வீடு அமைதியாக இருக்கிறது. சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. அதிலும் முக்கியமாகத் தம்பளர்கள்! சமையலறையில் இரண்டு, பாத்திரம் தேய்க்கும் சிங்கில் இரண்டு, சாப்பாடு மேஜையில் 2 என அங்கும் இங்குமாகக் கிடக்கும் தம்பளர்கள் இன்னிக்கு எடுக்க ஆள் இல்லாமல் வைத்த இடத்திலேயே மௌனம் காக்கின்றன. குஞ்சுலுவின் ஐபாடில் இருந்து வரும் கார்ட்டூன் குழந்தைகளின் சிரிப்புச் சப்தத்துடன் குஞ்சுலு சிரிக்கும் சப்தம், நடுநடுவில் ஐ பாட் பார்த்தது போதும்னு அவ அப்பா/அம்மா சொல்லும்போது நோ என உரத்த குரலெடுத்துக் கத்தும் குஞ்சுலுவின் கோபக்குரல்! எதுவும் இல்லை.
குளிக்க/சாப்பிட/பால் குடிக்க எனப் படுத்தும் குஞ்சுலு! அதைச் சமாதானம் செய்து அதற்குப் பொழுது போவதற்காகப் பையர் யாத்ரி நிவாஸ் அருகே இருக்கும் பார்க், வண்ணாத்திப் பூச்சிப் பூங்கா என அழைத்துச் சென்றது தவிர அதுக்கு பைக்கில் போவது பிடிச்சிருக்கு என்பதால் தினம் ராத்திரி அதைக் கூட்டிக் கொண்டு பைக்கில் ஓரிரு கிலோ மீட்டர்கள் போயிட்டும் வருவார். ராத்திரி வாசல் கதவைப் பூட்ட வேண்டி ரங்க்ஸ் உட்கார்ந்திருப்பார்.
தொலைக்காட்சிப் பெட்டியைப் போடவும்/அணைக்கவும் என ரங்க்ஸ் வைத்திருந்த நீளக் கம்பில் தேசியக்கொடியை ஒட்டி வைச்சிருக்கு குஞ்சுலு. அதை எடுக்கக் கூடாது எனவும் ஆர்டர் போட்டிருக்கு. அதை வைத்துக் கொண்டு இன்னொரு குச்சியையும் வைத்துக் கொண்டு காலண்டர், வால் க்ளாக், பஞ்சாங்கம் போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு எடுத்த பாடங்கள். என்னை ஓல்ட் லேடி எனவும் அவரை ஓல்ட் மேன் எனவும் கூப்பிட்டுக் கொண்டிருந்ததுக்கு திடீர்னு வெட்கம். அதைச் சொல்லி நாங்க கேட்டாலே வெட்கம் வந்துடுது. அவ அம்மா கணக்கு டேபிள்ஸ் சொல்லிக் கொடுத்தால் அதில் மனம் பதியாமல் விளையாட்டுக் காட்டும். அங்கங்கே இரைந்து கிடைக்கும் ஹேர் பான்ட்கள் விதம் விதமாக. தினம் ஒன்றை எடுத்துத் தலையில் வைச்சுக்கணும். கொம்பு முளைச்சாப்போல் இருக்குமா? நான் முயல்குட்டி எனக் கூப்பிடுவேன். அதுக்குக் கோபம் வரும்.
நாங்க வாங்கிக் கொடுக்கும் புதுப் பட்டுப்பாவாடையையோ, அல்லது நகையையோ போட்டுக் கொண்டால் உடனே எங்களிடம் வந்து காட்டாது. கண்ணில் குறும்பு மேலிடத் துணியால் அல்லது போர்வையால் தன்னை மூடிக் கொள்ளும். காதுத் தோடு, ஜிமிக்கி போட்டுக் கொண்டால் காதுகளை மூடிக்கும். நாம கவனிக்காதபோது கையை எடுக்கும். அப்போப் பார்த்துட்டேனே என்று சொன்னால் சிரிக்கும். இன்னமும் கோர்வையாக எழுத வரலை. கணக்கு ஓரளவு போடுகிறது.வரைவதிலும் கைவேலைகள் செய்வதிலும் உள்ள ஆர்வம் வியக்கத்தக்கதாய் இருக்கு. அதைப் பார்க்கையில் படிப்பில் ஆர்வம் கம்மி தான். விரைவில் நன்றாய்ப் படிக்கவும் செய்யணும். மேலும் இங்கே நைஜீரியாவில் ஆங்கிலேய வழிக்கல்வி என்பதால் பாடங்களை மெதுவாய்த் தான் சொல்லித் தராங்க.
இது எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டு தாத்தாவும்/பாட்டியும் உட்கார்ந்திருக்கப் போறோம்.குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!
சந்தோஷமான நினைவலைகளை மீண்டும், மீண்டும் நினைவு கொள்ளுங்கள் மகிழ்ச்சி பிறக்கும்.
ReplyDeleteநன்றீ கில்லர்ஜி! திடீர் திடீர்னு சுரதா வேலை செய்வதில்லை!:(
Deleteதுர்கா குட்டியின் விளையாட்டுகளை கேட்டு மகிழ்கிறேன்.
ReplyDeleteகாலில் போட்டு இருக்கும் கொலுசு ஒலிக்க, பட்டுபாவாடையும், காது ஜிமிக்கிகள் ஆட வீட்டுக்குள் ஓடி யாடி பாத்திரங்களை ஒலி எழுப்பி, தாத்தா, பாட்டியுடன் விளையாடி களித்த நாட்களை மன கண்ணால் காண்கிறேன், அருமை.
அடுத்து வரும் வரை நினைத்து நினைத்து நினைவு பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டும்.
வாங்க கோமதி. அப்படியே சொல்லால் சித்திரம் வரைந்து விட்டீர்கள். இன்னிக்கு ராத்திரி நைஜீரியா பயணம். நினைத்துக் கொண்டே தான் இருக்கோம்.
Deleteபுயல் போல ஒரு வரவு.
ReplyDeleteதென்றலான உறவு
வெறுமை நேரங்களும்
தனிமை கணங்களும்
தூரப்போன நிகழ்வு
சந்தோஷ நாட்கள் சடுதியில் விரைய
குழந்தை
தன்னூர் திரும்பியதில்
வந்தது ஒரு பிரிவு
தணல் போல கொதிக்கும்
தனிமை நாட்களை
நினைவுகளின் ஈரத்தால் கடந்து
மழலை இன்பம் மறுபடி கேட்க
தவித்திருக்கும் இரு மனது...
அருமை ஶ்ரீராம். ரொம்பவே நன்னி. ர்ற சரியா வரலை கலப்பையில். சேமிச்சு வைச்சிப்பேன் உங்கள் கவிதையை
Deleteஆஹா... அருமையான நினைவலைகள். சுட்டிக் குழந்தைகள் படிப்பிலும் சுட்டியாக இருக்கும்.
ReplyDeleteஇந்தமாதிரி பாலைவனச் சோலைகளே வாழ்க்கையில் இன்டரெஸ்டிங் ஆன பகுதி
வாங்க வாங்க நெல்லை. ரொம்பவே ரசித்ததுக்கு நன்னி.
Deleteகொஞ்சம் சீர்திருத்தி நல்ல சிறுகதையாக்கலாம்.
ReplyDeleteJayakumar
ம்ம்ம்ம்ம்???? பார்க்கலாம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களது பேத்தியின் குறும்பு செயல்கள் மகிழ்வை தருகின்றன. நீங்கள் பதிவில் சொல்லி நாங்கள் கேட்கும் போதே எங்களுக்கு மகிழ்வாக இருக்கிறதென்றால், கூடவே இருந்து அவளது செயல்களை தினமும் ரசிக்கும் உங்களுக்கு அது எவ்வளவு சந்தோஷங்களை தருமென்பது புரிகிறது.அவளின் நல்ல திறமையான செயல்களுக்கு உங்கள் பேத்திக்கு வாழ்த்துகள். அங்கு என்ன கிளாஸ் படிக்கிறாள்.? அங்கு சென்றவுடன் குழந்தை தங்களையும் தேடும். அப்போது அவளின் அன்பு பேச்சுக்களில் அவள் அருகில் இருப்பதை உணர்வீர்கள். அவளை மீண்டும் அருகில் காணும் நாட்களும் விரைவில் ஓடி வந்து விடும். நான் என்ன சொன்னாலும், பிரிவென்பது மனதிற்கு சற்று கஸ்டந்தான். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. அதுக்குப் போகவே இஷ்டமில்லை. ஆனால் என்ன செய்ய முடியும்? பள்ளீக்குப் போகணூமே! குழந்தை முகம் நேத்திக்கே துவண்டு விட்டது.
Deleteஅந்த இனிய தருணங்கள் என்றும் உங்கள் நினைவுகளில் பொக்கிசங்களாக.......
ReplyDeleteநாங்களும் படித்து மகிழ்ந்தோம்.
அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறோம்.
கீதாக்கா, எனக்கு பாட்டி தாத்தா பேரன் பேத்தி உறவு ரொம்பப் பிடிக்கும். ரசித்து வாசிப்பேன் இதோ உங்கள் பதிவையும் ரசித்து ரசித்து வாசித்தேன்...குட்டி குஞ்சுலுவை என் மனசுல நினைச்சு நீங்க சொல்லிருக்கற ஒவ்வொன்றையும் அப்படியே விஷுவலா நினைச்சுப் பார்த்தேன்.
ReplyDeleteகுகு ஊருக்குப் போயாச்சுனா வெறுமையா இருக்கும் ஆனால் இனிய நினைவுகளை விட்டுச்சென்றிருக்கும் குழந்தை.
உங்க வரிகளிலேயே தெரிகிறது எவ்வளவு ஆசையோடு, அன்போடு, ரசிச்சு உங்க மனம் அப்படியே பளிச்.
கீதா
அக்கா இப்ப பார்த்தத வைச்சு சொல்ல முடியாது குகு படிப்பில் ஆர்வம் கம்மினு. அதுவும் இப்ப இருக்கற நாடே வித்தியாசமான நாடு. சூழல் வேறு. ஆனால் அதை விட குழந்தை கற்கும் அனுபவங்கள் அவள் வாழ்க்கைக்கு மிகவும் அடித்தளம். ஊர்ஊராகச் செல்லும் குழந்தைகளின் பார்வை, அறிவு மற்ற குழந்தைகளை விடக் கொஞ்சம் கூடுதல் பக்குவமும் அப்படியே வரும்.
ReplyDeleteஇப்போது குகு குழந்தை. இன்னும் போகப் போக அதன் ஆர்வங்கள் மாறலாம் வேறு ஆர்வங்கள் வரலாம். 10 ஆம் வகுப்பு வரை சுமாராக இருந்த குழந்தைகள் அதன் பின் பெரிய லெவலில் வருவாங்க. அதனால குகு பாருங்க செமையா வருவா...16 அடி பாயும் பாட்டி இருக்க குகு 32 அடி என்ன அதுக்கும் மேலேயே வருவா பாருங்க!
குகு க்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
கீதா
/// இது எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டு தாத்தாவும்/பாட்டியும் உட்கார்ந்திருக்கப் போறோம்.. ///
ReplyDeleteஇந்தக் காலத்துத் தாத்தா பாட்டிகளுக்குக் கிடைத்திருக்கும் வரம் இது தான்..
/// இது எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டு தாத்தாவும்/பாட்டியும் உட்கார்ந்திருக்கப் போறோம்..///
ReplyDeleteஇந்தக் காலத்து தாத்தா பாட்டிகளுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வரம் இது..
எங்கள் வீட்டிலும் இதே நிலை தான்.. மனம் வலிக்கின்றது..