எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 31, 2016

அரங்கனோடு ஒரு மணி நேரம்!

நான் இருக்கேனான்னு நிறையப் பேர் வந்து பார்த்திருக்காங்க. இரண்டு நாட்களாக இணையம் வரலை. வந்தபோதும் பின்னூட்டங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு மூடிட்டேன். நேத்திக்கு ரஞ்சனி நாராயணன் தொலைபேசிப் பேசினாங்க. அப்போ அவங்களுக்கும் இம்மாதிரிப் பிரச்னை இருந்ததாகச் சொன்னாங்க. ஆனால் அவங்க கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்திருக்காங்க. எனக்கு அதெல்லாம் இல்லை. மருத்துவர் கூடக் கேட்டார்; இதுக்கு முன்னே வேறே எங்கானும் அறுவை சிகிச்சை நடந்திருக்கானு! ஏற்கெனவே என் கண்ணை அவங்க கிட்டேக் கடந்த நாலு வருஷமாக் காட்டிட்டு வரேனே! மறந்திருப்பாங்க போல!

ரஞ்சனி இது ரொம்பச் சின்ன விஷயம்னும் இதுக்காகக் கவலை வேண்டாம்; இணையத்தை ஒதுக்க வேண்டாம்னு சொன்னாங்க. ஒரு சின்ன லேசர் ஆபரேஷன் அவங்களுக்குச் செய்தாங்களாம். எனக்கு எங்க மருத்துவர் அதெல்லாம் இப்போ வேணாம்னு சொல்லிட்டாங்க. பார்க்கலாம்! சில சமயம் வருது. இன்னிக்குப் பெரிய ரங்குவையும் நம்பெருமாளையும் பார்க்கப் பல நாட்கள் கழிச்சுப் போனோம். கும்பாபிஷேஹத்துக்கு அப்புறமா ஒரே முறை போனது.  தைத் தேருக்கு வீதியில் இருந்தே பார்த்துட்டு வந்துட்டோம். இன்னிக்குத் தான் கொஞ்சம் அவகாசம் கிடைத்துப் போனோம்.  முதலில் வடக்கு வாசல் போய்த் தாயாரைப் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு சடாரியும் சாதித்துக் கொண்டு மஞ்சள் பிரசாதம் பெற்றுக்கொண்டு பெருமாளைப் பார்க்க வந்தோம். தாயாரை எப்போவும் போல் இலவச தரிசனம் தான். பெருமாளைப் பார்க்க  வழக்கம் போல் சுத்து வழி தான்.  ஆனால் கூட்டம் இல்லை. பெருமாள் ஜாலியாக் காத்தாடிட்டு இருந்தார். நாங்க தான் அசடு மாதிரி டிக்கெட் வாங்கிட்டுப் போனோம். எல்லோரும் டிக்கெட்டே இல்லாமல் போயிட்டிருந்தாங்க. நின்று நிதானமாக நல்ல தரிசனம் என்பதோடு சந்நிதியிலேயே துளசிப் பிரசாதமும் கிடைத்தது.  நம்பெருமாள் முகத்தை மூடிக்கொண்டு ஓர் ஆபரணத்தை அணிந்து அது வழியாச் சிரிச்சுட்டு இருந்தார்.  திருவிழாவெல்லாம் முடிஞ்சு நம்பெருமாள் ஆசுவாசமாக இருந்தார்.  பக்கத்தில் உபய நாச்சியார்கள்.  கொஞ்சம் மேலே பெரிய ரங்குவின் திருமுகத்தையும் திருவடியையும் நல்லா தரிசனம் செய்ய முடிஞ்சது.

திரும்பும் வழி வழக்கம் போல் சுத்தல்! தொண்டைமான் மேடு வழியா மேலே ஏறி வடக்கு வாசல் வழியாகக் கிழக்குப் பிரஹாரம் மடப்பள்ளி இருக்குமிடம் வந்து அன்னமூர்த்தி சந்நிதி வழியா மறுபடிக் கொடிமரத்துக்கு வரணும். :( என்ன ஒரு ஆறுதல்னா இது வரை நேரே பார்த்துட்டுக் குறுக்கே விழுந்தடிச்சு வருவோம். இப்போக் கட்டாயமா என்னோட பிரகாரத்தைச் சுத்தி ஆகணும்னு ரங்கு சொல்லிட்டார். ஆகவே பிரகாரம் ஒரு அரைச்சுத்து ஆயிடுது! தொண்டைமான் மேடுப் படிகளில் மேலே ஏறியதும் மூலஸ்தானத்தின் பின்புறமாகத் தெரியும் பிரணவ விமானத்தின் தரிசனம் கீழே!



கறுப்பாய் மேலே தெரிவது நாங்க நின்றிருந்த தொண்டைமான் மேட்டின் கூரை! வெயிலில் ஒரு பக்க விமானம் சரியா விழலை! நல்ல வெயில் என்பதால் கண்கள் ஏற்கெனவே கூசிக் கொண்டிருந்தன! :)




நடுவே குறுக்கே மின்சார ஒயர்கள் செல்கின்றன. அது குறுக்கே விழுந்திருக்கு. அதுக்கு ஏதும் செய்ய முடியாது. இது கர்பகிரஹத்திற்கு நேர் பின்பக்கம். 

Tuesday, March 29, 2016

கண்ணிலே இருப்பதென்ன! :(

வலக் கண்ணிலே பிரச்னை! Eye floaters எனப்படும் கண் முன் கரும்புள்ளிகள் தோன்றுவது! வித விதமான வடிவில்! எனக்குச் சிலந்தி வலை போல் தோற்றம். நேற்றுக்காலை ஆகாரம் தயார் செய்கையில் திடீர்னு வந்தது. முதல்லே கண் இமையில் ஏதோ ஒட்டி இருக்குனு நினைச்சுத் தள்ளித் தள்ளி விட்டுப் பார்த்தேன். போகலை. அப்புறமாத் தான் புரிஞ்சது. சிலந்தி வலை போகவும் இல்லை.  ஆனால் பார்வையை இடக்கண் பக்கம் கொண்டு வந்து பார்த்தால் சரியா இருக்கு. வலக்கண் பக்கம் பார்வையைத் திருப்பினால் பக்கவாட்டில் பார்த்தால் தெரியும்.   இருட்டறையில் பிரச்னை இல்லை. வெளிச்சத்தில் தான் பிரச்னை! நேற்று முழுவதும் இந்தக் கவலையிலே கணினி பக்கம் அதிகம் வராமல் கண்களை மூடிய வண்ணமே மத்தியானம் படுத்திருந்தேன். சரியாகலை. சாயந்திரமா எதுக்கும் மருத்துவர் கிட்டேக் காட்டிடுவோம்னு போனோம்.

விதவிதமாப் பரிசோதனைகள். Dilater ஊத்தியும் பார்த்தாங்க. சின்னதாக் கொசு மாதிரிக் கிளம்பி இருக்காம். இது போகாதுனு சொல்லிட்டாங்க. கொஞ்ச நாட்கள் ஆனால் உங்களுக்கே பழகிடும்னு சொல்லிட்டாங்க. மற்றபடி பவர் ஒண்ணும் பாதிக்கலைனும், ரெடினாவில் பாதிப்பு இல்லைனும் சொன்னாங்க. பார்வைக் குறைபாடு ஏற்படாது என்றும் சொல்லி இருக்காங்க. நம்பிக்கை தான் ஒரே துணை. நம்பறேன். அதோடு முன் ஜாக்கிரதையாகக் கணினியில் அமரும் நேரத்தை இனி இரண்டே மணி நேரமாகக் குறைக்கவும் போகிறேன். முக்கியமா என்னோட மொழி பெயர்ப்பு வேலைக்குக் குந்தகம் வராவண்ணம் விரைவில் மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்க எண்ணம். மற்றவை போகப் போகப் பார்த்துக்கலாம்.

நான் இல்லைனா இணைய உலகம் படுத்துடாது! யாரும் எதையும் எதுக்காகவும் நிறுத்தப் போறதில்லை. அதது அது பாட்டுக்கு இயங்கும். கொஞ்ச நாட்கள் ஒதுங்கியும் இருந்து பார்த்துடலாமே! மற்றபடி என் கண்களை அரங்கன் கைகளில் ஒப்படைச்சுட்டேன். அவன் பார்த்துப்பான். 

Thursday, March 24, 2016

நம்பெருமாளையும் சந்தித்தோம்; நன்மனத்தையும் சந்தித்தோம்!

ஒரு வழியா இந்த வருஷம் சேர்த்தி விட்டாச்சு! ஹிஹிஹி, நம்ம நம்பெருமாளோடத் தான். திடீர்னு எதிர்பாராமல் கிடைச்சது இது! நேத்துத் தான் சேர்த்தி சேவைனு தெரியும். மத்தியானமாப் போனால் நீண்ட வரிசையில் நிற்கணும் என்பதால் வெயில் அதிகம் என்பதால் போக முடியலை. ஆனால் விடிய விடிய சேர்த்தி சேவை நடந்திருக்கிறது. இது தெரிஞ்சிருந்தால் ராத்திரியே போயிட்டு வந்திருக்கலாம். இன்று காலை பூந்தேர் எனப்படும் கோரதம்.  ஆகவே தேரையானும் பார்க்கலாம்னு காலை எழுந்து குளிச்சுட்டுச் சீக்கிரமா ஆறரைக்கே கிளம்பினோம். தினசரியில் ஏழு பத்துக்குத் தேர் கிளம்பும் என்று போட்டிருந்தது.


படத்துக்கு நன்றி வெங்கட் நாகராஜ்
தேர் கிளம்பும் சித்திரை வீதி கோரத மூலையை அடைந்தால் தேர் மட்டும் தன்னந்தனியாக நிற்க அங்கே போலீஸ்காரங்களைத் தவிர வேறு யாரையும் காணோம். என்னடா இது சோதனை! என்று நினைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துக்கலாம்னு போனால் அங்கிருந்த ஒரு மாமி தேர் எட்டு மணிக்கு மேல் தான் கிளம்பும்னு சொன்னார். மீண்டும் திகைப்பு. பின்னர் அங்கிருந்த நண்பர் ஒருத்தரிடம் கேட்டதற்கு மேலச் சித்திரை வீதியில் யாரோ இறந்துவிட்டதால் இன்று தேர் ஒன்பது மணிக்கு மேல் தான் கிளம்பும் என்றும் தான் தொலைபேசியில் அழைப்பதாகவும் சொன்னார். ஆனால் இன்னொருவர் அதற்குள்ளாக வடக்கு வாசலில் தாயார் சந்நிதியில் இன்னமும் சேர்த்தி வைபவம் நடப்பதாகவும், பெருமாள் திருமஞ்சனம் ஆகவில்லை என்றும் அதற்குள்ளாகச் சேர்த்தியைப் போய்ப் பார்க்குமாறும் கூறினார்.

நம்பெருமாள் சேர்த்தி க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி தினமணி கூகிளார் வாயிலாக!

சரினு வேக வேகமாக வடக்கு வாசலை நோக்கிச் சென்றோம். அங்கே வண்டியை வைத்துவிட்டு உள்ளே சென்றோம். தாயார் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் இருக்கும் கத்யத்ரய மண்டபம் என்னும் பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் மிக உயரமான மண்டபத்தில் தாயாருடன் சேர்த்தி கண்டருளினார். கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு நின்றிருந்தது. கூட்டத்தை விலக்குவார் இல்லை, வரிசையிலும் யாரும் செல்லவில்லை. இப்படி அப்படினு நுழைந்து பார்த்தோம். எப்படியும் செல்ல முடியவில்லை. ஆகவே நம்பெருமாளை நடுவே நின்று பார்க்க வசதியாக நின்று பார்த்து தரிசனம் செய்தோம். இன்னும் திருமஞ்சனம் ஆகவில்லை என்றார்கள்.

திருமஞ்சனம் ஆகித் தேர் கிளம்ப ஒன்பது மணிக்கு மேலாகும் என்றதால் இங்கே வீட்டில் ஆட்களை வரச் சொல்லி இருந்தோம். நாங்கள் அங்கே வெகு நேரம் தங்காமல் கிளம்பிட்டோம். இங்கே வந்த சிறிது நேரத்தில் நன்மனம் வரவு. பத்துவருஷங்களாகப் பழக்கம் ஆன நன்மனம் நான் எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாமல் சிறிய வயது இளைஞராக இருந்தார்! அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். சேர்த்திக்காகவே வந்திருக்காராம். நேற்று இரவு எட்டு மணி அளவில் வரிசையில் கடைசியாக ஒன்பதரை, பத்து மணி அளவில் தரிசனம் கிடைக்கப் பெற்றிருக்கிறார். கிட்ட இருந்து தரிசனம் செய்ததால் தன் அலைபேசியில் எடுத்த படத்தை எங்களிடம் காட்டினார். நேற்றிலிருந்து சேர்த்தி தரிசனம் தான் என நினைத்துக் கொண்டேன். பின்னர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த நன்மனம் இன்று தேர் பார்த்துவிட்டு மதியம் சென்னை கிளம்புவதாகச் சொல்லி விடைபெற்றார். அவரைச் சரியாக உபசரிக்க முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. காஃபி கூடக் குடிக்க மறுத்துவிட்டார். ஶ்ரீரங்கம் வலைப்பதிவர்கள் சந்திப்பின் மூலம் விலாசம் கிடைத்ததாம்.  2012 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை இங்கே ஶ்ரீரங்கத்திலேயே அவரும் வசித்து வந்தும் தொடர்பு இல்லாமையால் சந்திக்க முடியவில்லை. இன்று சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சியே!

Sunday, March 20, 2016

ஞாயிற்றுக் கிழமைச் சிறப்பு உணவு! சேவை செய்யலாம், சாப்பிடவும் செய்யலாம்! :)

இங்கே

மேற்கண்ட சுட்டியில் ஒரு இடியாப்பம் புளி உப்புமா ஆன கதையை எழுதி இருக்கேன். அன்னிலே இருந்து மறுபடி ஒரு நாள் சேவையாவது பண்ணியே தீரணும்னு! ஆனால் ஜனவரி 31 ஆம் தேதியன்று மும்பையிலிருந்து திரும்பினவள் ஃபெப்ரவரி ஒன்றாம் தேதி மருத்துவரிடம் போனேனா! அதிலே இருந்து தினம் தினம் மருத்துவரைப் பார்க்கிறதே வேலையாப் போச்சு. நேத்திக்குப் போனப்போ இனிமே ஒரு மாசம் கழிச்சு வந்தாப் போதும்னு மருத்துவர் சொல்லிட்டாரா! ஹூர்ரே! என ஒரு குதி குதிச்சேன். மனசுக்குள்ளே தான்! (நிஜம்மாக் குதிச்சா முழங்கால் என்ன ஆறது?) ஆகவே அதைக் கொண்டாடும் முகமாக இன்னிக்குச் சேவை பண்ணலாம்னு காலையிலேயே தோன்றி புழுங்கலரிசி ஒன்றரை ஆழாக்கு(கிட்டத்தட்ட 350 கிராம்) பச்சரிசி ஒன்றரை ஆழாக்கு கலந்து களைந்து நனைச்சு ஊற வைச்சேன்.

சுமார் பதினோரு மணி சுமாருக்கு சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டே அரைச்சு எடுத்து வைச்சாச்சு. மதியம் சாப்பாடு முடிஞ்சதும் பாத்திரங்கள் கழுவிட்டு உடனேயே சேவை பிழியும் வேலை ஆரம்பிச்சாச்சு! கீழே படங்கள். படங்கள் முன்பின்னாக எடுத்தவை என்றாலும் வரிசைக்கிரமமாகக் கொடுக்கிறேன்.


இதான் என்னோட சேவை நாழி! 74 ஆம் வருஷம் ராஜஸ்தான் போறச்சே அம்மா வாங்கிக் கொடுத்தது. திண்டுக்கல் சேவை நாழி தான் பிரபலம். திண்டுக்கல் இரும்பு சாமான்களுக்குப் பிரபலமானது.  திண்டுக்கல்லில் சொல்லி வைச்சு வாங்கினாங்க. வாங்கும்போது 2 ரூபாய்! இப்போ இதைப் போல 250 ரூபாய் கொடுத்தால் கூடக் கிடைக்கிறதில்லை.

அரைச்ச மாவை நிதானமாகக் கரைச்சு இட்லிகளாக ஊற்றினேன். வெந்த இட்லிகளை மேலே பார்க்கிறீங்க!

 இட்லிகளைச் சேவை நாழியில் போட்டுப் பிழிந்தாயிற்று. இதோடு போதும். திரும்ப வேக வைக்கணும்னு இல்லை. ஒரு சிலர் புழுங்கலரிசியை மட்டும் அரைச்சுக் கிளறிப் பின்னர் கொழுக்கட்டை மாதிரி வேக வைச்சு, அல்லது கொதிக்கும் நீரில் வேக வைச்சுப் பிழிவாங்க. அதெல்லாம் வேலை ஜாஸ்தி என எனக்குத் தோன்றும். வெறும் புழுங்கலரிசி இல்லாமல் பச்சரிசியும் சேர்த்து அரைச்சுட்டு இப்படி இட்லி மாதிரி வார்த்துச் சேவை பிழிந்தால் மீண்டும் வேக வைக்க வேண்டாம். 


பிழிஞ்ச சேவை கலக்கும் முன்னர். தேங்காய்ச் சேவை கொஞ்சம், எலுமிச்சைச் சேவை கொஞ்சமும், தயிரில் கொஞ்சமும் போட எடுத்து வைச்சிருக்கேன். அப்பாடா, நீண்ட நாளாகக் காத்திருந்த ஒரு வேலை முடிஞ்சா எப்படி இருக்குமோ அப்படி ஓர் உணர்வு! :))

பி.கு. இந்த மொக்கைக்குக் கூட்டம் அள்ளும் வழக்கம் போல்! :)

Saturday, March 19, 2016

ஒரு வழியாக் கல்கத்தா எங்களை விட்டது! சொர்க்கம் திரும்பினோம்!

ஹிஹிஹி, நம்ம சாம்பாரைச் சாப்பிட ஆரம்பிச்சதும் ரங்க்ஸ் சாம்பார்னாலே காத தூரம் ஓடறார்! தெனாலிராமன் பூனையாட்டம் ஆயிட்டார் போல! போகட்டும் விடுங்க! எனக்கும் சாம்பார் பிடிக்காது! அதனாலே  சாம்பாரே பண்ணலைனா நல்லது தான்!  இன்னிக்குக் கூட சாம்பார் பண்ணலை. எள்ளுப் பொடி சாதம் தான்! :)  ஓகே, ஓகே, கல்கத்தாப் பயணத்தை முடிச்சுடுவோம்.

ஓட்டுநரின்  தயவால் சீக்கிரமே ஹோட்டலுக்கு வந்த நாங்க அதுக்கப்புறமா எங்கேயும் போகலை. இன்னிக்கு ராத்திரிக்குக் கோமள விலாஸிலே போய்ச் சாப்பிடலாம்னு முடிவெடுத்தோம். இந்த ஓட்டலில் தமிழ்ச் சானல்கள் நன்றாகத் தெரிந்தன. ஒரு சில ஓட்டல்களில் நமக்கு வேண்டிய சானல்களைப் பணம் கட்டித் தான் பார்க்க முடியும். ஓட்டல் பில்லோடு சேர்த்து இதுவும் எகிறும். ஆனால் இங்கே அப்படி இல்லை. ஆகவே விரைவில் சென்று சாப்பிட்டுவிட்டு வந்துத் தொலைக்காட்சி பார்த்துட்டுப் படுத்துக்க முடிவு செய்தோம். அதன்படி கோமள விலாஸ் போய்ச் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அங்கே நடைமேடைகளை ஆக்கிரமித்திருந்த கடைகளை ஒரு பார்வை பார்த்தோம். அந்தக் கடைகளின் ஆக்கிரமிப்பானது அங்கே அமைந்திருந்த எந்தப் பெரிய கடைகளுக்கும் அல்லது அலுவலகங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்குச் செல்லும் வழியை மறைத்தே அமைந்திருந்தது. ஆனாலும் அங்கே இருப்பவர் எவரும் இதை ஆக்ஷேபிக்கவில்லை என்பதோடு மக்கள் சாதாரணமாக அங்கே எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொண்டிருந்தனர்.
கல்கத்தா க்கான பட முடிவு
இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு அங்கே இருந்த ஒரு தேயிலை விற்பனை செய்யும் கடையில் அஸ்ஸாம் தேயிலை 100 கிராம் வாங்கிக் கொண்டோம். இங்கே எல்லாம் விற்கும் டஸ்ட் எனப்படும் தேயிலையோ க்ரானுல்ஸ் எனப்படும் தேயிலையோ இல்லை அது. நிஜம்மாகவே இலைகள் நிரம்பியது. இப்போ அதான் தேநீர் போடறேன். கொஞ்சம் நீர்க்க டிகாக்‌ஷன் வந்தாலும் உண்மையான தேநீர் வாசனை வருது. ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மற்றபடி வேறே எதுவும் வாங்கவில்லை. மறுநாள் பயணத்துக்கென கொஞ்சம் பிஸ்கோத்துகள் வாங்கிக் கொண்டோம். அறைக்குப் போய்த் தொலைக்காட்சி பார்த்துவிட்டுப் படுத்தோம். மறுநாள் காலை! அன்று ஞாயிறு! ஆகையால் தாமதமாக எல்லாம் வரும் என்று தெரிந்தாலும் ஆறரை மணி வரை காஃபிக்கு பதிலே இல்லை. சரி, நாம எங்கேயும் போகப் போறதில்லையேனு பேசாமல் இருந்தோம். ஆறரைக்குத் தான் சமையலறை திறந்து காஃபி தயார் ஆனது.
கல்கத்தா க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி விக்கிபீடியா!

காஃபி எடுத்து வந்தவரிடம் கீசர் போடச் சொல்லிவிட்டுக் குளித்துத் தயார் ஆனோம்.  அதிசயமாகக் காலை உணவு ஏழரைக்கெல்லாம் தயார் ஆகிவிட்டது. எட்டு மணி அளவில் போய்க் காலை உணவை அருந்தினோம். பின்னர் கொஞ்ச நேரம் கடைத்தெருவில் (அதான் ஓட்டலுக்குப் பக்கம் நடைமேடைக்கடைகள்) திறந்திருந்த கடைகளைப் பார்வையிட்டுவிட்டுப் பத்து மணி போல் ஒரு டாக்சியைப் பேசிக் கொண்டோம். அன்று பனிரண்டு மணி வரை ஹோட்டலில் இருக்கலாம். ஆனால் பனிரண்டிலிருந்து ஒன்றரை வரை எமகண்டம். பலமுறை வேறு வழியில்லாமல் எமகண்டத்தில் கிளம்பிட்டு ரயில் தடம் புரண்டதிலிருந்து எஞ்சின் எரிந்தவரை எல்லாம் அனுபவித்தாயிற்று. ஆகவே முன்னால் கிளம்பலாம். அதோடு கல்கத்தாப் போக்குவரத்தையும் நினைச்சுப் பார்த்தால் முன்னால் போவதே நல்லது என்று கிளம்பினோம். டாக்சிக்காரர் மீட்டர் படி கொடுத்தால் போதும் என்று சொன்னதை நம்பினோம்.

பதினொன்றரை வரை ஓட்டலில் ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் வெளியே வந்தோம். டாக்சியும் தயாராக வந்துவிட்டது. ஓட்டல் ஆட்கள் இரண்டு பேர் சாமான்களை ஏற்றினார்கள். அவர்களுக்குத் தாராளமாக "டிப்"பிவிட்டு டாக்சியில் ஏறி அமர்ந்தோம். ராஷ்பிஹாரி அவென்யூ வழியாகச் சென்ற டாக்சி ஒரு சிக்னலில் நின்றது. அப்போது தான் ஓட்டுநர் அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மீட்டர் போட முடியாது என்றும் 250 ரூபாய் கொடுத்துவிடவேண்டும் என்றும் பேரம் பேசினார். மீட்டர் போட்டால் 200 ரூக்கும் கீழே தான் வரும். ஆனால் வண்டியில் ஏறிக் கொஞ்ச தூரம் வந்ததும் இப்படிச் சொல்கிறார். இல்லைனா இறங்கி வேறே டாக்சி பிடிச்சுக்கலாம் என்றும் சொல்கிறார். என்ன செய்வது எனப் புரியவில்லை. நடு வழியில் இறங்கி எப்படி வேறே டாக்சி பிடிக்கிறது?  எந்தப்பக்கம் போகணும்னு எதுவுமே தெரியாது. டாக்சி ஓட்டுநரிடம் சொல்லிக்கலாம் என்றாலும் இப்படி நடுவழியில் நிற்பதற்கு என்ன காரணம் சொல்வது? ஆகவே வேறு வழியின்றிச் சம்மதித்தோம். ஆனால் மனதில் வேதனை!

ரயில் நிலையம் நெருங்குகையில் ஓட்டுநர் சென்னை வண்டிகள் எல்லாம் பழைய ரயில் நிலையத்துக்குத் தான் வரும் என்று சொல்லி அங்கே இறக்கிவிட்டுப் போய்விட்டார். அங்கே உள்ளே செல்லவே முடியாமல் கூட்டமோ கூட்டம்! கல்கத்தாவின் மொத்த ஜனத்தொகையும் அன்று அங்கே தான் இருந்ததோ என்பது போல் இருந்தது. இதிலே ஒரு போர்ட்டர் வேறே சாமான்களைத் தான் தூக்கி வருவதாகத் தொந்திரவு. அவர் எங்கே போகிறார் என்பதை அந்தக் கூட்டத்தில் எப்படிக் கண்டு பிடிப்பது? சாமான்களை நாங்களே தூக்கிக் கொண்டும் உருட்டிக் கொண்டும் உள்ளே சென்றோம். உள்ளே விசாரணைப் பகுதியைக் கண்டு பிடிக்கவே அரை மணி ஆகிவிட்டது. அதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் என்னைப் பயணிகள் ஓய்வறையில் அமரும்படியும் தான் போய் விசாரித்து வருவதாகவும் சொன்னார். ஆனால் பயணிகள் ஓய்வறை மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏல் மாடியில் இருந்தது. ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டோம். விசாரணையில் நானே போய் விசாரித்தேன். அதோடு அங்கே அறிவிப்புப் பலகையும் காணப்பட்டது. அதில் சென்னை வழியே திருச்சி செல்லும் ஹவுரா வண்டி 23 ஆம் நடைமேடையில் இருந்து கிளம்பும் எனப் போட்டிருந்தது. 23 ஆம் நடைமேடை எங்கே என விசாரணையில் இருந்த பெண்ணிடம் கேட்டபோது அது புது ரயில் நிலையம் என்றும் இங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் முடியலைனால் ஆட்டோவில் செல்லலாம் என்றும் கூறினார். மயக்கமே வந்துவிட்டது.

வெளியே வந்து ரங்க்ஸிடம் சொல்ல அவர் உடனே அங்கேயே ஒரு சுமை தூக்குபவரைப்பிடித்து அழைத்து விபரங்களைச் சொல்ல, அவர் தான் சாமான்களைத் தூக்கி வருவதாகவும் நடந்தே செல்லலாம் என்றும் கூறினார். நூற்றைம்பது ரூபாய் கேட்டார்.  போயாகணுமே, சம்மதித்தோம். உடனே அவர் சாமான்களைத் தூக்க அவருடன் ரங்க்ஸ் சென்றார். பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் நான் மெதுவாகச் சென்றேன். வழி தப்பி விட்டேனோ என்று எண்ணும்போதெல்லாம் முன்னால் பார்ப்பேன். அந்தக் கூட்டத்தின் நடுவே உயரமான ரங்க்ஸின் தலை தெரியும்.  அதையே குறி வைத்துக் கொண்டு மேலும் நடப்பேன். இப்படி எவ்வளவு தூரம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடந்ததும் அந்தப் புதிய ரயில் நிலையமும் வந்தது. அங்கே நடைமேடைக்குப் போக மேலும் ஒரு கிலோ மீட்டர் நடக்கணும். அதில் பாதி தூரத்தில் ஒரு இடத்தில் சுமை தூக்குபவர் சாமான்களை வைத்துவிட்டு ஏசி பெட்டி இங்கே தான் வரும் என்றும் சொல்லிவிட்டுக் கூலியை வாங்கிக் கொண்டு போய்விட்டார். ரங்க்ஸும் நான் வருகிறவரை காத்திருந்து விட்டுப் பின்னர் சாப்பாடு வாங்கி வரச் செல்வதாய்க் கூற மீண்டும் இவ்வளவு தூரமா என நினைத்து எனக்குக் காய்ச்சலே வந்துவிட்டது. ஆனால் ரங்க்ஸ் சாப்பிட்டே ஆகணும். மாத்திரைகள் எடுத்துக்கணுமே. ஆகவே அவர் கிளம்பினார்.

போயிட்டுச் சாப்பாடு வாங்கி வர அரை மணி நேரம் ஆச்சு! எனக்குப் பழங்கள் வாங்கி வந்திருந்தார். பூரியும் உருளைக்கிழங்கு சப்ஜியும் தான் கிடைச்சதாம். ஏதோ ஒண்ணு!  சாப்பிட்டதும் தான் அவருக்குக் கண்ணிலே ஒளியே வந்தது! :(  வண்டிக்காகக் காத்திருந்தோம். வண்டி மாலை சுமார் 4-20 க்குக் கிளம்பும் என்று போட்டிருந்தது. எதிர் நடைமேடையில் ஹவுரா--சென்னை வண்டி வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றுப் பயணிகள் ஏறியதும் குறிப்பிட்ட நேரம் கிளம்பியது. அதைப் பார்த்ததும் நம்ம வண்டி மூணு மணிக்கே வந்துடும்னு நினைச்சோம். ஆனால்!!!! நாலு மணி வரை வண்டி வரவே இல்லை. அறிவிப்பும் செய்யலை! ஒரு வழியாக நாலு பத்துக்கு வண்டி வந்தது. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவெனில் ஏசி பெட்டிகள் இஞ்சினுக்குப் பக்கமாக இருந்தது. தூக்கு மூட்டையை! நட! நடப்பதற்குள்ளாக ஆயிரம் தடங்கல்கள்! முன் பதிவு செய்யாத பெட்டிகளுக்கான வரிசை நீளமாக இருந்தது. நடைமேடை முழுவதும் அவங்க ஆக்கிரமிப்பு! இதற்கு நடுவே சென்று பெட்டியைத் தேடி ஏறி அமர்வதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆகி விட்டது. நல்லவேளையாக இருவருக்கும் கீழ்ப்படுக்கை இருக்கை என்று செய்தி மதியம் ஒரு மணிக்கே வந்துவிட்டது. ஆகையால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. எனினும் எதிரில் வந்த விழுப்புரம் தம்பதியருக்கு நானோ அவரோ கீழ்ப் படுக்கை இருக்கையை அவங்களுக்கு விட்டுக் கொடுக்கணும்னு ஆசை! ஆனால் எங்களால் முடியலை!  அவங்களுக்கு உட்கார இடம் கொடுத்துட்டுக் களைப்புத் தாங்காமல் படுத்துட்டோம். பின்னர் மறு நாள் திங்கள் முழுவதும் பயணம் செய்து திங்கள் இரவு, செவ்வாய் காலை சுமார் மூன்று மணி அளவில் வண்டி ஶ்ரீரங்கத்தை அடைந்தது. அப்பாடா சொர்க்கத்துக்குத் திரும்பியாச்சுனு ஆட்டோக்காரர் கேட்ட தொகையைக் கொடுத்து வீட்டுக்கு வந்து கிளம்பிக் கொண்டிருந்த பால்காரரிடம் அரை லிட்டர் பாலைக் கேட்டு வாங்கிக் காஃபி குடித்துவிட்டுப் படுத்தோம். ஆறரை மணிக்குப் பையர் எழுப்பும் வரை ஓய்வு தான்.

ரயிலில் நடந்த சம்பவங்கள், பேசிய பேச்சுகள், எல்லாம் எழுதறதுனா அதுக்குனு இரண்டு பதிவு கூடப் போடணும்! ஆகையால் அவற்றை எல்லாம் விட்டு விட்டேன். :))))

Friday, March 18, 2016

காளியைக் குறித்துத் தெரிந்து கொள்வோம்--நிறைவுப் பகுதி!

காளி க்கான பட முடிவு

காளி தன் இன்னொரு கையில் வாளை ஏந்தி இருக்கிறாள். தீமைகள் எங்கு நேர்ந்தாலும் தீயவர்களை வெட்டிச் சாய்த்து விடுவாள் காளி. இன்னொரு கையில் வெட்டிய தலையை மட்டும் பிடித்திருக்கிறாள். ஒரு சில காளி சிலைகளில் பாம்பு காணப்படும். வெட்டிய தலை இருப்பதும் சரி, பாம்பு காணப்படுவதும் சரி யோக மார்க்கத்தில், சக்தி வழிபாட்டில் தத்துவ ரீதியான பொருள் சொல்லப்பட்டாலும் நாம் அதைக் கண்டு பயப்படாமல் காளி தீயவர்களைத் தண்டித்து அவர்கள் தலையைத் தன் கையில் வைத்திருப்பதாக எளிமையான பொருளிலேயே காண்போம். குண்டலினி சக்தி மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்குவதாக ஐதீகம். அந்தக் குண்டலினியை எழுப்பும் சக்தி கொண்டவள் காளி என்பதைக் குறிக்கவும் பாம்பைத் தன் கையில் காளி வைத்திருக்கலாம்.

காளிக்கு மூன்று கண்கள் உண்டு ஈசனைப் போல! அவை முறையே சூரியன், சந்திரன் ஆகியன முதலிரண்டு கண்களாகவும் நெற்றிக்கண் அக்னியாகவும் சொல்லப்படுகிறது. விரிந்த செஞ்சடை கொண்ட ஈசனையே காளியின் கணவராகச் சொல்லப்பட்டாலும் சிவாம்சம் பொருந்திய வீரபத்திரருக்குக் காளி துணைவி என்றும் சொல்லுவதுண்டு. எங்கெல்லாம் வீர பத்திரர் இருக்கிறாரோ அங்கெல்லாம் காளி காணப்படுவதுண்டு. வீரபத்திரரைத் தோற்றுவித்த ஈசன் அவரின் சக்தியாகக் காளியையும் தோற்றுவிக்கச் செய்தார் எனச் சில புராணங்கள் கூறும். ஈசனைப் போலக் காளிக்கும் விரிந்த கூந்தல் காணப்படும். இது அவளது எல்லை காணா வியாபகத் தன்மையைச் சுட்டிக்காட்டுவதாகப் பொருள் கொள்கின்றனர்.

பகவான் ஶ்ரீராமகிருஷ்ணரின் கூற்றுப்படி, சக்தி வேறு சிவம் வேறல்ல. நெருப்பில் எவ்வாறு உஷ்ணம் உள்ளூர உறைந்துள்ளதோ , பால் எப்படி இயல்பாகவே வெண்மை நிறத்தில் காணப்படுகிறதோ, நவரத்தினங்கள் எப்படி சுயம்புவாக ஒளிர்கின்றனவோ அவ்வாறே காளியும், ஈசனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதவர்கள். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இரண்டும் வேறு வேறு அல்ல. என்று கூறி உள்ளார். காளிக்கு பலியிடும் வழக்கம் முன் காலத்தில் இருந்தது. இப்போதெல்லாம் பலியிடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் பழங்குடி மக்கள் சிலரும் சில குறிப்பிட்ட இனத்தவர்களும் பலியிடுவதாகக் கேள்விப் படுகிறோம். நேபாளத்து கூர்கா இனத்தவர் எருமை மாட்டைப் பலி கொடுப்பார்கள் என்றும் கேள்விப் படுகிறோம். இந்த பலி கொடுப்பது என்பதன் உண்மையான தத்துவம் நம்மிடையே காம குரோத, லோபம், மோகம்,  மத மாற்சரியங்களை நாம் காளியிடம் தியாகம் செய்துவிடுகிறோம் என்பதே ஆகும்.

வெள்ளாட்டைப் பலி கொடுப்பது என்பது காமத்தைத் தியாகம் செய்வதாகவும், எருமை (கோபம்) குரோதத்தையும், பூனை லோபத்தையும், செம்மறியாடு மோகத்தையும் (இங்கே பெண்ணாசையைக் குறித்தாலும் அனைத்து ஆசைகளும் மோகத்தில் அடங்கும்.) நரனாகிய மனிதன் ஆணவமாகிய மதத்தையும், ஒட்டகம் பொறாமையாகிய மாற்சரியத்தையும் குறிக்கும் என்பார்கள்.  இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவெனில் இத்தகைய அடையாளச் சொற்களின் பொருளுள்ள குணங்களைத் தான் அம்பிகையிடம் பலியிடவேண்டுமேயன்றி உண்மையில் அந்த மிருகங்களை அல்ல. நம்மிடையே உள்ள மிருக குணங்களைத் தான் நாம் தொலைக்க வேண்டும். சிவன் மார்பின் மீது காளி நின்று நடனம் ஆடுவது போல் பார்த்திருக்கிறோம். செயலற்றுக் கிடக்கும் நிர்க்குண பிரம்மம் சிவன் எனில் அவன் மேல் ஆடும் காளி செயல் உள்ள சகுணப் பிரம்மம் ஆவாள்.

எப்படி எனில் விளக்கை ஏற்றும்போது விளக்கின் எண்ணெய் ஊற்றும் அடிப்பாகமும் எண்ணெயும் சிவன் எனில் எரியும் சுடராகச் சக்தி திகழ்கிறாள்.  சிவனும் சக்தியும் சேர்ந்தே இருக்கும் சிவசக்தி ஆகும். சக்தி இயங்கினால் தான் நாம் சிவனை அறியவே முடியும். பாம்பு அசையாமல் படுத்திருந்தால் அதைச் சிவன் எனலாம். அதே பாம்பு ஓடும்போது சக்தி ஆகிறாள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை; சிவம் இல்லையேல் சக்தியும் இல்லை!  தன்னை வணங்கியவர்களைக் காளி கைவிட மாட்டாள்.

பி.கு. ஏற்கெனவே ஆருக்கும் அடங்காத நீலி என்னும் பதிவில் காளி குறித்து எழுதி இருக்கேன். கிட்டத்தட்ட இந்தப் பதிவைப்போல் தான் இருக்கும். :)