கீதா கல்யாணமே வைபோகமே! என்னோட கல்யாணம் நடந்த விதத்தைப் பற்றிய சில பதிவுகளைச் சேர்த்து ஒரு புத்தகமாகத் திரு கிரியேட்டிவ் காமன்ஸ் ஸ்ரீநிவாசன் மூலமாகப் போட்டேன். அதிலேயே காப்பிரைட்டில் இந்தப்புத்தகத்தை மறுபதிப்புச் செய்யவும் யாவரும் பயன்படுத்தும் முறையில் ஆன உரிமைக்கும் எழுதிக் கொடுத்திருக்கேன். இப்போது திடீரென ஓர் எண்ணம். இந்தப் புத்தகத்தை மறுபதிப்புச் செய்யலாமா என்பதே அது! செய்தால் கிண்டில் மூலம் வெளியிட முடியுமா? பிரச்னை வருமா?மற்றவர்கள் நம் புத்தகத்தை மறுபதிப்புச் செய்யும்போது நாமே அதைச் செய்தால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது. நன்கு விபரம் தெரிஞ்சவங்க இதைப் பற்றிச் சொல்லவும்/ இல்லைனா என்னோட "எண்ணங்கள்" பக்கத்திலேயே மீள் பதிவு செய்துட்டுப் போயிட்டே இருக்கலாம். என்ன சொல்றீங்க?
என்னோட பி எஸ் என் எல் நம்பர் லாக் ஆகிப் பின்னர் நம்ம ஸ்ரீராமின் ஆஃபீசர் அத்தை மூலம் அதை மீட்டெடுத்தேன். ஆனாலும் அதில் பயன்படுத்த முடியாதவாறு உள்ளதால் இன்டெர்நேஷனல் ரோமிங்கிற்கான ஐ என் ஆர் போட்டாக வேண்டும். ஸ்ரீராம் போட்டுத் தரத் தயார் என்றாலும் அதுக்கான சிம்மை இங்கே இருந்து நான் எப்படிக் கையாள்வது? ஆகவே தொலைபேசி இருந்தும் இல்லாதது போல், ஒரு பலனும் இல்லை. கிளம்பும் முன்னர் நடந்த சில அமர்க்களங்களால் உடல் நிலை மோசமாகப்பாதிக்கப்பட்டதில் ஒண்ணும் புரியலை. மருத்துவர், எக்ஸ்ரே, ஸ்கான் என்றே கிளம்புவதற்கு முதல் நாள் வரை போய் விட்டது. இத்தனைக்கும் காரணமே பிஎஸ் என் எல்லுக்குப் போனது தான். ஆனால் வேலையும் ஆகவில்லை. உடம்பும் பாதிப்படைந்து சுத்தமாய் இந்த இன்டெர் நேஷனல் ரோமிங் பற்றியே மறந்து விட்டோம். ஜியோவில் போடலாம் எனில் அது யானை குதிரையை விடவும் விலை அதிகமாய் உள்ளது. இப்போதைக்கு என்னோட தொலைபேசியில் வாட்சப்பில் செய்திகள் கொடுக்கலாம், பெறலாம். இங்குள்ள நெட்வொர்க்கின் மனம் குளிர்ந்திருந்தால் வீடியோ கால் பண்ணிப் பேசலாம்.
இங்கே எத்தனை நாட்கள் எனப் புரியவில்லை. வந்ததும் மெடிகல் செகப் முடிஞ்சுக் கைரேகைகள் மாதிரி கொடுத்து எல்லாம் ஆகிவிட்டது. கத்தார் ஐடி வரணும். அதன் பின்னரும் மெடிகல் செக் அப் இருக்குமோ என்னமோ சுப்புத்தாத்தா முகநூல் மூலம் அழைத்துப் பேசினார். தக்குடு வரேன்னு சொல்லி இருக்கார் வரணும். இன்னும் சில சொந்தங்கள் (தூரத்துச் சொந்தம்) இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் அவ்வளவாய்த் தெரியாது. வலை உலக நண்பர்கள் தான் அதிகம் பழகி இருக்காங்க.
இங்கே எனக்கு இன்னமும் மனம் ஒட்டலை. திடீர்னு பறக்கும் சக்தி வந்து கிளம்பிப் போயிடலாமானு இருக்கு. என்னதான் பிள்ளை, மாட்டுப்பெண், கு.கு. ஆகியவர்கள் இருந்தாலும் இது அவங்களோட இடம் என்பதால் அவங்களுக்குச் சரியா வருது. என் உடலோ, மனமோ இன்னமும் ஏத்துக்கலை. வீடு ரொம்பப் பெரியது. மாடியும் கீழுமாய்ப் பத்துப் பேருக்கு மேலே இருக்கலாம். கூரை நல்ல உயரம். இருபதடி இருக்குமோனு சந்தேகம். மாடிக்கெல்லாம் நான் போகவே இல்லை. சுமார் 24 படிகள். நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. வெளியே போனவரைக்கும் வெயில் கொளுத்துது என்றால் கொளுத்துது. 37 டிகிரி செல்ஷியஸ் தான் போடறாங்க. ஆனால் சூடு/அனல் தாங்கலை. காரிலிருந்து வெளியே வந்தாலே அனல் அடிக்குது. கார் கதவை எல்லாம் பிடித்துக் கொண்டு காரில் ஏற முடியலை. பையர் ஒரு நாள் மால் எல்லாம் பார்க்கப் போகலாம் என்றார். வேண்டாம்னு கை எடுத்துக் கும்பிட்டுட்டேன்.
புத்தகங்கள் வெளியிடுவதில் கில்லாடி வெங்கட்தான்! அவர் வந்து படித்ததும் யோசனை சொல்வார், ஆவன செய்வார் என்று நினைக்கிறேன்!
ReplyDeleteஎன் பெயரில் வெளிவந்திருக்கும் புத்தகங்கள் அனைத்துமே வெங்கட்டால் வெளியிடப்பட்டவை தான். மர்றும் 2, 3 புத்தகங்களைத் திருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென மாமா படுக்க அனைத்தும் நின்று விட்டது. அவை இப்போது பழைய லாப்டாப்பில். இதில் மாத்திக் கொண்டுவரத் தெரியலை என்பதோடு வேர்ட் டாகுமென்டின் தமிழ் ஃபான்ட்கள் இதில் சரியாய் வரலை. தெரிகிறேன் என்பது வதெரிகிறேன் என்று வருது.
Deleteஏதாவது செய்தால் சிம்மை மீட்டெடுத்து விடலாம் என்று நினைத்தேன். பி எஸ் என் L க்கு தனி வழி போலிருக்கு!
ReplyDeleteஆமாம், ஆனாலும் ஜியோ ரோமிங் வாங்கினால் கூட என்னோட வங்கிக்கணக்கிற்கு, பென்ஷன் கணக்கிற்கெல்லாம் பிஎஸ் என் எல் எண்ணில் தான் லிங்க் கொடுத்திருக்கேன். அனைத்துத் தொடர்புகளுக்கும் அந்த ஒரு எண் தான் என்பதால் எல்லா ஓடிபியும் அதுக்குத் தான் வரும்.
Deleteநம்முடைய இடத்தில ராணி மாதிரி இருந்து விட்டு என்னதான் மகனாயினும் இன்னோர் இடம் என்றால் சிரமம்தான். ஓரளவுக்காவது பழக கொஞ்சம் நாட்களாகும். சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. என்ன செய்ய...
ReplyDeleteசமையலறையில் சுதந்திரமாகப் புழங்க முடியலை. சாமான்கள் ஒவ்வொன்றும் கேட்டுக்கணும். தேடிக் கண்டுபிடிக்க முடியலை. அம்பேரிக்காவில் எல்லாமும் பான்ட்ரிக்குள் இருக்கும். அதோடு அங்கே எரிவாயு அடுப்பு. இங்கே எலக்ட்ரிக் என்றாலும் உள்ளே காயில் எல்லாம் கிடையாது. சின்னதாய் வலை போன்ற அமைப்பு. மேலே க்ளாஸ் டாப். சூடு ஏறக் கொஞ்சம் நேரம் எடுக்கும்.அடி கனமில்லாத பாத்திரங்களை வைச்சால் சீக்கிரம் ஆகும்.
Deleteகீதா சாம்பசிவம் மேடம்.... ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். மெதுவாக அந்த இடம் பழகிவிடும். நான் வெளிநாடு சென்றபோது சிறிய வயது என்பதால் பிரமிப்பும், அந்த இடத்தின் காலநிலையும் பழகிவிட்டது. எல்லாமே பிரமிப்பாகவும் பார்க்க ஆவலாகவும் இருந்தது.
ReplyDeleteநீங்க பெரியவங்க. அதனால நான் எதுவும் எழுதக்கூடாது. இருந்தாலும் முடிந்தபோதெல்லாம் கிச்சனில் புழங்குவது, சில பல வேலைகளைச் செய்வதுன்னு நீங்களே செய்ங்க. என் அம்மா கிச்சன் வேலையை விட்டுவிட்டார் (மருமகளே பார்த்துக்கொள்ளட்டும் என்று). இப்போதுமே பெரியவங்க யாரேனும் ஏதேனும் வேலை செய்கிறேன் என்று சொன்னால், வேண்டாம் நீங்க கஷ்டப்படாதீங்கன்னு சொல்ல மாட்டேன். உங்களுக்கு எது விருப்பமோ முடியுமோ அதைச் செய்யுங்க என்றுதான் சொல்வேன்
அங்கே ஸ்ரீரங்கத்திலேயே பிள்ளை, மாட்டுப்பெண் சமையலறைக்குள் நுழைந்தால் நான் வெளியே வந்துடணும் என்பார்கள். அப்படி இருக்கையில் இங்கே எப்படிச் செய்வது. மருமகளின் கண்ணில் வலி, வீக்கம் என்பதால் நேற்றுப் பையர் சமைத்தார். என்னை உள்ளேயே நுழையாதே இங்கே இடம் இல்லை என்று சொல்லிவிட்டார். மனசில் நினைச்சுப்பேன், மாமியார், நாத்தனார் ஆகியோர் முன்னிலையில் அவங்களோட விருப்பப்படி தான் சமைக்கணும். கிட்டேவே நிப்பாங்க. கண்காணிப்பு அதிகமா இருக்கும். :))))))
Deleteமார்ச் இறுதியில் ஆரம்பித்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று வெயில் கொளுத்தும்.
ReplyDeleteஇதை நினைத்து மால்களுக்குச் செல்லாமல் இருக்காதீர்கள். (ஆனா நிறைய நடக்கவேண்டியிருக்கும்). கத்தார் மால் ஒன்றில் உள்ளேயே பெரிய கால்வாய் மாதிரி நீர்நிலை அமைத்து அதில் படகு விட்டிருக்கிறார்கள்.
மாலுக்குச் சென்றால் உங்கள் ஆர்வம் அங்குள்ள கேரிஃபோர் அல்லது பல்பொருள் அங்காடியில்தான் இருக்கும். (காய் பழம் மளிகை சாமான்கள் போன்றவை விற்கும் ஹைபர்மார்கெட்டுகள்).
என்னை அப்படி எல்லாம் பெரிய மால்கள் ஈர்த்ததில்லை நெல்லை. அதிலும் முன்பாவது மாமா சாப்பிடுவாரே எனக் கொஞ்சமாவது கவனிச்சுச் செய்வேன். இப்போ யார் சாப்பிடப்போறாங்க என்பதால் இதை எல்லாம் கவனிப்பதே இல்லை. அதோடு நான் சொல்லி எல்லாம் அவங்க வாங்க மாட்டாங்க எதுவும். ஆகவே இதில் எல்லாம் தலையிட்டுக் குழப்பிக்கவே மாட்டேன். என்ன் ஒரு விஷயம் என்றால் என் வீட்டில் சமையலறைக்கு புதுசாக யார் சமைக்க வந்தாலும் சாமான்களைத் தேட வேண்டாம். கண்ணெதிரில் எல்லாம் கிடைச்சுடும். தடுமாற்றம் இருக்காது.
Deleteவெயில் காலத்தில் தண்ணீரே குளிக்க முடியாதபடி சுடும் (மதியமெல்லாம்).
ReplyDeleteநாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என ஓடிப்போய்விடும். ஆனால் கொஞ்சம் ஆக்டிவ் ஆக இருக்க மறந்துவிடாதீர்கள். 90 சதத்திற்கு மேல் ஏசியில்தான் வாழவேண்டியிருக்கும்.
சரவணபவன் போன்ற உணவகங்கள் போய் சாப்பிடுங்கள். விலை அதிகமில்லை.
ஏசி தான் ஒத்துக்கவே இல்லை. ஆனால் இயற்கையான காலநிலையில் இருப்பதற்கும் முடியாது என்பதால்ல் வேறே வழியில்லை. ஓட்டல்களுக்கெல்லாம் இது வரை போகலை. எனக்குச் சாப்பாட்டிலும் ஆர்வம் அதிகமாக இல்லை. பசிக்கு ஏதோ மோர் சாதம் போதும் என்னும் மனநிலை.
Deleteஎதனால் உங்கள் உடல்நிலை ஊரைவிட்டுக் கிளம்பும் முன்னால் பாதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. மாமா இல்லாமல், ஊரைவிட்டும் கிளம்புகிறோமே என்று மனதில் நினைத்துக்கொண்டிருந்ததனால் வந்த மன அழுத்தமா தெரியலை.
ReplyDeleteஅது சரி... நம்ம ஊர் சேவை மையங்களுக்கு (அது அரசு சேவை மையமோ இல்லை பிஎஸெனெல் போன்றோ) நாம் போனால் நம் ப்ரெஷர் ஏறும் என்று தெரிந்துமா ஊருக்குப் போவதற்கு முன்னால் அங்க போனீங்க?
நெல்லை, அதுக்குக் காரணமே பிஎஸ் என் எல்லுக்குப் போனது தான். மாமா பேரில் உள்ள கனெக்ஷனை என் பெயருக்கு மாற்ற நானே நேரில் வரணும் என்றதால் பையர் கூட்டிப் போனார். அங்கே படிகள். ஏறி இறங்க முடியலை. வெளியே வரும்போது ஒரு படியில் இருந்து இன்னொரு படிக்குத் தூக்கித் தூக்கி இறக்கினார் பையர். அதில் எக்கச்சக்கமாகி விட்டது. இடது உள்பக்கம் விலாவில் பயங்கரக்காயம். உள்காயம். குனியவோ நிமிரவோ உட்காரவோ, படுக்கவோ முடியாமல் தவிப்பு. இத்தனை நாட்கள் கழிச்சு இன்னமும் இடப்பக்கம் விலா எலும்பில் வலி உள்ளது . இடப்பக்கமாய்ப்ப் படுக்க முடியவில்லை. மெத்தை வேறே நல்ல உயரம். கட்டில் உயரத்தைக்க் குறைச்சாலும் மெத்தை உயரத்தை எதுவும் பண்ண முடியவில்லை. நகர்ந்து நகர்ந்து நடுவே வந்து படுக்கணும். அப்போது விலாவில் இழுப்பதால் இன்னும் வலி போகவில்லை. இதுக்கு எக்ஸ்ரே, அல்ட்ரா சவுன்ட் ஸ்கான், சிடி ஸ்கான் என எல்லாம் எடுத்துப் பார்க்க வேண்டி வந்து விட்டது.
Deleteதொடர்ந்து எழுதுங்க. பழைய விஷயங்களைப் பகிர்ந்தாலும் அதிலும் சில பல திருத்தங்கள் செய்து வெளியிடுங்க. இவையெல்லாம் உங்கள் மனத்தை பிஸியாக வைத்திருக்க உதவும்.
ReplyDeleteரொம்ப நேரம் உட்கார முடிவதில்லை. உடனே எழுந்து நடப்பது சிரமமாக இருக்கு. ஆகவே கொஞ்சம் உட்காருவது, கொஞ்சம் படுப்பது என்றே பொழுதைக் கழிக்கிறேன்.
Deleteஎங்கள் மனதிலும் பிரார்த்தனையிலும் நீங்க எப்போதும் இருப்பீங்க கீசா மேடம். கவலை வேண்டாம்
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவிலும், அதற்கு வந்த அனைவரின் கருத்துக்களிலும், அதற்கு நீங்கள் தந்த உங்கள் பதில்களிலும் உங்களின் உடல்/ மனச் சோர்வுகளை/ வலிகளை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
புது இடம், புது மாதிரியான வடிவமைப்புடன் கூடிய சமையலறை என்பதால் உங்களால் சமையல் செய்ய முடியவில்லை என நினைக்கிறேன். (இரண்டாவதாக இப்போதுள்ள தலைமுறைகள் நம்முடைய பழைய மாதிரியான சமையல்களை கொஞ்சம் வெறுக்கிறார்கள்.. இப்போதைய என்னுடைய அனுபவமும் இதுதான். அது வேறு விஷயம்..) ஆனால் நீங்களே உங்களுக்கு விருப்பமானதை ஏதாவது செய்து சாப்பிட்டால் உங்கள் மனதுக்கும் கொஞ்சம் நன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் சம்மதித்து அதற்கு விடுவார்களா என்பதும் தெரியவில்லையே..! அங்குள்ள காலநிலை மாற்றங்கள் வேறு உங்களை ரொம்ப படுத்துகிறது வருத்தமாக உள்ளது. மனதை எதற்கும் தளர விடாமல் தைரியமாக இருங்கள். இறைவன் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்க நானும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்கள் அன்பும், ஆதரவும் கொண்ட வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வது போலத் தான் நானும் சுயமாக எதுவும் செய்து கொள்ள முடியாத நிலை.உடல் நிலையும் ஒரு காரணம். காலநிலை மாற்றங்கள் வீட்டுக்குள் எல்லாம் அவ்வளவு தெரியவில்லை. வெளியே போனால் வெயில் சுட்டெரிக்கலாம். நான் எங்கே போகப் போகிறேன். உடம்பு கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தாலும் சமையலறையில் புகுந்து ஏதானும் செய்யலாம். நடுவில் இந்த வலி வேறே வந்து விடுகிறது.
Deleteநூல் வெளியிடலாம்..... ஒன்றும் பிரச்சனை இல்லை. அலுவலக சிக்கல்கள் இருப்பதால், நான் சில மின்னூல்கள் வெளியிட முடியாமல் தடைப்பட்டு இருக்கிறது.
ReplyDeleteஎல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.
வாங்க வெங்கட், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. எடிட் பண்ண முடியாமல் வேர்டில் தமிழ் ஃபான்ட்கள் சரியாக வரலை. தனியாக எடிட் செய்து போட்டாலும் வேர்டில் பேஸ்ட் பண்ணும்போது எல்லாம் மாறி விடுகின்றன. அதான் பிரச்னை.
Deleteசொல்லியிருக்கும் உபாதைகளுடன் மலச்சிக்கலும் உள்ளதா?
ReplyDeleteஅப்படியானால் injuinal hernia ஆக இருக்கலாம். யோகாவை முயற்சி செய்யலாமே.
பத்மாசனம், பிராணாயாமம், சூர்ய நமஸ்கார், சவாசனம் என்று எளிய யோகா முறைகளை செய்து பார்க்கலாம்.
Jayakumar
ஜேகே சார், மலச்சிக்கல் இருக்குனு எங்கேயும் நான் சொல்லலையே? எனக்குச் சில வருஷங்களாக அம்ப்லிகல் ஹெர்னியா இருக்கு. வலி ஏதும் இல்லை என்பதால் ஆபரேஷன் வரை போகலை. ஆனால் சீக்கிரமாய் ஆபரேஷன் செய்யும்படி இருக்கும்னு மருத்துவர் சொல்கிறார்.
Deleteஅக்கா, இப்பதான் பதிவு பார்த்தேன். சனி ஞாயிறு ரொம்பவே பிஸி வேறு.
ReplyDeleteஅக்கா உங்கள் கஷ்டங்கள் புரியுது. புது இடம், போகப் போகப் பழகும். பிரார்த்தனைகள்.
அக்கா, புத்தகம் எளிதாக வெளியிடலாம். அதான் வெங்கட்ஜி இருக்கிறாரே. ஆமாம் உங்கள் முந்தைய புத்தகங்களும் அவர் மூலமாகத்தான் வெளியிட்டதைச் சொல்லியிருந்தீங்களே! நினைவிருக்கு.
முடியும் போது வலைப்பக்கம் வந்து வாசிங்க. எழுதுங்க....கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.
கு கு கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இருக்கும் இடத்தை விட்டுப் போகும் போது கொஞ்சம் சிரமங்கள் இருக்கும் புரிகிறது.
பிரார்த்திக்கிறோம் கீதாக்கா.
கீதா
நிறைய உடல் துன்பங்கள் இருக்கே விரைவில் நலம்பெற பிரார்த்தனைகள்.
ReplyDeleteகட்டில் உயரம், படுக்கை உயரம் இவற்றை எல்லாம் மாற்றலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப, இறங்க ஏறி படுக்க முடிந்தால் தான் நல்லது. படுக்கை சரியில்லை என்றால் தூங்க முடியாதே!
உடல் நிலை சரியானதும் உங்களுக்கு பிடித்த உணவை செய்து சாப்பிடுங்கள்.