எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 15, 2009

பொங்கலோ பொங்கல் 4

அடுத்த நாள் தை மாதம் இரண்டாம் தேதி மாட்டுப் பொங்கல், மற்றும் கணுப்பண்டிகை. இந்தக் கணுப்பண்டிகை காலையிலேயே முடிஞ்சுடும் என்பதால் அதை முதல்லே பார்ப்போமா?? கணுப்பிடி வைப்பது என்பது பெண்கள் மட்டுமே செய்யும் ஒன்று. தங்கள் உடன்பிறந்த சகோதரர்களின் நலனுக்காகச் செய்யப் படும் ஒன்று.தங்களோடு கூடப் பிறந்தவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்விலே சுகம் அடையவேண்டும் என வேண்டிக் கொண்டு செய்வது. சகோதரர்களே இல்லை என்றாலும் மற்ற ஆண்களை சகோதரர்களாக நினைத்துக் கொண்டும், சகோதரர்கள் இருந்தாலும், இன்னும் மற்ற ஆண்களை சகோதரர்களாக நினைத்துக் கொண்டும் செய்யலாம். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பிறந்த வீட்டுச் சீராகப் பணமோ, துணியோ கொடுப்பதுண்டு. தாய் வீடு பக்கத்திலேயோ அல்லது உள்ளூரிலேயோ இருந்தால் மதியம் சாப்பாட்டுக்கு சகோதரியை அங்கே அழைப்பதும் உண்டு.

மாட்டுப் பொங்கல் என்னும் கணுவன்று காலையில் முதல்நாள் சர்க்கரைப்பொங்கல் வைத்த பானையில் கட்டி இருக்கும் மஞ்சள் கிழங்கை எடுத்துக் கழுவி, ஸ்வாமி அலமாரியில் வைத்துவிட்டு, கை, கால் சுத்தம் செய்துகொண்டு, தானே அந்த மஞ்சள் கிழங்கை நுனியைக் கீறி விட்டுத் தன் நெற்றியிலும், கன்னத்திலும், கழுத்திலும் மூன்று முறை கீறிக் கொள்ளவேண்டும். பிறகு வீட்டில் உள்ள தங்களை விட வயதில் மூத்த பெண்மணிகளிடமும், அக்கம்பக்கத்தில் யாரானும் பெண்கள் அப்படி இருந்தால் அவர்களிடமும் கீறிக் கொள்ளலாம். முதல் நாள் செய்து மீந்திருக்கும் சர்க்கரைப் பொங்கல், மற்றும் அதற்கெனத் தயார் செய்த குழம்பு, எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் நாள் சாதத்தில்,தயிர் விட்டு, உப்பும் போட்டுப் பிசைந்து கொள்ள வேண்டும். இதை மஞ்சள் சாதம், குங்கும சாதம், தயிர்சாதம் என மூன்று வகையில் ஆக்கிக் கொள்ளவேண்டும். மஞ்சள் சாதம் மஞ்சளுக்கு வீட்டில் இருக்கும் பச்சை மஞ்சள் கிழங்கையே அரைத்துக் கொள்வது முன்பெல்லாம் வழக்கம். இப்போ யார் அம்மியிலெல்லாம் அரைக்கிறாங்க! அதனால் மஞ்சள் பொடியே கலந்து கொள்ளலாம். குங்குமம் கலந்து கொள்ளலாம். ரொம்பக் கலந்தால் அப்புறமாக் காக்காயெல்லாம் பயந்துக்கும்.

முன்பெல்லாம் நதிக்கரையில் வைப்பாங்களாம். அப்புறமா வீட்டு மொட்டை மாடியிலே வைப்பாங்க. இப்போ நதிகளே இல்லை, கரைக்கு எங்கே போறது? நம்ம வீட்டிலே மொட்டை மாடி இருக்கு. அதனால் அங்கே கணுப்பிடி வைக்கும் இடத்தைப்பெருக்கிச் சுத்தம் செய்து கோலம் போட்டு, செம்மண் இட்டுத் தயாராய் வைக்கணும். மஞ்சள் இலைகள் தான் போடணும் கணுப்பிடிக்கு. வெங்கலப் பானையில் கட்டிய மஞ்சள் கொத்தில் இலை எடுக்கிறாப் போல் இருந்தால் நல்லது. இல்லைனா வேறே இலை வைச்சுக்கணும். விலைக்கு வாங்கறவங்க இதை எல்லாம் எண்ணிப் பார்த்துட்டு மஞ்சள் கொத்து வாங்கணும். நாம விலைக்கு வாங்கற வழக்கமே இல்லை. இந்த சாதங்கள் தவிர, வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய், மஞ்சள், கரும்புத் துண்டுகள், சிலர் வீட்டில் தீப ஆராதனை காட்டும் வழக்கம் இருந்தால் அது, ஆரத்தி காட்டும் வழக்கம் இருந்தால் அதுவும் எடுத்துக் கொண்டு, ராகு காலம், எமகண்டம் இல்லாமல் பார்த்து கணுப்பிடி வைக்கணும். கணுப்பிடி வைச்சுட்டு உடனேயே குளிக்கணும்னு சொல்லுவாங்க. அன்று சமையலில் வித, விதமான சித்திரான்னங்கள் செய்வாங்க. சில வீடுகளில் துவையல், அப்பளம், பொடி இடம் பெறும். எங்க வீட்டிலே அது தான்! :(


இரவு சிலர் சாப்பிட மாட்டாங்க. அவங்க அவங்க வீட்டு வழக்கம் அது. "கார்த்திகை எண்ணெயும், கணுப்பழையதும் கூடப் பிறந்தவங்களுக்கு" என்று பெரியவங்க சொல்லுவாங்க. கார்த்திகைப் பண்டிகை விளக்கு ஏற்றுவதும் தென் மாவட்டங்களில் குறிப்பாய் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் கூடப் பிறந்தவங்களுக்காக என்று சொல்லுவதுண்டு. கார்த்திகை அன்று பிறந்த வீட்டிலே இருந்து எண்ணெய், விளக்கு, திரிநூல், பொரி என்று எல்லாமும் சீர் வருவதுண்டு. அது போல கணுவும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காகக் கொண்டாடப் படும் பண்டிகை. அப்பாடா! ஒரு வழியாப் பொங்கல் முடிஞ்சது! என்ன மாட்டுப் பொங்கலா?? வீட்டிலே மாடு இருந்தப்போ கொண்டாடினோம்.(ஹிஹிஹி, அது கூட நான் 2,3 முறை தான் மாட்டோட பொங்கலுக்கு இருந்தேன்) இப்போ நோ மாடு! அதனாலே எங்க வீட்டிலே நோ மாட்டுப்பொங்கல்!

4 comments:

  1. // எங்க வீட்டிலே நோ மாட்டுப்பொங்கல்!//

    அக்கிரமமா இல்லே? ! அட் லீஸ்ட் ஒரு நாய் பொங்கல் பூனை பொங்கல்?? அதெல்லாம்தான் நிறைய இருக்கே!

    ReplyDelete
  2. @ரங்கதிவா, எல்லாப் பொங்கலும் உண்டு. எழுதுவேன் பாருங்க! :P:P:P பூனை குட்டி போட்டிருக்கு! நாய் 4 குட்டி போட்டு ஒரு மாசமாச்சு. எதிர்த்த வீட்டுக்குப் போயிடுச்சு நாய், பூனை இங்கே இருக்கே அதனால்! :))))))

    ReplyDelete
  3. வடநாட்டில் கொண்டாடப்படும் 'ரக்க்ஷாபந்தன்' போல நாம் கொண்டாடும் கணுப்பொங்கல்! நாங்கெல்லாம் நீங்க சொன்னது போல் முந்தினநாள் சாதம் தயிர்விட்டுப் பிசைந்து கொண்டு கூட கூட்டாஞ்சோறும் ஆக்கிக்கிட்டு ஆத்தங்கரைக்கௌப் போய் கொண்டாடுவோம்.

    ReplyDelete
  4. உண்மை நானானி, எங்க மாமியார் வீட்டிலே ஊர்க் கோயில்குளக்கரைக்குப் போய் கணுப் பிடி வைத்துவிட்டு, அங்கேயே குளித்துச் சாப்பிட்டுட்டு வருவோம், ஊரிலுள்ள பெண்கள் அனைவரும் அன்று குளக்கரையில்தான் இருப்பாங்க! இங்கே மொட்டை மாடியோடு சரி, அதுவும் இப்போ நான் மட்டும்தானே! :( ஒரு இலை போடக் கூடாதுனு இரண்டு இலை போட்டு இரண்டிலும் வச்சுட்டு வருவேன்!:(((

    ReplyDelete