எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 29, 2024

அனுபவங்கள் பலவிதம்.!

 நம்ம ரங்க்ஸ் இப்போக் கொஞ்சம் கொஞ்சம் எழுந்து நடக்கிறார். பிசியோ தெரபிஸ்ட் தன்னால் முடிந்ததை முழு ஈடுபாட்டுடன் செய்வதால் இந்த அளவுக்குப் பலன் வந்திருக்கிறது. ஜூன், ஜூலையில் மருத்துவமனைக்குப் போனப்போ எல்லாம் ஆம்புலன்ஸில் தான் படுக்க வைத்து அழைத்துச் சென்றேன். வரும் நாட்களில்; கொஞ்சம் மாறும் என நம்பிக்கையுடன் இருக்கேன். ஆனால் இந்த ஹோம்கேர் ஆட்கள் தான் விதம் விதமாக வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் கழிவறைப் பயன்பாடு. மத்யமரில் ஓர் பெண்மணி இந்த ஹோம்கேர் ஆட்கள் பற்றி எழுதி இருந்தாலும் இதைச் சொன்னாங்களானு தெரியலை. என்னோட நிலை தர்மசங்கடமானது. சொல்லுவது தப்பா/சரியானும் தெரியலை. ஆனாலும் இது ஒரு தீராத பிரச்னை. அபார்ட்மென்ட் வளாகத்தில் கீழே கார் பார்க்கில்  2 அல்லது 3 பொதுக்கழிவறையும் மேலே மொட்டை மாடியில் இரண்டு பொதுக்கழிவறையும் இருக்கு. நம்ம வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே பெண்களாக இருப்பதால் பகல் வேளை என்றால் கூட நான் எங்க கழிவறையையே பயன்படுத்திக்கலாம்னு சொல்லிக் கொண்டிருக்கேன். ஆனால் அதைச் சுத்தம் செய்வதில் தான் பெரிய பிரச்னையே இருக்கு. நான் கொஞ்சமும் தயங்காமல் போய்ச் சுத்தம் செய்துடுவேன். ஆனால் இரவில் வரும் பெண்மணி நாங்க பயன்படுத்துவதை நாங்க தான் சுத்தம் செய்யணும்னு சொல்லிட்டுச் செய்வாங்க. ஆனால் பகலில் வந்து கொண்டிருந்த பெண்மணிக்கு இது ஒத்து வரவில்லை.

உங்க வீட்டுக் கழிவறை. நீங்க தான் சுத்தம் செய்யணும்னு சொல்லாமல் சொல்லுவாங்க. ஆனால் அவங்க போனால் உள்ளே போய்க் கதவைச் சார்த்திக் கொண்டால் மணிக்கணக்காக ஆகிடும். தன்ணீரே ஃப்ளஷ் செய்யும் சப்தம் கேட்காது. அவங்களிடம் கேட்டால் நான் கழிவறையைப் பயன்படுத்தவே இல்லைனு சொல்லிடுவாங்க. அடுத்து இவர் போனால் துர்நாற்றத்துடன் கழிவுகளுடன் இருக்கும். இரண்டு, மூன்று முறை சுத்தம் செய்துட்டு உட்காரும் இடமெல்லாம் நீர் விட்டு அலம்பிட்டுப் போகணும். அப்படியும் இதை அந்த அம்மா கண்டுக்கவே மாட்டாங்க இரவு வரும் பெண்மணி தான் வாரம் இருமுறை சுத்தம் செய்து தருவாங்க.  ஹோம்கேர் ஆர்கனைசரிடம் இதை ஒரு பெரிய குற்றமாகச் சொல்லி நான் வேலை வாங்குவதாகவும் அவங்களை அழ வைப்பதாகவும் சொல்லி இருக்கார். ஆர்கனைசர் என்னைக் கேட்டப்போ அப்போ அவங்க பயன்பாட்டில் இருக்கும் கழிவறையை நான் சுத்தம் செய்து கொடுக்கணுமானு கேட்டதுக்கு அவங்களிடம் பதிலே இல்லை. பின்னர் நான் விளக்கிச் சொன்னேன். பொதுக்கழிவறை மொட்டை மாடியிலும், கார் பார்க்கிலும் இருப்பதால் இவங்க அவசரத்துக்குப் போய்வரக் கஷ்டமாக இருக்கும் என்பதாலும் இருட்டு நேரத்தில் பெண்கள் தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும் வேண்டி எங்க கழிவறையையே பயன்படுத்திக்கச் சொன்னதாகவும், அவங்க பயன்பாட்டில் இருக்கும்வரை அவங்க தான் சுத்தம் செய்யணும் என்றும் திட்டவட்டமாகச் சொன்னேன். ஆனால் அது எவ்வளவு தூரம் சரியாக வரப் போகிறதுனு புரியலை.இப்போத் திடீர்னு இந்த இருவரையும் மாற்றும்படி நேர்ந்து விட்டதால் ஹோமில் வேலை செய்யும் இளம் பெண்களையே அனுப்பறாங்க. இளம்பெண்கள். எல்லோரும் 20/25 வயதுக்குள். ஹோமில் ஒருத்தர் நாலைந்து முதியவர்களைக் கவனிப்பதால் இங்கே இவரை மட்டும் கவனிப்பதில் அவங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் இதுவும் எத்தனை நாட்களுக்கோ எனத் தோன்றுகிறது. 

பலரும் இந்த வேலைக்குப் படித்து விட்டு முறையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டெல்லாம் வருவதில்லை. பணக்கஷ்டம் இருப்பவங்க இம்மாதிரி ஏதேனும் ஒரு ஹோம்கேரில் பெயரைப் பதிந்து கொள்கிறார்கள். ஹோம்கேர் ஆர்கனைசர்கள் எல்லோரும் நேரடியாக ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவங்க ஒரு பெண்மணியை இதை எல்லாம் கவனிக்கச் சொல்லி ஏற்பாடு செய்கிறார். அந்தப் பெண்ணோ தனக்கு யார் கமிஷன் கொடுக்கிறாங்களோ அவங்களைத் தேர்ந்தெடுப்பாங்க.ஆரம்பப் பள்ளிக்கல்வியைக் கூடத் தாண்டி இருக்க மாட்டாங்க.   அந்தப் பெண்மணி படிச்சே இருக்க மாட்டாங்க. ஒரு சிலர் நாலைந்து வகுப்புக்களும் இன்னும் சிலர் எட்டு வகுப்பும், சிலரே பத்தாம் வகுப்பும் படிச்சிருக்காங்க. பத்தாம் வகுப்புப் படிச்சிருந்தாலும் பெரும்பாலோருக்கும்  தமிழோ, ஆங்கிலமோ சரளமாக வரலை என்பதே உண்மை. சிலருக்கு நம்ம விலாசம் எழுதிக் கொடுத்தாலோ வாட்சப்பில் அனுப்பினாலோ படிக்கவே தெரியாது. வீட்டு வாசலிலோ அல்லது எதிரே உள்ள லான்ட்மார்க் கல்யாண மண்டப வாசலிலோ நின்று கொண்டு வீடு எங்கே இருக்குனு கேட்பாங்க. சில அதி புத்திசாலிகள் என்னைக் கீழே வந்து பார்த்து அவங்களை அழைத்துச் செல்லுமாறு கூப்பிடுவதும் உண்டு. இன்னும் சிலர் யாரையானும் அனுப்பி வைங்கனும் சொல்வாங்க. அவங்க கிட்டே எல்லாம் என்னால் வரமுடியாத நிலையையும், வீட்டில் யாரும் இல்லை என்பதையும் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அதோடு ஒரு வழியா வீட்டுக்கு வந்தாலும் அழைப்பு மணியை அழுத்திட்டுத் திறக்கும் வரை காத்திருக்கவெல்லாம் நேரம் இருக்காது. மணியிலேயே கையை வைத்துக் கொண்டு அழுத்திய வண்ணம் இருப்பாங்க. ஏன் இப்படிச் செய்யறீங்க, வர வேண்டாமானால் நான் கதவுகிட்டேயே நிற்கலை என்பது போலப்  .பேசுவாங்க

ஒரு விஷயத்தில் மட்டும் அநேகமாக எல்லோரும்  ஒற்றுமை/ அது அலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பது அல்லது அலைபேசியைத் தோள்பட்டைக்கும்/காதுக்கும் இடுக்கிக் கொண்டு பேசுவது அல்லது ஏதேனும் திரைப்படம், காமெடிக் காட்சிகள், பாடல் காட்சிகள் பார்ப்பது. மிகச் சிலர் மட்டும் எதுவும் அதிகம் பேசாமல் பார்க்காமல் இருப்பாங்க. சிலர் அறையின் பால்கனியைக் காற்றுக்காகத் திறந்து வைப்பதால் அங்கே போய் உட்கார்ந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள். கடவுள் அருளால் நல்ல வேளையாக இப்போ டயப்பர் மாற்றுவதோ கதீடர் மூலம் நிரம்பும் சிறுநீர்ப்பையைக் காலி செய்யும் வேலையோ இல்லை. முன்னெல்லாம் கவனித்துக் கொண்டே இருக்கணும். இல்லைனால் சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீரெல்லாம் மீண்டும் ப்ளாடருக்கே போய் இன்ஃபெக்ஷன் ஆகி விடும்.வலியும் எரிச்சலும் உயிர் போகும்படி இருக்கும். ஒவ்வொரு முறையும் நர்சைக் கூப்பிட்டுச் சுத்தம் செய்து மருந்து போட்டுக் கதிட்டர் மாற்றி எல்லாம் பண்ணுவோம். அந்த நர்ஸ் இந்தப் பெண்களிடம் பல முறை சுத்தமாக வைச்சுக்கறதைப் பற்றிச் சொன்னாலும் கேட்பவர்கள் இல்லை. முடிந்தவரை காலை உடம்பு துடைக்கையிலும், மாலையும் நான் அவங்களில் யாராவது ஒருத்தரைக் கிட்டே இருந்து நானும் செய்து அவங்களையும் செய்ய வைப்பேன்.

இதை எழுதி 2 நாட்கள் ஆனாலும் போட யோசனை. இன்னிக்கு ஒரு வழியாப் போடலாம்னு முடிவு பண்ணிப் போட்டிருக்கேன்.

16 comments:

  1. ரங்க்ஸ் குணமாகிவருவது மிகுந்த சந்தோஷம்.

    ஹோம்கேர் ஆட்களெல்லாம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க. எங்க வீட்டுலயும் விசேஷத்துக்கு வெளி ஆட்கள் வந்தால் வீட்டில் இருக்கும் என் தனி பாத்ரூமைத்தான் உபயோகிக்கச் சொல்வேன். பிறகு நான் விசேஷம் முடிந்து உபயோகப்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்பு முழுவதையும் சுத்தம் செய்துவிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமெல்லாம் இல்லை, நெல்லை. ரொம்பவே அப்படி./இப்படி தான், நான் பெரும்பாலும் வாயைத் திறப்பதில்லை ஆனால் கழிவறைப் பிரச்னையில் மட்டும் அவ்வப்போது சொல்லும்படி நேர்கிறது.

      Delete
  2. மீண்டும் இணையத்தைக் கலக்க (கலங்க?) வைக்க விரைவில் நீங்க வரணும். அதுக்கு மாமாவுக்கு முழுமையாக உடம்பு தேவலையாக வேண்டும். எங்களின் பிரார்த்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. கலக்கவும் வேண்டாம். கலங்கவும் வேண்டாம். சாதாரணமாய் இருந்தாலே போதும் நெல்லை.

      Delete
  3. சிரமம்தான்.  புரிகிறது.  இந்தக் காலத்தில் சேவை மனப்பான்மை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.  ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு தாங்கள் செய்யும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்வோர்களும் குறைந்து வருவது வருத்தத்திற்குரியது.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சிலரே சொல்லப் போனால் ஓரிரண்டு பேர்கள் மட்டும் தான் ஈடுபாட்டுடன் செய்கின்றனர். ஆனால் ஒரு விஷயம் மட்டும் நான் ஆரம்பத்தில் இருந்தே இவங்களை எதிர்பார்க்கலை. அது மாமாவுக்குச் சாப்பாடு கொடுப்பது, காஃபி, டீ கொடுப்பது. இரவில் நடுவில் வந்து பார்த்துக் கொண்டு ஹார்லிக்சோ, பாலோ கொடுப்ப;து. இவற்றை அவங்களிடம் விடுவது இல்லை. சுத்தம், சுகாதாரம் போதாது. கையால் வாயையோ, மூக்கு, கண்களையோ, தலையையோ நோண்டிக் கொண்டிருப்பார்கள். நாம் மாத்திரை கொடுக்கப் போனால் நான் கொடுக்கிறேன்னு வருவாங்க. முதலில் கைகளைச் சுத்தம் செய்யுங்க என்றால் முகமே மாறிப் போகும். ஆனாலும் நான் விட்டதில்லை. நானே தான் செய்கிறேன். மாத்திரைகளோ/சாப்பாடோ ஒழுங்காய் வயிற்றில் போய்ச் சேரணுமே! ஜூஸ் கொடுப்பதைக் கூட நானே கொடுத்துடுவேன்.

      Delete
  4. மாமாவின் முன்னேற்றம் சந்தோஷம் தருகிறது. முழுமையாக பழைய நிலையை அடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. ஓரளவு சந்தோஷம் தான் என்றாலும் மருத்துவரின் எச்சரிக்கை கவலையும் அளிக்கிறது. கீழே மறுபடி விழாமல் பார்த்துக்கணும். சாதாரணமாய் நடக்கும்போது விழாமல் பார்த்துக்கலாம். ஆனால் ஸ்ட்ரோக் எப்போ வருதுனு சொல்ல முடியாதே! அதான் பயமே!

      Delete
  5. அலைபேசி பெரிய கவனக்கலைப்பாளன்.  எந்த வேலையையும், யாரையும் சரியாய் செய்ய விடுவதில்லை.  நானே சில சமயங்களில் ரீல்ஸில் ஆழ்ந்து வெளிவர முடியாமல் இது மட்டும் இது மட்டும் என்று ஆழ்ந்து போகிறேன்.  அப்புறம் வெட்கமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், எனக்கு இந்த ரீல்ஸ், மீம்ஸ், ம்யூல்ஸ் என்பதெல்லாம் என்னனே புரியலை. புரிஞ்சுக்க முயற்சிப்பதும் இல்லை. தொலைபேசி அழைப்பு வந்தாலே உடனே எடுத்துப் பேச முடிவதில்லை. ஆகையால் இதிலெல்லாம் ஆழ்ந்து போவதில்லை.

      Delete
  6. மாமா பழையபடி எழுந்து நடமாடுவார். அதற்காகத்தான் இத்தனை கஷ்டங்களும். எல்லாம் நல்லபடி நடக்கும். கவலைப்படாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நீங்க சொல்வது போலத் தான் நானும் நினைத்துக் கொண்டு சமாதானம் அடைவேன். நல்லபடியாக நடந்து வீட்டுக்குள்ளேயே நடமாடினால் போதுமானது என்பதே என் எதிர்பார்ப்பு.

      Delete
  7. எல்லாம் சரியாக எங்களது பிரார்த்தனைகளும்…

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நவராத்திரி/தீபாவளி வரை இருப்பீங்கனு நம்பறேன். முடிஞ்சப்போ வந்து எட்டிப் பார்த்துட்டுப் போங்க. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      Delete
  8. சார் எழுந்து நடப்பதை படித்தவுடன் மகிழ்ச்சி.
    கடவுளுக்கு நன்றி.

    பார்த்து கொள்ள வருபவர்களை பற்றி சொன்னதை படித்தவுடன் கஷ்டமாக இருக்கிறது.
    இறைவன் அருளால் நல்ல மனம் படைத்தவர்கள் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆட்களை அவ்வப்போது அவங்க வசதிக்கேற்ப மாற்றுவதால் சரியான ஆள் இவங்கனு நாம் நினைக்கையில் அவங்க மாறிடுவாங்க. வருவதை எதிர்கொள்வது என்னும் மனப்பக்குவத்துக்கு வந்தாச்சு.

      Delete