எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 07, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 1


மங்களமான லலிதாம்பாள் சோபனம்
மங்களமுண்டாகப் பாடுகிறோம்
ஸ்ருங்கார கணபதி ஷண்முகர் ஸரஸ்வதி
எங்கட்கு முன்வந்து காப்பாமே
முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்திரனும்
மும்மூர்த்திகளும் வேதப் பிராமணர்களும்
நாற்பத்து முக்கோண நாயகியாளம்மன்
நாதர் காமேசருங்காப்பாமே!



போன வருஷம் அம்பிகையின் நவதுர்கா ரூபத்தையும், அவளின் படைத் தளபதிகளான சப்தமாதர்களையும் பார்த்தோம். இப்போது கொஞ்சம் தேவியின் புராணத்தைப் பார்ப்போமா??

மஹாவிஷ்ணுவைப் போல தேவிக்கும் பத்து அவதாரங்கள் என்பார்கள். இதன் காரணம் தெள்ளத் தெளிவானது. தேவியின் ஆண் அம்சமே விஷ்ணு. நம்மைப் போன்ற பாமரர்களின் செளகரியத்திற்காக விஷ்ணுவின் சகோதரி தேவி வைஷ்ணவி என்கிறோம். உண்மையில் ஆதி பராசக்தியிடமிருந்தே அனைத்தும் தோன்றியது, அனைவரும் தோன்றினார்கள் என்பது சாக்தர்களின் தீவிர நம்பிக்கை. அதனாலேயே அவர்கள் பெயருக்கு முன்னே ஸ்ரீ என்னும் அடைமொழியைச் சேர்த்து ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் என்று அழைக்கப்படுவதாய்ச் சொல்கின்றனர். அவள் விஷ்ணுவாக இருந்த ரூபத்திலேயே மோகினியாக மாறி வந்து ஹரிஹர புத்திரன் உதித்தான் என்றும் சொல்லுவதுண்டு. மோகினியையும் அம்பிகையின் இன்னொரு அவதாரமாகவே சாக்தர்கள் பார்க்கிறதாய்ச் சிலர் கூற்று. தேவியை உபாசித்தவர்களில் தலை சிறந்தவர்கள் மகேசுவரர், மாதவர், பிரம்மா, மன்மதன், ஸ்கந்தன், நந்திகேசுவரர், இந்திரன், மனு, சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாசர் ஆகியோர் ஆவார்கள். இத்தனைபேர் தேவியை ஆராதித்த பெருமையைச் சுட்டும் விதமாகவே மஹாவிஷ்ணு, தேவியைப் போலவே அனைவர் மனமும் மகிழும் வண்ணம் மோகினி அவதாரம் எடுத்தார் எனச் சொல்லுகின்றனர்.

ஈசனால் எரிக்கப் பட்ட காமன் என்னும் மன்மதன் தேவியின் கருணா கடாக்ஷத்தாலேயே அநங்கனாக மாறி ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படியான வடிவும், அழகும் நிரம்பிய சூக்ஷ்மதேகத்தைப் பெறுகின்றான். இதையே லலிதா சஹஸ்ரநாமமும் “ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்சீவ-நெளஷதி: என அம்பிகையைப் போற்றுகிறது. ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்சீவனி மருந்தாக அம்பிகை இங்கே செயல்பட்டிருக்கிறாள் என்பதே இதன் பொருள். அந்த மன்மதனுக்கும் கரும்பு வில் தான். அம்பிகையான காமாக்ஷிக்கும் கரும்பு வில்தான். அநங்கனுக்கும் புஷ்ப பாணங்கள். அம்பிகைக்கும் புஷ்ப பாணங்கள். ஆனால் ஒரு மாபெரும் வேற்றுமை என்னவெனில் மன்மதனின் அம்புகளால் சிற்றின்பமாகிய காமத்தில் மூழ்கிக் கிடக்கும் நம்மைக் கடைத்தேற்றுவதே அம்பிகையின் கரும்பு வில்லுக்கும், புஷ்ப பாணங்களுக்கும் முக்கிய வேலையாகும். நம் மனதைக் கட்டுப்படுத்திக் கட்டுக்குள் வைக்க அம்பிகையின் அருள் உதவி புரிகின்றது. அம்பிகையின் கடாக்ஷம் நமக்கு மோக்ஷ மார்க்கத்தைக் காட்டி, சிவனோடு ஒன்றுபட உதவுகிறது. மானுட வர்க்கத்தின் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இங்கே கரும்பு வில் நம் மனதை உருவகப் படுத்துகிறது. பாணங்கள் ஐந்தும் ஐந்து தன்மாத்திரைகள் ஆகும். நம்முடைய ஆசையை அம்பிகை தன் இடமேல்க்கரத்தில் பாசாங்குசமாக வைத்திருக்கிறாள். நம்முடைய கோபத்தை அடக்கும் அங்குசத்தை வலமேல்க் கையில் வைத்திருக்கிறாள். இத்தகைய கோலத்துடன் காட்சி அளிக்கும் அம்பிகையை வணங்கித் துதிப்பவர்கள் எந்தவிதமான ஆசாபாசங்களுக்கும் அடிமையாக மாட்டார்கள் என்பது சாக்த வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.

இத்தகைய காமாக்ஷியைத் துதித்து அகஸ்தியர் தவம் இருக்கிறார் தன் மனைவி லோபாமுத்திரையுடன். அப்போது அவர் முன்னால் ஹயக்ரீவர் சங்கு, சக்ரதாரியாகக் கையில் புத்தகத்துடன் தோன்றினார்.

“ஆதிப் பிரம்மரிஷி அகஸ்தியரும்
அகிலலோகம் சஞ்சரிப்பவரும்
ஜோதி காமாக்ஷியைக் காஞ்சி நகரத்தில்
ஸ்துதித்து பூஜை செய்து தபஸிருந்தார்.
சங்கு சக்கரம் வலக்கை புஸ்தகமும்
தரித்தே ஹயக்ரீவர் மஹாவிஷ்ணுவாய்
தங்கவர்ணி லோபாமுத்திரை மணவாளன்
தபஸிற்கு முன் வந்தார்- சோபனம் சோபனம்!


தன்மாத்திரை என்னவென நினைப்பவர்களுக்காக:

ச்ப்தம்
ஸ்பரிசம்
ரூபம்
ரசம்
கந்தம் இவை ஐந்தும் தன்மாத்திரை எனப்படும்.

மேற்கண்ட லலிதாம்பாள் சோபனம் பாடல் தொகுத்து அளித்திருப்பது சகோதரி சுப்புலக்ஷ்மி ஆவார்கள். (சேவாசதன்) இவரைப் பற்றிய ஒரு குறிப்புக் கடைசி நாளில் வரும்.

13 comments:

  1. அஹா , அமபாளை பற்றியா? மாமி முடிந்தாஹ் வரையில் தினமும் போடவும்

    ReplyDelete
  2. லலிதா திரிசதி நவராத்திரியில் சொல்லலாமா?

    ReplyDelete
  3. நன்றிங்க. அருமையான பதிவு.

    ReplyDelete
  4. //அவள் விஷ்ணுவாக இருந்த ரூபத்திலேயே மோகினியாக மாறி வந்து ஹரிஹர புத்திரன் உதித்தான் என்றும் சொல்லுவதுண்டு//

    ஒரு முறை எங்க பாட்டி நாங்க சின்னதா இருந்தப்ப ஏதோ கதை போல இதை சொன்ன ஞாபகம் இருக்கு எனக்கு

    அருமையான பதிவு மாமி. நன்றி

    ReplyDelete
  5. லலிதாதேவியைப் பற்றி படிப்பதும்,கேட்பதும் ஆனந்தம் அல்லவா!

    சொல்பவருக்கும் நன்மை தருவாள்,கேட்பவருக்கும் நன்மை தருவாள்.

    போனவருடம் உங்களை தொடர்ந்து வந்தேன்,இந்தவருடமும் தொடர்ந்து வருகிறேன்,அம்பாள் அருள் பெற.

    நன்றி.

    ReplyDelete
  6. கீதாம்மா. பாடல் எளிமையாக இருக்கிறது.

    ReplyDelete
  7. எங்கே எல்கே?? மொத்தமா இன்னிக்குப் போட்டிருக்கேன், படிச்சீங்களா?? :))))))

    ReplyDelete
  8. ஆரண்யநிவாஸ் சார், உங்க தொலைபேசி எண் தெரிஞ்சிருந்தால் தொலைபேசி இருப்பேன். லலிதா த்ரிசதி ஆண்கள் மட்டும் சொல்லலாம், எப்போவுமே. பீஜாக்ஷர மந்திரங்களால் ஆன ஸ்லோகம் என்பதால் பெண்கள் சொன்னால் சரியில்லை என்பதை சில சாக்தர்கள் மூலம் கேள்விப் பட்டேன். என் அண்ணாவும் இதை உறுதி செய்தார். மேலும் பெண்கள் "ஓம்" என்று சொல்லாமல் "ஸ்ரீம்" என்றே சஹஸ்ரநாமத்தின் ஆரம்பத்தில் சொல்லவேண்டும் என்றும் என் அண்ணா சொல்கிறார். இது பற்றி சாக்தர்கள் யாரையேனும் கேட்டு உறுதி செய்கிறேன்.

    ReplyDelete
  9. நன்றி நித்திலம்.

    ஏடிஎம், நன்றி, நீங்க சீக்கிரமாப் படிச்சுட்டீங்களா?? அதான் போலிருக்கு, இணையமே வரலை! :))))))))))))

    ReplyDelete
  10. @கோமதி அரசு, கொஞ்சம் தாமதம் ஆனாலும் தொடருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete
  11. நன்றி, குமரன்.

    ReplyDelete
  12. மிக நல்ல பகிர்வு கீதாம்மா !
    நானும் வந்து படித்து பயன் பெற்று செல்கிறேன்

    ReplyDelete
  13. அம்மாவைப் பற்றி... இப்போதான் படிக்க ஆரம்பிக்கிறேன் அம்மா... மிக மிக நன்றி.

    ReplyDelete