எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 12, 2013

டிடிக்காகப் பட்டினத்தாரும் வந்துட்டார்!


தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் 2

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை.
அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர். தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.



ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத்-தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும்,
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே! என அழைத்த வாய்க்கு?

அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே! என அழைத்த வாய்க்கு?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

வேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ!-மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையேநோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?

வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!//


அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.


http://geethasmbsvm6.blogspot.in/2012/04/2.html

பட்டினத்தார் குறித்து மேலும் படிக்க மேற்கண்ட சுட்டிக்குச் செல்லவும்.  நன்றி. அன்னையர் தினத்தை ஒட்டிப் பட்டினத்தாரின் அன்னை இறந்தபோது நிகழ்ந்தவை குறித்து மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்.

20 comments:

 1. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. பட்டினத்தார் திரைப்படம் (TMS) அப்படியே கண்முன் வந்து சென்றது... என்னே பாடல்...!

  இதை இதை இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்...

  மிக்க நன்றி அம்மா...

  அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. 2007 ஜனவரி 1 அம்மா...

  ...

  ...

  (இன்றும் என்றும் என் மனதில்)

  ReplyDelete
 4. இந்தப் பாடல்களைப் படிக்கும்போது கண்ணில் நீர் வருகிறது. DD TMS பற்றி நினைவு கூர்ந்துள்ளார். TMS தற்சமயம் சீரியஸ் கண்டிஷனில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்கிறது செய்தித்தாள்.

  ReplyDelete
 5. பட்டினத்தார் திருவிழா பூம்புகார் பல்லவனேச்சரம் கோவிலில் நடக்கும்.திருவெண்காடு கோவிலில் பட்டினத்தாரின் அம்மா முக்குளம் நீராடியது, பட்டினத்தாரைப் பெற்றது, பின் பட்டினத்தாருக்குத் திருமணம் பேசுவது எல்லாம் திருவெண்காட்டில் விழாவாக நடக்கும்.பட்டினத்தார் பிள்ளையை(மருதவாணரை) எடைக்கு எடை பொன் கொடுத்து வாங்கும் நிகழ்ச்சி எல்லாம் பல்லவனேச்சரத்தில் விழாவாக நடக்கும்.
  பட்டினத்தாரின் தாய் உடம்பு சரியில்லாமல் போவது, வைத்தியர் வந்து பார்ப்பது, பின் தாயார் இறந்தவுடன் பூம்புகார் கடற்கரையில் தகனம் செய்வது எல்லாம் விழாவாக நடக்கும். ஆனி மாதம் என்று நினைக்கிறேன்.நாங்கள் திருவெண்காடில் இருக்கும்போது திருமணவிழா, பிள்ளை நிறுத்து வாங்கும் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறேன்.
  முற்றும் துறந்த முனிவர் ஆனாலும் தாய்ப் பாசத்தை துறக்க முடியாது என்பதற்கு, சங்கரர், பட்டினத்தார் நல்ல எடுத்துக்காட்டு.
  ஐயப்ப விரதம் இருக்கும் போது யார் கால்களிலும் விழுந்து வணங்க மாட்டார்கள். அம்மாவை வணங்க மட்டும் விதி விலக்கு உண்டு..
  அன்னையர்தின சிறப்பு பதிவு அருமை.திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 6. மிகவும் ரசித்துப் படித்தேன். நன்றி.

  எல்லாம் துறந்தவர் அம்மாவின் உறவைப் பற்றியது முரணாக இருந்தாலும் எனக்கு ஓகே.

  ReplyDelete
 7. //டிடிக்காகப் பட்டினத்தாரும் வந்துட்டார்!//


  டிடி அப்படின்னு எதைச் சொல்றேள்னு புரியல்லையே

  ...

  டிடிக்காக பட்டினத்தார் (உம்) வந்துட்டாரா /?

  nothing could be done.

  அது எப்படி வேணா போகட்டும்.


  அன்னை தின வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 8. வருகைக்கு நன்றி ராஜராஜேஸ்வரி

  ReplyDelete
 9. வாங்க டிடி, முதல்லே இதைப் போடத்தான் நினைச்சேன். அப்புறமா மாத்தினேன். நீங்க கேட்டதும் இதையும் பகிர்ந்துட்டேன். :)))))

  ReplyDelete
 10. 2007 ஜனவரி 1???? புரியலை டிடி. :(

  ReplyDelete
 11. வாங்க ஸ்ரீராம், டிஎம் எஸ் பற்றிய செய்தியைப் படிக்கவில்லை. குணம் அடையப் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 12. வாங்க கோமதி அரசு, முற்றிலும் புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். ஒரு தரமாவது பார்க்க ஆசை. நடக்குமா தெரியலை. மிக்க நன்றி.

  ReplyDelete
 13. அப்பாதுரை,
  எல்லாம் துறந்தாலும் தாய் என்னும் உறவு மட்டும் துறக்க முடியாதது என்பது தான் ஆதிசங்கரர், பட்டினத்தார் மூலம் நாம் தெரிந்து கொள்வது. அதற்காகவே துறவறம் ஏற்றுக் கொண்ட பின்னர் தாயைப் பார்க்கக் கூடாது என்றும் சிலர் விதித்திருக்கின்றனர். தந்தை கூட துறவறம் ஏற்ற மகனை நமஸ்கரித்து வணங்கலாம், ஆனால் தாயை துறவறம் ஏற்ற மகன் வணங்கலாமே ஒழிய தாய் வணங்க முடியாது; கூடாது. :))))

  ReplyDelete
 14. வாங்க சூரி சார், முந்திய பதிவைப் படிச்சிருந்தா புரிஞ்சிருக்கும்.

  நம்ம டிடி என்ற திண்டுக்கல் தனபாலன் முந்திய பதிவில் பட்டினத்தார் பற்றியும் கேட்டிருந்தார். அதைச் சொன்னேன். :))))) வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 15. அம்மா என்னை விட்டு சென்ற தினம்...

  ReplyDelete
 16. 2007 ஜனவரி 1 அம்மா

  திண்டுக்கல் தனபாலன் அவர் அம்மா என்றும் மனதில் வாழ்ந்து இருப்பார் என்கிறார்.

  ReplyDelete
 17. @டிடி, ரொம்ப மன்னிச்சுக்குங்க, விஷயம் தெரியாமல் கேட்டுட்டேன். :((((( என்றாலும் அம்மா என்றும் மனதில் இருப்பார் நிரந்தரமாக. அந்த இடத்தை எவராலும் நிரப்ப இயலாது.

  ReplyDelete
 18. நன்றி கோமதி அரசு,

  நன்றி தீக்ஷிதரே, அடிக்கடி ப்ரசன்ட் சொல்லுங்க, இல்லைனா வருகைப் பதிவேட்டில் தெரியாது. :))))))

  ReplyDelete
 19. அன்னையர் தினப் பதிவாக வெளியிட்டது அருமை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்கள் முன்பே படித்திருந்தாலும் it was good to refresh. கோமதி அரசு கொடுத்துள்ள தகவல்கள் அறியாதது. நன்றி. ஊரில் இல்லாததால் முன்பே வரமுடியவில்லை.

  ReplyDelete
 20. வாங்க ஜிஎம்பி சார், அதனால் என்ன? உங்களுக்கு முடியறச்சே வந்து கருத்துச் சொல்றீங்களே, அதுவே பெரிய விஷயம். ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete