எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 02, 2007

அனுராதாவுக்கு ஒரு பிரார்த்தனை

ஐயப்பன் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடறவங்க யாருக்கும் பதில் எழுத முடியலை. தவறாய் நினைக்க வேண்டாம். இணையம் கிடைப்பது ஒரு 2 மணி நேரம். அறிவிக்கப் படாத மின் தடை போய், இப்போ அறிவிப்போட மின் தடை இருக்கு. தவிர, அனுராதாவின் பதிவைப் படித்து மிகவும் மனதுக்குக் கஷ்டமாய் இருக்கிறது. நேற்று இரவெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தேன். தூக்கமே வரவில்லை. திரும்பத் திரும்ப அவங்க பதிவுகளில் எழுதி இருப்பதே கண் முன்னால் வந்து கொண்டே இருந்தது. இறைவன் ஏன் அவங்களுக்கு இப்படித் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்? அப்படியும் அவங்களோட மனோதைரியம் என்னை வியக்க வைக்கிறது. விடாமல் மற்றவங்களுக்கு நல்லது செய்யணும் என்ற ஒரே நோக்கத்தோடு தன்னுடைய கஷ்டம் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். அவங்களுக்காகப் பிரார்த்திப்பதைத் தவிர வேறே ஒண்ணும் செய்ய முடியலை. இப்போ மதுரையில் மீனாட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றார்கள். நண்பர் சீனாவும், அவர் மனைவியும் போய்ப் பார்த்து விட்டு வந்தாங்களாம்.

அவங்க எழுதி இருக்கும் ஒரு விஷயம் தான் மனதை இன்னும் குடைகிறது. புற்று நோய் என்பதை வெளியில் சொன்னால் அக்கம்பக்கத்தவர் யாரும் பேசக் கூட மாட்டார்கள் என்று சொல்கிறார். இந்தக் காலத்தில் கூடவா இப்படி என ஆச்சரியமாய் இருக்கிறது. கூடவே என் அம்மாவின் நினைவும் வருது. என் அம்மாவும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப் பட்டு, அதை அவங்களே கண்டறிந்து உடனேயே மருத்துவரிடம் சென்று ஒரு மார்பகம் அகற்றப் பட்டு 5 வருஷங்கள் இருந்தார்கள். எல்லா வேலையும் செய்தார்கள், நாங்கள் யாரும், எங்கள் உறவு, சுற்றத்தார் மட்டுமில்லாமல் அக்கம்பக்கம் கூட என் அம்மாவிடம் தனிப்பட்ட அன்பே காட்டினார்கள். அவங்களை யாருமே வெறுக்கவில்லை. எல்லாருமே பேசினார்கள். எங்கள் வீட்டில் நடக்கும் பெரிய விசேஷங்களுக்குக் கூட ஆபரேஷனுக்குப் பின்னரும் அம்மா தனியாகச் சமையல் செய்து போடுவார்கள். எல்லாருமே சாப்பிட்டிருக்கின்றனர். கோவில், கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கும் தனியாகவே போய் வந்திருக்கிறார்கள். கடவுள் அருளால் அவங்களுக்கு இந்தக் கொடுமை நடக்கவில்லை. அனைவரும் வரவேற்று அன்பாகவே நடத்தினார்கள்.

இப்போது பெண் விடுதலை, விழிப்புணர்ச்சி, பெண்ணைப் பெண்ணே வெறுக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் வேதனையில் துடிக்கும் பெண்ணை ஒதுக்குவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இது என்ன தொற்று வியாதியா? அப்படி ஒண்ணும் இல்லை! அதுவும் சில ஆஸ்பத்திரிகளில் நர்ஸ்களும், உதவியாளருகளுமே புற்று நோயாளிகளைக் கண்டபடி பேசுவார்கள் என வேறு சொல்கின்றார். ஏற்கெனவே உடல் வேதனையில் இருக்கிறவங்களுக்கு, மனம் வேறே வேதனைப் படணுமா? யாருக்குமே இந்தக் கஷ்டம் வர வேண்டாம். மகத்தான பெண்மணியான அனுராதாவுக்குப் பிரார்த்திப்போம். அவங்களுக்கு மூளையிலும் புற்று நோய் பரவி இருப்பதாய் அவங்க கணவர் எழுதி இருக்கார். எத்தனை துன்பம்? இத்தனையிலும் அவங்க தன்னோட நிலையின் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்காங்க. அவங்க துன்பம் தீர வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.

16 comments:

  1. அனுராதா விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

    மக்களே நோயுடன் போராடுபவர்களை தயவு செய்து வெறுத்து ஒதுக்கவேண்டாம். நாளை நமக்கும் அதே நிலைமை ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  2. நேரில் பார்த்திராவிட்டாலும் அனுராதாவின் வார்த்தைகளால் அவர்களை நெருங்கியது போல் உணர்வு.. இன்னும் எத்தனை எத்தனை அனுராதாக்கள் இவ்வாறு கஷ்டப்படுகிறார்களோ!

    ReplyDelete
  3. கான்சரின் கொடுமையால் பதிக்கபட்டவன் என்ற முறையல் என் பிரார்த்தனை விரைவில் அனுராதா குணம் பெற.

    ReplyDelete
  4. கீதா அக்கா..உங்க பதிவை படிக்கும்போது எனக்கும் வருத்தமாத்தேன் இருக்கு..
    ஆனாக்கா நீங்க சொன்ன அனுராதாவுடைய பதிவு முகவரி எனக்கு தெரியாது.ஒரு லிங்க் குடுத்திருக்கலாமில்ல..[இப்பத்தேன் செஞ்சிடுங்களேன்.]
    யார் குடும்பத்துலயும்,யாருக்கு வேணுன்னாலும் வர வாய்ப்புள்ள இந்த நோயிக்கு ,இம்புட்டு அவமானப்படுத்தி பேசுராய்ங்கன்னாக்கா...எம்புட்டு இரக்கமே இல்லாத பிற்போக்கான மனமுள்ளவிங்கன்னு புரியுது..

    ReplyDelete
  5. // இப்போது பெண் விடுதலை, விழிப்புணர்ச்சி, பெண்ணைப் பெண்ணே வெறுக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் வேதனையில் துடிக்கும் பெண்ணை ஒதுக்குவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை?//

    அடப்பாவமே....... பெண்கள் கூட.. இப்பிடி.?.இப்பிடியெல்லாம் கூட நடக்குதா?..

    ReplyDelete
  6. //திரும்பத் திரும்ப அவங்க பதிவுகளில் எழுதி இருப்பதே கண் முன்னால் வந்து கொண்டே இருந்தது. இறைவன் ஏன் அவங்களுக்கு இப்படித் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்? //

    மத்தவிங்களுக்காக கவலைப்படற உங்க நல்ல மனசத்தேன் இது காட்டுது..கவலைப்படாதிங்க... கஷ்டத்தை குடுக்கும் இயற்க்கை அதை சமாளிக்கற ஆற்றலையும் நிச்சயமா கூடவே குடுக்கும்.
    // அவங்களோட மனோதைரியம் என்னை வியக்க வைக்கிறது.//இன்னு நீங்களே சொல்லியிருக்கீங்கல்ல..

    ReplyDelete
  7. // அவங்களுக்கு மூளையிலும் புற்று நோய் பரவி இருப்பதாய் அவங்க கணவர் எழுதி இருக்கார்.//
    ரொம்ப கஷ்டமாயிருக்கு... இந்த மாதிரி சமயத்துல ஆதரவா,அன்பா தன்னோட கடமையை செய்யும் அவரோட கணவரை நிச்சயம் பாராட்டனும்.அவர்கள் குணமாகி சந்தோஷமா வாழ்க்கைய தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //எத்தனை துன்பம்? இத்தனையிலும் அவங்க தன்னோட நிலையின் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்காங்க.//
    இப்படி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினாத்தேன்.. வேற யாருக்கும் இங்கன அவமானங்கள் நேராது.

    ReplyDelete
  9. // அவங்க துன்பம் தீர வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.//
    இப்பத்தேன் டீச்சர் நீங்க உங்க கடமைய சரியா செய்யறிங்க.. வெல்டன்.
    பிராத்தனையில என்னோட பங்கும் நிச்சயமா உண்டு.

    ReplyDelete
  10. விரைவில் முழு குணமடைய பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  11. புற்றுநோய் பற்றி இன்னமும் பரவலாக விழிப்புணர்வு இல்லை. இன்னமும் நிறைய ஆண், பெண்கள் இது பரவுமா என்று ஐயம் கேட்பதுண்டு.
    அனுராதாவின் வலியின் தீவிரம் குறைய இறைவன் அருளட்டும்.

    ReplyDelete
  12. கீதா, சகோதரி அனுவிற்காக ஒரு பதிவு - நன்றிகள் பலப்பல.

    சகோதரி படும் துயரம் மனம் கொள்ள வில்லை. என் செய்வது. அருமைக் கணவர் ஆதரவாக இருக்கிறார். அன்புக் குழந்தைகள் அம்மாவிற்காக பாடுபடுகின்றனர். கடவுளின் கருணை மட்டுமே ஏதேனும் மாயங்கள் செய்ய முடியும். சகோதரியின் மன வலிமை அவரை, இறை அருளுடன், நூறாண்டு வாழ வைக்க முடியும்.

    நம்மால் முடிந்தது - இறையிடம் இறைஞ்சுவதும், சென்று பார்த்து ஆறுதல் கூறுவதும் தான்.

    செய்வோம்.

    ReplyDelete
  13. ஆம், நானும் அவரது பதிவுகளை படித்தேன்...திருமதி அனுராதா அவர்களுக்காக பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  14. பிரார்த்தனைகள்

    ReplyDelete
  15. அனுராதா அவர்கள் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  16. அனுராதா விரைவில் குணமடைய என் மனமார்ந்த பிரார்த்தனைகள்

    ReplyDelete