திருக்கைலை யாத்திரை சென்று வந்து இரு வருடங்கள் ஆகிவிட்டன, என்றாலும் நினைவுகள் இன்னும் அழியவில்லை. ஆறு மாதங்கள் முன்பு திடீரென திரு அனந்தபத்மநாபன் என்பவர் பெரம்பூரில் இருந்து ஓம் நமசிவாயா என்றொரு மெயில் அனுப்பி இருந்தார். நான் திருக்கைலை சென்று வந்ததும், அது பற்றி எழுதியதும் அறிந்து கொண்டிருந்தார். பின்னர்தான் தெரிந்தது அது நம்கைலாஷி திரு முருகானந்தம் அவர்கள் அன்போடு என்னையும் அறிமுகம் செய்து வைத்திருப்பது.
பின்னரும் திரு அனந்தபத்மநாபன் அவர்கள் தொடர்ந்து என்னுடைய பக்திக் கட்டுரைகளைப் படித்து வந்ததோடு அல்லாமல், கைலை யாத்திரை சென்றவர்கள் அனைவரும் இணைந்து ஒரு குழு ஆரம்பிக்கப் போவதாயும் நான் கைலை சென்று வந்த விபரங்கள் தேவை எனவும் கேட்டு வாங்கிக் கொண்டார். என்னுடைய "ஓம் நமசிவாயா" பயணக் கட்டுரையையே அனுப்பினேன். டாக்டர் ராஜகோபாலன் என்னும் முன்னாள் காவல்துறை டிஜிபி அவர்கள் தலைமையில் காஞ்சி சங்கரமடத்தின் உதவியோடும், அவர்களின் ஆலோசனையிலும், அருளாசியிலும் ஸ்ரீகாஞ்சி கைலாஷ் யாத்திரா சமிதி இன்று நுங்கம்பாக்கம், ஸ்பர்டாங்க் ரோடு, சங்கராலயாவில் ஆரம்பிக்கப் பட்டது.
ஸ்ரீமஹாபெரியவர்கள் அவர்கள் தங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நேரில் வந்திருந்து அனைவரையும் ஆசீர்வதித்ததுடன், தங்கள் திருக்கரங்களால் ஆசீர்வதிக்கப் பட்ட வெள்ளிக் காசுடன் கூடிய உருத்திராட்ச மாலை, சால்வை, மற்றும் ஞாபகச் சின்னம் போன்றவை இன்று அழைக்கப் பட்ட 300 நபர்களுக்கு வழங்கப் பட்டது. இன்னும் அநேகர் இருக்கின்றனர் எனவும், சிலருக்கு சரியாகச் செய்தி போய்ச் சேரவில்லை எனவும், சிலர் செய்தி தெரிந்து தம்மை இணைத்துக் கொள்ள நேரில் வந்திருப்பதாயும், சொன்னார்கள். ஆகவே இணைக்கப் படாத மற்றவர்களுக்காக ஏப்ரல் 13-ம் தேதி மதியம் 3 மணி அளவில் இன்னொரு விழாவை நடத்தவும், அப்போது தாம் வருகை புரிந்து யாத்ரீகர்களைக் கெளரவிப்பதாயும் ஸ்ரீமஹாபெரியவர்கள் திருவாக்கின் மூலம் தெரிய வந்தது.
நிகழ்ச்சி காலை 9-15 மணிக்குக் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்தது. அறிமுகம் ஸ்ரீராஜகோபாலன் அவர்களால் செய்யப் பட்டது. பின்னர் ஸ்ரீமஹாபெரியவர்கள் இந்த சமிதி ஆரம்பித்ததன் நோக்கத்தையும், இதன் மூலம் பல்வேறு விதமான ஆன்மீகத் திருப்பணிகள் செய்யவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார். அதன் பின்னர் குமுதம் ஜோதிடம் திரு ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் தன்னுடைய சிற்றுரையில் கைலை யாத்திரை பற்றிய நினைவுகளைக் கூறினார். ஆன்மீகத்தின் அவசியம் பற்றியும், வாழ்நாளில் ஒருமுறையாவது கைலை யாத்திரை மேற்கொள்ளவேண்டும் எனவும், ஏற்கெனவே சென்றவர்கள் செல்ல இருப்பவர்களுக்கு வழிகாட்டவேண்டும் எனவும் கூறித் தன் பேச்சை முடித்துக் கொண்டார். பின்னர் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சி ஒளிப்படமாகவும், அசைவற்ற புகைப் படமாகவும் எடுக்கப் பட்டது.
கைலை யாத்ரீகர்கள் முந்நூறு பேர் தவிரவும் அவர்களுடன் வந்த குடும்பத்தினர், மற்ற நபர்கள், நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் என ஒரு ஐந்நூறு பேருக்குக் குறையாமல் கூட்டம் கூடி இருக்க நிகழ்ச்சி 12 மணி அளவில் முடிந்தது. அனைவருக்கும் ஸ்ரீமடத்தின் சார்பில் உணவு அளிக்கப் பட்டது. திரு முருகானந்தம் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆனால் அவர் பெயர் படிக்கப் பட்டதே தவிர, அவர் யாரெனத் தெரியவில்லை. திரு அனந்த பத்மநாபன் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். எங்களுடன் யாத்திரை சென்றவர்கள் யாரும் வரவில்லை எங்களைத் தவிர. ஆனால் எங்களைப் போல மயிலாப்பூர், நடுத்தெரு, மனோஹர் மூலம் கைலை யாத்திரை சென்றுவிட்டுத் தவித்தவர்கள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். ஈரோடு மனோஹர் என்பவர் தன்னுடைய யாத்ரா சேவை மூலம் செல்பவர்கள் பட்டியலைக் காஞ்சி மடத்துக்கு நேரடியாக அனுப்பி விடுகின்றார். ஆகவே அவருடைய வாடிக்கையாளர்களே அதிகமாய் வந்திருந்தனர். இதுவரையிலும் இந்த விபரம் தெரியாதவர்கள் ஸ்ரீமடத்தைத் தொடர்பு கொண்டு ஏப்ரல் 13-ம் தேதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஆஹா... அசத்தல், கலக்குங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள் :)
வாழ்த்துகள் அம்மா.
ReplyDelete('கயிலை'யா, 'கைலை'யா?)
நமஸ்காரம்
ReplyDeleteதங்கள் ப்ளாகை படித்தேன், தமிழ் ஹிந்துவிலும் தங்கள் கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. நன்றாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு நேரம் இருந்தால், நீங்கள் ஆன்மீக கட்டுரைகளை எங்கள் இனைய தளத்தில் வெளியிடலாம்.
எங்கள் தளத்தை பார்வை இடவும். வெளியிட விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
www.sanadhanasevasathsangam.org
venkat@sanadhanasevasathsangam.org
mmm கொடுத்து வெச்சவங்க!
ReplyDeleteவாங்க புலி, என்ன இது? கமெண்ட்ஸ் மட்டும் வருது? ஆனால் ஆளே காணோம்?
ReplyDeleteவாங்க கவிநயா, கைலையா, கயிலையானு எனக்கும் புரியலை, நானே இரண்டு மாதிரியாவும் எழுதிட்டு இருக்கேன். கேட்டுட்டுச் சொல்றேனே. கயிலை தான் சரினு தோணுது!
ReplyDeleteவாங்க வெங்கட், கொஞ்ச நாட்கள் முந்தி தற்செயலாய் உங்க வலைத் தளம் பார்த்தேன், மெயிலில் தொடர்பு கொள்கின்றேன், நன்றி.
ReplyDeleteவாங்க திவா, என்னத்தைக் கொடுத்து வச்சேன்னு எனக்கே தெரியலை! :)))))))))))
ReplyDeleteஆனைக்குட்டி தான் கால் வலி தாங்காமல் நின்னுட்டே இருக்கு, குதிக்க முடியலை போலிருக்கு! :((((((
ReplyDelete