"இதோ பார் கிருஷ்ணா, நாங்கள் அனைவருமே உன்னைத் தான் நம்பியுள்ளோம். எங்களுக்கான ஒரே ரக்ஷகன் நீ ஒருத்தனே. கிட்டத் தட்ட இருபத்தைந்து வருஷங்களாய் எங்களுடைய பாதுகாப்புக்கு யாருமே இல்லாமல் காக்க வருபவனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இதோ, மதுராவுக்குக் கம்சன் திரும்பிவிட்டான். நீ செய்திருக்கும், அற்புதங்கள் பற்றி அவனுக்குத் தெரிய அதிக நாட்கள் ஆகாது. இதோ பார் கண்ணா, நீ நந்தன் மகனே அல்ல. நீ இளவரசன் வசுதேவனுக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை. தேவகி இளவரசன் தேவகனின் பெண் என்பதை நீ அறிந்திருப்பாய். பலராமனும் ரோகிணிக்குப் பிறந்தவன் இல்லை. அவனும் தேவகியின் மைந்தனே."
"நாங்கள் தான் உன்னையும் அவனையும் கம்சன் கண்ணில் படாமல் நந்தனின் கூரைக்குக் கீழே கொண்டு வந்து வைத்து வளர்த்தோம். குறிப்பிட்ட நாள் வரும்வரையில் நீ இங்கே பாதுகாப்போடு இருக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். நாரத மஹரிஷி கம்சனின் மரணம் உன் கைகளாலேயே ஏற்படப் போகிறது என்று கணித்துச் சொல்லி இருக்கிறார். அதை வேதவியாசரும் ஆமோதிக்கிறார். கம்சன் பிறப்பால் அரக்கனோ, அசுரனோ அல்ல. உக்ரசேனரின் மகன் தான். ஆனால் தன் துராக்கிருதமான காரியங்களால் அவன் அசுரன் ஆகிவிட்டான். அவனை நீ வதம் செய்யப் போகும் நாளுக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இருபத்தைந்து வருஷங்களாய் நாங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்குக் கொண்டுவரப் போவது நீ ஒருவனே. அந்த ஒரு நம்பிக்கையிலேயே உன் தாய் தேவகி, தந்தை வசுதேவன், மற்ற யாதவர்கள், இன்னும் எங்களைப் போன்ற பல அந்தணர்கள் அனைவரும் காத்திருக்கிறோம். உன்னை அதற்குத் தயார் செய்யவேண்டியே சாந்தீபனி இங்கே வந்துள்ளார்.”
கிருஷ்ணன் எங்கேயோ சூன்யத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் சற்று நேரம். புரியாத பல விஷயங்கள் புரிகிறாப்போல் இருந்தது. பின்னர் தன்னிரு கரங்களையும் கூப்பிக் கொண்டு ஆசாரியரைப் பார்த்துச் சற்றும் கபடம் இல்லாமல் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தான். “குருதேவா, என்னை என் வாழ்க்கையை வாழவிடுங்களேன். எனக்கு இங்கே உள்ள ஒவ்வொரு செடியும், கொடியும், மலரும், காயும், கனியும், மரங்களும், மலைகளும், நதியும் நதிக்கரையும் தெரியும். ஒவ்வொருத்தர் வீட்டுப் பசுக்களையும் நான் நன்கறிவேன். இந்த கோபர்களில் ஒருவனாகவே என்னை நான் அறிவேன். நான் ஒரு இடையன் தான் ஆசாரியரே. என் தாயையும், தந்தையையும் நேசிக்கும் ஒரு சாமானிய இடையன். இந்த கோவர்தன் மலையில் நான் சுற்றாத இடமே இல்லை. இதன் ஒவ்வொரு இடத்தையும், ஒவ்வொரு மூலையையும் நான் நன்கறிவேன். நான் தான் உங்கள் ரக்ஷகன் என்று சொல்லி என்னை இந்த இடத்திலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் பிரிக்காதீர்கள்.” என்றான் கண்ணன்.
நந்தன் கண்கள் நீரை மழையென வர்ஷித்தது. “ மகனே, என்னை நீ எப்போதுமே விரும்புவாயா?? என்னை விட்டு நீ போக நேர்ந்தாலும்?” என்று கேட்டான். “இதென்ன தந்தையே? நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். நான் என்னவாகவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேனே. ஆனால் உங்களைவிட மிகச் சிறந்த ஒரு தந்தை எனக்குக் கிடைத்திருக்கவே மாட்டார். நான் எப்போதும் உங்கள் காலடியில் விழுந்து வணங்கும் உங்கள் மகனே தான் தந்தையே!” நந்தன் கால்களில் விழுந்தான் கிருஷ்ணன். அவன் உளமார, மனமாரச் சொன்னான் என்பதைப் புரிந்து கொண்ட நந்தன் கண்கள் மழையெனப் பொழிந்த வண்ணமே இருந்தது. சமாளித்துக் கொண்டு, “ ஆனால் மகனே, இன்னும் சில நாட்களில் உனக்கு மதுராவிலிருந்து அழைப்பு வந்துவிடும், நீ சென்றே ஆகவேண்டும். அதைத் தவிர்க்கவே முடியாது. ” என்று சொன்னான். கர்காசாரியாரும் அதை ஆமோதித்தார். “ஆம், குழந்தாய், கம்சனின் தளைகளில் இருந்து நீ தான் எங்கள் அனைவரையும் விடுவிக்கவேண்டும்.” என்று சொல்லிவிட்டுக் கண்ணனிடம் கம்சனின் கொடுமைகள் எவ்விதம் ஆரம்பித்தன என்பதில் இருந்து சொல்ல ஆரம்பித்தார். பின்னர் கண்ணனின் தாய், தந்தையர் திருமணமும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் வரிசையாகச் சொன்னார். வசுதேவரும், தேவகியும் கண்ணன் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைச் சொன்னார். தேவகி கண்ணன் என்று ஒரு சிலையை வைத்துப் பூஜிப்பதையும் அலங்கரித்துத் தாலாட்டுவதையும் சொன்னார்.
கண்ணன் அனைத்தையும் கேட்டான். பின்னர் கர்காசாரியாரிடம், “என் தாயிடமும், தந்தையிடமும், அவர்கள் ஆவலையும் எதிர்பார்ப்பையும் நான் பூர்த்தி செய்வேன் என்று சொல்லுங்கள். நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.” குரு சாந்தீபனியிடம் திரும்பி, “உங்கள் ஆசிகள் எனக்கு எப்போதுமே தேவைதான். உங்கள் விருப்பம் போல் எனக்குக் கற்பிக்கலாம். ஆனால் ஒன்று, நீங்கள் இங்கே இருக்கும்வரையிலும், இந்த விருந்தாவனத்து கோபர்களிடமோ, கோபியரிடமோ நான் அவர்களில் ஒருவன் இல்லை என்பதைச் சொல்லிவிடாதீர்கள். அதைவிட அவர்களைத் துன்புறுத்தும் விஷயம் வேறு எதுவும் இருக்காது. அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியாது.” என்று வேண்டிக் கொண்டான். சாந்தீபனியும் சம்மதித்தார். நந்தன் அப்போது, “ மகனே, இப்போது புரிந்து கொண்டாயல்லவா? ராதையை நீ ஏன் மணக்க முடியாது என்பதற்கான காரணங்களை?” என்று கேட்டான். கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.
பின்னர் ஆசாரியரிடம் திரும்பி, “குருதேவா, நீங்கள் என்னைத் தர்மத்தின் பாதையில் செல்லச் சொல்லுகின்றீர்கள் அல்லவா? யாதவர்களை நான் தர்மத்தின் பாதையில் அழைத்துச் செல்லவேண்டும், ஒரு முன்மாதிரியாக அல்லவா?” என்று கேட்டான். “ ஆம் குழந்தாய்!” என்றார் ஆசாரியர். “என்றால் நான் அந்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதை இப்போதில் இருந்தே ஆரம்பிக்கலாமா குருதேவா?” கண்ணன் கேட்டான் சிறு சிரிப்போடு. ஆசாரியர்,”நாங்கள் அப்படிச் சொல்லவில்லை, ஆனால் அது உன்னிஷ்டம்.” என்றார்.
“நீங்கள் சொல்லவில்லைதான், ஆனாலும் நீங்கள் இதைக் கேட்டே ஆகவேண்டும் குருவே, நான் எட்டுவயது கூட இருக்காத நிலையில் முதன் முதலில் இந்த விருஷபாநுவின் மகளைப் பார்த்தேன், அதுவும் எப்படி? உரலில் கட்டப் பட்ட நிலையில், காட்டில், எதுவும் செய்யமுடியாத ஒரு நிலையில் இருந்தேன் அப்போது. அப்போது அவள்தான் எனக்கு உதவினாள். அன்றிலிருந்து ஆரம்பித்து இன்று வரையிலும் அவள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் எனக்காகக் காத்திருக்கிறாள். என்னைப் பற்றி நினைக்காமல் அவள் மனம் ஒரு கணம் கூட இருக்கவில்லை.. அவள் சூடும் மலர்கள் எனக்காகவே. அவள் உண்ணும் உணவு எனக்காகவே. குடிக்கும் நீர் எனக்காக. அவள் கண்கள் நீரை வர்ஷித்தால் அது எனக்காகவே. அவள் சிரித்தால் அது எனக்காகவே. அவள் பேசினால் அது எனக்காக. பாடினால் அது எனக்காக. நடந்தால் அது எனக்காக. பாடும் பாடல்கள் எனக்காக. ஆடும் ஆட்டங்கள் எனக்காக. நான் புல்லாங்குழலை எடுத்து இசைத்தால் அவள் அடையும் பரவசத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அப்போது அவள் என்னுடன் இசைந்து ஆடும்போது நான் வேறு, அவள் வேறு எனத் தோன்றவில்லையே! என்னுடன் பேசும்போது மட்டுமே அவள் சந்தோஷம் அடைகின்றாள். அவள் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் எனக்காகவே. என்னைப் பற்றி நினைக்காமல் இந்த எட்டுவருஷங்களாக ஒரு விநாடி கூட அவள் மூச்சு உட்செல்லவோ, வெளிவரவோ இல்லை. “ கிருஷ்ணன் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனான்.
கர்காசாரியார் இடைமறித்தார், “கண்ணா நீ சொல்லுவது உனக்கே
கொஞ்சம் அதிகமாய்த் தெரியவில்லையா?”
“நிச்சயமாய் இல்லை குருதேவரே, நான் சொல்லுவது கொஞ்சம் தான், இன்னும் கேளுங்கள். காலியனை அடக்க நான் பாடுபட்டுக் கொண்டிருக்கையில், பலருக்கும் மனவேதனை உண்டாயிற்று. அழுதனர் பலரும். இவளும் அழுததோடு மட்டுமில்லாமல் உணர்வே இன்றிக் கட்டையாகிவிழுந்துவிட்டாள். அன்று மட்டும் காலியன் என்னைக் கொன்றிருந்தால், எல்லாரும் மனம் உடைந்திருப்பார்கள், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதைக் கேட்ட உடனேயே ராதையும் உயிரை விட்டிருப்பாள்.” சாதுரியமான அதே சமயம் உண்மையை சற்றும் ஒளிக்காமல் கிருஷ்ணன் பேசிய பேச்சு ஆசாரியர்களைக் கட்டிப் போட்டது.
கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஆசாரியர்களே, நீங்கள் என்னை தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லுகின்றீர்களே, ஆனால் இங்கே ஒரு இதயம் அதே சமயம் கொல்லப் படும் என்பதை மறந்துவிட்டீர்களே? நான் விருஷபாநுவின் மகளை மறுத்தால் அடுத்த கணமே அவள் இறந்துவிடுவாளே? உங்களை எல்லாம் காக்கவேண்டி என்னை அழைக்கின்றீர்கள், ஆனால் அதே சமயம் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புப் போய்விடுமே? என்னுடைய வேலையை நான் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டா ஆரம்பிக்கவேண்டும்? இதுவா தர்மம்? அதுவும் நான் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம்? எனக்காகத் தன்னுடைய அனைத்தையும், இன்னும் சொல்லப் போனால் தன்னையே எனக்காக அர்ப்பணித்திருக்கும் ஒரு இதயத்தைக் கொன்றுவிட்டா நான் தர்மத்தைக் காக்கவேண்டும்? சிந்தியுங்கள், குருதேவா, சிந்தியுங்கள்” கர்காசாரியார் பதினைந்து வயதுப் பையன் இவ்வளவு பேசுகின்றானே என ஆச்சரியத்துடன் பார்க்க, ஏற்கெனவே கண்ணும், கண்ணீருமாய் இருந்த நந்தனால் அழுகையை அடக்கவே முடியவில்லை.
அப்போது சாந்தீபனி கேட்கின்றார்:” வாசுதேவகிருஷ்ணா, கேள்! நீ இங்கிருந்து இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் செல்லவேண்டியவனே. அப்படிப் போனதும், அதிகாரமும், பதவியும், அரண்மனை வாழ்க்கையும் உன்னை வந்தடையும். அப்போதும் நீ இந்தக் கிராமத்துப் பெண்ணான ராதையிடம் இதே போன்ற அன்போடு இருப்பாயா? இதே மாதிரியே இந்தப் பெண்ணை நடத்துவாயா? உன்னை நீயே ஆராய்ந்து கொள்வாய் வாசுதேவகிருஷ்ணா, உண்மையான, தெளிவான பதிலைச் சொல்லுவாய்!” என்றார்.
கிருஷ்ணன், உடனடியாகப் பதில் சொல்லுகின்றான்.”வேண்டாம் ஆசாரியரே, நான் பதிலை ஆய்வு செய்து தேடவே வேண்டாம். நான் வாழ்வதே என்னிடம் அன்போடும் பாசத்தோடும் இருப்பவர்களுக்காகவே. அது என் தாயாய் இருந்தாலும் சரி, தந்தையானாலும், சரி, என்னுடைய தோழர்களான கோபர்கள், கோபிகள், இந்த விருந்தாவனப் பசுக்கள், காளைகள், ஆஹா, இந்த விருஷபாநுவின் மகள் ஆன ராதை, இவளை என்னால் எப்படி மறக்கமுடியும்? அவளைத் திருமணம் செய்து கொண்டேனானால் அவள் உயிரும், ஜீவனும் என்னிடம். அவள் என்னில் இருக்கிறாள். நான் அவளுள் உறைகிறேன். இதை நான் எப்போதும், எங்கேயும், நான் எங்கே இருந்தாலும் காப்பாற்றி வருவேன். போர்க்களத்தில் நான் இருக்க நேர்ந்தாலும், அவள் நினைவே எனக்குள் சக்தியை ஏற்படுத்தும். அரண்மனையில் நான் வசித்தாலும் என்னுள்ளே உறையும் அவளை எவராலும் தடுக்கமுடியாது. என் இதயத்தினுள் ராதையைத் தவிர வேறு யாருமே குடி கொள்ள முடியாது. நான் புல்லாங்குழல் இசைப்பது அவளுக்காகவே. அவளில்லாமல் என் புல்லாங்குழல் ஊமையாகிவிடும். என் ஆன்மா, என் ஆவி, என் சக்தி, என் சந்தோஷம், என் துக்கம், என் ஜீவன் அனைத்துமே அவள் தான், இதை யாராலும், எப்போதும், எங்கேயும் ஒரு போதும் மாற்றவே முடியாது. இவளே எனக்கு மூச்சுக்காற்றாகவும் இருந்து ஊக்குவித்தாள், ஊக்குவிக்கிறாள், ஊக்குவிப்பாள் . இவள் மட்டுமே என் ஜீவாத்மா!”
இந்த உணர்ச்சிமயமான சொற்பொழிவால் கர்காசாரியார் ஏதோ கனவிலிருந்து விழித்தாற்போன்ற தோன்றத்தோடு காணப்பட்டார். என்ன ஒரு சொல்வன்மை? ஆஹா, இந்தக் குழந்தைகளின் அன்பை நினைத்தால் இவர்களைப் பிரிக்கவேண்டியுள்ளதே என்று கவலையாகவே இருக்கிறது. பாவம் இந்தக் குழந்தைகள். அடுத்த கணமே கர்காசாரியாருக்கு வேதவியாசர் சொல்லி இருந்தது நினைவில் வர, “ வாசுதேவகிருஷ்ணா, நான் இதைப் பற்றிச் சிந்தித்துச் சொல்லுகிறேன். நான் உன் உண்மையான தாய் தேவகி, தந்தை வசுதேவன் ஆகியோரையும் கலந்து கொள்ளவேண்டும். அவர்கள் உனக்காக, உன்னையே நினைத்து இந்தப் பதினைந்து வருஷங்களாய்க் காத்திருக்கிறார்கள். “
“இல்லை குருதேவா, அது மட்டும் வேண்டாம்.” கிருஷ்ணன் தன் கைகளைக் கூப்பியவண்ணமே இருந்தான். நந்தனைக் காட்டி, ‘இதோ என் தந்தை, அதோ உள்ளே தயிர் கடையும் சப்தம் கேட்கிறதா? தயிர் கடைவது என் தாய் யசோதை! குருதேவா, உங்கள் ஆசிகளும் இவர்கள் ஆசிகளுமே எனக்குப் போதும். நான் இப்போது ஒரு இடையனாகவே இருக்கிறேனே, வேறு எதுவுமே வேண்டாமே எனக்கு.”
“ஆனால் அவர்களிடம் நான் என்ன சொல்லுவது?”
“ஆஹா, குருதேவா, அவர்களிடம் சொல்லுங்கள், என்னைப் பெற்றெடுத்து எனக்காகக் காத்திருக்கும் தாயிடமும், தந்தையிடமும் சொல்லுங்கள். “அம்மா, உன்னுடைய மகன் தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும், தர்மத்திற்காகவே வாழவேண்டும் என்று நீ விரும்புகிறாய் அல்லவா? அப்படி எனில் அவன் அவ்வாறு செய்யவேண்டும் என்றால் நீ அவனை இப்போது இந்த தர்மத்தில் இருந்து பிறழாமல் காக்கவேண்டும். அவனுக்காகக் காத்திருக்கும் ஒரு இடைக்குலப் பெண்ணை , அவனுக்குத் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தந்த ஒரு பெண்ணை அவன் காப்பது இப்போது அவன் செய்யக் கூடிய தர்மம். தர்மத்தைக் காக்கப் பிறந்த உன் மகன் அதை ஆரம்பிக்கும்போதே ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்காமல் அவளுடைய அழுகையிலும், அவ்ளின் உயிரிலும் ஆரம்பித்தல் தகுமா? அந்தப்பெண்ணைக் காப்பதே அவனுடைய முதல் தர்மம். அந்த தர்மத்தை அவன் காக்க அவனுக்கு உதவி செய்!” குருதேவா, இதைச் சொல்லுங்கள், என்னைப் பெற்ற தாயிடம்.”
அறையில் அமைதி சூழ்ந்தது. யாருமே பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நந்தனுக்கு மட்டும் தன் மகனின் இந்தக் காரியத்தினால் அவனுடைய மன முதிர்ச்சியை நினைத்தும் ஒரு பக்கம் பெருமையாக இருந்ததோடு அல்லாமல், கட்டுப்படுத்த முடியாமல் அழுகையும் வந்தது. கண்ணன் அப்போது நந்தன் கால்களில் விழுந்து, “தந்தையே, என்னை ஆசீர்வதியுங்கள். என்னை விருஷபாநுவின் மகளை மணக்க அனுமதியுங்கள்.” என்று வேண்டினான். கண்ணனை எடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட நந்தன், ஆசாரியர்கள் இருப்பதையும் மறந்து,தன்னிலையை மறந்து, தன் வயதையும் மறந்து, சின்னக் குழந்தையைப் போல் அழுதான். கண்ணன் தகப்பனைத் தேற்றினான்.