எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 31, 2013

நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மணநாளாம்!

துணிமணிகள், பாத்திரம், பண்டம்னு வாங்கியாச்சு.  அடுத்து முக்கியமான ஒன்று திருமணம் நடைபெறப் போகும் இடம்.  முன்னெல்லாம் வீடுகள் பெரிதாக இருக்கும்.  ஒரு வீடு எனில் வாசல் திண்ணை இருபக்கமும், உள்ளே ரேழி, ரேழியில் ஒரு அறை, சில வீடுகளில் ரேழியில் இருந்தே மாடிக்குச் செல்லும்படிகள், பின்னர் கல்யாணக் கூடம், கூடத்தில் எதிரும் புதிருமாக இரு அறைகள், பின்னர் இரண்டாம் கட்டுக்குச் செல்லும் இன்னொரு ரேழி, அங்கேயும் வருஷாந்திர சாமான்களை வைக்க நெல்லுக்குதிரோ(சிலர் பத்தாயம் என்பார்கள்) அல்லது சின்னதாக சாமான் அறையோ இருக்கும்.  வருஷத்துக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் அந்த அறையில் வைக்கப்பட்டு ஒரே மளிகைக்கடை வாசனை வந்து கொண்டிருக்கும்.  அதன் பின்னர் இரண்டாம் கட்டு, அங்கேயும் ஒரு அறை இருக்கும், இரண்டாம் கட்டுத் தான் அநேகமாய் வீட்டினர் அனைவரும் சாப்பாடுக்குக் கூடும் கூடமாகவும் இருக்கும்.  அது தாண்டி, முற்றம், சமையலறை என அமைந்திருக்கும்.  இரண்டாம் கட்டில் இருக்கும் முற்றம் சாப்பிட்டுக் கை  அலம்புவதற்காகவும், கூடத்தில் வெளிச்சம் வருவதற்காகவும் திறந்த முறையில் அமைக்கப்பட்டு, மேலே அழிக்கம்பிகளால் மூடப் பட்டுக் காணப்படும்.  அதைத் தாண்டித் தாழ்வாரம் என்னும் ஒரு சிறிய கூடத்தைத் தாண்டித் தான் சமையலறை.  இந்தத் தாழ்வாரம் தான் கறிகாய் நறுக்க, மாவு அரைக்க இயந்திரம், கல்லுரல், அம்மி போன்றவை இருக்கும் இடமாக இருக்கும்.

இதைத் தாண்டிச் சமையலறையில் கிழக்கே அடுப்புப் போட்டிருப்பார்கள்.  ஒரு பெரிய அடுப்பும், பக்கத்தில் கொடி அடுப்பு என்னும் துணை அடுப்புமாகக் காணப்படும்.  சமையலறை தாண்டிக் கொல்லையில் கிணற்றடி, முற்றம், பாத்திரங்கள் தேய்க்கும் இடம், துணிகள் தோய்க்கும் இடம், குளிக்கும் அறை, குளியலறை வாசலில் வெந்நீருக்கு என நிரந்தரமாக ஓர் அடுப்பு, அதற்கருகே கோட்டை அடுப்பு என்னும் பெரியதொரு அடுப்பு எல்லாம் இருக்கும்.  அநேகமாய் இது இல்லாத வீடுகளே இருக்காது.  ஆகவே வீட்டு வாசலிலேயே எப்போதும் போட்டிருக்கும் பந்தலைக் கொஞ்சம் பெரிதாகப் பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் போட்டுவிட்டு, அலங்காரங்கள் செய்வார்கள்.  அதோடு வீடுகளுக்கு வெள்ளை அடித்து, வாசல் சுவரில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடிப்பார்கள்.  பின்னர் இது வீடு முழுதும் அடிக்காவிட்டாலும், கூடத்திலும், வாசலிலும் மட்டும் அடிக்கும் வழக்கம் இருந்து பின்னர் சத்திரங்களில் கல்யாணம்னு ஆனதும் அதுவும் போயாச்சு! :))))கல்யாணக் கூடத்திலே நடுவிலே எடுத்துக்கட்டினு மேலே இருந்து காற்றும், வெளிச்சமும் வர, மேல் மாடியிலே ஜன்னல்கள் அமைத்து அதன் மேல் செங்கல்கள் வைத்துச் சுண்ணாம்பு பூசி எடுத்துக் கட்டி இருப்பார்கள்.  இது எத்தனைக்கெத்தனை உயரமாக உள்ளதோ அவ்வளவுக்குக் கீழே கூடம் குளிர்ந்து காணப்படும்.  மேலே இருந்து காற்றும் வீசும்.  இந்த எடுத்துக்கட்டியின் நடுவிலேதான் கல்யாணப்பெண்ணும் பிள்ளையும் அமர்ந்து கொண்டு கல்யாணம் செய்துப்பாங்க.  கூட்டம் அதிகமா இருந்தால் சிலர் மேலே மாடிக்குப் போய் ஜன்னல் அருகிலே உட்கார்ந்த வண்ணம் கல்யாணத்தைப் பார்ப்பார்கள்.

இது எல்லாம் நான் சின்ன, ரொம்பச் சின்ன வயசா இருக்கிறச்சே நடந்தது.  கல்யாணக் கூடத்திலே கல்யாணம், உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலே சாப்பாடுனு நடக்கும். எல்லா வீடுகளும் கல்யாண விருந்தினர்களை வரவேற்கும்படி பெரிதாக இருக்காதே!  அப்போ கல்யாணத்தை அவரவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், சமையல், சாப்பாடு இன்னொரு வீட்டிலே நடக்கும்.  மாப்பிள்ளை வீட்டினருக்கு இன்னொரு தெரிஞ்சவங்க வீட்டைக் கேட்டு வாங்கிப்பாங்க.  அந்த வீட்டுச் சொந்தக்காரங்களும் இதுக்கு ஒத்துழைப்பாங்க.  கல்யாணச் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறிகள், பழங்கள் எல்லாம் சமையல் நடக்கும் வீட்டிலேயே ஒரு அறையை ஒழித்து அதிலே சேர்த்து வைப்பார்கள்.  பொறுப்பாக ஒருத்தரிடம் மட்டும் அதற்கான சாவியைக் கொடுத்து வைப்பார்கள். கல்யாணத்திலே சமையல்காரர்களுக்கு மட்டுமல்லாது, இப்போ போல் அல்லாமல் அந்தக் காலத்திலே உண்மையாகவே சுற்றமும், நண்பரும் ஒரு மாதம் முன்னராகவே போயிடுவாங்களா, அன்றாடமே சில கல்யாண வீடுகளில் ஐம்பதிலிருந்து நூறு பேருக்குள்ளாகச் சாப்பிடுவாங்க. அப்போலே இருந்தே இந்த சாமான் அறையைப் பார்த்துக்கும் முக்கியஸ்தருக்கு வேலை ஜாஸ்தியாயிடும்.

தஞ்சை ஜில்லாவில் இதை உக்கிராணம் என்று அழைக்கின்றனர்.  சமையல்காரர்களே அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இந்த உக்கிராண அறைப் பொறுப்பைக் கொடுப்பதுண்டு.  இது சில சமயம் நன்மை என்றாலும் பெரும்பாலும் சரியாக வந்ததில்லை என்பதே என் கருத்தும் அனுபவமும்.  கல்யாணம் நடக்கும் வீட்டில் கல்யாணத்துக்குக் குறைந்தது பத்து நாட்கள் முன்னராவது முஹூர்த்தக்கால் நடுவது என்னும் விசேஷம் நடைபெறும்.  பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்ப ஒரு நல்லநாளைப் பார்த்துப் புரோகிதரைக் கூப்பிட்டு, வீடு முழுதும் புண்யாஹவசனம் செய்து, பின்னர் மூங்கிலில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடித்துத் தயாராக வைத்திருப்பார்கள்.  ஒரு சிலர் கல்யாண முருங்கை என்றும் சொல்கின்றனர்.  நுனியில் மாவிலைக்கொத்து வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து நுனியிலும் சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி வைத்திருக்கும்.  அநேகமாய் ஈசான்ய மூலையில் தான் முஹூர்த்தக்காலை நடுவார்கள்.  சில வீடுகளில் முஹூர்த்தக்கால் நடுவதற்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழியில் பால் ஊற்றுகின்றனர்.  சிலர் புண்யாஹவசன நீரை ஊற்றுகின்றனர்.  காசுகளும் போடுவதுண்டு.  இதெல்லாம் அவரவர் வீட்டு வழக்கம் போல் செய்வார்கள்.  முஹூர்த்தக்காலை நட்டானதும்,அதையும் சேர்த்தே பந்தல் போடுவார்கள்.  திருமணம் நடைபெறுவதற்குள்ளாக அது துளிர்க்கவும் ஆரம்பிக்கும்.  இப்போதெல்லாம் இந்த வழக்கம் மறைந்து வருகிறது.  பெரும்பாலான சத்திரங்களில் பந்தல் எப்போதுமே இருக்கிறது.  அதோடு சேர்த்து ஒரு காலை முஹூர்த்தக்காலாக நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள்.  அதுவே போதும் என்பதே பெரும்பாலானோர் எண்ணம்.

இதற்கு உறவினர்கள் அனைவரையும், முக்கியமாகப் பெண்ணுக்கு மாமா, அத்தை போன்றோரை அழைப்பதுண்டு.  பின்னர் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்.  சில வீட்டு வழக்கப்படி முஹூர்த்தக்கால் நட்ட பிறகு கல்யாணப்பெண் வெளியே எங்கும் செல்லக் கூடாது.  தங்கக் கூடாது என்பார்கள்.  பொதுவாகவே திருமணம் நிச்சயம் ஆனதும் விரைவில் திருமணத்தை நடத்துவது நலம் என்றாலும் தற்காலங்களில் சத்திரம், சமையல் கேட்டரர் என்பவர்களின் செளகரியத்தைப் பார்த்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் முஹூர்த்தத் தேதியை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது என்பதே உண்மை.  சரி, இப்போ முஹூர்த்தக்கால் நட்டாச்சு.  அடுத்து என்ன வேலைனு பார்க்கலாம். பக்ஷணங்கள் செய்யணும்.  வடாம், வற்றல் தயாரிக்கணும்.  அப்பளங்கள் தயார் செய்யணும்.  இப்போ எல்லாம் உடனுக்குடன் கிடைத்தாலும் அந்தக் காலத்தில் எப்படிச் செய்தார்கள்னு பார்க்க வேண்டாமா?

இந்தப் பெண், பிள்ளை நிச்சயம் ஆனதும் என்ன செய்யணும் என்பதைக் குறித்தும் பார்க்கப் போகிறோம்.  யாரும் அடிக்க வராதீங்கப்பா! :)))))))

Thursday, May 30, 2013

இது ஒரு பகிர்வு மட்டுமே!

பொதுவாய் நம் திருமணப் பழக்கங்களை எழுதினாலே கொஞ்சம் இல்லை, நிறைய வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும்.  இப்போ மாறி வரும் கலாசாரத்தில் பலருக்கும் அந்த நாளையத் திருமணப் பழக்கங்களே தெரியவில்லை என்பதோடு இப்போதைய திருமணங்களில் சில முக்கியமான பழக்கங்கள், சம்பிரதாயங்கள் முன்பின்னாகவும், முரணாகவும் நடைபெறுகின்றன.  இதை எல்லாம் நன்கு கவனித்துவிட்டே திருமண முறைகள் பற்றி மட்டுமில்லாமல், முக்கியமான திருமண மந்திரங்கள் குறித்தும் எழுத நினைத்தேன்.  மின் வெட்டு (இப்போ சில நாட்களாக இல்லை) கணினியில் தேடுதல் என்பதற்கேற்பப் பதிவின் போக்கு சில சமயங்களில் மாறி வரலாம்.  என்றாலும் கூடுமானவரை கோர்வையாகவே எழுத முயற்சிக்கிறேன்.

இன்னும் சிலர் எல்லாத் திருமணப் பழக்கங்களையும் கேட்டு எழுதச் சொல்கின்றனர்.  இயலுமா தெரியவில்லை. தமிழ்நாட்டிலேயே பிராமணர்களுக்குள்ளேயே மாவட்டத்துக்கு  மாவட்டம் வித்தியாசப் படும். ஆகவே பொதுவான திருமணப் பழக்கங்கள், திருமண மந்திரங்கள், கணவன், மனைவி உறவு குறித்த விளக்கங்கள் என்பதோடு மட்டுமே நிறுத்திக்க எண்ணம்.  இது பொதுவான ஒரு தகவல் குறிப்புக்களே தவிர எதையும், எவற்றையும் நியாயப் படுத்த வில்லை. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு.  ஆனால் நம் திருமண மந்திரங்கள் அர்த்தமற்றவை அல்ல.  குறித்த நேரத்தில் அதைக் குறித்தும் கூடியவரை விளக்கமாக எழுத ஆசை.  இதுவும் இப்போதெல்லாம் ஒரே நாளில் எனக் குறுகி விட்டது.  முன்னெல்லாம் 3 நாட்கள் இருந்தது போய், ஒரு நாள் திருமணத்தில் காலை, மாலை என இருந்ததும் போய் இப்போது காலை மட்டும் அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல என ஆகி இருக்கிறது.  இதற்கு நாமே முக்கியக் காரணம்.


அதோடு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறும் திருமண வழக்கங்கள் மாநிலத்துக்கு மாநிலம் இன்னமும் மாறி விடுகிறது.   வட நாட்டவர் வழக்கம் நம்மிடம் இல்லை.  நம் வழக்கம் வடநாட்டவரிடம் இல்லை.  தமிழ் நாட்டிலேயே மதுரையிலே உள்ள வழக்கம் தஞ்சை மாவட்டத்துக்காரர்களிடம் கிடையாது.  தஞ்சை மாவட்டத்து வழக்கம் ஆற்காடு மாவட்டத்திலே கிடையாது.  ஊருக்கு ஊர் சமையல் கூட மாறுபடும்.  ஆங்காங்கே மாறும்.  இப்படி மாறுவதைத் தெரிந்தவரை சுட்டுவதே குறிக்கோள்.

எனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலேயே அவற்றின் நம்பகத்தன்மை உறுதியாய்த் தெரிந்த பின்னரே பகிர்ந்து கொள்கிறேன்.  இது ஒரு பகிர்வு மட்டுமே!   இது ஆன்லைன் பதிவு! :)))))

Tuesday, May 28, 2013

டோலி சஜாகே ரக்னா!


கல்யாணப் பெண்ணுக்கு உடைகள் வாங்குகையில், திருமணம் ஆகிச் செல்லும் பெண் குறைந்தது ஆறு மாதத்துக்காவது புகுந்த வீட்டில் இருந்து எதையும் கேட்டு வாங்கும் வண்ணம் விட மாட்டார்கள்.  ஆறு மாதத்துக்கான உடைகளோடு, மற்ற அத்தியாவசியப்பொருட்களையும், வாங்கிக் கொடுப்பார்கள்.  இதில்பவுடர், சோப்பு, சீப்பு, குங்குமம், மற்ற அழகு சாதனப்பொருட்கள் போன்றவையும் அடங்கும். எல்லாத்துக்கும் முதல்லே துணி எடுக்கக் கடைக்குப் போனதும் முதலில் வாங்க வேண்டியது பிள்ளையார் வேஷ்டி.  அப்புறமா அவங்க அவங்க குல தெய்வத்துக்குச் சாத்த வேண்டிய துணிகளை வாங்கி விட்டுப் பின்னரே மணப்பெண்ணுக்கும், மற்றவர்களுக்கான துணிமணிகளும் வாங்க வேண்டும்.  அதே போல் பாத்திரங்கள்.  திருமணம் ஆகித் தனிக்குடித்தனம் போகும் பெண்ணாக இருந்தால் அதற்கேற்றாற்போல் பாத்திரங்கள் வாங்கிவிடலாம்.  ஒரு சிலர் பின்னர் தனிக்குடித்தனம் போவார்கள்.  அப்போத் தனியாகச் செய்ய வேண்டும் என சில பிள்ளை வீட்டினர் கேட்பார்கள்.  அப்படியான இடமாக இருந்தால் கல்யாணத்துக்கு வைக்கும் பாத்திரங்களிலேயே சிலவற்றைத் தனியாக எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் கொடுக்கலாம்.  அதோடு புகுந்த வீட்டுப் பழக்கங்கள், பூஜை முறைகள் போன்றவற்றிற்கு ஏற்ற மாதிரியான சில பாத்திரங்களும் வாங்கும்படி இருக்கும்.

உதாரணமாகப் பூஜை சாமான்கள் மணி, சூடத்தட்டு, தீபக்கால், தூபக்கால் போன்றவையும் வாங்குவார்கள்.  சமையல் பாத்திரங்கள் அந்த அந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் வாங்குவார்கள்.  இப்போது எல்லாம் மிக்சி, கிரைன்டர் போன்றவை, மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவையும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. வெளிநாட்டில் அவரவர் சக்திக்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்கவென கிஃப்ட் வவுச்சராகக் கொடுப்பார்கள்.  திருமணம் ஆன தம்பதியர் அந்த வவுச்சரின் தொகைக்கேற்பத் தாங்கள் வாங்க வேண்டிய தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வார்கள்.  நம் நாட்டிலும் இம்முறையைக் கடைப்பிடிப்பது நல்லது.  இதனால் பெண் வீட்டினருக்குப் பெருமளவில் சுமை குறையும். மஹாராஷ்டிரா திருமணங்களிலும், குஜராத்தியர் திருமணங்களிலும்  திருமணத்துக்கு நாம் கொடுப்பது பரிசோ பணமோ பொதுவிலே தான் கொடுக்க வேண்டும். பெண் வீட்டினருக்குத் தனியாக, பிள்ளை வீட்டினர் தனியாக என வாங்கும் வழக்கம் அங்கில்லை.  இது தெரியாமல் ஒரு முறை குஜராத்தியர் திருமணத்தில் நீங்க பெண் வீட்டினரா, பிள்ளை வீட்டினரா எனக் கேட்க, அவர்கள் சிரித்ததோடு அல்லாமல்,


"இந்தப் பணம், பரிசு எல்லாம் பிள்ளை, பெண் இருவரையும் சார்ந்தது. நாங்க மொத்தமாய் வாங்கி அவர்களிடம் கொடுத்துடுவோம்.  ஒரு பைசா கூடப் பெண்ணின் அம்மா, அப்பாவுக்கோ, பிள்ளையின் அப்பா, அம்மாவுக்கோ போகாது.  திருமணத் தம்பதிகளிடம் அப்படியே ஒப்படைப்போம்.  அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், குடும்பம் நடத்தவும் இந்தப் பணம் பயன்படும். "அப்படினு சொன்னார்கள்.  ஆச்சரியமாவே இருந்தது.  அதோடு வாங்கிக் கொடுப்பவர்களும் ஒருத்தருக்கொருத்தர் கலந்து பேசிக் கொண்டு எந்தப் பொருளும் இரண்டாம் முறையாக டூப்ளிகேட் இல்லாமல் வாங்கியும் கொடுக்கின்றனர். அல்லது பணமாய்க் கொடுத்து விடுகின்றனர். மஹாராஷ்டிராவில் திருமணத்துக்குப் பெண் வீட்டில் ஐம்பது பேர் என்றால் ஐம்பது பேர் தான்.  அதே போல் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர் தான் வரலாம்.  மொத்தம் நூறு பேர்தான் அழைப்பே கொடுப்பாங்க.  அழைப்பிதழ் யாருக்கெல்லாம் கொடுக்கணுமோ அதை முன் கூட்டியே தீர்மானித்துவிட்டு அதற்கேற்றாற்போல் அழைப்பிதழை அச்சிட்டுக் கொடுப்பார்கள்.  சமையல், சாப்பாடு எல்லாமும் அதற்கேற்றாற்போல் கச்சிதமாகவே இருக்கும்.  ஒரு நபர் கூட வந்தாலும் சரி, முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும் என்பதோடு யார் தரப்பில் வருகிறாரோ அவர்கள் செலவுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இப்போல்லாம் மாறி இருக்கிறதாவும் கேள்விப் படுகிறேன்.  எல்லாரையும் பார்த்துட்டு அவங்களும் ஆடம்பரத் திருமணத்துக்கு மாறி இருக்கலாம். ஆனால் இங்கே குடியேறிய மராட்டியர்கள் திருமணம் முன்னெல்லாம் பத்துப் பதினைந்து நாட்கள் நடந்ததாகவும், இப்போது மூன்று நாள் திருமணமாக ஆகி இருப்பதாகவும் கூறுகின்றனர்.  அதோடு மூன்று முறை தாலி கட்டுவார்கள் எனவும் சொல்கின்றனர்.  முதல் நாள் ஒரு கருகமணி வைத்த தாலி, பின்னர் இரண்டாம் நாள் இரண்டாம் தாலி மஞ்சள் கயிற்றில்.  இந்தத் தாலியைப் பிள்ளைக்குப் பெண்ணும் கட்டுவாராம்.  பெண்ணுக்குப் பிள்ளையும் கட்டுவாராம்.  இருவருமே ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வார்கள் என்கின்றனர்.  மூன்றாம் நாள் மீண்டும் இன்னொரு கருகமணி வைத்த தாலி பிள்ளை கட்டுவாராம்.  அப்போது பிள்ளையின் அம்மா பார்க்கக் கூடாது என்றொரு சம்பிரதாயம் இருப்பதாகவும், தாலி கட்டி முடிந்ததும், பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மாவைப் போய்த் திருமணப் பெண் போல் அலங்கரித்து அழைத்து வந்து மணமக்களை அவங்க மடியிலே உட்கார வைத்து, வேடிக்கை, விளையாட்டுனு நடக்கும் எனவும் சொல்கின்றனர்.  இதுக்குக் காரணம் இன்னொரு பெண் தன்னோடு பிள்ளையைப் பங்கு போட வந்துட்டாளேனு அவங்களுக்கு மனது சங்கடப்படும் என்று சொல்கின்றனர்.   அநேகமாய் இது குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கானதாகவும் இருக்கலாம்.  இது ஒரு பத்திரிகைச் செய்தியில் படித்தது.



ஆனால் பல வட இந்தியத் திருமணங்களில் பிள்ளையின் அம்மா சொந்தப் பிள்ளையின் திருமணத்தில் கலந்து கொள்வதில்லை.  பெரும்பாலானவர்கள் சொல்வது ஸ்ரீராமனின் திருமணத்திலும், அவர் தம்பியர் திருமணத்திலும் கோசலை, சுமித்ரை, கைகேயி மூவரும் கலந்து கொள்ளாததால் அதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறோம் என்கின்றனர்.  பெண்ணைத் திருமணம் ஆனதுமே பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.  முன்பெல்லாம் பல்லக்குகளில் அனுப்பி வைத்திருக்கின்றனர்.  இப்போதெல்லாம் விளம்பரங்களில் பார்ப்பதோடு சரி.  :))))

Monday, May 27, 2013

ஜாமூன் சாப்பிட்டேனா இல்லையா! தலையாய கேள்விக்கு பதில்! :))

டெல்லிவாலாதான் போக முடியலை. குறைஞ்சது அந்தப் பக்கத்து ஸ்வீட்டானும் சாப்பிடணும்னு எனக்குப் பிடிவாதம்.  அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நான் மசியவில்லை.  அண்ணாவுக்கும், தம்பிக்கும் கூட ஆசைதான்.  அப்பாவுக்குப் பயந்து வாயே திறக்கலை.  கடை ஊழியர் நான்கு கிண்ணங்களில் இரண்டிரண்டு ஜாமூன்களை ஜீராவோடு போட்டுக் கொண்டு வைத்துவிட்டார்.  எப்படிச் சாப்பிடறதுனு யாருக்கும் தெரியலை.  ஜீராவை முன்னாடி குடிக்கிறதா? இல்லை உருண்டைகளைச் சாப்பிட்டுவிட்டு ஜீராவைக் குடிக்கிறதா, வைச்சுடணுமா? எனக்கோ இரண்டும் வேண்டும்.  ஆகவே ஜாமூன்களை உடைத்து ஜீராவில் கலந்துவிட்டேன்.  உடனே அண்ணா, தம்பி இருவரும் அப்படியே செய்து சாப்பிட்டார்கள்.  அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.  அதுக்கப்புறமா மசால் தோசை சாப்பிட்டோம்.  எல்லாத்துக்கும் மேலே புத்தாண்டு சிறப்பாக சினிமாவுக்கு வேறே கூட்டிப் போறதா அப்பா சொல்லி இருந்தார்.  அந்த நாளைய வழக்கப் படி அம்மா ஹோட்டலுக்கெல்லாம் வரலை.  ஆகையால் அம்மாவுக்குப் போற வழியிலே வீட்டிலே போய்க் கொடுத்துட்டு வரலாம்னு அம்மாவுக்குப் பிடித்த கத்திரிக்காய், வெங்காய பஜ்ஜிகளை வாங்கியாச்சு.

எங்க தெருவழியாத் தாண்டியும் அப்போ கல்யாணப்பரிசு ஓடிட்டிருந்த கல்பனா தியேட்டருக்குப் போகலாம்.  பஜ்ஜியைக் கொடுக்க வேண்டியே அந்த வழியாவே போனோம். தெரு முக்கில் நாங்க நிற்க தம்பி ஓடிப் போய் வீட்டிலே அம்மா கிட்டே பஜ்ஜியைக் கொடுத்துட்டுத் திரும்ப ஓடி வந்தான்.  எங்கே விட்டுட்டுப் போயிடுவாங்களோனு பயம். :))) கல்யாணப் பரிசு சினிமாவுக்குப் போனால் அங்கே ஹவுஸ் ஃபுல்!  நாங்க தியேட்டருக்குப் போயிட்டிருந்தப்போவே அங்கிருந்து கூட்டமாக ஜனங்கள் வர படம் முடிஞ்சுதான் வராங்கனு நினைச்சு என்னனு கேட்டால் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வரும் மக்கள்னு தெரிஞ்சது.  எங்களுக்கு ஏமாற்றமாய் இருக்க, அப்பாவோ நல்லதாப் போச்சு, புது வருஷமும் அதுவுமா அழுகைப் படம் பார்க்க வேண்டாம்னு திரும்ப ஆரம்பிக்கத் தம்பியோ சினிமா இல்லைனும் ஏமாற்றத்தின் எல்லைக்கே போக, திடீர்னு அப்பா என்ன நினைச்சாரோ, வந்த வழியிலேயே போய்ப் பின்னர் தெற்கு கோபுரம் செல்லும் பாதையில் செல்ல ஆரம்பிக்க வீட்டைத் தாண்டி எங்கே போகிறோம்னு தெரியாமல் நாங்களும் கூடப் போக நியூ சினிமா வந்தது.



அங்கே அப்போ ஓடிட்டு இருந்த படம் "வீரபாண்டியக் கட்ட பொம்மன்," அப்பா கவுன்டருக்குப் போய்ப் படம் போட்டாச்சா? டிக்கெட் இருக்கானு கேட்க, அவரும் இப்போத் தான் நியூஸ் ரீல் ஓடுது, கல்பனா தியேட்டரில் ஃபுல்லுனு வந்தப்புறமாத் தான் இங்கே படம் போடுவோம்.  அங்கே டிக்கெட் கிடைக்காதவங்க இங்கே வர வாய்ப்பு இருக்கேனு சொல்ல, அப்பாவும் நல்லதாப் போச்சுனு அதுக்கு டிக்கெட் எடுத்தார்.  அப்போ கலர் படமே அரிதான காலத்தில் கேவா கலர் எனப்படும் கலரில் வந்த படம் வீரபாண்டியக் கட்டபொம்மன்.  அப்போல்லாம் கட்டபொம்மன் வரலாறு இவ்வளவு நன்றாகத் தெரியாது.  ஆகவே ரசித்தே பார்த்தேன். ஆகக் கூடி இம்மாதிரித் தான் எதிர்பாராமல் வீரபாண்டியக் கட்டபொம்மன் படம் பார்க்க நேரிட்டது.  அப்பா, அண்ணா, தம்பி எல்லாம் சிவாஜி ரசிகர்கள். எனக்குத் தான் அப்போலே இருந்து சிவாஜியைப்பிடிக்காது.  ஜெமினி படம் கொஞ்சம் பிடிக்கும் என்றாலும் அவ்வளவு ஆர்வம் இல்லை. சிவாஜி படத்துக்குப் பரவாயில்லைனு தோணும்.  ஆனால் வேறு வழியில்லாமல் அன்னிக்கு அந்தப் படம் பார்த்தேன்.

அதுக்கப்புறமா கல்யாணப்பரிசு படத்துக்குப் பின்னர் பாஸ் கிடைத்துப் போய்ப் பார்த்தோம், அம்மாவோடு.  தியேட்டரிலிருந்து வெளியே வரச்சே அம்மா முகமெல்லாம் அழுது வீங்கி இருந்தது பார்க்க அப்போ சிரிப்பா வந்தது.  அதுக்கப்புறமா நிறைய சிவாஜி படங்களைப் பார்க்க நேரிட்டிருக்கிறது.  என்னோட டாக்டர் சித்தப்பா (சின்னமனூரில் இருந்தார்) சிவாஜியின் ரசிகர் எனச் சொல்வதை விட வெறியர்னே சொல்லலாம்.  எங்க ரெண்டு பேருக்கும் இதை வைச்சு வாக்குவாதம் நடக்கும்.  சிவாஜியை விட உயர்ந்த நடிகர் இல்லைனு அவர் கட்சி.  நடிப்பா அதுனு என் கட்சி! :)))))  விபரம் தெரிஞ்சப்புறமா ரசிக்க முடியலை.  சித்தப்பாவாலே உயர்ந்த மனிதன் படத்தை மட்டும் குறைந்த பக்ஷம் பத்து முறை  பார்க்கும்படி ஆயிடுச்சு.  கட்டித் தூக்கிட்டுப் போய்த் தியேட்டரிலே உட்கார வைப்பார். :))))) விதியேனு பார்த்திருக்கேன்.  

Sunday, May 26, 2013

உன்னை முதன் முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தேன்!

ஹிஹிஹி, என்ன நினைச்சீங்க?? குலாப்ஜாமூனை முதன்முதலாகப் பார்த்தப்போ என்ன நினைச்சேனு சொல்லப் போறேன்.

ஹோட்டல்னு சொன்னதும் பல நினைவுகள்.  ஹோட்டலுக்கே போகாத எங்கள் குடும்பத்திலே திடீர்னு ஒரு ஜனவரி ஒண்ணாம் தேதி அப்பா எங்களை எல்லாம் ஹோட்டலுக்குக் கூட்டிப் போய் ஸ்வீட், காரம் வாங்கித் தரப் போவதாய்ச் சொன்னார்.  உடனே எனக்குள்ளே பல நினைவுகள், பல கனவுகள்.  ஹோட்டல்கள் வழியாய்ப் போகும்போதும் வரும்போதும் அங்கே உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள ஸ்வீட் வகையறாக்களைப் பார்த்துப் பெருமூச்சு, சிறுமூச்சு விட்டது உண்டு. இப்போ ஹோட்டலுக்கே போறோம்னதும் தலைகால் புரியலை.  வடுகக் காவல் கூடத் தெருவில் இருந்தோம் அப்போ.  அங்கிருந்து ஒரே ஓட்டமாய் மேலாவணி மூல வீதி பெரியப்பா வீடுக்கு ஓட்டமாய் ஓடி, அங்கே அறிவிப்புச் செய்தேன்.  ஏதோ பெரிய விஷயமே நடந்துட்டதாய், உலகமே தலைகீழாய் மாறி விட்டதாய் எனக்குள் நினைப்பு.  ஆனால் அங்கே எல்லாரும் சாதாரணமாய் எடுத்துக்கக் கொஞ்சம் ஏமாற்றம்னே சொல்லணும்.

அங்கிருந்து அதே தெருவின் பிள்ளையார் கோயில் வாசலில் தங்கள் நண்பர் குழாமுடன் (இவங்க நண்பர்கள் அனைவருமே இந்தப்பெயரில் தான் பழகினார்கள்) இருக்கும் மாமாக்களிடம் போய்ச் சொன்னேன்.  அவங்களும் சிரிச்சாங்க. சே, எவ்வளவு பெரிய விஷயம்,  யாருக்குமே இதன் அருமை புரியலை.  நாளைக்கு ஸ்கூலில் போய்ச் சொல்லணும்.  மனசுக்குள்ளே நினைச்சுக் கொண்டே வீடு திரும்பினேன்.  அன்னிக்குச் சாயந்திரமா ஹோட்டலுக்குக் கிளம்பினோம்.  ஒரே படபடப்பு, திகில் கலந்த எதிர்பார்ப்பு.  என்ன ஆர்டர் கொடுப்பது என எங்களுக்குள்ளாக ஒரு கலந்தாலோசனை.  வேறே உடை மாத்திக்கணும்னு எனக்கு ஆசை.  இதே பாவாடையோடயா போறது? ஆனால் அப்பா முழித்த முழியில் ஹோட்டல் ப்ரொகிராமே கான்சல் ஆகிவிடும் சாத்தியக் கூறு தென்பட்டதால் அடக்கிக் கொண்டு கிளம்பினேன்.

அப்பா முன்னே செல்ல பின்னால் நாங்கள் மூவரும் ஏதோ பெரிய முக்கியமான இடத்துக்கு அவார்ட் வாங்கச் செல்லும் மனோபாவத்துடன் தெருவில் இருந்த நண்பர்களை அலட்சியமாய்ப் பார்த்தபடி சென்றோம்.  தெருத் திரும்பி அப்பா அழைத்துச் சென்றது மேல மாசி வீதி மாடர்ன் லாட்ஜோ, அப்போ புதுசா மேல கோபுர வாசலில் வந்திருக்கும் வட நாட்டு இனிப்பு வகைகள் உள்ள புத்தம்புதுக்கடையான டெல்லிவாலாவோ  இல்லை.  வடக்காவணி மூல வீதியில் வழக்கமாய் சாம்பார் வாங்கும் சுமுஹ விலாஸ் ஹோட்டலுக்குத் தான் கூட்டிப் போனார். சொப்புனு உற்சாகம் குறைய அசடு வழிய உட்கார்ந்தோம்.  அங்கே என்ன இருக்கும்!  வழக்கமான பஜ்ஜி, சொஜ்ஜி தான்.  என்ன ஆனாலும் அதைச் சாப்பிடக் கூடாது.  சுற்றும் முற்றும் பார்த்த என் கண்களில் ஜீராவில் மிதக்கும் குலாப்ஜாமுன்கள் கண்களில் பட, (அதன் பெயரே அப்போத் தெரியாது.) எனக்கு அதான் வேண்டும்னு சொல்ல, அப்பாவுக்கு திக்.  அதெல்லாம் உனக்குச் சாப்பிடத் தெரியாது.  எதிலே பண்ணி இருக்காங்களோ!

Friday, May 24, 2013

மதுரை மல்லிகைப்பூ இட்லியின் கதை!

எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் ஹோட்டலில் சாப்பிடறதைப் பத்தி எழுதினதும் பல மலரும் நினைவுகள்.  என் தம்பி பிறக்கும் வரையிலும் நாங்க தாத்தா(அம்மாவோட அப்பா) பெரியப்பா(அப்பாவோட அண்ணா)  வீடுகளிலேயே மாறி மாறி இருந்ததால் எப்போவோ பார்க்கும் அப்பாவை, "மாமா" என்றே கூப்பிட்டுக் கொண்டிருந்தோம். அண்ணாவும், நானும் மாமானு கூப்பிட்டதை வேறு வழியில்லாமலோ என்னமோ அப்பா அநுமதித்திருந்தார். :))) ஆனால் தம்பி பிறந்ததும் அவரும் மாமானு கூப்பிடப் போறாரேனு நினைச்சு எங்களை "அப்பா" னு கூப்பிடச் சொல்லி பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். அப்போத் தான் அம்மா கல்யாணமான இத்தனை வருடங்களில் முதன் முதலாகத் தனிக் குடித்தனம் வைத்திருக்கிறாள்.  தம்பி கைக்குழந்தை.

அண்ணாவை சூரிய நாராயணா பள்ளியில் இருந்து வடக்காவணி மூலவீதியில் இருந்த(இருக்கும்??) பொன்னு ஐயங்கார் பள்ளியில் எனக்குத் துணைக்காகவும் சேர்த்து விட்டாச்சு.  ரெண்டு பேரும் ஸ்கூலிலேயும் போய் அப்பாவை மாமானு சொல்லப் போறாங்களேனும் அப்பாவுக்குக் கவலை.  அப்பானு கூப்பிடப் பயிற்சி கொடுத்த எங்க அப்பா எங்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் தயாரானார்.  அப்பானு கூப்பிட ஆரம்பித்தால் ஸ்வீட், காரம் வாங்கித் தருவேன்னு வாக்குறுதி கொடுத்தார்.  அதுவும் நரசிம்மன்னு ஒருத்தர் கிட்டே தவலை வடை வாங்கித் தருவதாகவும் வீட்டிலேயே அம்மாவை அல்வா பண்ணித் தரச் சொல்வதாகவும் ஆசை காட்டினார்.  நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மசிந்து கொண்டிருந்தோம்.  நடுவில் பெரிய குளத்திலிருந்து அத்தை, அத்திம்பேர் வந்து ராஜாபார்லியில் வெண்ணை பிஸ்கட் வாங்கிக் கொடுத்து அப்பாவுக்காகப் பிரசாரம் செய்தார்கள்.  ராஜாபார்லி வெண்ணை பிஸ்கட்னா அடிச்சுக்க வேறே கிடையாது.  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :(

திடீர்னு ஒரு நாள் முனிசிபாலிடியில் சுகாதார இன்ஸ்பெக்டராக இருந்த அம்மாவின் அத்தை பிள்ளை நரசிம்மன் என்பவர் வந்தார்.  அவரை, "நரசிம்மா," என்று பெயரெல்லாம் சொல்லிக் கூப்பிட்டு அப்பாவும், அம்மாவும் ஏதேதோ பேசிட்டு, தம்பிக்கும் எனக்கும் அம்மைப் பால் வைக்கச் சொன்னாங்க.  அவர் வந்திருந்ததே அதுக்குத் தானாம். நான் பிறந்ததும் ஒரு இடமாக இல்லாமல் அங்கே இங்கேனு அம்மா சுத்திட்டு இருந்ததிலே இந்தத் தடுப்புக்கள் எதுவுமே  செய்யலைனு தம்பி பிறந்தப்போ தான் வைச்சாங்க.  அவர் பெயர் நரசிம்மன்னு தெரிஞ்சதும், நானும் இவர் தான் தவலை வடை சப்ளையர்னு நினைச்சுட்டு, அசடு மாதிரி நாக்கில் ஜலம் ஊற அம்மை குத்திக் கொண்டேன்.  வந்த வேலை முடிஞ்சதும் அவர் கிளம்ப, நான் ,"அம்மா, அம்மா, தவலை வடை கொடுக்காமப் போறார், பாருனு" கத்த, அப்பாவும், அம்மாவும், அந்த நரசிம்மனும் ஒரு கணம் திகைக்க, அப்பா, அம்மா விஷயம் புரிந்து சிரிக்க, நரசிம்மன் திருதிரு.  அப்புறமா அம்மா அவரிடம் விஷயத்தை விளக்கிவிட்டு என்னிடம் இவர் அந்த நரசிம்மன் இல்லை.  அவர் வேறேனு சொல்லி விளக்கம் கொடுத்தாள்.

அதுக்கப்புறமாத் தவலை வடை நரசிம்மன் வந்து தவலை வடையும், காராவடையும்(இது மதுரை ஸ்பெஷல், மத்த ஊர்களில் பார்க்க முடியாது) கொடுத்துவிட்டுப் போனார்.  நாங்களும் வடைகளும், அல்வாவும் சாப்பிட்டுவிட்டு, மெல்ல மெல்ல அப்பாவை அப்பானு கூப்பிட ஆரம்பித்தோம்.  பொதுவாக அப்போல்லாம் ஜாஸ்தி ஹோட்டலுக்குப் போக மாட்டாங்க.  கல்யாணம் ஆகாதவங்க தான் ஹோட்டலில் சாப்பிடுவாங்க.  குடும்பமாக ஹோட்டலில் போய் சாப்பிடுவதை அப்போல்லாம் பார்க்கவே முடியாது.  இத்தனைக்கும் பெண்கள்/குடும்பம்னு போட்டுத் தனியாகவே அறை ஒதுக்கி இருப்பாங்க.  அப்படியும் யாருமே ஹோட்டலுக்குப் போய்ப் பார்த்ததில்லை. ஹோட்டலில் இருந்து எப்போவானும் அப்பா வாங்கி வருவார்.  வீட்டுக்குத் தான்.  வீட்டில் வைத்துச் சாப்பிட்டிருக்கோம்.  அதுவும் அம்மாவுக்கு முடியலைனா எட்டணாக் கொடுத்து சாம்பார் தான் ஜாஸ்தி வாங்குவாங்க.  அந்த டேஸ்டே தனி.  நல்லாவே இருந்தாலும் சாதத்தோடு சாப்பிட அத்தனை ருசிக்காது.  என்றாலும் நாங்க அந்த சாம்பாருக்கு தேவுடு காத்துட்டு இருந்து சாப்பிட்டிருக்கோம். ஆனால் அப்பாவும் ஒரு சமயத்தில் எங்களை ஹோட்டலுக்கு அழைத்துப் போக ஆரம்பித்தார்.

தானப்ப முதலி அக்ரஹாரத்திலிருந்து பிரியும் கருகப்பிலைக்காரச் சந்தில் ஒரு மாமா வீட்டிலேயே இட்லி போட்டுவிட்டு அதைத் தூக்கி வந்தும் கொடுப்பார்.  பஞ்சகச்சத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு தோள் துண்டை மடித்துத் தோளில் போட்டுக் கொண்டு, முடிந்த குடுமியோடு தோளில் துண்டின் மேல் ஒரு போசியில்(இப்போல்லாம் குத்தடுக்குனு சொல்றாங்க) இட்லிகளைப் போட்டுக் கொண்டு இடக்கையால் அதைப் பிடித்துக் கொண்டு, வலக்கையில் ஒரு தூக்கில் அடியில் தேங்காய்ச் சட்னியும், மேலே ஒரு கிண்ணத்தில் நைசாக அரைத்த மிளகாய்ப்பொடியில் எண்ணெயை ஊற்றியும் கொண்டு வருவார்.  அணாக்கள் புழக்கத்தில் இருந்த சமயம் அரை அணாவுக்கு இரண்டு அல்லது மூன்று இட்லிகள் வரை கிடைத்தது.  தொட்டுக்கச் சட்னி, அல்லது மிளகாய்ப் பொடி ஏதேனும் ஒன்று.  பைசா புழங்க ஆரம்பித்ததும், ஐந்து பைசாவுக்கு இரண்டு இட்லியாகப் பண்ணினார்.  எப்படி இவ்வளவு நினைவு இருக்குன்னா, ஐந்து பைசாவோடு ஒரு பைசாவைச் சேர்த்தால் ஆறு பைசாவை ஓரணா என்று அப்போச் சொல்லுவாங்க.  அரை அணாவுக்கு இரண்டு இட்லி கொடுத்தது போய் இப்போ ஆறு பைசாவுக்கு நான்கு இட்லினு கணக்குப் பண்ணினாக் கூட ஐந்து பைசாவுக்கு மூணாவது கொடுக்கணுமேனு அப்பா அவரிடம் வாக்குவாதம் பண்ணுவார்.


அவர் வீட்டுக்குப் போனால் நல்ல வாழையிலை போட்டு எண்ணெய், மிளகாய்ப் பொடி, சட்னி, சாம்பார்னு எல்லாத்தோடயும் கொடுப்பார்.  அதோட அங்கே கல்தோசையும் வார்த்துக் கொடுப்பார். தோசையை வீட்டுக்கு வேணும்னா அங்கே போய்த் தான் வாங்கிக்கணும்.  இட்லியோடு சேர்த்துக் கொண்டு வர மாட்டார்.  இவர் அப்புறமா அந்த வட்டாரங்களுக்குள்ளேயே பல வீடுகள் மாறி என் கல்யாணம் ஆனப்புறம் கூட நம்ம ரங்க்ஸுக்கும் அவர் கையால் இட்லி, தோசை என் தம்பி கூட்டிப் போய் வாங்கித் தந்திருக்கிறார்னா பார்த்துக்குங்க.  அப்போவும் இட்லி விலை அதிகம் இல்லை.  ஒரு ரூபாய்க்கு நான்கு இட்லிகள் தான்.   இப்போ கேரளாவின் ராமசேரி இட்லி ரொம்பப் பிரபலம்னு பேசிக்கறாங்க. அது பார்க்கக் கல்தோசை மாதிரித் தான் இருக்கு. :)))

இட்லி கூகிளார் கொடுத்தார்.  தவலை வடை நம்ம கைப்பக்குவம் தான்,  யோசிக்காமல் சூடா எடுத்துக்குங்க. :))))

Tuesday, May 21, 2013

கல்யாணச் சேலை உனதாகும் நாளை!


திருமணத் தேதி குறிக்கப்பட்டுப் பத்திரிகைகள் அடிக்கக் கொடுக்கிறோம்.  அதிலே குறைந்தது இரண்டு தலைமுறையைக் குறிப்பிட்டால் தான் நாம் அனுப்புபவர்களுக்கு யாரிடமிருந்து பத்திரிகை வந்திருக்கிறது என்பது புரியும்.  பிள்ளைக்குக் கல்யாணம் எனில் பிள்ளையின் தந்தை, மற்றும் தாத்தா பெயரும் பூர்வீக ஊரும் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.  ஒரு சிலர் பிள்ளையின் தாய்வழித் தாத்தா பெயரையும் குறிப்பிடுவார்கள்.  அதிலும் தவறு இல்லை.  ஏனெனில் பிள்ளையின் அம்மா வழி உறவினர்களுக்கு எளிதில் புரியும்.  அதே போல் பெண்ணுக்கும் தந்தைபெயர் மற்றும் தாத்தாக்கள் இருவரின் பெயர், அவர்களின் பூர்விகம் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.  கூடிய வரையில் பத்திரிகை எளிமையாக இருந்தால் நல்லது. சிவப்பு, மஞ்சள் கலந்த வழுவழுப்பான ஆர்ட் பேப்பரில் அச்சிட்டாலே போதுமானது.  அதிலேயே ஆங்கிலத்திலும் அச்சிட வசதி இருக்கிறது.



சிலநாட்கள் முன்னர் ஒரு அரங்கேற்றத்துக்குப் பத்திரிகை வந்தது.  குறைந்த பக்ஷமாக அந்தப் பத்திரிகையின் விலை ஐநூறு ரூபாயாக இருக்கணும். அவ்வளவு விலை உயர்ந்த பத்திரிகை.  இதில் எல்லாம் காசைப் போடுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது.  பத்திரிகை மங்களகரமாக இருந்தால் போதுமே!  அதுக்காகப் பெயர், விலாசம், கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வரும் வழி போன்றவை கூட அடிக்க முடியாத அளவுக்கு மோசமாவும் இருக்க வேண்டாம்.  அப்படியே தூக்கிப் போடணும் அவற்றை. :( அதுக்கப்புறமா "உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்" நபர்களின் பெயர்கள்.  இது தேவையே இல்லை. பெண் வீட்டுக்கார முக்கியஸ்தர்களும், பிள்ளை வீட்டின் முக்கியஸ்தர்களும் அனைத்து உறவினரின் நல்வரவைக் கட்டாயம் எதிர்ப்பார்க்கத் தான் செய்வார்கள்;  செய்கிறார்கள்.  இதிலே பெயர் போடவில்லை எனில் ஒவ்வொரு குடும்பத்தில் சண்டையே வருகிறது.  ஆகவே நல்வரவை எதிர்பார்க்கும், நண்பர்களும் உறவினர்களும் என்று பொதுவாகப் போட்டுடலாம். வம்பே இல்லை. ஒண்ணுமே போடலைனால் இன்னும் நல்லது.  அடுத்து மறுபடியும் ஜவுளியைப் பார்க்கலாம்.  அவ்வளவு சீக்கிரம் இது முடியாது.



பெண்ணிற்குக் கூறைப்புடைவை பொதுவாகப் பிள்ளை வீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு.  ஆனால் பெரும்பாலான பிள்ளை வீட்டினர் அதை ஒத்துக் கொள்வதில்லை.  முன்பெல்லாம் என்னோட பெரியப்பா பெண்கள் கல்யாணத்தில் எல்லாம் பெண் வீட்டில் மணப்பெண்ணுக்குப் புடைவை எடுப்பது என்பது ஒன்றோ அல்லது இரண்டோ தான் இருக்கும். ஊஞ்சல் புடைவையும், சாந்தி கல்யாணப்புடைவை என்ற முதலிரவுப் புடைவையும் தான் இருக்கும்.  மற்றப் புடைவைகள் நிச்சயதார்த்தம், கூறைப்புடைவை, நலுங்குப் புடைவை, கிரஹப்ரவேசப் புடைவை போன்ற நான்கு புடைவைகளும் பிள்ளை வீட்டிலேயே எடுப்பார்கள்.  ஏனெனில் பெண் கல்யாணம் ஆகி அவங்க வீட்டுக்கு வரப் போகிறாள்.  வீட்டுக்கு அழைக்கும் பெண்ணைப் புதுப்புடைவையோடு மங்கலப் பொருட்களைக் கொடுத்துத் தான் அழைப்பார்கள்.  அதோடு கூறைப் புடைவை மிகவும் முக்கியம்.  அதை முஹூர்த்தத்தின் போது பிள்ளைதான் பெண்ணிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டு வரச் சொல்லுவார்.  இது குறித்துப் பின்னாலும் வரும்.  அந்தப் புடைவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்குப் பிள்ளை எடுத்துக் கொடுப்பதாகவே ஐதீகம்.  ஆகவே தான் பிள்ளை கையால் கொடுக்கச் சொல்லுவார்கள். அப்போது சொல்லப் படும் மந்திரங்களும் இதையே அறிவுறுத்தும். ஆனால் இன்றைய நாட்களில் அதையும் பெண் வீட்டினரே எடுக்கின்றனர்.

அடுத்து விளையாடல் எனப்படும் நலுங்குப்புடைவை.  இதை நாத்தனார் தான் செய்ய வேண்டும் என்பார்கள்.  நலுங்கு என்பது பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் கூச்சம் விலகிப் பழகிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சடங்கு.  இதைப் பெண்ணின் நாத்தனார் தான் ஏற்பாடு செய்வதாக ஐதீகம்.  ஆகவே நலுங்குக்கான சாமான்களும், விளையாட்டுப் பொருட்களும், நலுங்குக்கான புடைவையும் அவள் தான் வாங்குவாள்.  தன் சகோதரன் அவன் மனைவியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும்.  அதற்குத் தான் போடும் இந்த அச்சாரம் நன்மையாக இருத்தல் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவள் தன் சகோதரன் மனைவிக்குப் புடைவை, வளையல், அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள், மங்கலப் பொருட்கள் என வாங்கித் தருவாள். இதன் மூலம் அவளுக்கு சகோதரன் மனைவியிடம் நெருக்கம் அதிகரிக்கும்.  கல்யாணப் பெண்ணுக்கும் நாத்தனாரிடம் அன்பு ஏற்படும். கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்கும் இப்படி இரு;குடும்ப உறவுகளையும் ஒன்றுக்கொன்று பிணைப்பதாகவே இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் எல்லாப் புடைவைகளையும் பெண் வீட்டிலேயே எடுக்கின்றனர்.  இதனால் அவர்களுக்குச் சுமை கூடத்தான் செய்கிறது.  ஆனாலும் இப்படித்தான் நடக்கிறது.  கூறைப் புடைவையைக் கூடப் பிள்ளை வீட்டினர் ஒத்துக் கொள்வதில்லை. தஞ்சாவூர்ப் பக்கம் கிரஹப்ரவேசப் புடைவையும் கூடப் பெண் வீட்டிலே தான் பெண்ணுக்கு எடுக்க வேண்டும். ஆனால் சாஸ்திரப் படி பிரமசாரியானவன் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்ததுமே தன் திருமணத்திற்கான செலவை தானமாகத் தான் பெற வேண்டும்.  முன் காலங்களில் அரசர்களிடமோ அல்லது அரசரின் பிரதிநிதிகளிடமோ பெற்று வந்தனர். இதிலிருந்து பிள்ளை வீட்டினருக்கே திருமணச் செலவு என்பது புரிய வரும். இந்தக் காலங்களில் அது இயலாது என்பதால் முடிந்தவரை விவாகச் செலவைப் பிள்ளை வீட்டினரும் பகிர்ந்து கொள்ளலாம்.



இருங்க, இருங்க, இன்னும் துணிமணி எடுத்து முடியலை.  பெண்ணுக்கும் பிள்ளைக்கும் எடுப்பதோடு முடியற விஷயமா இந்த ஜவுளி எடுப்பது!!!! அடுத்துப் பரிவார தேவதைகளுக்கு எல்லாம் எடுக்கணுமே!  இதான் ரொம்பவே கஷ்டமான விஷயம். பெண் வீட்டில் பெண்ணைத் தவிர பெண்ணின் அம்மா, அத்தை, அப்பாவின் தம்பி அல்லது அண்ணன் மனைவியர், அம்மாவின் கூடப் பிறந்தவர்கள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கும்.  அதே போல் பையர் வீட்டிலும் இருக்கும்.  ஆக இந்த ஜவுளி விஷயத்தில் மட்டும் யாருமே தப்பிக்க முடியாது.  முன்னாலெல்லாம் இப்படி இல்லைனு என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.  முக்கியமாய்ப் பெண்ணின் அத்தை, பிள்ளையின் அத்தை, பெண்ணின் மாமி, பிள்ளையின் மாமி ஆகியோருக்கு மட்டுமே எடுப்பார்களாம்.  அதுவும் இரண்டு மூன்று அத்தைமார், மாமிமார் இருந்துவிட்டால் பணமாக ஓதிக் கொடுப்பார்களாம்.  பெண்ணுக்கு அத்தை அப்பக்கூடை வைப்பது என்றொரு வழக்கம் உண்டு.  அது பெண்ணின் அத்தை செய்வதால்  அவங்களுக்கு பதில் மரியாதையாகப் பிள்ளை வீட்டார் ஏதோ பணம் கொடுத்து வந்தது போய் இன்றைய  தினம் பட்டுப்புடைவையில் வந்து நிற்கிறது.  அதே போல் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் அவரவர் மாமா வீட்டு ஆசீர்வாதப் பணம் தான் முதலில் தருவாங்க.  அப்போ மாமாக்களுக்கும், பதில் மரியாதை உண்டு.  அது இன்று மாமாவுக்கும், மாமிக்கும் துணி எடுப்பதாக ஆகி விட்டிருக்கிறது.

அதைத் தவிரவும் தெரிந்தவர்கள், முக்கிய உறவினர்கள் என ஒரு சூட்கேஸ் நிறைய வேட்டி, புடைவைகளை வாங்கி வைத்துக் கொண்டு விநியோகம் செய்வதும் உண்டு. இது கொடுத்தாலும் கஷ்டம்;  கொடுக்கலைனாலும் கஷ்டம்.  பெரும்பாலும் நாம் கொடுப்பது வாங்கிக்கிறவங்களுக்குப் பிடிக்காது.  வேறே வழியே இல்லாமல் வாங்கிப்பாங்க.  நமக்கோ பெரிய செலவு செய்துட்டோமேனு இருக்கும்.  ஆக இப்படி இருபக்கமும் மனம் வருத்தம் அடைவதைத் தவிர்க்கலாம். கட்டாயமாய் மரியாதை செய்ய வேண்டியவங்களுக்குப் பணமாகக் கொடுத்துடலாம். என்ன வேணுமோ அதை வாங்கிப்பாங்க.  நமக்கும் கல்யாணச் சத்திரத்துக்கு மூட்டை தூக்கும் சுமை இல்லை.  முன்பெல்லாம் இதைக் கல்யாணத்தின் போது முதல்நாள் காலை அல்லது மாலை சாஸ்திரிகளிடம் கொடுத்து ஓதிக் கொடுக்கச் சொல்வார்கள்.  இப்போதெல்லாம் அவசரம்+நாகரிகம் கலந்து பத்திரிகை கொடுக்கும்போதே பாக்கு, பழம், பூவோடு புடைவை, வேஷ்டியையும் வைத்துக் கொடுத்துவிடுகின்றனர்.  இப்படி ஒரு வழக்கமே கிடையாது. பத்திரிகை கொடுக்கையில் மஞ்சள் கலந்த அல்லது குங்குமம் கலந்த அக்ஷதை தான் பத்திரிகையின் மேலே வைத்துத் தருவார்கள்.  இப்போதெல்லாம் அக்ஷதை கொண்டு வருவதே இல்லை.


Sunday, May 19, 2013

பிறந்த நாள், நான் பிறந்த நாள் இன்றில்லை தொண்டர்களே! :)))

வலை உலக ரசிகப் பெருமக்கள் அனைவரும் இன்னிக்கு என்னோட பிறந்தநாள்னு 62  அடி கேக் வெட்டி, 62 முறை அலகு குத்திண்டு, 62 தீச்சட்டி எடுத்து, 62 முறை மண் சோறு சாப்பிட்டு, 62 கோயில்களில் அபிஷேஹ ஆராதனைகள் பண்ணுவதாக அறிய வந்தது.  இன்னிக்கு என்னோட பிறந்த நாள் இல்லை.


இன்னும்சில தினங்களில் வரப்போகும் பிறந்த நாளுக்கு மறுபடி இவை எல்லாத்தையும் தொண்டர்கள், குண்டர்கள்  எல்லாரும்  செய்யறதோடு 62 வகை ரத்தினங்களை, 62 வளையல்களில் பதித்து 62 கிலோ எடை தங்கத்தோடு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.  மேலும் அன்பளிப்புகளாக  விவாஹா, பிரைடல் செவன், வஸ்த்ரகலா போன்றவையும் வரவேற்கப் படுகின்றன.  வகைக்கு 62 போதும்.

தலைமைக்கழகத்திலிருந்து வந்த செய்தி!

விளக்கம் தேவையில்லை! :)))))








Saturday, May 18, 2013

"அப்"பு டேட்ஸ்! புத்தம்புதியது!

அப்புவுக்கு மே 2 ஆம் தேதி பிறந்த நாள்.  அன்னிக்கு ஸ்கூல் இருந்ததாலே அவங்க அம்மா, அப்பா, நாலாம் தேதியன்னிக்குப் பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க. :)) யு.எஸ்ஸிலே இதான் வழக்கம்.  தீபாவளியோ, பொங்கலோ, கார்த்திகையோ வார நாட்களில் வந்தாக் கூட சனி, ஞாயிறு தான் கொண்டாடுவாங்க.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அப்பு பிறந்த நாளன்னிக்கு ஸ்கூல் போயிருக்கு  அதனால் மறுநாள் தான் வாழ்த்துச் சொன்னோம். அப்போவே எங்களிடம் நாளைக்கு பார்ட்டி, நீங்க ரெண்டு பேரும் வாங்கனு கூப்பிட்டது. ம்ம்ம்ம்ம்ம் எங்கே!  அப்போத் தான் அவ அம்மா, ஏற்கெனவே ஒரு கடிதம் முன் கூட்டியே எழுதி அனுப்பி இருக்கிறதாச் சொன்னாள். அப்பு வார்த்தைகளாகக் கோர்வையாக எழுத ஆரம்பிச்சிருக்கிறதாவும் சொன்னாள். இது அப்பு கிட்டே இருந்து எழுத்தில் வந்த முதல் கடிதம். இன்னும் கணினி கிட்டே எல்லாம் விடலை. விட்டால் மெயிலும் அனுப்ப ஆரம்பிச்சுடும். :))))

இது ஒரு பொக்கிஷம்! :)))))

Monday, May 13, 2013

உப்பு வாங்கலையோ உப்பு!



அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?

அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!

மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.

அன்ன தானம்
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர். 

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.


எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.

2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. 

Sunday, May 12, 2013

டிடிக்காகப் பட்டினத்தாரும் வந்துட்டார்!


தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் 2

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை.
அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர். தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.



ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத்-தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும்,
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே! என அழைத்த வாய்க்கு?

அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே! என அழைத்த வாய்க்கு?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

வேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ!-மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையேநோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?

வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!//


அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.


http://geethasmbsvm6.blogspot.in/2012/04/2.html

பட்டினத்தார் குறித்து மேலும் படிக்க மேற்கண்ட சுட்டிக்குச் செல்லவும்.  நன்றி. அன்னையர் தினத்தை ஒட்டிப் பட்டினத்தாரின் அன்னை இறந்தபோது நிகழ்ந்தவை குறித்து மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்.

சங்கர ஜெயந்தியும், அன்னையர் தினமும்! ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ!


அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:

"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?

அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?

பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?

அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?

ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?

அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?

அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?

அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?

அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?

அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"

ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.

"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:

குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"

சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளுக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது.

ஆதி சங்கரரே அன்னையர் தினம்னு ஒண்ணை ஆரம்பிச்சிருப்பாரோ? :)))))))




Thursday, May 09, 2013

ராமா கல்யாணமே வைபோகமே! சீதா கல்யாணமே வைபோகமே!


காமிராவை வெர்டிகலா வைச்சு எடுங்கனு வெங்கட் (நாகராஜ்) சொன்னதாலே அப்படி எடுத்தப்போக் கூட ராமரோட ஒரு பக்கத்திலே இருக்கும் விக்ரஹமும், கீழேயும் ஒரு பக்கத்து விக்ரஹங்கள் மட்டுமே வருது.  இன்னும் கொஞ்சம் பின்னால் போகணும் ஹவுடினி மாதிரி! :)))))))





பின்னாலே எங்கே போறது? மூணடி?? மூன்றரை அடி பாசேஜ்! பின்னால் சுவர் தான். :))))  சுவத்தை ஊடுருவிக் கொண்டு ஹவுடினி மாதிரிப் போக முடியலை.

கல்யாணம் நிச்சயம் செய்தப்புறமா செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடலாமா?

முதல்லே பத்திரிகை அடிக்கக் கொடுக்கணும்

தொலைதூரத்தில் இருக்கும் உறவினர், நண்பர்கள் விலாசங்கள் சேகரிக்கணும்.

அடுத்துப் பத்திரிகைகள் வந்ததும், கிட்ட இருக்கிறவங்களுக்குக் கல்யாணத்துக்குப் பதினைந்து நாட்கள் முன்னாடி கொடுக்கிறாப்போலும், தூரத்தில் இருக்கிறவங்களுக்கு, முதலில் ஒரு போஸ்ட் கார்ட், இப்போல்லாம் தொலைபேசி மூலம் தெரிவித்து, அவங்க வரவை உறுதி செய்து கொள்வது நல்லது.  ரயிலிலோ, விமானத்திலோ, பேருந்திலோ வரவங்க அவங்க பயணச்சீட்டை உறுதி செய்துக்க வசதி.  அப்புறமாப் பத்திரிகையை கையால் எழுதிய ஒரு அழைப்புக் கடிதத்தோடு அனுப்பி வைக்கணும்.  அதுக்கும் இப்போல்லாம் ப்ரின்ட் அவுட் எடுத்துக் கையெழுத்து மட்டும் போடறாங்க சிலர் அதுவும் போடறதில்லை.

பத்திரிகைகளில் விலாசம் எழுதி, ஸ்டாம்ப் மறக்காமல் ஒட்டி அனுப்ப என்றெ இரண்டு பேரைத் தனியா நியமிக்கணும்.

அடுத்துத் துணிமணிகள்.  முதல்லேயே அவசியமா வாங்க வேண்டியவை கல்யாணப் பெண்ணுக்கு என்ன என்ன என முடிவு செய்துக்கணும்.  ஒவ்வொருத்தர் கல்யாணம் வரைக்கும் ஒரு பட்டுப் புடைவை கூட எடுத்திருக்க மாட்டாங்க.  அப்படின்னா இப்போ நிறைய எடுக்கிறாப்போல் ஆயிடும்.  ஆகவே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணு, ரெண்டு பட்டுப் புடைவை கைவசம் இருந்தால் கல்யாணத்தின் போது கட்ட வசதியாக இருப்பதோடு (இரவல் கேட்க வேண்டாம்) கல்யாணத்தின் புடைவைச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.  எப்படியும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றிரண்டு எடுப்பாங்க என்பதால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு என எடுத்தால் போதுமானது. (இது என் தனிப்பட்ட கருத்துப்பா, சண்டைக்கு வராதீங்க, பட்டுப்புடைவை என்னிக்கோ கட்டுவது கொஞ்சமா இருந்தால் போதும்னு என் எண்ணம்)  கல்யாணப்பெண்ணுக்கு உள்ளாடைகளில் இருந்து துண்டுகள், கைக்குட்டைகள், அழகு சாதனப்பொருட்கள், என எல்லாத்துக்கும் மறக்காமல் முடிவு செய்து செலவுத் திட்டத்திலே சேர்த்துடணும்.

அடுத்து மாப்பிள்ளைக்கு நீங்க வாங்கப் போற வேஷ்டி வகையறாக்கள். இவையும் வீட்டுப் புரோகிதரைக் கலந்து கொண்டு எப்படி வாங்கணும்னு கேட்டுக் கொண்டு வாங்கலாம்.  காசியாத்திரைக்கு உள்ள சாமான்கள், குடை, புத்தகம், செருப்பு, கம்பு போன்றவையும் இதில் அடங்கும். இப்போதெல்லாம் சமையல் ஒப்பந்தக்காரர்களே இவை கொடுத்துவிடுகின்றனர்.  ஆகவே தெரியலையே, விட்டுப் போச்சே என்ற பதட்டம் இருக்காது. :)

இதுக்கு அடுத்துப் பாத்திரங்கள், பக்ஷணம், அப்பளம், கருவடாம் போன்றவை.
இங்கே நல்லா வெயில் காயுது! யாரெல்லாம் கருவடாம் போட ரெடியா இருக்கீங்க?  அதுக்கப்புறமா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பக்ஷணம் செய்தால் போதும்.  அதுக்கு அடுத்தாப்போல் வருவோம்!  இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு. 

Wednesday, May 08, 2013

தென்னிந்தியத் திருமணப் பாடல்கள் தொடர்ச்சி!




ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஸ்ரீராமனும் மணமகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்

கெளரி கல்யாண வைபோகமே 
விருத்தம்
-----------
க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து
பல்லவி
--------
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே - 2 times
சரணம்
--------
வசுதேவ தவ பாலா
அசுர குல காலா
சசிவதன ரூபிணி
சத்யபாம லோலா -
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கொத்தோட வாழை மரம்
கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

மாலை சார்த்தினாள்
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால் -
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பில

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்

கன்னூஞ்சல்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
மனமகிழ்ந்தாள் 
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் 

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...
உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...
அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்

ரத்ன ஊஞ்சல்
ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்
முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட
சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன
மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்
பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன

ஆடிர் ஊஞ்சல்
விந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி
விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி
அந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே
அபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்
இந்திரையும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட
சந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட
தும்புரு நாரதரும் வீணை மீட்ட
ஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்
நலங்கிட வாரும் ராஜா
நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட
பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட
எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட

நலங்கிடுகிறாள் மீனலோசனி
நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாதருடன் கூடி
நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாரதரும் வந்து கானங்களை பாட
நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்
சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
சுந்தரேசர் கையில் கொடுத்து
பூபதி பாதத்தில் விழுந்து
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்
சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
சுந்தரேசர் மேலே தெளித்தாள்
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள்
போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம்
பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
பந்திபந்தியாய் பாயை விரித்து
உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்
மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
அந்தணர்களும் முன்பந்தியிலே
அணிஅணியாக அவரவர் இடத்தில்
அழகாய் இருந்தார்
அகல்யை திரௌபதி சீதை தாரை
மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்
மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி
இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்
பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்
பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
தயிர் வடையும் பால் போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷா இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்
பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி
பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
பார்த்துப் பரிமாறினார்

பொதுவான சில கல்யாணப்பாடல்கள்

ஸ்ரீராமா ஜெய ஜெய
ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணாநிதே ஜெய ஜெய
தில்லையில் வனம் தனிலே
ராமர் வந்த நாளையிலே
ராமரோட சேனையெல்லாம்
ராமரைக் கொண்டாட

சங்கு சக்ரம் தரித்துக் கொண்டு
தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
கோதண்டம் தனைப் பிடித்து ராமர்
கோலாகலமாய் இருந்தார்
ஜனகரோட மனையில் வந்து
சீதையுடைய வில்லை முறித்து
ஜானகியை மாலையிட்டார்
ஜனகர் அரண்மனை தனிலே
ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணா நிதே ஜெய ஜெய
மன்மதனுக்கு மாலையிட்டாயே
மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி-மன்மதனுக்கு
மன்மதனுக்கு மாலையிட்டு
மாலைதனைக் கைப் பிடித்து
கனகநோன்பு நோற்றது போல்
கிடத்தது பாக்யமடி-மன்மதனுக்கு
செந்தாழை ஓடையிலே
மந்தாரை பூத்தது போல்
இந்திரனோ சந்திரனோ
சுந்தரனோ இவர்தானடி-மன்மதனுக்கு

Monday, May 06, 2013

எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்! முழுப்பாடலும், வெங்கட் நாகராஜுக்கு நன்றியுடன்!


சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
     எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் 
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் 
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி
எங்கள் சம்மந்தி
ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
            எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்


வெயில் காரணமாவோ என்னவோ ஒரே வயிற்று வலி. அதோடு மின்சாரப் படுத்தல், இன்வெர்டரே உயிரை விட்டுடுச்சு. ஹிஹிஹி, வேறே மாத்தறாப்போல் ஆயிடுச்சு. நேத்திக்கு ஒரே அமர்க்க்க்க்க்க்க்க்க்களம்! :)))) ராத்திரி உங்களை எல்லாம் மின்சாரத்தைக் கொடுத்துத் தூங்க விடமாட்டோம்னு ஒரே அடம். கேட்டால் ஆங்காங்கே கொள்ளை, கொலை, திருட்டுனு நடப்பதால் மக்கள் விழிச்சுட்டு இருக்கட்டும்னு இப்படி ஒரு ஏற்பாடுனு சொல்றாங்க. :)))))))))))))))))