எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 15, 2014

அம்மாமண்டபத்தில் ஓர் காலைப் பொழுது!

நேத்து ஒரு வேலையா பாரத ஸ்டேட் வங்கிக்குப் போக வேண்டி இருந்தது.  குறிப்பிட்ட வேலை சம்பந்தமாக நாங்க பார்த்த பெண்மணி, "உட்காருங்க, பத்து நிமிஷத்திலே எல்லாம் ரெடி பண்ணிட்டுக் கூப்பிடறேன்!" னு சொன்னாங்க. ரங்க்ஸ், "எப்போவுமே இப்படித் தான் சொல்லுவாங்க.  லேசில் கூப்பிடமாட்டாங்க!" னு முணுமுணுத்தார்.  இருவருமாய்ப்போய் உட்கார்ந்து ஐந்தே நிமிஷத்தில் கூப்பிட்டுட்டாங்க.  தேவையான கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கொஞ்ச நேரம் பொறுத்திருக்குமாறு வேண்டிக் கொண்டார்.  குரலிலேயே தாமதம் ஆவதற்கான மன்னிப்புக் கேட்கும் தொனி புரிந்தது.

பின்னர் மீண்டும் ஐந்து நிமிஷத்தில் அழைத்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டார். பனிரண்டரைக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம்.  பிரயாண நேரத்தையும் சேர்த்து 40 நிமிஷத்தில் வேலை முடிந்துவிட்டது.  ஆச்சரியம் இல்லையா? இப்படி எல்லாவற்றிலும் மாற்றங்களை எதிர்பார்ப்போம். 

இன்னிக்கு அம்மாமண்டபம் படித்துறைக்குப் போயிருந்தோம்.  அங்கே இருக்கிற கோவில்லே ஒரு வேலை. அது பத்திக் கேட்டுட்டு, சிராத்தம் செய்வதற்காக ஆற்று மணல் எடுத்து வந்தார் ரங்க்ஸ்.  காவிரிக்கரை ஓரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.  அதிலும் அம்மாமண்டபத்தில் குளிக்க வரும்பொது ஜனங்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி முடியாது.  எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் பைகள், கேன்கள், துணிகள் எனக் கரையோரமாகக் கால் வைக்க முடியாதபடி இருக்கும். கரையோரங்களில் அவற்றை எல்லாம் தோண்டி எடுத்துக் குவித்துக் கொண்டிருந்தது புல்டோசர்.  இன்னும் கொஞ்சம் மணலின் மேடு பள்ளங்களையும் செப்பனிட்டுச் சமன் செய்தால் தண்ணீர் வந்தால் ஓட வசதியாக இருக்கும்.

அம்மாமண்டபத்தில் நின்றிருக்கையில் விதவிதமான ஜனங்கள் மூத்தோர் கடன் செய்வதைப் பார்த்தேன்.  பெரிய சதுரமாக வாயில்கள் வைத்துக் கோலம் போட்டு நடுவில் ஒரு மண்டபம் மாதிரி வாயில்களோடு வைத்து அதிலே சுற்றியும் சின்னச் சின்ன மண் குடுவைகளை வைத்து நூல் போட்டுக் கட்டி ஏதோ பரிகாரம்(?) செய்திருந்தனர்.  இம்மாதிரிச் செய்வதை இன்று தான் புதிசாய்ப் பார்க்கிறேன்.  போகும் எண்ணம் இல்லாததால் கிளம்புகையில் காமிராவோ, செல்பேசியோ எடுத்துச் செல்லவில்லை.  இல்லைனா ஃபோட்டோ எடுத்திருக்கலாம். :(

அதைத் தவிர ஆங்காங்கே இலையில் அரிசி, வாழைக்காய், காய்கள், வெல்லம், துணிமணி, தேங்காய் எனக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  சிலர் பித்ரு கடன் செய்து கொண்டிருந்தனர்.  அவங்களைச் சுற்றிக் குடும்ப உறுப்பினர் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.  ஓர் இடத்தில் இன்னும் திருமணம் ஆகாத முதிர் கன்னர் ஒருத்தர் எல்லா தோஷமும்  நீங்க வேண்டிப் பரிகாரம் செய்து கொண்டிருந்தார்.  பின்னர் ஒரு வாழைக்கன்றை அலங்கரித்து ஒரு மண் தொட்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வாழைக்கன்றுக்குத் திருமாங்கல்யதாரணம் செய்தார்.  அதன் பின்னர் ஏதேதோ மந்திரங்கள் சொல்லி விட்டு, வாழைக்கன்றைத் திருமாங்கல்யம் கட்டியதற்குக் கொஞ்சம் கீழே அரிவாளால் சீவி விட்டார். இதெல்லாம் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.  பார்த்ததில்லை.  இன்று பார்க்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது.  படம் எடுத்தால் என்ன சொல்வாங்களோ!  சிலருக்குப் பிடிக்காது.  எப்படியாயினும் கையில் ஒண்ணும் இல்லை.  கையை வீசிக் கொண்டு போயிருந்தேன்.

அந்த முதிர்கன்னருக்கு இப்போவே 40 வயசுக்குக் குறையாது! :( சீக்கிரம் கல்யாணம் ஆகப் பிரார்த்தித்துக் கொண்டேன். 


அம்மாமண்டபம் நான் எடுத்த படம் கிடைக்கவில்லை.  படத்துக்கு நன்றி கேஆர் எஸ்! :)

இப்போது தான் இரு நிமிடங்கள் முன்னர் ஒரு பெண்மணி, சென்னை, ராகவேந்திரா ஜ்வல்லர்ஸிலே இருந்து கூப்பிடறதாயும், என்னோட அலைபேசி எண்ணுக்கு ஒரு பவுனுக்கு அமெரிக்கன் டயமன்ட் பதித்த மோதிரம் விழுந்திருக்கிறதாயும், அதை வாங்க வேண்டியும், குறிப்பிட்ட விழாவுக்காகவும் 5,000/- ரூ அனுப்பும்படியும் தொலைபேசி அழைப்பு. கடுமையாகத் திட்டிட்டு வைச்சேன். இது மாதிரி அழைப்புக்கள் நிறையவே வருகின்றன.  பிஎஸ் என் எல்லில் புகாரும் கொடுத்தாச்சு!  ஆனாலும் நிற்கவே இல்லை. 

19 comments:

  1. தாங்கள் குறிப்பிட்ட குடுவைகள் வைத்த பரிகாரம் செய்வினை தோஷத்துக்காக இருக்கலாம்..இப்போதெல்லாம் இவை ரொம்பவே பணம் பிடுங்குவதற்குரிய வழிகளாகிவிட்டன.. உண்மையிலேயே கவனமாக ஆராய்ந்து சொல்வது போக, ஏற்கெனவே பிரச்னையில் அவதிப்படும் மக்களை 'அது இது' என்று பயமுறுத்தி, தோஷம் கழித்தால் எல்லாம் சரியாகும் என்று சொல்லிச் செய்ய வைத்து விடுகிறார்கள். உண்மையிலேயே இது மாதிரியான தோஷங்களில் அல்லலுறுபவர் ஒரு சிலரே.. முறையாக, குடும்ப பாரம்பரியத்தில் கடைபிடித்து வரும் வழிபாடுகளைச் செய்தாலே போதுமானது.. தாங்கள் குறிப்பிட்ட 'வாழைமர' பரிகாரம் இப்போது பலரும் செய்வதை பார்க்கிறேன்.. களத்திர தோஷப் பரிகாரம் இது.. சமீப காலமாக இந்த பாதிப்பு அதிகரித்தும் வருகிறது..இன்னது தான் காரணம் என்று சொல்லத் தெரியவில்லை. இறைவன் தான் காக்க வேண்டும்!..

    ReplyDelete
  2. அம்மா மண்டபம் என்று கேள்விப் பட்டிருக்கேன். இந்தத் தலைப்பில் சுஜாதா கூட ஒரு சிறுகதை எழுதி இருக்காரோ! பார்த்ததில்லை. சுத்தமாக வைத்துக் கொள்ள நம் மக்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்!

    ReplyDelete
  3. என்றைக்குத்தான் நம் மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்களோ. ?

    ReplyDelete
  4. பார்வதி சொல்வது போல செவ்வாய் தோஷம்,ராகு இந்தக் கிரஹப் பரிகாரமாகப் பெண்களுக்கும் செய்வதுண்டு, பெண்ணே ஒரு அம்மா கையால் தாலிகட்டிக் கொண்டு எடுத்துவிடும் நிகழ்ச்சியையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.கொடுமை மா.ஆனால் தவிப்பவர்களுக்கு ஏதாவது செய்தால் போதும் என்ற நிலைமையில் செய்கிறார்கள்.செய்வினை எனும் சொல்லே பயங்கரமாக இருக்கிறது.நல்லவேளை படம் எடுக்காமல் விட்டீர்கள்.கீதா அந்தப் பக்கம் கூடப் போகாதீர்கள்.

    ReplyDelete
  5. மாற்றுவது சிரமம்... மாறுவதும் சிரமம்...

    ReplyDelete
  6. தோஷ பரிகாரங்கள் இப்போது பெருகிதான் விட்டன! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. பரவாயில்லையே சுத்தம் செய்கிறார்களா.... மீண்டும் கிலோ கணக்கில் அசுத்தம் செய்ய தயாராக மனிதர்கள் - தினம் தினம் அங்கே வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே....

    ReplyDelete
  8. நீங்கள் சொல்வது போல் மக்களின் கஷ்டங்களைப் புரிந்து அதை வைத்துப் பணம் செய்கிறவர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். என்ன செய்வது?......

    ReplyDelete
  9. அம்மா மண்டபத்தில் செல்பேசி இல்லாததால் படமெடுக்க முடியாமல் கவலை. வீட்டுக்கு வந்து செல்பேசியை எடுத்ததும் அனாவசிய அழைப்புகளினால் தொல்லை. அடாடாடா..... இந்த செல்பேசி தொல்லையை தாங்க முடியலப்பா

    ReplyDelete
  10. வாங்க பார்வதி, நானும் அப்படித்தான் இருக்குமோனு நினைச்சேன். :)

    ReplyDelete
  11. ஆமாம், ஶ்ரீராம், சுஜாதா கதை இருக்கு. சம்மானா இது ராணி மங்கம்மா இல்லை. திருமலை நாயக்கரின் அம்மாவாம். அவங்க நினைவில் கட்டிய மண்டபம்.

    ReplyDelete
  12. வாங்க ஜிஎம்பி சார், சிந்தனை இல்லைனு சொல்ல முடியாது.

    ReplyDelete
  13. வல்லி, பார்க்கவே பரிதாபமாக இருக்கு.படம் தான் எடுக்கவே இல்லையே! இப்போ வரப் போற ஆடி அமாவாசைக்குக் கூட்டம் தாங்காது.

    ReplyDelete
  14. வாங்க டிடி, மாறுவது என்பது நல்ல விஷயத்தில் மட்டும் இருக்கணும். தேவையான மாறுதல்கள் நன்மையே தரும்.

    ReplyDelete
  15. வாங்க சுரேஷ், கருத்துக்கு நன்றி,

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், அன்னிக்குச் செய்துட்டு இருந்தாங்க. அப்புறம் என்ன நிலைனு தெரியலை. :)

    ReplyDelete
  17. வாங்க ராஜலக்ஷ்மி, இது எல்லாம் ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது.

    ReplyDelete
  18. மாடிப்படி மாது, நாங்க அலைபேசியைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவோம். சில சமயங்களில் காமிராவை எடுக்க முடியாத சமயங்களில் அலைபேசி மூலம் படம் எடுப்பதுண்டு.

    ReplyDelete
  19. ஏமாற்றும் உலகம்.

    ReplyDelete