எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 15, 2009

மாட்டுப் பொங்கலோ பொங்கல்! 5

மாட்டுப் பொங்கலெல்லாம் எழுதலைனு சொல்லிட்டு நேத்தோட இதை முடிக்கலாம்னு இருந்தால், காலம்பர மஞ்சள் தீற்றிக் கொள்ள வெளியே போகும்போது தெருவிலே இருந்த மாடெல்லாம் ஏகத்துக்கு முறைக்குதுங்க! ஒரு மாடு கொம்பை ஆட்டிட்டு, வாலைத் தூக்கிச் சுழற்றி அடிச்சுட்டு என்னையே பார்த்து ஒரு செறுமல் செறுமிச்சு பாருங்க, "அம்மா"னு. சரி, சரி, மத்தியானத்துக்கு மேலே எழுதிடறேன்னு ஒத்துக்கிட்டு வந்துட்டேன், அதுங்க கிட்டே. இங்கே நம்ம பழைய பூனையார் மறுபடியும் குட்டி போட்டிருக்கார் போல, அதுவேறே குறுக்கும் நெடுக்குமா ஏதோ வேலை இருக்கிறாப்போல் போயிட்டும், வந்துட்டும், பூனையை வைச்சுட்டு சகுனமாவது, ஒண்ணாவது! அதெல்லாம் விட்டாச்சு. பூனைப் பொங்கல் இல்லைங்க, அது திவா தான் கேட்டார், அவங்க வீட்டிலே பூனைக்குப் பொங்கல் எல்லாம் வைப்பாங்க போல!

இப்போ மாட்டுப் பொங்கல் பத்திப் பார்ப்போமா?? ஹிஹி, தற்செயலாய்ச் சிலப்பதிகாரத்தின் இந்தப் பாடலைப் படிச்சேனா? மாட்டுப் பொங்கல் பத்தி எழுதியே ஆகணும்னு ஒரு வெறியே வந்துடுச்சு! எங்க தெருவிலே சில பசங்க மாடுங்க பாட்டுக்குப் போயிட்டிருக்கும், மேய்ஞ்சுட்டு, அதை அடிக்கிறதும், சீண்டறதுமா இருப்பாங்க. நான் பார்த்தால் "கத்தி" சண்டை போடுவேன், நிச்சயமா! எங்க வீட்டு வேப்பமரத்திலே காக்காய் அடிக்கிறதோ, குயிலை அடிக்கிறதோ, அணிலை அடிக்கிறதோ செய்தால் அவ்வளவுதான்! உண்டு, இல்லைனு இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம்! இந்த மாதிரி மாடுகளையோ, மற்ற ஜீவராசிகளையோ துன்புறுத்துவது கூடாது என்பது சிறு வயது முதலே சிறுவர்களுக்குப் பழக்கப் படுத்த வேண்டும். அதிலும் மாடுகளைத் துன்புறுத்தவே கூடாது. அவை செய்வது எத்தனை உதவிகள். காளை மாடுகள் உழவுத்தொழிலுக்கு மட்டுமில்லாமல், வண்டிகள் இழுக்கவும் பயன்படுகின்றன. சமீபத்திய லாரி ஸ்டிரைக்கின் போது அத்தியாவசியப் பண்டங்கள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க மாட்டு வண்டிகளே பெருமளவில் உதவின. அனைவரும் அறிந்திருக்கலாம்.

பசுமாடுகளும், எருமை மாடுகளும் பால் கொடுக்கின்றன. எருமைக் கிடாக்களும் பல்வேறு சுமை தூக்குதல், மற்ற பாரம்தூக்கும் வண்டிகளுக்கு எனப் பலவேறு வகைகளிலும் பயன்படுகின்றன. சிலர் வயலில் உழவும் எருமைக் கிடாக்களைப் பயன்படுத்துவர். இத்தகைய உதவி புரியும் மாட்டின் சாணம் சிறந்த எருவாகவும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது. இனி சிலப்பதிகாரம் என்ன சொல்கின்றது என்று பார்ப்போமா?

"நோவன செய்யன்மின் கொடிவன கேண்மின்
விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து
நெடுநில மருங்கில் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டு சிறந்த தன் தீம்பால்
அறந்தறா நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்"

பதினைந்து வருடங்களே உயிர்வாழும் ஒரு பசுவின் பால் அதன் கன்றுக்குட்டிகள் வளர்ந்த பின்னும் தரும் பால் குறைந்த பட்சமாய் ஒரு நாளைக்கு 16,000 நபர்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்வதாய் ஓர் ஆய்வு கூறுகின்றது. ஆகையால் மாடு என்ற சொல்லுக்குப் பொருளே செல்வம் என்பது ஆகும் என்பதை நினைவு கூர்ந்து மாட்டுப் பொங்கலைக் கொண்டாடவேண்டும்.

மாட்டுப் பொங்கல் வரப் போகின்றது என்பதற்கு அத்தாட்சியாக முன்பெல்லாம் மாட்டின் கொம்புகளுக்கு பொங்கலுக்குப் பத்து நாட்கள் முன்பிருந்தே வர்ணம் அடிப்பார்கள். வசதி உள்ளவர்கள் கொம்பைச் சீவி, தங்கக் கொப்பி, பித்தளைக் கொப்பி, வெள்ளிக் கொப்பி போடுவதும் உண்டு. கழுத்தில் சலங்கை மணியும் கட்டுவதுண்டு. இங்கே வர மாடெல்லாம் மாட்டுப் பொங்கலன்னிக்குக் கூட அழுக்காவே தான் இருக்கு என்பது சோகமான விஷயம். மதுரையிலே அதிகம் பசுமாடுகள் தான் பார்த்திருக்கேன். எங்கோ ஒண்ணு, இரண்டு எருமை மாடு அப்போ பார்த்தால் அதிகம். மாட்டுப் பொங்கலன்னிக்குச் சாயங்காலமா ஊரிலே இருக்கும் அனைத்து மாடுகளும், சந்தைப் பேட்டையிலேயா, சந்தையிலேயா நினைவில்லை, அங்கிருந்து கிளம்பி நாலு மாசிவீதிகளும் வரும். பார்க்கப் போவோம். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்குச் சில மாடுகள் போகும். ரேக்ளா வண்டிகள் போட்டி நடக்கும். மாசி வீதியில் போட்டி எல்லாம் போடாட்டியும், சில ரேக்ளா வண்டிகள் ஒண்ணை இன்னொண்ணு துரத்திட்டுப் போகும். இதை அங்கே மாடு விரட்டல்" என்ற பெயரில் சொல்லுவாங்க. ஜல்லிக் கட்டிற்கு அப்பா, அண்ணா, தம்பி போவாங்க. என்னை எல்லாம் அழைச்சிட்டுப் போனதில்லை. அப்புறமா சினிமாவிலே பார்த்தது தான் ஜல்லிக் கட்டு எல்லாம்.

மாமனார் வீட்டிலே முதல் பொங்கல் போது பார்த்தேன், மதுரையிலே கொண்டாடறதுக்கும் அங்கேயும் வித்தியாசம் ஒண்ணும் இல்லை. அங்கே மாடுகள் கொட்டில் நிறைய இருந்ததால் ஒரே அமர்க்களமா இருந்தது. மதுரையிலே வீட்டிலே மாடு எல்லாம் வச்சுக்க முடியாது. உழவு மாடுகள், வண்டி மாடுகள், எருமை, பசு கறவை மாடுகள்னு இருந்தன. மாமனாரோடு கூடவே ஆட்களும் சேர்ந்து வந்து சுத்தம் செய்து, மாடுங்களையும் குளத்திற்கு அழைத்துப் போய் சுத்தம் செய்து அலங்கரித்துக் கொல்லையிலே அல்லது மாட்டுக் கொட்டாயிலே பூஜை பெரிசாய் நடக்கும். சாம்பிராணி, தீபாராதனை போது வெளிச்சம் பார்த்து மாடுங்க மிரளும். பிறகு மாடுங்களை அவிழ்த்து ஒண்ணொண்ணா விரட்டி விடுவாங்க. ஊரை ஒரு சுத்து சுத்திட்டுத் தானே கொட்டிலுக்கு வந்துடும். எப்போ வரும்னு தெரியாது. அங்கே இதை "மாடு மிரட்டல்"னு சொல்லுவாங்க. நிஜமாவே மாடுங்க மிரண்டும் போகும். இம்மாதிரி ஒரு நாலைந்து பொங்கல் மாமனார் இருந்த கிராமத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடி உள்ளோம். அப்புறம் எல்லாத்தையும் அங்கே இருந்து மாத்திட்டுச் சென்னை வந்ததும் தனி வீடுகளிலேயே இருந்தாலும் மாடு வச்சுக்கலை. இதைத் தவிர ஊர்கூடிப் பொங்கல் வைத்து, மாடுகளுக்குப் படைத்து, பெரிய அளவில் வழிபாடுகள் செய்வதும் உண்டு. தென் மாவட்டங்களின் கிராமங்களில் இப்போதும் அம்மாதிரியே கொண்டாடப் படுகின்றது. அப்போது மாட்டுச் சொந்தக்காரர்களும், மாட்டைப் பாதுகாப்பவர்களும் தவிர, பெண்கள் அங்கே திடலுக்குச் செல்வதில்லை என்றும் இந்த வழிபாடு முடிய இரவு மூன்று மணியாகும் என்றும், மறுநாளே ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் சொல்கின்றனர்.

7 comments:

  1. மாட்டுப் பொங்கலை மிகச் சிறப்பாக, சிலப்பதிகாரத்தின் துணையோடு அருமையாக கொண்டாடி விட்டீர்கள் கீதாம்மா!!!அந்த ஆனந்தமெல்லாம் இங்கே நகரத்தில் காண முடிவதில்லை. நானும் மாட்டுப்பொங்கல் கொண்டாடியிருக்கிறேன். வ்ந்து பார்க்க அழைக்கிறேன்.

    ReplyDelete
  2. படிச்சிட்டேன் தலைவி ;))

    ReplyDelete
  3. அருமையான பதிவு.

    மாட்டுக்கு அலங்காரம் செஞ்சு தெருவழியாக் கொண்டுபோறது அந்நாள் வத்தலகுண்டுவை ஞாபகப்படுத்திருச்சு.

    ReplyDelete
  4. வாங்க நானானி, வந்ததுக்கும், வாழ்த்துக்கும், அழைப்புக்கும் நன்றி. பார்த்துட்டேன். அடிக்கடி வர முடியாட்டாலும் உங்க பதிவுகள் என்னோட லிஸ்டிலே எப்போவும் உண்டு. பின்னூட்டம் தான் கொடுக்க முடியறதில்லை! :(

    ReplyDelete
  5. வாங்க கோபி, நீங்க வரலைனா தான் அதிசயமா இருக்கும் எனக்கு! :))))

    வாங்க துளசி, இங்கே சென்னையிலே என்னத்தைப் பார்க்க முடியுது? நகர வாழ்க்கையா? நரக வாழ்க்கையானு புரியலை! :(

    ReplyDelete
  6. //பதினைந்து வருடங்களே உயிர்வாழும் ஒரு பசுவின் பால் அதன் கன்றுக்குட்டிகள் வளர்ந்த பின்னும் தரும் பால் குறைந்த பட்சமாய் ஒரு நாளைக்கு 16,000 நபர்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்வதாய் ஓர் ஆய்வு கூறுகின்றது//

    இதை ஞாபகம் வச்சிக்கிட்டே பொங்கல் பொங்கணும்! நல்ல பதிவு கீதாம்மா! நன்றி!

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அட, கேஆரெஸ், வாங்க, வாங்க, ஞாபகம் வச்சிட்டு வந்ததுக்கும், படிச்சதுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நன்றி.

    ReplyDelete