எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 14, 2016

ரங்க்ஸுகளுக்கெல்லாம் அவங்கவங்க பங்கைக் கொடுங்கப்பா!

நேற்றைய கத்திரிக்காய் சாதம் ருசித்தவர்கள் எண்ணிக்கை 450 ஐத் தாண்டி விட்டது. கருத்துப் பரிமாற்றம் என்னமோ குறைச்சல் தான். அதனால் பரவாயில்லை. :) இன்னிக்கும் தீனி தின்னிப் பதிவு தான். ஆனால் இது விசேஷ தினச் சிறப்புப் பதிவு. எங்கள் ப்ளாகிலே வேறே ஒரு சமையல்கலை நிபுணியின் இனிப்புக் காரடைசெய்முறை போட்டிருக்காங்க. இங்கே நம் சொந்த செய்முறை!

முதலில் வெல்லம் போட்டுச் செய்யும் காரடை, உப்புப் போட்டு செய்யும் காரடை இரண்டுக்கும் அரிசியை ஒன்றாக ஊறப் போட்டு மிக்சியிலோ அல்லது மெஷினில் கொடுத்து அரைக்கும் வழக்கம் உண்டெனில் மிஷினிலோ மாவாகத் திரிக்கலாம். இயந்திரத்திலும் திரிக்கலாம். இப்போல்லாம் யார் கிட்டே கல் இயந்திரம் இருக்கு? நான் மிக்சியில் தான் பொடியாக்கினேன்.

இரண்டு அடைக்குமாகச் சேர்த்து நான் எடுத்துக் கொண்ட அரிசி 200 கிராம் அல்லது ஒரு ஆழாக்கு அல்லது ஒரு கிண்ணம். இன்னிக்குக் காலம்பர எழுந்து எல்லாம் செய்ய நேரம் இருக்காது என்பதால் நேற்றே அரிசியை ஊற வைத்து மாவாக்கினேன்.

ஒரு ஆழாக்கு அரிசியை நன்கு களைந்து நீர் விட்டு ஊற வைக்கவும். குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஊறட்டும். இதுக்குக் காலையிலேயே ஊற வைச்சால் நல்லது. பின்னர் நீரை நன்கு வடித்துவிட்டுப் பாத்திரத்தோடு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வைக்கவும். அதன் பின்னர் மாவு அரைக்கும் வேலை! வீட்டிலே இது மட்டும் வேலையாக இருக்காதே! கூடவே காலை டிஃபன், சமையல், சாப்பாடு எல்லாமும் உண்டே! நான் டிஃபன் கூடச் சாப்பிடாமல் தான் மாவு அரைக்கிறது வழக்கம். இந்தத் தரம் எல்லாம் தலைகீழ் விகிதம். மாத்திரைகள் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் காலை ஆகாரத்தைத் தவிர்க்கக் கூடாது எனச் சிவப்புக் கோடு போட்டுச் சொல்லிட்டாங்க! ஆகவே அதுக்கப்புறமாத் தான் மாவு அரைத்தேன். :( உம்மாச்சி என்னமோ கோவிச்சுக்க மாட்டார்தான்!

நிறைய நேரம் ஊறியதால் மாவு நன்றாக நைசாக வந்துடும். ஒரு ஆழாக்கு மாவை மிக்சியோட சின்ன ஜாரில் இரண்டே தரமாகப் போட்டு அரைச்சுடலாம். பின்னர் சலிச்சுக்குங்க! சலிச்சால் ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கப்பி தான் வரும்! அது போனால் போகுது! மிக்சியில் ஒரு சுத்துச் சுத்திட்டுக் கோலமாவோடு கலந்துடுங்க! சரியாப் போச்சு இப்போ! இப்போ அரைச்சுச் சலிச்சுப் பொடித்து வைத்திருக்கும் மாவை  வெறும் வாணலியில் போட்டு வறுக்கணும். நன்கு சூடு வரும்படி வறுத்தால் மட்டும் போதாது. மாவைக் கையால் எடுத்துக் கோலம் போட்டுப் பார்த்தால் இழை விழணும். இப்போ மாவை எடுத்து ஒரு அகன்ற தாம்பாளம் அல்லது பேப்பரில் கொட்டி ஆற வைக்கவும். நன்கு ஆறியதும் மாவில் கட்டி தட்டவில்லையே என்று பார்க்கவும். கட்டி தட்டி இருந்தால் திரும்ப மிக்சியில் போட்டு ஒரு சுத்துச் சுத்தினால் கட்டியெல்லாம் உடைஞ்சுடும். இந்த மாவைத் தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துச் சமையலறையிலேயே ஓரமாக வைக்கவும். சிவப்புக்காரமணியை ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து அதே வெறும் வாணலியில் போட்டுக் கொஞ்சம் வறுத்துவிட்டுப் பின்னர் களைந்து ஊற வைக்கவும். அதையும் மாவுக்குப் பக்கத்தில் தனியாக வைக்கவும். இதெல்லாம் முதல்நாள் வேலை!

இப்போ மறுநாள் விடிஞ்சாச்சு! காலை ஒன்பது மணிக்குத் தானே நோன்பு ஆரம்பம்னு சும்மா இருக்காமல் காலங்கார்த்தாலே எழுந்து எல்லாம் செய்து வைச்சுட்டால் நோன்பு நேரம் பதட்டமில்லாமல் இருக்குமே! குளிச்சு முடிச்சு மடியாக சமையலறைக்கு வந்து முதல்லே ஊற வைச்சக் காராமணியைக் களைந்துவிட்டு ஒரு வாணலியில் வேக வைக்கவும். அது வேகும் நேரத்துக்குள்ளாக ஒரு தேங்காயை எடுத்து உடைத்து இளநீர் இருந்தால் தனியாக எடுத்து வைத்துட்டு( நிவேதனம் ஆனதும் குடிச்சுக்கலாம்)த் தேங்காயைக் கீறிப் பல்லுப் பல்லாக நறுக்கவும். இதெல்லாம் முடியறதுக்குள்ளாக காராமணியும் வெந்திருக்கும். ஏலக்காயை உரிச்சுப் பொடி செய்து வைச்சுக்கவும்.  இப்போ மாவு எவ்வளவு இருக்குனு அளந்து பார்க்கவும். வெல்ல அடைக்கும், உப்பு அடைக்கும் சம அளவு எடுத்துக்கவும். ஒரு கிண்ணம் வெல்ல அடைக்கு இரண்டு கிண்ணம் நீர் விட்டுக் கொதிக்க விடணும்.

ஒரு வெண்கல உருளியில் இரண்டு கிண்ணம் நீர் விட்டுக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது வெந்த காராமணியில் பாதியை இதில் சேர்க்கவும். நறுக்கி வைத்த தேங்காய்த் துண்டுகளில் பாதியைச் சேர்க்கவும். நீர் நன்கு கொதிக்கும்போது ஒரு கிண்ணம் வெல்லத்தூளைக் கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தித்திப்பு அதிகம் வேணும்னால் இன்னும் அரைக்கிண்ணம் போட்டுக்கலாம். ரொம்பப் போட்டால் பாகு வந்து மாவு வேகாது. வெல்ல வாசனை போகக் கொதித்த பின்னர் எடுத்து வைத்திருக்கும் இரண்டு கிண்ணம் மாவில் வெல்ல அடைக்கெனத் தனியாக இருக்கும் ஒரு கிண்ணம் மாவைச் சேர்த்துக் கிளறவும். மாவு நன்கு வெந்து சுருண்டு வரும்போது நன்கு கிளறி விட்டுக் கீழே இறக்கி வைக்கவும்.

இப்போ உப்பு அடை! உருளியில் தனியாக வெல்ல அடை மாவு இருக்கு. அது ஆறட்டும் அப்போத்தான் அடைக்காகத் தட்ட முடியும். இப்போ ஒரு வாணலியை எடுத்து அல்லது இன்னொரு உருளி இருந்தால் அதைப் போட்டுத் தே.எண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்துப் பொரிந்ததும் கடுகு, உபருப்பு, கபருப்பு தாளித்துக் கொண்டு பச்சை மிளகாய், காய்ந்த சிவப்பு மிளகாய் வகைக்கு ஒன்று தாளிக்கவும். கருகப்பிலை சேர்க்கவும். தேங்காய்த் துண்டுகளையும் சேர்க்கவும். பின்னர் முன்னர் சொன்னாற்போல இரண்டு கிண்ணம் நீர் விட்டுத் தேவையான உப்புப் போட்டுக் கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் தனியாக எடுத்து வைத்திருக்கும் வெந்த காராமணிகளைச் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மாவைப்போட்டுக்கிளறவும். இது சீக்கிரமாகவே சுருண்டு வந்துவிடும். இதையும் நன்கு வெந்ததும் கீழே இறக்கி ஆற விடவும்.

இப்போது இட்லிப்பானை அல்லது ஒரு அகன்ற வாணலியில் உள்ளே நீர் விட்டுக் கொழுக்கட்டை வேக விடும் ஒற்றைத் தட்டை வைக்கவும். வாணலி என்றால் அடியில் நீர் விட்டால் மட்டும் போதாது. வேறொரு வாயகன்ற பாத்திரத்திலும் நீர் விட்டு வாணலியின் நடுவே வைக்கணும். அதன் மேல் ஒற்றைத் தட்டை வைக்கலாம். தட்டில் வாழை இலையை அலம்பி நெய் தடவிப் போடவும். முன்னெல்லாம் இதை வைக்கோலில் தான் வேகவிடுவார்கள். கார் அரிசி வேறே! அந்த மணமே தனியாக இருக்கும். அதோடு அடுப்பும் விறகு அடுப்பு அல்லது பெரிய குமுட்டி!  இப்போ எரிவாயு அடுப்புத் தான். வாழை இலையே பலருக்கும் கிடைப்பதில்லை! வாழை இலை கிடைக்கலை எனில் சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்துப் போடலாம். ஆறி இருக்கும் மாவை ஒரு நாரத்தங்காய் அளவு(எப்போவும் எலுமிச்சை அல்லது நெல்லிக்காய், சுண்டைக்காய்னு தான் சொல்லணுமா என்ன? நாங்க இப்படியும் சொல்லுவோமே!) உருட்டிக் கொண்டு உள்ளங்கையில் வைத்துத் தட்டி நடுவில் சின்னதாகக் குழி செய்து ஒற்றைத் தட்டில் வைக்கவும். தட்டு கொள்ளுமளவுக்கு மாவை இப்படி உருட்டி வைக்கலாம். பின்னர் நினைவாக அடுப்பைப் பற்ற வைத்துவிட்டுக் கொழுக்கட்டைகளை/அடைகளை வேக விடவும்.  வெந்துவிட்டது என்பதற்கான அடையாளம் கொழுக்கட்டைகள் மேல் வியர்த்துவிட்டாற்போல் நீர்க் கோர்த்து இருக்கும். அது தான் சரியான பதம். இதே போல் உப்பு அடைகளையும் தட்டி வேக வைத்து எடுக்கவும்.

சுவாமி அலமாரி முன்னர் சுவாமிக்குப்போட்ட கோலம் தவிர தனியாகக் கோலம் போடணும். எத்தனை பேர் நோன்பு செய்யறாங்களோ அத்தனை கோலம் போடணும். எங்க வீட்டில் நான் ஒருத்தி தானே! ஒற்றைக்கோலமாகக் கூடாது என்பதால் இரண்டு கோலம் போட்டு இரண்டு இலை போடுவேன். இரண்டு இலைகளிலும் ஓரத்தில் வெண்ணெய் வைத்துவிட்டு அடைகளைப் பரிமாறணும். குறைந்தது வெல்ல அடை நான்கு, உப்பு அடை நான்கு இருக்கலாம்.  தனியாக ஓர் தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு வைத்து நோன்புச் சரட்டில் நடுவே பூக் கட்டி இரண்டு சரடு, அல்லது நான்கு சரடு வைக்க வேண்டும். செய்திருக்கும் அடைகளையும் அப்படியே பாத்திரத்தோடு வைக்கலாம். எல்லாம் தயார் ஆனதும் சுவாமியை வேண்டிக் கொண்டு நிவேதனம் செய்யணும். நோன்புச் சரடையும் சேர்த்து நிவேதனம் செய்யணும்.  எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேரும் தனித்தனியாக நிவேதனம் செய்யலாம். பின்னர் ஒரு சரட்டை எடுத்து அம்பிகை படம் ஏதேனும் ஒன்றுக்கு அல்லது அவரவர் குலதெய்வம் அம்பிகையாய் இருந்தால் அந்தப் படத்துக்குக் கட்டி விட்டுப் பின்னர் வீட்டுக்குப்பெரியவங்க முதலில் தங்களுக்குத் தாங்களே கட்டிக் கொண்டு பின்னர் சிறியவங்களுக்குக் கட்டி விடணும்!  சரடு கட்டிக்கும்போது,

உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் வைத்தேன்,
ஒருக்காலும் என்னருமைக் கணவன் என்னைப் பிரியாதிருக்கவேண்டும்!" என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். நிவேதனம் செய்த அடைகளைச் சாப்பிடும் முன்னர் திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவர்களுக்கு என  அவரவர் இலையில் நிவேதனம் செய்திருக்கும் அடைகளில் குறைந்தது ஒன்றாவது எடுத்து வெல்லஅடை ஒன்று+உப்பு அடை ஒன்று என எடுத்துத் தங்கள் கணவருக்கெனத் தனியாக வைத்துச் சாப்பிட்ட உடனே கணவருக்கு அதைத் தர வேண்டும். இதை நினைவாகச் செய்யணும். பலருக்கும் இது தெரியவில்லை அல்லது பழக்கமில்லை என்கிறார்கள். ஆனால் இன்று ஒரு நாள் தான் நாம் முன்னர் சாப்பிட்டு நாம் சாப்பிடுவதில் கணவனுக்கும் பங்கு கொடுக்கிறோம்.


வெல்ல அடைகள்


                                                             உப்பு அடைகள்


24 comments:

 1. உருகாத வெண்ணெயும் காரடையும் நான் தந்தேன். ஒரு நாளும் என் கணவனைப் பிரியாதிருக்க வரம் தா என்று சொல்ல வேண்டுமாம்! சுதா சேஷையன் சொல்லி இருக்கார்.

  ReplyDelete
  Replies
  1. அவர் என்ன வேணா சொல்லிக்கட்டும். நாங்க இதான் சொல்லுவோம்!:)

   Delete
 2. அம்மாடி.... எவ்வளவு வேலை! தாவு தீர்ந்துடும் போல!

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் இல்லை! முதல்நாள் மாவு மிக்சியில் அரைச்சு வைச்சால் மறுநாள் கிளறி இறக்கித் தட்ட வேண்டியது தான். சுலபம் தான்! :) அரிசி நல்ல அரிசியா இருக்கணும். :)

   Delete
 3. எங்கள் வீட்டில் இது பழக்கமில்லை. இன்று மாலை ஒரு மாமி கொண்டு வந்து தருவார். ஐ'ம் வெய்ட்டிங்!!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம் அப்படியா? :)

   Delete
 4. அடை வழக்கம் போல செய்து சாப்டாச்சு!!! உங்கள் குறிப்புதான் இங்கும்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதே, அதே! நம்ம ஷ்டைலு தான் எங்கும்! :)

   Delete
 5. இந்த விபரீத விளையாட்டிற்கு வரலே அம்மா...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, பயந்துட்டீங்க போல!

   Delete
 6. நோன்புக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக இதனைத் தாங்கள் வெளியிட்டிருந்தால் மேலும் பலருக்கும் பயன்பட்டிருக்கும். பரவாயில்லை. நல்லபடியாக நோன்பு ஆச்சா? சந்தோஷம். படங்களில் எல்லாமே ஜோராக உள்ளன.

  http://arusuvaikkalanjiyam.blogspot.com/2015/03/blog-post.html இதோ இந்தப்பதிவினில் உள்ள செய்முறைகளையும் ஒருமுறைப் பார்த்துவிட்டு, எங்காத்திலும் ரொம்ப ஜோராகவே செய்தனர்.

  பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ராதா பாலுவோட குறிப்புத் தானே! இருக்கலாம். ஆனால் நான் என் அம்மா சொல்லிக் கொடுத்தபடியே செய்து வரேன். :)

   Delete
 7. /உள்ளங்கையில் வைத்துத் தட்டி நடுவில் சின்னதாகக் குழி செய்து/ குழி எதற்கு ? செய்முறை விலாவாரி.

  ReplyDelete
  Replies
  1. நடுவில் வேகணும் இல்லையா? அதற்குத் தான் நடுவே சின்னதாக் குழி செய்வார்கள். பாதுஷாவுக்குக் கூட உருட்டும்போது நடுவில் குழி செய்வதுண்டு. பொரித்து எடுக்கையில் குழி தானே மூடிக்கொள்ளும். ஏனெனில் உள்ளேயும் வெந்து உப்பிக் கொண்டு வரும்.:))))

   Delete
 8. அரிசி மாவையே நன்றாக வறுத்துவிட்டு அடை செய்கிறேன். நன்றாக வருகிறது. காலையிலேயே அடை செய்து - அதுவே காலை சிற்றுண்டி - தளிகையும் செய்தாயிற்று. சென்ற வருடம் அக்கா அகத்தில் இருந்தேன். இன்று முழுக்க அவள் நினைவே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

  என் மாமியார் நான்கு வடிவங்களில் அடை செய்யவேண்டும் என்பார். உருண்டை, தட்டை (நீங்கள் செய்திருப்பது) நீள உருண்டை, செவ்வகம் என்று செய்யவேண்டுமாம்.

  உங்களுக்கும், இந்தப் பதிவைப் படித்து கருத்திட வரும் அத்தனை பெண்களுக்கும் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அரிசி மாவை எங்க வீட்டில் கோலம் போடுவதற்கும் ரவா தோசை போன்ற கரைத்த தோசைகளில் போடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம். இங்கேயும் காலை ஏழரைக்குள் செய்து முடித்தாயிற்று. நிவேதனம் செய்யும்போது தான் ஒன்பதுக்கு அப்புறமாச் செய்தேன். எங்க வீடுகள் நாலு வடிவங்கள் எல்லாம் இல்லை. கருத்திட்ட உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.

   Delete
 9. சிறந்த பகிர்வு

  ReplyDelete
 10. இதெல்லாம் நான்
  சாப்பிட்டதே இல்லை
  இனிமேல செய்து
  சாப்பிட்டு பார்க்கிறேன்.....
  பகிர்வுக்கு நன்றி நட்புறவே....

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும், அன்புக்கும் நன்றி.

   Delete
 11. எங் காத்தில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த விஷயம் என்பதால் நோன்பு அன்றைத்தவிர வருஷத்தில் இன்னும் ஓரிரு நாட்கள் இதுவே
  TIFFIN !
  இப்பொழுதெல்லாம் P G -level -ல் Event Management என்று ஒரு subject - ஏ introduce செய்திருக்கிறார்கள் --உங்கள் செய்முறை விளக்கம் P G-level க்கும் மேலே ..
  நம் குடும்பங்களில் ஸ்ராத்தம் ( திங்கள்?) சுமங்கலிப்ப்ரார்த்தனை போன்ற விசேஷங்களுக்கு நம் அம்மாக்கள் செய்யும் ஏற்பாடுகளும் ..மாதிரி தான் ..ப்ரமாதம் ..மாலி

  ReplyDelete
 12. எங் காத்தில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த விஷயம் என்பதால் நோன்பு அன்றைத்தவிர வருஷத்தில் இன்னும் ஓரிரு நாட்கள் இதுவே
  TIFFIN !
  இப்பொழுதெல்லாம் P G -level -ல் Event Management என்று ஒரு subject - ஏ introduce செய்திருக்கிறார்கள் --உங்கள் செய்முறை விளக்கம் P G-level க்கும் மேலே ..
  நம் குடும்பங்களில் ஸ்ராத்தம் ( திங்கள்?) சுமங்கலிப்ப்ரார்த்தனை போன்ற விசேஷங்களுக்கு நம் அம்மாக்கள் செய்யும் ஏற்பாடுகளும் ..மாதிரி தான் ..ப்ரமாதம் ..மாலி

  ReplyDelete
  Replies
  1. பலரும் இதை மாலை நேரச் சிற்றுண்டியாகச் செய்வதாய்ச் சொல்லுகின்றனர். நான் உப்புமாக் கொழுக்கட்டை செய்கையில் கொஞ்சம் மாவில் தனியாக வெல்லம் போட்டுச் செய்வதுண்டு. ஆனால் இங்கே உப்புமாக் கொழுக்கட்டைக்கு வாக்குகள் ஒற்றைப்படையில் என்பதால் எப்போதாவது தான்! :)))))

   Delete
  2. //உங்கள் செய்முறை விளக்கம் P G-level க்கும் மேலே ..//பாராட்டுக்கு நன்றி மாலி சார். கொஞ்சம் அதிகமாய்ப் பாராட்டறீங்களோ என்னும் எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியலை! :) எங்க வீட்டிலும் ஸ்ராத்தத்துக்கு முதல் நாளில் இருந்தே ஏற்பாடுகள் துவங்கும். :)

   Delete