கண்ணனை இடைக்கோலத்தில் கண்டு மகிழ்ந்த மக்கள் ஆடிப் பாடினார்கள். பெண்கள் தங்கள் கையில் கொண்டு வந்திருந்த இனிப்புப் பலகாரங்கள், வெண்ணை, பால், தயிர் போன்றவற்றைக் கண்ணனுக்கு நேரே காட்டி, " முரளிதரா, கிரிதர கோபாலா, இந்தா, எடுத்துக்கோ" என்று காட்டிக் கெஞ்சினார்கள். தங்கள் இரு கைகளாலும் கண்ணனுக்கு திருஷ்டி கழித்து நெட்டி முறித்தனர். வித, விதமாய்த் துணிகள் வாங்கி வந்து அளிக்கின்றனர். அங்கே இருக்கும் கோயில் ஊழியர்களும் அவற்றை வாங்கிப் போய்க் கண்ணன் காலடியில் வைத்துத் திரும்பப் பிரசாதமாய்க் கொண்டு வந்தனர். கோயில் சார்பிலும் பெரிய பெரிய அண்டாக்களில் பிரசாதங்கள், அநேகமாய் இனிப்புப் பலகாரம் தான். இரவில் மட்டும் கண்ணனுக்கு ஜீரணம் ஆகணும்கிறதுக்காக மருந்துக் கஷாயம். நைவேத்தியம் செய்து, கோயிலைச் சார்ந்த அலுவலகத்துக்குச் சென்று பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் விநியோகிக்கப் படுகின்றது.
வெளியாட்கள் கொண்டு வரும் பிரசாதங்களையும் பெரிய அளவில் இருந்தால் அங்கேயே விநியோகம் செய்து விடுகின்றனர். பிரசாதங்களைக் கொடுக்கும்போதும், வாங்கும் போதும், "ராதே, ராதே, கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று சொல்லிக் கொண்டே கொடுக்கின்றனர், வாங்குகின்றனர். எங்களுக்குச் சர்க்கரை போட்ட வெண்ணெய் கிடைத்தது. திவ்ய தரிசனத்தை ஆற, அமர, எந்தப் பிடுங்கலும் இல்லாமல், ஜரிகண்டியோ, போ, போனு பிடித்துத் தள்ளுதலோ இல்லாமல் பார்த்துவிட்டு, நிம்மதியாக உள், வெளிப் பிரகாரங்களையும் சுற்ற முடிந்தது. காவலர்கள் இருவர் மட்டுமே சந்நிதிக்கு அருகே. ஒருவர் தனி வழியில் நின்று பெண்களை மட்டும் அவர்களுக்கென்றிருக்கும் தனிவழியில் உள்ளே விடுகின்றார். மற்றவர்கள் அனைவரும் அதற்குப் பின்னால் நின்று கொண்டு தரிசனம் செய்யவேண்டும். அங்கே பெயரளவில் ஒருத்தர் வாயிலருகே நிற்கின்றார். கூட்டமும் கட்டுக் கோப்பாய் நிற்கின்றது. ஆரத்தி முடிந்ததும் முன்னால் நிற்பவர்கள் யாருமே சொல்லாமல் தாங்களாகவே இடத்தைக் காலி செய்து பின்னால் வருபவர்களுக்கு அளிக்கின்றனர். இறைவனின் திருநாமம் தவிர வேறு பேச்சே இல்லை.
வெளிப்பிரகாரத்தில் கடற்கரையை ஒட்டினாற்போன்ற வாயில் பக்கமாய் பழைய கோயிலின் இடிந்த கட்டிடங்களின் மிச்சம் உள்ளது. அவற்றில் வெகு நேர்த்தியான சிற்பங்கள் பல உள்ளன. படம் எல்லாம் எடுக்க முடியவில்லை. உள்ளே நுழையும்போதே காமிரா, செல்போன், தோல்பை, கைப்பை உட்படக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டே உள்ளே செல்ல முடியும். கடுமையான சோதனைக்குப் பின்னர் மெடல் டிடெக்டரையும் கடந்தே உள்ளே செல்ல முடியும். ஆரவாரமின்றிப் பணி புரிகின்றனர் காவலர்கள். நாம் கொடுக்கும் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு லாக்கரில் பூட்டி விட்டுச் சாவியையும், டோக்கனையும் கொடுப்பதும் காவலர்தாம். வெளிக் கோபுரத்தை மட்டுமே எடுத்துள்ளோம். இந்த துவாரகை சார்தாம் எனப்படும் க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும், ஏழு புரிகளில் ஒன்றாகவும் கருதப் படுகின்றது. சார்தாம் எனப்படுபவை துவாரகை, பத்ரிநாத், மதுரா, புரி ஆகியவை ஆகும். ஏழு புரிகளில் அயோத்யா, மதுரா, துவாரகை, காசி, காஞ்சி, அவந்திகா, புரி ஆகியவை ஆகும்.
"அயோத்யா, மதுரா மாயா, காஷி காஞ்சி, அவந்திகா
புரி த்வாரதி சைவ ஸப்தைதா: மோக்ஷதாயிகாஹா" என்று ஸ்கந்தபுராணத்தில் இவை குறிப்பிடப் படுகின்றன. பல்வேறு புராணங்கள் துவாரகையை குஷஸ்தலை, கோமதி துவாரகை, சக்ரதீர்த்தம், ஆனர்தக் க்ஷேத்திரம் மற்றும் ஓகா மண்டலம் அல்லது உஷா மண்டலம் என அழைக்கப் படுகின்றது.
ரைவத மன்னன் குஷம் எனப்படும் தர்ப்பைப் புல்லை சமுத்திரத்தின் மத்திய பாகத்தில் இருந்து எடுத்து, இங்கே ஒரு மிகப் பெரிய யக்ஞம் செய்ததாகவும் அதனால் குஷஸ்தலை என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று. மற்றொன்று குஷன் என்னும் பெயர் கொண்ட அரக்கன் இங்கே தவம் செய்துகொண்டிருந்த ரிஷி முனிவர்களைத் துன்புறுத்தியது கண்ட ரிஷி, முனிவர்கள் பிரம்மாவிடம் முறையிட, அவர் மஹாபலியைச் சம்ஹாரம் செய்த திரிவிக்கிரமனை வேண்ட, திரிவிக்கிரமன் வந்து குஷனை பூமியில் புதைக்கவும், அவன் உடலுக்கு மேலே அவன் அனுதினமும் பூஜிக்கும் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து அந்த லிங்கத்திற்குக் குஷேஸ்வர் மஹாதேவ் என்ற பெயரும் அளிக்கின்றார். துவாரகை யாத்திரை வருபவர்கள் முதலில் குஷேஸ்வரைப் பார்த்துவிட்டே வந்து கண்ணனைத் தரிசனம் செய்யவேண்டும் என்றும், இல்லை எனில் யாத்திரை பூர்த்தி ஆகாது எனவும் ஐதீகம். இந்தக் குஷன் என்னும் அரக்கனின் பெயராலும் இந்தத் தலம் குஷஸ்தலை என அழைக்கப் பட்டு வந்தது.
இனி கண்ணன் இங்கே கோயில் கொண்டது எவ்வாறு எனப் பார்ப்போமா???
பதிவுகள் மிகத் தாமதமாயும், மெதுவாயும் வருவதற்கு மன்னிக்கவும். முக்கியக் காரணம் மின்சாரம் இல்லாதது தான். 4 மணி நேரம் என்று சொல்கின்றார்கள். ஆனால் அதற்கு மேலேயே மின் தடை இருக்கின்றது. கிடைக்கும் நேரம் எழுதி வச்சுட்டுப் பின்னர் எப்போ வருதோ அப்போ பதிவிடணும். இன்னும் போகப் போக மின்சார விநியோகம் இன்னும் மோசமாய் மாறும் போலவும் இருக்கு! சுதந்திரம் வந்து அறுபது வருஷம் ஆகிறது. ஆனால் இன்னும் நம்மால் தடை இல்லாமல் மின்சாரம் பெற முடியவில்லை. இலவசங்களுக்குச் செலவிடும் கோடிகளில் மின்சாரம் தயார் செய்ய முதலீடு செய்துவிட்டு அவர்களுக்கு அதன் மூலம் வேலை வாய்ப்பும் கொடுக்கலாம். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யாரு? சில சமயம் என்ன தோன்றுகின்றதென்றால் இவற்றிலெல்லாம் தன்னிறைவு பெற்றோமானால் அப்புறம் எதைச் சொல்லி வாக்குக் கேட்பது எனக் கட்சிகள் நினைக்கின்றனவோ என்று தோன்றுகிறது. இந்தப் பதிவில் இதை எழுதியமைக்கு மிக மன்னிக்கவும். வியாழன் அன்று இரவு பத்து மணியில் இருந்து மின் தடை, மின் தடை, மின் தடை தான்.
கோவில் / பக்தர்கள் பற்றிய விவரங்கள் படிக்கும்போது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கு அம்மா. மிக்க நன்றி.
ReplyDelete\\ஆரத்தி முடிந்ததும் முன்னால் நிற்பவர்கள் யாருமே சொல்லாமல் தாங்களாகவே இடத்தைக் காலி செய்து பின்னால் வருபவர்களுக்கு அளிக்கின்றனர். \\
ReplyDeleteஆகா..இதுக்காவே சொல்லவேண்டும் போல இருக்கு! ;)