கடல் கடந்து சென்ற தமிழ்ச் சுவடிகளிலே அரிய நூல்கள் எவையேனும் இருக்குமென்பது என் கருத்து. ஆயிரம் பிரதிகளில் என்ன என்ன நூல்கள் உள்ளனவோவென்று சிந்தித்தேன். என் பிரஞ்சு நண்பர் சில நூல்களின் பெயர்களை எழுதி அனுப்பினார். வில்லைப்புராணம் என்று ஒன்று இருப்பதாக ஒருமுறை எழுதினார். நான் அதைப் பற்றிப் பின்னும் விசாரித்தேன். அவர் அது 494 செய்யுட்களை யுடையதென்றும் இன்ன இன்ன சருக்கங்களையுடையதென்றும் எழுதியிருந்தார். அது மட்டுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேட்டு எழுதியிருந்த வாக்கியங்களால் எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்து தம் கைப்பட அந்நூல் முழுவதையுமே எழுதி அனுப்பிவிட்டார்.
ஏட்டுச் சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டில் அங்ஙனம் எழுதக் கூடியவர்கள் மிகச் சிலரே. தமிழ் நூல்களைச் சிரத்தையோடு படிப்பவர்களே அதிகமாக இல்லாதபோது ஏட்டுச் சுவடியைப் படிப்பதாவது! பார்த்து எழுதுவதாவது!
இந்த நிலையில் பாரிஸிலிருந்து கடல் கடந்து வந்த வில்லைப் புராணத்தை நான் புதையலெடுத்த தனம் போலவே கருதினேன். என் நண்பர் அதை எத்தனை சிரத்தையோடு எழுதியிருந்தார்! அதன் தலைப்பில் சிவலிங்கத்தின் உருவமும் நந்தியுருவமும் வரைந்திருந்தார். அப்பால் அந்தப் பிரதியைக் கொண்டு வேறொரு பிரதி எழுதச் செய்து வின்ஸோன் துரைக்கே அவரது பிரதியை அனுப்பி விட்டேன்.
வில்லைப் புராணத்தை அதுகாறும் நான் படித்ததில்லை; கேட்டதுமில்லை. அப்புராண ஏடுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. படித்துப் பார்த்தபோது அது வில்வவனமென்னும் தலத்தின் புராணமாக அது காணப்பட்டது. வில்வமென்பது வில்லமென வழங்கும். வில்வவனமென்பது வில்லவனம் என்று ஆகி அது மருவி வில்லையாயிற்றென்று தேர்ந்தேன். தமிழ்நாட்டில் எவ்வளவோ வில்வவன ஸ்தலங்கள் இருக்கின்றன. எந்த வில்வவனத்தைப் பர்றிப் பாராட்டுவது அந்நூலென்று எனக்கு விளங்கவில்லை. மேலும் மேலும் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.
அப்புராணத்திலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றிலிருந்து (பாயிரம், 10) அங்கே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் குயிலம்மையென்று தெரியவந்தது. அப்போது,
"பக்குவமாகக் கவிநூறு செய்து பரிசுபெற
முக்கரணம்மெதிர் பல்காலும் போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடியலுத்து வந்த
குக்கலையாண்டருள் வில்வ வனத்துக் குயிலம்மையே!"
என்ற தனிப்பாடலும் ஞாபகத்துக்கு வந்தது. அந்தத் தனிப்பாடல் வில்லைப் புராணத்திற்குரிய தலத்தைப் பற்றியதென்று நிச்சயித்தேன். அப்பால் என்னுடைய நண்பர்கள் மூலமாக விசாரித்து வந்தேன். புதுச்சேரிக்கு அருகில் உள்ள வில்வநல்லூர் அம்பிகையின் பெயர் கோகிலாம்பிகை யென்று தெரிய வந்தது. அவ்வூர்ப் புராணம் கிடைக்குமாவென்று தேடச் செய்தேன். நல்லகாலமாகச் சில பிரதிகள் அவ்வூரிலிருந்து கிடைத்தன; அவற்றின் உதவியால், கடல் கடந்து வந்த பிரதியைச் செப்பம் செய்து கொண்டேன்.
அந்தப் புராணம் *வீரராகவரென்னும் பெயருடைய ஒரு புலவரால் இயற்றப் பெற்றது. நல்ல வாக்காக இருந்தது. ஒரு முறை புதுச்சேரிக்குச் சென்றபோது, அதனருகில் வில்வநல்லூர் இருப்பதை அறிந்து அங்கே சென்று ஆலய தரிசனம் செய்தேன். அது மிகப் பழைய தலமாக இருக்கவேண்டுமென்று தோற்றியது. அந்தத் தலத்தைப் பற்றி ஏதேனும் தெரியுமாவென்று பலரை விசாரித்தேன். ஒரு முதிய வீரசைவர், "இது மிகப் பழைய தலம். தேவாரத்தில் வரும் வில்வேச்சரமென்னும் வைப்பு ஸ்தலம் இதுதான்.: என்றார். நான் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன்.
வில்வவனத்தைப் பற்றி நான் அறிந்த விஷயங்களை வின்ஸோன் துரைக்குப் பிறகு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் தமிழ் இலக்கணமொன்று (Tamil Manual) எழுதினார். அதை எனக்கு அனுப்பினார்.
ஒரு முறை அவர் திருக்குறள், காமத்துப் பாலின் பிரெஞ்சுமொழிபெயர்ப்புப் புத்தகமொன்றை அனுப்பி, "இதனை என் மாணவர் ஒருவர் மொழி பெயர்த்தார். நான் முகவுரை எழுதியிருக்கிறேன்." என்று எழுதினார். தமிழாராய்ச்சியாளராக இருப்பதோடு தமிழ்ப் போதகாசிரியரகவும் அவர் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். தம்முடைய மாணாக்கரொருவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறாரென்றும் என்னைப் பார்க்க வருவாரென்றும் எழுதினார். அம்மாணாக்கர் பெயர் பொண்டெனூ'(Marquis De Barrique 'Fontainieu) என்பது.
1902-ம் வருஷம் அம்மாணாக்கர் இந்நாட்டில் நடைபெற்ற கீழ்நாட்டுக் கலைஞர் மகாசபை'(Orientalists' 'Congress)யின் பொருட்டு வந்திருந்தார். அவர் கும்பகோணத்தில் என் வீட்டை விசாரித்துக்கொண்டு வரும்போது போலீஸார் அவரை வேற்று நாட்டு ஒற்றரென்றெண்ணிப் பிடித்துப் பாதுகாப்பில் வைத்துவிட்டார்கள். அது போயர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். சிறைப்பட்ட பிரஞ்சுக்காரர் அக்காலத்தில் கும்பகோணத்தில் ஸப் கலெக்டராக இருந்த ஸ்ரீமான் வைபர்ட் துரையென்பவருக்கு ஒரு கடிதமெழுதித் தாம் இன்னாரென்பதையும் தாம் வந்த காரியம் இன்னதென்பதையும் தெரிவித்தார். அவர் பிரெஞ்சு பாஷை தெரிந்தவர். கடிதம் கண்ட உடனே அவரே நேரில் வந்து பிரெஞ்சுக் கனவானை விடுவித்துத் தம் விருந்தினராக இருக்கச் செய்தார்.
அப்பால் பொண்டெனூ சிலருடன் என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஜூலியன் வின்ஸோனைப் பற்றி அவர் மிகவும் மதிப்பாகப் பேசினார். என்னிடம் அவ்விருவர்க்கும் உள்ள பேரன்பு அவருடைய சம்பாஷணையால் விளங்கியது.
நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், "இந்த மாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?" என்று கேட்டார். நான், "என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத் திண்ணையிலும் இருந்து படித்து வந்த மகாவித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்." என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது. அவரோடு நெடுநேரம் பேசினேன். தாம்போகும் மகாசபையில் ஏதேனும் ஒரு பழைய தமிழ் நூலைப் பற்றிய கட்டுரை ஒன்றைத் தாம் வாசிக்க விரும்புவதாகவும், அதற்கேற்ற பழைய நூற்பிரதி ஒன்று உதவினால் நலமாக இருக்குமென்றும் கூறினார். வெளிப்படாமல் இருந்த பழைய காஞ்சிப் புராணத்தை நான் தருவதாக ஒப்புக்கொண்டேன். அவர் தம் செலவில் அதன் பிரதி ஒன்றை எழுதச் செய்து கொடுத்தால் அனுகூலமாக இருக்குமென்று சொன்னார். அப்படியே செய்வதாக நான் கூறினேன். அப்பால் அவர் தஞ்சை சென்று அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:-
தஞ்சாவூர்,
6 அக்டோபர், '02.
மகாஸ்ரீஸ்ரீ சாமிநாதய்யரவர்களுக்கு அனேக வந்தனம்.
நான் கும்பகோணத்தை விட்டுப் புறப்படும்போது உங்களுக்கு விடுமுறை நாள் என்று கேள்விப்பட்டேன். ஆகையால் தங்களைச் சிரமப் படுத்த எனக்கு மனதில்லை.
மகாஸ்ரீ கலெக்டர் வீட்டில் நான் விருந்துண்ணும்போது உங்களைக் கீர்த்தியால் அறிந்து அதிக மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்களைத் தாங்கள் எனக்குக் காட்டிய பழைய காஞ்சிப் புராணத்தை என்னுடைய செலவில் காபியெடுக்கத் தங்களைக் கேட்கும்படி பிரார்த்தித்துக்கொண்டேன். நான் அந்தப் புராணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த மாட்டேனென்கிற நம்பிக்கை தங்களுக்கு இருக்கலாம்.
அதின் சாராம்சத்தை அறிந்து கீழ்நாட்டுப்பாஷைகளை ஆதரிக்கும் சங்கத்துக்கு (Orientalists' Congress) எழுத எண்ணமே தவிர வேறு எண்ணங் கிடையாது. இந்த அருமையான அச்சிடாத புஸ்தகத்தைத் தாங்கள் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்தீர்களென்றும் அதின் அசல் தங்களிடத்தில் இருக்கிறதாகவும் வெளிப்படுத்துவேன்.
நான் தங்கள் சினேகிதரும் என் உபாத்தியாயருமாகிய மகாஸ்ரீ வின்ஸோன் துரை(M.Vinson) பேரைச் சொல்லித் தங்களைப் பார்க்க வந்தபோது என்னை எவ்வளவு அன்பாய் அங்கீகரித்தீர்கள்! என்றால் தங்களை யான் கேட்கும் புராணத்தின் காபியைத் தருவீர்களென்று நம்புகிறேன்.
சாஸ்திரங்களை ஓங்கச் செய்யவும் அழகிய தமிழ்ப்பாஷையின் பெருமையை வெளிப்படுத்தவுமே இந்த உபகாரத்தைத் தங்களிடம் கேட்கிறேன்.
தங்கள் அபிமானத்தை எதிர்பார்க்கும்
Marquis De Barrique Fontainieu
நான் மதுரை, இராமேஸ்வரம் போய்த் திரும்புகையில் கும்பகோணம் வருகிறேன். தாங்கள் எனக்கு எழுத வேண்டுமானால் புதுச்சேரிக்குக் கடிதம் எழுதவும். அங்கிருந்து எனக்கு வந்து சேரும்.
அவர் விரும்பியபடி பழைய காஞ்சிப் புராணத்தைப் பிரதி செய்ய இயலவில்லையாதலின் என்னிடமுள்ள காகிதப் பிரதியையே அனுப்பினேன். அவர் அதை உபயோகித்துக்கொண்டு எனக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.
அவர் வந்து என்னைப் பார்த்ததையும் காஞ்சிப் புராணம் பெற்றது முதலியவற்றையும் தம்முடைய ஆசிரியராகிய வின்ஸோன் துரைக்கு எழுதி யிருந்தார். அவற்றை அறிந்த அவ்வாசிரியர் எனக்குத் தம் மாணாக்கரைப் பற்றி எழுதினார்.
ஸ்ரீபொண்டெனூ தம் கடிதத்தில், 'உங்களைக் கீர்த்தியால் அறிந்து மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்கள்' என்று குறிப்பித்திருந்தார். அதை நான் முதலில் நன்றாகக் கவனிக்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 1903-ம் வருஷம் ஜனவரி மாதம் தஞ்சாவூர்க் கலெக்டரிடமிருந்து ஏழாம் எட்வர்ட் மன்னர் முடிசூட்டு விழாவின் சம்பந்தமாக நடக்கும் தர்பாருக்கு வரும்படி எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் போனேன். அப்போது அரசாங்கத்தார் நான் பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து வருவதை நன்கு மதித்து ஒரு நன் மதிப்புப் பத்திரம் (Certificate of merit in recognition of researches and work in connection with ancient Tamil manuscript) அளித்தனர். அதனைக் கலெக்டர் துரை வழங்கினார். பொண்டெனூ என்னைப்பற்றிச் சிறப்பித்துப் பேசியதன் விளைவென்றே நான் அதனைக் கருதினேன். எனக்கு அரசாங்கத்தார் முதன்முறையாகத் தந்த அந்தச் சிறப்பை நன்றியறிவுடன் ஏற்றுக்கொண்டேன்.
எதிர்பாராதபடி இவ்விரண்டு பிரெஞ்சு நண்பர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிடமிருந்து 1910-ம் ஆம் வருஷத்திற்குப் பின் எனக்குக் கடிதம் கிடைக்கவில்லை. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. ஆனாலும் வில்லைப் புராணத்தையும், பழைய காஞ்சிப் புராணத்தையும் பார்க்கும்போதெல்லாம் பிரெஞ்சு தேசத்துத் தமிழாசிரியரையும், தமிழ் மாணவரையும் நினைக்கிறேன். அவ்விரண்டு நூல்களுள் காஞ்சிப் புராணம் இன்னும் வெளிப்படவில்லை.
ஜூலியன் வின்ஸோன் இப்பொழுது இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று நூறு கடிதங்க ளாவது எழுதியிருப்பார். அவர் இல்லை. ஆனால் அவர் அன்போடு எழுதிய கடிதங்கள் இருக்கின்றன. அவர் பழைய அன்பை நினைவூட்டும் வில்லைப்புராணம் வில்வவனப் பெருமையைக் காட்டிலும் அதிகமாக வின்ஸோன் துரையின் தமிழன்பை அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது.
**********************************************************************************
தமிழ்த்தாத்தாவின் நினைவு தினம் 28-4-17. தாத்தாவையும் அவர் தமிழுக்குச் செய்த தொண்டையும் நினைவு கூர்வோம். அவருடைய நினைவு மஞ்சரி பகுதி ஒன்றிலிருந்து ஓர் கட்டுரையின் சில பகுதிகளை இங்கே படிக்கலாம். இதிலிருந்து தாத்தாவின் புகழ் எவ்வளவு பரந்து விரிந்திருந்தது என்பதையும் அப்படி இருந்தும் அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையையும் அறிய முடிகிறது.
நல்ல பகிர்வு.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்
Deleteஒரு மாமேதையைப்பற்றிய சரித்திர நிகழ்வை அறியத் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteஎனது தளத்தில் தங்களுக்கு பதில் வந்து இருக்கின்றது.
நன்றி கில்லர்ஜி. உங்கள் தளம் வந்து பார்த்தேன். மேலே தொடரவேண்டாம் என்று தான் சும்மா இருக்கிறேன். நன்றி.
Deleteதமிழைப் பேண உழைத்த அறிஞரைப் பற்றிய தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி காசிராஜலிங்கம்
Deleteஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய
ReplyDeleteதிருவிடைக்கழி முருகர் பிள்ளைதமிழுக்கு உரை எழுதி இருந்தார்கள் என் கணவர் .
அதை டாகடர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தார்களால் அச்சிட்டு தற்போது வெளியிடபட்டுள்ளது.
அந்த புத்தகம் இன்று தான் அஞ்சலில் வந்து சேர்ந்தது .
தமிழ்த்தாத்தாவை நினைத்துக் கொண்டேன்.
உங்கள் பதிவையும் எதிர்ப்பார்த்தேன். வந்து விட்டது பல செய்திகளை தெரிந்து கொண்டேன்.
தாத்தா தான் கவனத்தைக் கவர்ந்து கை தட்டிக் கூப்பிட்டதைப் போல உணர்ந்தேன்.
Deleteஇந்தத் தடவையும் எப்போதும் போல சிறப்பு.
நன்றி கோமதி அரசு. முகநூலிலும் பார்த்தேன். ஜீவி சாருக்கும் நன்றி
Deleteநம் தாத்தாவைப் பற்றிய அஞ்சலிக் கட்டுரைக்கு நன்றி!
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
நன்றி செல்லப்பா சார்!
Deleteநல்லதோர் பகிர்வு.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteநல்ல பகிர்வு...நிறைய தகவல்கள் அறிந்தோம்....
ReplyDeleteநன்றி துளசிதரன்/கீதா
Deleteதமிழ் தமிழ் என்று பேசுவோருக்கு மத்தியில் தமிழை வளர்க்க முனைந்தவரைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி
ReplyDeleteஉண்மை ஐயா! நன்றி.
Deleteதமிழறிஞர் உ.வே.சா பற்றி தக்க தருணத்தில் எழுதியதற்கு நன்றி. அந்நியரின் ஆதிக்கத்தில், ஏழ்மையில் உழன்றுகொண்டே செந்தமிழ்ச்சுவடிகளை, அறிஞர்களை அங்குமிங்குமாய்த் தேடித்திரிந்து எத்தனை செய்திருக்கிறார் தமிழுக்கு. அவரது உழைப்பின்றி பல தமிழ்ச்செல்வங்களை பின்வந்த தலைமுறைகள் பார்த்திருக்கவே முடியாது.
ReplyDeleteஇப்போதெல்லாம் செம்மொழி, மும்மொழியென்றெல்லாம் கூவி, மொழிக்காவலர், புரவலர் என்றெல்லாம் தனக்குத்தானே அலங்கார வேஷமணிந்து புளுகித்திரிகிறது ஒரு பெருங்கூட்டம், தமிழின் பெயரில் ஏதேதோ செய்துகொண்டு. இதனையும் அனுபவித்துப் பொறுமைகாட்டி நிற்கின்றன நமதருமைத் தமிழ் நிலமும், மொழியும்.
நன்றி ஏகாந்தன். தமிழ்த்தாத்தா அவர்களின் நினைவு தினம் 28 ஏப்ரல். மற்றபடி உங்கள் கருத்திற்கு நன்றி.
Deleteநல்ல பதிவு. தமிழ்த்தாத்தா அவர்களின் ஆர்வம்தான், நிறைய தமிழ் நூல்கள் கிடைத்ததற்குக் காரணம்.அவரது வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரசியமானது. எனக்கு அவரது ஆசிரியர் மீ.சு அவர்களின் வரலாறையும், வேறு பல வரலாறுகளையும் தெரிந்துகொள்ள ஆவல் (உ.வெ.சா அவர்கள் எழுதியது). எங்கு கிடைக்கும்?
ReplyDeleteதிரு நெ.த. பெசன்ட் நகர், திருவான்மியூர் சாலையில் அல்லது கலாக்ஷேத்திரா செல்லும் சாலையில் உ.வே.சா. நூலகம் அமைந்துள்ளது. எனக்குச் சரியான விலாசம் கிடைக்கவில்லை. கிடைத்தால் உங்களுக்குத் தருகிறேன். கூகிளிலும் தேடினேன். விலாசம் கிடைக்கவில்லை. அங்கே அவர்களின் எல்லாப் புத்தகங்களும் கிடைக்கும். மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றித் திரு உ.வே.சா. எழுதிய வாழ்க்கை வரலாறு, நினைவு மஞ்சரி 2 பாகங்கள், தாத்தா அவர்களின் சுயசரிதை (அந்தக்கால விகடனில் வந்தது என்பார்கள்) எல்லாமும் தவிர அவர் வெளியிட்ட புத்தகங்கள் என எல்லாமும் கிடைக்கின்றன.
Deleteநல்ல பதிவு. அரிய விஷயங்களை அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி!
ReplyDelete