இத்தனை கஷ்டங்களைப் பிறருக்கும் கொடுத்துக் கட்டப்படும் கட்டிடங்களில் குடியிருக்க வருவோரின் நிலை பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். பொதுவாக நடுத்தரக் குடிமக்களே தங்களுக்கு என ஒரு சொந்த வீடு வேண்டும் என்று வாங்க நினைக்கின்றனர். இவர்களில் வெகு சிலர் வருமான வரியில் இருந்து தப்பிக்கக் கடன் பெற்றிருப்பதைக் காட்ட வேண்டியும் வாங்குகின்றனர். இதிலே முதலில் உள்ளவர்கள் அவர்களே குடியும் வருவார்கள் எனில் பின்னர் சொன்னவர்களோ வாடகைக்கு விட்டுவிடுவார்கள். வீட்டைச் சுற்றி இருக்கும் இடமே இரண்டே இரண்டு அடிதான். இப்போத் தான் தரைத் தளத்தில் கட்டாயமாய்க் கார் பார்க்கிங்கிற்கு இடம் விட்டாகவேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. பத்து வருடங்கள் முன் வரையிலும் அது கட்டாயம் இல்லை. ஆகவே கீழேயும் முழுதும் கட்டுவாங்க. மேலேயும் கட்டுவாங்க. கீழே கார் பார்க்கிங் இடம் விடுவதால் இப்போதெல்லாம் இரண்டு தளங்களுக்கு அநுமதி போலிருக்கு. அந்த இடுக்கிலேயும் கீழே இரண்டு குடியிருப்புக்களாவது கட்டறாங்க. புறாக்கூண்டுகள் தான். பக்கத்து வீடுகளின் சுவர் மறைக்கும் என்பதோடு அந்தக் குடியிருப்புக் கட்டப்படும் இடம் இரு பக்கத்து வீடுகளின் கொல்லைப்பக்கமாய் வேறு வரும். அங்கே கட்டிடம் இல்லாமல் தோட்டம் இருந்தால் சரி. இல்லை எனில் வெளிச்சமே வராது. ஒரே இருட்டு. பின் பக்கம் வீடு இருந்தால் அவங்க கழிவறையின் பக்கம் சமையலறை இருக்குமாறு வரலாம். அதோடு அவங்க செப்டிக் டாங்கும் இருக்கலாம். பக்கத்து வீடுகளின் குளியலறை, கழிவறையும் வரலாம். இந்த இடத்திலே தான் அவங்க தலைவாசல் அமையும். அதை உள்பக்கமாய் அமைத்தால் இந்தத் தொந்திரவு இருக்காது. வெளிப்பக்கமாய்த் தான் வைக்கிறாங்க. எல்லா அறைகளும் பத்துக்குப் பத்து, பத்துக்குப்பனிரண்டு இருந்தால் அதிகம். அடுப்பிலிருந்து துடுப்பு வரையிலும், பீரோவில் இருந்து கட்டில் வரையிலும் இருந்தால் பிரச்னை தான்.
பெரும்பாலான குடியிருப்புக்களில் சமையலறையில் ஒருத்தர் மட்டுமே நின்று சமைக்கலாம். பத்துக்கு ஐந்து அல்லது பத்துக்கு ஏழுக்குள் தான் சமையலறை இருக்கிறது. அதிலேயே எல்லா சாமான்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். சாமான் குறைவாக இருந்தால் பிரச்னையே இல்லை. ஆனால் நம் மக்கள் சாமான்களைச் சேர்க்கும் வழக்கம் உள்ளவர்களே! ஹால் என்று சொல்லப் படும் வரவேற்பு அறையில் தான் ஒரு பக்கம் தடுத்தோ, தடுக்காமலோ சாப்பாடும் சாப்பிட்டாக வேண்டும். வருபவர்களையும் வரவேற்க வேண்டும். இன்றைய நாட்களில் பெரிய வீடு என்றால் பராமரிப்புக் கஷ்டம் என்றொரு நினைப்பு அனைவருக்கும் உள்ளது. அதனாலேயே குடியிருப்புக்களை விரும்புகின்றனர். அவரவர் தங்கள் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும். ஆனால் இதிலும் எல்லைத் தகராறு வந்து விடுகிறது. அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இருப்பதில்லை. மாடிப்படிகள் அனைவருக்குமே பொது என்றாலும் கீழே இருப்பவர்கள் முதல் தளத்தில் இருப்பவர்களும், இரண்டாம் தளத்தில் இருப்பவர்களும் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள், நாம் எப்போவானும் துணி உலர்த்தத் தானே போகிறோம் என நினைக்கிறார்கள். ஆகவே அதைச் சுத்தமாய் வைத்துக்கொள்வதில் போட்டா போட்டி வருகிறது.
இந்தத் தொல்லை எல்லாம் வேண்டாம்; பெருக்கிச் சுத்தப் படுத்த ஆளை நியமித்துவிடலாம் என எண்ணி ஆளைப் போட்டால், அதற்குப் பராமரிப்புக்கு என மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும். அதை அனைவரும் உடனுக்குடனே கொடுப்பதில்லை. அவங்களுக்குள் தலைவராக இருப்பவர் பாடு தான் திண்டாட்டம். அவர் கையைவிட்டுக் கொடுத்துட்டுப் பின்னர் வசூல் பண்ண வேண்டியதாய் இருக்கும். ஒரு சிலர் கொடுக்காமலேயே இழுத்தடிப்பார்கள். இன்னும் சிலர் தலைவராய் இருந்தால் கொடுத்தவர்களைக் கொடுக்கலைனும் சொல்லி விடுவதுண்டு. இது எங்க பக்கத்துக் குடியிருப்பில் நடந்த ஒரு விஷயம். ஆகவே இது ஒரு தொல்லை. இத்தோடு போகாது.
பாதாளச் சாக்கடைத் திட்டமே செயல்படுத்தப் படாததால் இங்கே எல்லா வீடுகளிலும் செப்டிக் டாங்க் தான். ஒரு வீடும், அதிலே குறைந்த பக்ஷமாய் ஆறிலிருந்து பத்து நபர்களுக்குள் இருந்த இடத்தில் இப்போது எட்டு வீடுகளும், ஒரு வீட்டுக்குக் குறைந்தது நான்கு நபர்களுமாக முப்பத்திரண்டு நபர்களும் கழிவறை பயன்படுத்துவார்களே! அதற்கு ஏற்றாற்போல் அல்லவா கட்ட வேண்டும். அப்படிக் கட்டுவதில்லை. செப்டிக் டாங்கில் கழிவறைத் தண்ணீர் அதிகமாய் வழிந்து வெளியே ஓடி வந்து தெருவுக்குப் போகிறது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலே கட்டிய மழை நீர் வடிகால்க் கால்வாயில் அதை விட்டிருக்கிறார்கள். எங்க வீடு தாண்டி இரண்டு வீட்டுக்கு அப்பால் அந்தக் கால்வாய் முற்றுப் பெறாததால் கழிவு நீர் அப்படியே நிற்கிறது. ஆகவே நாங்க எங்க வீட்டுப் பக்கம் முனிசிபல் கமிஷனரிடம் சொல்லிவிட்டுக் கால்வாயை மூடி விட்டோம். பக்கத்திலோ கழிவு நீர் வெளியே போக வழியில்லாமல் அந்தக் கால்வாயில் விட்டு அதுவும் நிரம்பிக் கழிவு நீர் சாலையிலேயும் வரும். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். இத்தனைக்கும் கழிவு நீர் ஊர்தி மாதம் ஒரு முறை வந்தது இப்போது மாதம் இரு முறை வந்து எடுத்தாலும் மீண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது.
ஒரு முறைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் அதற்கான செலவு ஆகிறது. அனைத்துக் குடியிருப்புச் சொந்தக்காரர்களும் இந்தப் பணத்தைப் பிரித்துக்கொள்ளவேண்டும். ஆனால் குடித்தனம் வருகின்றவர்களோ வீட்டுக்காரங்க இது குறித்தெல்லாம் சொல்லவே இல்லை; நாங்க தர முடியாது என்று கூறுகிறார்கள். அப்போ இருக்கும் சொந்தக்காரங்க கையிலிருந்து போட்டு அந்தப் பணத்தைக் கட்டிவிட்டுக் கழிவு நீரை இறைக்க வேண்டும். சொந்தக்காரங்க வாடகை வாங்க வரச்சே அந்தப் பணத்தைக் கேட்டு வாங்கணும். சொந்தக்காரங்க சொல்வதோ நாங்க உபயோகிக்காத கழிவறைச் செலவுக்கு நாங்க ஏன் கொடுக்கணும் என்பதே! ஆக மொத்தம் இருவரும் நழுவிக்கொள்ள அந்தப் பணம் அந்தக் குடியிருப்பு வளாகத்தினுள் குடி இருக்கும் சொந்தக்காரர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியதாகிவிடுகிறது.