எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 31, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில், முடிவுப் பகுதி


திருச்சியிலே பெய்தாலும் ஶ்ரீரங்கத்திலே அதிகமாய் மழை பெய்யாது என வெங்கட் நாகராஜ் கூறினார். இன்னொருத்தரும்  இந்தப் பெரிய பெருமாள் எல்லாக் கோயில் மூர்த்திகளையும் விடவும் அதிகம் மூத்தவர் எனவும், மிகவும் வயதாகிவிட்டதால், (ஹிஹிஹி), பெருமாளுக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும்னு சொன்னாங்க.  சென்னையிலே மழை சக்கைப் போடு போடுதுனு கேள்விப் பட்டேன்.  மற்ற இடங்களிலும் பெய்யுது.  ஆனால் இங்கே நேற்று வரைக்கும் அத்தனை மழை இல்லை.  சும்மா, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பெய்யும், அப்புறமா விட்டுடும்.  இப்போ நேத்திக்கு ராத்திரியிலே இருந்து விடாமல் தூற்றலா இருக்கு.  ரங்கநாதர் என்ன செய்யறார்னு தெரியலை.  ஏற்கெனவே தண்ணீருக்கு நடுவே இருக்கார்.  இப்போக் குளிர் தாங்காமக் கம்பளி போர்த்திட்டுப் படுத்திருப்பாரோ?  தீபாவளிக்கு ஜாலி அலங்காரம்னு பண்ணிப்பாராம். அன்னிக்குப் போக முடியுமானு தெரியலை. பார்க்கலாம்.  இப்போத் திருவெள்ளறைக் கோயிலின் முடிவுப் பகுதியைப் பார்க்கலாம்.




ஒரு முறை மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் பேசிக்கொண்டிருக்கையில் லக்ஷ்மி தேவியின் கருணையை மிகவும் பாராட்டிய விஷ்ணு, லக்ஷ்மிக்கு வேண்டிய வரங்களைக்கேட்டுப்பெறலாம் எனச் சொன்னார்.  லக்ஷ்மி மஹாவிஷ்ணுவின் மார்பில் நித்யவாஸம் செய்வதே தனக்குப் பெரும்பேறு எனவும், வேறு வரம் தேவையில்லை எனவும் கூறுகிறாள்.  பின்னர் பாற்கடலில் தான் பிறந்ததால் தேவர்களைக் காட்டிலும் தனக்கே அதிக உரிமை தர வேண்டும் என்கிறாள்.  பெருமாளோ, பாற்கடலில் தனக்கு மட்டுமே சர்வ அதிகாரம் எனவும் தற்சமயம் பாற்கடலில் மட்டுமில்லாமல் எங்குமே மகாலக்ஷ்மிக்கு அதிக உரிமையைத் தர இயலாது எனக் கூறிவிடுகிறார்.  ஆனாலும் பூமிக்குச் செல்லும்படியும் அங்கு சிபிச் சக்கரவர்த்திக்கு விஷ்ணு தரிசனம் கொடுக்க இருப்பதாகவும் அப்போது லக்ஷ்மியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் கூறுகிறார்.  இப்போது சிபிச் சக்கரவர்த்தியைப் பார்ப்போமா?

சிபிச் சக்கரவர்த்தி ஆண்டு வந்த காலத்தில் ஒரு சமயம் ராக்ஷஸர்களின் தொல்லை மிக அதிகமாக இருக்க அவர் தன் படைகளோடு அவர்களை அழிக்கக் கிளம்புகிறார்.  அப்போது ஒரு வெள்ளைப் பன்றி அவர்கள் முன் தோன்றிச் செல்லும் வழியில் பெரும் தொந்திரவு கொடுத்தது.  படைவீரர்களை அந்தப் பன்றியைப் பிடிக்கச் சொல்ல எவராலும் அது இயலாமல் போகவே மன்னன் தானே சென்று அதைப் பிடிக்க முற்பட்டான்.  பன்றி இவருக்குப் போக்குக் காட்டிவிட்டு ஒரு மலை மீதுள்ள புற்றில் மறைந்து விட்டது.   அரசன் மலையைச் சுற்றிச் சுற்றி வந்தான்.  அப்போது ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் தவம் செய்வதைக் கண்டான்.  அவரை வணங்கி அவரிடம் விஷயத்தைக் கூறினான் சிபிச் சக்கரவர்த்தி.  மன்னன் கூறியதைக் கேட்ட மார்க்கண்டேய மஹரிஷி, "மன்னா, நீ மிகவும் அதிர்ஷ்டக் காரன்.  சாக்ஷாத் அந்த மஹாவிஷ்ணுவே உ;னக்கு சுவேத வராஹமாகக் காட்சி அளித்திருக்கிறார்.  அந்த நாராயணனின் தரிசனத்திற்கு நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன்.  நீ எளிதாக அடைந்து விட்டாய்.  பன்றி மறைந்த புற்றுக்குப்பாலால் அபிஷேஹம் செய்வாய்!" என ஆலோசனை கூறினார்.

மன்னனும் அவ்வாறே அபிஷேஹம் செய்ய மஹாவிஷ்ணுவும் தோன்றி அனைவருக்கும் அருள் பாலித்தார். பின்னர் அப்போது வந்த மஹாலக்ஷ்மியிடம் நீ விரும்பியபடி இந்தத் தலத்தில் சர்வ அதிகாரத்தையும் பெறுவாய்.  நான் அர்ச்சாரூபத்தில் இருந்து அருள் பாலிப்பேன் எனக் கூறுகிறார்.  பின்னர் சிபிச் சக்கரவர்த்தி ராவணன் முதலான அரக்கர்களையும் அழிக்க எண்ணிப் படை திரட்ட மார்க்கண்டேயரும், பெருமாளும் மஹாவிஷ்ணுவே ராம அவதாரம் எடுத்து இந்தக் காரியத்தை நிறைவேற்றப் போவதாயும் சிபிச் சக்கரவர்த்தியைப் பெருமாளுக்குக் கோயில் கட்டி சேவை செய்யும்படியும் கூறுகின்றனர். மன்னனும் அவ்வாறே பெருமாளுக்குக் கோயில் கட்டிவிட்டு அவருக்கு நித்ய சேவை செய்வதற்காக 3,700 குடும்பங்களையும் அங்கே கொண்டு வந்து குடியேற்றுகிறான்.  ஆனால் அந்த ஊருக்கு வரும் வழியிலேயே ஒருவர் இறந்துவிட, பெருமாள் அவனிடம், இறந்தவருக்குப் பதிலாகத் தானே அந்தக் குடும்பத்தில் ஒருவராக இருப்பதாய் வாக்குக் கொடுக்கிறார்.  3,700 குடும்பங்களுக்கும் குறைவு இல்லாமல் பார்த்துக் கொள்வதாகவும் சொல்கிறார்.  இப்போது இந்தக் குடும்பங்களில் பத்து அல்லது பதினைந்து குடும்பஙக்ளுக்குள்ளாகவே இருக்கின்றனர்.  நாங்கள் சென்ற போது ஜேஷ்டாபிஷேஹம் நடந்திருந்த மறுநாள்.  பெருமாள் தைலக்காப்புச் சார்த்தப்பட்டு நாங்கள் போன அந்தப் பதினோரு மணிக்கே பொது தரிசனம் கொடுக்கத் தயாராக ஆகி இருந்தார்.  நிவேதனமாகப் பெரிய பெரிய அளவில் அன்னப்பாவாடைகள் சார்த்தப்பட்டு எல்லாருக்கும் விநியோகம் செய்தார்கள்.  பொதுவாகப் பெருமாள் கோயில்களிலேயே பட்டாசாரியார்கள் கோயிலின் வரலாற்றையும், கோயிலின் பூர்வ கதைகள் இருந்தால் அதையும் சொல்வதோடு தரிசனம் பண்ணி வைக்கையிலும் சிரசு முதல் திருவடி வரை நன்கு காட்டித் தரிசனம் செய்து வைப்பார்கள்.  இந்தக் கோயிலும் அது போல் என்றாலும் அதைவிடவும் மேலாக வரவேற்புக் கிடைத்தது.  நல்ல சுகமான தரிசனம். அப்போது தான் இந்தக் கதையையும் கூறி இப்போது அவர்கள் பத்துப் பதினைந்து பேர் தான் இருப்பதாகவும் கூறினார்கள்.  சிதம்பரம் தீக்ஷிதர்கள் போல் இவர்களும் தனிக் குடும்பமாக அவர்களுக்குள்ளேயே எல்லாவிதமான சம்பந்தங்களும் வைத்துக்கொள்வதாகவும் கூறினார்கள்.

இங்கே தாயார் செங்கமலவல்லித் தாயார் மூலஸ்தானத்திலேயே காட்சி கொடுக்கிறார்.  திருவிழாக் காலங்களில் பெருமாளுக்கு முன்பாகப் பல்லக்கில் எழுந்தருளுவார். இந்தக் கோயில் பிரகாரத்தின் தெற்குப் பக்கம் உள்ள கல் அறைகளில் ஒலி எழுப்பினால் எதிரொலி கேட்கும்.  கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளதும் ஒரு விந்தையான செய்தி.  கோபுரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாம் எனக் கட்டளை எனவும் கூறுகின்றனர்.  இத்தோடு ஊர் சுற்றல் முடிந்தது. :)))

Monday, October 29, 2012

உங்க டூத் பேஸ்டுல உப்பும் வேம்பும் இருக்கா?''


தினமணி கதிர் அக்டோபர் 7 ம் தேதி இதழில் வெளிவந்த இந்தக் கதை மாறும் சமூக மதிப்பீடுகள் குறித்த மிகவும் சிறந்த வெளிப்பாடு....வாசியுங்கள்...


என்னுடைய சிறிய தகப்பனார் கோயில் குளமெல்லாம் போகமாட்டார். ஆனா பாதயாத்திரை யார் போனாலும் அடிக்கடி போவார். அதுக்கு அவருடைய விளக்கம்: ""நடையன் போடாம இந்த மண்ணுல நடக்கனும்டா அப்பத்தான் இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு பந்தம் இருக்கிறது புரியும். எந்தவித இடைவெளியும் இல்லாம, ஈர்ப்பு சக்தியின் உணர்வோட, தாயோட தொப்புள்கொடியோட சேருறது போல இருக்கும். அனுபவிக்கணும்டா, காலே வலிக்காதுடா. கல்லு குத்துறதலையும் ஒரு சொகம் இருக்குடா'' அப்படிம்பார்.
அம்மான் மகளான என் மனைவி சொன்னாள்: ""ஏங்க வீடு கட்றப்ப, வாச விரிவா இருக்கனுங்க, முன்னாலையும் பின்னாலையும். முன்வாசல்ல அக்கம்பக்கதோட பேசறாப்லையும், மார்கழி மாசம் பூக்கோலம் போடறாப்லையும், பின்னாடி அரிசி பருப்பு காய வைக்றாப்லையும் இருக்கட்டுங்க. ரொம்ப ஒசத்தி கட்டவேணாங்க, மாமா அத்தைக்கெல்லாம் வயசாகிட்டே போகுது. அவங்க சுளுவா நடமாடனுங்க''தலையாட்டினேன்.
அவர் சொன்னார், ""மாப்ளே கட்றதுதான் கட்றீங்க, ஒரு மாடி வீடும் சேத்து கட்டி விட்ருங்க. அதுக்கு தனி பாதை வச்சுருங்க. ஏன்னா, இடம் ஊருக்கு வெளியே தள்ளி இருக்கு. மேல ஒரு துணைக்கு குடி வைக்கலாம்ல. வருமானத்துக்கு இல்லாட்டியும், ஒரு நல்ல மனுசாள குடில்ல வச்சா, அவசர ஆத்திரத்துக்கு இருப்பாகள்லே. நீங்களும் அடிக்கடி ஊரு பேருன்னு அலையிறவரு. அப்புறம் நாளைக்கு ஏதும்னாலும், ஒரு கைச்செலவுக்கு தோதா இருக்கும்ல'' தலையாட்டினேன்.
கவிதையும் தத்துவமுமாய் வாழும் என் நண்பர்சொன்னார்: ""டேய் நிலமோ வீடோ, நம்ம ஐம்புலனும் ஆட்சி செய்யிற இடமா இருக்கணும்டா. கண்ணுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இதமா, கெட்ட வாடை இல்லாம, காற்று நேரடியா உடம்புல படர மாதிரியும், சுவையான தண்ணி ஆதாரமும் இருக்கும் வகையிலே சூழ்நிலைய அமைச்சுக்கணும்டா. சத்தம் அதிகம் இல்லாம, சுத்தமா இருக்கணும். வீட்டுக்குள்ளே நல்லா பசியும் ஆறணும். அதே நேரத்துல மனசும் ஆறணும்டா'' தலையாட்டினேன்.
இதல்லாம் மனசுல வச்சு, நானும் கொத்தானாரும் கலந்து ஆலோசிச்சு, வானம் தோண்டறதுக்கு நாள் குறிச்சு, குலதெய்வத்தை வேண்டிகிட்டு, வீடு கட்டற வேலைய ஆரம்பிச்சோம். பின்புறத்துல கேணி வெட்டுனா, தண்ணி சில அடியிலயே வந்துருச்சு. இனிப்புன்னா இனிப்பு அப்படி ஒரு இனிப்பு. நிலையா இருக்கணுமுன்னு நல்ல நாள் பாத்து நிலையும் வச்சு, கட்டடம் கட்டறவங்களுக்கு விருந்தும் வச்சோம். இடத்துக்கு நட்ட நடுவுல வீடு கட்டி, முன்னாடியும் பின்னாடியும் வாசல் வச்சு, மாடி வீடும் கட்டி, சொந்த பந்தமெல்லாம் வரவழச்சு , பால் காய்ச்சி குடி போன நாள்ல இருந்த முழுமையான உணர்வு, இதுவரைக்கும் திரும்பவும் அமையலை.
உடல் உழைப்பு அதிகம் இல்லாத குடும்பத்துல பொறந்தவன் நான். எனக்கு தெரிஞ்சதெல்லாம் கணக்கு .. கணக்கு .. கணக்கு ... மூளை உழைப்புன்னு வேண்ணா சொல்லிக்கலாம். நல்லா வருமானமும் வந்துச்சு. ஆனா மனசோரத்துல, ஒரு உறுத்தல், நெருடல் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அது என்னனா, அடுத்தவங்க உடல் உழைப்புலயே வாழறோமே, விளைச்சல் செய்யிறவங்களவிட நாம வசதியா வாழறோமே அப்படின்னு. கோயில் குளமுன்னு தானம் தர்மமும் என்னால முடிஞ்ச அளவு செஞ்சு பார்த்தேன். மனசாறலை. வயல்ல இறங்கி வேலை செய்யிறதுக்கு பழக்கப்படாத உடம்ப வச்சுக்கிட்டு என்னால அதுக்கு ஒண்ணும் பண்ண முடியல.
சரி நம்மால முடிஞ்சது, மரஞ்செடிகொடியாவது வீட்ட சுத்தி வளப்போம்னு முடிவு செஞ்சு தோட்டம் போட்டேன். தென்னை மரம் மாதிரியெல்லாம் வளர்த்து நம்மால ஏற இறங்க முடியாதுன்னு, மாமரம், வாழைமரம் வச்சு காய்கறிச்செடிபோட்டேன். என் மனைவி சில பூச்செடியும், துளசிச்செடியும், கற்பூரவள்ளி, மணத்தக்காளி செடிகளும் வளர்த்தா. ஆரம்ப பள்ளிக்கூடத்துல படிச்ச ஞாபகம், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதின்னு. ஆலமரம் வளக்க இடமில்லாட்டியும், வீடு முன்புறம் ஒரு வேப்பங்கன்று நட்டு வச்சேன்.
தெனமும் முன் வாசல்ல அரிசி மாவு கோலம் போட்டு எறும்புக்கு தீனி வச்சோம், பின் வாசல்ல மூதாதையர் நினைவா காக்கைக்கு சோறு வச்சோம். சொந்தபந்தங்களுக்கும், திருவிழா படையலுக்கும் வாழை இலையில விருந்து வைப்போம். அப்பல்லாம் எம்பையன் நுனி இலைதான் வேணும்பான். மத்த நாள்ல காய்கறி சாப்பிட அடம் புடிக்கிற பய, நம்ம தோட்டத்துல அவன் தண்ணி ஊத்தி வெளஞ்ச காய்கறின்னா உடனே சாப்புடுவான். துளசி இலய பிச்சு பிச்சுத் திம்பான். வாய்ப் புண்ணு வந்தா மணத்தக்காளியும், சளி புடிச்சா கற்பூரவள்ளியும் பக்குவம்மா ஆக்கி தருவா எம்மனைவி. சட்டுன்னு கேக்கும்.
ஒரு தடவ, வேப்ப மரத்தடியில அவன் ஒன்னுக்கு போறத பார்த்தேன். ""டேய் நான் ஆசையா வெதச்சு வளத்த மரத்துல ஒண்ணுக்கு அடிக்கிறியேடா, நியாயமா?'' ன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான், ""அப்பா நான் பாடத்துல படிச்சிருக்கிறேம்ப்பா, யூரின்ல யூரியாங்க்ற உப்பு இருக்காம்ப்பா. அதனால, நான் ஒண்ணுக்கு அடிக்கிறதுனால, வேப்பமரம் நல்லா வளர உரந்தான் போடறேன்''
எங்க தகப்பனார் , "".....இச்சுவை தவிர யான் போய், இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருள்ளானே'' என்று ஆழ்வாரை பாடியதுமாய், நான், ""எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா'', என்று பாரதியை பாடியதுமாய், என் மகன், ""மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே?'' என்று ஜேசுதாசை பாடியதுமாய் கழிந்த சொகமான நினைவுகள் பசுமரத்தாணி போல அப்படியே இருக்கு.
அவன் கை நெறைய சம்பாரிக்கிறான். எம்பையன் எங்க மேல வச்சிருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும், எள்ளளவும் குறைச்சல் இல்ல. எம் மருமக எங்க வீட்டுக்கு வந்திருக்கிற வாழ்வரசி. எங்களுக்கு மகள் இல்லாத குறைய போக்க வந்த குணவதி. நல்லா படிச்சவ. பேரனும் பேத்தியுமா ரெண்டு பேரப்புள்ளைங்க, ""அய்யா அய்யா'', ""அப்பத்தா அப்பத்தா''ன்னு உசிரா சுத்திச்சுத்தி வருதுங்க. பிள்ளைங்க முழு நேர பள்ளிக்கூடம் போறவரைக்கும், வீட்ட மட்டும் கவனிச்சுகிட்டிருந்த மருமக, இப்ப அந்த பள்ளிக்கூட நேரத்துக்குள்ள வேலைக்கும் போயிட்டு வரா.
எம்பையன ஒருநாள் கூப்பிட்டு பேசுனேன், ""இங்க பாருப்பா நான் நிறைவா என் கடமையெல்லாம் செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன். நீயும் நல்லா இருக்க. இந்த வீடு உட்பட மத்ததெல்லாம் உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன். இந்த காலகட்டத்துக்கு எது செüகரியமோ அத பாத்து செஞ்சுக்கப்பா. உங்களோட எதிர்காலத்துக்கு எது தோதோ, அதபத்தி நீயே முடிவு பண்ணிக்கப்பா''
எங்களையும் சேத்து மொத்த குடும்பமாய் போய்வறதுக்கு தோதா ஒரு பெரிய காருக்கு, அட்வான்ஸ் கட்டிட்டு எம்பையன் சொன்னான்,""அப்பா இன்னும் ஒரு மாசத்துல கார் டெலிவரி கொடுத்துருவாங்க. கார் நிப்பாட்ட எடம் வேணும்ப்பா. அதனால ஒரு பக்கம் தோட்டத்த சுத்தம் செஞ்சிட்டு, கார் ஷெட் போட்ருவோம்ப்பா. இன்னொரு விஷயம், நம்ம வீட்டுக்கு பக்கத்திலயே ப்ரஷ் காய்கறி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வந்துருச்சு. வேணுங்கிறத போன்ல சொல்லிட்டா போதும். எப்ப வேண்ணாலும் வீட்லே வந்து குடுத்துருவாங்க'' .
எம்பையன் சொன்னான், ""ரொம்ப வருசமா மாடி வீட்ல வாடகைக்கு இருந்தவங்க அடுத்த மாசம் காலி பண்ண போறாங்களாம். எனக்கு தெரிஞ்ச ஒரு ம்யூச்வல் பண்ட் கம்பெனிக்காரங்க, ஒரு ஆபீசுக்கு இடம் வேணுங்றாங்க. நல்ல அட்வான்சும், வாடகையும் தரேங்றாங்க. அத வச்சே நம்ம வீட்டையும் கொஞ்சம் மராமத்துபண்ணிடலாம்ப்பா. மேல்வீட்ட கொஞ்சம் ரீமாடல் செஞ்சா போதும். அதுவும் அவங்களே செஞ்சுக்கிறாங்களாம்''.
எம்பையன் சொன்னான், ""ஏம்பா வீட்டை இடத்துக்கு நட்ட நடுவுல கட்டினீங்க? எதுக்கும் பயன்படாம சுத்தி காலி இடம் வேஸ்டா கிடக்குது. வீட கொஞ்சம் ஒரு பக்கமா கட்டி இருந்தா, நாலு கடை கட்டி வாடகைக்கு விட்ருக்கலாம். சரி அது போகட்டும். அந்த ஏ.டி.எம் - மாமரம் இடத்துல, நான் ஆலோசகராக இருக்கிற பேங்க்காரங்க, ஒரு ஏ.டி.எம் சென்டர் வச்சுக்கிறேங்றாங்க. நல்ல வாடகையும் தருவாங்க. அந்த சென்டருக்கு ஷிப்ட்டு முறையில இருவத்துநாலுமணி நேரமும் செக்யூரிட்டி போட்ருவாங்க. நமக்கு வருமானத்துக்கு வருமானம். பைசா செலவு இல்லாம செக்யூரிட்டியும் அமைஞ்சுரும். நாங்க இல்லாதப்ப, நீங்க மட்டும் தனியா இருக்கிறப்ப, உங்களுக்கும் ஒரு பாதுகாப்புக்கும் ஆச்சு. மரத்துப்பக்கம் பூச்சி அட்டையெல்லாம் வேற வருது''.
எம்பையன் சொன்னான், ""இந்த பழைய வீட்ட மெயின்டைன் பண்றது கஷ்டமா இருக்கு. எம் பொண்டாட்டியும் வேலைக்கு போறா. நீங்களும் தனியா இருக்கீங்க. என் ப்ரண்ட் ஒருத்தன் ஆர்கிடெக்டா இருக்கான். அவன் ஒரு யோசன சொன்னான். இந்த வீட்ட இடிச்சிட்டு, பெரிசா ஒரு அப்பார்ட்மென்ட் கட்டிறலாம். நமக்கு ரெண்டு வீடு கீழ் ப்ளோர்ல, நம்ம தோதுக்கு எடுத்துக்கிட்டு மத்தத வித்திரலாம். இல்லாட்டி வாடகைக்கு விடலாம். கோடி கணக்குல லாபம். அதேநேரத்துல, ரெண்டு அருமையான மாடர்னான அப்பார்ட்மென்ட் வீடு பைசா செலவு இல்லாம கிடைச்சுரும். அதுவரைக்கும்நாமஎல்லோரும் உங்க மருமக ஆபீஸ் குவார்டர்ஸ்ல தங்கிக்கலாம்'' வாழ வந்தவ வீட்டுக்குத்தானே நாம வாழப்போறோம்ன்னு நினைச்சுக்கிட்டேன் நான், ""அதுக்காக செலவழிச்சு கட்டின வீட்ட இடிக்கனுமா?'' ன்னு கேட்டேன். அதுக்கு அவன், ""இந்தவீடுகட்ட நீங்க செலவழிச்சத, இந்த காலத்து பண மதிப்போடவட்டியும்சேத்தாக்கூட, வீட இடிக்கிற செலவு அதிகமாஇருந்தாலும்இருக்கும்ப்பா'' ன்னு சொல்லி லேசா சிரிச்சான்.
நண்பரோட வீட்டு கல்யாணத்துக்கு போயிட்டு, பக்கத்துல இருக்கிற கோயில் குளம் பாத்துட்டு வரலாம்னு, வெளியூர் போய் இருந்தேன். போக, வர டிரைவரோட கார் ஏற்பாடு பண்ணி, நானும் என் மனைவியும் தங்குறதுக்கு, அந்தந்த ஊர்லலாம் ஒரு குறையும் இல்லாம வசதியும் பண்ணி கொடுத்தான் எங்க மகன். தொடர்புல இருக்கிறதுக்காக ஒரு புது செல்போனும் வாங்கி கொடுத்தான்.
அப்ப ஒருவாட்டி, எம்பையன் போன்ல சொன்னான், ""அப்பா அப்பார்ட்மென்ட் கட்டறத பத்தி அப்புறம் முடிவு பண்ணிக்கலாம். அதுக்கு முன்னாடி, அந்த வேப்ப மரம் இருக்கில்ல, அந்த இடம் நல்ல விஷன்ல இருக்காம்ப்பா. அங்க அட்வர்டைஸ்மென்ட் போர்டு வைக்கலாம்னு அட்வர்டைஸிங் கம்பெனி ஆளுங்க கேக்குறாங்க. அத வச்சா நம்ம இடம் பிரகாசமாவும், ஒரு நல்ல லேண்ட் மார்க்காவும் ஆயிரும். சைடு வாக்குல தூசியும் வராது. அவங்க போர்டு வச்சுக்க எடுத்துக்கப்போற இடம் ரொம்ப சின்னது. ஆனா, மாச மாசம் கணிசமா வாடகை தருவாங்க. ஆனா ஒரு சின்ன பிரச்னை. அந்த வேப்ப மரம் வியூவ மறைக்குதாம். அத வெட்டிரலாம்பா. அதையும் அவங்களே பண்ணிக்கிறாங்களாம். அதுக்குரிய ஈடையும் கொடுத்துறாங்களாம். அப்புறம் அம்மாவுக்கும் உங்களுக்கும் உடம்பெல்லாம் சுகமாத்தானே இருக்கு'' தலையாட்டினேன்.

எழுதியவர் 
சுப.திருப்பதி.
இன்று எனக்கு எங்க உறவினரிடம் இருந்து வந்த ஃபார்வர்ட் மடலில் படித்தது . படிக்கும்போதே நெஞ்சு விம்மி, மனம் கலங்கியது.  ஒரு வீடு  என்பது வெறும் கற்களாலும், சிமென்ட், மணலாலும், ஜல்லிகளாலும் ஆன கட்டிடம் மட்டும் அல்ல.  அது ஒரு உணர்வு.  வாழ்க்கை. ஜீவன் இன்னும் என்ன என்னமோ. இதைப் படிக்கையில் அம்பத்தூரில் எங்க வீடும் முன் வாசலில் இருக்கும் வேப்ப மரமும் நினைவில்(எங்கே மறக்க) வந்தது. எங்க பையர் இப்படி எல்லாம் சொல்லலை என்றாலும் என்றோ ஓர் நாள் இந்த முடிவு தான் ஏற்படப் போகிறது என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.  ஏனெனில் வீட்டின் இருபக்கமும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், எதிரேயும், அடுக்குமாடிக் குடியிருப்பு.  சுற்றிலும் இப்படி இருக்க எங்க வீடு மட்டும் இப்போதைக்குத் தன்னந்தனியாய் இருக்கு.  என்னதான் சென்னை பிடிக்கலைனாலும் கட்டின வீட்டில் வாழ முடியவில்லை என்பது துன்பம் தான்.  மக்கள் இனியாவது விழித்துக்கொள்வார்களா????????????

Sunday, October 28, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் முடிவு! (ஒரு வழியா)


ஒரு நாள் ஊர் சுற்றலில் கடைசியாக நாங்க போனது திருவெள்ளறை என்னும் பெருமாள் கோயிலாகும்.  ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் போனதுக்கு இப்போ அக்டோபரில் தான் எழுத முடிஞ்சிருக்கு.  நடுவிலே பல வேலைகள்; மின் தடைகள்.  இப்போவும் இங்கே மின் தடை முடிந்து இப்போத் தான் மின்சாரம் வந்ததுனு கணினிக்கு வந்தால் திடீர்னு இடியும், மின்னலுமாக மழை.  இடி இடிக்கையில் ப்ராட்பான்ட் கனெக்‌ஷனை வைச்சிருக்க முடியாதுனு கனெக்‌ஷனை மூடிட்டேன்.  பொதுவாக ஶ்ரீரங்கத்தில் மழை மற்ற இடங்களில் பெய்யறாப்போல கொட்டாது என்றும், அப்படிக் கொட்டினால் பெருமாள் ஏற்கெனவே தண்ணீரிலே, தண்ணீருக்கு நடுவே இருக்கிறதாலே ஜலதோஷம் பிடிச்சுக்குமாம்.  ஆகையால் மழை பெய்தாலும் சீக்கிரம் நின்னுடும்.  சென்ற வாரம் பெருமாளைப் பார்க்கப் போனோம்.  நவராத்திரி ஆரம்பத்தின் போது.  ஒருவழியா ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் பெருமாளை ஐம்பது ரூபாய்ச் சீட்டிலே பார்க்க முடிந்தது என்றால் தாயாரைப் பார்க்க முடியலை.  நவராத்திரிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.  வரதுக்கு ஏழு மணியாகும்னு சொன்னாங்க. ஏகக் கூட்டம் வேறே.  அம்பாள் படிதாண்டாப் பத்தினி என்பதால் கர்பகிரஹத்தை அடுத்த அர்த்த மண்டபத்திலேயே உள்ள தங்கக் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருப்பாள். பார்க்கப் போக முடியலை. கூட்டம், மழை எல்லாம் சேர்ந்து கொண்டது. :(

இப்போ திருவெள்ளறை குறித்துப் பார்க்கலாமா?  ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் இது முக்கியமானது. முன் கோபுரம் ஶ்ரீரங்கத்தில் ஒரு காலத்தில் இருந்த தெற்கு கோபுரம் போலப் பூர்த்தி அடையாமல் காணப்படுகிறது., கோயில் சுமார் ஐம்பது அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.  இதனால் இது "வெள்ளறை" என அழைக்கப் பட்டுப் பின்னர் "திருவெள்ளறை" என்று ஆனது எனக் கேள்விப் பட்டோம்.  108 வைணவத் திருப்பதிகளுள் இதுவும் ஒன்று..  கோயிலுக்கு உள்ளே செல்லப் பதினெட்டுப் படிகளைக் கடக்க வேண்டும்.  இவை கீதையின் பதினெட்டு அத்தியாயங்களைக் குறிப்பதாய்ச் சொல்கின்றனர்.  இன்னும் மேலே சென்றால் கோபுர வாயிலில் நான்கு வேதங்களைக் குறிக்கும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும்.  அதன் பின்னர் இங்கே முக்கியமாய்ச் சொல்லப் படும் பலிபீடத்தை வணங்கியபின்னர் மேலும் ஐந்து படிகளைக் கடக்க வேண்டும்.  இவை பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.  பிறகு பக்கவழியே சென்றால் பெருமாளைத் தரிசிக்க இரண்டு வழிகளைக் காணலாம்.  ஒன்று உத்தராயன வழி.  மற்றது தக்ஷிணாயன வழி.  முதல் வழியான தக்ஷிணாயன வழியானது ஆடி மாதம் முதல் மார்கழி வரையும், அடுத்த வழியான உத்தராயன வழி, தை மாதம் முதல் ஆனி மாதம் வரையும் திறந்திருக்கும்.

இங்கே பலிபீடத்தின் முன்னர் தமது கோரிக்கைகளை மக்கள் வைக்கின்றனர்.  கோரிக்கை நிறைவேற வேண்டிக் கொண்டு, நிறைவேறிய பின்னர் "பலிபீடத் திருமஞ்சனம்" செய்து பொங்கல் வைத்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.  குழந்தை இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடிப் பெருமாளுக்குத் திருவமுது செய்த பொங்கல் பிரசாதத்தை வாங்கி உண்டால் புத்ரபாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம்.  இங்கே பெருமாள் புண்டரீகாக்ஷப் பெருமாள் என்ற பெயருடன் விளங்குகிறார்.   புண்டரீகன் என்ற யோகி இங்கே ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வந்தார்.  இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்து அருளினார்.  பெருமாள் ஆஜாநுபாகுவாக அத்தனைக்கித்தனை உசரமாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.  கிழக்குப் பார்த்து உள்ள பெருமாளின் விமானம் விமலாக்ருத விமானம் என அழைக்கப் படுகிறது.  இவரை கருடன், சிபிச் சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் வழிபட்டதாகக் கூறுகின்றனர்.

Monday, October 22, 2012

கொலுவுக்குப் போனியா, ஷாப்பிங் போனியா!

நான் என்னமோ ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் போகப் போறதாத் தான் நினைச்சேன். ஆகவே கையில் ஒரே ஒரு கைத்துண்டு மட்டும் வைச்சிருந்தேன். என்னை அழைச்சுட்டுப் போனவங்கஒரு ஆட்டோவைக்கூப்பிடவும் எனக்குத் திக்குனு இருந்தது.  பைசா கூடக் கிடையாதே கையில்.  சரி அப்புறமாக் கணக்குப் பார்த்துக் கொடுத்திடலாம்னு மனசைத் தேத்திட்டு ஆட்டோவில் ஏறினோம்.  ஏறும்போது நாங்க மூணு பேர் இருந்தோம்.  எங்க காலனியிலேயே இருந்த பெண்மணி, நாங்க போன வீட்டுப் பெண்மணி, நான் ஆகிய மூணே பேர்தான். அவங்க போன வீட்டிலே இருந்தவங்க ஜாம்நகரிலேயே டிக்ஜாமில் வேலை செய்யறவங்க. பல வருடங்களாக ஜாம்நகரிலே இருக்காங்க. அவங்க வீட்டிலே மாமியார், மாமனார், பையர், மாட்டுப்பொண்ணு இருந்தாங்க. மாமனார் ஜாம்நகர் அருகே உள்ள ஹாப்பா என்னும் ஊரில் ரயில்வேயில் இருந்து ரிடையர் ஆனவர்.  எல்லாருமே அவரை ஹாப்பா மாமானு கூப்பிட்டாங்க.  அங்கே வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு கிளம்பும்போது மாமியாரும், மருமகளும் கூடவே வந்தாங்க.  சரி, வழியனுப்பறாங்கனு நினைச்சால், அவங்களும் நாங்க வந்த ஆட்டோவில் ஏறினாங்க.  நம்ம வீட்டுக்குத் தான் வராங்களோனு நினைச்சால் இல்லையாம்.

அந்த மாமியாரின் தங்கையும் அதே ஊரிலே இருக்கிறதாலே அங்கே போறோமாம்.  அங்கிருந்து இன்னொரு மாமி டிக்ஜாமில் வேலை செய்யறவங்க வீட்டுக்குப் போறோமாம்.  அங்கிருந்து இன்னொருத்தர், இன்னொருத்தர்னு கிட்டத்தட்டப் பத்து வீடு ஆயிடுச்சு.  ஆட்டோவிலே முதல்லே நாங்க மூணு பேர் இருந்தது அப்புறமா எட்டுப் பேர் ஆகவே எனக்கு முழி பிதுங்கியது.  ஆனாலும் அதுவும் ஒரு ஜாலியாத் தான் இருந்தது.  டிரைவர் பக்கத்திலே இரண்டு பேர் உட்கார, பின்னாடி மூணு பேருக்கு நடுவே இரண்டு பேர் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு உட்கார, கம்பியிலேஇரண்டு பேர் தொங்க, சாமியோவ்!!!!!!!!!!!!!! நல்லவேளையா எனக்கு நான் புதுசுங்கறதாலேயோ என்னமோ ஓர சீட் கொடுத்துட்டாங்க.

அதான் அப்படின்னா போற ஒவ்வொரு இடத்திலேயும் தேங்காய், வெற்றிலை,பாக்கு, பழம், பரிசுப் பொருள்னு சேர்ந்து போய் நான் பையும் கொண்டு போகாம அங்கேயே ஒருத்தர் வீட்டிலே பையை வாங்கிக் கொண்டு அதுவும் பத்தாம கையிலேயும்  எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரச்சே இரவு ஒன்பதரை மணி. வீட்டிலே எல்லாரும் நான் எங்கே போனேன்னு தெரியாமல் காலனியில் இருக்கும் வீட்டில் போய்ப் பார்த்துத் தேடி இருக்காங்க.  அவங்களும் வரலைனு தெரிஞ்சதும் கொஞ்சம் ஆறுதல்.  அப்புறமா ஆட்டோவிலே நான் வந்து இறங்கினதும், கையிலேயும், பையிலேயும் சாமான்களைப் பார்த்ததும், நான் ஏதோ அவங்களோட ஷாப்பிங் போயிட்டு வந்திருக்கேன்னு நினைச்சுட்டு, இப்போ எதுக்கு இத்தனை சாமான்கள் வாங்கிட்டு வந்திருக்கேனு கேட்டாங்களே பார்க்கலாம்!

ஹிஹிஹிஹி

Sunday, October 21, 2012

ஜாம் நகருக்கு வந்து வெற்றிலை, பாக்கு வாங்கிக்கோங்க!

இந்த வருஷம் முதல் நாளில் இருந்தே சுண்டல் நல்ல போணியாகிட்டு இருக்கு.  நேத்திக்கு மொச்சைக்கொட்டைச் சுண்டல், ருசி பார்க்கக் கூட எங்களுக்குக் கிடைக்கலை.  அதிலும் சின்னப் பெண்குழந்தைகள் ஐந்தாறு பேர் தினமும் வந்து அமர்க்களப் படுத்திவிட்டுப் போகிறார்கள்.  மனதிலே கொலு வைத்ததன் ஜன்ம சாபல்யம் இந்த வருஷம் ஏற்பட்டுள்ளது. இதுவே சென்னையில் என்றால் நிஜம்ம்மாவே வெற்றிலை, பாக்கு, பூரண கும்பத்தோடு எடுத்துட்டுப் போய்க் கூப்பிட்டாலும் எதிர் வீட்டுக்கார மாமியைத் தவிர வேறே யாரும் வர மாட்டாங்க. :( அவங்க வீட்டுக்கு நானும், எங்க வீட்டுக்கு அவங்களும் தான் சுண்டல் பரிமாற்றமும், வெற்றிலை, பாக்குப் பரிமாற்றமும் செய்துப்போம்.

ஆனால் நாங்க வடக்கே இருந்தப்போ கூடப் பரவாயில்லை. ராஜஸ்தானில் இருந்தப்போ நிறைய நண்பர்கள் இருந்ததால் அவங்க மனைவிகளை எல்லாம் கூப்பிட்டு நவராத்திரி வெற்றிலை, பாக்குக் கொடுத்துப் பழக்கம் செய்துட்டு வந்தாச்சு.  அடுத்து குஜராத் போனப்போ எங்க யாருக்குமே (நம்ம ரங்க்ஸைத் தவிர) ராஜஸ்தானை விட்டுப் போக மனசே இல்லை.  ஆனால் ஊர் மாற்றல் கொடுத்தால் போய்த் தானே ஆகணும்.  குஜராத் வரச்சேயே வேப்பமரம் இருக்கா, காக்காய் இருக்குமா, கிளி, குயில் இருக்குமானு ஒரே கவலை.  அங்கே வேப்பந்தோப்புக்குள்ளே தான் வீடுனு தெரிஞ்சதும் கொஞ்சம் நிம்மதி.  வந்த சில நாட்களிலேயே நம்ம சுப்புக்குட்டிகளும் வந்து ஆஜர் கொடுத்துத் துணைக்கு நாங்களும் இருக்கோம்னு சொல்லிட்டுப் போச்சுங்க.  ஒவ்வொண்ணும் எத்தனை நீளம்ங்கறீங்க?  சும்மா ஐந்தடி சுப்புக்குட்டிங்கல்லாம் சர்வ சாதாரணமா நிலைப்படியில் நீள நெடுகப் படுத்துக்கும்.  கையிலே கம்பை வைத்துக்கொண்டு தான் ராத்திரி படுத்துப்போம்.  அது பாட்டுக்கு தானும் மெத்தையிலே படுத்துப்பேன்னு வந்துட்டால் என்ன செய்யறது!

கொலுவைப் பத்திச் சொல்ல வந்துட்டு சுப்புக்குட்டியைப் பத்திச் சொல்லப் போயிட்டேன்.  அந்த வருஷம் நவராத்திரியும் வந்தது.  நாங்க இருந்த பி.ஜி. லைன்ஸ், சொலேரியம் சாலையில் எங்களோடு சேர்த்து ஒரே ஒரு தமிழ்க்காரங்க.  ஆனாலும் குஜராத்தில் நவராத்திரி பிரபலம் என்பதாலும், எல்லாருக்கும் இந்தத் தென்னிந்திய கொலு பற்றிய அறிவு கொஞ்சம் இருந்ததாலும் பழகிய நண்பர்கள் வீட்டுப் பெண்கள் வந்தாங்க தான்.  ஆனால் அங்கே இருந்த தமிழ்க்காரப் பெண்மணி கண்டோன்மெண்டைத் தவிர நகருக்குள்ளும் சிலர் இருக்காங்கனு சொல்லி இருந்தாங்க.  அவங்களிலே ஒருத்தர் எங்க அலுவலகத்தைச் சேர்ந்தவங்க என்பதால் கூப்பிட்டாங்கனு நாங்க குடும்பத்தோட போயிருந்தோம்.  அப்போ அந்தப் பெண் நவராத்திரி வெற்றிலை, பாக்கு வாங்கச் சிலர் கூப்பிட்டிருப்பதாயும் தானும் போகப் போறேனு சொல்லி என்னையும் கூப்பிட்டாங்க.  நான் தயாராக வரலை.  போனால் எத்தனை நேரம் ஆகுமோனு யோசனை.  ஆனால் நம்ம ரங்க்ஸ் குழந்தைங்களை அழைச்சுட்டுத் தான் வீட்டுக்குப் போவதாயும் என்னைப் போயிட்டு அவங்களையும் நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வரும்படியும் சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.  சரினு நானும் ஒரு வீடுதானேனு நினைச்சுட்டுப் போனேன்.

போனேனா!

Thursday, October 18, 2012

பாஷை புரியாததால் வந்த எதிர்பாரா விருந்து!

ராஜஸ்தானிலே நாங்க இருந்தாலும் சுற்றிலும் ஒரே காடு மயம்.  அதுவும் ராணுவக் குடியிருப்புகள் இருக்கும் கன்டோன்மென்ட் வேறே.  ராணுவப் பராமரிப்புகளிலே இருக்கும் செடி, கொடிகள், மரங்கள்னு ஒரே பசுமைமயம் தான்.  எங்களுக்குக் கொடுத்திருந்தது தனி வீடு.  சுற்றிலும் குறைந்த பக்ஷமாக ஒரு ஏக்கர் நிலம்.  அதிலே வேப்பமரங்கள், கருவேலமரங்கள், அரச மரங்கள்னு இருந்தது போக வீட்டுக்கு முன்னாடியும், பின்னாடியும், வீட்டின் ஒரு பக்கத்திலேயும் நாங்க காய்கறித் தோட்டம் வேறே போட்டிருந்தோம்.  ஏற்கெனவே காட்டு வாழ் ஜந்துக்கள் இருந்ததுன்னா, போறாக்குறைக்கு எலிகளும் நிறைய.  ஒவ்வொரு எலியும் குறைந்த பக்ஷமாக ஒரு பெருச்சாளி அளவுக்கு இருக்கும்.  முதல்லே பயந்தே போனேன்.  இது எலிதான்னு அந்த ஊர்க்காரங்க சத்தியமே செய்தாங்க.  அப்புறமா தினம் தினம்  நான் சமைக்கும்போதும் அந்த எலிகள் கிட்டே உட்கார்ந்து கொண்டு உப்புச் சரியாப் போட்டேனா? காரம் சரியா இருக்குமா?  புளி கரைத்தேனானு கவனித்துக்கொண்டே இருக்கும்.  மாமியார் கெட்டாங்க!

ஆகவே ஒரு நாள் எலி வரலைனாக்கூட என்னடா இது, இன்னிக்கு என்ன ஆச்சு? உடம்பு, கிடம்பு சரியில்லையானு யோசிப்பேன்.  பொழுதே போகாது.  எங்க பொண்ணோ விளையாடத் துணை இல்லையேனு தேடுவா.  ஆனால் நாங்க பகலிலே சமையலறையிலேயே இருந்ததாலேயே என்னமோ ஸ்டோர் ரூம் பக்கம் எலிகள் போய்ப் பார்க்கவில்லை.  அது தெரிஞ்சிருந்தா கொலுவை அங்கே வைச்சே இருக்க மாட்டேன்.  வாசல் பக்கமும் திறக்கலாம் அந்த அறைக்கதவை.  சமையலறையில் இருந்தும் திறக்கலாம். எந்தப் பக்கம் இருந்து போச்சுனு தெரியலை.  எல்லாம் தலைகீழ்.  பொம்மைகள் எல்லாம் உருட்டித் தள்ளப்பட்டு படிகளுக்கு அடியில் கொண்டு போய்ப் போட்டிருந்தது.  அத்தனை அழகாய்க் கோலம் போட்டுப் படிகளை வைச்சதை நகர்த்தும்படி ஆச்சு.  இப்போ என்ன பண்ணறது?  எலி விட்டு வைக்காது போலிருக்கேனு யோசிச்சேன்.  அப்புறமா சரி, பகல்வேளையில் மட்டுமே கொலுவை வைச்சுப்போம், ராத்திரி வேளையில் பொம்மைகளை எடுத்து வைத்துவிடுவோம்னு முடிவு பண்ணி அப்படியே செய்தேன்.  தினம் தினம் காலம்பர வைக்கிறதும், ராத்திரி படுக்கிறச்சே எடுத்துப் பத்திரமா வைக்கிறதுமா பொழுதைக் கழிக்கவும் முடிஞ்சது.

அடுத்து நிவேதனம், வெற்றிலை, பாக்கு கொடுப்பது போன்றவை.  ராஜஸ்தான் காரங்களுக்கு நான் வைச்ச கொலுவே புதுசா இருந்ததுனால், கூப்பிட்டது அதை விடவும் புதுசா இருந்தது.  எங்க குடியிருப்பிலேயே இருந்த ஒரு சில தென்னிந்தியக் குடும்பங்களுக்குச் சொல்லி அனுப்பினேன்.  எங்க வீடு தனி வீடுனு சொன்னேன் இல்லையா?  தனி என்றால் தனிஈஈஈஈஈஈஈஈஈஈ.  வீட்டைப் பூட்டிக் கொண்டு தான் பக்கத்து வீட்டுக்குப் போக வேண்டும்.  எங்க வீட்டிலே இருந்து குறைந்தது ஒரு பர்லாங்காவது நடந்து வெளியே வந்து  பின்னர் பக்கத்து வீட்டுக்குப் போக இரண்டு பர்லாங்காவது நடந்து ;அங்கேயும் உள்ளே செல்ல ஒன்று முதல் இரண்டு பர்லாங்காவது நடந்து போய்ப் பார்த்துச் சொல்லணும்.  அப்படிப் பக்கத்து வீட்டிலே இருந்த மலையாளிக் குடும்பத்துப் பெண்மணியிடம் சாயந்திரம் வரச் சொல்லிட்டு வந்தேன்.  நான் தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும், ஹிந்தியிலேயும் சொல்ல, அந்தப் பெண்மணிக்கு மலையாளம் மட்டுமே தெரியும்.  புரியும்.  என்ன புரிஞ்சிண்டாங்களோ தெரியலை.

அவங்க சாயந்திரம் வரச்சே கணவனையும் அழைச்சுண்டு வந்தாங்க.  இரண்டு பேரும் இங்கே சாப்பாடுனு ஏதோ தப்பாப் புரிஞ்சுட்டு வந்திருக்காங்க.  அவங்க கணவர் கிட்டே பேசினதிலே நம்ம ரங்க்ஸ் புரிஞ்சுட்டு என்னைத் தனியாக் கூப்பிட்டு என்ன சொன்னேனு கேட்க, நான் மஞ்சள் குங்குமத்துக்குத் தானே கூப்பிட்டேன்னு சொல்ல, அவங்க இங்கே சாப்பாடுனு நினைச்சுட்டு வந்திருக்காங்கனு சொல்ல, நான் திரு திரு திரு திரு.  அவங்க கிட்டே விளக்கலாம்னு சொன்னேன்.  அப்புறமா ஒரு மாதிரியாப் புரிய வைச்சோம்.  என்றாலும் அந்தப் பெண்மணிக்கு ஏமாற்றம் போலிருக்கு.  பேப்பரோ, தொன்னையோ கிடைக்காமல் வாழை இலையில் கட்டிக் கொடுத்த சுண்டலைப் பிரித்து அங்கேயே வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.  அவர் இருக்கும் இருப்பைப் பார்த்தால் சாப்பாடு போடாமல் கிளம்ப மாட்டார் போலிருந்தது.  முழித்துக்கொண்டிருந்த என்னைக் காப்பாற்ற அப்போது வந்தது ஒரு கர்நாடகப் பெண்மணி.  அவங்களுக்குக் குறைச்சு மலையாளமும் அறியும்.  ஆகவே வந்தவுடனே நிலைமையைப் புரிந்து கொண்டு அந்தப் பெண்மணியோடு மலையாளத்தில் சம்சாரிச்சு விளக்கப் பக்கத்துவீட்டுப் பெண்மணிக்கு ஒரு வழியாப் புரிஞ்சது.  பிழைச்சோம்.

இல்லாட்டி தோசை மாவு தயாரா இருந்தது.  சாம்பார் இருந்தது;  தோசை வார்த்துக் கொடுக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.  ஆனால் விருந்தை இல்லையோ அவங்க எதிர்பார்த்துட்டு வந்திருக்காங்க.  பாவம்,  இப்படியாக ராஜஸ்தானின் முதல் கொலுவில் ஒரு பெண்ணை ஏமாற்றிய பாவத்துக்கு உள்ளானேன்.  அது முதல் யாரையானும் கூப்பிடறதா இருந்தா நான் நேரிடையாச் சொல்லாமல் ரங்க்ஸை விட்டு அலுவலகத்திலேயே சொல்லச் சொல்லிடுவேன்.  நம்ம பாடு நிம்மதி.  அப்புறமா ரொம்ப நாட்கள் அதையே சொல்லிச் சொல்லிச் சிரிச்சுட்டு இருந்தோம்.   இப்படியாக ராஜஸ்தானில் சுமார் நாலு வருடங்கள் கொலு வைத்துக் குப்பை கொட்டினேன்.  அப்புறமா அங்கே இருக்கிறவங்களுக்கு இது பழக்கமாவும் ஆச்சு.

Wednesday, October 17, 2012

பொம்மைகளைக் காணோமே!

எனக்கு ஆரம்பிச்ச கொலுவை நிறுத்த மனமில்லை.  அம்மா வீடு, மாமியார் வீடு இரண்டிலும் கொலு உண்டு.  வைச்சே ஆகணும்னு இருந்தேன்.  அங்கே, இங்கே விசாரிச்சு பொம்மைகள் கிடைக்கும் ஒரு கடையைப் பத்தி அலுவலக ஊழியரிடம் விசாரித்து வந்தார் நம்ம மறுபாதி.  சாயந்திரமா இரண்டு பேருமாக் கடைத்தெருவுக்குப் போனோம்.  ஒரே வீதி தான் கடைத்தெரு.  ஆனால் அங்கே கிடைக்காத சாமானே இருக்காது.  நண்பர் சொன்ன கடைக்குப் போய் பொம்மைகளைப் பார்த்தால் எல்லாம் குழந்தைங்க விளையாடற மாதிரியான பொம்மைங்க.  சப்ப்னு போய்த் திரும்பலாம்னு இருக்கிறச்சே என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம், எதிரே நடைபாதையில் ஒரு நடைபாதைக்கடையில் பலவிதமான பொம்மைகள்.  தெருவின் குறுக்கே பாய்ந்து ஓடினேன்.  அந்த பொம்மைக்கடையில் முதலில் என் கண்ணில் பட்டது யார்னு நினைச்சீங்க?

நம்ம நண்பர் தான்.  அவரைப் பார்த்ததுமே குதூகலம் பொங்கி வழிய எடுத்துத் தனியா வைச்சுட்டேன்.  பின்னர் ஒரு ராதா, கிருஷ்ணன் விக்ரஹம், அம்பாஜி(நம்ம ஊர் அம்மன் தான் அங்கேயெல்லாம் மரியாதையோட அம்பாஜி ஆயிட்டாங்க) விக்ரஹம் ஒண்ணு, பள்ளி கொண்டவர் இவை கிடைத்தன. எனக்குப் புதையலே கிடைச்சாப்போல இருந்தது.  எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு வந்தோம்.  எங்க பொண்ணு விளையாடத் துணியால் பஞ்சு அடைக்கப்பட்ட பொம்மைகள் பல உருவங்களில் பெரிதும், சிறிதுமாக இருந்தன.  எல்லாமே ஆண் பொம்மைகள்.  அதோடு ஒன்றிரண்டு மரப்பாச்சிகளும் கிடைத்தன.  இந்த ஆண் பொம்மைகளில் எல்லாம் டிரஸ் தைத்து அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.  அதிலே ஒரு பொம்மைக்குப் புடைவை கட்டிப் பெண்ணாக மாற்றினேன்.  மற்ற பொம்மைகளில் சின்னது ஒண்ணு எங்க பொண்ணு தூங்கறச்சே கூடப் பக்கத்திலே இருக்கும்.  அதை வைத்துக்கொண்டு வாயில் விரல் போட்டுப்பாள்.  அதை அவளிடமிருந்து பிரிக்க முடியாது.  அதை விட்டுட்டு, நல்லதனமாச் சொல்லி மற்ற பொம்மைகள், இன்னும் அவள் வைத்திருந்த, கார், ஏரோப்ளேன் போன்ற விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டன.

ஊரிலிருந்து சாமான்கள் கொண்டு வந்திருந்த கள்ளிப்பட்டி, ஜாதிக்காய்ப் பெட்டிகள் படியாக மாறின.  கடைசிப் படிக்கு ஒரு சின்ன பெஞ்ச் உதவியது.  நம்ம மறுபாதியோட ஜரிகை வேஷ்டியைப் போட்டுப் படிகளை மூடியாச்சு.  பொம்மைகளை வைச்சாச்சு.  கலசம் வைக்கவில்லை.  கலசம் வைத்தால் கொலுப்படியைத் தொட முடியாது.  அதோடு பூஜையும் செய்து தினம் இருவேளை நிவேதனமும் பண்ணணும். சின்னக் குழந்தையை வைச்சுக்கொண்டு எதுவும் முடியாது.  மேலும் நான் பொம்மையைப் படியில் வைக்க, எங்க பொண்ணு அதைக் கீழே வைக்கனு மாறி மாறிச் செய்து கொண்டிருந்தோம்.  அவள் கிட்டே (இரண்டு வயசு முடிஞ்சிருந்தது) எப்படிப் புரிய வைப்பது.  எல்லாம் உம்மாச்சி, உம்மாச்சினு சொல்லி நான் படியில் வைக்க, அவளும் உம்மாச்சி, உம்மாச்சினு சொல்லிக் கொண்டே கீழே இறக்கிடுவாள்.  எப்படியோ சமாளித்துக்கொண்டு வைத்துவிட்டு அந்த ஸ்டோர் ரூம் கதவைச் சமையலறைப்பக்கமாய்ச் சார்த்தித் தாழ்ப்பாளிட்டேன்.  குழந்தை திறந்து கொண்டு போகாமல் இருக்கணுமே;  அதுக்குத் தான்.  ஆனால் குழந்தையைத் தான் என்னால் தடுக்க முடிந்தது.  இன்னொரு விருந்தினர் அழையா விருந்தாளி அவரைத் தடுக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் ஸ்டோர் ரூமிலிருந்து காப்பிக் கொட்டை வறுத்து அரைத்து எடுக்கணுமேனு கதவைத் திறந்து உள்ளே போனேன்.  குழந்தையும், அவ அப்பாவும் நல்ல குறட்டை.  உள்ளே போன நான் கத்தின கத்தலில் இரண்டு பேரும் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தனர்.  நானோ அதன் பின்னர் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனேன்.  பொம்மைகள் ஒன்றைக்கூட காணோம்.  பிள்ளையார் மட்டும் கடைசிப்படிக்குக் கீழே உருண்டு கிடந்தார்.  மற்றவை???

Tuesday, October 16, 2012

நவராத்திரி நினைவுகள். nostalgia

கல்யாணம் ஆகி வந்ததும் முதல் முறையாக் கொலு மூணு வருஷங்களுக்குப் பின்னர் எங்க பொண்ணு பிறந்து அவளுக்கு ஒரு வயசு ஆனதும் தான் வைச்சோம்.  அப்பா மதுரையிலிருந்து பொம்மைகளை, அனுப்பி இருந்தார்.  எல்லாம் எங்க வீட்டுக் கொலுவுக்கு என் தம்பி பிறந்தப்போ வாங்கினது.  புதுசா பொம்மையே வாங்கித் தரலைனு என் தம்பி அப்போத் தான் புதுச்ச்ச்சா வேலையிலே சேர்ந்திருந்தான்.  ஒரு கோபுரம் பொம்மை, இரண்டடி உயரத்துக்கு வாங்கிக் கொடுத்தான். அந்த பொம்மையை வாங்கறச்சே பேரம் பேசத் தெரியாம நானும், தம்பியும் (ஹிஹிஹி, நாங்க சின்னப் பசங்க தானே) நூறு ரூபாய் சொன்ன பொம்மையை சாமர்த்தியமாக ஐம்பது ரூபாய்னு பேசி வாங்கினோம்.  

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மறுநாளே தி.நகர் ரங்கநாதன் தெருவின் கொலுப் படிகளில் அந்த பொம்மை பதினைந்து ரூபாய்க்குக் கிடைத்தது தெரிய வந்தது.  அப்போத் தெருவிலே எல்லாரும் கூப்பிட்ட உடனே வருவாங்க. அதோட இந்த ஆண் குழந்தைகள் எல்லாம் வாசல்லே வந்து நின்னுட்டு, மாமி, சுண்டல், அக்கா, சுண்டல்னு கூப்பாடு போடுவாங்க.  அவங்களுக்குக் கட்டாயமா ஏதேனும் தந்தே ஆகணும்.  இல்லைனா மெயின் ஸ்விட்சை அணைச்சுட்டுப் போயிடுவாங்க. ஆகவே பயந்துட்டுக் கொடுத்துடுவேன். அப்போல்லாம் கீழே பார்க், தெப்பக்குளம், மலை, மிருகக் காட்சி சாலைனு அலங்காரங்கள் செய்வோம்.  நிறைய பொம்மைகள் அதற்கேற்றாற்போல் இருந்தன.  போதாதுக்குச் சங்குகள், சிப்பிகள், சோழிகள்னு இருந்தன.  இப்போ எல்லாம் எங்கே போச்சு? தெரியலை! அப்புறமா ராஜஸ்தானுக்குப் போகும்படி ஆச்சு.  அங்கே எல்லா பொம்மைகளையும் தூக்கிட்டுப் போக முடியாதுனு நம்ம சர்வாதிகாரி சொல்லிட்டு எல்லாத்தையும் சென்னையிலேயே எங்க அண்ணா வீட்டிலே போட்டுட்டுப் போயிட்டோம்.  ஆனாலும் கொலு வைத்தே ஆகணும்னு எனக்கு. என்ன செய்யலாம்?

Monday, October 15, 2012

நோ சுண்டல் கலெக்‌ஷன்! :P

தானம் கொடுத்தது போக மிச்சம் இருக்கும் பொம்மைகளைக் கொலுவில் வைச்சாச்சு. நாளைக்குச் சுண்டல் உண்டா?  என்ன ஒரு வருத்தம்னா சென்னை, அம்பத்தூரில் இருக்கிறச்சே சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போறாப்போல இருக்கும்,  ஆனால் இங்கே நோ கலெக்‌ஷன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட சுண்டலையே நானே சாப்பிட்டுக்கணும்.

Saturday, October 13, 2012

பக், பக், பக்கூம், பக்கூம் மாடப்புறா! பக்கம் நிற்கும் மாடப்புறா!

டெல்லியில் இருக்கும் பெரிய மைத்துனர் வீட்டிலே சமையலறை ஜன்னலிலே மாடப்புறா ஜோடி குடும்பம் நடத்துது.  நாங்க போயிருந்தப்போ முட்டை போட்டு அடை காத்துட்டு இருந்தது.  குஞ்சு பொரிச்சு முட்டையிலிருந்து வெளிவரும் சமயம்.  மேலே எடுத்த படம்.

இன்னொரு முட்டையை அடைகாக்கையில் எடுத்த படம். குஞ்சைத் தன் அலகினால் கொத்திக் கொத்திக் கொடுக்கிறது. குஞ்சு கண்களைத் திறக்க மூணு நாள் ஆகும்போல.  பின்னர் தன் இறக்கைகளுக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது.  அம்மாப்புறாவும், அப்பாப் புறாவும் மாறி மாறி இந்த வேலைகளைச் செய்கின்றன.  புறா சும்மா முட்டையை அடைகாத்த வண்ணம் குஞ்சைக் கொத்தித் தடவிக் கொடுக்கலைனா அப்பாப்புறானு நினைச்சுப்போம்.  அது தடவிக் கொடுத்ததுன்னா அம்மாப் புறானு பேசிப்போம்.  சமைக்கும்போது மெல்ல வலைக்கதவைத் திறந்து பருப்பு, அரிசி, பொடியாக நறுக்கிய காரட் துண்டுகள்னு அதுங்களுக்கு விருந்து கிடைக்கும். :))))


அம்மாப்புறாவும், அப்பாப்புறாவும் ஷிஃப்ட் மாத்திக்கும்போது எடுத்த படம் மேலே.

கூடு கட்ட வாயிலே புல்லோ, குச்சியோ எடுத்துட்டு வந்து ஒரு புறா (அப்பா?) கொடுக்க இன்னொண்ணு அதை அலகாலே நீவி நீவி மெத்துனு பண்ணிக் குஞ்சுக்கு மெத்தை மாதிரிப் போடுது.  ரொம்பக் கஷ்டப்பட்டு எடுக்க வேண்டியதாப் போச்சு. வலை ஜன்னல் கிட்டே காமிராவைக் கொண்டு போனால் புறாவுக்கு பயம் வருது.  அதோட அது இருக்கிறது வேறே கொஞ்சம் பள்ளத்திலே.  எம்பி, எம்பிப்பார்த்து ஒரு வழியா ஏதோ எடுத்துட்டேன்.

Friday, October 12, 2012

வந்து சேர்ந்தேன்! :)

இன்று காலை ஸ்ரீரங்கத்துக்கு செளகரியமாக வந்து சேர்ந்தோம்.  மைத்துனர் டிஸ்சார்ஜ் ஆகி வந்து நாலைந்து நாட்களுக்குப் பின்னர் ஏற்கெனவே ரிசர்வ் செய்து வைத்திருந்த டிக்கெட்டில் கிளம்பினோம்.  தற்சமயம் கொஞ்சமாக திட உணவு எடுத்துக்கொள்கிறார்.  என்றாலும் இன்னமும் கட்டுப்பாடுகள், மருந்துகள், ஒருநாள் விட்டு ஒருநாள் ரத்தப் பரிசோதனை என இருக்கின்றன.  வீட்டுக்குள்ளாகத் துணையுடன் நடமாடுகிறார்.  அதிகம் நடக்க முடியவில்லை. ஓய்வில் இருக்கிறார். ஆஸ்பத்திரியில் வென்டிலேஷனில் இருந்த நாட்களைத் தவிர மற்றவை நினைவில் இருக்கின்றன. எல்லாம் வல்ல இறைவன் கிருபையால் அனைவரின் அன்பான பிரார்த்தனையாலும், மருத்துவர்களின் விடா முயற்சியாலும், மைத்துனரில் போராட்ட குணத்தாலும்,  கொஞ்சம் கொஞ்சமாய்த் தேறி வருகின்றார்.


எல்லாவற்றுக்கும் மேல் அங்கே இருக்கையில் என் கணவருக்குத் திடீரெனக் குளிர் சுரம் வந்து உடம்பெல்லாம் தூக்கிப் போட்டு, மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு எப்படியோ போய்க் காட்டிட்டு வந்தோம். அது வேறே ஒரு வாரம் அனைவருக்கும் டென்ஷன், மன வருத்தம்.  பின்னர் வயிற்றுக்கோளாறு வந்து அதுவும் சரியாச்சு, (கை மருத்துவத்தினால்).  டில்லிக்குத் தொலைபேசி விசாரித்த நண்பர்களுக்கும், இ- மெயில் மூலம் விசாரித்த நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.  இங்கே பதினான்கு மணி நேரம் மின் வெட்டு.  காலை ஆறு மணிக்கு வந்ததும் போன மின்சாரம் பத்து மணிக்கு வந்து, பனிரண்டுக்குப்போய்ட்டு இப்போத் தான் நாலு மணிக்கு வந்திருக்கு.  எத்தனை நிமிடம் இருக்கும்னு தெரியலை.  அதுக்குள்ளே எல்லாம் முடிச்சுக்கணும்.  பார்ப்போம். :))))

Friday, October 05, 2012

Update

Hi Friends,

We are very grateful to one and all. By God's Grace and the prayers of our friends helped and still  is helping my BIL and he is improving.  The Drs.  removed him from the ventilation and he has been shifted to a room and the treatment continues. He talked to us with full conscious and taking liquid food.  Of course it will take time to full recovery. 

Pillaiyare  thank you.