எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 24, 2014

கால் தான் திப்பிசம் பண்ணுதுனா மூளை கூடவா?

அப்பாடா, ஒரு மாசமாச்சு, இணையத்துக்கு அவ்வப்போது வந்தாலும் தொடர்ந்து உட்கார முடியலை.  காலில் பிரச்னை.  வலி நிவாரணிகளை எடுத்துக்க மருத்துவர் தடை செய்திருப்பதால் அரை மணி உட்கார்ந்தா ஒன்றரை மணி படுக்கை.  :) இதுக்கு நடுவிலே சமையல், சாப்பாடு, இத்யாதி, இத்யாதி!

அப்புறமா ரொம்ப யோசிச்சு ஆயுர்வேத மருத்துவர் கிட்டே போனேன்.  அவர் மருந்துகள் கொடுத்ததோடு கடுமையான உணவுக் கட்டுப்பாடும் சொல்லி இருக்கார். நேத்து ராத்திரி தூக்கம் சரியில்லைனாலும், காலில் கணிசமாகப் பிரச்னை குறைஞ்சிருக்கு.  என்றாலும் இன்னமும் முழுதும் சரியாகலை.  நாளாகும்னு சொல்லிட்டார்.   ஆனால் பாருங்க,  என்னோட பதிவைப் படிக்க முடியாமல் ரசிகப் பெருமக்கள் எல்லாம் தவிப்பாங்களேனு அவ்வப்போது வந்து மொக்கை போஸ்ட் மட்டும் போட்டுட்டுப் போறேன்.   பல மடல்கள் பார்க்கவே இல்லை.  இனிமேல் தான் பார்க்கணும்.  போற அவசரத்திலே இப்போ சில திப்பிச வேலைகள் சொல்லவா?  இதுக்கெல்லாம் எழுதி வைச்சுக்காமப் பத்தே பத்து நிமிஷத்திலே ஆன்லைனிலே கிறுக்கிட்டுப் போயிடலாம்! :)))))


1.மாவடு ஊறுகாய் போடறீங்களா?  மாவடு தீர்ந்து போய் அந்த ஜலம் மட்டும் மிச்சம் இருக்கா?  கவலை வேண்டாம்.  கொஞ்சம் ஜலத்தை எடுத்து ஒரு வாளியில் விட்டு நீர் கலந்து பித்தளை, வெண்கலத்தை ஊற வைங்க!  அரை மணி கழிச்சு எடுத்துத் தேய்ச்சால் பித்தளையும் வெண்கலமும் தங்கம் போல் பளபள!

மாவடுக்கு மேல் ஜலம் நிறையவே இருக்கும்.  ஆகவே பித்தளை, வெண்கலம் தேய்ச்சால் கூட ஜலம் மிச்சம் இருக்கும் தான்.  அதை என்ன பண்றதாம்?  ஒண்ணும் வேண்டாம்!  ஒரு கிலோ பச்சைச் சுண்டைக்காய், ஒரு கிலோ மணத்தக்காளிக்காய், ஒரு கிலோ மிதுக்க வத்தல் காய்(துமட்டிக்காய்) வாங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சுண்டைக்காயையும், துமட்டிக்காயையும் மட்டும் கொஞ்சம் கீறி விட்டுட்டுத் தனித்தனியாக எல்லாவற்றையும் மாவடு ஜலத்தில் ஊற வைங்க. தினம் கிளறி விடவும். ஒரு வாரத்துக்கப்புறமா எடுத்து வெயிலில் காய வைங்க.  காரம் இன்னும் வேணும்னா ஜலம் முழுசும் வற்றும் வரை அதிலேயே திரும்பத் திரும்பப் போடலாம். இந்த வற்றலை வறுத்துச் சாப்பிட்டுப்பார்த்தால் அப்புறமா இதுக்காகவே மாவடு ஊறுகாய் போட ஆரம்பிப்பீங்க!  வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்றவையும் வாங்கி அலம்பி நறுக்கி ஒரு நாள் வெயிலில் காய வைச்சுட்டுப் பின்னர் மாவடு ஜலத்தில் ஊற வைக்கலாம்.   நம்ம ரங்க்ஸ் பச்சை மிளகாயை இப்படிப் போடலாமானு ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்டிருக்கார்!  இந்த வருஷத்து மாவடு ஜலம் தேமேனு உட்கார்ந்து இருக்கு; பார்க்கலாம்!

2.ரவா உப்புமா, அவல் உப்புமா, சேமியா உப்புமா போன்றவை எல்லாம் பாவப்பட்ட உணவுகள்.  அதிகம் வேண்டப்படாத உணவுகள்.  என்றாலும் பண்ணுவீங்க தானே?  என்ன?  மிஞ்சிப் போறதா?  ம்ஹூம், இதுக்கெல்லாமா கவலைப்படறது?

உங்க வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு ஒன்றிரண்டு உருளைக்கிழங்கு வேக வைச்சு எடுத்துக்குங்க.  ப்ரெட் இருக்கா வீட்டிலே?  இருந்தால் 2 ஸ்லைஸ் ப்ரெட் எடுத்துக்குங்க.  இரண்டையும் நன்கு பிசைங்க.  லேசாக கால் டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, பச்சைக் கொத்துமல்லி (இருந்தால்) சேர்த்துக்குங்க.  மிச்ச உப்புமாவோட இந்தக் கலவையை நன்கு கலக்குங்க.  தோசைக்கல்லில் இதைக் கட்லெட் மாதிரித் தட்டி  இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு வேக வைங்க. 

தக்காளி சாஸோட சாயந்திரம் குழந்தைங்களுக்குப் புது டிஃபனா இதைக் கொடுக்கலாம்.  தக்காளி சாஸ் இல்லைனா நாலைந்து பேரிச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைச்சு ஒரு ஸ்பூன் மி.பொடி, ஒரு ஸ்பூன் உப்பு,  கொஞ்சம் வெல்லம் ஆகியவற்றோடு மிக்சியில் நன்கு அரைத்து வறுத்த ஜீரகப் பொடியைப் போட்டுக் கலக்கி வைத்துக் கொண்டு அதை விட்டுக் கொடுக்கலாம்.

பச்சைக்கொத்துமல்லி இருந்தா சட்னி அரைச்சு அதுவும் சேர்க்கலாம்.  என்ன ஒரு முக்கியமான விஷயம்னா இது காலம்பர செய்த உப்புமானு உங்களுக்கும், எனக்கும் மட்டுமே தெரிந்ததாய் இருக்கணும்.  உப்புமா சாப்பிடாமல் தட்டிக் கழிச்சதுக்குப் பழி வாங்கினாப்போலயும் ஆச்சு; உப்புமாவும் வீணாகாது.  இதே மாதிரி அவல் உப்புமா, சேமியா உப்புமா போன்றவற்றையும்  இதே போலத் திப்பிச வேலை செய்யலாம்.


3.போன வருஷத்து ஆவக்காய் மிஞ்சிப் போயிருக்கா?  அதுக்கும் கவலைப்பட வேண்டாம்.  உங்க வீட்டிலே அது பழசுனு வெறுத்து ஒதுக்கினவங்களைச் சாப்பிட வைக்கலாம்.


ஒரு கிண்ணத்தால் மிச்சம் இருக்கும் ஆவக்காய் ஊறுகாயை அளந்துக்குங்க.
அல்லது பாட்டிலில் முக்கால் பாட்டில் இருந்தால் அதைக் கணக்கு வைச்சுக்குங்க. 

கால் கிலோவுக்குக் குறையாமல் பாகு வெல்லத்தை எடுத்துக் கொஞ்சமா நீர் சேர்த்து அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சுங்க.  மிளகு பதம் வந்ததும் கீழே இறக்கிப் பாகை ஆற வைங்க.  ஆறிய பாகில் ஆவக்காய் ஊறுகாயைப் போட்டு நல்லாக் கிளறுங்க.  கொஞ்சம் சோம்பு(வேண்டுமென்றால்), கொஞ்சம் ஜீரகம் (கட்டாயம்) வறுத்துக் கொண்டு அந்தப் பொடியை அந்த ஊறுகாயில் போட்டு நல்லாக் கிளறுங்க.

குஜராத்தி டைப் ஊறுகாய் இதுனு சொல்லிச் சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்குத் தொட்டுக்க வைச்சுக்கலாம்.  எப்படிப் பண்ணினேன்னு கேட்டால் மட்டும் வாயே திறக்கக் கூடாது!  ஆமாம், சொல்லிட்டேன்! :)))))

17 comments:

  1. இந்த வற்றலை வறுத்துச் சாப்பிட்டுப்பார்த்தால் அப்புறமா இதுக்காகவே மாவடு ஊறுகாய் போட ஆரம்பிப்பீங்க!

    ~ பலே! பலே! நல்ல 'தலையை சுத்தி மூக்கு' ரெசிப்பி!

    ReplyDelete
  2. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

    நல்ல குறிப்புகள் தந்துள்ளீர்கள்.
    வேலை அதிகம் வரமுடியவில்லை முடியும்போது தொடர்வேன்.

    ReplyDelete
  3. வெறுத்தவர்களையும் விட்றதயில்லே... அதானே...!

    ReplyDelete
  4. வாங்க "இ" சார், ஹிஹிஹி, ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாங்க மாதேவி,

    இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. மெதுவா வாங்க. எல்லோருக்கும் பிரச்னைகள் இருக்கத் தான் செய்கிறது. உங்க ஓய்வு நேரத்தைப் பொறுத்து வாங்க. வரவுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  6. வாங்க டிடி, அதெல்லாம் யாரும் வெறுக்கிறதில்லை. :))))) என்னால் தான் திரும்பி அன்பைக் காட்ட முடியறதில்லை. :(

    ReplyDelete
  7. அனைத்தும் மிகவும் பயனுள்ள குறிப்புகள். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி மேடம். உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. உடம்புக்கு என்ன ஆச்சு? கவனிச்சுக்கோங்க.

    ReplyDelete
  9. துமட்டிக்காய் - பெயரே சிரிப்பு வருது இல்லே! :))))))

    நான் உங்கள் வீட்டுக்கு வரும்போது ஆவக்காய் மட்டும் சாப்பிட மாட்டேனே...

    ReplyDelete
  10. இணையம் இருக்கட்டும்... உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  11. ஹாஹா டிடி, வெறுத்து ஒதுக்கினவங்களயுமானு கேட்டிருந்தால் நீங்க சாப்பிடவே மாட்டேன்னு அறிவிச்சுட்டீங்களே ஶ்ரீராம்!

    டிடி கிட்டே சமாளிச்சேன். இங்கே என்ன சொல்றது? ம்ம்ம்ம்ம்ம்ம்?????

    ReplyDelete
  12. ஓகே, நஷ்டம் உங்களுக்குத் தான். ஆவக்காய் ஒவ்வொரு வருஷமும் புதுசாத் தான்போடறேன். இப்போல்லாம் மிஞ்சறதில்லை! :)))) அதனால் சாப்பிடலைனா உங்களுக்குத் தான் நஷ்டம் போங்க! :))))) அதோட ரங்க்ஸுக்கு உடம்பிலே ஷுகர் ஃபாக்டரி இருக்குங்கறதை மறந்துட்டீங்களே! :)

    ReplyDelete
  13. மதுரைப்பக்கம் மிதுக்க வத்தல்னு சொல்வாங்க ஶ்ரீராம், அது துமட்டிக்காய்னு இன்னொருத்தர் சொன்னார். துமட்டிக்காய்னா புரியுமேனு அப்படி எழுதினேன். :))

    ReplyDelete
  14. ஏயப்பா. எவ்வளவு விஷயம். ஆவக்காயை நானும் வெல்லம் செலுத்தி ஆம்சத்னு செய்தேன். சந்தேகத்தோடே சாப்பிட்டார்கள்.:)
    அம்மா புதிசாச் செய்யலை. பழைய வாசனையும் வருதுன்னு மூக்கு சிங்கம் சொல்லித்து. எனிவே ஊறுகா நோ நோ. படிக்க மட்டும் ஜாலி.

    ReplyDelete
  15. பித்தளைக்கு எங்கே போறது? (பல் தேச்சு பார்க்கலாமா? பல்லு பளிச்சுனு ஆகுமா?)

    உப்புமா மிச்சமானா உருளைக்கிழங்கு சேத்து கட்லெட் பண்ணலாம்.. ஆனா, அந்த கட்லெட்டே மிச்சமானா என்னமமா செய்யுறது?...

    ReplyDelete
  16. திப்பிச வேலைகள்..... :)))

    சொன்ன அனைத்தும் அதே அதே!

    சில முயற்சிக்க தூண்டுகிறது.

    ReplyDelete
  17. எனக்கும் ஊருக்கு போய் வந்ததிலிருந்து பாதம், கால்வலி உள்ளது. சிறிது நேரம் வெந்நீரில் கால்களை வைத்துக் கொண்டு இருந்தால் இரவு கொஞ்சம் தூக்கம் வரும்.

    திப்பிச வேலை அருமை.
    மிதுக்குவத்தலை தான் துமட்டிக்காய் என்று சொன்னீர்களா?

    ReplyDelete