*************************************************************************************

சிற்பிக்காக அலைந்து, திரிந்து வெண்ணாற்றின் கரையில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தன்னந்தனியே சிலைகள் வடித்துக் கொண்டிருந்த ஒரு சிற்பியைக் கண்டார்கள். சிலைகளின் அழகோ பிரமிக்க வைத்தது. சிலையா அல்லது உயிருள்ள தெய்வமா என்று எண்ணும்படிக்கு ஜீவசக்தி ததும்பிக் கொண்டிருந்தன சிற்பங்களில். சிற்பியின் நெற்றியில் திருநீறு, மார்பில் உத்திராட்ச மாலை. பார்த்தாலே கை எடுத்துத் தொழவேண்டிய தோற்றம். சிற்பியா, இல்லை சிவனடியாரா?? முத்தரசனுக்குச் சந்தேகம். என்றாலும் அவனிடம் தன் வேண்டுகோளை வைக்கின்றான் முத்தரசன். சிற்பி சொல்கின்றான்:" மன்னா! நாங்கள் முருகனடிமைகள். பரம்பரைச் சிற்பிகளும் கூட. என்னைச் "சில்பா சிற்பி" என்றே சொல்லுவார்கள். பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தாலும், முருகனின் கருணையாலுமே அவன் உருவை வடிவமைக்கும் வாய்ப்பைத் தாங்கள் எனக்களிக்கின்றீர்கள். தங்கள் சித்தம் போல் மயிலோனை அனைவரும் வியக்கும் வண்ணம் சிங்காரமாய் வடிவமைக்கின்றேன்." என்று உறுதிமொழி கொடுக்கின்றார் சில்பா சிற்பி.
நாட்கள் பறக்கின்றன. அருமையான கல்லைத் தேர்ந்தெடுத்துச் சிற்ப வேலையை ஆரம்பிக்கின்றார் சிற்பி. ஒருநாள் அவர் கனவில் ஆறுமுகன் தோன்றி, " நீ என்னை இந்த ஆறுமுகக் கோலத்தில் பனிரண்டு கைகளுடனேயே உருவாக்கு!" என்று கட்டளை இட, அவ்வாறே உருவாக்கத் தொடங்கினார் சிற்பி. வலக்கைகளில் சக்திவேல், கதை, கொடி, தண்டு, அம்புடன் கூட மற்றொரு வலக்கரத்தில் அபய ஹஸ்தமும், இடக்கைகளில் வஜ்ரம், பத்மம், கடகாஸ்தம், சூலம், வில், வரத ஹஸ்தமும் கொண்டு அழகை அள்ளிச் சொரியும்படியான சுந்தரவேலனை மயில் வாகனத்தில் வடித்தார் சில்பா சிற்பி. பார்த்தவரைப் பித்துப் பிடிக்க வைத்தான் ஆறுமுக வேலன். மயிலோடு பறந்துவிடுவானோ என நினைக்கும் வண்ணம் ஜீவன் ததும்பி நின்றது சிலையில். கண்களின் அழகைச் சொல்லுவதா? புன்முறுவலைச் சொல்லுவதா? கைகளின் வடிவைப் பாராட்டுவதா? மயில் சிற்பமா? உண்மையான மயிலா? என்னும்படிக்குச் சிற்பம் அனைவரையும் திகைக்கவும், பிரமிக்கவும் வைத்தது.
மக்கள் மன்னனைப் பாராட்டுவதா? சிற்பியைப் பாராட்டுவதா எனத் தெரியாமல் மயங்கி இருவரையும் மனதாரப் பாராட்டி இத்தகையதொரு சிற்பத்தை இனி எவராலும் உருவாக்க முடியாது என்று சொன்னார்கள். ஜெயகோஷங்கள் முழங்கின. ஒரு நன்னாள் பார்த்துக் குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்தான் முத்தரசன். நன்னாளில் குடமுழுக்கையும் நடத்தி ஆறுமுகன் பிரதிஷ்டையும் செய்வித்தான். ஊரெங்கும் கொண்டாட்டம், கோலாகலம், ஆனந்தத் திருவிழா! மக்கள் மனதில் மகிழ்ச்சி! ஆனால் மன்னனுக்கோ மனதில் ஏதோ குழப்பம்! வேகம், என்ன என்னவோ கணக்குகள். என்னவோ எண்ணங்கள். சிற்பிக்கு மன்னன் என்ன பரிசு கொடுக்கப் போகின்றானோ என்று மக்கள் பேசுவதும் அவன் காதில் விழுந்தது. சிற்பியை அரசவைக்கு வரவழைத்தான். அரசவையில் பெருங்கூட்டம். அனைவரும் மன்னன் அளிக்கப் போகும் பரிசையும், பாராட்டுச் சொற்களையும் எதிர்பார்த்துக் குழுமி இருந்தார்கள்.

சிற்பி பயத்திலும் நடுக்கத்திலும் ஆழ்ந்து போய் மன்னனைக் கெஞ்சினார் கட்டை விரலை வெட்டவேண்டாம் என. கட்டை விரல் இல்லை எனில் உளியைப் பிடிப்பது எவ்வாறு?? அதற்கு என் உயிரை எடுத்துக் கொள் என்றும் சொல்லிப் பார்த்தார், மன்னன் மனம் இரங்கவில்லை. இந்தப் பெருமை யாவும் எனக்கே வந்து சேரவேண்டும் என்ற அவன் காவலரை நோக்கி," அஞ்சாதீர்கள் கட்டை விரலை வெட்டுங்கள்" என்று சொல்ல, அவர்களும் மன்னன் கட்டளைக்கிணங்கி சில்பா சிற்பியின் கட்டை விரலை வெட்டினார்கள். சிற்பி துடிதுடித்தார். உடல்வேதனையும், மனவேதனையும் தாள மாட்டாமல், "முருகா, உன் பேரழகைச் செதுக்கிய எனக்கு நீ கொடுத்த பரிசா இது?" என கண்ணீருடன் கலங்கி, சோகம் தாங்க முடியாமல், சோர்ந்து போய் உறங்க மீண்டும் கனவில் வந்தான் சிங்காரவேலன், முகம் கொள்ளாத புன்னகையுடன்.