எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 12, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 3


நவராத்திரி இரண்டாம் நாளான இன்று அம்பிகையை வாராஹியாகச் சிலர் வழிபடுவார்கள். தன் தெற்றிப் பற்களால் பூமியைத் தாங்கும் இவளின் ஆயுதங்கள் சூலமும், உலக்கையும், தேவையற்ற போட்டி, பொறாமைகளில் இருந்து காக்கும் வல்லமை படைத்தவள். இன்று கட்டங்களால் ஆன கோலம் போட்டுச் சிறு பெண்ணை குமாரியாகப் பாவித்து வழிபடவேண்டும். இன்று சனிக்கிழமையாக இருப்பதால் எள் சாதமோ, தயிர்சாதமோ நிவேதனம் செய்யலாம்.
அ+உ+ம= ஓம் என்பது. அதுவே மாறி உ+அ+ம=உமா என தேவி பிரணவம் என்ற சிறப்பைப் பெற்றது. இதைத் தவிரவும் உ என்ற எழுத்துக்கு சிவன் என்றும் மா என்ற எழுத்து அவனின் சக்தியையும் குறிக்கும். மேலும் இந்தச் சக்திதான் நமக்கு சிவனை அடையாளமும் காட்டுகிறாள். நிறமற்றப் பரம்பொருளைத் தன் செந்நிறத்தால் அடையாளம் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும்,
“உதிக்கின்ற செங்கதிர் “என்று கூறுகிறார். இவளுக்கு எல்லாமே மூன்று. தேவியின் பீஜாக்ஷரங்கள் மூன்று. அதனாலேயே த்ரிபுர சுந்தரி என்ற நாமத்தையும் பெற்றாள். த்ரிபுரம் என்பதே தேவியின் பீஜாக்ஷரங்களையே குறிக்கும். சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), ஸம்ஹாரம்(அழித்தல்), திரோதானம்(மறைத்தல்), அனுகிரஹம்(அருளுதல்) என்னும் ஐந்து தொழில்களையும் தேவி முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள். இதையே லலிதா சஹஸ்ரநாமமும்,, “பஞ்ச க்ருத்ய பராயணா” என்று கூறுகிறது. முக்குணம் உள்ள மாயைக்கு ரஜோ குணம் மேலிட்டிருக்கும்போது பிரம்மா என்ற சைதன்யமும், ஸத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு என்ற சைதன்யமும், தமோ குணம் மேலிட்டிருக்கும்போது ருத்ரன் என்ற சைதன்யமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது.

இப்போ மஹிஷாசுரனைப் பத்திப் பார்ப்போமா?? மஹிஷாசுரன் வாங்கிய வரங்களைக் கொண்டு நல்லாட்சி நடத்தாமல் அனைவரையும் துன்புறுத்தியே வந்தான். அவனுடைய அசுர வலிமையால் இந்திரலோகத்தில் இருந்து இந்திரனை விரட்டிவிட்டு மஹிஷாசுரன் தானே இந்திரன் என அறிவித்துக்கொண்டான். மேலும் திக் தேவதைகளின் அதிகாரங்களையும், சூரிய, சந்திரர்களைக் கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தான். ஆகவே மூவுலகிலும் நியதிகளில் மாறுபாடு ஏற்பட ஆரம்பித்தது. அவனுடைய கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகவே அனைவரும் ஈசனைச் சரண் அடைந்தனர். ஈசன் இது தேவி ஒருத்தியாலேயே நிகழக்கூடிய ஒன்று எனக் கூறித் தன் சக்தியில் இருந்து ஒரு மாபெரும் ஒளிப்பிழம்பைத் தோற்றுவித்தார். அவ்வாறே பிரம்மா, விஷ்ணுவும் அவரவர் சக்தியை ஒளிப்பிழம்பாய்த் தோற்றுவிக்க மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்தது. இதைக் கண்ட தேவாதி தேவர்கள் தங்கள் பங்கும் இந்த நற்காரியத்திற்கு வேண்டும் என உறுதி கொண்டு அவரவர் சக்தியை வெளிப்படுத்த அனைத்தும் சேர்ந்து கோடி சூரியப் பிரகாசத்தைவிடவும் அதிகப் பிரகாசம் கொண்டதொரு ஜோதி ஸ்வரூபமாய் மாறி தனக்கு உவமையற்றதாய் விளங்கியது. ஒன்று சேர்ந்த அந்த ஜோதி ஒரு பெண்ணுருக் கொண்டது.
ஈசனின் முகத்து ஒளியானது அந்தப் பெண்ணின் முகமாகவும், விஷ்ணுவின் ஒளியால் புஜங்களும், யமனின் ஒளியால் கேசமும், சந்திரனுடைய காந்தியால் மார்புகளும், இந்திரனுடைய காந்தியால் இடையும், வருண காந்தியால் தொடைகளும், முழங்கால்களும் தோன்றின. பூமியின் ஒளியானது பிருஷ்ட பாகமாய் மாறிற்று. பிரம்மாவின் ஒளியால் பாதங்கள், சூரிய ஒளியால் கால்விரல்கள், வசுக்களின் ஒளியால் கைவிரல்கள், குபேரனின் காந்தியால் மூக்கு, பிரஜாபதியின் ஒளியால் பல்வரிசைகள், அக்கினியின் ஒளியால் முக்கண்கள், சந்தியைகளின் ஒளியால் இரு புருவங்கள், வாயுவின் ஒளியால் காதுகள் தோன்றிற்று. மற்ற தேவர்களின் ஒளியால் மங்கள ஸ்வரூபமான தேவியின் ஆவிர்ப்பாவம் ஏற்பட்டது.
பரமசிவன் திரிசூலத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட ஒரு சூலத்தை அம்பிகைக்குக் கொடுக்க, விஷ்ணுவும் தன் சுதர்சனத்தில் இருந்து மற்றொரு சக்கரத்தை உண்டாக்கி அம்பிகைக்கு அளித்தார். வருணன் சங்கமும், அக்னி சக்தி ஆயுதமும் வாயு வில்லையும் பாணங்கள் நிறைந்த அம்புறாத் தூணியையும் அளிக்க, இந்திரன் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தையும், ஐராவதத்தில் இருந்து தோன்றிய மணியையும் அளிக்கிறான். யமனின் கால தண்டத்திலிருந்து ஒரு தண்டத்தையும், வருணன் பாசத்தையும், பிரஜாபதி அக்ஷமாலையையும், கமண்டலுவையும் அளித்தனர். சூரியனின் கிரணங்களால் அவள் உடலின் காந்தி ஒளிவிட்டுப் பிரகாசித்தது. காலன் சுத்தியையும், கேடயத்தையும் அளிக்க, பாற்கடலரசன் ஹாரத்தையும் எப்போதும் புதிதான வஸ்திரங்களையும் கொடுக்கிறான். இவ்வாறே மற்ற தேவர்களும் ஒப்புயுர்வற்ற ஆபரணங்களையும், ஆயுதங்களையும் அளிக்கின்றனர். விஸ்வகர்மா பிளக்கமுடியாத கவசங்களையும், ஹிமவான் சிம்ம வாகனத்தையும் நவரத்தினங்களையும் அளிக்கிறான். ஆதிசேஷன் நாகஹாரத்தைக் கொடுத்தான்.
தேவி அனைத்தையும் பெற்றுக்கொள்கிறாள். இவ்வாறு உபசாரங்கள் செய்யப் பட்டதில் மனம் மகிழ்ந்து சிம்ம வாஹனத்தில் அமர்ந்த வண்ணம் “அட்டஹாசம்” என்னும் சிரிப்பைத் தர அண்டசராசரமும் நடுங்கியது. தேவர்கள் ஜயகோஷம் எழுப்பினர். மஹிஷனை வதைக்க தேவி கிளம்பினாள்.
மஹிஷ அசுரன் என்னும் ஒருத்தன்
தபஸுமிகப்பண்ணி வரமடைந்தான்
ஜகத்திலுள்ளோரை உபத்திரவிக்க அஸுரன்
தேவர்கள் ரிஷிகளெல்லோருங்கூடி,
கைலாசத்திற்கு ஓடி வந்தெல்லோரும்
அறிவித்தாள் மஹாதேவருக்கும்
சிவனுடைய ஸந்நிதியில் நின்று
தேவி மஹிமை சொல்லி ஸ்துதித்தாள்.
தேவாளுடைய முகத்திலிருந்தம்மன்
தேஜோரூபமாய் ஒன்று சேர்த்து
அத்தனை பேர்களின் தேஜசைக் கிரஹித்து
அம்மன் பிரத்தியக்ஷமாக வந்தாள்
அத்தனை தேவர்களும் பணிந்து தங்கள்
ஆயுதமும் தேவி கைகொடுத்தாள்
பக்தியாய் ஆயுதமுங்கொடுக்க அம்மன்
பதினெட்டுக் கையிலும் தரித்துக்கொண்டு,
சிம்ஹவாஹனத்தில் ஏறிக்கொண்டாள் மஹா
தேவியும் யுத்தம் பண்ண வந்தாள்
மஹிஷாஸுரனும் தேவியுமாய் மஹா
ஆங்காரமாய் யுத்தம் பண்ணலுற்றார்.

Friday, October 08, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 2


முதலில் தொடருவதற்கு முன்னால் ஒரு விஷயம் தெளிவாக்குகிறேன். இந்த லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் நான் எழுதி விளக்குவதென்றால் குறைந்த பக்ஷமாய் மூன்று மாதங்களாவது ஆகும். நான் எழுதுவதற்கும் விளக்கவும் அவ்வளவு நாட்கள் பிடிக்கும். முதலில் நான் புரிந்து கொண்டவை சரியா எனப் பார்த்துத் தப்பானவற்றைத் திருத்திக்கொள்ளவேண்டும். அதோடு நடு நடுவே வரும் புராணக் கதைகளை விளக்கும்படி இருக்கும். ஆகவே பல நாட்கள் ஆகும். நவராத்திரிக்குள் முடியாது என்பதால் தேவியின் புராணத்தைச் சுருக்கமாகவே தரப் போகிறேன்.

“ஆதியந்தம் பராசக்திக்கில்லை
ஆதாரமுஞ் ஜகத்துக்கிவள் தான்
ஜோதி ரூபியுடைய ரூபங்களை யெல்லாம்
சொல்ல முடியாதொருவராலே
ஆனாலும் தெரிந்த மட்டுக்குமிப்போ
அவளுடைய சில அவதாரஞ் சொல்வோம்
முன்னே பிரம்மாவின் தியானத்தில் ரக்ஷிக்க
முதல் வந்தாள் ஒரு ரூபம்- சோபனம் சோபனம்!

எப்போது தோன்றினாள் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பழையோள் ஆன பராசக்தியே இந்த ஜகத்துக்கு ஆதாரம். நாம் அனைவரும் அவளுடைய கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களே. அவளுடைய ரூபங்களையும் அவள் எடுத்திருக்கும் வடிவங்களையும் அவதாரங்களையும் சாமானிய மானுடர்களான நமக்கு எடுத்துச் சொல்ல முடியாது. இவளே மஹா மாயை, அதனால் பிரபஞ்சத்தின் இருப்பிற்குக் காரணமாகிறாள். இவளே ஸ்ரீஹரியின் யோக நித்திராதேவி. அதனாலேயே அவளால் இவ்வுலகம் மயக்கப் படுகிறது. சேதனமும் அவளே, அசேதனமும் அவளே! அவளே ஸ்ரீவித்யா, அவளே முக்திக்கு வித்து! என்றுமுள்ளவள்.

ஈஸ்வரர்களுக்கெல்லாம் ஈஸ்வரி அவளே! உலகே அவள் உருவான புவனேஸ்வரியும் அவளே. தேவர்களின் காரிய சித்திக்காக அவள் எப்போது ஆவிர்ப்பவிக்கின்றாளோ அப்போது அவள் இவ்வுலகில் உற்பவித்ததாய்ச் சொல்லப் படுகிறது. “சிதக்னி-குண்ட-ஸம்பூதா-தேவ காரிய –ஸமுத்யதா” என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமாவளி. அப்படி ஒரு கல்பமுடிவில் மஹாவிஷ்ணுவின் யோக நித்திரையில்போது தோன்றிய இரு அரக்கர்கள் மதுகைடபர்கள் என்ற பெயருள்ளவர்கள். உக்கிர வடிவோடு தோன்றிய அவ்விரு அசுரர்களும் பிரம்மாவையும் கொல்ல முயல, அவரோ உலகநாயகியான தேவியைத் துதித்தார்.

அழிவற்ற, நித்தியமான, ப்ரணவஸ்வரூபியான தேவியை, அம்ருத ரூபிணி, அவளே ஸ்வாஹா, அவளே ஸ்வதா, அவளே ஸந்தி, அவளே சாவித்ரி, அவளே காயத்ரி என்றெல்லாம் துதித்தார்.

திருப்பாற்கடல் தன்னில் ஸ்ரீஹரியும்
சேஷ சயனத்தில் பள்ளி கொண்டார்
மஹாவிஷ்ணுவின் கர்ணங்களிலிருந்து
மதுகைடபர் இருவர் உண்டானார்-சோபனம், சோபனம்

விழித்துப் பார்த்தங்கே பிரம்மாவை அவர்கள்
முஷ்டியுத்தம் பண்ண வந்தெதிர்த்தார்
அயனுங்கண்டு பயந்து கொண்டு ஸ்ரீ
ஹரியை வந்து நமஸ்கரித்தார்.
நினைவு தெரியாது விஷ்ணுவுமப்போ
நித்திரையின் வசப்பட்டிருந்தார்
அம்மா தேவி நித்திராமோஹினியே பொல்லா
அஸுராள் பயத்தால் ஹரியிடம் வந்தேன்
மோஹினியே ஜகன்மாதாவே மஹாவிஷ்ணுவை
விட்டு வெளியேறம்மா- சோபனம், சோபனம்

என்று லோக மோஹினி மஹிமைதனைச்
சொல்லி நான்கு முகவரும் ஸ்தோத்தரிக்க
பகவானுடைய சரீரத்தினை விட்டுப் (தேவி)
பிரத்யக்ஷமாக எதிரில் வந்து
வேண்டும் வரத்தைக் கொடுத்துப் பிரம்மாவுக்கு
விச்வமோஹினியும் மறைந்தாள்.-சோபனம், சோபனம்

மஹாவிஷ்ணு நித்திராதேவி தன்னை விட்டு அகன்றதும் கண் விழித்துப் பார்க்கவும் மதுகைடபர்களைக் கண்டு அவர்களோடு போர் புரிந்தார். பல்லாண்டுகள் போர் புரிந்தும் அவர்களை அவரால் கொல்ல முடியவில்லை. மதுகைடபர்கள், விஷ்ணுவிற்கு வரங்கள் அளிப்பதாயும், வேண்டும் வரங்களைக் கேட்குமாறும் கூற, அவரும் அவர்கள் இருவரும் தம்மால் கொல்லப்படவேண்டுமேயன்றி வேறு வரங்கள் தேவையில்லை என்றார். பிரளய மஹாகாலமான அந்தக் கால கட்டத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்க வேண்டிய வேளையில் இவர்கள் இருவரையும் ஒடுக்கவேண்டியே மஹாவிஷ்ணு பிரயத்தனப் பட்டார். எங்கும் நீர்ப்பிரவாகமாய் இருக்கக்கண்ட மதுகைடபர்கள் பூமியானது தண்ணீரில் முழுகாமல் இருக்கும் இடத்தில் தங்களைக் கொல்லுமாறு கூற, மஹாவிஷ்ணுவும் அவர்களைத் தம் தொடையில் இருத்திக்கொண்டு சக்கரத்தால் கொன்றார்.

இவ்வாறு பிரம்மாவால் துதிக்கப் பெற்ற யோக நித்திராதேவி தானாகவே தன்னைத் தோற்றுவித்துக் கொண்டு மஹாவிஷ்ணுவின் மூலம் மதுகைடபர்களை பிரளயத்தில் ஒடுங்கச் செய்தாள். ஆதி சக்தியானவள் தன்னிடமிருந்த முக்குணங்களின் மூலம், மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹாகாளி, ஆகிய மூன்று வடிவங்களைத் தோற்றுவிக்கிறாள். பிரம்மபத்தினியாகச் சொல்லப் படும் சரஸ்வதி வடிவத்திற்கும் இவளுக்கும் வேறுபாடு உண்டு. இவள் பராசக்தியின் வடிவினின்று வேறுபட்டவள் அல்ல. இந்த ஆதி மஹாசரஸ்வதியே ஆதி பராசக்தி, ஆதிலக்ஷ்மி ஆவாள். இதையே லலிதா சஹஸ்ரநாமாவளியும், ஸ்ருஷ்டிகர்த்தா, பிரஹ்மரூபி, கோப்த்ர்யை, கோவிந்த ரூபிண்யை, சம்ஹாரிண்யை, ருத்ரரூபாயை, திரோதான கர்யை, ஈஸ்வர்யை என்றெல்லாம் கூறுகிறது.

இந்த மதுகைடப வதத்திற்கு அடுத்து வரப்போவது மஹிஷாசுர வதம்.

நவராத்திரி முதல்நாளான இன்று சிலர் அம்பிகையைச் சாமுண்டியாக வழிபடுகின்றனர். சண்ட, முண்டர்களை வதம் செய்த தேவியே சாமுண்டி. நாம் ஆனால் இவளை வரிசைக்கிரமமாகவே பார்க்கப் போவதால் இது பின்னர் வரும். இன்றைய நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல், புட்டு. இன்று பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை “பாலை”யாக வழிபடவேண்டும்.

தசமஹாவித்யையின் முதல் தேவியான காலி என்னும் காலத்தைக் குறிக்கும் தேவியின் படத்தை மேலே காணலாம். காலி தான் தமிழில் காளி என்று அழைக்கப் படுகிறாள்.

படம் நன்றி: விக்கிபீடியா.

Thursday, October 07, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 1


மங்களமான லலிதாம்பாள் சோபனம்
மங்களமுண்டாகப் பாடுகிறோம்
ஸ்ருங்கார கணபதி ஷண்முகர் ஸரஸ்வதி
எங்கட்கு முன்வந்து காப்பாமே
முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்திரனும்
மும்மூர்த்திகளும் வேதப் பிராமணர்களும்
நாற்பத்து முக்கோண நாயகியாளம்மன்
நாதர் காமேசருங்காப்பாமே!



போன வருஷம் அம்பிகையின் நவதுர்கா ரூபத்தையும், அவளின் படைத் தளபதிகளான சப்தமாதர்களையும் பார்த்தோம். இப்போது கொஞ்சம் தேவியின் புராணத்தைப் பார்ப்போமா??

மஹாவிஷ்ணுவைப் போல தேவிக்கும் பத்து அவதாரங்கள் என்பார்கள். இதன் காரணம் தெள்ளத் தெளிவானது. தேவியின் ஆண் அம்சமே விஷ்ணு. நம்மைப் போன்ற பாமரர்களின் செளகரியத்திற்காக விஷ்ணுவின் சகோதரி தேவி வைஷ்ணவி என்கிறோம். உண்மையில் ஆதி பராசக்தியிடமிருந்தே அனைத்தும் தோன்றியது, அனைவரும் தோன்றினார்கள் என்பது சாக்தர்களின் தீவிர நம்பிக்கை. அதனாலேயே அவர்கள் பெயருக்கு முன்னே ஸ்ரீ என்னும் அடைமொழியைச் சேர்த்து ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் என்று அழைக்கப்படுவதாய்ச் சொல்கின்றனர். அவள் விஷ்ணுவாக இருந்த ரூபத்திலேயே மோகினியாக மாறி வந்து ஹரிஹர புத்திரன் உதித்தான் என்றும் சொல்லுவதுண்டு. மோகினியையும் அம்பிகையின் இன்னொரு அவதாரமாகவே சாக்தர்கள் பார்க்கிறதாய்ச் சிலர் கூற்று. தேவியை உபாசித்தவர்களில் தலை சிறந்தவர்கள் மகேசுவரர், மாதவர், பிரம்மா, மன்மதன், ஸ்கந்தன், நந்திகேசுவரர், இந்திரன், மனு, சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாசர் ஆகியோர் ஆவார்கள். இத்தனைபேர் தேவியை ஆராதித்த பெருமையைச் சுட்டும் விதமாகவே மஹாவிஷ்ணு, தேவியைப் போலவே அனைவர் மனமும் மகிழும் வண்ணம் மோகினி அவதாரம் எடுத்தார் எனச் சொல்லுகின்றனர்.

ஈசனால் எரிக்கப் பட்ட காமன் என்னும் மன்மதன் தேவியின் கருணா கடாக்ஷத்தாலேயே அநங்கனாக மாறி ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படியான வடிவும், அழகும் நிரம்பிய சூக்ஷ்மதேகத்தைப் பெறுகின்றான். இதையே லலிதா சஹஸ்ரநாமமும் “ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்சீவ-நெளஷதி: என அம்பிகையைப் போற்றுகிறது. ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்சீவனி மருந்தாக அம்பிகை இங்கே செயல்பட்டிருக்கிறாள் என்பதே இதன் பொருள். அந்த மன்மதனுக்கும் கரும்பு வில் தான். அம்பிகையான காமாக்ஷிக்கும் கரும்பு வில்தான். அநங்கனுக்கும் புஷ்ப பாணங்கள். அம்பிகைக்கும் புஷ்ப பாணங்கள். ஆனால் ஒரு மாபெரும் வேற்றுமை என்னவெனில் மன்மதனின் அம்புகளால் சிற்றின்பமாகிய காமத்தில் மூழ்கிக் கிடக்கும் நம்மைக் கடைத்தேற்றுவதே அம்பிகையின் கரும்பு வில்லுக்கும், புஷ்ப பாணங்களுக்கும் முக்கிய வேலையாகும். நம் மனதைக் கட்டுப்படுத்திக் கட்டுக்குள் வைக்க அம்பிகையின் அருள் உதவி புரிகின்றது. அம்பிகையின் கடாக்ஷம் நமக்கு மோக்ஷ மார்க்கத்தைக் காட்டி, சிவனோடு ஒன்றுபட உதவுகிறது. மானுட வர்க்கத்தின் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இங்கே கரும்பு வில் நம் மனதை உருவகப் படுத்துகிறது. பாணங்கள் ஐந்தும் ஐந்து தன்மாத்திரைகள் ஆகும். நம்முடைய ஆசையை அம்பிகை தன் இடமேல்க்கரத்தில் பாசாங்குசமாக வைத்திருக்கிறாள். நம்முடைய கோபத்தை அடக்கும் அங்குசத்தை வலமேல்க் கையில் வைத்திருக்கிறாள். இத்தகைய கோலத்துடன் காட்சி அளிக்கும் அம்பிகையை வணங்கித் துதிப்பவர்கள் எந்தவிதமான ஆசாபாசங்களுக்கும் அடிமையாக மாட்டார்கள் என்பது சாக்த வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.

இத்தகைய காமாக்ஷியைத் துதித்து அகஸ்தியர் தவம் இருக்கிறார் தன் மனைவி லோபாமுத்திரையுடன். அப்போது அவர் முன்னால் ஹயக்ரீவர் சங்கு, சக்ரதாரியாகக் கையில் புத்தகத்துடன் தோன்றினார்.

“ஆதிப் பிரம்மரிஷி அகஸ்தியரும்
அகிலலோகம் சஞ்சரிப்பவரும்
ஜோதி காமாக்ஷியைக் காஞ்சி நகரத்தில்
ஸ்துதித்து பூஜை செய்து தபஸிருந்தார்.
சங்கு சக்கரம் வலக்கை புஸ்தகமும்
தரித்தே ஹயக்ரீவர் மஹாவிஷ்ணுவாய்
தங்கவர்ணி லோபாமுத்திரை மணவாளன்
தபஸிற்கு முன் வந்தார்- சோபனம் சோபனம்!


தன்மாத்திரை என்னவென நினைப்பவர்களுக்காக:

ச்ப்தம்
ஸ்பரிசம்
ரூபம்
ரசம்
கந்தம் இவை ஐந்தும் தன்மாத்திரை எனப்படும்.

மேற்கண்ட லலிதாம்பாள் சோபனம் பாடல் தொகுத்து அளித்திருப்பது சகோதரி சுப்புலக்ஷ்மி ஆவார்கள். (சேவாசதன்) இவரைப் பற்றிய ஒரு குறிப்புக் கடைசி நாளில் வரும்.

Wednesday, October 06, 2010

நாளை முதல் பார்க்கமாட்டேன்!

முதல் ஹிஹிஹி, ஞாயிற்றுக்கிழமை Darar இந்திப் படம் பார்த்தேன். வழக்கம்போல்ப் பாதியிலே இருந்துதான். ஆனால் நம்ம தமிழ், ஹிந்திப் படங்களை முடிவும்போது பார்த்தாக் கூடப் புரியும்! வழக்கம்போல் படுக்கவும் முடியாம, உட்காரவும் முடியாம, படிக்கவும் முடியாமத் தடுமாறும்போது மனதை மாற்றவேண்டிப் பார்க்கற வழக்கப் படியே பார்த்தேன் என்றாலும், இப்படி என்னிக்கோ, எப்போவோ உட்காரும்போது நல்ல படங்களாகக் கிடைப்பது அதிர்ஷ்டமே. உண்மையிலேயே அனைவரின் நடிப்பும் நல்லா இருந்தது. ஜூஹி சாய்வாலா, சீச்சீ, சாவ்லாவின் நடிப்பு, பயம் கொண்ட மனைவியாகச் சிறப்பாக அமைந்த மாதிரி கடைசியில் ரிஷி கபூரின் காதலியாக நடிக்கும்போது அமையவில்லைனு சொல்லலாம். ரிஷி கபூர் வழக்கம்போல், பெருந்தன்மையான கதாநாயகன். ஜூஹியின் கணவனாக வரும் கான் நடிகர் (என்ன கான் அவர்? தெரியலை!) நடிக்கலை. வாழ்ந்திருக்கார். கண்களின் மூலமே ஆண் நடிகர்களும் தங்கள் உணர்வுகளைக் காட்டுவது என்பதை வெகு இயல்பாக, எளிதாகச் செய்திருக்கார். ஒரே ஒரு குறை என்னன்னா, இது ஏதோ ஆங்கிலப் படத்தின் காப்பி, பேஸ்ட்னு சொன்னாங்க. என்ன படம்னு தெரியலை! :(

அடுத்த ஹிஹிஹி! நேத்திக்கு மத்தியானமெல்லாம் தொலைக்காட்சிப் பக்கம் போக முடியலை. செவ்வாய்க்கிழமை ராகுகால வழிபாடு இருக்கிறதாலே போக முடியாது. ரங்க்ஸ் தான் ஆக்கிரமிப்பார் எப்போவும். நேத்திக்கு எனக்குச் சீக்கிரமா முடிஞ்சதாலே நானும் சிறிது நேரம் உட்கார்ந்தால், ஆஹா, ஜூப்பருங்க! நம்ம அபிமான எழுத்தாளர் அகதா கிறிஸ்டியோட நாவலைப் படமா எடுத்திருக்காங்க. ரொம்ப வருஷமா வாசிக்கணும்னு நினைச்ச நாவல். ஆனால் படிக்கலை இன்னமும்! :( அதனாலேயே படம் சுவாரசியமா இருந்திருக்கணும். ஆனால் துரதிருஷ்ட வசமாப் பார்க்கும் போது கோர்ட் சீன் ஆரம்பிச்சாச்சு. மோட்டல் கொலைகள் சில, பல நடந்துவிட்டன. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஒரு மாதிரியாப் புரிஞ்சுண்டு மால்கோம் யாருனு ஒரு ஊகம் பண்ணிண்டு பார்த்தேன். இன்னொரு வாட்டிப் போடாமலா இருப்பாங்க?? உலகத் தொலைக்காட்சிகளில் லக்ஷத்து ஆயிரத்தெட்டாம் முறையாப் போடும்போதாவது பார்த்தால் போச்சுனு மனசைத் தேத்திக்கிட்டேன்! படத்தோட பேர் Identitiy!


நிஜம்மாவே நாளைலேருந்து பார்க்க மாட்டேங்க. அப்பாடி தலைப்புச் சம்பந்தம் வந்தாச்சு! நவராத்திரி ஆரம்பிக்குது இல்லை?? சுண்டல் கலெக்ஷனுக்கு போகணுமே! :))))))))

Saturday, October 02, 2010

துரோகி யாரு????


கத்தரிக்காய்க்கும் எனக்கும் சின்ன வயசிலே இருந்தே நட்பு உண்டு. கத்தரிக்காய் மேலே இருந்த ஆசையிலே தான் தமிழ்வாணனின் கத்தரிக்காய் கண்டு பிடித்தான் தொடரை லக்ஷம் முறையாவது மனப்பாடம் பண்ணி இருப்பேன். இந்த விஷயத்திலே இது குடும்ப ஆசைனு கூடச் சொல்லலாம். ஹிஹிஹி, குடும்பத்தில் எல்லோருடைய ரத்த அணுக்களுமே கத்தரிக்காய், கத்தரிக்காய்னு கூவிட்டு இருக்கும்னு நம்பறேன். அப்படி ஒரு கத்திரிக்காய்ப் பிரியர் நாங்க எல்லாருமே. இரண்டு நாள் முன்னே, அம்பியோட ஒரு மொக்கை பஸ்ஸை ஓட்டறதுக்கு திவாவும், ஷைலஜாவும் அடாவடிக் கூட்டணி அமைச்சுக் கத்திரிக்காய்ப் பொடி அடைச்ச கறியும், அதன் செய்முறையும் சொல்லிட்டு இருந்தாங்களா?? உடனேயே ஆஹா, நம்ம வீட்டிலே கத்திரிக்காய் வாங்கி ரெண்டு நாளாச்சேனு நினைப்பு வந்தது.

ம்ஹும், நினைப்பு வந்து என்ன பண்ண? எண்ணெய்க் கத்திரிக்காய் சாப்பிட முடியாதே இப்போ இருக்கிற உடம்பிலே. ஆஹா, கத்திரிக்காயிலேதான் எத்தனை விதமாய்ச் சமைக்க முடியும்?? கத்திரிக்காயைச் சுட்டுப் பச்சடி, சுடாமல் பச்சடி, சுட்டுத் துவையல், சுடாமல் துவையல், சுட்டுக் கொத்சு, சுடாமல் கொத்சு, சுட்டுச் சப்பாத்திக்கு பைங்கன் பர்த்தா, சுடாமல் கூட்டு, அது தவிர, எண்ணெய் விட்டு வதக்கல், எண்ணெயே கண்ணிலே காட்டாமல் வேகவிட்டுக் கொட்டிக் கறி, பொடி அடைச்சுக் கத்திரிக்காய்க் கறி, பொடி அடைக்காமல் காய்கறிக் கலவைகள் அடைச்ச கத்திரிக்காய் மசாலா, கத்திரிக்காயும், உருளைக்கிழங்கும் போட்டுக் காரக்கறி, கூட்டு, கத்திரிக்காய் சாம்பார், கத்திரிக்காய் பிட்லை, கத்திரிக்காய் ரசவாங்கி, கத்திரிக்காய் (வாங்காத) ரசம், கத்திரிக்காய் பொரிச்ச கூட்டு, பொரிச்ச குழம்பு, கடைசிக் கடைசியாக் கத்திரிக்காய் புளிவிட்ட கூட்டு, புளி விடாத கூட்டுனு எத்தனை வகை. கத்தரிக்காய் சாதத்தை விட்டுட்டேனே!

ஒண்ணு, ரெண்டு விட்டிருக்கும், பரவாயில்லை. இப்படி எல்லாம் என்னை சந்தோஷப் படுத்திட்டு இருந்த கத்திரிக்காயை நேத்திக்குச் சாப்பிட்டேனா?? உடனே ஆரம்பிச்சது தொல்லை. நேத்து மத்தியானமாய் மூச்சு விடமுடியாமல் ஆரம்பிச்ச அவஸ்தை தொடர ரங்க்ஸ் கத்திரிக்காய்க்கு 144 தடை உத்தரவு போட்டுட்டார்! என்ன அநியாயம்! இதைப் போல அக்கிரமம் எங்கானும் உண்டா?? ஒருவேளை அம்பி ஏதானும் ரகசியமாய்ச் செய்தி அனுப்பி இருக்கார்னு சொல்லவும் சான்ஸே இல்லை. அவர் தான் இந்தப் பக்கம் தலை வச்சுக்கூடப் பார்க்கிறது இல்லை. அதோட இன்னிக்குச் சனிக்கிழமையா?? நொட்டு ஒண்ணும் சொல்ல மாட்டார். சீச்சீ, நெட்டுப் பக்கம் செல்லமாட்டார். ஹிஹிஹி, சொந்தக் கணினியிலே பார்க்கிற வழக்கமே அம்பிக்குக் கிடையாதே! அதனால் தைரியமாச் சொல்லலாம், இது அம்பி வேலை இல்லை! அப்போ யார் வேலை??? கண்டு பிடிக்கணும்!

வரேன், இன்னும் இரண்டு நாளிலே. கொஞ்சம் உட்கார முடியணும்! :( அதுவரைக்கும் இப்படி ஒரு சின்னச் சின்ன மொக்கைகள்! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Friday, October 01, 2010

Basic

இரண்டு நாள் முன்னர் பேசிக் ஆங்கிலப் படம் பார்க்க நேர்ந்தது. எனக்குத் தெரிஞ்ச நடிகர்னு பார்த்தா சாமுவேல் ஜாக்சன் மட்டுமே. கர்னல் வெஸ்டா அவர் தான் வரார்னு நினைக்கிறேன். படம் நல்லா த்ரில்லிங். அதிலும் டாமாக வருபவர் அழைக்கப் படும்போதே படம் எதை நோக்கிப் போகுதுனு ஒரு மாதிரிப் புரிஞ்சாலும் முடிவு எதிர்பார்க்கலைதான்! எதிர்பார்க்காத ஒரு முடிவைத் தொய்வில்லாமல் சொல்லி இருக்காங்க. அதுக்குப் பாராட்டணும். இந்த ஒரு படத்தைத் தான் முதல் முறையா ஆரம்பத்திலே இருந்து முடியும் வரை பார்த்திருக்கேன். உலக மகா அதிசயம்!

அன்பினால் ஏற்படும் வலி!

அன்பின் பாதைகள் மிகக் கடினமானவையாக இருந்த போதிலும் அன்பு உன்னை அழைக்கும்போது நீ தொடர்ந்து செல்வாயாக!
அன்பு தன் சிறகுகளை விரித்து உன்னைத் த்ழுவிக் கொள்ளும்போது அதன் உடையில் மறைந்திருக்கும் வாள் உன்னைப் புண்படுத்தும், ஆயினும், நீ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வாயாக
வாடைக்காற்று தோட்டத்தைப் பாழ் படுத்துவது போல, அன்பின் குரல் உன் இன்பக் கனவுகளைக் குலைத்துவிட்ட போதிலும், அன்பு உன்னுடன் பேசும்போது அதை நம்பு.

கலீல் கிப்ரான் கருத்துகளும்,




கைகளில் ரணம் படாமல் தான் எதையும் செய்துவிட ஆசைப்படுகிறோம். ஆனால் மனதிலும், கைகளிலும் எண்ணங்களிலும் படுகிற புண்களைச் சுமக்காமல் வாழமுடிவதில்லை.
பொருள்களின் இல்லாமையாலும், வசதிகளின் குறைவாலும் ஏழை ஆவதற்கு நம் உள்ளம் எப்போதும் தயாராயிருக்கிறது. ஆனால் அன்பின் இல்லாமையால் ஏழையாக அந்த உள்ளம் ஒரு போதும் தயாராக இல்லை.

நா.பார்த்தசாரதியின் கருத்துகளும்