நம்ம ரங்க்ஸ் இப்போக் கொஞ்சம் கொஞ்சம் எழுந்து நடக்கிறார். பிசியோ தெரபிஸ்ட் தன்னால் முடிந்ததை முழு ஈடுபாட்டுடன் செய்வதால் இந்த அளவுக்குப் பலன் வந்திருக்கிறது. ஜூன், ஜூலையில் மருத்துவமனைக்குப் போனப்போ எல்லாம் ஆம்புலன்ஸில் தான் படுக்க வைத்து அழைத்துச் சென்றேன். வரும் நாட்களில்; கொஞ்சம் மாறும் என நம்பிக்கையுடன் இருக்கேன். ஆனால் இந்த ஹோம்கேர் ஆட்கள் தான் விதம் விதமாக வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் கழிவறைப் பயன்பாடு. மத்யமரில் ஓர் பெண்மணி இந்த ஹோம்கேர் ஆட்கள் பற்றி எழுதி இருந்தாலும் இதைச் சொன்னாங்களானு தெரியலை. என்னோட நிலை தர்மசங்கடமானது. சொல்லுவது தப்பா/சரியானும் தெரியலை. ஆனாலும் இது ஒரு தீராத பிரச்னை. அபார்ட்மென்ட் வளாகத்தில் கீழே கார் பார்க்கில் 2 அல்லது 3 பொதுக்கழிவறையும் மேலே மொட்டை மாடியில் இரண்டு பொதுக்கழிவறையும் இருக்கு. நம்ம வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே பெண்களாக இருப்பதால் பகல் வேளை என்றால் கூட நான் எங்க கழிவறையையே பயன்படுத்திக்கலாம்னு சொல்லிக் கொண்டிருக்கேன். ஆனால் அதைச் சுத்தம் செய்வதில் தான் பெரிய பிரச்னையே இருக்கு. நான் கொஞ்சமும் தயங்காமல் போய்ச் சுத்தம் செய்துடுவேன். ஆனால் இரவில் வரும் பெண்மணி நாங்க பயன்படுத்துவதை நாங்க தான் சுத்தம் செய்யணும்னு சொல்லிட்டுச் செய்வாங்க. ஆனால் பகலில் வந்து கொண்டிருந்த பெண்மணிக்கு இது ஒத்து வரவில்லை.
உங்க வீட்டுக் கழிவறை. நீங்க தான் சுத்தம் செய்யணும்னு சொல்லாமல் சொல்லுவாங்க. ஆனால் அவங்க போனால் உள்ளே போய்க் கதவைச் சார்த்திக் கொண்டால் மணிக்கணக்காக ஆகிடும். தன்ணீரே ஃப்ளஷ் செய்யும் சப்தம் கேட்காது. அவங்களிடம் கேட்டால் நான் கழிவறையைப் பயன்படுத்தவே இல்லைனு சொல்லிடுவாங்க. அடுத்து இவர் போனால் துர்நாற்றத்துடன் கழிவுகளுடன் இருக்கும். இரண்டு, மூன்று முறை சுத்தம் செய்துட்டு உட்காரும் இடமெல்லாம் நீர் விட்டு அலம்பிட்டுப் போகணும். அப்படியும் இதை அந்த அம்மா கண்டுக்கவே மாட்டாங்க இரவு வரும் பெண்மணி தான் வாரம் இருமுறை சுத்தம் செய்து தருவாங்க. ஹோம்கேர் ஆர்கனைசரிடம் இதை ஒரு பெரிய குற்றமாகச் சொல்லி நான் வேலை வாங்குவதாகவும் அவங்களை அழ வைப்பதாகவும் சொல்லி இருக்கார். ஆர்கனைசர் என்னைக் கேட்டப்போ அப்போ அவங்க பயன்பாட்டில் இருக்கும் கழிவறையை நான் சுத்தம் செய்து கொடுக்கணுமானு கேட்டதுக்கு அவங்களிடம் பதிலே இல்லை. பின்னர் நான் விளக்கிச் சொன்னேன். பொதுக்கழிவறை மொட்டை மாடியிலும், கார் பார்க்கிலும் இருப்பதால் இவங்க அவசரத்துக்குப் போய்வரக் கஷ்டமாக இருக்கும் என்பதாலும் இருட்டு நேரத்தில் பெண்கள் தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும் வேண்டி எங்க கழிவறையையே பயன்படுத்திக்கச் சொன்னதாகவும், அவங்க பயன்பாட்டில் இருக்கும்வரை அவங்க தான் சுத்தம் செய்யணும் என்றும் திட்டவட்டமாகச் சொன்னேன். ஆனால் அது எவ்வளவு தூரம் சரியாக வரப் போகிறதுனு புரியலை.இப்போத் திடீர்னு இந்த இருவரையும் மாற்றும்படி நேர்ந்து விட்டதால் ஹோமில் வேலை செய்யும் இளம் பெண்களையே அனுப்பறாங்க. இளம்பெண்கள். எல்லோரும் 20/25 வயதுக்குள். ஹோமில் ஒருத்தர் நாலைந்து முதியவர்களைக் கவனிப்பதால் இங்கே இவரை மட்டும் கவனிப்பதில் அவங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் இதுவும் எத்தனை நாட்களுக்கோ எனத் தோன்றுகிறது.