எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 01, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி 6!

தில்லைக்கும் மூத்த தலமாகத் திருவாரூரைக் குறிப்பிடுவதுண்டு. ஆகையால் கோயில் என அழைக்கப்படும் சிதம்பரத்தில் சொல்லும் “திருச்சிற்றம்பலம்” என்னும் வாழ்த்தை இங்கே “ஆருரா! தியாகேசா!” என்று சொல்கிறார்கள். இதைப் பெரிய கோயில் என்றும் சொல்லுவார்கள். ஏழு கோபுரங்கள் நம் உடலின் ஏழு ஆதாரங்களையும் குறிப்பிடுவதாய்ச் சொல்லுவார்கள். நாம் முன்னர் பார்த்த தேவாசிரிய மண்டபத்தின் தூண்கள் அனைத்துமே அடியார்கள் என்பதையும் கண்டோம். இந்த தேவாசிரிய மண்டபத்தை ராஜதானி மண்டபம் என்றும் அழைப்பதாகத் தெரியவருகிறது. வடகிழக்கில் ஆன்ம சக்தி கூடுவதை யோகசக்தி என்பார்கள். ஆகவே அதை விளக்கும் வண்ணம் இங்கே வடகிழக்குப் பகுதியில் அமைந்த மேடையுடன் காணப்படுவதாயும் சொல்கின்றனர்.

திருவாரூர்த் தேரான ஆழித்தேரில் எழுந்தருளும் தியாகேசரை விழா முடிந்ததும் இந்த மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி மஹாபிஷேஹம் செய்வித்து செங்கோலும் அளிப்பார்களாம். நம்மை எல்லாம் ஆளும் அரசன் அல்லவோ? பக்தர்களுக்காகக் கொடிய விஷத்தை உண்டும், பிரதோஷ காலத்தில் அந்த விஷத்தின் கொடுமை தன்னை மட்டுமில்லாமல் உலகவாசிகளையும் பாதிக்கா வண்ணம் ஆடிய ஆட்டம் தான் என்ன?? ஆகவே இங்கே தினமும் நித்யப் பிரதோஷம், மாலையில் நடைபெறும். அப்போது தேவாதிதேவர்கள் எல்லாம் வந்து ஈசனை வணங்கிச் செல்வதாகவும் ஐதீகம். மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் ஈசனின் தச அங்கங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். இங்கே தியாகேசனுக்கோ தனியாக தச அங்கங்கள் உண்டு.

அவையாவன

 1. பெயர் ஆரூரன் 2. நாடு அகளங்க நாடு 3. ஊர் ஆரூர் 4. ஆறு ஆனந்தம் 5. மலை அருள்மலை 6. படை வீரகட்கம் 7. பறை பஞ்சமுக முரசு 8. மாலை செங்கழுநீர் 9. கொடி தியாகக் கொடி 10. குதிரை வேதம் ஆகியன தியாகேசருக்கு என உள்ள தனியான தச அங்கங்கள் ஆகும். 

இதைத் தவிர அங்கப் பொருட்கள் பதினாறு விதமாகும். அவையாவன. மணித்தண்டு, தியாகக்கொடி ரத்தின சிம்மாசனம் செங்கழுநீர் மாலை வீரகண்டயம் அஜபா நடனம் ஐராவணம் அரதன சிருங்கம் பஞ்சமுக வாத்தியம் பாரி நாகஸ்வரம் சுத்த மத்தளம் குதிரை வேதம் சோழ நாடு ஆரூர் காவிரி, பதினெண்வகைப் பண்கள் ஆகியவை பதினாறு விதமான அங்கப் பொருட்கள்.

தியாகேசரின் சந்நிதியில் திருச்சாலகம் என்னும் தென்றல் தவழும் சாளரம் உள்ளது. மாலை நேர வழிபாட்டின் போது பதினெட்டு வகை இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றன. 


படத்துக்கு நன்றி கூகிளார்

மீண்டும் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள ஓவியங்களைப் பார்க்கலாமா? இவை நாயக்கர் காலத்து ஓவியங்கள் எனப்படுகிறது. ஆரூரின் தலவரலாறு சித்திரிக்கப் பட்டுள்ளது. ஆனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. கோயிலின் மத்தியான வழிபாடு முடிந்து கோயில் நடை மூடும் நேரம். ஆகவே ஒரே அவசரம். இங்கே ஓவியனின் கையெழுத்து இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இன்னொரு முறை போனால் நிதானமாய்ப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மேலே சென்றோம்.


நவகிரஹங்களும் ஒரே வரிசையில் இருப்பதைக் காணலாம். திருவாரூரை சர்வ தோஷப் பரிகாரத் தலம் என்கின்றனர்.
*******************************************************************************************


மேலே சொல்லி இருப்பவை எல்லாம் 2010 ஆம் ஆண்டில் சென்றபோது நடந்தவை. இப்போது இங்கெல்லாம் போகவே இல்லை. ஆனால் காலையில் சென்றபோது நவகிரஹங்களையும் தரிசனம் செய்து கொண்டோம். பின்னர் ரங்க்ஸ் போனப்போ நவகிரஹங்களுக்கும் அபிஷேஹ ஆராதனைகளும் குருக்கள் செய்து கொடுத்திருந்தார்  ரங்க்ஸ்  அபிஷேஹம் முடிந்து ஓட்டலில் போய்த் தயிர்சாதம் பாக்கெட் வாங்கிக் கொண்டு நாங்க தங்கி இருந்த அறைக்கு வந்ததும் சிறிது நேரத்தில் குருக்களும் வந்தார். அதற்குள்ளாக நான் ரங்க்ஸிடம் எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனவும் வயிறு தொந்திரவையும் சொல்லிவிட்டு மருந்துக்கடை ஏதேனும் ஒன்றில் மாத்திரை வாங்கிக் கொண்டு அதைச் சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் என்றும் சொன்னேன். அவருக்கும் சாப்பாடு வேண்டாம் எனவும் நவகிரஹ சந்நிதியில் குருக்கள் எள், சாதம், எலுமிச்சைச் சாதம் இன்னும் என்னவோ எல்லாம் கொடுத்துவிட்டார் என்பதால் பசி இல்லை என்றார்.

குருக்கள் வந்ததும் நாங்க கேட்டிருந்த படி புளியோதரை, தயிர்சாதம் (இது மட்டும் கொஞ்சம் நிறைய) சர்க்கரைப் பொங்கல் நாங்க கொண்டு போயிருந்த பாத்திரங்களில் போட்டு எடுத்து வந்தார். அபிஷேஹப் பிரசாதங்களான தீர்த்தம், மாலை, மற்றும் விபூதி, குங்குமப் பிரசாதம் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு அடுத்த மாதத்திற்கான கட்டளையை எப்படிச் செய்வது என்பது பற்றியும் பேசி முடிவு செய்து கொண்டோம். ஒவ்வொரு மாதமும் எங்களால் வாமுடியாது என்பதால் இணையம் மூலம் அபிஷேஹ ஆராதனைகளுக்குப் பணம் அனுப்புவது என முடிவு செய்து கொண்டோம். பின்னர் அங்கிருந்து கிளம்பினோம். எதிரேயே ஒரு மருந்துக்கடை இருந்தும் அது மூடி விட்டார்கள் என்பதால் சற்று தூரம் போய் இன்னொரு மருந்துக்கடையில் போய் ஆவோமின் மாத்திரை வாங்கி வரச் சொன்னேன். வண்டி ஓட்டுநர் இறங்கிப் போய்க் கேட்டுவிட்டு ஆவோமின் இல்லை என்பதால் இன்னொன்று அதன் திறனே கொண்டது என்று கொண்டு காட்டினார். அதை வாங்கிப் பார்த்துவிட்டுச் சரி என நான்கு மாத்திரைகள் வாங்கி வரும்படி சொன்னேன். வந்ததும் அரை டம்பளர் தண்ணீரில் (அதிகம் சாப்பிடப் பயம்) அந்த மாத்திரையைச் சாப்பிட்டேன். சுமார் அரைமணி நேரத்தில் வயிற்றின் அரட்டல், உருட்டல், புரட்டல் கொஞ்சம்  கொஞ்சமாகச் சரியாக ஆரம்பித்தது. 

சுமார் ஒரு மணிக்குத் திருவாரூரில் இருந்து கிளம்பினோம். வழியில் எங்கும் நிற்காமல் பயணித்துச் சுமார் நாலரைக்கு வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்ததும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டுவிட்டுப் பிரசாதங்களை அக்கம்பக்கம் விநியோகித்துவிட்டுக் கீழே பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் கொடுத்தோம். இருந்த தயிர் சாதத்தை இருவருமாக இரவில் பங்கிட்டுக் கொண்டு சாப்பிட்டோம். இரண்டு நாளானது வயிறு ஓய்ந்து அமைதி பெறுவதற்கு.  அதுக்கப்புறமா திடீர்ப் பயணமாகச் சென்னைக்கும் இந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி கிளம்பிப் போய்ட்டு 3 ஆம் தேதி திரும்பினோம். 

30 comments:

 1. கோவில் பற்றிய விவரங்கள் அருமை. எவ்வளவு அர்த்தங்களுடன் அமைத்திருக்கிறார்கள் நம் முன்னோர் கோவில்களை!   நீங்களே இன்னும் நிதானமாய்ப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் நானெல்லாம் எப்போதுதான் ஆற அமர பார்ப்பது என்கிற எண்ணம் மனதில் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. இப்போக் கடைசியாப் போன கோலாப்பூர் நிதானமாய்ப் பார்த்தோம். அதே பண்டர்பூர் அப்படிப் பார்க்க முடியலை. கூட்டம் வேறே! சாயங்கால தீபாராதனைக்கான ஏற்பாடுகள்! நேரமும் சரியா அமையணும். இம்முறை சும்மா எல்லா முக்கியமான உம்மாச்சிங்களையும் நான் எட்டிப் பார்த்ததோடு சரி! :( இனிமேல் போக முடியுமா என்பதும் சந்தேகமே!

   Delete
 2. அவோமின் அந்தக் கால மாத்திரை!  நிறைய அந்தக் கால நல்ல மாத்திரைகள் இப்போது மார்க்கெட்டில் இல்லை.  SGT கூட கிடைக்காது. அதில் இன்னொன்று ஹிஸ்ட்டாக் ஈ வி டி!

  ReplyDelete
  Replies
  1. இங்கே ஶ்ரீரங்கத்தில் வீட்டுக்கு அருகே உள்ள மருந்துக்கடை மாமா எப்படியானும் வாங்கிக் கொடுத்துடுவார். திருவாரூரில் கிடைக்கலை என்றதும் அங்கே சொல்லி நான்கு மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொண்டேன். சென்னை போகும்போதும்/திரும்பி வரும்போதும் ஒவ்வொன்று போட்டுக் கொண்டுவிட்டு மிச்சம் வைச்சிருக்கேன். எனக்கு இது ஒத்துக்கறாப்போல் வேறே எதுவும் ஒத்துக்கறதில்லை.

   Delete
  2. அவோமினுக்கு பிரமாதமா தூக்கம் வரும்!

   Delete
  3. ஆமாம். வயிறும் அமைதியா இருக்குமே! அதல்லவோ முக்கியம். இல்லைனா தூங்கத்தான் முடியுமா?

   Delete
 3. எப்படியோ பயணமும் இனிதாக முடிந்து வயிறும் சரியானது.  

  ReplyDelete
  Replies
  1. சொன்னால் திருஷ்டிப் படுமோ என்னமோ! சென்னையிலிருந்து வந்தப்புறமா உணவு முறையைக் கொஞ்சம் மாற்றி இருக்கேன். கறுப்புக் கவுனி அரிசிக் கஞ்சி குடிச்சிட்டு இருந்தேன். அது கனமான ஆகாரமா இருக்கோனு சந்தேகம். மாமாவுக்கு மட்டும் கஞ்சி/அதுவும் இப்போல்லாம் சத்துமாவுக் கஞ்சி போல/வீட்டிலேயே அரைத்ததில் போட்டுவிட்டு நான் பழங்கள்/பால்/ஹார்லிக்ஸ்னு எடுத்துக்கறேன். பதினோரு மணி பதினொன்றரை மணிக்குச் சாப்பிட்டால் வயிற்றுத் தொந்திரவு கொஞ்சம் குறைகிறது. சாயந்திரம் தான் கடை பக்ஷணங்கள் எதுவுமே சாப்பிட முடிவதில்லை. பிஸ்கட்டுகள்/மறுபடி பழம்னு எடுத்துக்கிறேன்.

   Delete
 4. எப்படித்தான் பயணங்களைச் சமாளிக்கிறீர்களோ

  ReplyDelete
  Replies
  1. எல்லாப்புகழும் இறைவனுக்கே! அவன் அருள் இன்றி என்னால் ஓர் அங்குலம் கூட நகர்ந்திருக்க முடியாது.

   Delete
 5. மதியம் கிளம்பி மூன்று மணி நேரத்தில் வந்துசேர்ந்துவிட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. சொல்லப் போனால் பனிரண்டரைக்குக் கிளம்பிட்டோம். நடுவில் மாத்திரைக்கு இரண்டு இடங்களில் நிறுத்தியதால் திருவாரூரில் இருந்து வெளியே வர சரியாக ஒருமணி ஆனது. அதைக் கணக்கு வைச்சுண்டு சொன்னேன். ஆனாலும் ஶ்ரீரங்கத்திலிருந்து கும்பகோணம் கல்லணை வழியில் சரியா இரண்டரை மணி நேரம் தான் ஆகும். நடுவில் நிறுத்தினால் நேரம் ஆகும்.

   Delete
 6. அடுத்த முறை ஓவியங்கள் பார்க்கணும் என்று நினைத்த நீங்கள் அதற்கு அப்புறம் எத்தனை முறை போயிருப்பீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. அதுக்கப்புறமா இப்போத் தான் போனேன். இப்போ இருந்த நிலைமையில் ஓவியங்கள் எல்லாம் நினைவிலேயே இல்லை. :(

   Delete
 7. யாத்திரை சிறப்பாக சென்று வந்தமை அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி.

   Delete
 8. ஆரூரர் கோவில் பல அர்த்தங்களுடன் கூடிய மிகப் பெரிய கோவிலாக இருக்கிறது . படிக்கும்போதே ஆச்சரியம் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி. நம் கோயில்களின் சிறப்பை நாமே உணர்வதில்லையே! என்னமோ போறோம்! தீபாராதனை பார்த்துட்டுத் திரும்பிடறோம். :(

   Delete
 9. நான் கோவில் சென்றிருந்தாலும் தகவல்கள் உங்கள் மூலமாகத்தான் கீதாக்கா தெரிந்துகொள்கிறேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கோயிலின் மற்றொரு பகுதியைப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. வாய்ப்பு கிடைத்தால் இன்னும் முழுமையாகப் பார்க்க வேம்ண்டும். சென்றிருந்த சமயம் புனரமைப்புப் பணிகள் கோயில் முழுவதும் நடந்துகொண்டிருந்ததால் சரியாகக்ப் பார்க்கவும் முடியவில்லை.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பொதுவாகத் தகவல்களைச் சேர்த்துக் கொண்டு கொஞ்சம் தெரிஞ்ச பின்னரே கோயிலுக்குப் போவது நல்லது. அப்படித் தான் செய்து கொண்டிருந்தேன். இப்போல்லாம் முடியறதில்லை.

   Delete
 10. அவோமின் கிடைப்பதில்லை இப்போது. பல மாத்திரைகள் முன்பு பயன்படுத்தியவை கிடைப்பதில்லை. அதற்குப் பதில் அதே காம்பினேஷன் என்று வேறு பெயரில் தான் கிடைக்கிறது. மருந்துக் கம்பெனிகள் மாறுவதாலா? அல்லது சின்ன மீனை பெரிய மீன் விழுங்குவது போல மருந்துலகிலும் நடக்கிறதே அதனாலா? ஸ்ரீராமிடம் கேட்க வேண்டும்.

  எப்படியோ சரியாகக் கிடைத்து அது உங்களுக்கு வேலை செய்ததே வேறு பிரச்சனைகளைக் கிளப்பாமல் பயணம் நல்லபடியாக முடிந்து பிரார்த்தனைகள் முடிந்து வந்து சேர்ந்தது பெரிய விஷயம். நல்ல விஷயமும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சந்தையில் புதிய கண்டுபிடிப்பு வந்தால் உடனே அதைத் தான் விற்பனைக்குக் கொண்டு வராங்க. அதிலும் இந்தச் சர்க்கரைக்கான மாத்திரைகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாய் வரும் போல. நம்மவருக்கு மருத்துவர் ஒவ்வொரு மாதமும் மாத்திரைகளை மாற்றிக் கொடுப்பார். அவருக்கு ஒத்துக்கறதே இல்லை. ஆகவே இப்போ அதை எல்லாம் நிறுத்திட்டு முன்னாடி சாப்பிட்டு வந்தவற்றையே சாப்பிடுகிறார்.

   Delete
  2. டொம்பரிடோன்,  ப்ரோகிளோர்பெராசின், மெடோக்கிலோபிரோமைட் தவிர ஆண்டன்செட்ரான் போன்ற மாத்திரைகள் உள்ளன.  உங்களுக்குத் தந்தது இன்னும் புதிதோ என்னவோ!

   Delete
  3. நான் சாப்பிடும் ப்ரெஷர் டேப்லெட்டே வெறும் சாக்பீஸோ (சுண்ணாம்போ) என்ற சந்தேகம் எனக்கு வருது. ஒருவேளை கவரை வச்சுக்கிட்டு யாரேனும் போலி டேப்லெட் போடறாங்களான்னு தெரியலை.

   Delete
  4. புதுசாய் மாத்திரை கொடுத்தால் அதை கூகிளில் போட்டுத் தேடிப் பார்த்துடுவேன். வயிற்றுக்குப் பிரச்னை இருக்கும்னு தெரிஞ்சால் அதைச் சாப்பிடறதில்லை. பழைய மாத்திரையே எது ஒத்துண்டதோ அதையே தொடர்ந்துடுவோம்.

   Delete
 11. மூலாதாரத் திருத்தலத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்..
  எல்லாம் சிவமயம்..
  எங்கும் சிவமயம்..

  இனிய பதிவு..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 12. வணக்கம் சகோதரி

  திருவாரூர் கோவில் பற்றிய விபரங்கள் அருமை. அத்தனையும் தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி. ஒரே வரிசையில் அமைந்த நவகிரஹங்களை தரிசித்து கொண்டேன். உங்கள் அழகான வர்ணனைகளில் திருவாரூர் ஈசனையையும் அம்பிகையையும் தரிசித்து கொண்டேன். திருவாரூர் கோவிலுக்குச் செல்லும் அருளை ஈசன் எனக்கு அருள்வாராக.

  தாங்கள் இவ்வளவு உடல்நலக் குறைவிலும், அதைப் பொருட்படுத்தாது நல்லபடியாக அந்த இறைவனை தரிசித்து வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தீடிரென அமைந்த சென்னை பயணத்திற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  இங்கு சகோதரர் ஸ்ரீராம் சொல்லியுள்ளவை எல்லாம் சுகருக்கான மாத்திரைகளா? எனக்கு மருத்துவர் தந்த சுகர் மாத்திரையில் மீண்டும் உடல்நலம் வேறு மாதிரி படுத்துகிறது. என்னவோ எனக்கு அலோபதி ஒத்து வரவில்லை.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. அவரைத்தான் கேட்கணும் கமலா. எல்லாம் வயிற்றுக்கோளாறுகளுக்கானவையோ என நினைக்கிறேன். உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி படுத்துகிறதே! :(

   Delete
  2. ஆங்கிலத்தில் கொடுத்திருந்தால் கூகிளில் பார்த்திருக்கலாம். இதற்கு எல்லாம் ஸ்பெல்லிங் நாம் சரியாய்க் கொடுக்கணும். அதோடு எத்தனை மி.கி. என்பதும் சரியா இருக்கணுமே!

   Delete