பகலுக்கு வந்து கொண்டிருந்த பெண் ஆசிரமத்தில் வளர்ந்ததாகச் சொன்னார். வயது என்னமோ 30க்குள் தான். அதுக்குள் கல்யாணம் ஆகிப் பனிரண்டு வருஷங்களாம். 2 பெண் குழந்தைகள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார். நான் கொஞ்சம் கண்டிப்பாகப் பேச்சைக் குறைனு சொல்லிட்டேன். அதோடு அவள் மற்றவங்களைக் குறிப்பாக இரவுக்கு வரும் பெண்மணியையும், எங்க வீட்டில் ஏழெட்டு வருஷங்களாக வேலை செய்யும் பெண்ணையும் பற்றிக் குற்றம் சொல்ல ஆரம்பித்தார். இரவில் வருபவர் அப்பாவைச் சரியாகத் துடைத்துச் சுத்தமாக வைச்சுக்கலை, நீங்க சொல்லணும் என்று என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் சுத்தமாகத் தான் செய்து வந்தார். ஏனெனில் நான் இவங்க எல்லாம் உடம்பு துடைத்து, டயபரை மாற்றிச் சுத்தம் செய்யும்போதெல்லாம் நான் கூடவே தான் இருப்பேன். அதே போல் எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணையும் சரியாகப் பெருக்கலை, துடைக்கலை, மூலை எல்லாம் குத்திவிட்டுப் பெருக்கித்துடைக்கச் சொல்லுங்க என்றெல்லாம் ஆரம்பிச்சார். எங்க வீட்டுக்கு வரும் ஃபிசியோதெரபிஸ்டிடம் காலில் விழுந்து சாப்பிட்டு 3 நாட்கள் ஆயிடுச்சு, அம்மா இன்னமும் (நான் தான்) சம்பளம் கொடுக்கலை, ஏதானும் உதவி பண்ணுங்கனு அழுது கெஞ்சி 500 ரூபாய் வாங்கிட்டார். அவங்க சம்பளமெல்லாம் என் மூலமே போகாது. எனக்கு மொத்தப் பேச்சு வார்த்தையும் ஹோம்கேர் ஆர்கனைசரிடம் தான். நான் ஒரு நாள் மிகக் கடுமையாக நீ உன் கணவரிடமே போய் அங்கே சேர்ந்து குடித்தனம் பண்ணுனு சொல்லிட்டேன். மறு நாளில் இருந்து வருவதில்லை. இப்போ வேறே ஒருத்தர் வருகிறார். என்னதான் காலை சீக்கிரம் வரச் சொன்னாலும் அவர் சௌகரியத்துக்குத் தான் வரார். மாலையும் சீக்கிரம் கிளம்பிடுவார். இரவு வரும் பெண்மணியிடம் கேட்டுக் கொண்டு அவங்களைக் கொஞ்சம் சீக்கிரமா வரச் சொல்லிச் சொல்லி இருக்கோம். ஏழேகாலுக்குள் வந்துடறார் இதிலே ஒரு பெண் இரவு வரும் பெண்மணி குலதெய்வக் கோயிலுக்குப் போனதால் லீவில் மாற்றாக வந்தவர் பிடிவாதமாக இனிமேல் ராத்திரி நான் தான் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் ஒவ்வொருத்தருக்காகத் தொலைபேசியில் அழைத்து இங்கே கட்டில், மெத்தை எல்லாம் போட்டிருக்காங்க, ஏசியும் ஓடுது. சௌகரையமா இருக்கு. நான் இனிமேல் இங்கே தான் இரவுக்கு இருக்கப் போறேன் என அறிவிப்புச் செய்து கொண்டிருந்தாங்க. அவங்களைக் காலை கிளப்ப ரொம்பப் பாடு பட்டேன்.
இதுக்கு நடுவில் போனவாரம் வியாழனன்று இரவு திடீர் எனக் கண்ணில் இடக்கண்ணில் ஏதோ குத்தல்/குடைச்சல். கண்ணை மூட முடியலை/திறக்கவும் முடியலை. எப்படியோ படுத்துத் தூக்கம்னு பெயர் பண்ணினேன். கண் மருத்துவரிடம் போனால் மணிக்கணக்காய் உட்கார்ந்திருக்கணும்னு தெரிந்த ஃபார்மசியில் கண்ணுக்குச் சொட்டு மருந்து கேட்டிருந்தேன். கூடவே 2 மாத்திரைகளையும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார் மெட்ராஸ் ஐயாக இருக்கலாம்னு அவர் சந்தேகம். அன்று கொஞ்சம் பரவாயில்லைனு இருந்த கண் மறுபடி ஞாயிறன்றிலிருந்து தொந்திரவு செய்யவே வேறே வழியில்லாமல் ஆயிரத்தெட்டுப் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கொடுத்துட்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு அப்புறமாச் சாப்பிட மாதுளை ஜூஸும் போட்டு வைச்சுக் கண்ணாஸ்பத்திரிக்குப் போனேன். மீட்டர் ஆட்டோனு பெயர். அந்தப் பையர் நம்ம வீட்டிலிருந்து தெற்கு வாசலுக்கு எழுபது ரூபாய் ஆகிவிட்டதாகவும் மீட்டர் அவ்வளவு காட்டுவதாகவும் பயங்கரமான பொய் சொன்னார். நான் பணத்தை எடுக்கையிலேயே அவர் மீட்டரிடம் ஏதோ பண்ணுவதைப் பார்த்துட்டேன். காட்டிக்காமல் 50 ரூபாய் தான் எப்போவும் கொடுப்பேன். அதான் கொடுப்பேன்னு சண்டை போட அவர் ஒத்துக்க மறுக்க உடனே உங்க சங்கத்தலைவரிடம் நான் பேசிக்கிறேன். நீ எழுபது ரூபாய் என்ன, 100 ரூபாயகவே வைச்சுக்கோனு 100 ரூபாயைக் கொடுத்துட்டுக் கீழே இறங்கினேன். பையருக்கு பயமோ என்னமோ 50 ரூபாயைத் திரும்பக் கொடுத்தார். என்றாலும் சங்கத் தலைவரிடம் புகார் அளித்தேன்.
மருத்துவமனை உள்ளே போய் வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்ததும் அந்தப் பெண்ணிடம் என்னைச் சீக்கிரம் அனுப்பும்படியும் மாமா படுத்திருக்கும் விஷயத்தையும் சொன்னேன்.அரை மணி நேரத்தில் அனுப்புவதாகச் சொல்லிட்டு ஒரு வழியாப் பனிரண்டரைக்கு அனுப்பினாள். டாக்டர் பார்த்ததுமே கீதா மேடம், தூங்கி எத்தனை நாட்கள் ஆச்சு? என்று தான் கேட்டார். எனக்குத் திகைப்பு. பின்னர் கண்களைப் பல முறைகள் சோதனை பண்ணிட்டுத் தூக்கம் இல்லாததால் கண்க்ள் காய்ந்து நீர்ச்சுரப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் எதுக்கும் ரெடினா டெஸ்ட் பண்ணிடுவோம், இப்போ உங்களால் முடியுமா? அதுக்கு நேரம் ஆகும் என்றும் சொன்னார். இன்னொரு நாள் வீட்டில் டெஸ்டுக்குச் சொல்லிட்டுத் தயார் நிலையில் வரேன்னு சொன்னேன். அவருக்கும் அதற்குள்ளாக ரங்க்ஸின் உடல்நிலை பற்றிச் சொல்லி விட்டேன். ஆகவே அவர் இப்போதைக்குக் கண் இரண்டிலும் சொட்டு மருந்து விட்டுக்கச் சொல்லிக் கொடுத்துட்டுப் பின்னர் ஒரு நாள்வந்து ரெடினா செக் அப் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கார். அதுக்குப் போகணும். பயமாகவும் இருக்கு. அதே சமயம் போயிடணும்னும் தோணுது.
வணக்கம் சகோதரி
ReplyDeleteகொஞ்ச மாதங்களாகவே எவ்வளவு பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்திருக்கிறீர்கள்? இப்போதும் சந்தித்து கொண்டிருக்கிறீர்கள். பதிவை படிக்கவே மனதில் வருத்தம் மேலோங்குகிறது. வேண்டிய ஊதியமும் வாங்கிக் கொண்டு சாரை கவனித்துக் கொள்ள வருபவர்கள் இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள் என்ற திகைப்பு வருகிறது. உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மகன் மருமகளை கொஞ்ச மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு இங்கு உங்களுடனேயே தங்க சொல்ல முடியாதா? அதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளதென எனக்கும் தெரியாது. ஆனால், நீங்கள் படும் சிரமங்கள் அறிந்து ஏதோ எனக்குத் தோன்றுவதை சொல்கிறேன். உங்கள் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இறைவன் அனைவருக்கும் நல்லதையே நடத்தி தரட்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
இதிலே வீட்டு உபயோகப் பொருட்கள் வீணாவதும் அதைச் சரி செய்வதும் தான் பெரிய பிரச்னை கமலா. குளிர்சாதனப் பெட்டியை மாற்றினோம். ஏசியில் பிரச்னை என்பதால் அதுக்கு காஸ் நிரப்புதல் கபாசிடர் மாத்துதல் எனச் சின்னச் சின்ன வேலைகள். ஆனால் வாரம் ஒரு தரம் இரண்டு தரம் வ்ந்துடுது. இதுக்கு நடுவில் வீட்டு வேலை செய்யும் பெண் வாரம் ஒருமுறையாவது லீவு போடுகிறார். அதே போல் உதவிக்கு வரும் பெண்களும் வாரம் ஒருதரமாவது லீவு போடுகின்றனர். மாற்று ஆள் வந்தாலும் எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிச்சுச் சொல்லணும். :(
Deleteஇதென்ன... முதலில் கண்ணைப் போய்ப்பாருங்கள். அது முக்கியம் இல்லையா? அதோடு தூங்காமல் ஏன் இருக்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட நிலைக்குமேல் உடம்பு தானாகவே ஓய்வு எடுத்து விடுமே.....
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், அதான் கண்ணைக் காட்டிட்டு மருந்து வாங்கி வந்துட்டேனே. செடினா செக்கப்பிற்குப் போகணும். தூக்கம் எனக்கு அவ்வளவு சுலபமாக வந்துடாது. என்னிக்கோ ஒரு நாள் என்னை மறந்து தூங்கினால் தான். இப்போ இவர் என்னிக்காவது ராத்திரிக்குக் கொஞ்சம் சிரமப்படுகிறார்னு தெரிந்தால் அன்னிக்கு ராத்திரி முழுசும் தூக்கம் வராது. அப்படியே தூங்கினாலும் காலை 3 மணிக்கு விழிப்பு வந்துடும். அப்புறமாத் தூக்கம் வராது. நாள், கிழமையில் காலை சீக்கிரம் எழுந்துக்கணும்னா அலாரமே வேண்டாம். பயோ கடிகாரம் தான்.
Deleteவேலை செய்ய வருபவர்கள் பலரகம் போல. அந்தப் பெண் போல ஜெகஜ்ஜால ஃபிராடு பார்க்க முடியாது போலவே... நம்மிடம் நலலவர் போலவே நடித்து, நம்மையே வெளியே குறை சொல்லி... என்ன மனிதர்களோ!
ReplyDeleteசொந்தங்களிலும் இப்படி எல்லாம் இருக்காங்க ஸ்ரீராம். நமக்கு உதவுகிறாப்போல் வந்து கடைசியில் குழியில் தள்ளி இருப்பாங்க. நமக்குப் புரியவே புரிஞ்சிருக்காது.
Deleteஆட்டோ சங்கம் எல்லாம் இருக்கா? அதன் தலைவர்கள் அவ்வளவு நியாயமாக புகார்களை கவனிக்கிறார்களா? அட, ஆச்சர்யமே.... எங்க ஊர் ஆட்டோ எல்லாம் முதலில் சங்கம்னு ஒண்ணும் கிடையாது. அப்படியே இருந்து சொல்லப்போறோம்னு சொன்னாலும் 'எங்க வேணா சொல்லிக்கோ' னுடுவாங்க!
ReplyDeleteசங்கம் பத்தி ஒண்ணும் தெரியலை. இந்த மீட்டர் ஆட்டோ மட்டும் ஒரு கட்டுப்பாடில் இயங்குகிறது என்பதால் நான் அவங்களைத் தான் கூப்பிடுவேன்.
Deleteமருத்துவர் சொல்வது போல தூக்கமின்மையால் வலி இருக்கும். எனக்கும் இரண்டு மூன்று நாட்களாக அப்படித்தான் இருக்கிறது இடக்கண் தான் தொந்திரவு.
ReplyDeleteநல்ல தூங்க முயற்சி செய்யுங்கள். கவலையில் தூக்கம் வராதுதான்.
இந்த துன்பங்கள் விரைவில் கடந்து போக வேண்டும்.
நாளும் என் பிரார்த்தனையில் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
என்னதான் தூங்க முயற்சி செய்தாலும் கண்களை மூடினால் விதவிதமான எண்ணங்கள்! அவற்றை எல்லாம் புறம் தள்ளினாலும்தூக்கம் என்னமோ அவ்வளவு எளிதாக வருவதில்லை.
Deleteதூக்கமின்மை நல்லதல்ல... கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் எல்லாம் சரியாக எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteவேலை செய்ய வருபவர்கள் - இப்படித்தான் இருக்கிறார்கள். எத்தனை பேரை மாற்ற முடியும்? நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது பல சமயங்களில்.
வாங்க வெங்கட், பொதுவாக நாங்க மாற்றுவதில்லை. இந்தப் பெண்கள் அனைவ்ருமே ஹோம்கேர் மூலமே வருகின்றனர். ஹோமிலேயே இருக்கும் பெண்கள் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் அங்கே கிட்டத்தட்ட 20 முதியோர் இருப்பதால் அங்கேயே ஆள் பற்றாக்குறை
Delete