3BHK பார்த்த பின்னர் மேலும் சில படங்கள் பார்க்க நேர்ந்தது. மாரீசனும் அதில் ஒன்று. வடிவேலு நடிப்பும் அந்த ஃபகத் ஃபாசில் நடிப்பும் ஒருவருக்கொருவர் போட்டியாக அமைந்திருந்தது. இந்த நடிகர் நடித்த படத்தை இப்போத் தான் முதல் முதல் பார்த்தேன். பின்னர் ட்ரென்டிங் என்றொரு படம். நல்ல படிப்பினைக் கொடுக்கும் படம். ஆனால் எத்தனை பேர் படிப்பினையாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அடுத்து முந்தாநாள் பிள்ளையும் மருமகளும் குழந்தைக்குப் பள்ளீச் சீருடை எடுக்கப் போயிருந்தப்போ மருமகள் ரொம்பவே சிபாரிசு பண்ணிப் போட்டு விட்டுப் பார்க்கச் சொன்ன பட. தலைவன், தலைவி. வெகு சாதாரண மனிதர்களை வைத்து எடுத்த படம். நடிகர்களெல்லாம் யாரென்றே தெரியலை. படம் எடுத்தவர், கதை வசனகர்த்தா,எல்லோருமே தெரியாதவங்க. ஆனால் படம் இந்தக் காலத்துத் தம்பதிகள் பார்க்க வேண்டியதொரு படம்.
ஒற்றுமையாய்க் குடும்பம் நடத்தும் கணவன், மனைவி வாழ்க்கையில் இரு பக்கத்து நெருங்கிய சொந்தங்களும் பெண் வீட்டில் பெண்ணின் பெற்றோர் உடன் பிறந்தவர் எனில் பையர் வீட்டில் அவருடைய சகோதர், பெற்றோர், குறிப்பாகத் தாய், போதனையில் மயங்கித் தவறு செய்யும் தாய், பின்னர் திருந்துவதும் நல்லா இருந்தது. மற்றவர்களின் போதனையில் பிரியும் தம்பதிகள் விவாகரத்து வரை போய்விடப் பின்னர் எப்படி மீண்டு வருகின்றனர் என்பதைச் சொல்லும் படம். இதில் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் அன்பும், பாசமும், புரிதலும் இருந்ததால் தாங்கள் செய்வது தவறு எனப் புரிகிறது. ஈகோ இருந்தாலும் நிலைமைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்துப் போகும் அனுசரிப்பும் இருந்தது. ஆகவே கடைசியில் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். இந்தக்காலப் படித்த, படிக்காத இளைஞர்களுக்குத் தேவையான படிப்பினையைச் சொல்லும் படம். அதில் இந்த யோகி பாபு எதற்காக, ஏன் வந்தார் என்றே புரியலை. அவரைப் போட்டால் படம் ஓடும் என்னும் மரபு ஏதானும் இருக்கும்போல. தேவையே இல்லாத கதாபாத்திரம்.
கண்ணில் கட்டி பெரிதாக வலது கண்ணின் மேல் இமையில் வந்திருக்கிறதால் வியாழனன்று இந்த ஊர் மருத்துவமனைக்குப் போயிருந்தோம். என்னால் காரிலேயே ஏற முடியலை என்பதால் கொஞ்சம் சிரமப்படத் தான் வேண்டி இருக்கு. ஆனால் மருத்துவமனையில் என்னைப் பார்த்ததுமே வீல் சேர் கொண்டு வந்துட்டாங்க. மருத்துவர் கூட அதில் உட்கார்ந்த வண்ணமே நான் இருக்க என்னைப் பரிசோதித்தார். கண் மருத்துவர் இல்லை. மருத்துவமனை பெரிதாக உள்ளது என்பதோடு முதல் இடத்தில் இருக்கும் பத்து மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாம். ஆஸ்டர் என்னும் பெயர். இங்கு வந்ததும் செய்ய வேண்டிய நடைமுறைகளை வந்த இரண்டு நாட்களிலேயே செய்து முடித்து விட்டதால் மருத்துவமனைப் பிரவேசம் எளிதாக இருந்தது. மருத்துவர் உள்ளுக்குச் சாப்பிட மாத்திரைகளும், கண்ணில் போட்டுக்கொள்ள மருந்தும் கொடுத்திருக்கார். கட்டி பழுத்திருக்கே தவிர உடையவில்லை. அப்படியே அமுங்குமோ என்னமோ தெரியவில்லை. கொஞ்சம் பார்வை மங்கலாகவே இருக்கு.
இன்னிக்குக் குழந்தை பள்ளிக்குப் போய்விட்டதால் வீடே வெறிச். விளையாட்டு அட்டைகளை வைத்துக் கொண்டு ஸ்னேக் அன்ட் லாடரும், லூடோவும் விளையாடும். அது தான் ஜெயிக்கணும் என்று சொல்லும். லூடோ விளையாட்டில் அதன் காயை நான் வெட்டும் நிலை வந்தப்போ அதுக்குப் புரியலை. அப்புறமாச் சொன்னேன். ஒத்துக் கொண்டது என்றாலும் அதுவே பழம் எடுக்கும்படி விளையாடினேன். இதைத் தவிர்த்து பில்டிங் செட்டை வைத்துக் கொண்டு தானே பேசிக் கொண்டு தானே விளையாடிக்கும். தினம் தினம் தோசை தான் வேண்டும். அதுவும் மிளகாய்ப் பொடியோடு. தாத்தாவுக்கும் அதான் பிடிக்கும். அதோடு உடலில் ரத்தம் எடுக்கறது எனில் தாத்தா மாதிரி பேத்திக்கும் நரம்பே கிடைப்பதில்லை. பள்ளிக்குப் போவதற்கு அழுவதில்லை. தானே கிளம்பி விடுகிறது. இந்த வருஷத்தில் இருந்து அவங்க அம்மாவே கொண்டு விடுவதாகச் சொன்னார்கள். பள்ளிப் பேருந்து கட்டணம் மிக அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு. இன்னிக்குக் காலம்பரவே எழுந்து குளித்து விட்டதால்நேரம் போகவே இல்லை. அதான் கணினியில் உட்கார்ந்து ஏதேனும் செய்யலாம்னு உட்கார்ந்தேன். இந்தியாவில் இப்போது பனிரண்டரை மணி எனக் கணினி காட்டுகிறது. இங்கே பத்து மணி ஐந்து நிமிடம். பொழுது நகரவே இல்லை. மெதுவாகப் போகிறது. அங்கே எனில் நாள் பறந்து விடும்.
படங்கள் பார்த்தும், பேத்தியுடன் விலையாடியும் பொழுது போவது மகிழ்ச்சி.
ReplyDeleteவேனல் கட்டி தானே! மாத்திரைகள் சாப்பிட்டு வெளிப்பூச்சுக்கு மருத்து கொடுத்து இருப்பதை தடவி வாருங்கள். விரைவில் சரியாகிவிடும்.
தானே விளையாடுவதும் அழகுதான். அவள் சொல்லும் கதைகளை கேட்டு மகிழுங்கள்.
மன ஆறுதல் கிடைக்கும்.
வேனல் கட்டியாய்த் தெரியலை. எனக்குச் சின்ன வயசிலே இருந்து அடிக்கடிக் கண்களில் கட்டி வரும். முன்னெல்லாம் பென்சிலின் ஊசி போடுவார்கள். சரியாகிடும். இப்போப் பென்சிலின் என்னும் பெயரே பயன்பாட்டில் இல்லை. அதோடு நேற்று மறுபடி போனதில் கண் மருத்துவர் அதைக் குத்தி விடுவதாகச் சொல்லிக் குத்தி விட முஅயன்றார். நான் சும்மாவானும் இரு கன்னங்களையும் கொஞ்சம் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். அவர் நான் பயப்படுகிறேன் என நினைத்தாராம். குத்துவதை நிறுத்திட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தார். இன்னிக்குக் கொஞ்சம் அமுங்கும் போல் இருக்கு. பார்க்கணும்.
Deleteபேத்தியுடன் விளையாடி
Deleteசிறு வயதில் சிவகாசியில் இருந்த போது எனக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும் அதை அங்கு வெயில் அதிகம் என்பதால் வேனல் கட்டி என்று தான் சொல்வார்கள். உள்ளம் கைகளை சூடு பறக்க தேய்த்து கண்ணை பொத்திக் கொள்ள சொல்வார்கள். டாக்டர் ஆயில்மெண்ட் கொடுப்பார் போட்டவுடன் அமுங்கிவிடும்.
Deleteவணக்கம். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் சரியாகும். கண் கட்டி விரைவில் சரியாக பிரார்த்தனைகள்.
ReplyDeleteபடங்கள் பார்த்து பொழுது போக்குவதும் நல்லதே. அவ்வப்போது பதிவுகளும் எழுதுங்கள்.
மாரீசன் படம் குறித்து இன்னும் சில பதிவுகளும் படித்தேன். தலைவன் தலைவி படம் குறித்தும் ஒரு விமர்சனம் பார்த்தேன். படம் பார்க்க வாய்ப்பில்லை.
தொடரட்டும் பதிவுகள்.
வாங்க வெங்கட், தலைநகர் வாசம் தானா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா. மகனும், மருமகளும் அடிக்கடி வெளியே போகவேண்டிய சூழ்நிலை இருப்பதால் தொலைக்காட்சியில் யூ ட்யூப் மூலம் கிடைக்கும் சில படங்களைப் போட்டுப் பார்க்கச் சொல்லுவாங்க. வேறே செய்யக் கூடிய வேலைகளும் இல்லாததால் பார்த்துக்கொண்டு இருப்பேன். நானாகப் போட்டால் தொலைக்காட்சியையே சரியாகப் போட வருவதில்லை. அதிலும் யூ ட்யூபெல்லாம் போட வரலை. ஏதோ அழுத்துவேன், ஏதோ வரும், மருமகள் நான் அதைத் தேர்ந்தெடுத்ததாக நினைச்சுப்பா. :))) இல்லைனு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு அணைச்சுடுவேன்.
Deleteமாரீசன், தலைவன் தலைவி படங்கள் நானும் பார்த்தேன். மாரீசன் ஓகே. வடிவேலுவுக்கும் இருக்கும் நடிப்புத் திறனை இது மாதிரி படங்கள் வெளிக்கொணர்கின்றன. ஆரம்ப கால வடிவேலுவுக்கும் இப்போதைய வடிவேலுவுக்கும்தான் தோற்றத்திலும் எவ்வளவு மாறுதல்!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், கவுண்டமணி, செந்தில் காமெடியை விட எனக்கு வடிவேலுவின் நகைச்சுவை பிடிக்கும். சில படங்களில் நன்றாகவே இயல்பாகச் செய்திருப்பார். அதே சமயம் புலிகேசி படங்களிலோ, தெனாலிராமன் படத்திலோ பிடிக்கலை. :) மாரீசன் படத்தில் முதிர்ச்சியான பக்குவப்பட்ட அலட்டிக்காத நடிப்பு.
Deleteதலைவன் தலைவி கருவில் இருக்கும் போதனையால் படம் OK என்று சொல்கிறீர்கள். ஆனால் படம் முழுக்க ஒரே கத்தல், அலறல்! விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்திருப்பது. யோகி பாபுவுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு.. ஹிஹிஹி... என்னையும் சேர்த்து!
ReplyDeleteதலைவன், தலைவி படத்தின் அமர்க்களங்கள் எனக்கும் பிடிக்கலை. ஆனால் அவங்க ஃப்ளாஷ் பாக்கைக் கொஞ்சம் புதுமையான முறையில் சொல்ல முயற்சித்திருப்பது பிடிச்சது. மற்றபடி அந்தக் கத்தல், கூச்சல், சண்டைகள் போன்றவை இல்லை எனில் அது தமிழ்ப் படமே இல்லையே. ஆனால் ஒரு நல்ல கதைக்கருவைச் சொல்லி இருப்பதற்கும், கணவன், மனைவி உறவு ஒருவருக்கொருவர் அன்பிருந்தால் யாராலும் பிரிக்க முடியாது என்பதும் உண்மை தானே! அது விஜய் சேதுபதியா? ரொம்பவே குண்டாக இருக்காரே? எனக்கு இப்போதைய பத்து, இருபது வருடங்களின் நடிகர்களில் தனுஷ், சிவ கார்த்திகேயன்(அதுவும் குழப்பிப்பேன், உதயநிதியோடு)போன்ற வெகு சிலரே அடையாளம் தெரியும். அந்த நடிகை நித்யா மேனன் என்பவரா? புதுசு போல.
Deleteஎன்ன திடீரென்று கண்ணில் கட்டி? முழங்காலுக்கு சாக்ஸ் போட்டுக்கொண்டாலும் காரில் ஏறமுடியாத சூழ்நிலையெல்லாம் தொடர்கிறதா? அதைப்பற்றி மருத்துவர் ஒன்றும் சொல்லவில்லையா?
ReplyDeleteஆர்த்தோவைப் பார்க்கவே இல்லையே இதுவரை. பார்த்தால் என்ன சொல்லுவாங்களோ!கண்ணில் பவர் அதிகம்னால் கட்டி வரும் என்பார்கள். இப்போ இங்கே என்ன சொல்றாங்க/சொன்னாங்கனு தெரியலை.
Deleteஎங்கே போனாலும் என்னைப் பார்த்ததுமே வீல் சேரை எடுத்துட்டு வந்துடறாங்க என்பதால் நடக்கும் சிரமம் இல்லை. வீல் சேரில் உட்காருவதே சிரமமாய் இருக்கும். ரொம்பவே தாழ்ந்து இருப்பதால் கவனமாய் உட்காரணும். இல்லைனால் தொப் நு விழுவேன். :))))
Deleteகு குவின் விளையாட்டுகள் சுவாரஸ்யம்தான். பாவம் இத்தனை நாள் தனியாகவே இருந்து தனக்குத்தானே விளையாடி பழகி இருக்கும். அதற்கொரு துணை எப்போதாம்?!
ReplyDeleteகு குவுக்கு தோல்வியையும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் நாளடைவில் கற்றுக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்!
கு.கு.விற்குத் துணை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. மகன், மருமகள் இருவருக்குமே 40க்கு மேல் வயசாச்சு. ஆகவே எதிர்பார்ப்பே இல்லை.
Deleteதாத்தாவுக்கும், பேத்திக்குமான ஒற்றுமைகள் சுவாரஸ்யம். ஜீன்!
ReplyDeleteஆமாம். கு.கு.வும் ஒரு நாழி உட்கார்ந்து ஒரு கைப்பிடிச் சாதத்தைச் சாப்பிடும். தோசைக்கு மி.பொடி தான் பிடிக்கும். இருவருக்கும் ரத்தம் ஏ நெகட்டிவ். சின்ன வயசில் அதாவது ஐந்து வயசு வரை எதையும் வாயைத் திறந்து சொல்லாது. கீழே விழுந்தால் கூடச் சும்மா இருக்கும்.. பெரிசா அழுது அலறி ஆர்ப்பாட்டமெல்லாம் இருக்காது. தாத்தாவும் அப்படித் தான் இருந்திருக்கார். குழந்தை வயிற்றில் வளரும்போது ஸ்கான் பண்ணிப் பார்க்கையில் எல்லாம் தாத்தா ஜாடையாகத் தெரிவதாக மருமகள் சொல்லுவாள்.
Deleteமனதில் வெறுமை இருக்கும்போது நேரம் எப்படி நகரும்?
ReplyDeleteஉண்மை நெல்லை, நேற்றுப் பெரிய நாத்தனாரோடு பேசும்போது மறுபடி மறுபடி வாய் விட்டு அழுது கொண்டே இருந்தேன். இட்டு நிரப்ப முடியாத வெறுமை. இதை எழுதும்போது கூடக் கண்ணீர் தான் வருது. என் நாத்தனார் சொல்றாப்போல இரண்டு பிரசவங்கள் தவிர்த்தூ மற்றபடி அதிகம் பிரிஞ்சு இருந்ததில்லை. எங்கே போனாலும் இரண்டு பேருமாகவே போவோம். நவராத்திரியில் கூட அக்கம்பக்கம் தவிர்த்து மற்றவர்கள் வீடுகளுக்கு மாமா தான் வண்டியில் அழைத்துப் போவார். இங்கே வந்தும் கூட திருவானைக்காவல் சொந்தங்கள் வீடுகளுக்கெல்லாம் மாமாவே அழைத்துச் செல்வார். இப்போ ஆஸ்பத்திரிக்கு என்றாலும் பிள்ளை, மருமகளோடு போவதே ஏதோ மாதிரி வித்தியாசமா இருக்கு. ஆனால் அவங்க எனக்கு அவங்களோட உறவு பிடிக்கலைனு நினைச்சுக்கறாங்க போல! பிள்ளைக்குக் கோபம் வரும். :(
Deleteசாம்பசிவம் சாருக்குப் பதில் பேத்தியோடு அவர் நினைவு வரணும்னு இருந்திருக்கு.
ReplyDeleteமறந்தால் தானே நினைப்புப் புதுசா வர? நினைப்பு இருப்பதால் தானே பேத்தியைப் பார்க்கையில் அவரோடு ஒப்பிடத் தோன்றுகிறது!
Deleteஓ ட்ரெண்டிங்க் போல நீங்களும் ட்ரெண்டிங்கா படங்கள் பார்த்துவிட்டீங்களே!!! சும்மா உங்களை ஒரு கலாய். அவங்க சொல்லித்தான் பார்க்கறீங்க புரிந்தது.
ReplyDeleteதலைவன் தலைவி பத்தி இரு வகை விமர்சனங்கள் வருகிறது என்று நினைக்கிறேன்.
ஆனால் தமிழிலும் இப்படியான மாஸ் வகையைத் தவிர்த்துப் படங்கள் வருவது கொஞ்சம் சந்தோஷமான விஷயம்.
கீதா
ட்ரென்டிங் ஒரு படிப்பினைப் படம். நல்ல அமைதியான மனமொத்த வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளும் தம்பதிகள். இதற்கு நவீன யுகமும் அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் காரணம். இதிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் தான் வாழ்க்கையை அனுபவிக்கவே முடியும்.
Deleteஓ! ட்ரெண்டிங் படம் பத்தி நான் இன்னும் விமர்சனம் கதை பார்க்கவில்லை அக்கா. தொழில்நுட்பம் நல்லது ஆனால் அளவோடு இருக்க வேண்டும். அதில் நாம் ஊறிப் போகாமல், வாழ்க்கையில் இயற்கையில் எவ்வளவு இருக்கு!
Deleteகீதா
கண்ணில் கட்டி பார்த்துக்கோங்க அக்கா. சூட்டினால் இருக்குமா?
ReplyDeleteஅங்கு மருத்துவ வசதிகள் நன்றாக இருக்கும் என்றும், அன்பாகக் கவனிப்பாங்கன்னும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
குகு பள்ளி போய் வந்து கதைகள் சொல்கிறதா? குகுவோடு விளையாடுவது உங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும்.
கண் ஒத்துழைக்கும் போது பதிவு எழுதுங்க அக்கா.
கீதா
தி/கீதா, பொதுவா நான் பார்த்தவரைக்கும் இந்தியாவிலும் மருத்துவ சேவை அதிலும் செவிலியர் சேவை நன்றாகவே உள்ளது ஓரிரு இடங்களைத் தவிர்த்து. இங்கேயும் மருத்துவமனையும் அதன் சுத்தமும் பிரமாதம். நிறையத் தமிழ்க்காரர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். சிலர் பார்த்ததுமே என்னைத் தமிழச்சி என அடையாளம் கண்டு கொண்டு சிரித்து வரவேற்கும் முறையாகத் தலை ஆட்டினார்கள். நேற்றுப் போன கண் மருத்துவரின் உதவிக்கு இருந்த இரண்டு செவிலியரும் சுத்தத் தமிழர்கள். என்னுடன் தமிழிலேயே பேசினார்கள்.
Deleteஆஹா நல்லதாச்சே. செவிலியர்கள் தமிழர்கள். பொதுவாக கேரளத்தவர்கள் இருப்பாங்க.
Deleteஇங்கும் செவிலியர்கள் நல்லா இருப்பாங்க நீங்க சொன்னாப்ல ஓரிரு இடங்களைத் தவிர்த்து.
கீதா
கீசாக்கா நலம்தானே?... மிக நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கு வந்திருக்கிறேன், நேரே இங்குவந்து கீசாக்காவை நலம் விசாரித்துப்போட்டுப் பின்பு ஏனைய இடங்கள் போகலாம் என வந்தேன்.. மாமாவின் மறைவுக்குப் பின் இப்போதான் வருகிறேன், போஸ்ட் படிச்சதும் புரிகிறது நீங்கள் ஊரில் இல்லை என்பது.
ReplyDeleteஎங்கிருந்தாலும் நலமாக பிசியாக இருங்கோ.
வாங்க அதிரா, நினைவு வைத்துக் கொண்டு வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றிம்மா.பொழுதை நகர்த்தியாகணுமே. மாமாவுக்காகச் சாப்பாடு தயாரிப்பது என இருக்கும். இப்போ எனக்குத் தானே. அவங்க செய்வதைச் சாப்பிட்டு விடுவேன்.
Deleteபொழுது போக்கிற்காக சில படங்கள் சொல்கிறேன் பாருங்கோ.. 1)தெளிவு 2)Aap jaisa koi (netflix) 3)Vasanthali (netflix)
ReplyDeleteநன்றி அதிரா, பார்க்கிறேன்.
Delete