
மஹிஷியை வதம் செய்ததும் அவள் உடலைக் கற்களைப் போட்டு மறைத்தார்கள் தேவாதி
தேவர்கள். இல்லை எனில் அவள் உடல் சூரிய ஒளியில் வளர ஆரம்பித்து விடும் அல்லவா?
பிறகு, தான் புலிப்பால் கொண்டு செல்லவேண்டிய விஷயத்தை ஐயப்பன் தேவர்களுக்குத்
தெரிவிக்க, தேவேந்திரன் புலியாக உருமாறினான். மற்ற தேவர்களும் புலிக் குடும்பமாக மாற
தேவேந்திரனாகிய புலியின் மேல் அமர்ந்து, மற்றப் புலிகள் புடை சூழ ஐயப்பன் பந்தளம்
திரும்பினார். ஏராளமான புலிகள் புடை சூழ மணிகண்டன் வருவதைப் பார்த்த நகர மக்கள்
பயந்து ஓட, சூழ்ச்சி செய்த மந்திரி திகைப்பால் தலை சுற்றி, மயங்கி விழ, மன்னனோ மனம் மகிழ்ந்தான். ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து மனம் மகிழ்ந்தார். மன்னனின் பாசத்தைக் கண்ட மணிகண்டன், மந்திரிக்கும், ராணிக்கும் ஆறுதல் கூறுகிறார்.
"தாயே! நாடாளும் ஆசை எனக்கு இல்லை. நான் வந்த காரியம் முடிந்தது. நீங்கள் பெற்ற மகன் ஆன ராஜராஜனே நாட்டைச் சிறப்பாக ஆளுவான்! நான் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!" எனச் சொல்லிப் பின்னர் தன் தந்தையிடமும், பிரியாவிடை
கேட்கின்றார். "தந்தையே, நான் திரும்பச் செல்ல வேண்டும். சபரிமலையில் நான் ஒரு மரத்தின் மீது அம்பு தொடுத்திருப்பேன். அதை அடையாளமாக வைத்து, அங்கே எனக்கொரு ஆலயம் எடுங்கள். தங்கள் அன்பை மறக்க மாட்டேன்!" எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குத் திரும்புகிறார்.
காந்தமலைக்குச் சென்றார் என்பது ஐதீகம். மணிகண்டனின் பிரிவால் வருந்திய மன்னன் சபரிமலை சென்று அங்கு ஐயப்பனின் சரம் குத்தி இருந்த அடையாளத்தைக் கண்டார். அங்கே கோயில் கட்டத் தீர்மானித்தார். இரவு படுத்த போது ஐயப்பனின் தோழர் ஆன வாவர்
என்பவர் வந்து மன்னனை அழைத்துச் செல்கின்றார். இப்போது வாவர் பற்றிய சில குறிப்புக்கள்:
ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் பதினெட்டாம்படிக்கு அருகே வாவர் சாமியின் கோயிலும்
இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாவர் ஐயப்பனுக்கு நெருங்கிய நண்பர் எனவும்
சொல்கின்றனர். பிறப்பால் இவர் முஸ்லீம் எனவும் அரேபியாவில் இருந்து வந்த கடற்கொள்ளையர்களில் ஒருவர் எனவும், இன்னும் சிலர், முஸ்லீம் மதத்தைப் பரப்ப வந்ததாயும் சொல்கின்றனர். கொள்ளை அடித்துக் கொண்டிருந்த வாவரை ஐயப்பன் அடக்க வந்தபோது இருவருக்கும் சண்டை மூண்டதாயும் சொல்கின்றனர். வாவர் பெரிய வீரன் என்றும், ஐயப்பனோடு முதலில் சண்டை போட்டார் என்றும் பின்னர் ஐயனின் அருளை உணர்ந்து அவரின் சீடராகவும், தோழராகவும் மாறினார் என்று சொல்கின்றார்கள். அவரின் வீரத்தைக் குறிக்கவே சன்னிதியில் பழமையான வாள் வைக்கப் பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஐயப்பனின் நட்பைப் பெற்ற வாவருக்கு அங்கே ஐயப்பனைப் போல் தனிக் கோயிலும் உள்ளது.
இன்னும் சிலர், மதுரையில் இருந்து திருமலை நாயக்கன் காலத்தில் சென்றவர்களில் வாவரும் ஒருவர் எனவும் சொல்கின்றனர். இந்த வாவருக்கு முஸ்லீம் மதத்தைச்
சேர்ந்த குரு தான் பூஜை செய்கின்றார். வாவருக்கு எனத் தனியான சிலை ஒன்றும்
இல்லாவிட்டாலும் ஒரு கற்பலகை செதுக்கப் பட்டு வைத்திருப்பதாயும் ஒரு பழமையான வாள் இருப்பதாயும் சொல்கின்றனர். மூன்று பக்கமும் பச்சை நிறப்பட்டுத் துணியால் மூடப்பட்டு நாலாவது பக்கம் திறந்து காணப்படுகிறது எனச் சொல்கின்றனர். ஐயப்பனே பந்தள அரசனிடம் வாவருக்கு எருமேலியில் மசூதி கட்டச் சொன்னதாயும், சபரிமலையில் சன்னிதி கட்டச் சொன்னதாயும் ஐதீகம்.
இந்த வாவர்தான் மன்னனைக் கூட்டிச் சென்றதாய்ச் சொல்கின்றனர். மன்னன் சென்ற
இடத்தில் ஐயன் காந்த மலையில் கோயில் கொண்டிருக்கக் கண்டான். தந்தையிடம் மணிகண்டன், தனக்குச் சபரிமலையில் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யுமாறும் சொல்கின்றார். கோயில் கட்டும்போது இடையூறு நேர்ந்தால் அதைத் தவிர்க்க ஒரு கத்தியும் கொடுத்து அருளுகின்றார். பின்னர் திரும்பவும் சபரிமலை வந்த மன்னர் காலையில் எழுந்த
தான் கண்டது கனவா, நனவா என்ற பிரமையில் ஆழ்ந்து கனவில் கண்டது போல் கோயில் கட்ட எத்தனிக்கின்றார். அப்போது மன்னனைச் சோதிக்கவும் விஸ்வகர்மாவின் துணையை
அவருக்குக் கொடுக்கவும் விரும்பிய இந்திரன் மன்னனுக்குத் தொல்லைகள் கொடுக்க, மன்னன் ஐயப்பன் கொடுத்த வாளை வீசுகின்றார். அந்த வாள் இந்திரனைத் துரத்த இந்திரன்
எல்லா இடமும் ஓடித் தப்பிக்க முடியாமல் கடைசியில் மன்னனிடமே வந்து காப்பாற்றும்படி
கேட்க, மன்னனும் வாளைத் திரும்பப் பெற்றார். பின்னர் இந்திரனின் ஆலோசனைப் படியே
விஸ்வகர்மாவின் துணையுடன் சபரிமலையில் கோயில் கட்டுகின்றார் மன்னர். பதினெட்டுப் படிகளும் அமைத்தாயிற்று. அந்தப் பதினெட்டுப் படிகள் அமைத்த காரணம் என்ன தெரியுமா?
பஞ்ச பூதங்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து ஆகிய 15-ன் துணையோடு தான் சாதாரண மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாலங்களையும் கடக்க வேண்டும். அதைக் குறிக்கவே பதினெட்டுப் படி அமைக்கப் பட்டதாய் ஒரு தத்துவம். இது தவிர, ஒவ்வொரு தேவதையும் தன் அம்சத்தைப் பதினெட்டுப் படிகளிலும் கொடுத்ததாயும் ஒரு தத்துவம்.
அது வருமாறு:
முதல் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - முருகன்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகா விஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினொன்றாம் படி - சுக்கிரன்
பனிரண்டாம் படி - ரங்க நாதன்
பதின் மூன்றாம் படி- சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமன்
பதினைந்தாம் படி -ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி -விநாயகர்
இனி விக்ரஹம் அமைக்க வேண்டுமே? சரியான காலம் வரும்போது வழிகாட்டல் கிடைக்கும் என்பது ஐயப்பன் மன்னனுக்குச் சொன்னது யார் வந்து விக்ரஹம் அமைக்க வழிகாட்டப் போகின்றனர்? மன்னன் காத்திருந்தான்.
பிரசன்ட்....
ReplyDeleteஇத்தான் நம்ம புலி குடுத்த படமா?..நல்லாயிருக்கு படமும் ,கதை விளக்கங்களும்..
ReplyDeleteசின்ன வயசுலேருந்து கேட்ட கதையை எத்தனை மொறைதேன் கேக்கறது?..
இருந்தாலும் சுறுக்கமாவும் நெறய தெரியாத பகுதிகளும் சொல்லறிங்க..
18 படிகளுக்கான விளக்கம் எனக்கு புதுசு :)
ReplyDeleteநன்றி
சூப்பர்.... விளக்கம் பயனானது...
ReplyDelete